இளைஞர்களே.....உங்களைத்தான்


ஒரு சமுதாயத்தின் இணையற்ற பாரிய சக்தி அச்சமூதாயத்தின் இளைஞர்களே ஆவார்கள். ஒரு மனிதன் தனது வாழ்நாளில் மூன்று பருவங்களை கொண்டுள்ளான் என்பது நாம் அனைவரும் அறிந்தவிடயமாகும். வழுவற்ற குழந்தை பருவம், ரத்தம் துடிக்கும் இளமைப்பருவம்,வயதுடைய முதுமை பருவம் ஒரு மனிதனுடைய வாழ் நாளின் மிகவும் பலவீனமான காலகட்டங்களாகும். இளமை பருவம் ஒரு சமூக மாற்றத்தில், புரட்சிகளில், போராட்டங்களில், அது போன்று சமூகத்துக்கு பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தக் கூடிய மிகவும் மோசமான விடயங்கள் என அனைத்து அம்சங்களிலும் மிக முக்கியமானதொரு பங்களிப்பை செலுத்திக் கொண்டிருப்பதை நம் யாராலும் மறுக்க முடியாத‌  உண்மையாகும். ஒரு சமூக மாற்றத்தில் இளைஞர்களின் பங்களிப்பு என்பது மிகவும் இன்றியமையாத அம்சமாகும்.
இஸ்லாமிய வரலாறுகளில் இஸ்லாத்தின் வளர்ச்சிகளுக்கு ஈடு இணையற்ற பங்களிப்பை செய்தவர்களும் இளைஞர்களே ஆவார்கள். இன்றைய எமது முஸ்லிம் இளைஞர் யுவதிகளின் நிலைமைகளை உற்று அவதானிக்கும் பொழுது மிகவும் கவலைக்குறிய ஒரு பாதாள நிலையை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதை காணலாம். நவீன ஊடகங்களின் அபரிமிதமான வளர்ச்சிகளுக்குள் மடிந்து முஸ்லிம் சமூகத்தின் வீழ்ச்சிகளுக்கு துணைபோகக்கூடியதும், உன்னத மார்கத்துக்கு கலங்கம் விளைவிக்க கூடிய ஒரு சமுதாயமாகவே எமது முஸ்லிம் இளைஞர் சமுதாயம் மாறிக் கொண்டிருப்பதை காணலாம்.
யூசுப் கர்ளாவி அவர்கள் கூறும் ஒரு கருத்து இங்கு மிகவும் குறிப்பிட்டு கூறத்தக்கது. ” நிலங்கள் ஆக்கிரமிக்கப்படுவதை விட மூளைகளும், உணர்ச்சிகளும் ஆக்கிரமிக்கப்படுவது மிகவும் பயங்கரமானது”
கர்ளாவி அவர்கள் குறிப்பிடுவது போன்று எமது சமூகம் இது போன்றதொரு அபாய நிலையிலேயே சிக்கித் தவிக்கின்றது. ஆபாச இணையத்தளங்கள் ஊடாக உணர்சிகள் தூண்டப்பட்டு ஒரு சமூக கட்டமைப்பை சீரழிக்கக் கூடிய நிலைக்கு இட்டு செல்கின்றது. சமுக வளைத்தளங்கள் ஊடாக கால, நேரம் வீணாக்கப்படுவது மாத்திரமன்றி காதல், வழிகேடு என தவரிய பாதையின்பால் இட்டு செல்கின்றது. இது மாத்திரமன்றி நவீன கால ஜாஹிலிய கலாச்சாரங்களால் மூழ்கடிக்கப்பட்டு மூளைகள் மந்தமாக்கப்பட்டுக் கொண்டிருகின்றது. இஸ்லாம் பற்றிய அடிப்படை அறிவு கூட அற்ற, இஸ்லாமிய கடமைகளில் பராமுகமும், இஸ்லாம் அறிவு பற்றிய ஒரு இழிவான எண்ணமும், இஸ்லாமிய கலாச்சாரங்கள் பற்றிய ஒரு கேவலமான பார்வையும் கொண்ட ஒரு இளைஞர் கூட்டமே முஸ்லிம்கள் ஆகிய எம்மத்தியில் உருவாகிக் கொண்டிருப்பதை காணலாம்.
