இஸ்லாம் கூறும் ஆடை ஒழுங்கு




ஆடையில்லா மனிதனை அரை மனிதன் என்பார்கள். ஆடையைக்கொண்டே மனிதன் மதிக்கப்படுகிறான். அதனால் மனிதனுக்கு ஆடை ஒழுங்கு அவசியம். அதை இஸ்லாம் அற்புதமாகக் கூறுகிறது. அதைப் பேணுவது ஒவ்வொரு முஸ்லிமுக்கும் அவசியமாகும்.
ஆடை, மனிதனின் அந்தரங்க பகுதிகளை மறைக்கக்கூடியதாகவும், எளிமையானதாகவும், மார்க்கம் அனுமதித்த துணிவகையிலிருந்தும், மார்க்கம் அனுமதித்த அளவிலும், ஆண்கள், பெண்களை வேறுபடுத்திக் காட்டும் வகையிலும், இறையச்சத்தை தரும் அமைப்பிலும் அமைதல் வேண்டும்.
     ஆனால் நாகரீகம் என்ற அமைப்பில் தற்காலத்தில் உடுத்தப்படுகின்ற ஆடை வகைகளில் பெரும்பாலும் உடலின் அந்தரங்க பகுதிகளை மறைப்பதில்லை. ஆண்கள் அணியக்கூடிய ஆடைகளில் நாகரீகம் என்ற பெயரில் பல இடங்களில் கிழிசல்கள் இருப்பதாலும், ஆடையை கீழிறக்கி உடுத்துவதாலும், பெண்களால் அணியப்படுகின்ற சல்வார் கமீஸ், மிடி, சேலை போன்ற ஆடைகள் மிகவும் இளகலாக அமைந்திருப்பதாலும், இறக்கம் குறைந்த ஆடைகளை பெண்கள் அணிந்து வருவதாலும் அவர்களின் மறைக்கப்பட வேண்டிய பகுதிகள் அனைத்தும் வெளிப்படுகிறது. இதனால் ஆடையிருந்தும் ஆடையில்லா மனிதர்களாகவே வலம் வருகின்றனர்.
ஆண்களை விட மிகவும் பேணுதலாகவும், பாதுகாப்பாகவும் கருதப்படக்கூடியவர்கள் பெண்களாவர். ஆகவே ஆண்களை விட பெண்கள் ஆடை விஷயத்தில் மிக அக்கறை செலுத்துவது அவசியமாகும். குழந்தையிலிருந்தே ஒழுக்கம் கற்பிக்கும் பழக்கம் நீக்கப்பட்டு விட்டதால் குழந்தை முதல் பெரியவர்கள் வரை அணியக்கூடிய பெரும்பாலான ஆயத்த ஆடைகளில் கைப் பகுதி வலையினாலும், இளகிய துணியாலும், சில ஆடைகளில் கைத்துணியின்றியும் தயாரிக்கப்படுகிறது. இது போன்ற ஆடைகளை குழந்தை தானே என்று உடுத்தி பழக்கும் போது பிற்காலத்தில் நாணமில்லா பெண்களாக மாறிவிடும் அபாயம் இருக்கிறது. இது போன்ற கவர்ச்சியான ஆடை அணியும் பெண்கள், தீய கண் கொண்டு பார்க்கும் மனித மிருகங்களால் சீரழிக்கப்படும் நிலையும் ஏற்படுகிறது. ஆகவே இது போன்ற ஆடை வகைகளை முஸ்லிம் பெண்கள் தவிர்ப்பது அவசியமாகும்.
பெண்கள் தங்களின் உடலையும், ஆடைவகைகளில் உள்ள அலங்காரங்களையும் மறைக்கும் வகையில் ஏற்படுத்தப்பட்ட பர்தா எனும் இஸ்லாமிய வழிமுறை தற்காலத்தில் கேள்விக்குறியாகி, மிக இருகலாகவும், உடலமைப்பை எடுத்துக் காட்டும் அமைப்பிலும் இருக்கிறது.

