இஸ்லாமின் பார்வையில் சொத்து பங்கீட்டின் அவசியம்

4.09.2015 jummaspeech ok
[ ஒரு முஸ்லிமைப் பொறுத்தவரை தொழுகைய நிறைவேற்றாமல் இருப்பது எப்படிக் குற்றமோ,ஸகாத் கொடுக்காமல் இருப்பது எப்படிக் குற்றமோ அதேபோன்றுதான் வாரிசுரிமைச் சட்டத்தை நடைமுறைப் படுத்தாமல் இருப்பது மிகப் பெரிய தண்டனைக்குரிய குற்றமாகும்.]
இஸ்லாமிய ஷரிஅத் என்பது பல வனக்க வழிபாடுகளை தன்னகத்தே கொண்ட மார்க்கமாகும். அந்த வணக்கங்களை வித்தியாசம் இன்றி ஒவ்வொரு முஸ்லிமும் நிறைவேற்றுவது இன்றியமையாத கடமையாகும்.
இவ்வாறான வணக்கவழிபாடுகளில் சிலதை ஏற்று சிலதை நிராகரிக்கும் மனப்பான்மை ஒரு முஸ்லிமிடத்தில் இருக்க முடியாது. அல்லாஹ்வின் அனைத்து சட்டங்களையும் தன்னுடைய வாழ்வில் செயற்படுத்துவது ஒரு முஸ்லிமின் இன்றியமையாத கடமையாகும்,
வாழ்வின் எல்லாப் பிரச்னைகளுக்கும் வழிகாட்டும் இஸ்லாம், வாரிசுரிமைப் பற்றியும் மிகத் தெளிவானதொரு வழிமுறையைக் காட்டியுள்ளது. பல்வேறு வழிமுறைகளில் பொருளை அடைய முடிந்தாலும் அதை ஈட்டுவதற்கான சிறந்த வழி எது? அதை எந்தெந்த வழிகளில் செலவிட வேண்டும்? என்பன போன்ற வினாக்களுக்கு பொருளியல் நிபுணர்களே வியந்து பாராட்டும் வண்ணம் எக்காலத்திற்கும் பொருத்தமான தீர்வை இஸ்லாம் வழங்கியுள்ளது. அதுபோல பொருளாதாரம் ஓரிடத்தில் குவிந்து, சிலர் என்றும் பொருளாதார வசதி படைத்தோராகவும், சிலர் என்றுமே வறியவர்களாகவும் இருக்கும் நிலையை இஸ்லாம் அனுமதிக்கவில்லை.
மனிதன் கஷ்டப்பட்டு உழைத்துச் சம்பாதிப்பது தனக்கு மட்டுமின்றி, தனது பிற்கால வாழ்வு, தனது மரணத்திற்குப் பின்னர் தனது சந்ததிகள், உற்றார், உறவினர் போன்றவர்களுக்காகவும்தான். எனவே, அவன் அப்படி கடின உழைப்பின் மூலம் ஈட்டிய சொத்து, சுகங்கள் அவனது மரணத்திற்குப் பின்னர் உரியவர்களுக்குக் கிடைக்காமல் போய், ஒரு சிலரோ அல்லது உரிமையற்றவர்களோ அபகரித்து விடக்கூடாது என்ற விஷயத்தில் தனி கவனம் செலுத்தி, அதற்காக அச்சொத்தில் அவர்களுக்கு உரியது எந்த அளவு என்பதையும் இஸ்லாம் நிர்ணயித்துள்ளது.
அளவு நிர்ணயிக்கப்படாதிருந்தால் பேராசையால் தனக்கே சொத்து முழுவதும் சேர வேண்டுமென்று வலியவர்கள் அதை அபகரித்து விடக்கூடும். எனவே, தகுதியானவர்களுக்கு தகுதியான விகிதத்திலேயே சொத்துரிமை அளித்துள்ளது இஸ்லாம்.

"ஒவ்வொரு சமூகத்தினருக்கும் ஒரு சோதனை உண்டு. எனது சமூகத்தினருக்கு பொருட் செல்வம் தான் பெரிய சோதனையாகும்" என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக கஃபு இப்னு இயாழ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்,
நூல் : திர்மிதீ 2337, இப்னு ஹிப்பான் 2470,  அஹ்மத் 4 :160, ஹாகிம் 4 :318
எனவே, நம் பொருட்செல்வம் என்ற சோதனையில் நாம் வெற்றி பெற, கவனமாக நடப்பது அவசியமாகும். சொத்து மனிதர்களுடன் சம்பந்தப்பட்டதாக இருப்பதால், "அடியார்கள் மன்னிக்காமல் நான் மன்னிக்க மாட்டேன்" என அல்லாஹ் குறிப்பிடும் "ஹுகூகுல் இபாத்" என்ற பிரிவுடனும் சேர்ந்ததாகும். தொழுகை, நோன்பு, ஹஜ், ஸக்காத் போன்றவைதான் கட்டாயக் கடமை என நாம் எண்ணிக் கொண்டிருக்கின்றோம். ஆனால் சொத்துரிமையும் கட்டாயக் கடமைதான்.
(மரணமடைந்த) தாய், தந்தையரும் நெருங்கிய உறவினரும் விட்டுச் சென்ற சொத்தில் ஆண்களுக்குப் பங்குண்டு. (அது போல) தாய், தந்தையரும் நெருங்கிய உறவினரும் விட்டுச் சென்ற சொத்தில் பெண்களுக்கும் பங்குண்டு; அச்சொத்து குறைவாகவோ, அதிகமாகவோ இருந்தாலும் சரியே! இந்தப் பங்கு அல்லாஹ்வினால் நிர்ணயிக்கப்பட்டதாகும்.(அல்குர் ஆன் 4 :7)
4:11-வது வசனத்தில் பாகப்பிரிவினைப் பங்கீடுகளைப் பற்றிக் கூறிய பின்னர் "இது அல்லாஹ்விடமிருந்து வந்த கட்டளையாகும்" என்றும், 4:12-வது வசனத்தின் இறுதியில் "இது அல்லாஹ்வினால் விதிக்கப்பட்டதாகும்" என்றும், 4:13-வது வசனத்தில் "இவை அல்லாஹ்வின் வரையறைகளாகும்" என்றும் அல்லாஹ் கூறுகிறான். எனவே, வாரிசுரிமைப் பங்கீடு கட்டாயக் கடமையே.
நமது நாடுகளில் ஒருவர் இறந்தவுடன் சொத்துரிமைப் பங்கு பிரித்துக் கொடுக்கப்படாத காரணத்தால் அண்ணன், தம்பி, அக்காள், தங்கைகளுக்கிடையில் சண்டைகள் ஏற்பட்டு நீதிமன்றம் செல்லும் பலரைப் பார்க்கின்றோம். பெண்மக்களுக்கு சொத்துரிமை கொடுக்கப்படாத நிலையைப் பார்க்கின்றோம். ஆனால், இஸ்லாம் தான் பெண்களுக்கும் சொத்துரிமை உண்டு எனக் கட்டளையிட்டு பெண்ணுரிமை பேணிய மார்க்கம் ஆகும். எனவே, வாரிசுரிமைச் சொத்துப் பங்கீடு கட்டாயக் கடமை. அதன் மூலம் உலகில் நம்மிடையே, குடும்பங்களுக்கிடையே அமைதியை ஏற்படுத்தலாம்.

