மீண்டும் ரமழான் நம்மை நோக்கி…



அல்லாஹ் எமக்குப் பல அருட்கொடைகளை வழங்கியிருக்கின்றான். அவ்வாறான அருட்கொடைகளில் ஒன்றே ஒரு முஸ்லிம் பல நன்மைகளை ஈட்டிக்கொள்வதற்காக வேண்டி பல நேரங்களையும் காலங்களையும் அல்லாஹ் ஏற்படுத்தியிருப்பதாகும்.

அதனடிப்படையில் அறபா தினம், ஆஷூரா தினம், துல்ஹஜ் முதல் பத்து தினங்கள், ஷஃபான் மாதம் ஆகியன எமக்கு நன்மைகளை தேடிக்கொள்வதற்காக வேண்டி அருட்கொடையாக வழங்கப்பட்ட காலங்களாகும்.
இவ்வாறான காலங்களில் ஒன்றே நாம் அனைவரும் எதிர்பார்த்திருக்கும் சங்கைமிகு ரமழான் மாதமாகும். இம்மாதம் அல்குர்ஆனுடைய மாதமாகவும் பாவமன்னிப்பை பெற்றுத்தரும் மாதமாகவும் மக்களுக்கு மத்தியில் பிரபல்யமடைந்துள்ளது. எனவே, இக்கட்டுரையினூடாக ரமழான் மாதம் குறித்த சில தகவல்களை உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகின்றேன்.
இந்த ரமழான் மாதம் ஹிஜ்ரி ஆண்டின் அடிப்படையில் ஷஃபான் மற்றும் ஷவ்வால் ஆகிய மாதங்களுக்கு இடைப்பட்ட மாதமாகும். அரபு மாதங்களில் இது ஒன்பதாவது இடத்தில் காணப்படுகின்றது.
இம்மாதம் குறித்து அல்லாஹ் அல்குர்ஆனில் ஒரு சில இடங்களில் கூறியிருக்கின்றான். மேலும், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பல ஹதீஸ்களில் இதனுடைய சிறப்பைப்பற்றிக் கூறியிருக்கின்றார்கள்.
அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: ரமழான் மாதம் அது எத்தகையது என்றால் அதில்தான் அல்குர்ஆன் இறக்கியருளப்பட்டது.” (அல்பகறா:185)
இவ்வசனம் ரமழான் மாதத்தில்தான் அல்குர்ஆன் இறக்கியருளப்பட்டது என்பதை தெளிவுபடுத்துகின்றது. மேலும், இது ரமழான் மாதத்துடைய சிறப்பையும் எமக்கு உணர்த்துகின்றது.
மேலும், ரமழான் மாதத்துடைய ஒரு சிறப்பை தெளிவுபடுத்தும் செய்தியொன்றை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறுகின்றார்கள்: ரமழான் மாதம் வந்துவிட்டால் சுவனத்தின் வாயில்கள் திறக்கப்படும், நரகத்தின் வாயில்கள் மூடப்படும், ஷைத்தான்களுக்கு விலங்கிடப்படும்.” (புஹாரீ, முஸ்லிம்)
இம்மாதத்தில் அல்லாஹ் ஏற்படுத்தியிருக்கின்ற சிறப்புக்களையும் அருட்கொடைகளையும் இச்செய்தி எமக்கு தெரிவிக்கின்றது. எனவே, இச்சிறப்புமிகு மாதத்தை பொடுபோக்குடனும் சோம்பேறித்தனத்துடனும் கழிப்பது அல்லாஹ் எமக்கு வழங்கிய இவ்வருட்கொடையை புறக்கணிப்பது போன்றாகும்.
இம்மாதத்தில் பல நன்மைகளை சம்பாதித்துக்கொள்ள பல வழிகளை மார்க்கம் அறிவித்துள்ளது. அவைகளில் மிகப் பிரதானமானதும் ரமழான் என்றாலே நினைவுக்கு வரக்கூடியதுமான ஒரு வணக்க வழிபாடுதான் நோன்பாகும்.