பெண்கள் சமூகத்தின் கண்கள் என்பார்கள், இன்றைய யுவதிகள் நாளைய தாய்மார்கள் என்பார்கள் நமது வருங்கால‌ தாய்மார்களின் நிலை என்ன? ஒரு குழந்தையின் வளர்ப்பில் பாரியதொரு தாக்கத்தை செலுத்தும் இவர்களது இஸ்லாம் பற்றிய தெளிவு என்ன? சினிமா, சின்னத்திரை, இணைய‌த்தளம், நாவல்கள், சஞசிகைகள் போன்றவற்றின் ஆபாச கருத்துக்களால், தவரிய‌ முன்மாதிரிகளால், வழித்தவறி தடுமாறிக் கொண்டிருகின்றது. இன்னும் சமூக வளைத்தளங்களின் மாயைகளில் சிக்குண்டு காதல், தவரிய நட்பு என அலைக்கழிந்து கொண்டிருப்பதை காணாலாம்.
இஸ்லாம் கூறும் இளைஞன்.
(நபியே) இன்னும், உம் இறைவன் வானவர்களை நோக்கி “நிச்சயமாக நான் பூமியில் ஒரு பிரதிநிதியை அமைக்கப் போகிறேன்” (2 : 30)
அல்லாஹ் மனிதனை தனது பிரதிநிதியாக இவ்வுலகில்  படைத்து கண்ணியபடுத்தியுள்ளான். அதுமாத்திரமன்றி அனைத்து விடயங்களையும் சீரான வழிகாட்டலுடன் மிகவும் இலகுவாக்கி, இறைவனின் படைப்புகளில் ஒரு சக்திமிக்க படைப்பாக படைத்து ஆட்சி செய்யும் அதிகாரத்தையும் சக்தியையும் மனிதனுக்கே வழங்கியுள்ளான்.  மனிதன் ஒரு பிரதி நிதி என்ற அடிப்படையில் தனது கடமையை, இறைவன் தனக்கு இட்ட கட்டளையை இறைவனுக்காக செய்யத்தவறியுள்ளான். ஒரு நிறுவனத்தின் அல்லது ஒரு நாட்டின் பிரதி நிதியாக நாம் செல்கின்ற பொழுது எமது மேல் அதிகரிகளால் இடப்பட்ட கட்டளைகளை ஆர்வத்துடன், நற்பெயருக்ககாக நிறைவேற்றுவது போன்று அல்லாஹ்வினால் அவனது பிரதிநிதியாக படைக்கப்பட்டு அழகிய முறையில் வழிகாட்டப்பட்ட நாம் எவ்வளவு தூரம் அவனது ஏவல்களை நிறைவேற்றுகின்றோம் என்பது கேள்விக்குறியே?
இளமை பருவத்தின் முக்கியதுவத்தை உணர்த்துவதற்கு பின்வரும் ஹதீஸ்கள் போதுமானவையாகும்.
.
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வின் நிழலைத் தவிர வேறு நிழலே இல்லாத அந்நாளில் அல்லாஹ் ஏழு நபர்களுக்கு நிழல் கொடுப்பான்.
1. நீதமாக நடந்து கொண்ட ஆட்சியாளன்
2. அல்லாஹ்வின் வணக்கத்திலேயே வளர்ந்த இளைஞன்
3. தனது உள்ளத்தைப் பள்ளியுடன்; தொடர்பு படுத்திக் கொண்டிருந்த மனிதன்
4. அல்லாஹ்வுக்காக நேசம் கொண்டு அதற்காகவே இணைந்து அதற்காகவே பிரிந்த இரு மனிதர்கள்
5. அந்தஸ்தும் அழகுமுள்ள பெண் தவறு செய்ய அழைத்தபோது நிச்சயமாக நான் அல்லாஹ்வைப் பயப்படுகிறேன் எனக் கூறிய மனிதன்
6. வலது கை கொடுப்பதை இடது கை அறியாவண்ணம் தர்மம் செய்யும் மனிதன்
7. தனித்திருந்து அல்லாஹ்வை நினைவு கூர்ந்து கண்ணீர் வடித்த மனிதன்.
