சனி, ஜூலை 14, 2018

மார்க்கத்தை தீர்மானிப்பது வஹியா? அல்லது ரஃயியா


-மௌலவி யூனுஸ் தப்ரீஸ், சத்தியக் குரல் ஆசிரியர்-
வஹி என்றால் அல்லாஹ்விடமிருந்து வந்தவைகளாகும். ரஃயி என்றால் மனிதனின் சுய சிந்தனையின் மூலம் வந்தவைகளாகும்.
மார்க்கம் என்பது அல்லாஹ்விடமிருந்து நபியவர்களுக்கு வஹியின் மூலமாக கொடுக்கப்பட்டதாகும். வஹியாக கொடுக்கப்பட்ட மார்க்கத்தில் அல்லாஹ் சொல்லாத, அல்லது நபியவர்கள் அனுமதி வழங்காத எந்த ஒன்றையும் மார்க்கமாக செயல் படுத்த முடியாது. அப்படி செயல் படுத்தினால் அவர்கள் தெளிவான வழிகேடர்கள் என்று அல்லாஹ் பின் வருமாறு எச்சரிக்கிறான்.
“மேலும், அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஒரு காரியத்தைப்பற்றிக் கட்டளையிட்டு விட்டால், அவர்களுடைய அக்காரியத்தில் வேறு அபிப்பிராயம் கொள்வதற்கு ஈமான் கொண்டுள்ள எந்த ஆணுக்கோ பெண்ணுக்கோ உரிமையில்லை; ஆகவே, அல்லாஹ்வுக்கும் அவனுடைய ரஸூலுக்கும் எவரேனும் மாறு செய்தால் நிச்சயமாக அவர்கள் பகிரங்கமான வழிகேட்டிலேயே இருக்கிறார்கள்.(33-36)
மார்க்க விவகாரங்களில் நாம் யாரை பின் பற்ற வேண்டும் என்பதை பின் வரும் குர்ஆன் வசனங்கள் மூலம் அவதானிப்போம்.
அல்லாஹ்விற்கும், அவனது தூதருக்கும், அதிகாரிகளுக்கும் கட்டுப்படல்
“நம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்வுக்கு கீழ்படியுங்கள்; இன்னும் (அல்லாஹ்வின்) தூதருக்கும், உங்களில் (நேர்மையாக) அதிகாரம் வகிப்பவர்களுக்கும் கீழ்படியுங்கள்; உங்களில் ஏதாவது ஒரு விஷயத்தில் பிணக்கு ஏற்படுமானால் – மெய்யாகவே நீங்கள் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்புபவர்களாக இருப்பின் – அதை அல்லாஹ்விடமும், (அவன்) தூதரிடமும் ஒப்படைத்துவிடுங்கள் – இதுதான் (உங்களுக்கு) மிகவும் சிறப்பான, அழகான முடிவாக இருக்கும்.(4-59)
மேலும் “எவனொருவன் நேர்வழி இன்னது என்று தனக்குத் தெளிவான பின்னரும், (அல்லாஹ்வின்) இத்தூதரை விட்டுப் பிரிந்து, முஃமின்கள் செல்லாத வழியில் செல்கின்றானோ, அவனை அவன் செல்லும் (தவறான) வழியிலேயே செல்லவிட்டு நரகத்திலும் அவனை நுழையச் செய்வோம்; அதுவோ, சென்றடையும் இடங்களில் மிகக் கெட்டதாகும். (4-115)
அல்லாஹ்வையும், அவனது தூதரையும் மட்டும் தான் பின் பற்ற வேண்டும் என்று குர்ஆனில் அதிகமான குர்ஆன் வசனங்களை காணலாம். அதற்கு மத்தியில் இப்படியான சில குர்ஆன் வசனங்களையும் காணலாம். அதாவது உங்களில் அதிகாரம் படைத்தவர்கள், அல்லது முஃமினானவர்களின் வழியையும் பின் பற்ற வேண்டும். அதிகாரம் படைத்த அதிகாரிகள்(அமீர்கள், தளபதிகள்), அல்லது ஸஹாபாக்கள்,அல்லது தாபியீன்கள்,அல்லது தபவு தாபியீன்கள், அல்லது இமாம்கள், அல்லது அறிஞர்கள் இப்படியானவர்களின் நேர்வழியை பின் பற்ற வேண்டும் என்று அந்த வசனத்தின் மூலமாக விளங்கலாம். மேற்க் கூறப்பட்ட அனைவர்களும் குர்ஆனுக்கும், ஹதீஸூக்கும் மாற்றமாக கூறாதவரை அவர்கள் எடுத்து காட்டும் செய்திகளை அல்லது விளக்கங்களை எடுத்து நடக்கலாம். அதே நேரம் அவர்களுக்குள்ளேயே ஒரு விசயத்தில் பல கருத்துகள் முரண்பாடாக வரும் என்றால் அந்த முரண்பாடான விசயத்தை அல்லாஹ்வின் பக்கமும், அல்லது தூதரின் பக்கமும் திருப்பி முடிவு காணவேண்டும் என்பதை தான் (4-59) குர்ஆன் வசனம் எடுத்துக் காட்டுகிறது. சில நிகழ்வுகளை எடுத்துக் காட்டும் போது உங்களுக்கு இன்னும் தெளிவாக புரிந்து விடும்.
