ஹஜ்ஜுக்கு செல்பவர்கள் பேணவேண்டிய ஒழுக்கங்களும் தவிர்க்க வேண்டிய தவறுகளும்




ஹஜ்ஜும் உம்ராவும் நற்கூலிகளை பெற்றுத் தரும் மிக சிறந்த வணக்க வழிபாடுகளில் ஒன்றாகும். இவ்விரு வணக்க வழிபாடுகளின் மூலம் ஒரு அடியானின் பாவங்ககளையும் குற்றங்களையும் அல்லாஹ் மன்னிக்கின்றான். ஒரு உம்ராச் செய்துவிட்டு மற்றொரு உம்ராச் செய்வது அவ்விரண்டுக்கும் இடைப்பட்ட காலங்களில் ஏற்பட்ட பாவங்களுக்குப் பரிகாரமாகும். ஒப்புக்கொள்ளப்பட்ட ஹஜ்ஜுக்கு சுவர்க்கத்தை தவிர வேறு கூலி இல்லை.என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல் : புகாரி : 1773
உடலுறவு மற்றும் பாவமான செயல்களில் ஈடுபடாமல் ஒருவன் அல்லாஹ்வுக்காகவே ஹஜ் செய்தால் அவன் அவனது தாய் அவனைப் பெற்றெடுத்த நாளில் இருந்ததைப் போன்று (பாவமறியாத பாலகனாக) திரும்புவான்என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரி 1521
அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் பாதையில் போர் புரிவதையே நாங்கள் சிறந்த செயலாகக் கருதுகின்றோம். எனவே நாங்களும் ஜிஹாத் செய்யலாமா?” என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “இல்லை. எனினும் (பெண்களுக்கு) சிறந்த ஜிஹாத், பாவச் செயல் எதுவும் கலவாத ஹஜ் தான்என்றார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)நூல்: புகாரி 1520
இத்தகைய நன்மைகளை பெற்றுத்தரக்கூடிய, பாவங்களுக்கு பரிகாரமான, பெண்களின் ஜிஹாத் என்று வரணிக்கபப்ட்ட ஹஜ்ஜின் நன்மைகளை அறிந்தோ அறியாமலோ செய்யும் தவறுகளினால் ஹாஜிகள் இழந்து விடுகிறார்கள்.
இதனை சிறந்த உதாரணத்துடன் விளங்குவதாக இருந்தால் ஒரு மனிதன் லட்சக்கணக்கான ரூபாய்களை செலவழித்து ஒரு வீட்டை கட்டுகின்றான் அதிலே நல்ல வண்ணங்களை பூசுகின்றான், அழகான மின் விளக்குகளை பொருத்துகின்றான், உயர் ரக தண்ணீர் குழாய்களை அமைக்கின்றான். இவற்றில் எதுவுமே அவனின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லையெனில் அவன் எவ்வளவு கைசேதம் அடைவானோ அதைவிட மிகப்பெரும் கைசேதம் உடல் உழைப்புடன் லட்சக்கணக்கான ரூபாய்களை செலவழித்து மிகப்பெரும் சிரமத்திற்கு மத்தியில் ஹஜ்ஜுக்கு சென்று அதன் நன்மையை முழுமையாக அடையாத ஹாஜி.
எனவே இஸ்லாமிய வழிகாட்டுதலின் அடிப்படையில் ஹாஜிகளின் தவறுகளை சுட்டிக் காட்டுவதின் மூலம் தவறுகளில் விழாமல் அவர்களை தடுப்பதோடு அல்லாஹ்விடத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஹஜ்ஜாக மாற வேண்டும் என்பதே இக்கட்டுரையின் நோக்கம்.
