இனிய மூன்று அருட்கொடைகள்!

  
மனித வாழ்க்கைக்கு நிம்மதி என்பது மிகவும் அத்தியாவசியமான தேவை என்பதில் எவருக்கும் மாற்றுக் கருத்து இல்லை.
அந்த நிம்மதியைப் அடைந்து கொள்ள இன்றியமையாத மூன்று அம்சங்களை மனிதன் பெற்றிருப்பது அவசியமாகும். அவை;
1. வளமான ரிஸ்க் வாழ்வாதாரம்.
2. அதை அனுபவிப்பதற்கு தேவையான ஆரோக்கியமான நீண்ட ஆயுள்.
3. நோய் நொடிகள், கஷ்டங்கள், துன்பங்கள், ஆபத்துகள் இல்லாத சூழ்நிலை ஆகியவைகளாகும்.
ஒரு மனிதனுக்கு இம்மூன்றில் ஒன்று பூரணமாகக் கிடைத்து, மற்ற இரண்டும் கிடைக்கவில்லை என்றாலும், அல்லது, இம்மூன்றில் இரண்டு கிடைத்து ஒன்று கிடைக்கவில்லை என்றாலும் நிம்மதி என்பது கேள்விக்குறியே!                                                                                                                                                                      ஓர் இறைநம்பிக்கையாளனைப் பொறுத்த வரையில் இம்மூன்றுமே கிடைக்கப்பெறுவது என்பது இறைவன் வழங்கும் இனிய அருட்கொடைகள் ஆகும்.
ஒரு உண்மையை நாம் ஒப்புக்கொள்ள வேண்டும். உறுதியாக நம்பவும் வேண்டும். அது அல்லாஹ் இந்த உலகை ஓர் நிர்ணயத்தின் அடிப்படையில் இயக்கிக் கொண்டிருக்கின்றான்.
إِنَّا كُلَّ شَيْءٍ خَلَقْنَاهُ بِقَدَرٍ
அல்லாஹ் கூறுகின்றான்: நிச்சயமாக! நாம் ஒவ்வொரு பொருட்களையும் ஒரு குறிப்பிட்ட நிர்ணயத்தின் படி இயங்குவதாகவே படைத்திருக்கின்றோம்.
உலகின் அத்துனை படைப்புகளும் அதனதன் நிர்ணயத்தின் மீது செயல் பட்டுக் கொண்டிருக்கிறது. அது ஏற்கனவே முடிவும் செய்யப்பட்டு விட்டது. மனித வாழ்வும் அப்படித்தான்.ـ
 அல்லாஹ் ஒவ்வொரு மனிதனுக்கும் என்ன கொடுக்க வேண்டும் என நிர்ணயித்து இருக்கின்றானோ அதை அம்மனிதனுக்குக் கொடுப்பான். இன்னொரு மனிதனுக்கு வழங்கப்பட்டிருப்பது போன்ற வாழ்வியல் அருட்கொடைகள் தமக்கும் வழங்கப்பட வேண்டுமென ஆசைப்படுவது இறுதியில் தமக்கே பாதகமாக அமைந்து விடும்
அந்த வகையில் ஒரு மனிதனின் ஆயுட்காலம், வாழ்வாதாரம், வாழ்க்கைச் சூழ்நிலை எப்படி அமைய வேண்டும் என அல்லாஹ்வால் தீர்மானிப்பட்டு விட்டது, நிர்ணயிக்கப்பட்டு விட்டது. அதன்படியே மனித வாழ்வும் அமைந்திருக்கும்.
வாழ்வாதாரம் குறித்தான கண்ணோட்டம்.. ،
அப்துல்லாஹ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்: உங்களில் ஒருவர் தம் தாயின் வயிற்றில் நாற்பது நாட்கள் கருவாக உருவாக்கம் பெறுகின்றார். பிறகு அதைப் போன்றே நாற்பது நாட்கள் கரு ஒரு கட்டியாக மாற்றம் பெறுகின்றார். பிறகு, அதைப் போன்றே நாற்பது நாட்களில் ஒரு சதைப் பிண்டமாக மாற்றம் பெறுகின்றார்.
பிறகு, கருவறையினுள் அல்லாஹ் ஒரு வானவரை அனுப்புகின்றான். அவர் நான்கு விஷயங்களை எழுதுமாறு பணிக்கப்படுகின்றார். அந்த மனிதனின் வாழ்வாதாரம், ஆயுட்காலம், அவன் துர்பாக்கியசாலியா? அல்லது நற்பாக்கியசாலியா? ஆகியவைகளை அவர் எழுதுகின்றார். பிறகு அவனுள் உயிர் ஊதப்படும்என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.