நபியை திருத்திய வஹி செய்தி
நபியவர்கள் தெரியாமல் மார்க்கத்திற்கு முரணாக ஏதாவது ஒன்றை முடிவெடுத்தால் அதை அல்லாஹ் உடனே திருத்திக் கொடுத்து விடுவான். வஹி இறங்கும் காலத்தில் அல்லாஹ் நபியவர்களை கண்காணித்துக் கொண்டிருந்தான். அதனால் நபியின் மூலம் வஹிக்கு முரணாக மார்க்க விவகாரங்களில் ஏதாவது நடந்து விட்டால் உடனுக்கு உடன் வஹியை வைத்தே திருத்திக் கொடுத்து விடுவான்.
உதாரணமாக “ தன் மனைவிமார்களின் சூழ்ச்சிகள் தெரியாமல் அல்லாஹ் ஹலால் ஆக்கிய தேனை நபியர்கள் இனி மேல் குடிக்க மாட்டேன் (ஹராம்)என்று சத்தியம் செய்கிறார்கள். இது நேரடியாக அல்லாஹ் இறக்கிய வஹிக்கு முரணாண சத்தியமாகும். உடனே அல்லாஹ் பின் வரும் வசனத்தை இறக்கி அந்த சம்பவத்தின் பின்னணியை தெளிவுப் படுத்துகிறான்.
“நபியே! உம் மனைவியரின் திருப்தியை நாடி, அல்லாஹ் உமக்கு அனுமதித்துள்ளதை ஏன் விலக்கிக் கொண்டீர்? மேலும் அல்லாஹ் மிகவும் மன்னிப்பவன், மிக்க கிருபையுடையவன். “அல்லாஹ் உங்களுடைய சத்தியங்களை (சில போது தக்க பரிகாரங்களுடன்) முறித்து விடுவதை உங்களுக்கு ஏற்படுத்தியிருக்கிறான்; மேலும் அல்லாஹ் உங்கள் எஜமானன். மேலும், அவன் நன்கறிந்தவன்; ஞானம் மிக்கவன். (66¬- 01…)
இங்கு நபியவர்கள் வஹிக்கு மாற்றமாக தெரியாமல் தன் இச்சையாக எடுத்த ஒரு முடிவுக்கு, வஹியின் மூலமாகவே திருத்திக் கொடுக்கபடுவதை காணலாம். எனவே முரண்பாட்டிற்கு வஹி தான் தீர்வு என்பதை நாம் இதன் மூலம் விளங்கிக் கொள்ளலாம்.
நபியவர்களோடு சம்பந்தப்பட்ட இது போல பல சம்பவங்களை வரலாற்றில் நாம் காணலாம். “அப்துல்லாஹ் இப்னு உம்மி மக்தூம் விசயத்தில் அது போல “பத்ரு யுத்தத்தில் கைதிகளின் விசயத்தில், மேலும் “முனாபிக்குடைய தலைவனின் தொழுகை நடாத்தும் விசயத்தில் இப்படி வஹியை வைத்தே நபியவர்களுக்கு அல்லாஹ் திருத்திக் கொடுக்கிறான் என்றால், இவைகளை முன் உதாரணங்களாக வைத்து நாமும் வஹி செய்திகளை வைத்தே பிரச்சனைகளை அணுக வேண்டும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
நபியவர்கள் ஸஹாபாக்களுக்கு திருத்திக் கொடுத்தல்
நபியவர்கள் காலத்தில் ஸஹாபாக்களுக்கு மத்தியில் சில முரண்பாடான பிரச்சனைகள் வரும் போது வஹி செய்தியை வைத்தே நபியவர்கள் திருத்திக் கொடுத்துள்ளார்கள்.