வணக்க வழிபாடுகள் அல்லாஹ்விடத்தில் அங்கீகரிக்கப்பட வேண்டுமானால் இரண்டு நிபந்தனைகள்
1. அல்லாஹ்விற்காக அந்த வணக்க வழிபாட்டை நிறைவேற்றுவதுடன்
அல்லாஹ்வுடைய தூதர் காண்பித்து தந்த அடிப்படையில் நிறைவேற்ற வேண்டும்
சிலர் பகட்டை வெளிப்படுத்தும் நோக்கில் ஊராரை அழைத்து விருந்துபசாரம் செய்வதும், மேளதாளங்களோடு, தோரணங்களை தொங்க விட்டு மாலை அணிந்து ஊர்வலம் செல்வதும் ஊர் முழுக்க போஸ்டர்கள் அடிப்பது கட்டவுட்கள் வைப்பதும் இது போன்ற மார்க்கம் காண்பித்து தராத சில செயல்பாடுகளில் ஹஜ்ஜுக்கு செல்லும் முன்பும், சென்று திரும்பும் போதும் இவ்வாறு செய்கின்றனர் இது போன்ற செயல்களினால் உளத்தூய்மை (இக்லாஸ்) அடிபட்டு முகஸ்துதி மேலோங்கி ஹஜ்ஜின் மூலம் அடையும் நன்மைகளை இழந்துவிடுகிறார்.
2.மற்ற மக்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளை நிறைவேற்றவில்லையெனில் அல்லது அதிலே குறை ஏற்பட்டிருப்பின் அவர்களிடம் அதற்காக வருத்தம் தெரிவித்து விட்டு ஹஜ் பயணத்தை மேற்கொள்ள வேண்டும்.
குறிப்பாக (பெற்றோர்கள் , கணவன் மனைவி , இரத்த பந்த உறவினர்கள், நண்பர்கள்)
3. ஹஜ் என்ற இந்த இபாதத்தை நிறவேற்ற நாடுபவர்கள் அது குறித்த விஷயங்களை குர்ஆன் சுன்னா அடிப்படையில் முறையாக கற்றுத்தேர்ந்த ஆசிரியர் மூலம் பயில வேண்டும்
உங்கள் ஹஜ் கடமையை நிறைவேற்றும் முறையை என்னிடம் இருந்து கற்றுக் கொள்ளுங்கள்” . அறிவிப்பவர் : ஜாபிர் (ரழி யல்லாஹு அன்ஹு) நூல் : முஸ்லிம் 1297
4….எவரேனும் (இஹ்ராம் அணிந்து) ஹஜ்ஜை தம் மீது கடமையாக்கிக் கொண்டால், ஹஜ்ஜின் காலத்தில் சம்போகம், கெட்ட வார்த்தைகள் பேசுதல், சச்சரவு ஆகியவை செய்தல் கூடாது  2:197
5.பொருளாதாரம் மிகத்தூய்மையானதாக இருக்க வேண்டும்.
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களே! அல்லாஹ் தூயவன். தூய்மையானதையே அவன் ஏற்கின்றான். அல்லாஹ் தன்னுடைய தூதர்களுக்குக் கட்டளையிட்டவற்றையே இறைநம்பிக்கையாளர்களுக்கும் கட்டளையிட்டுள்ளான்என்று கூறிவிட்டுப் பின்வரும் இரு வசனங்களை ஓதிக்காட்டினார்கள்: தூதர்களே! தூய்மையான பொருள்களிலிருந்து உண்ணுங்கள். நற்செயலைச் செய்யுங்கள். திண்ணமாக நான், நீங்கள் செய்வதை நன்கு அறிபவன் ஆவேன் (23:51).