அல்லாஹுத்தஆலா அல்குர்ஆனில் கூறுகின்றான்: விசுவாசம் கொண்டவர்களே! நீங்கள் அஞ்சிக்கொள்ளும் பொருட்டு உங்களுக்கு முன்னிருந்தவர்கள் மீது கடமையாக்கப்பட்டது போன்று உங்களுக்கும் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது.” (அல்பகறா:183)
இவ்வசனம் நோன்பு அனைவரின் மீதும் கடமையாக்கப்பட்டது என்றும் எமக்கு முன்னிருந்தவர்களும் நோன்பு நோற்றிருக்கின்றார்கள் என்பதையும் தெளிவுபடுத்துகின்றது.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: இஸ்லாம் ஐந்து தூண்களின் மீது நிறுவப்பபட்டுள்ளது. அவை: வணங்கப்படுவதற்குத் தகுதியானவன் அல்லாஹ்வைத்தவிர வேறு யாருமில்லை என்றும் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அல்லாஹ்வின் அடியார் மற்றும் தூதர் என்றும் சான்று பகர்வதும் தொழுகையை நிலைநாட்டுவதும் ஸகாத்தை நிறைவேற்றுவதும் ரமழான் மாதத்தில் நோன்பு நோற்பதும் சென்றுவர சக்திபெற்றால் ஹஜ் செய்வதுமாகும்.” (புஹாரீ, முஸ்லிம்)
இவ்வாதாரங்கள் நோன்பு கட்டாயம் என்பதை வலியுறுத்துகின்றன. மார்க்கம் விதிவிலக்குச் செய்தவர்களைத்தவிர மற்ற அனைவர் மீதும் இக்கடமையை நிறைவேற்றுவது கட்டாயமாகும்.
எமது முஸ்லிம் சமுதாயத்தில் எவ்விதக் காரணமுமின்றி நோன்பை விடக்கூடியவர்கள் அதிகரித்து வருகின்றனர். சிலர் வேலைப்பளுவின் காரணமாகவும் இன்னும் சிலர் படிப்பு மற்றும் பரீட்சை காரணமாகவும் நோன்பை விடுகின்றனர். நிச்சயமாக இது மிகப்பெரிய பாவமாகும்.
இந்த ரமழான் மாதத்தில் நோன்பு நோற்பது கடமை மாத்திரமின்றி யாரெல்லாம் அதில் நோன்பு நோற்கின்றார்களோ அவர்களுக்குப் பல சிறப்புக்களையும் மார்க்கம் கூறியிருக்கின்றது. அவைகளில் சிலவற்றை இங்கு குறிப்பிட்டுள்ளேன்.
1. நோன்பாளிகளுக்கு அவர்களுடைய பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்படும்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: யார் ரமழான் மாதத்தில் ஈமானுடன் நன்மையை எதிர்பார்த்தும் நோன்பு நோற்கின்றாரோ அவருக்கு அவருடைய முன்சென்ற பாவங்கள் மன்னிக்கப்படும்.” (புஹாரீ, முஸ்லிம்)
உண்மையிலேயே நாம் அனைவரும் பாவகாரியங்களில் ஈடுபடக்கூடியவர்களாக இருக்கின்றோம். எம்மில் யாருமே பாவங்கள் செய்வதிலிருந்து விதிவிலக்கு பெற்றவர்களல்ல. ஆனாலும் அப்பாவங்கள் மன்னிக்கப்படுவதற்கு ஒரு வணக்கமான அல்லாஹ் இந்த நோன்பை ஏற்படுத்தியிருக்கின்றான்.