وَمَا مِنْ دَابَّةٍ فِي الْأَرْضِ إِلَّا عَلَى اللَّهِ رِزْقُهَا وَيَعْلَمُ مُسْتَقَرَّهَا وَمُسْتَوْدَعَهَا كُلٌّ فِي كِتَابٍ مُبِينٍ
வாழ்வாதாரம் - ரிஸ்க் வழங்க அல்லாஹ் பொறுப்பேற்காத எந்த உயிரினமும் பூமியில் இல்லை. மேலும், அது வசிக்குமிடத்தையும், சென்று சேரும் இடத்தையும் அவன் நன்கறிகின்றான். அனைத்தும் ஒரு தெளிவான ஏட்டில் பதிவு செய்யப்பட்டு உள்ளன”. (அல்குர்ஆன்: 11: 6)
اللَّهُ يَبْسُطُ الرِّزْقَ لِمَنْ يَشَاءُ وَيَقْدِرُ وَفَرِحُوا بِالْحَيَاةِ الدُّنْيَا وَمَا الْحَيَاةُ الدُّنْيَا فِي الْآخِرَةِ إِلَّا مَتَاعٌ
அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு ரிஸ்க் வாழ்வாதாரத்தை தாராளமாக வழங்குகின்றான். மேலும், தான் நாடியவர்களுக்கு அவன் அளவோடு வழங்குகின்றான். எனினும், இவர்கள் உலக வாழ்வில் மூழ்கி, அதைக் கொண்டே பெரிதும் மன நிறைவு அடைகின்றார்கள். ஆனால், மறுமையைக் கவனிக்கும் போது இவ்வுலக வாழ்க்கை சொற்ப இன்பமேயன்றி வேறில்லை”. (அல்குர்ஆன்: 13: 26)
إِنَّ اللَّهَ يَرْزُقُ مَنْ يَشَاءُ بِغَيْرِ حِسَابٍ
திண்ணமாக, அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு ரிஸ்க் வாழ்வாதாரத்தை கணக்கின்றி வழங்குகின்றான்”. (அல்குர்ஆன்: 3: 37)
ஆக ஒரு சில இபாதத்களின் மூலமும், நற்குணங்கள், நற்பண்புகள் மூலமும், துஆக்கள் மூலமும் இம்மாற்றம் நிகழலாம்.
ü  01.ரிஸ்க் வாழ்வாதாரத்தை விஸ்தீரணமாக்கும் இபாதத்களும், நற்பண்புகளும்..
1. இஸ்திஃக்ஃபாரும், தவ்பாவும் வாழ்வாதாரத்தை விஸ்தீரணமாக்கும்..
قال الله تعالى: فَقُلْتُ ٱسْتَغْفِرُواْ رَبَّكُمْ إِنَّهُ كَانَ غَفَّاراً يُرْسِلِ ٱلسَّمَاء عَلَيْكُمْ مُّدْرَاراً وَيُمْدِدْكُمْ بِأَمْوٰلٍ وَبَنِينَ وَيَجْعَل لَّكُمْ جَنَّـٰتٍ وَيَجْعَل لَّكُمْ أَنْهَاراً
அல்லாஹ்விடம் இறைத்தூதர் நூஹ் அலைஹிஸ்ஸலாம் பிரார்த்திக்கும் போது, “நான் (என் சமூக மக்களிடம்) அவர்களிடம் கூறினேன்: உங்கள் இறைவனிடம் மன்னிப்புக் கோருங்கள். ஐயமின்றி அவன் பெரிதும் மன்னிப்பவனாக இருக்கின்றான். அவன் உங்களுக்காக மழையை பொழியச் செய்வான், செல்வத்தையும், சந்ததிகளையும் உங்களுக்கு வழங்குவான். உங்களுக்காக தோட்டங்களையும் உருவாக்குவான், உங்களுக்காக ஆறுகளையும் ஓடச்செய்வான்”. (அல்குர்ஆன்: 71: 10-12).
இந்த இறைவசனத்திற்கு விளக்கம் தருகிற முஃபஸ்ஸிரீன்களான இமாம்கள் இப்னு கஸீர் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களும், குர்துபீ ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களும் இந்த ஆயத்தில் அல்லாஹ் இஸ்திஃக்ஃபார், தவ்பாவின் மூலமாக ஓர் அடியானின் ரிஸ்க் வாழ்வாதாரம் விஸ்தீரணமாகும் என்று வாக்குறுதி தருகின்றான்என்று கூறுகின்றார்கள்.