நம்பிக்கையாளர்களே! நாம் உங்களுக்கு வழங்கிய தூய்மையான பொருள்களிலிருந்து உண்ணுங்கள். நீங்கள் (உண்மையில்) அல்லாஹ்வைத்தான் வணங்குகிறீர்களென்றால், அவனுக்கு நன்றி பாராட்டுங்கள் (2:172).

பிறகு ஒரு மனிதரைப் பற்றிச் சொன்னார்கள். அவர் தலைவிரி கோலத்துடனும் புழுதி படிந்த நிலையிலும் நீண்ட பயணம் மேற்கொள்கிறார். அவர் தம் கரங்களை வானை நோக்கி உயர்த்தி என் இறைவா, என் இறைவாஎன்று பிரார்த்திக்கிறார். ஆனால்,அவர் உண்ணும் உணவு தடைசெய்யப்பட்டதாக இருக்கிறது; அவர் அருந்தும் பானம் தடைசெய்யப்பட்டதாக இருக்கிறது; அவர் அணியும் உடை தடைசெய்யப்பட்டதாக இருக்கிறது; தடைசெய்யப்பட்ட உணவையே அவர் உட்கொண்டிருக்கிறார். இத்தகையவருக்கு எவ்வாறு (அவரது பிரார்த்தனை) ஏற்கப்படும்?” என்று கூறினார்கள். (முஸ்லிம், 1686 )
6. ஹஜ், உம்ராவிற்கு செல்பவர்களிடம் துஆ செய்யுமாறு வேண்டுதல் : நான் நபி (ஸல்) அவர்களிடம் உம்ரா செல்வதற்காக அனுமதி வேண்டினேன் எனக்கு அனுமதி அளித்தார்கள் எனது சகோதரனே உனது துஆவில் எங்களை மறந்து விடாதே என்று கூறினார்கள் உமர் (ரலி ) கூறினார்கள் உலகம் முழுவதை விட இந்த வார்த்தை எனக்கு மகிழ்ச்சிக்குரியதாக இருந்தது. அறிவிப்பவர் : உமர் (ரலி )நூல் : அபூதாவூத் 1280
7. பெண்கள் தனியாக ஹஜ்ஜுக்கு செல்லக் கூடாது : எந்தவொரு ஆணும் மஹ்ரமில்லாமல் இருக்கும் பெண்களோடு தனிமையில் இருக்க வேண்டாம்! எந்தவொரு பெண்ணும் மஹ்ரமில்லாமல் பிரயாணிக்க வேண்டாம்!என நபியவர்கள் கூறிய போது, ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதரே! எனது மனைவி ஹஜ்ஜுக்காகச் சென்று விட்டார். நான் சில யுத்தங்களுக்காகப் பெயர் கொடுத்துள்ளேன். (நான் என்ன செய்வது?) எனக் கேட்டார். அதற்கு, நபி(ஸல்) அவர்கள் நீரும் உமது மனைவியோடு சென்று ஹஜ்ஜை நிறைவேற்றுவீராக!என கூறினார்கள். (புகாரி 3006 , முஸ்லிம் 1341)
பெண்கள் தனியாக பயணம் மேற்கொள்ளக் கூடாது என்று ஏராளமான நபி மொழிகள் காணக்கிடக்கின்றன . என்றாலும் ஹஜ் , உம்ரா நடத்தும் சில நிறுவனங்கள் தங்களின் வருமானத்தை கணக்கில் கொண்டு தவறான முறையில் இவர் அவருக்கு மஹ்ரம் அவர் இவருக்கு மஹ்ரம் என்று காண்பித்து தங்களோடு அழைத்துச் செல்கின்றனர். இதுவும் தடுக்கப்பட்ட ஒன்றே..

இஹ்ராமுடன் தொடர்புடைய சில தவறுகள்

1. இஹ்ராம் என்பது ஹஜ்ஜுக்காக அல்லது உம்ராவிற்காக குறிப்பிட்ட எல்லைகளில் நிய்யத் வைத்து நுழைவதை குறிக்கும் ஆனால் சிலர் வெண்மையான ஆடையை குறிப்பதாக கருதுகின்றனர் இதுவும் தவறு .

2 . எல்லா வணக்க வழிபாடுகளுக்கும் நிய்யத் மிக முக்கியம் நபி (ஸல்) கூறினார்கள் செயல்கள் அனைத்தும் எண்ணங்களை பொறுத்து அமைகிறதுபுகாரி 6439 எனவே ஹஜ்ஜுக்கும் உம்ராவிற்கும் செல்வபவர் நிய்யத் வைத்துக் கொள்ள வேண்டும். நிய்யத் என்பது வாயால் மொழிவதல்ல உள்ளத்தால் எண்ணுவது .
3. நபி (ஸல்) அவர்கள் ஒவ்வொரு பகுதியினருக்கும் இஹ்ராமிற்குரிய எல்லைகளை நிர்ணயம் செய்துள்ளார்கள் . (ஹஜ்- உம்ராவுக்காக புறப்பட்டு) மதீனா வழியாக் மக்காவுக்கு வரும் மக்களுக்கு துல் ஹுலைபாவும் ஸிரியா வழியாக வரும் மக்களுக்கு அல் ஜுஹ்பாவும் நஜ்தின் வழி வருபவர்களுக்கு (தாயிஃப்) கர்னுல் மனாஸிலும் யமனிலிருந்த வருபவர்களுக்கு யலம்லம் ஆகியவை இஹ்ராம் மேற்கொள்ள வேண்டிய மீக்காத் எல்லைகளாகும்.