2. நோன்பாளிகளுக்கு அல்லாஹ் விசேட ஒரு வாயிலை சுவர்க்கத்தில் ஏற்படுத்தியிருக்கின்றான்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: நிச்சயமாக சுவர்க்கத்தில் ஒரு வாசல் உண்டு. அதற்கு ரய்யான் என்று கூறப்படும். மறுமை நாளில் அவ்வாசலினூடாக நோன்பாளிகள் நுழைவார்கள். அவர்களல்லாத யாரும் அதனுள் நுழையமாட்டார்கள்.” (புஹாரீ, முஸ்லிம்)
3. அவர்களுடைய வாடை அல்லாஹ்விடத்தில் கஸ்தூரியை விட சிறந்ததாக இருக்கும்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: என் உயிர் எவன் கைவசம் இருக்கின்றதோ அவன் மீது சத்தியமாக நோன்பாளியின் வாயிலிருந்து வீசும் வாடை அல்லாஹ்விடம் கஸ்தூரியின் வாடையை விட மிகச் சிறந்ததாகும்.” (புஹாரீ, முஸ்லிம்)
இவைகள் அல்லாத இன்னும் பல ஆதாரங்கள் ரமழான் மாதத்தில் நோன்பு நோற்பதின் சிறப்புக்களை தெளிவுபடுத்துகின்றன. எனவே, இச்சிறப்புக்களை நாம் அடைவதற்காக வேண்டி இம்மாதத்தில் நோன்பு நோற்கக்கூடியவர்களாக இருக்க வேண்டும்.
நோன்பு எங்களுக்கு பொறுமை, இறையச்சம் ஆகிய உயர்ந்த பண்புகளை கற்றுத்தருகின்றது. நோன்பின் மூலம் இறையச்சமுடையவர்களாக நாம் மாறலாம் என்பதை மேற்குறிப்பிடப்பட்ட சூரதுல் பகறாவின் 183வது வசனம் தெளிவுபடுத்துகின்றது. நோன்பில் பெற்ற இறையச்சத்தை நாம் முழுக்காலமும் தக்க வைத்துக் கொள்வதற்கு ரமழான் பயிற்சியளிக்கின்றது. எனவே, நோன்பு நிறைவுறும்போது எமது இறையச்சமும் நீங்கிவிடக்கூடாது.
ஆனாலும் இந்நிலையைத்தான் நாம் அதிகமான முஸ்லிம்களிடத்தில் அவதானிக்கின்றோம். ரமழான் மாதம் வருகின்றபோது தொலைக்காட்சிப் பெட்டியை மூடி வைத்துவிடுவார்கள். அம்மாதம் முடிந்ததும் பெருநாள் தினத்திலேயே அத்தொலைக்காட்சிப்பெட்டியை திறந்து வைக்கின்றார்கள். ரமழான் எமக்கு வழங்கும் இறையச்சம் இதன் பிறகும் தொலைக்காட்சியை வீட்டில் வைத்துக்கொள்வதற்கு அனுமதிக்காததாக இருக்க வேண்டும்.
இன்னும் சிலர் பதினொரு மாதங்களாக திறக்கப்படாத அல்குர்ஆனை திறந்து ரமழானில் ஓதுவார்கள். அம்மாதம் முடிந்ததும் அல்குர்ஆன் இருந்த இடத்திற்கு மீண்டும் சென்றுவிடும்.
உண்மையிலேயே இவ்வாறான செயல்களைச் செய்பவர்கள் ரமழானில் உண்மையான இறையச்சத்தைப் பெறவில்லை என்பதே இதன் வெளிப்பாடாகும்.
ஒரு நோன்பாளி எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பதை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கற்றுத்தந்துள்ளார்கள். அவர்கள் கூறுகின்றார்கள்: நோன்பு என்பது கேடயமாகும். எனவே, நோன்பாளி கெட்ட பேச்சுக்களைப் பேச வேண்டாம். முட்டாள் தனமான செயல்களில் ஈடுபட வேண்டாம். யாரேனும் அவருடன் சண்டைக்கு வந்தால் அல்லது ஏசினால் நான் நோன்பாளிஎன்று அவர் இரு முறை கூறட்டும்.” (புஹாரீ, முஸ்லிம்)
இந்த ஒழுங்கு முறைகளை ஒவ்வொரு நோன்பாளியும் கடைபிடிக்க வேண்டும். பிறருடன் தர்க்கங்களிலும் சச்சரவுகளிலும் ஈடுபடுவதைவிட்டும் அவர்கள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும். பொய், புறம், பொய்ச்சத்தியம் போன்ற மோசமான வார்த்தைகளைப் பேசுவதையும் அவர்கள் தவிர்ந்துகொள்ள வேண்டும். இதுதான் அவர் உண்மையான நோன்பாளி என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டாகும்.