இமாம் ஹஸன் அல் பஸரீ ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களிடம் ஒருவர் வந்து தாம் பஞ்சத்தில் வாடுவதாக முறையிட்டார். அதற்கு இமாமவர்கள் அல்லாஹ்விடம் பாவ மன்னிப்புத் தேடுங்கள்! பஞ்சம் தீரும்என்றார்கள். இன்னொருவர் வந்து தாம் ஏழ்மையில் இருப்பதாக முறையிட்டார். அவரிடமும் இமாமவர்கள் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புத் தேடுங்கள்! ஏழ்மை நீங்கும் என்றார்கள். இன்னொருவர் வந்து எனக்கு குழந்தை பாக்கியம் இல்லைஎன்று முறையிட்டார். அவரிடமும் இமாமவர்கள் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புத் தேடுங்கள்! குழந்தை பாக்கியம் கிடைக்கும்!என்றார்கள்.
அருகிலிருந்த இமாம் ஹஸன் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களின் மாணவர் வெவ்வேறான மூன்று நபர்கள், வெவ்வேறான மூன்று கோரிக்கைகளை முறையிட்ட போதும் அவர்களுக்கான தீர்வாக ஒரே விஷயத்தைக் கூறினீர்களே? எப்படி?” என்று கேட்டார்.
அதற்கு, இமாமவர்கள் நான் ஒன்றும் சுயமாக கூறவில்லை, அல்லாஹ் கூறியதைத்தான் நான் கூறினேன் என்று கூறி மேற்கூறிய இறைவசனத்தை ஓதிக் காண்பித்தார்கள்.
2. வலுவான இறைநம்பிக்கை வாழ்வாதாரத்தை விஸ்தீரணமாக்கும்...
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வின் மீது எப்படி தவக்குல் நம்பிக்கை வைக்க வேண்டுமோ, அத்தகைய உண்மையான நம்பிக்கையை வைப்பீர்களாயின் அவன் உங்களுக்கு பறவைகளுக்கு உணவளிப்பது போன்று உணவளிப்பான்.
பறவைகள் கூட்டை விட்டு காலியான வயிறோடு சென்று, கூட்டுக்குத் திரும்பும் போது வயிறு நிரம்பியவாறு திரும்புகின்றது”. (நூல்: அஹ்மது, திர்மிதீ)
3. இபாதத்தைக் கொண்டு மனநிறைவு பெறுதல் வாழ்வாதாரத்தை விஸ்தீரணமாக்கும்.
அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: ஓ ஆதமின் மகனே! என் இபாதத்தைக் கொண்டு உன் காரியங்களை நீ நிறைவு செய்தால் உன் உள்ளத்தை செல்வத்தை தருவதன் மூலமாக நிரப்புவேன். உன் ஏழ்மையை விரட்டி விடுவேன். நீ அப்படிச் செய்யவில்லை என்றால், உன்னை நான் எப்போதும் ஏதாவது வேலையை செய்து கொண்டிருக்கும் படி செய்து விடுவேன். உன் ஏழ்மையை உன்னை விட்டும் நீக்கமாட்டேன்என்று அல்லாஹ் கூறுவதாக, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். ( நூல்: இப்னுமாஜா, இப்னு ஹிப்பான், திர்மிதீ )
4. இரத்த உறவுகளை சேர்ந்து வாழ்வது வாழ்வாதாரத்தை விஸ்தீரணமாக்கும்..
யார் தன் வாழ்வாதரம் விசாலமாகவேண்டும், தன் ஆயுள் நீண்டதாக அமைய வேண்டும் என விரும்புகின்றாரோ, அவர் இரத்த உறவுகளைச் சேர்ந்து வாழட்டும்என அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (நூல்: அஹ்மத், புகாரி)
இந்த ஹதீஸிற்கு விளக்கம் தருகிற அறிஞர் பெருமக்கள் இரத்த உறவுகள் என்பது, தாய், தந்தை, சகோதரன், சகோதரி, தாய் வழிச் சொந்தம், தகப்பன் வழிச் சொந்தங்கள் ஆகியவைகளும் அடங்கும் என பொருள் தருகின்றனர்.
5. அடுத்து, அடுத்து செய்யும் உம்ராவும் ஹஜ்ஜும் வாழ்வாதாரத்தை விஸ்தீரணமாக்கும்.
அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்:
உம்ராவையும் ஹஜ்ஜையும் இடைவெளி இன்றி தொடர்படியாகச் செய்யுங்கள்; ஏனெனில், அவைகள் வறுமையையும், பாவங்களையும் போக்கிவிடும். இரும்பின் துருவை நெருப்பு போக்கி விடுவதைப் போலஎன்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (நூல்: நஸாயீ )

6. அழகிய முறையில் செலவு செய்வது வாழ்வாதாரத்தை விஸ்தீரணமாக்கும்..