இவ்வெல்லைகளுக்குள்ளே வசிப்பவர்களுக்கும் மக்கா வாசிகளுக்கும் அவர்களின் இல்லங்களே எல்லைகளாகும். என நபி (ஸல்) அவர்கள் கூறினாரிகள்.
அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ் (ரலி) நூல்: புகாரி 1454 . முஸ்லிம் 1181

இஹ்ராமிற்குரிய எல்லைகளில் இஹ்ராமில் பிரவேசிக்காமல் ஹஜ்ஜுக்கு முறையாக அனுமதி பெறாமல் அரசாங்கத்தை ஏமாற்றி விட்டு செல்வது. சில ஹாஜிகளிடத்தில் இத்தவறு ஏற்படுகிறது . இத்தவறை செய்பவர்கள் மீண்டும் தங்களுக்குரிய எல்லைகளுக்கு சென்று இஹ்ராமில் பிரவேசிக்க வேண்டும் அல்லது ஒரு ஆடு மக்காவில் ஃ பித்யாவாக கொடுக்க வேண்டும். அதன் இறைச்சி மக்காவில் உள்ள ஏழைகளுக்கு பங்கிட வேண்டும். அதிலிருந்து இவர் எதையும் உண்ணகூடாது.
4. ஃபர்ளான தொழுகையாக இருந்தாலே தவிர இஹ்ராமில் பிரவேசித்தவர் இரண்டு ரக்க அத் தொழுவது கடமை என கருதுவது தவறாகும். இதற்கு எந்தவிதமான ஆதாரமும் இல்லை.
5.ஆண்களுக்கு ஒப்பாக பெண்கள் வெள்ளை நிற ஆடை அணிவது இது தடுக்கப்பட்ட ஒன்றாகும் . ஆண்களைப்போன்று பெண்களுக்கு இஹ்ராமிற்கென்று பிரத்தேகமாக எந்த ஆடையும் இல்லை . அதே வேளையில் பெண்கள் எப்போதும் தங்களின் ஆடைகளில் இஸ்லாமிய வழிமுறைகளை பேண வேண்டும். முழு உடலையும் மறைக்கக் கூடிய இறுக்கமில்லாத, வேலைப்பாடுகளில்லாத, ஆடைகளாக இருக்க வேண்டும். ஆணுக்கு ஒப்பாக பாவனை செய்வது பொதுவாகவே தடுக்கப்பட்டது. பெண்களைப் போலவே நடக்கும் ஆண்களையும் ஆண்கள் போல நடக்கும் பெண்களையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சபித்துள்ளார்கள்எனவும் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (புகாரி 5885 )

6. ஒரு பெண் இஹ்ராமுக்குரிய எல்லையை வந்தடைந்து அவளுக்கு மாதவிடாய் ஏற்பட்டு விட்டால் அவளும் குளித்து சுத்தம் செய்து உம்ராவிற்குரிய அல்லது ஹஜ்ஜுக்குரிய நிய்யத்தை வைத்துக் கொள்ள வேண்டும் . சிலர் மாதவிடாய் பெண்கள் இஹ்ராமில் பிரவேசிக்க முடியாது என கருதுகின்றனர். இதுவும் தவறாகும். இப்பெண்கள் தவாஃபைத் தவிர அனைத்து வழிபாடுகளிலும் ஈடுபடலாம்.
7. துல் ஹஜ் 8 ஆவது நாள் மஸ்ஜிதில் ஹராமிலிருந்து இஹ்ராமில் பிரவேசிக்க வேண்டும் என சில ஹாஜிகள் கருதுகின்றனர். இதுவும் தவறாகும். ஹாஜிகள் மக்காவில் எந்த பகுதியில் இருக்கின்றார்களோ அந்தப் பகுதியிலிருந்து இஹ்ராமில் பிரவேசிக்கலாம் . ஸஹாபாக்களில் சிலர் அப்தஹ் என்ற பகுதியிலிருந்து இஹ்ராமில் பிரவேசித்துள்ளார்கள் .