இது போன்ற ஒழுங்கீனமான நடை முறைகள் மனித சமூகத்திடம் இருக்கக்கூடாது என்பதற்காக ஆடை ஒழுங்குகளை அல்லாஹ் அருள் மறை அல்குர்ஆன் மூலம் தெளிவுபடுத்துகிறான்.
மனிதர்களே உங்களின் மறைவிடங்களை மறைப்பதற்காகவும், அலங்காரமாகவும் இருப்பதற்காக உங்களுக்கு ஆடையை இறக்கிவைத்தோம். நீங்கள் அணியும் ஆடைகளில் மிகச்சிறந்த்து தக்வா எனும் இறையச்சத்தை வெளிப்படுத்தும் ஆடையாகும் என அல்லாஹ் தனது வான்மறையில் அற்புதமாகக் கூறுகிறான். அல்குர்ஆன் 7:26 ஆடவர்களால் அணியப்படுகின்ற கீழாடைகளான வேஷ்டி, கைலி, பேண்ட், பைஜாமா போன்ற ஆடைகள் அதிகமான இறக்கத்தால் தரையோடு தரையாக உராய்ந்து வருகிறது. இது துணிகளுக்கு ஒரு புறம் கேடு எனில் மற்றொரு புறம் பெருமை வெளிப்படுத்தும் விதத்திலும் அமைந்திருக்கிறது  பல இளைஞர்கள் பள்ளிவாசலுக்கு தொழ வரும் போது மட்டும் பக்திப் பரவசம் ஏற்பட்டவர்கள் போன்று தங்களின் பேண்ட் போன்ற கீழாடைகளை உயர்த்தி வைத்து தொழுவார்கள். தொழுகை முடிந்ததும் அதை கீழே இறக்கிக் கொள்வார்கள். இது போன்று கீழாடைகள் இறக்கமாக இருக்கும் போது தரையில் உள்ள அசுத்தங்கள் ஆடையில் பட்டு அது அசுத்தமாகி, அதனால் தொழுகை கூடாமல் போவதற்கான வாய்ப்பும் இருக்கிறது. எனவே நபியவர்கள் கற்பித்த அளவான கரண்டை காலுக்கு கீழ், ஆடை இறங்காமல் பார்த்துக் கொள்வது அவசியமாகும். ஏனெனில் கீழாடையில் கரண்டைக் காலுக்கு கீழ் இறங்கும் பகுதி நரக நெருப்பின் ஒரு பகுதி என நபியவர்கள் எச்சரித்துள்ளார்கள்.
மற்றொரு இடத்தில் எவர் பெருமையை வெளிப்படுத்தும் விதத்தில் தனது ஆடையை தரையுடன் தரையாக இழுத்து வருகிறாரோ அவரை கியாமத் நாளில் அல்லாஹ் தனது அருள் பார்வை கொண்டு பார்க்கமாட்டான் என நபியவர்கள் எச்சரிக்கிறார்கள்.
ஆனால் ஆடை விஷயத்தில் நபித்தோழர்களுக்கு மிகவும் பயம் இருந்தது. அதனால் தான் இதனைச் செவியுற்ற அபூபக்க்ர் ஸித்தீக் ரழி அவர்கள் நபியே எனது ஆடை கீழே நழுவி விழுகிறது. அதை நான் இருக்கமாக பிடித்தால் மட்டுமே விழாமல் இருக்கிறது. எனவே நானும் பெருமையாளரின் பட்டியலில் இடம் பெருவேனா என பயத்துடன் கேட்ட போது, நீங்கள் பெருமையாரின் பட்டியலில் இடம் பெற மாட்டீர்கள் என நபியவர்கள் ஆறுதல் கூறினார்கள்.
தற்காலத்தில் பெண்கள் ஆண்களுக்கு சமம் என்ற வாதத்தில் ஆடவர் அணியும் ஆடை வகைகளை முஸ்லிம் பெண்களும் தெரிவு செய்கின்றனர். இது தவிர்கப்பட வேண்டியதாகும். ஏனெனில் பெண் போன்று தோற்றமளிக்கும் ஆணையும், ஆண் போன்று தோற்றமளிக்கும் பெண்ணையும் நபியவர்கள் சபித்துள்ளார்கள். எனவே நபியின் சாபத்தை விட்டு நம்மை பாதுகாத்துக் கொள்ள வேண்டுமெனில் இவற்றை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும்
 எல்லாம் வல்ல அல்லாஹ் அவன் கற்பித்த ஒழுங்குகளைப் பேணும் நற்பேற்றினை நம் அனைவருக்கும் நல்குவானாக ஆமீன்.








     .





கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

1.கணவனைக் கவரும் வழிகள் 40

பத்ருப் போர் உணர்த்தும் பாடமும் படிப்பினைகளும்!

மண்ணறை வேதனை 001