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: பிலாலே! நீர் தாராளமாக செலவு செய்வீராக! அர்ஷின் அதிபதி உம் வாழ்வாதாரத்தை குறைத்து விடுவானோ என்கிற பயம் வேண்டாம்”. (ஸில்ஸிலா அஸ் ஸஹீஹா லில் அல்பானீ)
அல்லாஹ் கூறுவதாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: ஓ ஆதமின் மகனே! நீ செலவு செய், உமக்கு செலவு செய்யப்படும்”. (நூல்: முஸ்லிம்)
7. ஏழைகளுக்கு உதவுவது வாழ்வாதாரத்தை விஸ்தீரணமாக்கும்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: என்னைத் தேடுங்கள்! உங்களில் பலகீனமானவர்களோடு இருப்பதிலேயே நான் விரும்புகின்றேன். ஏனெனில், நீங்கள் உங்கள் பலகீனமானவர்களுக்கு உதவுவதின் மூலமாகத்தான் வாழ்வாதாரமும், உதவியும் பெறுகின்றீர்கள்”. (நூல்: அபூதாவூத், நஸாயீ)
8. தொழுவதும், தொழ ஏழுவதும் வாழ்வாதாரத்தை விஸ்தீரணமாக்கும்..
وَأْمُرْ أَهْلَكَ بِالصَّلَاةِ وَاصْطَبِرْ عَلَيْهَا لَا نَسْأَلُكَ رِزْقًا نَحْنُ نَرْزُقُكَ وَالْعَاقِبَةُ لِلتَّقْوَى ()
நபியே! உம்முடைய குடும்பத்தாரை தொழுமாறு ஏவுவீராக!, நீரும் அதில் நிலைத்திருப்பீராக! நாம் உம்மிடத்தில் வாழ்வாதாரத்தைக் கேட்பதில்லை. நாமே வாழ்வாதாரம் அளிக்கிறோம். இறுதி முடிவு இறையச்சமுடையோருக்கே.
9. தர்மம் செய்வது வாழ்வாதாரத்தை விஸ்தீரணமாக்கும்..
நீங்கள் வாழ்வாதாரத்தையும், மழையையும் தர்மம் செய்வது கொண்டு தேடிக்கொள்ளுங்கள்என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (நூல்: தப்ரானீ)
10. பாவத்தை விடுவது வாழ்வாதாரத்தை விஸ்தீரணமாக்கும்..
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: ஓர் அடியான் செய்கிற சில பாவங்களால் அவனுடைய வாழ்வாதாரங்களின் விஸ்தீரணம் தடைபடுகின்றது”.
11. இறையச்சமும், ஈமானும் வாழ்வாதாரத்தை விஸ்தீரணமாக்கும்.
وَمَنْ يَتَّقِ اللَّهَ يَجْعَلْ لَهُ مَخْرَجًا (2) وَيَرْزُقْهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ
மேலும், யாரேனும் அல்லாஹ்வுக்கு அஞ்சியவண்ணம் வாழ்வாரேயானால், அவருக்கு சிரமங்களிலிருந்து வெளியேறுவதற்கு ஏதேனும் வழியை ஏற்படுத்துவான். மேலும், அவர் நினைத்துப் பார்த்திராத வகையில் அவருக்கு அல்லாஹ் வாழ்வாதாரத்தை வழங்குவான்”. (அல்குர்ஆன்: 65: 2,3)
وَلَوْ أَنَّ أَهْلَ الْقُرَى آمَنُوا وَاتَّقَوْا لَفَتَحْنَا عَلَيْهِمْ بَرَكَاتٍ مِنَ السَّمَاءِ وَالْأَرْضِ
மேலும், எந்த ஊர் மக்கள் ஈமான் கொண்டு, இறையச்சமுள்ள வாழ்க்கையை மேற்கொள்கின்றார்களோ அவர்களுக்காக வானம், பூமி ஆகியவற்றின் அருள் வளங்கள் அனைத்தையும் நாம் திறந்து விடுவோம்”. ( அல்குர்ஆன் 7: 96 )
ஆகவே, மேற்கூறிய இறைவசங்கள், நபிமொழிகள் ஆகியவற்றில் கூறப்பட்டுள்ளவைகளின் துணை கொண்டு நாம் ரிஸ்க் விஸ்தீரணத்தைப் பெற்றுக் கொள்ள முயற்சி மேற்கொள்வோம்.
ü  02.ஆரோக்கியமான நீண்ட ஆயுளைப் பெற்றுத்தரும் இபாதத்களும், நற்பண்புகளும்..
அறிஞர் பெருமக்களிடையே நீண்ட ஆயுள் குறித்தான விவாதங்களும், அபிப்பிராய பேதங்களும் நிறைவாகவே தென்படுகின்றன.