சொத்துரிமை ஏற்பட்ட வரலாறு:
ஸஃது இப்னு ரபீஃ (ரலி) அவர்களின் மனைவி, ஸஃதின் மூலம் தனக்குப் பிறந்த இரு பெண் மக்களுடன் வந்து, "அல்லாஹ்வின் தூதரவர்களே! இவ்விருவரும் ஸஃது இப்னு ரபீஃ அவர்களின் (மூலம் எனக்குப் பிறந்த) புதல்விகள். இவர்களின் தந்தை ஸஃது உஹதுப் போர்க்களத்தில் கொல்லப்பட்டார். இந்தப் பெண்களுக்கு எந்தப் பொருளையும் விட்டு வைக்காமல் அவரது சொத்து முழுவதையும் அவருடன் பிறந்த சகோதரர் எடுத்துக் கொண்டார். இவ்விருவரின் சொத்துகளுக்காகவே எவரும் திருமணம் செய்ய முன்வருவார்கள்" என முறையிட்டார். இதைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள், "இது விஷயமாக அல்லாஹ் தீர்ப்பளிப்பான்" எனக் கூறினார்கள். அப்போதுதான் சொத்துரிமை பற்றிய பின்வரும் (4 :11,12-வது) குர் ஆன் வசனங்கள் இறக்கி அருளப்பட்டன.
உங்கள் மக்களில் ஓர் ஆணுக்கு, இரண்டு பெண்களுக்குக் கிடைக்கும் பங்கு போன்றே கிடைக்கும் என்று அல்லாஹ் உங்களுக்கு உபதேசம் செய்கிறான். பெண்கள் மட்டும் இருந்து, அவர்கள் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்டு இருந்தால், அவர்களுக்கு இறந்து போனவர் விட்டுச் சென்றதில் மூன்றில் இரண்டு பாகம் கிடைக்கும். ஆனால், ஒரே பெண்ணாக இருந்தால் அவள் பங்கு பாதியாகும்.
அப்போது, நபி (ஸல்) அவர்கள் அப்பெண்களின் சிறிய தந்தையை அழைத்து, ஸஃதின் புதல்விகள் இருவருக்கும் சொத்தில் மூன்றில் இரண்டு பங்கும், ஸஃதின் மனைவிக்கு எட்டில் ஒரு பங்கும் கொடுத்துவிட்டு, மீதியை அவர் எடுத்துக் கொள்ளும்படி ஆணையிட்டார்கள்.
ஆதாரம்: அபூதாவூத் 2891, திர்மிதீ 2092
இப்னுமாஜா 2720, அஹ்மத் 3307
மற்றொரு வரலாறு:
பனீஸலமா கூட்டத்தினரில் நான் நோய்வாய்ப்பட்டிருக்கும்போது, என்னை நபி (ஸல்) அவர்களும் அபூபக்ர் (ரலி) அவர்களும் நோய் விசாரிக்க வந்தனர். என்னால் எதையும் விளங்கிக் கொள்ள முடியாத நிலையில் என்னைக் கண்டார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் தண்ணீரை வரவழைத்து உளூச் செய்து, பின்னர் என் மீது தண்ணீரைத் தெளித்தார்கள். அப்போது நான் விழித்து, அல்லாஹ்வின் தூதர் அவர்களே! எனது செல்வத்தை நான் என்ன செய்யச் சொல்கிறீர்கள்? எனக் கேட்க, அப்போது 4:11வது வசனம் இறங்கிற்று என ஜாபிர் இப்னு அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
(புகாரி 4577, 6723, 5651, 5676 மற்றும் முஸ்லிம்)
இன்னொரு வரலாறு:
ஹஸ்ஸான் இப்னு ஸாபித் (ரலி) அவர்களின் சகோதரரான அப்துர்ரஹ்மான் இப்னு ஸாபித் (ரலி) அவர்கள் மரணமானபோது ஆண் வாரிசுகள் அனைவரும் வந்து, சொத்து முழுவதையும் எடுத்துக் கொண்டனர். அவரது மனைவி உம்மு கஹ்ஹா மற்றும் அவரது சகோதரிகள் ஐவருக்கும் எதுவும் கொடுக்கவில்லை. அப்போது உம்மு கஹ்ஹா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் முறையிட்டபோது மேற்கண்ட வசனம் இறங்கியதாகவும் வரலாறு காணப்படுகிறது.
(தஃப்ஸீர் இப்னு ஜரீர்)
நபிகள் நாயகத்தின் தோழர் அவ்ஸ் பின் தாபித் அன்சாரி இறந்துவிட்டார். அவருக்கு ஒரு மனைவியும் மூன்று மகள்களும் இருந்தனர். இறந்தவரின் சிறிய தந்தையின் இரு மகன்கள் ஸýவைது, அர்பஜா ஆகிய இருவரும் சொத்துக்களை எடுத்துக் கொண்டனர். இறந்த அவ்ஸ் பின் தாபித் அன்சாரியின் மனைவிக்கோ மகளுக்கோ சொத்தில் எள்ளளவும் கொடுக்கவில்லை.
உண்ணும் உணவிற்கே வழியின்றி வாடிய அவ்ஸின் மனைவி அண்ணல் நபி (ஸல்) அவர்களிடம் முறையிட்டார். அப்பொழுது திருக்குர்ஆனின் 4- 7 ஆவது வசனம் அருளப்பட்டது. ""பெற்றோர்களோ உறவினர்களோ விட்டுச் சென்றவற்றில் ஆண்களுக்கும் பாகமுண்டு. பெண்களுக்கும் பாகமுண்டு. இது அல்லாஹ்வினால் விதிக்கப்பட்ட பாகம்''.
இச் சொத்துக்கள் எப்படி பிரிக்கப்பட வேண்டும் என்பதை 4-11, 12 ஆவது வசனங்கள் வரையறுக்கின்றன.
இவ்வரையறைப்படி அவ்ஸின் சொத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெண் குழந்தைகளுக்கும்நான்கிலொரு பாகம் மனைவிக்கும் பிரித்து கொடுக்கப்பட்டது ஆக எது எப்படியாயினும், பெண்களுக்குக் கிடைக்க வேண்டிய சொத்து கிடைக்காமல் பெண்களுக்கு அநீதி இழைக்கப்பட்ட போதுதான் சொத்துரிமை பற்றிய தெளிவான சான்றுகள் தோன்ற ஆரம்பித்தன என்பது உண்மையாகும்
நீங்கள் வேதத்தில் சிலதை நம்பி சிலதை மறுக்கிறீர்களா? எனவே உங்களில் இவ்வகையில் செயல்படுகிறவர்களுக்கு இவ்வுலக வாழ்வில் இழிவைத் தவிர வேறு கூலி எதுவும் கிடைக்காது.