காபிர்களின் தலைவனுக்கு தேள் கொட்டிய போது, சூரத்துல் பாதிஹாவை ஓதி, நிவாரணம் கண்ட பின் குறிப்பிட்ட ஆடுகளை வாங்கிய நேரத்தில் ஸஹாபாக்களுக்கு மத்தியில் முரண்பாடுகள் எழுந்து, இறுதியில் நபியவர்கள் சரி கண்ட பின் அனைத்து ஸஹாபாக்களும் கட்டுப் படுகிறார்கள்.
“அபூ ஸயீத்(ரலி) அறிவித்தார்,
நபித்தோழர்களில் சிலர் ஒரு பயணத்தில் சென்றிருந்தபோது, ஓர் அரபிக் குலத்தினரிடம் தங்கினார்கள். அவர்களிடம் விருந்து கேட்டபோது அவர்களுக்கு விருந்தளிக்க அவர்கள் மறுத்துவிட்டனர். அப்போது அக்குலத்தாரின் தலைவனை தேள் கொட்டிவிட்டது. அவனுக்காக அவர்கள் எல்லா முயற்சிகளையும் செய்து பார்த்தனர்; எந்த முயற்சியும் பலன் அளிக்கவில்லை. அப்போது அவர்களில் சிலர், ‘இதோ! இங்கே வந்திருக்கக் கூடிய கூட்டத்தினரிடம் நீங்கள் சென்றால் அவர்களிடம் (இதற்கு) ஏதேனும் மருத்துவம் இருக்கலாம்!’ என்று கூறினர். அவ்வாறே அவர்களும் நபித் தோழர்களிடம் வந்து ‘கூட்டத்தினரே! எங்கள் தலைவரைத் தேள் கொட்டிவிட்டது! அவருக்காக அனைத்து முயற்சிகளையும் செய்தோம்; (எதுவுமே) அவருக்குப் பயன் அளிக்கவில்லை. உங்களில் எவரிடமாவது ஏதேனும் (மருந்து) இருக்கிறதா?’ என்று கேட்டனர். அப்போது நபித்தோழர்களில் ஒருவர், ‘ஆம்! அல்லாஹ்வின் மீது ஆணையாக! நான் ஓதிப் பார்க்கிறேன்; என்றாலும் அல்லாஹ்வின் மீதாணையாக! நாங்கள் உங்களிடம் விருந்து கேட்டு நீங்கள் விருந்து தராததால் எங்களுக்கென்று ஒரு கூலியை நீங்கள் தராமல் ஓதிப் பார்க்க முடியாது!’ என்றார். அவர்கள் சில ஆடுகள் தருவதாகப் பேசி ஒப்பந்தம் செய்தனர். நபித்தோழர் ஒருவர், தேள் கொட்டப்பட்டவர் மீது (இலேசாகத் துப்பி) ஊதி, ‘அல்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்..’ என்று ஓதலானார். உடனே பாதிக்கப்பட்டவர், கட்டுகளிலிருந்து அவிழ்த்து விடப்பட்டவர் போல் நடக்க ஆரம்பித்தார். வேதனையின் அறிகுறியே அவரிடம் தென்படவில்லை! பிறகு, அவர்கள் பேசிய கூலியை முழுமையாகக் கொடுத்தார்கள். ‘இதைப் பங்கு வையுங்கள்!’ என்று ஒருவர் கேட்டபோது, ‘நபி(ஸல்) அவர்களிடம் சென்று நடந்ததைக் கூறி, அவர்கள் என்ன கட்டளையிடுகிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ளாமல் அவ்வாறு செய்யக்கூடாது!’ என்று ஓதிப் பார்த்தவர் கூறினார். நபி(ஸல்) அவர்களிடம் நபித்தோழர்கள் வந்து நடந்ததைக் கூறினார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் ‘அது (அல்ஹம்து சூரா) ஓதிப் பார்க்கத் தக்கது என்று உமக்கு எப்படித் தெரியும்?’ என்று கேட்டுவிட்டு, ‘நீங்கள் சரியானதையே செய்திருக்கிறீர்கள். அந்த ஆடுகளை உங்களுக்கிடையே பங்கு வைத்து கொள்ளுங்கள்! உங்களுடன் எனக்கும் ஒரு பங்கை ஒதுக்குங்கள்! என்று கூறிவிட்டுச் சிரித்தார்கள். (புகாரி 2276)