சிலர் நீண்ட ஆயுள் என்பது ஆரோக்கியமாக, நோய்களில்லாமல் வாழ்வது என்றும், இன்னும் சிலர், சில காரியங்களால் ஆயுள் நீட்டிக்கப்படுகின்றது என்றும், வேறு சிலர், ஆயுளிலே அல்லாஹ் பரக்கத் செய்கின்றான் என்றும் கூறுகின்றார்கள்.
1. ஹலாலான உணவு உண்பதும், அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துவதும் ஆயுளை நீட்டிக்கும்...
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا كُلُوا مِنْ طَيِّبَاتِ مَا رَزَقْنَاكُمْ وَاشْكُرُوا لِلَّهِ إِنْ كُنْتُمْ إِيَّاهُ تَعْبُدُونَ ()
இறைநம்பிக்கையாளர்களே! நீங்கள் உண்மையில் அல்லாஹ்வுக்கு மட்டுமே பணிந்து வாழ்பவர்களாக இருப்பின் நாம் உங்களுக்கு அளித்திருக்கும் ஹலாலை தூய்மையானவற்றைத் தாராளமாக உண்ணுங்கள். மேலும், அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துங்கள்.” (அல்குர்ஆன்: 2: 172)
لَئِنْ شَكَرْتُمْ لَأَزِيدَنَّكُمْ
நீங்கள் நன்றி செலுத்தி வாழ்வீர்களாயின் உங்களுக்கு {ஆயுளை நான்} அதிகப்படுத்தி தருவேன்.” (அல்குர்ஆன்: 14: 7)
ஒருவர் அபூதர்தா ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம், ”நீண்ட ஆயுளையும் ஆரோக்கியமான வாழ்வையும் பெற என்ன செய்ய வேண்டும்என்று கேட்டார்.
அதற்கு, அபூதர்தா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் ஹலாலான உணவை மட்டுமே நீர் சாப்பிடுவீராக! ஹலாலான வருமானத்தையே நீர் தேடுவீராக! உமது வீட்டுக்குள் ஹலாலானவைகளையே கொண்டு செல்வீராக!என்று பதில் கூறினார்கள்.
2. இரத்த உறவுகளை சேர்ந்து வாழ்வது ஆயுளை நீட்டிக்கும்..
யார் தன் வாழ்வாதரம் விசாலமாகவேண்டும், தன் ஆயுள் நீண்டதாக அமைய வேண்டும் என விரும்புகின்றாரோ, அவர் இரத்த உறவுகளைச் சேர்ந்து வாழட்டும்என அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (நூல்: அஹ்மத், புகாரி)
இந்த ஹதீஸிற்கு விளக்கம் தருகிற அறிஞர் பெருமக்கள் இரத்த உறவுகள் என்பது, தாய், தந்தை, சகோதரன், சகோதரி, தாய் வழிச் சொந்தம், தகப்பன் வழிச் சொந்தங்கள் ஆகியவைகளும் அடங்கும் என பொருள் தருகின்றனர்.
3. இபாதத்தில் ஈடுபடுவது ஆயுளை நீட்டிக்கும்...
அப்துல்லாஹ் இப்னு பிஸ்ருல் மாஸினீ ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகின்றார்கள்: இரு கிராமவாசிகள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து அல்லாஹ்வின் தூதரே! மனிதர்களில் மிகவும் சிறந்தவர் யார்? என்று கேட்டார்.
அதற்கு, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒருவரின் ஆயுள் நீட்டிக்கப்பட்டு, அவரின் இபாதத்களும் அழகாக அமைந்திருக்குமே அவர் தான் மனிதர்களில் மிகவும் சிறந்தவர்என்றார்கள்.
4. மனிதநேயப் பணிகளைச் செய்வது ஆயுளை நீட்டிக்கும்...
விதியை மாற்றும் ஆற்றல் துஆவுக்கு உண்டு. ஆயுளை நீட்டிக்கும் ஆற்றல் சக மனிதர்களுக்கு உபகாரமும், நன்மையும் செய்வதில் இருக்கிறதுஎன நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.
5. பிரார்த்தனை ஆயுளை நீட்டிக்கும்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஹிஜ்ரத் செய்து மதீனா வந்த போது, மதீனத்து அன்ஸாரிகள் மாநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு ஏராளமான அன்பளிப்புகளை கொண்டு வந்து கொடுத்தார்கள்.
அன்னை உம்மு ஸுலைம் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் தங்களது ஏழு அல்லது ஒன்பது வயது நிரம்பிய பாலகர் அனஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்களைக் கொண்டு வந்து அண்ணலாரின் கரங்களில் கொடுத்து, ”அல்லாஹ்வின் தூதரே! இந்த என் மகனை உங்களுக்கு பணிவிடைக்காக வைத்துக் கொள்ளுங்கள்!என்று கூறினார்கள்.