இது ஆண்களுக்கு மட்டுமல்ல. பெண்களுக்கும் தான். அவர்களும் தம் செயல்கள் குறித்து விசாரிக்கப்படுவார்கள். அவர்களின் செயல்கள் நல்லவையாகயிருந்தால் நன்மையும் தீயவையாக இருந்தால் தீமையும் உண்டு. கேள்வி கணக்கும் கூலியும் தண்டனையும் ஆண்களுக்கு இருப்பது போலவே பெண்களுக்கும் உண்டு.
வாலிபத்தை எவ்வாறு கழித்தாய்? என்ற வினாவுக்கு விடை கொடுக்காமல் ஓர் அடியானின் பாதம் மறுமையில் நகர முடியாது என்பதை பின்வரும் ஹதீஸ் எச்சரிக்கின்றது- ‘மறுமை நாளில் ஓர் அடியான் நான்கு வினாக்களுக்கு விடை அளிக்கும் வரை அவனது கால்கள் இரண்டும் நகர முடியாது’. அவை யாவன…
01. தனது வாழ்க்கையை எவ்வாறு கழித்தாய்
02. தனது வாலிபப் பருவத்தை எந்த விடயங்களில் ஈடுபடுத்தினாய்.
03. செல்வத்தை எவ்வாறு சம்பாதித்து எவ்வாறு செலவு செய்தாய்.
04. பெற்ற அறிவின் மூலம் என்ன செய்தாய். (ஆதாரம் – தபராணி)
மேற்கூறிய ஹதீஸ்களின் மூலம் இளமை பருவம் வாழ்கையில் எவ்வளவு முக்கியமானது என்பதை புரிந்து கொள்ளலாம்
ஒரு மனிதனின் வாழ்க்கைக் கட்டத்தில் வாலிபப் பருவம் சிக்கல்களும் போராட்டங்களும் நிறைந்தது. அதில் அவதானமாகவும் நிதானமாகவும் செயற்படுவது எமது கடமையாகும். விட்டில் பூச்சிகள் விளக்கின் ஒளியை பூவாக நினைத்து ஏமாந்து அதில் தமது உயிரை மாய்த்துக் கொள்வது போல சில இளைஞர்கள் தமது வாலிபத்தை அழித்துக் கொள்கின்றனர். தமது விரல்களாலே தமது கண்களை குத்திக் கொள்கின்றனர்.
இஸ்லாத்தின் வரலாறுகளில் இளைஞர்களின் பங்களிப்பு.
இஸ்லாத்துக்கு அன்றைய முஸ்லிம் இளைஞர்கள் ஆற்றிய பணியும் மகத்தான சேவகளின் துளிகளுமே இன்று பரந்த விரிந்து கிளைவிட்டு காணப்படும் முஸ்லிம் சமூகம். அன்றைய இளைஞர்களிடம் காணப்பட்ட, தியாகம், வீரம், நல்லொழுக்கும் இன்மையே இந்த பலமான‌ முஸ்லிம் சமூகம் இன்று பலவீனமடைவதற்கான மிகமுக்கிய காரணியாகும்.
சிந்து சமவெளியை முஹம்மத் பின் காஸிம் கைப்பற்றிய போது அவர்களிம் வயது 17. பைஸாந்திய சாம்ராஜ்ஜியத்தை முஹம்மத் பின் பாதிஹ் கைப்பற்றிய பொழுது அவர்களின் வயது 23. ஸ்பெயினை தாரிக் பின் முறாத் கைப்பற்றிய  பொழுது அவர்களின் வயது 21. இது போன்ற வீரதீர செயல்களை செய்து இஸ்லாத்தின் வளர்சிக்கு தூண்களாக இருந்த இளைஞர்கள் இன்று எமது சமூகத்தில் எங்கே?
நபி (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு இஸ்லாத்தை போதிப்பதற்காக அனுப்பப்பட்ட  ஸஹாபி முஸ் அப் பின் உமைர் (ரழி) ஒரு இளைஞர். அபிசீனியாவுக்கு முதன் முதலில் ஹிஜ்ரத் செய்த ஆண்களும், பெண்களும் இளைஞர்களும், யுவதிகளுமே ஆவார்கள். யெமனுக்கு நீதிபதியாகவும், விரிவுறையாளராகவும் அனுப்பட்ட முஆத் பின் ஜபல் (ரழி) ஒரு இளைஞர். மூத்த ஸஹாபாக்கள் பங்கு பற்றிய ஒரு படையணிக்கு தளபதியாக நியமிக்கப்பட்ட உஸாமா பின் ஸைத் (ரழி) ஒரு இளைஞர். அபூபக்கர் (ரழி) அவர்களது காலத்தில் அல் – குர் ஆனை ஒன்றுதிரட்டும் பணியில் பங்கு கொண்டர்வ‌களுள் பலர் இளைஞர்களே ஆவார்கள்.