‌‌اَفَتُؤْمِنُوْنَ بِبَعْضِ الْكِتٰبِ وَتَكْفُرُوْنَ بِبَعْضٍۚ فَمَا جَزَآءُ مَنْ يَّفْعَلُ ذٰلِكَ مِنْکُمْ اِلَّا خِزْىٌ فِى الْحَيٰوةِۚ وَيَوْمَ الْقِيٰمَةِ يُرَدُّوْنَ اِلٰٓى اَشَدِّ الْعَذَابِؕ الدُّنْيَا وَمَا اللّٰهُ بِغَافِلٍ عَمَّا تَعْمَلُوْنَ‏
மறுமை(கியாம) நாளிலோ அவர்கள் மிகக் கடுமையான வேதனையின்பால் மீட்டப்படுவார்கள். இன்னும் நீங்கள் செய்து வருவதை அல்லாஹ் கவனிக்காமல் இல்லை. (அல்குர்ஆன் 2:85)
ஆனால் இன்று எம்சமுகத்தில் என்ன நடக்கிறது என்றால் தனக்கு சாதகமான, இழப்புகள் இல்லாத, பிரச்சினைவராத சட்டங்களை மாத்திரம் பலர் ஏற்று செயல்படுகின்றனர். அல்லாஹ்வால் அழுத்தமாக முக்கியத்துவம் கொடுத்துச் சொல்லப்படுகின்ற பல சட்டங்களை நிராகரிக்கின்றனர்.
அப்படி நிராகரிக்கப் படும் சட்டங்களில் ஒன்றுதான் (வராதத் )எனும் சொத்துப்பங்கீட்டு சட்டமாகும்.
தொழுகை, நோன்பு, ஸகாத் எப்படி வணக்கமாக இருக்கிறதோ அதே போன்றுதான் வராதத் எனும் சொத்துப்பங்கீடும் ஒரு வணக்கமாகும்.
ஒரு முஸ்லிமைப் பொறுத்தவரை தொழுகைய நிறைவேற்றாமல் இருப்பது எப்படிக் குற்றமோ, ஸகாத் கொடுக்காமல் இருப்பது எப்படிக் குற்றமோ அதேபோன்றுதான் வாரிசுரிமைச் சட்டத்தை நடைமுறைப் படுத்தாமல் இருப்பது மிகப் பெரிய தண்டனைக்குரிய குற்றமாகும் என்பதை பல முஸ்லிம்கள் உணரத் தவறிவிட்டனர்.
இதனால்தான் இன்று சொத்துப்பங்கீடென்பது சமூகத்தில் அந்நியமான நடைமுறைப் படுத்தப் படாத புதிய சட்டமாக மாறிவிட்டது.
இன்று சமுகத்தில் உள்ள அதிகமானவர்கள் தவறான சொத்துப் பங்கீட்டின் அடிப்படையிலேயே தங்களது பொருளாதாரத்தை அமைத்துக் கொள்கின்றனர். மார்கத்தில் உள்ள சுன்னத்தான காரியங்களுக்காக போர்கொடி தூக்கி சுன்னத் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்த பல சகோதரர்கள் கூட சொத்துப் பங்கீட்டை நடைமுறைப்பபடுத்த வேண்டும் என்பதில் பொடுபோக்காக இருப்பது அல்லது அதை நடைமுறைப்படுத்த எண்ணம் இல்லாது இருப்பது அல்குர்ஆனை சரியான முறையில் புரிந்து கொள்ளவில்லை என்பதைத்தான் எடுத்துக்காட்டுகிறது.
அல்லாஹ் தனது திருமறையிலேயே வசிய்யத்தாக கூறிய இந்த சொத்துப் பங்கீட்டு விடயத்தை சமுகத்தில் நடைமுறைப்படுத்த நாம் முன்வராமல் இருப்பதோடு அதை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று குரல் கொடுப்பவர்களின் குரல்வழையை நசுக்குவதற்காக முயற்சிக்கின்றோம் என்றால் அல்லது எதை வேண்டுமானாலும் பேசுங்கள் சொத்துப்பங்கீடு பற்றி பேசாதீர்கள் எனக் கூறுகிறோம் என்றால் எம்மைவிட நஷ்டவாளிகள் யார் இருக்க முடியும்?
நாம் அல்குர்ஆனை நடைமுறைப்படுத்த வில்லை என்றால் யார் நடைமுறைப் படுத்துவது? என்பதை ஈமான் உள்ள ஒவ்வொரு மனிதனும் சிந்திக்கக் கடமைப் பட்டுள்ளான்.
தவறான சொத்துப்பங்கீட்டால் சமுகம் சந்தித்த, சந்தித்துக் கொண்டிருக்கின்ற இழப்புகள் ஏராளம் ஏராளம். ஜாஹிலிய்யாக் காலத்தில் எப்படி ஆண்களுக்கு மட்டும் சொத்துக் கொடுக்கப்பட்டதோ அது எமது சமுகத்தில் மாறி பெண்களுக்கு மட்டும் சொத்துக் கொடுக்கும் நவீன ஜாஹிலிய்ய சிந்தனை அரங்கேறுகிறது.
அல்லாஹ் தனது திருமறையில்
இருசாராருக்கும் சொத்துப் பங்குள்ளது எனக்கூறுகிறான்.பெற்றோரோ, நெருங்கிய உறவினர்களோ விட்டுச் சென்ற (சொத்)தில் ஆண்களுக்கு பாகமுண்டு. அவ்வாறே பெற்றோரோ, நெருங்கிய உறவினரோ விட்டுச் சென்ற (சொத்)தில் பெண்களுக்கும் பாகமுண்டு - (அதிலிருந்துள்ள சொத்து) குறைவாக இருந்தாலும் சரி, அதிகமாக இருந்தாலும் சரியே (இது அல்லாஹ்வினால்) விதிக்கப்பட்ட பாகமாகும். (அல்குர்ஆன் 4:7)
ஆண்கள், பெண்கள் என இருசாராருக்கும் அவரவரின் பங்குகள் நியாயமான முறையில் வழங்கப்பட வேண்டும் என இஸ்லாம் தெளிவாக கூறுகிறது. இதில் யாரும் அநீதி இழைக்கப் படக்கூடாது. யாவற்றையும்; அறிந்த அல்லாஹ்வின் சட்டத்தை நடைமுறைப்படுத்த இருசாராரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும்.
தனக்கு அதிகமாக பெற்றோர் சொத்தை தவறாக தருகிறார்கள் என்பதை ஒரு பெண் தெரிந்தால் கண்மூடித்தனமாக சொத்தின் மீது கொண்ட மோகத்தினால் தவறான இச் சொத்துப் பங்கீட்டுக்கு தானும் காரணமாக அமைந்து விடக் கூடாது.
மாறாக அவள் பெற்றோருக்கு தெளிவுபடுத்தி தனக்கு சேரவேண்டிய சொத்தை மாத்திரம் எடுத்துக் கொள்ளும் மனோநிலை உள்ளவளாக அவள் இருக்க வேண்டும்.