அப்போது, நபிகளார் யாஅல்லாஹ்! இவரின் ஆயுளையும், இவரின் வாழ்வாதாரத்தையும், இவரின் சந்ததிகளையும், நீட்டித்து கொடுப்பாயாக!என்று துஆச் செய்தார்கள். " .
இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கின்றார்கள்: யாஅல்லாஹ்! உன்னிடத்தில் மன்னிப்பையும், என்னுடைய தீனிலும், பொருளிலும், உடலிலும், உலக வாழ்விலும் நான் ஆரோக்கியத்தைக் கேட்கின்றேன்!என அதிகம் துஆ செய்யக்கூடியவர்களாக நான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைக் கண்டேன். (நூல்: முஸ்லிம்)
ü  03.சோதனைகளை, ஆபத்துக்களை விட்டும் நம்மை காக்கும் இபாதத்களும், நற்பண்புகளும்..
அல்லாஹ் மனித வாழ்வில் ஏற்படும் சோதனை குறித்து குர்ஆனில் பேசும் போது இரண்டு வார்த்தைகளைப் பயன்படுத்துவான்.
ஒன்று முஸீபத்  مُصِيبَةٍஇன்னொன்று பலாஉ - الْبَلَاءُ, இதில் முதல் வகை அல்லாஹ்வை முற்றிலும் மறந்தவர்களுக்கும், மறுத்தவர்களுக்கும் ஏற்படும் சோதனையாகும்.
அந்தச் சோதனை என்பது அல்லாஹ்வை வழிபட்டவர்கள் காப்பாற்றப்பட்டு அல்லாஹ்வை வழிபடாதவர்கள் முற்றிலுமாக அழிக்கப்படுவதாகும். அதுவும் அல்லாஹ் அதற்கென ஒரு நாளை தேர்ந்தெடுத்து, ஒட்டு மொத்தமாக ஓரிடத்தில் ஒன்றிணைத்து அழித்தொழிப்பான்.
உதாரணமாக, நிலநடுக்கம், பூகம்பம், சுனாமி, பெருவெள்ளம் ஆகியவைகளை எடுத்துக்கொள்ளலாம்.
இதற்கு முன் சென்ற நபிமார்களின் சமூகம் சந்தித்த பேரழிவுகள் சான்றுகளாகும். அல்குர்ஆனின் வசனங்களில் அநேக வசனங்கள் இது குறித்துப் பேசுகின்றன.
இரண்டாவது வகை சோதனை இது இறைநம்பிக்கையாளர்களுக்கு மட்டுமே ஏற்படுகிற சோதனையாகும்.
இவ்வகை சோதனைகளின் மூலம் அல்லாஹ் அவர்களின் ஈமானையும், தவக்குலையும், தக்வாவையும் சோதிப்பான்.
وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِنَ الْأَمْوَالِ وَالْأَنْفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ ()
மேலும், சிறிதளவு அச்சத்தாலும், பசியாலும், உடைமைகள், உயிர்கள், மற்றும் விளைப்பொருட்கள் ஆகியவற்றில் இழப்பை ஏற்படுத்தியும் திண்ணமாக, உங்களை நாம் சோதிப்போம்” (அல்குர்ஆன்: 2:155)
كُلُّ نَفْسٍ ذَائِقَةُ الْمَوْتِ وَنَبْلُوكُمْ بِالشَّرِّ وَالْخَيْرِ فِتْنَةً وَإِلَيْنَا تُرْجَعُونَ ()
ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தை சுவைத்தே தீரும். மேலும், நல்ல, கெட்ட நிலைமைகளைத் தந்து நாம் உங்களைச் சோதிப்போம். பிறகு நீங்கள் நம்மிடமே திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்”. (அல்குர்ஆன்: 21:35)
அல்லாஹ் நபி இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் மகனார் இஸ்மாயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களை அறுத்துப் பலியிடுமாறு ஆணை பிறப்பித்ததையும், அதற்கு இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களும், இஸ்மாயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களும் கட்டுப்பட்ட அந்த தருணத்தையும் விவரித்து விட்டு அல்லாஹ் கூறும் போதுஸ
أَنْ يَا إِبْرَاهِيمُ () قَدْ صَدَّقْتَ الرُّؤْيَا إِنَّا كَذَلِكَ نَجْزِي الْمُحْسِنِينَ () إِنَّ هَذَا لَهُوَ الْبَلَاءُ الْمُبِينُ
இப்ராஹீமே! நீர் கனவை நனவாக்கி விட்டீர். நன்மை செய்வோருக்கு நாம் இவ்வாறே கூலி வழங்குகின்றோம். திண்ணமாக, இது தெளிவான சோதனையாய் இருந்தது”. (அல்குர்ஆன்: 37:105,106) என்று கூறுகின்றான்.