8. இஹ்ராமில் இழ்திபாவின் நிலை : இஹ்ராமில் இருப்பவர் வலது தோள் புஜத்தை திறந்த நிலையில் இருப்பது இழ்திபா ஆகும் . இது தவாஃபுல் குதூமிற்கு (ஹஜ்ஜின் ஆரம்ப தவாஃப்) மட்டுமே. ஆனால் ஹாஜிகளின் அதிகமானவர்கள் ஹஜ்ஜின் கிரிகைகள் முடியும் வரை வலது தோள் புஜத்தை திறந்த நிலையிலேயே இருக்கின்றனர் இதுவும் தவறாகும். சிலர் தொழுகையின் போதும் தோள் புஜத்தை திறந்த நிலையிலேயே தொழுகின்றனர் இதுவும் மிகப் பெரும் தவறாகவும்.

9.சிலர் இஹ்ராமின் ஆடைகளை மாற்றக் கூடாது அல்லது சுத்தம் செய்யக் கூடாது என கருதுகின்றனர். இதுவும் சில ஹாஜிகளிடத்தில் ஏற்படும் தவறாகும். ஹஜ் , உம்ரா செய்பவர் இஹ்ராமின் ஆடைகளை மாற்ற வேண்டும் அல்லது கழுவி சுத்தப்படுத்த வேண்டும் என்று கருதினால் தாராளமாக செய்யலாம்.

10. தவாஃபின் ஏழு சுற்றுகளிலும் வேகமாக நடப்பது அல்லது ஓடுவது இதுவும் ஹாஜிகளிடம் ஏற்படும் தவறாகும் . நபி (ஸல்) அவர்கள் முதல் மூன்று சுற்றுகளில்தான் எட்டுக்களை விரைவு படுத்தி உள்ளார்கள் மீதமுள்ள நான்கு சுற்றுகளிலும் நடந்தே சென்றுள்ளார்கள். அறிவிப்பவர் : இப்னு உமர்( ரலி )நூல் :அபூதாவூத் 1893 (பெண்கள் எந்த இடங்களிலும் ஓடக் கூடாது.)

11. இஹ்ராமில் பிரவேசித்த பிறகு அதிகம் தல்பியா சொல்லாமல் அல்டசியாமாக இருப்பது. இதுவும் தவறாகும் (யவ்முன் நஹ்ர்) அதாவது துல் ஹஜ் பத்தாவது நாள் ஜம்ரத்துல் அகபாவில் கல்லெறிகின்றவரை அதிகம் தல்பியா சொல்ல வேண்டும்.

12. இஹ்ராமுக்குரிய ஆடைகளை அணிந்த பிறகு வேறு எதுவும் அணியக் கூடாது என்றும் சிலர் கருதுகின்றனர் இதுவும் தவறாகும். செருப்பு , மோதிரம் , கைக்கடிகாரம் , பெல்ட் , கண்ணாடி …. போன்றவைகளை அனைத்து கொள்ளலாம் தைக்கப்பட்ட ஆடைகளை அணியாக கூடாது.

13. இஹ்ராமில் பிரவேசித்த பெண்கள் நிகாப் , (முகத்திரை ) மற்றும் கை உறைகளை அணியாக கூடாது இந்தத் தவறு அதிகமான பெண்களிடத்தில் காணபப்டுகிறது சுன்னா அதனை அணியாமல் இருப்பதாகும். ஏனெனில் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : இஹ்ராமிலுள்ள பெண்கள் நிகாப் , (முகத்திரை ) மற்றும் கை உறைகளை அணியாக கூடாது . அறிவிப்பாளர் : இப்னு உமர் (ரலி) நூல் : அபூதாவூத் 1825

14. தல்பியாவில் பெண்கள் சப்தத்தை உயர்த்துவது இதுவும் ஹாஜிகளிடத்தில் ஏற்படும் தவறாகும். ஒரு பெண் தன்னளவில் கேட்கும்படி தல்பியா சொல்லிக்கொள்வது விரும்பத்தக்க விஷயமாகும்.