இதைக் கடைப்பிடிக்கும் பட்சத்தில்; இன்று சமுகத்தில் உள்ள எத்தனையோ பிரச்சினைகளுக்கு தீர்வு இலகுவாக அமைவதோடு அல்லாஹ்விடத்தில் அவனது சட்டத்தை நடைமுறைப்படுத்திய கூலியையும் அவள் பெற்றுக் கொள்வாள். அதற்கு மாற்றமாக நடந்தால் அல்லாஹ்வின் தண்டனை கடினமானது என்பதையும் மறந்து விடக் கூடாது.
''நிச்சயமாக, உம்முடைய இறைவனின் பிடி மிகவும் கடினமானது''. (அல்குர்ஆன் 85:12)
மற்றவரின் சொத்தை தவறான அடிப்படையில் அனுபவிப்பதை இஸ்லாம் வன்மையாகக் கண்டிக்கிறது.
அல்லாஹ் தனது திருமறையில் .''நம்பிக்கை கொண்டவர்களே! உங்களில் ஒருவருக்கொருவர் பொருந்திக் கொள்ளும் முறையில் ஏற்படுகிற வர்த்தகம் அல்லாமல், ஒருவர் மற்றொருவரின் பொருட்களை தவறான முறையில் உண்ணாதீர்கள்;. நீங்கள் உங்களையே கொலைசெய்து கொள்ளாதீர்கள் - நிச்சயமாக அல்லாஹ் உங்களிடம் மிக்க கருணையுடையவனாக இருக்கின்றான்.'' (அல்குர்ஆன் 4:29)
''எவரேனும் (அல்லாஹ்வின்) வரம்பை மீறி அநியாயமாக இவ்வாறு செய்தால், விரைவாகவே அவரை நாம் (நரக) நெருப்பில் நுழையச் செய்வோம்;. அல்லாஹ்வுக்கு இது சுலபமானதேயாகும்.'' (அல்குர்ஆன் 4:30)
முறைகேடான அடிப்படையில் மற்றவரின் சொத்தை அபகரிக்கக் கூடாது என்பது இறைவனின் சட்டமாகும். இந்த சட்டம் மீறப்படும் போது அவனது தண்டனையும் கடினமாகவே இருக்கும் என்பதை மேலுள்ள வசனத்தில் தெளிவாகவே அல்லாஹ் தெளிவுபடுத்துகிறான். ஆனால் இன்று எம் சமூகத்தில் உள்ள அதிகமான மக்கள் அல்லாஹ்வின் தண்டனையைப் பயந்து கொள்ளாமல் தங்களது சொத்துக்களை இஸ்லாம் அங்கீகரிக்காத ஹராமான அடிப்படையில் தங்களுக்கிடையில் பரிமாறிக் கொள்கின்றனர். பொருளீட்டுவதற்கான உரிமை ஆண்களுக்குக் கொடுக்கப்பட்டடுள்ளது போல் பெண்களுக்கும் கொடுக்கப்பட்டுள்ளது. மனைவியுடைய சம்பாத்தியத்தை அவளுடைய அனுமதியில்லாமல் கணவன் தொடமுடியாது. அவளாக கணவனுக்குக் கொடுத்தால் அது தர்மம் செய்த நன்மை சாரும் என இஸ்லாம் கூறுகிறது.
பெண்களே! நீங்கள் தர்மம் செய்யுங்கள். உங்களின் நகைகளாக இருப்பினும் சரியே! தர்மம் செய்யுங்கள் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அதைக் கேட்ட நான் (என் கணவரான) அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் அவர்களிடம் வந்தேன். நீங்கள் வறுமையில் உள்ளீர்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தர்மம் செய்யும்படி எங்களுக்கு ஏவினார்கள். எனவே, அவர்களிடம் நீங்கள் சென்று (என் தர்மத்தை நீங்கள்) பெறலாமா? எனக் கேட்டு வாருங்கள். அது சரியாக இருந்தால் என்னிடமிருந்து அதைக் கொடுப்பது போதுமாகும். இல்லையெனில் மற்றவருக்கு நான் அதைக் கொடுப்பேன் என்று கூறினேன். அப்போது அவர் நீ போய் கேட்டுவா என்று கூறினார்.
நான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வீட்டுக்குச் சென்றேன். வீட்டு வாசலில் அன்ஸாரிப் பெண் ஒருவர் நினறு கொண்டிருந்தார். என் தேவையை போலவே அவர் தேவையும் இருந்தது. அப்போது எங்களிடம் பிலால் ரளியல்லாஹு அன்ஹு வந்தார்கள். நாங்கள் அவரிடம் நீங்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் சென்று இரு பெண்கள் வந்து தங்களிடம் உள்ள தர்மப் பொருளை தங்களின் கணவர்களுக்கோ, தங்கள் மடியில் வளரும் அனாதைகளுக்கோ கொடுக்க விரும்புவது கூடுமா? என்று உங்களிடம் கேட்பதற்காக வாசலில் நிற்கின்றோம் என்ற செய்தியை கூறுங்கள். நாங்கள் யார் என்ற விபரத்தை அவர்களிடம் கூறாதீர்கள் என்று கூறினோம்.
பிலால் ரளியல்லாஹு அன்ஹு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் சென்று இது பற்றிக் கேட்டார்கள். அப்போது அவரிடம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவ்விருவரும் யார்? என்று கேட்டார்கள். "ஒருவர் அன்ஸாரிப் பெண் மற்றவர் ஸைனப் என்று பிலால் ரளியல்லாஹு அன்ஹு கூறினார்கள். எந்த ஸைனப் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கேட்க, அப்துல்லாஹ்வின் மனைவி என பிலால் ரளியல்லாஹு அன்ஹு கூறினார்கள். அப்போது நபியவர்கள், "உறவினரை ஆதரித்தல்,தர்மம் செய்தல் என இரண்டு வகைக் கூலிகள் அந்த இரண்டு பெண்களுக்கும் உண்டு" என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: ஸைனப் அத்தகபீ ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி-1466, முஸ்லிம்-1000)
.பெண்களுக்கான உரிமைகளை வழங்கி அவர்களை வாழ வைத்த மார்க்கம் எது என்பதை இப்போதாவது உங்கள் மனசாட்சி பிரகாரம் கூறுங்கள்.