وَلَقَدْ فَتَنَّا سُلَيْمَانَ وَأَلْقَيْنَا عَلَى كُرْسِيِّهِ جَسَدًا ثُمَّ أَنَابَ ()
பிறகு, நாம் ஸுலைமானையும் சோதனைக்குள்ளாக்கினோம்; அவருடைய அரியணையில் ஒரு சடலத்தைக் கொண்டு வந்து போட்டோம். அப்போது, அவர் தம் இறைவனின் பக்கம் திரும்பினார்”. (அல்குர்ஆன்: 38: 34 )
மேலும், யஃகூப் அலைஹிஸ்ஸலாம் அவர்களை அல்லாஹ் யூஸுஃப் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் மூலமாகவும், மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களை ஃபிரவ்ன் மற்றும் தம் சொந்த சமூகத்தின் மூலமாகவும், லூத் அலைஹிஸ்ஸலாம் அவர்களை காஃபிரான தம் மனைவியின் மூலமாகவும், நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்களை தம் மனைவி மற்றும் மகன் மூலமாகவும் சோதித்தான் என அல்குர்ஆன் சான்றுரைக்கின்றது.
இந்தச் சோதனைகளின் மூலம் பாதிக்கப்படுபவர்களின் மனோ நிலையும், ஈமானிய வலிமையும் சோதிக்கப்படுகின்றது என்பது தான் உண்மை.
ஆகவே, முதல் வகையான சோதனைகள் ஏற்படாமல் இருக்க நாம் அல்லாஹ்விடம் பிரார்த்திக்க வேண்டும். மேலும், அச்சோதனைகள் எதன் மூலம் எல்லாம் ஏற்படும் என அல்லாஹ்வும், அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் எச்சரிக்கை செய்திருக்கின்றார்களோ அவைகளில் இருந்து தவிர்ந்து, விலகி வாழ வேண்டும்.
இரண்டாவது வகையான சோதனை அது ஓர் இறைநம்பிக்கையாளனின் வாழ்வில் தவிர்க்க முடியாத அம்சமாகும். அவ்வகையான சோதனைகளின் போது அல்லாஹ்விடம் பொறுமையைத் தருமாறுபிரார்த்திக்க வேண்டும்.
பாவங்கள் மன்னிக்கப்படவே, அந்தஸ்துகள் உயர்த்தப்படவே முஃமின் சோதிக்கப்படுவார்.
அபூஸயீத் அல் குத்ரீ ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்: களைப்பு, நோய், கவலை, தியரம், துன்பம், துக்கம் ஆகிய ஒன்றின் மூலமோ, அல்லது உடலில் முள் குத்துவது வரையில் எதன் மூலம் ஒரு முஸ்லிக்கு சோதனை ஏற்பட்டாலும் அல்லாஹ் அதனை அவருடைய பாவத்திற்கு பரிகாரமாக்காமல் இருப்பதில்லைஎன நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.
இப்னு மஸ்வூத் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்: நான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் சென்றேன். அப்போது நபியவர்கள் காய்ச்சலால் அவதிப்பட்டுக் கொண்டிருந்தார்கள். நான் கேட்டேன்: அல்லாஹ்வின் தூதரே! தங்களுக்கு இவ்வளவு கடுமையான காய்ச்சல் ஏற்பட்டிருக்கிறதே?” அதற்கு, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஆம்! உங்களில் இருவருக்கு ஏற்படும் காய்ச்சல் எனக்கு ஏற்பட்டுள்ளதுஎன்றார்கள்.
நான் கேட்டேன்: அப்படியென்றால், அதற்குப் பகரமாக இரு மடங்கு கூலி கிடைக்கும் அல்லவா?” அதற்கு, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஆம்! அது அப்படித்தான்! எந்த ஒரு முஸ்லிமானாலும் சரி ஒரு தொல்லை அவருக்கு ஏற்பட்டால், ஒரு முள்ளோ அல்லது அதை விட பருமனான அவரது உடலைக் குத்தினால் கூட அதனை அவருடைய தீமைக்குப் பரிகாரமாக ஆக்காமல் அல்லாஹ் விடுவதில்லை.