தவாஃபோடு தொடர்புடைய சில தவறுகள் 
1. ஹஜருல் அஸ்வதிற்கு முன்பிருந்தே தவாஃபை ஆரம்பிப்பது அல்லது கஃபாவின் வாசலிலிருந்து தவாஃபை ஆரம்பிப்பது இது மிகப்பெரும் தவறும் வரம்பு மீறுதலும் ஆகும். இயன்றால் ஹஜருல் அஸ்வதை தொட்டு முத்தமிட்டு விட்டு தவாஃபை ஆரம்பிக்க வேண்டும் . கூட்ட நெரிசலாக இருப்பின் ஹஜருல் அஸ்வதை நோக்கி கையை உயர்த்தி பிஸ்மில்லாஹி அல்லாஹு அக்பர் என்று கூறிவிட்டு தவாஃபை ஆரம்பிக்க வேண்டும். (கையை முத்தமிடவேண்டிய அவசியமில்லை )
2. “ஹிஜ்ர் இஸ்மாயீல்என்று மக்களால் அழைக்கப்படுகின்ற (குர் ஆனிலோ ஹதீஸிலோ இதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை.) அரைவட்ட பகுதியை விட்டு விட்டு தவாஃப் செய்வது இதுவும் மிகப்பெரும் தவறாகும். அரைவட்ட பகுதி கஃபாவின் ஒரு பகுதியே இதனை விட்டுவிட்டு தவாஃப் செய்தால் தவாஃப் பூர்த்தி ஆகாது. மீண்டும் அவர் தவாஃபை திரும்ப செய்ய வேண்டும்.
3. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (ஹஜருல் அஸ்வத், ருக்னுல் யமானீ ஆகிய) இரு யமனிய மூலைகளைத் தவிர,இறையில்லம் கஅபாவில் வேறெந்த இடத்தையும் தொட்டு முத்தமிட்டதை நான் பார்த்ததில்லை. இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. நூல் புகாரி : 2429.
4. அதே வேளையில் ஹஜருல் அஸ்வதை தொட்டு முத்தமிடுவதற்காக வேண்டிபோட்டி போடுவதும், கூட்ட நெரிசல் ஏற்படுத்துவதும் , சப்தமிடுவதும் கூடாது. இது சுன்னாவிற்கு மாற்றமான செயலாகும். எவரது நாவு மற்றும் கையிலிருந்து பிற முஸ்லிம்கள் பாதுகாப்புப் பெறுகின்றனரோ அவரே முஸ்லிம் ஆவார். அறிவிப்பவர் : இப்னு அம்ர் (ரலி) நூல் : புகாரி 10
5. மகாமு இப்ராஹீம் , கஃபாவின் திரைச்சீலை (கிஸ்வா ) , கஃபாவின் நான்கு மூலைகள் , ருகுனுல் யமானி, ஹஜருல் அஸ்வத் ஆகியவற்றை தொட்டு தடவுவது, முத்தமிடுவதின் மூலம் பரக்கத் கிடைக்கிக்கும் என நம்புவது மிகப்பெரும் தவறாகும். அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(என் தந்தை) உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் ஹஜருல் அஸ்வதை முத்தமிட்டு விட்டு, “அல்லாஹ்வின் மீதாணையாக! நீ ஒரு கல் என்பதை நான் அறிவேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உன்னை முத்தமிடுவதை நான் கண்டிராவிட்டால் நான் உன்னை முத்தமிட்டிருக்கமாட்டேன்என்றார்கள். இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. நூல் : புகாரி : 2435.
ஹஜருல் அஸ்வத் ஒரு கல் அதன் மூலம் எந்த நன்மையோ, தீமையோ, பறக்கத்தோ செய்ய முடியாது. என்பதனை கவனத்தில் கொள்ள வேண்டும்.