நபி முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உருவாக்கி வளர்த்து விட்ட பெண் சமூகத்தின் சுதந்திரத்தை பாருங்கள். சட்டரீயாக சொத்துப் பங்கீட்டின் ஒழுங்குகள் அனைத்தும் செய்து கொடுக்கப்பட்ட பிறகும் அவள் சம்பாதிக்கும் உழைப்பில் இருந்து கணவனுக்கு கொடுக்க வேணடிய கட்டாயம் இல்லை. அவளாக விரும்பி கொடுத்தால் தர்மத்துடைய நன்மை கிடைக்கும் என்று கூறுகிறார்கள்
முஸ்லிம் அல்லாதோரின் கலாசாரத்தைப் பின்பற்றி யார் யாருக்கெல்லாம் சேரவேண்டிய சொத்துக்களை திருமண சந்தர்ப்பங்களில் அன்பளிப்பு என்ற பெயரில் அபகரிக்கின்ற ஓர் முறையிலான தவறான சொத்துப் பங்கீட்டை
எங்கள் சமுகத்தில் வேரூன்றி இருக்கும் தவறான சொத்துப் பங்கீட்டு நடைமுறையை நாம் மாற்றவில்லை என்றால் அதற்கான முயற்சியை நாம் மேற்கொள்ளவில்லை என்றால் குறிப்பாக கொள்கை பேசக்கூடியவர்கள் இதில் பொடுபோக்காக இருந்தால், இதில் தியாகம் செய்யும் மனநிலை எம்மிடத்தில் வர வில்லை என்றால் எப்படி இஸ்லாத்தை நடைமுறைப் படுத்தி சுவர்கத்திற்க்குரியவர்களாக நாம் மாறுவது?தனது முழுமுயற்சியையும் பயன்படுத்தி தேடிய தனது பொருளாதரத்தில் ஸகாத் கொடுக்க கடமையான அளவை அடைந்த பின்னரும் அதற்கு ஸகாத்கொடுக்கவில்லை என்றிருந்தால் அதற்கு இரண்டுவிதமான தண்டனையை இஸ்லாம் சுட்டிக் காட்டுகிறது.
1. ஈமான் கொண்டவர்களே! நிச்சயமாக (அவர்களுடைய) பாதிரிகளிலும், துறவிகளிலும் அநேகர் மக்களின் சொத்துக்களைத் தவறான முறையில் சாப்பிடுகிறார்கள்;. மேலும் அல்லாஹ்வின் பாதையை விட்டும் (மக்களைத்) தடுக்கிறார்கள்;. இன்னும் எவர்கள் பொன்னையும், வெள்ளியையும் சேமித்து வைத்துக் கொண்டு அவற்றை அல்லாஹ்வின் பாதையில் செலவிடாதிருக்கின்றார்களோ (நபியே!) அவர்களுக்கு நோவினை செய்யும் வேதனை உண்டு என்று நன்மாராயம் கூறுவீராக!.
(நபியே! அவர்களுக்கு நீர் அந்த நாளை நினைவூட்டுவீராக!) அந்த நாளில் (அவர்கள் சேமித்து வைத்த செல்வத்தை) நரக நெருப்பிலிட்டுக் காய்ச்சி, அதைக் கொண்டு அவர்களுடைய நெற்றிகளிலும் விலாப்புறங்களிலும், முதுகுகளிலும் சூடு போடப்படும் - (இன்னும்) ''இது தான் நீங்கள் உங்களுக்காகச் சேமித்து வைத்தது - ஆகவே நீங்கள் சேமித்து வைத்ததைச் சுவைத்துப் பாருங்கள்"" (என்று கூறப்படும்).
(அல்குர்ஆன் 9-34,35)
2. இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:
'அல்லாஹ் யாருக்கேனும் செல்வதைக் கொடுத்து அவன் அதற்கான ஜகாத்தை நிறைவேற்றவில்லையாயின் கியாமத் நாளில் அச்செல்வம் கடுமையான நஞ்சுடைய பாம்பாக மாறும். அது அவனுடைய கழுத்தில் சுற்றிக் கொண்டு தன்னுடைய இரண்டு விஷப் பற்களால் அவனுடைய தாடையைக் கொத்திக் கொண்டே, 'நானே உன்னுடைய செல்வம்'' 'நானே உன்னுடைய செல்வம்'' ''நானே உன்னுடைய பொக்கிஷம்'' என்று கூறும். (ஆதாரம் புகாரி 1403)
தனது முழு முயற்சியுடன் தேடிய பொருளாதரத்துக்கு ஸகாத் கொடுக்கவில்லை என்பதற்காகவே இப்படியான தண்டனை என்றால் மற்றவர்களின் பொருளாதரத்தை எந்தவிதமான உரிமையும் இல்லாமல் திருமணத்தின் பெயரால் கொள்ளையடித்தால் அதற்குரிய தண்டனை அல்லாஹ்விடத்தில் எப்படி இருக்கும் என்பதை சிந்திப்பவர்கள் புரிந்த கொள்வார்கள்.
இஸ்லாத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். என கோஷங்கள் எழுப்பும் எத்தனை சகோதரர்கள் சொத்துரிமையை நிலை நாட்ட முயற்சித்தீர்களா?
வாரிசு சொத்துரிமையை நடைமுறைப் படுத்துவதற்கு உங்களுக்கு தடைக்கல்லாக அமைந்த காரணம் என்ன?
இஸ்லாமிய தனியார் துறைச்சட்டத்தில் muslim basanal low கூட முஸ்லிம்கள் தமது சொத்தை தனது மதத்தின் அடிப்படையில் பிரித்துக் கொள்ளலாம் என்ற அனுமதி கூட இருக்கிறதே?
இப்படியான சட்டங்களையே நடைமுறைப்படுத்தாமல் எப்படி ஒரு ஆட்சியை நோக்கி கற்பனை செய்கிறீர்கள? என வினாக்களைத் தொடுத்தால் அதற்கு இவைகளெல்லாம் சில்லறை பிரச்சினை என பதில் கூறுகின்றனர்.
ஒருவரின் சொத்தை தவறாக எடுத்தால் அவரின் நிலை எப்படி இருக்கும் என்பதை நபியவர்கள் பின்வருமாறு தெளிவு படுத்துகிறார்கள்.
ஒருவர், தன் சகோதரனுக்கு அவனுடைய மானத்திலோ, வேறு (பணம், சொத்து போன்ற) விஷயத்திலோ இழைத்த அநீதி (ஏதும் பரிகாரம் காணப்படாமல்) இருக்குமாயின், அவர் அவனிடமிருந்து அதற்கு இன்றே மன்னிப்புப் பெறட்டும். தீனாரோ, திர்ஹமோ (பொற்காசுகளோ வெள்ளிக் காசுகளோ) பயன் தரும் வாய்ப்பில்லாத நிலை (ஏற்படும் மறுமை நாள்) வருவதற்கு முன்னால் (மன்னிப்புப் பெறட்டும்.)ஏனெனில், மறுமை நாளில்) அவரிடம் நற்செயல் ஏதும் இருக்குமாயின் அவனுடைய அநீதியின் அளவுக்கு அவரிடமிருந்து எடுத்துக் கொள்ளப்பட்டு (அநீதிக்குள்ளானவரின் கணக்கில் வரவு வைக்கப்பட்டு) விடும். அநீதியிழைத்தவரிடம் நற்செயல்கள் எதுவும் இல்லையென்றால் அவரின் தோழரின் (அநீதிக்குள்ளானவரின்) தீய செயல்கள் (அவர் கணக்கிலிருந்து) எடுக்கப்பட்டு அநீதியிழைத்தவரின் மீது சுமத்தப்பட்டு விடும். என அபூ ஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவித்தார். (ஆதாரம் : புகாரி)
ஒருவரின் சொத்தில் ஒரு சிறியளவு நிலத்தை எடுதால் கூட அவரின் நிலை மறுமையில் எப்படி இருக்கும் என்பதை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பின்வருமாறு கூறுகிறாரகள்.