மேலும், மரம் தன்னுடைய இலைகளை உதிர்ப்பது போன்று அந்த முஸ்லிமின் பாவங்கள் அனைத்தும் அவரை விட்டும் களையப்படுகின்றனஎன பதில் கூறினார்கள். ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவிக்கும் இன்னொரு அறிவிப்பில்.. பாவங்கள் மன்னிக்கப்படுகிறது, அந்தஸ்துகள் உயர்த்தப்படுகின்றதுஎன்று வந்துள்ளது. (நூல்: ரியாளுஸ்ஸாலிஹீன்)
1. நற்காரியங்களை செய்வது சோதனைகளில் இருந்து நம்மை காக்கும்
அனஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்: நற்கருமங்கள் செய்வது கெட்ட முடிவுகள் ஏற்படுவதை விட்டும், ஆபத்துகள், அழிவுகள் ஏற்படுவதை விட்டும் அவரைக் காப்பாற்றும். உலகில் எவர் நல்லவராக வாழ்கின்றாரோ, அவரே மறுமையிலும் நல்லவராவார்என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.
2. தர்மம் செய்வது சோதனைகளில் இருந்து நம்மை காக்கும்..
அபுல்லைஸ் ஸமர்கந்தீ ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் கூறுகின்றார்கள்: தர்மம் செய்வதால் தர்மம் செய்பவருக்கு உலகில் 5 வகையான நன்மைகளும், மறுமையில் 5 வகையான நன்மைகளும் கிடைக்கின்றன.
உலகில் கிடைக்கும் 5 வகையான நன்மைகள்: 1. பொருளாதாரம் சுத்தமாகும். 2. பாவங்கள் மன்னிக்கப்படும். 3. சோதனைகளும், நோய்களும் நீங்கும். 4. ஒரு ஏழையின் வாழ்வில் மகிழ்ச்சி ஏற்படுகிறது. 5. வாழ்வாதாரத்தில் பரக்கத் ஏற்படும்.
மறுமையில் கிடைக்கும் 5 வகையான நன்மைகள்: 1. மறுமை நாளில் அவர் செய்த தர்மம் நிழல் தரும். 2. கேள்வி கணக்கு இலேசாகும். 3. மீஸானை கணக்கச் செய்யும். 4. ஸிராத்தை இலகுவாகக் கடக்க முடியும். 5. சுவனத்து அந்தஸ்துகள் உயர்த்தப்படும்.
3. துஆ செய்வது சோதனைகளில் இருந்து நம்மை காக்கும்.
 அறிஞர் பெருமக்கள் கூறுகின்றார்கள்: நான்கு வகையான மனிதர்கள் குறித்து நாங்கள் ஆழ்ந்த கவலை கொள்கின்றோம். ஏனெனில், அவர்கள் நான்கு வகையான சோதனைகளில் சிக்குண்டு கிடக்கின்றனர். ஆனால், அதற்கான முயற்சிகளில் ஈடுபடாமால் இருக்கின்றனர்.
அதற்கான தீர்வாக சோதனைகளில் சிக்குண்டவர்கள், அவர்களின் பிரார்த்தனைகளின் மூலம் அவர்கள் அல்லாஹ் குர்ஆனில் குறிப்பிடுகின்றான்.
4. ஆரோக்கியமான நிலையில் அல்லாஹ்வை நினைப்பது சோதனைகளில் இருந்து காக்கும்.
இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்: அல்லாஹ்வை நீர் பேணிக்கொள்ளும்! அவ்வாறெனில் அல்லாஹ் உமக்கு சிறந்த பாதுகாப்பை நல்குவான். அல்லாஹ்வை நீர் பயந்து நடந்தால் அவனது உதவிகளை நீர் சமீபமாகப் பெற முடியும். நீர் செழிப்பாக, ஆரோக்கியமாக வாழும் காலங்களில் அல்லாஹ்வுக்கு உம் தாராள மனதைக் காட்டிவிடும். அப்படியென்றால், உமக்கு ஏற்படும் இக்கட்டான சோதனைகளின் போது அவன் உமக்கு தன்னுடைய தாராள மனதைக் காட்டுவான்என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நான் சிறுவராக இருக்கும் போது என்னிடம் கூறினார்கள்.
ஆகவே, மேற்கூரிய இபாதத்களையும், நற்குணங்களையும் வாழ்க்கையில் பேணி நீடித்த ஆயுளையும், விசாலமான வாழ்வாதாரத்தையும், நோய் நொடிகள், ஆபத்துகள் இல்லாத வாழ்க்கையை வாழவும், நிம்மதியான வாழ்க்கை வாழவும் முயற்சி செய்வோம்.
அல்லாஹ் இம்மூன்று இனிய அருட்கொடைகளையும் நம் அனைவருக்கும் தந்து அருள் பாளிப்பானாக! ஆமீன்!! யாரப்பல் ஆலமீன்!!



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

1.கணவனைக் கவரும் வழிகள் 40

பத்ருப் போர் உணர்த்தும் பாடமும் படிப்பினைகளும்!

மண்ணறை வேதனை 001