இப்ராஹிம் (அலை) அவர்கள் ஏகத்துவத்தை தனது தந்தைக்கு எத்திவைத்த பொழுது அவர்களின் வயது 14. சிலை வணங்கிகளின் சிலைகளை உடைத்த இவரை குர் ஆன் ஒரு இளைஞர் என குறிபிடுகின்றது.  அது மாத்திரமன்றி இறை நிரகரிப்பளார்கள் மற்றும் நம்ரூத் போன்ற பல கொடுங்கோள் மன்னர்களுடன் போராடியதும் அவர்களது இளமை பருவத்திலே ஆகும்.  யூஸுப் (அலை) அவர்கள் முகங்கொடுத்த இன்னொரன்ன துன்பங்களை, இன்னல்களை தமது இளமை பருவத்திளே சந்தித்து அழகிய முறையில் வெற்றி கொண்டதையும் ஸூரா யூஸுப்பில் அழகிய படிப்பினைகளாக குறிப்பிடப்பட்டிருப்பதை காணலாம். ஸுலைமான் (அலை) துல்கர்னைன் (அலை) மூஸா (அலை) அவர்கள் தமது இளமை பருவத்தையே எல்லாம் வள்ள அல்லாஹ்வுக்கே அர்பணித்திருப்பதை காணாலாம், ஸூரா கஃப் குறிப்பிடப்படும் இளைஞர்களின் வரலாறு என பல்லாயிரம் படிப்பினைகளை கொண்டுள்ள எமது இன்றைய முன்மாதிரி இளைஞர்கள் எங்கே?
மது, மாது, அனாச்சாரம், அட்டூழியம், என ஜாஹிலியத்தின் உச்ச நிலையில் அந்த குறைஷிக் குல‌த்தில் உத்தமராக வாழ்ந்த நபி முஹம்மத் (ஸல்) அவர்களும் இளைஞர்களே. இஸ்லாம் மார்கத்தை வளரப்பதற்கு தமது உயிர்களை தியாகம் செய்த, பல இன்னோரன்ன துன்பங்களை, இன்னல்களை அனுபவித்த, நபி (ஸல்) அவர்கள் காட்டிய ஒழுக்க முன்மாதிரிகளை அணுவ‌ளவும் பிசகாது வாழ்ந்த ஸஹாப்பக்களும் இளைஞர்களே ஆவார்கள். நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள் அவர்களை ஆரம்பத்தில்  ஆதரித்தவர்கள் அனைவரும் இளைஞர்கள் நிராகரித்தவர்களில் அதிகமானோர் முதியவர்கள் என்றும்.
இது போன்று ஆயிரம், ஆயிரம் முன்மாதிரிகளை கொண்டுள்ள இன்றைய எமது சமூகத்தின் முன்மாதிரிகள் யார்? நடிகர்கள், நடிகைகள், விளையாட்டு வீரர்கள், செல்வந்தர்கள், அரசியல்வாதிகள் என இவர்களின் பின்னால் குடைபிடித்துத் திரியும் இளைஞர்கள் இது போன்று இஸ்லாம் கூறும், இஸ்லாமிய வரலாறுகளில் கண்ட உதராண புருஷர்களாக மாறுவது எப்போது?
நாம் அனைவரும் கண்டிப்பாக புரிந்து கொள்ள வேண்டும் இவ்வுலக வாழ்க்கை அல்லாஹ்வின் பார்வையில் மிகவும் அற்பமானது. மனிதனாகிய எமக்கு இது நிரந்தரமற்ற தங்குமிடம், மரணத்தை சுவைக்கும் தருணம் எக்கணமும் எம்மை எத்தலாம். அல்லாஹ்வின் பார்வையில் மிகவும் அற்பமான இந்த சொற்பமான காலமே எமது முடிவற்ற கபுருடைய வாழ்கை, பல்லாயிரம் ஆண்டுகள் தங்கும் மஹ்ஸருடைய வாழ்க்கை மற்றும் எமது நிரந்தர தங்குமிடமான சுவர்கம் நரகத்தை தீர்மானிக்கப் போகின்றது.