பிறரின் நிலத்தில் ஒரு பகுதியை அபகரித்தவர் ஏழு நிலங்களை (மறுமையில்) கழுத்தில் மாலையாகக் கட்டித் தொங்க விடப்படுவார் என ஸயீத் இப்னு ஸைத் ரளியல்லாஹு அன்ஹு அறிவித்தார். (ஆதாரம் : புகாரி)
அபூ ஸலமா ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள்:
எனக்கும் வேறு சிலருக்கும் இடையே ஒரு நிலம் சம்பந்தமான தகராறு இருந்து வந்தது. அதை நான் ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களிடம் கூறினேன். அவர்கள் சொன்னார்கள்; அபூ ஸலமாவே! (பிறரின்) நிலத்தை (எடுத்துக் கொள்வதைத்) தவிர்த்துக் கொள்ளுங்கள்.
ஏனெனில், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ''ஓர் அங்குலம் அளவு நிலத்தை அநியாயமாக அபகரித்துக் கொள்கிறவரின் கழுத்தில் ஏழு நிலங்கள் மாலையாக (மறுமையில்) கட்டித் தொங்க விடப்படும்'' என்று கூறினார்கள். (புகாரி)
சிறிய ஒரு நிலத்தைக்கூட மற்றவரின் சொத்தில் இருந்து தவறாக அபகரித்தால் இப்படி தண்டனை என்றால் தவறான அடிப்படையில் சீதனத்தின் பெயரால் அபகரிக்கப்படும் சொத்துக்களின் நிலை எப்படி இருக்கும் என்பதை சிந்திக்க கடமைப்பட்டுள்ளோம்.
வாரிசு சொத்து சட்டத்தை யார் தன் விடயத்தில் நடைமுறைப்படுத்தவில்லையோ அவர் நிரந்தர நரகம் நுழைவார் என அல்லாஹ் தனது திருமறையில் பங்கிடும் முறைகளை குறிப்பிட்டுவிட்டு இறுதியில் பின்வருமாறு கூறுகிறான்.
''எவன் அல்லாஹ்வுக்கும், அவன் தூதருக்கும் மாறு செய்கிறானோ, இன்னும் அவன் விதித்துள்ள வரம்புகளை மீறுகிறானோ அவனை நரகில் புகுத்துவான்;. அவன் அங்கு (என்றென்றும்) தங்கி விடுவான்;. மேலும் அவனுக்கு இழிவான வேதனையுண்டு.'' (4:14)
இப்படி நிரந்தர நரகத்திற்க்குச் இட்டுகச் செல்லும் விடயமாக இது இருக்கிறது என்றால் இதில் ஒரு முஸ்லிம் எப்படி அல்லாஹ்வுக்கு அஞ்சி தனது நடவடிக்கையை அமைத்துக் கொள்ள வேண்டும். நாம் எப்படி இனைவைத்தலை அஞ்சுகின்றோமோ அதேமாதிரி இந்த விடயத்திலும் எமது பயம் இருக்க வேண்டும்.
இன்று சமுகத்தில் நிகழக்கூடிய அதிகமான பாவங்களுக்கும் அடிப்படையாக இருப்பது தவறானசொத்துப் பங்கிடே. பெண்கள் வெளிநாடு செல்வதும், விபச்சாரம் சமுகத்திலே பெருகுவதும், பெண்சிசுக்கொலை அதிகரிப்பதும், பெற்றோர்கள் முதியோர் இல்லங்களில் தங்கவைக்கப் படுவதும், பலர் தமது உயர்படிப்பை தொடரமுடியாமல் இருப்பதற்க்கும் காரணமாக இருப்பது இவ்வாறான தவறான சொத்துப் பங்கீடே என்பதை நிதானமாக சிந்திக்கும் எவரும் புரிந்து கொள்வர்.
ஒரு சமுகத்தில் என்ன பாவம் அதிகமாக நடக்கிறதோ அதை மையப் படுத்தியதாகவே தஃவாப் பணி அமைய வேண்டும் என்பதை அல்குர்ஆன் தெளிவுபடுத்துகிறது.
அல்லாஹ் அளவை நிறுவையில் மோசமாக ஒரு சமுகம் நடந்ததற்கு அவர்களைத் திருத்துவதற்காக ஒரு நபியை அனுப்பினான். அதேபோல் ஒழுக்கசீர்கேட்டில் வாழ்ந்த சமுகத்திற்கு லூத் நபியை அனுப்பி எச்சரித்தான். இவ்வாறே நபிமார்களின் தஃவாப்பணிகளும் அமைக்கப்பட்டன.
எனவே இக்காலத்தில் எமது பகுதிகளில் வாரிசுச் சட்டம் புறக்கணிக்கப்படுவதால் சொத்துரிமையை நடைமுறைப் படுத்துவதற்கு எமது அழைப்புப்பணியில் பாரிய பங்களிப்பு செய்ய வேண்டும் என்பதை எமது மனதில் ஆழமாக பதித்து எமது நடவடிக்கையை மறுமைக்காக அமைத்துக் கொள்வோம்.
இஸ்லாமிய வாரிசுரிமைச் சட்டத்தில் ஆண்களுக்கு இரு பங்குகளும் பெண்களுக்கு ஒரு பங்கும் என்று கூறப்பட்டுள்ளது. இந்தச் சட்டம் பெண்களுக்கு அநீதி இழைக்கின்றது என்பதும் முஸ்லிமல்லாதாரின் குற்றச் சாட்டுகளில் ஒன்றாகும்.
பலமுடையவர்களாகவும், பொருளைத் திரட்டுவதற்கான வாய்ப்புகளை அதிகம் பெற்றவர்களாகவும் உள்ள ஆண்களுக்குக் குறைந்த அளவும் பலவீனர்களாகவும், பொருளீட்டும் வாய்ப்புகளைக் குறைவாகப் பெற்றவர்களாகவும் உள்ள பெண்களுக்கு அதிக அளவும் வழங்குவதே நியாயமானதாகும். அதிகச் சொத்துரிமைக்குப் பெண்களுக்கே அதிகத் தகுதி இருக்கும் நிலையில் - இருவருக்கும் சம அளவில் வழங்குவதே நியாயமாக இராது என்ற நிலையில் - ஆணுக்குக் கிடைப்பதில் பாதியளவு தான் பெண்ணுக்குக் கிடைக்க வேண்டுமென்பது மாபெரும் அநீதியாகும். இப்படி அவர்களின் குற்றச்சாட்டு விரிவடைகின்றது.
இஸ்லாம் மார்க்கத்துக்கு முன் உலகில் பெண்களுக்கு சொத்துரிமை இருந்ததில்லை. பெற்றோர்களின் சொத்துக்களிலிருந்தோ ஏனைய உறவினர்களின் சொத்துக்களிலிருந்தோ பெண்கள் வாரிசுரிமை பெறுவதுமில்லை.