6. ஒவ்வொரு தவாஃப் மற்றும் ஒவ்வொரு ஸயீலும் குறிப்பிட்ட துஆக்களை ஓத வேண்டும் என்று உம்ரா மற்றும் ஹஜ் செப்பவர்களுக்கு தவறான முறையில் வழி காட்டபப்டுகிறார்கள். இதற்கு அல்லாஹ்வோ , அல்லாஹ்வின் தூதரோ வழி காட்டவில்லை. தவாஃப் மற்றும் ஸயீயின் போது திக்ரு , குர் ஆன் ஓதுவது , குர் ஆன் சுன்னாவில் வந்துள்ள ஸஹீஹான துஆக்களை ஓதுவது , தனக்காக உலக முஸ்லிம்களுக்காக துஆ செய்வது ஆகியவற்றில் ஈடுபடலாம். அதே வேளையில் நபி (ஸல்) ருக்னுல் யமானிற்கும் ஹஜருல் அஸ்வத்திற்கும் மத்தியில்
ربنا آتنا في الدنيا حسنةً ، وفي الآخرة حسنةً ، وقنا عذاب النار 
என்ற து ஆவை ஓதி உள்ளார்கள் . அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் இப்னு அஸ்ஸாயிப் (ரலி) நூல் : ஹாகிம் : 3098
7. சப்தமாக ஒருவர் துஆவை சொல்ல மற்றவர்கள் ஆமீன் சொல்வது அல்லது அதனை திருப்பிச் சொல்வது இதுவும் கூடாது. அவரவர் தனித்தனியே சப்தத்தை உயர்த்தாமல் அனைத்து தவாஃப் மற்றும் ஸயீக்களில் துஆ செய்ய வேண்டும்.
8. தவாப் செய்து முடித்து மகாமு இப்ராஹீமுக்குப் பின் இரண்டு ரக்க அத் தொழும் போது கிறாஅத் மற்றும் ருகூஃ , ஸுஜு தை நீட்டிச் செய்வது இதுவும் சுன்னாவிற்கு மாற்றமான செயல். அவ்விரண்டு ரகஅத்களையும் சுருக்கமாக தொழுவதே நபி வழியாகும். மேலும் மகாமு இப்ராஹீமுக்குப் பின் கூட்ட நெரிசலாக இருந்தால் அவ்விரண்டு ரகஅத்களையும் ஹரமின் எந்தப் பகுதியிலும் நிறைவேற்றலாம் .
8. தவாஃப் செய்யும் போது ஒளூ முறிந்து விட்டால் ஒளூ செய்து விட்டு விடுபட்ட தவாஃபிலிருந்து மீண்டும் தொடங்க வேண்டும். உதாரணமாக 5 வது தவாஃப் செய்து கொண்டிருக்கிறார் இன்னும் முடியவில்லை அதற்குமுன் ஒளூ முறிந்து விட்டது எனில் மீண்டும் 5 தவாஃபை அதன் ஆரமபத்திலிருந்து செய்ய வேண்டும். முதலாவது தவாஃபிலிருந்து செய்ய வேண்டும் என்ற அவசியமில்லை.
9. ஒருவர் தவாஃப் செய்து கொண்டிருக்கிறார் தொழுகைக்காக இகாமத் சொல்லப்பட்டு விட்டால் தவாஃபை நிறுத்தி விட்டு தொழுகையில் ஈடுபட வேண்டும். தொழுகை முடிந்ததும் விட்ட இடத்திலிருந்து மீண்டும் தவாஃபை ஆரம்பிக்க வேண்டும். முதலாவது தவாஃபிலிருந்து செய்ய வேண்டும் என்ற அவசியமில்லை.
10.ஒருவர் தவாஃப் செய்து கொண்டிருக்கிறார் தான் செய்கின்ற தவாஃபில் சந்தேகம் ஏற்பட்டுவிட்டால் உதாரணமாக 4 வதா அல்லது 5 வதா என்று சந்தேகம் ஏற்படுகின்றது இச்சூழலில் 4 என்று குறைவான எண்ணிக்கையை கணக்கில் கொள்ளவேண்டும்.
                                                    தொகுப்பு : மௌலவி S.யாஸிர் ஃபிர்தௌஸி


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

1.கணவனைக் கவரும் வழிகள் 40

பத்ருப் போர் உணர்த்தும் பாடமும் படிப்பினைகளும்!

மண்ணறை வேதனை 001