ரமழான் மாதத்தில் செய்தவற்கு மார்க்கம் வழிகாட்டியிருக்கின்ற நோன்பைத் தவிர இன்னும் பல அம்சங்கள் காணப்படுகின்றன. அவற்றினுள் சிலவற்றை இங்கு குறிப்பிட்டுள்ளேன். அவற்றினுள் ஒன்றே அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்வதாகும்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மனிதர்களிலேயே மிகவும் வாரி வழங்குபவர்களாகத் திகழ்ந்தார்கள். மேலும், அவர்கள் ரமழான் மாதத்திலே இன்னும் வாரி வழங்குபவர்களாகக் காணப்பட்டார்கள் என இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் கூறுகின்றார்கள். (புஹாரீ)
எனவே, இம்மாதத்தில் அதிகமதிகம் அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்யக்கூடியவர்களாக நாம் இருக்க வேண்டும். நோன்பு நோற்பதற்கு உணவில்லாமல் பல முஸ்லிம்கள் இருப்பார்கள். அவர்களுக்கு வசதி படைத்தவர்கள் உரிய தேவைகளை அல்லாஹ்வுக்காக நிறைவேற்றுவார்களாயின் நிச்சயமாக அல்லாஹ் அவர்களுக்கு மகத்தான கூலி வழங்க காத்திருக்கின்றான்
இன்னும், ரமழான் மாதத்தில் உம்ராச் செய்வது சிறப்பான ஒரு காரியமாக இருக்கின்றது. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: ரமழான் மாதத்தில் உம்ராச் செய்வது என்னுடன் ஹஜ் செய்தவற்குச் சமனானதாகும்.” (முஸ்லிம்)
எனவே, வசதிபடைத்தவர்கள் இம்மாதத்தில் உம்ராச் செய்வதற்கு முயற்சி செய்வார்கள் என்றால் நிச்சயமாக அது அல்லாஹ்விடம் சிறப்பான ஒன்றாக கணிக்கப்படும்.
சகோதரர்களே! இம்மாதத்தை வீண் விளையாட்டுக்களில் கழித்து எமது பாவங்களை மேலும் அதிகரித்துக்கொள்ளாமல் எங்களுடைய பாவங்களை போக்கிவிடக்கூடிய மாதமாக நாம் அதனைப் பயன்படுத்துவதற்கு கடமைப்பட்டிருக்கின்றோம்.
இம்மாதத்தில் அதிகம் தூங்குவது அல்லது அதிகம் விளையாடுவது நோன்பாளிகளுக்கு உகந்ததல்ல. இயன்ற அளவு இம்மாதத்தைப் பயன்படுத்தி எங்களுடைய தராசைப் பாரமாக்குதவற்கு நாம் அல்லாஹ்வுக்காகப் பல அமல்களைச் செய்ய முற்பட வேண்டும்.
அல்லாஹ் இம்மாதத்தில் எமக்கு நன்மைகளை ஈட்டிக்கொள்வதற்கான பாக்கியத்தை தருவானாக! இம்மாதம் முடிவடையும்போது எங்களுடைய பாவக்கரைகளையும் நீக்கிவிடுவானாக! அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்!


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

1.கணவனைக் கவரும் வழிகள் 40

பத்ருப் போர் உணர்த்தும் பாடமும் படிப்பினைகளும்!

மண்ணறை வேதனை 001