இஸ்லாம் மார்க்கம் தான் முதலில் பெண்களுக்கு சொத்துரிமையை வழங்கியது. இஸ்லாம் மார்க்கம் வந்த பின்பு கூட பல நூற்றாண்டுகளாக முஸ்லிமல்லாத சமுதாயத்தில் பெண்களுக்குச் சொத்துரிமை இருந்ததில்லை.

பெண்களுக்குச் சொத்துரிமை உள்ளது என்று சமீப காலத்தில் தான் நமது நாட்டில் சில பகுதிகளில் சட்டமாக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக தமிழக அரசு பெற்றோர்களின் சொத்துக்களில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் சம அளவிலான உரிமை உண்டு என்று கருணாநிதி ஆட்சியின் போது சட்டமியற்றியது. ஆனால் 1400 ஆண்டுகளுக்கு முன்பே இஸ்லாம் பெண்களுக்குச் சொத்துரிமையை வழங்கியது.
அறிவுப்பூர்வமான, நியாயமான காரணங்களுக்காகவே இஸ்லாம் ஆண்களுக்கு இரு மடங்குகளும், பெண்களுக்கு ஒரு மடங்கும் எனப் பாகப்பிரிவினைச் சட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆண்களுக்கே கூடுதல் சுமை.
இஸ்லாமியச் சமூக அமைப்பில் பெண்களை விட ஆண்கள் மீது கூடுதலான சுமைகள் சுமத்தப்பட்டுள்ளன. ஒரு ஆண் தனது மனைவிக்கு உணவும், உடையும், உறைவிடமும் வழங்கக் கடமைப்பட்டிருக்கிறான். ஒரு பெண் தன் கணவனுக்காக இதைச் செய்ய வேண்டியதில்லை.
ஒரு ஆண் தன் குழந்தைகளின் பராமரிப்புச் செலவையும் சுமக்கக் கடமைப்பட்டுள்ளான். குழந்தையின் உற்பத்தியிலும் வளர்ச்சியிலும் கூடுதலாகப் பங்கெடுத்துக் கொண்ட பெண் தன் குழந்தைகளின் பராமரிப்புச் செலவுக்குக் கூடப் பொறுப்பாளியாக மாட்டாள்.
தாய், தந்தை, அண்ணன், தம்பி, அக்கா, தங்கை மற்றும் தூரத்து, நெருங்கிய உறவினர்கள் ஆகியோர் சிரம தசையிலிருக்கும் போது அவர்களையும் பராமரிக்கும் கடமை ஆண்களுக்கு இருக்கின்றது.
பெண்களைப் பொறுத்த வரை இது போன்ற கடமைகள் எதுவும் அவர்களுக்குக் கிடையாது.
இஸ்லாமிய சமூக அமைப்பில் மட்டுமின்றி ஏனைய சமூகங்களிலும் கூட இந்த நிலையை நாம் காணலாம். இந்த அடிப்படையான விஷயத்தை மறந்து விடுபவர்கள் தாம் இஸ்லாமிய வாரிசுரிமைச் சட்டத்தை குறை கூறக் கூடியவர்கள்.
யாருக்குத் தேவைகள் அதிக அளவு இருக்கின்றதோ அவர்களுக்குக் கூடுதலாகவும் யாருக்குத் தேவைகள் குறைந்த அளவு இருக்கின்றதோ அவர்களுக்குக் குறைவாகவும் வழங்குவது எந்த விதத்தில் அநீதியாகும்?
ஒரு ஆண், வாரிசுரிமை மூலம் பெண்ணை விட இரு மடங்குகள் பெற்றாலும் அவை போதாது என்ற அளவுக்கு அவன் மீது கடமைகள் உள்ளன. ஒரு பெண் ஒரு மடங்கைப் பெற்றாலும் அவளுக்கு அது தேவையில்லை என்ற அளவுக்குப் பொறுப்புகளிலிருந்து அவளுக்கு விலக்களிக்கப்படுகின்றது.

தனக்காகக் கூட இன்னொரு ஆண் செலவு செய்ய வேண்டும் என்ற அளவுக்கு அவளது சொத்துக்களுக்குப் பாதுகாப்பு அளிக்கப்படுகின்றது.
எனவே ஆண்களுக்கு இரு பங்குகளும் பெண்களுக்கு ஒரு பங்கும் என்ற இஸ்லாமிய பாகப் பிரிவினைச் சட்டம் அறிவுக்குப் பொருத்தமான நியாயமான சட்டமாகும் என்பது தெளிவு!
பெண்ணின் சொத்து அன்னியருக்குச் சேரும்.
ஒவ்வொரு மனிதனும் தனது சொத்துக்கள் தன் மரணத்திற்குப் பிறகு தன் இரத்த சம்மந்தமுடையவர்களுக்குச் சேர வேண்டுமென விரும்புகிறான். தன் குடும்பத்திற்குள்ளேயே அந்தச் சொத்துக்கள் செலவிடப்பட வேண்டும் என்றும் விரும்புகிறான். இந்த விருப்பத்தில் நியாயமும் இருக்கின்றது. எல்லா மனிதரும் விரும்பக் கூடிய இந்த விருப்பம் முழுமையாக இல்லாவிட்டாலும் ஓரளவாவது நிறைவேற்றப் படுவதற்கு வாரிசுரிமைச் சட்டத்தில் இந்தப் பாரபட்சம் காட்ட வேண்டிய அவசியம் ஏற்படுகின்றது.
உதாரணமாக ஒரு மனிதனுக்கு ஒரு மகனும், ஒரு மகளும், மனைவியும் சில சகோதர சகோதரிகளும் இருப்பதாக வைத்துக் கொள்வோம். அந்தச் சகோதர சகோதரிகள் மிகவும் ஏழ்மையில் சிரமப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்றும் வைத்துக் கொள்வோம்.
அவனது மரணத்திற்குப் பின்னர் அவனது மகளுக்குச் சேரும் ஒரு பங்கு அவனது இரத்த பந்தங்களுக்குச் செலவிடப்படாது. அது இன்னொரு குடும்பத்துக்குப் போய்ச் சேரும். அந்த மகள் தனக்கே அதை வைத்துக் கொள்ள முடியும் என்றாலும் கணவனுக்காக அனைத்தையும் வழங்கி விடுதல்' என்ற பலவீனம் இல்லாத பெண்கள் அரிது.

கணவனின் நலனுக்காகக் காதுகளில் கழுத்துகளில் கிடப்பதைக் கூட கழற்றிக் கொடுப்பவர்களைக் காண்கின்றோம். இந்த பலவீனத்தினால் அவளுக்குக் கிடைக்கின்ற வாரிசுச் சொத்துக்கள் தாமாக இன்னொரு குடும்பத்துக்குப் போய்ச் சேர்ந்து விடுகின்றன.
அந்த மகனுக்குக் கிடைத்த இரு மடங்குச் சொத்துக்கள் தந்தையின் இரத்த சம்மந்தமான உறவுகளுக்காகவும், அவனையும் அவளையும் பெற்ற தாய்க்காகவும் செலவிட ஏற்ற வகையில் இறந்தவனின் குடும்பத்தையே சுற்றி வருகின்றன. இறந்தவனின் இயல்பான விருப்பம் ஓரளவு நிறைவு செய்யப்பட்டு விடுகின்றது. இந்தக் காரணத்தைச் சிந்திக்கும் போது ஆண்களுக்குச் சிறிது அதிகமாக வழங்குவதில் எந்த அநியாயமும் இல்லை என்பதை உணரலாம்.