பின்வரும் குர் ஆன் வசனங்கள் இவ்வுலக வாழ்கைக்கு சிறந்த உதாரணங்களாகும்.
“மேலும் மறுமையை நம்பாத அவர்கள்: “நமது இந்த உலக வாழ்க்கையைத் தவிர வேறு வாழ்க்கை கிடையாது; நாம் இறக்கிறோம்; ஜீவிக்கிறோம்; “காலம்” தவிர வேறெதுவும் நம்மை அழிப்பதில்லை” என்று கூறுகிறார்கள்; அவர்களுக்கு அது பற்றிய அறிவு கிடையாது – அவர்கள் இது பற்றிக் கற்பனையாக எண்ணுவதைத் தவிர வேறில்லை. (45:24)
அறிந்து கொள்ளுங்கள்: “நிச்சயமாக இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வேடிக்கையும், அலங்காரமுமேயாகும்; மேலும் அது உங்களிடையே பெருமையடித்துக் கொள்வதும்; பொருள்களையும், சந்ததிகளையும் பெருக்குவதுமேயாகும்; இது மழையின் உதாரணத்துக்கு ஒப்பாகும்; அதாவது: அது முளைப்பிக்கும் பயிர் விவசாயிகளை ஆனந்தப் படுத்துகிறது; ஆனால், சீக்கிரமே அது உலர்ந்து மஞ்சள் நிறம் ஆவதை நீர் காண்கின்றீர்; பின்னர் அது கூளமாகி விடுகிறது; உலக வாழ்வும் இத்தகையதே; எனவே உலக வாழ்வில் மயங்கியோருக்கு மறுமையில் கடுமையான‌ வேதனையுண்டு; முஃமின்களுக்கு அல்லாஹ்வின் மன்னிப்பும், அவன் பொருத்தமும் உண்டு – ஆகவே, இவ்வுலக வாழ்க்கை ஏமாற்றும் சொற்ப சுகமே தவிர (வேறு) இல்லை. (57:20)
இஸ்லாம் என்பது தொழுகை, நோன்பு, ஸகாத் மற்றும் ஹஜ் போன்ற கடமைகள் மாத்திரமன்று. எமது எண்ணங்கள் மிகவும் அழகிய, இலகுவான வாழிகாட்டகளை சுமையாகியுள்ளன. எமக்கான அடிப்படை தேவைகள் அனைத்தும் இறைவனால் தீர்மாணிக்கப்பட்டுவிட்டன. அந்த அடிப்படை விடயங்களை எம்மால் தீர்மானிக்கவோ, அனுமானிக்கவோ முடியாது. மிகவும் சொற்மான சில குறிபிட்ட விடயங்களிளே எமக்கான தெரிவு சுதந்திரத்தை தந்து அதற்காக நன்மை தீமையை பிரித்தறிய கூடிய பகுத்தறிவை தந்துள்ளான்.
நம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் தீனுல் இஸ்லாத்தில் முழுமையாக நுழைந்துவிடுங்கள்; தவிர ஷைத்தானுடைய அடிச்சுவடுகளை நீங்கள் பின்பற்றாதீர்கள்; நிச்சயமாக அவன் உங்களுக்கு பகிரங்கமான பகைவன் ஆவான், (2 : 2008)
இஸ்லாம் மார்க்கம் பற்றிய தெளிவை பெறுவதற்கு முயற்சிப்பதுடன் அல்லாஹ்வினால் அமானிதமாக அருளப்பட்ட இவ்வுலக வாழ்கையை, இளமை பருவத்தை அல்லாஹ்வின் வழிகாட்டலின் நிழலில் செலவிட்டு இவ்வுலகிலும் மறு உலகிலும் வெற்றிபெறுவதற்க்கு முயற்சிப்போம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

1.கணவனைக் கவரும் வழிகள் 40

பத்ருப் போர் உணர்த்தும் பாடமும் படிப்பினைகளும்!

மண்ணறை வேதனை 001