இது போல சம்பவங்களை ஹதீஸ்களில் அதிகமாக காணலாம். ஸஹாபாக்களுக்கு மத்தியில் முரண்பாடுகள் வரும் போதெல்லாம் ஒன்று குர்ஆன் வசனங்களை வைத்து நபியவர்கள் திருத்திக் கொடுப்பார்கள். அல்லது வஹியுடன் தொடர்பானவர் என்றடிப்படையில் சம்பந்தப்பட்ட முரண்பாடுகளுக்கு தெளிவை கொடுப்பார்கள். இங்கும் முரண்பாடுகளுக்கு வஹி தான் சரியான தீர்வு என்பதை விளங்கிக் கொண்டீர்கள்.
ஸஹாபாக்களுக்கு மத்தியில் பல முரண்பாடான பிரச்சனைகள் வந்த நேரத்தில் எல்லாம் வஹியை வைத்தே முடிவு காணப்பட்டதை காணலாம்.
“இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
உமர் (ரலி) அவர்கள் (கத்தியால்) குத்தப்பட்டு மயக்கமுற்றிருந்தபோது, வேகமாக அழுகுரல் கேட்டது. மயக்கம் தெளிந்ததும் அவர்கள், “உயிரோடிருப்பவர் அழுவதன் காரணமாக இறந்தவர் வேதனை செய்யப்படுகிறார்” என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நீங்கள் அறியவில்லையா?” என்று கேட்டார்கள். (முஸ்லிம் 1689)
ஆயிஷா (ரலி) வஹியின் மூலம் திருத்திக் கொடுத்த நீண்ட ஹதீஸின் இறுதி பகுதி…”இல்லை; அல்லாஹ்வின் மீதாணையாக! “எவரோ ஒருவர் அழுவதன் காரணமாக இறந்துவிட்ட (இறைநம்பிக்கையாளரான) மனிதர் வேதனை செய்யப்படுகிறார்” என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒருபோதும் கூறவில்லை. மாறாக “குடும்பத்தார் அழுவதன் காரணமாக இறைமறுப்பாளனுக்கு அல்லாஹ் இன்னும் வேதனையை அதிகப்படுத்துகின்றான்” என்றே கூறினார்கள். அல்லாஹ்வே சிரிக்கவும் வைக்கிறான்; அழவும் வைக்கிறான் (53:43).ஓர் ஆத்மாவின் (பாவச்) சுமையை மற்றோர் ஆத்மா சுமக்காது (35:18)” என்று கூறினார்கள்.
காசிம் பின் முஹம்மத் பின் அபீபக்ர் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:
உமர் (ரலி) மற்றும் இப்னு உமர் (ரலி) ஆகியோரின் கூற்று ஆயிஷா (ரலி) அவர்களுக்கு எட்டியபோது “நீங்கள் பொய்யர்களோ பொய்ப்பிக்கப்பட்டவர்களோ அல்லாத இருவர் சொன்ன ஹதீஸை என்னிடம் கூறுகின்றீர்கள். ஆயினும், செவி (சில நேரங்களில்) தவறாக விளங்கிவிடுகிறது” என்று கூறினார்கள். (முஸ்லிம் 1693)
இங்கு இப்னு உமர் (ரலி) அவர்கள் பிழையாக விளங்கிய செய்தியை ஆயிஷா (ரலி) அவர்கள் வஹியை வைத்தே திருத்திக் கொடுக்கிறார்கள் என்றால் எந்த முரண்பாடு வந்தாலும் முடிவு வஹியின் தீர்ப்பே என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.