பெண் கைவிடப்பட்டால் பிறந்த வீடு தான் அவளைப் பாமரிக்க வேண்டும்.
பெண்கள் பலவீனர்களாக இருப்பதனால் அவர்களுக்குக் கூடுதலாக வழங்க வேண்டும் என்று முஸ்லிமல்லாதார் கூறுகின்றனர். பெண்கள் பலவீனர்களாக இருப்பதும் அவர்களின் பங்கைக் குறைத்ததற்கான காரணங்களில் ஒன்றாகும் என்று நாம் கூறுகிறோம்.
அவர்களின் பலவீனத்தைப் பயன்படுத்திக் கணவனாலும், கணவனது குடும்பத்தினராலும் அவர்களுக்குக் கிடைக்கின்ற சொத்துக்கள் எடுத்துக் கொள்ளப்படலாம். எடுத்துக் கொள்ளப்படுவது கூட பிரச்சனையில்லை. எடுத்துக் கொள்ளப்பட்ட பிறகு அவள் தள்ளப் பட்டும் விடலாம். இந்த நிலையில் அவளது வருங்காலப் பாதுகாப்புக்கு யார் உத்திரவாதம் தருவது? அவள் பிறந்தகம் தான் வந்தாக வேண்டும். அவளது உடன் பிறந்தவன் தான் அவளையும் பராமரிக்க வேண்டும்.
அவளை விடச் சிறிது கூடுதலாக அவன் பெற்றிருந்தால் தான் உடன் பிறந்தவள் மீது பச்சாதாபம் ஏற்பட முடியும். அவளைத் தொடர்ந்து பராமரிக்க முடியும்.
ஆண்களுக்கும் பெண்களுக்கும் சமமான பங்குகள் என்று பிரிக்கப் பட்டால் 'பாதிச் சொத்தைப் பெற்றுச் சென்றாளே? எனக்குக் கிடைத்தது போன்று தானே இவளுக்கும் கிடைத்தது? இவளை ஏன் நான் கவணிக்க வேண்டும்' என்ற எண்ணம் சகோதரர்களுக்கு ஏற்பட்டு அவள் புறக்கணிக்கப்படுவாள்.
ஆண் இரண்டு பங்கைப் பெற்றிருந்தால் நம் சகோதரிக்குக் கிடைத்தது போல் இரு மடங்கை நாம் பெற்றுள்ளோம். எனவே சகோதரியையும் இந்த இக்கட்டான நேரத்தில் நாம் தான் கவணிக்க வேண்டும் என்ற உணர்வு ஏற்படும். இது பெண்களின் எதிர்காலத்துக்குப் பாதுகாப்பாக அமையும்.
சொத்தைப் பெருக்குவதில் ஆண்களின் பங்கு அதிகம்.
பெரும்பாலும் சொத்துக்களைப் பெருக்குவதில் ஆண்களே உறுதுணையாக உள்ளனர். ஒரு தந்தைக்கு ஒரு மகனும் மகளும் இருந்தால் அந்தத் தந்தைக்குச் சொந்தமான நிறுவனங்களில் தந்தைக்கு உறுதுணையாக ஆண்களே இருக்கின்றனர். சொத்து பெருகுவதில் ஆண்களுக்கே அதிக உழைப்பு உண்டு என்பதும் பாரபட்சம் காட்டப்படுவதற்குரிய காரணங்களில் ஒன்றாகும்.
பெரும்பாலும் பெண்கள் தந்தையின் சொத்து வளர்ச்சியில் ஈடுபாடு காட்டுவதில்லை. யார் சொத்து வளர்ச்சிக்கு உதவியாக இருக்கிறார்களோ அவர்களுக்குக் கூடுதலாக பாகங்கள் வழங்குவதை அநியாயம் என்று எப்படிக் கூற முடியும்?

தந்தையிடமிருந்து அதிகம் பெறுவது பெண்களே.
உணவு, உடை போன்ற செலவினங்கள் ஆண்கள் பெண்கள் இரு பாலருக்கும் சம அளவில் செய்யப்பட்டாலும் இதர வகையில் பெண்களுக்கென்று ஆண்களை விடக் கூடுதலாக செலவு செய்யப்படுகின்றது.
ஒரு தந்தைக்கு ஒரு மகனும் ஒரு மகளும் இருந்தால் அந்த மகளுக்காக அந்தத் தந்தை ஆபரணங்கள், நகைகள் என்று செய்து போட்டு அழகு பார்க்கிறார். இவை வெறும் அழகு சாதனங்கள் மட்டுமல்ல. பெரும் சொத்துக்களாகவும் உள்ளன. வசதி படைத்தவர்கள் தங்கள் பெண்களுக்காக இலட்சக் கணக்கிலும் வசதியே இல்லாதவர்கள் பல ஆயிரங்களுக்கும் நகைகள் செய்து போடுகின்றனர். இது அந்தப் பெண்களின் சொத்தாகவே ஆகி விடுகின்றது. இது தவிர திருமணத்தின் போது மகளுக்காகச் சீர் என்று பல சாதனங்களையும் தந்தை வழங்குகின்றார்.
தந்தையின் சொத்தில் ஆண்கள் அனுபவிப்பதை விடக் கூடுதலாக பெண்கள் அனுபவிக்கிறார்கள். தந்தையின் மரணத்திற்குப் பிறகு எஞ்சியுள்ள சொத்துக்களில் தான் இரண்டுக்கு ஒன்று' என்ற விகிதாச்சாரம் பேணப்படுகின்றதேயன்றி தந்தை உயிருடனிருக்கும் போது பெண்களே அதிக அளவில் பெற்றுக் கொள்கிறார்கள்.
இஸ்லாம் கூறுகின்ற வாரிசுரிமைச் சட்டம் அமுல் படுத்தப்பட்டால் இந்த தீய விளைவுகளை நாம் கண்டிப்பாகத் தவிர்க்க இயலும்.
'பெண்களுக்கு ஒன்று ஆண்களுக்கு இரண்டு' என்ற வகையில் பங்கீடு செய்வது தான் அறிவுப்பூர்வமானது. பெண்களுக்கும், பெற்றோருக்கும் சிறந்தது என்பதை இதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.
வெளிப்படையாக பாரக்கும் போது பெண் குறைவாகவும் ஆண் அதிகமாகவும் பெறுவதாகவே தோன்றும். இஸ்லாம் கூறும் காரணங்களை கவனித்தால் பெண் அனைத்து உரிமைகளையும் அதிகமாக அனுபவிப்பதை காணலாம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

1.கணவனைக் கவரும் வழிகள் 40

மண்ணறை வேதனை 001

பத்ருப் போர் உணர்த்தும் பாடமும் படிப்பினைகளும்!