வஹிக்கு கட்டுப் படல்
மார்க்க ரீதியான ஏதாவது ஒன்று நமக்கு தெரியாமல் இருக்கும் என்றால், அதை யாராவது வஹி செய்தி மூலமாக எடுத்துக் காட்டினால், கட்டாயமாக அதற்கு நாம் கட்டுப்பட்டே ஆக வேண்டும் என்பதற்கு ஸஹாபாக்களின் வாழ்க்கையில் நாம் பாடம் படிக்கலாம்.
“ உபைத் இப்னு உமைர்(ரஹ்) அவர்கள் அறிவித்தார்.
உமர்(ரலி) (கலீஃபாவாக இருந்த காலத்தில்) அபூ மூஸா(ரலி) வந்து, உள்ளே வர அனுமதி கோரினார்கள். உமர்(ரலி) அலுவலில் ஈடுபட்டிருந்ததால் அவர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை; உடனே அபூ மூஸா(ரலி) திரும்பிவிட்டார்கள். அலுவலை முடித்த உமர்(ரலி), ‘அபூ மூஸாவின் குரலை நான் கேட்டேனே! அவருக்கு அனுமதி அளியுங்கள்!’ என்றார்கள். ‘அவர் திரும்பிச் சென்றார்!’ என்று கூறப்பட்டது. உடனே உமர்(ரலி) அபூ மூஸா(ரலி) அவர்களை அழைத்து வரச் செய்தார்கள். (‘ஏன் திரும்பிச் சென்றுவிட்டீர்?’ என்று உமர்(ரலி) கேட்டபோது) அபூ மூஸா(ரலி), ‘இவ்வாறே நாங்கள் கட்டளையிட்டிருந்தோம்!’ எனக் கூறினார்கள். உமர்(ரலி) ‘இதற்குரிய சான்றை நீர் என்னிடம் கொண்டுவாரும்!’ எனக் கேட்டார்கள். உடனே, அபூ மூஸா(ரலி) அன்ஸாரிகளின் அவைக்குச் சென்று அவர்களிடம் கேட்டார்கள். அதற்கவர்கள், ‘நம்மில் இளையவரான அபூ ஸயீத் அல்குத்ரீயைத் தவிர வேறு யாரும் இந்த விஷயத்தில் உமக்கு சாட்சி சொல்ல மாட்டார்கள்!’ என்றனர். அபூ மூஸா(ரலி) அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) கூறியதை உறுதிப்படுத்தியதும்) உமர்(ரலி), ‘நபி(ஸல்) அவர்களின் இந்தக் கட்டளை எனக்குத் தெரியாமல் போய்விட்டதா? நபி(ஸல்) அவர்களின் காலத்தில் (வெளியே சென்று) கடைவீதிகளில் நான் வியாபாரம் செய்து கொண்டிருந்தது என் கவனத்தை திசைதிருப்பிவிட்டது போலும்!’ என்று கூறினார்கள். (புகாரி 2062)
அதே போல இமாம்களுக்கு மத்தியில் அவர்கள் அளித்த பத்வாக்களுக்கு முரணாக ஹதீஸ் இருந்தால் எங்களது பத்வாக்களை (தீர்ப்புகளை) விட்டு விட்டு ஹதீஸை எடுத்து கொள்ளுங்கள் என்ற செய்தியின் மூலமும் முரண்பாடுகளுக்கு இறுதி முடிவு வஹி தான் என்பதை உறுதிப் படுத்துகிறது. சமகால அறிஞர்களின் கருத்துகளாக இருந்தாலும் அவைகளில் முரண்பாடுகள் வருமேயானால் அதற்கும் தீர்வு வஹி தான் என்பதை நாம் தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும்.
விளக்கம்
காலத்திற்கு காலம் ஒவ்வொரு அறிஞர்களின் மூலம் குர்ஆன் வசனத்திற்கோ,அல்லது ஹதீஸிற்கோ பல விளக்கங்கள் வரலாம். அனைத்து விளக்கங்களும் முரண்படாமல் இருக்குமேயென்றால், அவைகளை நாம் ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் குர்ஆன் வசனத்திற்கோ, ஹதீஸிற்கோ நேரடியாக முரண்படுமேயானால், அந்த அறிஞர்களின் கருத்தும் ஏற்றுக் கொள்ள முடியாது என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.
அல்லாஹ் மிக அறிந்தவன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக