நோன்பு ஏன்?

 

ரமளான் மாதத்தில் நோன்பு ஏன் கடமையாக்கப்பட்டது? ரமளான் மாதத்தில் நம்முடைய வாழ்க்கையை எவ்வாறு சீர்திருத்தம் செய்து கொள்ள வேண்டும்? இறையச்சத்தை வளர்த்துக் கொள்வது எப்படி? திருக்குர்ஆனோடு தொடர்பை அதிகரித்துக் கொள்வது எப்படி? ரமளான் மாதம் முழுக்க முழுக்க நன்மையின்பால் நம்மைத் திருப்பிக் கொள்வது எப்படி? இந்த வினாக்களுக்கான விடை தேடும் மாதமாக இந்த ரமளானை நாம் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். நம்மால் இயன்ற அளவுக்கு நன்மையான காரியங்களில் ஈடுபட முயல வேண்டும்.

இறைநம்பிக்கையாளர்களே! உங்களுக்கு முன் இருந்த (நபிமார்களைப் பின்பற்றிய)வர்கள் மீது கடமையாக்கப்பட்டது போல், உங்கள் மீதும் நோன்பு கடமையாக்கப்பட்டிருக்கிறது. (அதன் மூலம்) நீங்கள் இறையச்சமுள்ளவர்களாய்த் திகழக்கூடும்'. (திருக்குர்ஆன் 2:183)

 

நோன்பு நோற்பது கட்டாயக் கடமை

புனித ரமளான் மாதத்தில் நோன்பு நோற்பது சக்தி பெற்ற அனைத்து முஸ்லிம்கள் மீதும் கட்டாயக் கடமையாகும். இதைத் திருக்குர்ஆன் தெளிவாகப் பிரகடனம் செய்கிறது.

நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் (இறைவனை) அஞ்சுவதற்காக உங்களுக்கு முன் சென்றோர் மீது கடமையாக்கப்பட்டது போல் உங்களுக்கும் குறிப்பிட்ட நாட்களில் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது.

திருக்குர்ஆன் 2:184

இந்தக் குர்ஆன் ரமளான் மாதத்தில் தான் அருளப்பட்டது. (அது) மனிதர்களுக்கு நேர்வழி காட்டும். நேர் வழியைத் தெளிவாகக் கூறும். (பொய்யை விட்டு உண்மையை) பிரித்துக் காட்டும். உங்களில் அம்மாதத்தை அடைபவர் அதில் நோன்பு நோற்கட்டும்.

திருக்குர்ஆன் 2:185

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களது சமுதாயத்தின் மீது மட்டுமின்றி அவர்களுக்கு முன் வாழ்ந்த சமுதாயங்களுக்கும் நோன்பு கடமையாக்கப்பட்டிருந்ததை இதிலிருந்து நாம் தெரிந்து கொள்கிறோம்.

 

ரமளான் மாதம் தேர்வு செய்யப்பட்டது ஏன்?

நோன்பைக் கடமையாக்குவதற்கு ஏனைய மாதங்களை விடுத்து ரமளான் மாதத்தை இறைவன் ஏன் தேர்வு செய்ய வேண்டும்?

மேற்கண்ட வசனத்தில் இந்தக் கேள்விக்கு இறைவன் விடையளிக்கிறான்.

மனித சமுதாயத்தின் கலங்கரை விளக்கமாகத் திகழும் திருக்குர்ஆன் இம்மாதத்தில் அருளப்பட்டதால் இம்மாதம் ஏனைய மாதங்களை விட உயர்ந்து நிற்கிறது. எனவே தான் இம்மாதம் தேர்வு செய்யப்பட்டது என்று இறைவன் சுட்டிக் காட்டுகிறான்.

இதிலிருந்து திருக்குர்ஆனின் மகத்துவமும் நமக்குத் தெரிய வருகிறது.

நோன்பு நோற்பதுடன் நமது கடமை முடிந்து விடுகிறது என்று நினைக்காமல் திருக்குர்ஆனுடன் நமது தொடர்பை அதிகமாக்கிக் கொள்ள வேண்டும். குறிப்பாகப் புனித ரமளான் மாதத்தில் திருக்குர்ஆனை விளங்குவதற்கு அதிகம் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.

நோன்பின் நோக்கம்

எதற்காக நோன்பு நோற்க வேண்டும்? இக்கேள்விக்குப் பலர் பலவிதமாக விடையளிக்கின்றனர்.

பசியின் கொடுமையைப் பணம் படைத்தவர்கள் உணர வேண்டும் என்பதற்காகத் தான் நோன்பு கடமையாக்கப்பட்டது என்பர் சிலர்.

பசியை உணர்வது தான் காரணம் என்று அல்லாஹ்வும் கூறவில்லை; அவனது தூதரும் கூறவில்லை. இது இவர்களின் கற்பனையே தவிர வேறில்லை.

பசியை உணர்வது தான் காரணம் என்றால் செல்வந்தர்களுக்கு மட்டும் நோன்பு கடமையாக்கப்பட்டிருக்க வேண்டும். அன்றாடம் பசியிலேயே உழல்பவனுக்கு நோன்பு கடமையில்லை என்று அறிவிக்கப்பட்டிருக்க வேண்டும்.

மேலும் பணக்காரர்கள் கூட நோன்பு நோற்காமலேயே பசியின் கொடுமையை உணர்ந்து தான் இருக்கின்றனர். பசியை உணர்வதால் தான் சாப்பிடுகின்றனர். நெருப்பு சுடும் என்பதை எப்படிச் சர்வ சாதாரணமாக உணர்கிறோமோ அது போலவே மனிதர்கள் மட்டுமின்றி எல்லா உயிரினங்களும் பசியை உணர்ந்திருக்கின்றன. எனவே பசியை உணர்வதற்காக நோன்பு கடமையாக்கப்பட்டதாகக் கூறுவது முற்றிலும் தவறாகும்.

உடல் ஆரோக்கியம் பேணப்படுவது தான் நோன்பின் நோக்கம் என்று வேறு சிலர் கூறுகின்றனர்.

நோன்பு நோற்பதால் உடல் ஆரோக்கியம் பேணப்படும் என்று அல்லாஹ்வும் கூறவில்லை; அவனது தூதரும் கூறவில்லை. உடல் ஆரோக்கியம் இதனால் ஏற்படும் என்பது காரணம் என்றால் நோயாளிகள் வேறு நாட்களில் நோற்றுக் கொள்ளுங்கள் என்று இறைவன் கூறுவானா?

நோயாளிகளுக்குத் தானே ஆரோக்கியம் அவசியத் தேவை! நோன்பே ஒரு மருந்து என்றிருக்குமானால் நோயாளிகளுக்கு நோன்பிலிருந்து விலக்கு அளிப்பதில் எந்த நியாயமும் இல்லை. எனவே நோன்பு நோற்பதற்கு இதைக் காரணமாகக் கூறுவதும் தவறாகும்.

சில மனிதர்களுக்கு இதனால் ஆரோக்கியம் ஏற்படலாம். அல்சர் போன்ற நோய் ஏற்பட்டவர்களுக்கு இதனால் நோய் அதிகரிக்கவும் செய்யலாம். எனவே இறை திருப்தியை நாடி நிறைவேற்றப்படும் ஒரு வணக்கத்திற்கு இது போன்ற அற்பமான காரணங்களைக் கூறி நோன்பைப் பாழாக்கி விடக் கூடாது.

நோன்பு கடமையாக்கப்பட்டதற்குரிய காரணத்தை அல்லாஹ்வே மிகத் தெளிவாகக் கூறி விட்டான். அந்தக் காரணம் தவிர வேறு எந்தக் காரணத்துக்காகவும் நோன்பு கடமையாக்கப்படவில்லை.

மேலே நாம் எடுத்துக் காட்டியுள்ள வசனத்தில், நீங்கள் இறைவனை அஞ்சுவதற்காக நோன்பு கடமையாக்கப்பட்டது என்று இறைவன் குறிப்பிடுகிறான்.

நோன்பு நோற்பதால் இறையச்சம் ஏற்படும். இறையச்சம் ஏற்பட வேண்டும் என்பது தான் அல்லாஹ் கூறுகின்ற காரணம்.

நமக்குச் சொந்தமான உணவைப் பகல் நேரத்தில் அல்லாஹ் கட்டளையிட்டதால் தவிர்த்து விடுகிறோம். நமது வீட்டில் நாம் தனியாக இருக்கும் போது நமக்குப் பசி ஏற்படுகிறது. வீட்டில் உணவு இருக்கிறது. நாம் சாப்பிட்டால் அது யாருக்கும் தெரியப் போவதில்லை. ஆனாலும் நாம் சாப்பிடுவதில்லை. நாம் சாப்பிடக் கூடாது என்று அல்லாஹ் கட்டளையிட்டதால் நாம் சாப்பிடுவதில்லை. யாரும் பார்க்காவிட்டாலும் நாம் சாப்பிடுவது அல்லாஹ்வுக்குத் தெரியும்; அவன் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்ற எண்ணம் நமது உள்ளத்தில் ஆழமாகப் பதிந்திருப்பதால் தான் நாம் சாப்பிடுவதில்லை.

யாரும் பார்க்காவிட்டாலும் இறைவன் பார்க்கிறான் என்பதற்காக நமக்குச் சொந்தமான உணவை ஒதுக்கும் நாம், ரமளான் அல்லாத மாதங்களிலும் அல்லாஹ் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்று நம்ப வேண்டும்.

ஹராமான காரியங்களில் ஈடுபட நினைக்கும் போது, ஹலாலான பொருட்களையே இறைவனுக்குப் பயந்து நாம் ஒதுக்கி வந்ததை நினைத்துப் பார்க்க வேண்டும்.

இந்த ஆன்மீகப் பயிற்சி தான் நோன்பு கடமையாக்கப்பட்டதற்கான ஒரே காரணம். இதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் விளக்கியுள்ளார்கள்.

யார் பொய்யான பேச்சுக்களையும், பொய்யான நடவடிக்கைகளையும் விடவில்லையோ அவர் பசித்திருப்பதோ, தாகித்திருப்பதோ அல்லாஹ்வுக்குத் தேவையில்லை என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)  நூல்: புகாரி 1903

பசித்திருப்பது நோன்பின் நோற்கமல்ல என்பதும் இங்கே விளக்கப்படுகிறது. நோன்பின் மூலம் எடுக்கப்படும் பயிற்சி நம்மிடம் எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதும் இங்கே விளக்கப்படுகிறது.

நோன்பின் மூலம் பெற்ற பயிற்சி, பொய் சொல்வதிலிருந்தும், தீய நடவடிக்கையிலிருந்தும் தடுக்கவில்லை என்றால் அது நோன்பு அல்ல என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எச்சரிப்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

 

 

 

 

தக்வா (இறையச்சம்) என்றால் என்ன?

 

இறையச்சம் தக்வா என்பது ஓர் இறைநம்பிக்கையாளனின் வாழ்க்கையில் உயிரோடும்உணர்வோடும் இரண்டறக் 

கலந்திருக்க வேண்டிய ஓர் உயரிய அம்சமாகும்.

 

இறையச்சம் என்கிற இந்த அம்சம் தான் ”நாம் யார்?”

 என்பதை அல்லாஹ்வின் திருமுன் அடையாளப்படுத்தும்

 ஆதாரமாகும்.

 

ஓர் இறைநம்பிக்கையாளனின் ஈருலக வாழ்க்கையின் 

வெற்றிதோல்விகளை தீர்மானிப்பதில் முக்கியப்

 பங்காற்றுவதும் இந்த இறையச்சம் தான்.

 

அல்லாஹ் தன் திருமறையில் சுமார் 258 இடங்களில் தக்வா குறித்து பல்வேறு வாசக வடிவில் குறிப்பிடுகின்றான்அதிலும் குறிப்பாகசுமார் 70 இடங்களில் ”நீங்கள் அல்லாஹ்வைப் பயந்து வாழுங்கள்” என்பதாக முஃமின்களை நோக்கி நேரடியாக ஆணை பிறப்பிக்கின்றான்.

இறையச்சம் என்பது நம்முடைய செயலில் மட்டும் வெளிப்படுவது அல்ல.

இறையச்சம் என்பது இஸ்லாமின் அடிப்படையில் இவர் இருக்கிறாரா என்று பார்ப்பதில் மாத்திரம் இல்லை.

இறையச்சம் என்பது தாடி வைப்பதிலும், பர்தா அணிவதிலும் மாத்திரமல்ல.

இறையச்சம் என்பது தோற்றத்தை வைத்து தீர்மானிப்பதல்ல.

மாறாக

இறையச்சம் என்பது ஒரு நேர தொழுகையை நீ விடும் போது,உன்னுடைய உள்ளத்தில் குற்ற உணர்வை ஏற்படுத்துவதில் உள்ளது.

இறையச்சம் என்பது நீ ஒரு பொய் சொல்லும்போது உன் உள்ளத்தை குற்ற உணர்வை ஏற்படுத்துவதில் உள்ளது.

இறையச்சம் என்பது தெரிந்தோ தெரியாமலோ ஒருவரை நீ புண்படுத்தியிருந்தால் உன் உள்ளம் துன்பப்படுவதில் உள்ளது.

 

இறையச்சம் என்பது அல்லாஹ் தடுத்த பாவமான காரியத்தை செய்தால், அல்லாஹ்விற்கு முன்பாக நிற்க வேண்டுமே என்ற அச்சத்தில் வெட்கப்படுவதில் உள்ளது.

 


وَاَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهٖ وَ نَهَى النَّفْسَ عَنِ الْهَوٰىۙ‏

 

எவன் தன் இறைவனின் சந்நிதியில் (விசாரணைக்காக) நிற்பதைப் (பற்றிப்) பயந்து, (தப்பான) சரீர இச்சையை விட்டுத் தன்னைத் தடுத்துக்கொண்டானோ,

(அல்குர்ஆன் : 79:40)

فَاِنَّ الْجَنَّةَ هِىَ الْمَاْوٰى‏

 

அவன் செல்லுமிடம் நிச்சயமாகச் சுவனபதிதான்.

(அல்குர்ஆன் : 79:41)

 

இறையச்சம் என்பது உன் பெற்றோருக்கு மாறு செய்து விட்டால் இரவில் தூங்க முடியாமல் வேதனைப்படுவதில் உள்ளது.

 

இறையச்சம் என்பது இரவில் அல்லாஹ்வின் மீதுள்ள அச்சத்தால் கண்ணீர் சிந்துவதில் உள்ளது.

 

இறையச்சம் என்பது வெளிப்படையான, அந்தரங்கமான வாழ்க்கையில் யார் என்னைப் பார்க்கவில்லை என்றாலும் அல்லாஹ் என்னை பார்த்துக் கொண்டிருக்கின்றான்,என்று அஞ்சி பாவம் செய்யாமல் வாழ்வதில் உள்ளது.

 

இறையச்சம் என்பது உலகமே பாவத்தின் பக்கம் அழைத்தாலும், அல்லாஹ்விற்காக பாவங்களை விட்டு விலக கூடிய துணிவில் உள்ளது.

 

இறையச்சம் என்பது தாடி வைப்பதும் பர்தா அணிவதும் என் இறைவனின் திருப்பொருத்தத்திற்கு மட்டும் தான் இதை செய்கிறேன் என்பதில் உள்ளது.

 

இறையச்சம் என்பது இந்த உலகம் இறைவிசுவாசிகளுக்கு ஒரு சிறைச்சாலையைப் போன்றதாகும் என்று தெரிந்தும் புன்னகையுடனும், சந்தோஷத்துடன் வாழ்வதில் உள்ளது.

 

இறையச்சம் என்பது நல்ல பண்புகளையும், நற்குணத்தையும், மனிதர்களை நேசிக்கின்ற சுபாவம் போன்ற நற்செயல்களில் உள்ளது.

 

இறையச்சம் ஒவ்வொரு நாளையும் இஸ்லாம் உனக்கு கற்றுத் தந்த ஒழுகத்தில் வாழ்வதில் உள்ளது.

 

இறையச்சம் உன் உள்ளம் ஒரு பாவமான காரியத்தை தவறு என்று உணர்த்துவதில் உள்ளது.

 

இறையச்சம் உன் உள்ளத்தை தூய்மை படுத்திவிட்டால் உன் முழு வாழ்க்கையும் தூய்மையாகி விடும் இன்ஷா அல்லாஹ்

.

இறையச்சம் என்பதை தெளிவாக உணரும்போது தான் அதன் சுவையை உணரமுடியும்.

 

وَذَكِّرْ فَإِنَّ الذِّكْرَىٰ تَنفَعُ الْمُؤْمِنِينَ

 

அறிவுரை கூறுவீராக! அந்த அறிவுரை நம்பிக்கை கொண்டோருக்குப் பயன் தரும்.

 

திருக்குர்ஆன் 51:55

 

 

 

 

ஆச்சர்யமூட்டும் இறையச்சம்….

 

விபச்சாரக் குற்றத்தில் ஒருவர் ஈடுபட்டால் அது தண்டனை வழங்கும் அளவிற்கான குற்றம் என்பதாக அல்லாஹ் இறைவசனத்தை இறக்கியருளியிருந்த தருணம் அது

புரைதா, இப்னு அப்பாஸ், அனஸ் ( ரலி  அன்ஹும் ) அறிவிக்கின்றார்கள்:


பனூ அஸ்லம் குலத்தைச் சேர்ந்த மாஇஸ் இப்னு மாலிக் என்கிற நபித்தோழர்  நபி(ஸல்) அவர்களின் சமூகத்தில் வந்து தாம் விபசாரம் புரிந்துவிட்டதாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார்.

அப்போது நபி(ஸல்அவர்கள் அவரை விட்டும்  தம் முகத்தைத் திருப்பிக் கொண்டார்கள்.

 

மீண்டும் வந்து முறையிடவே, அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கேட்குமாறு கூறி மாயிஸ் (ரலி) அவர்களை நபி {ஸல்} அனுப்பி வைத்தார்கள்.

இவ்வாறு, அவர் மூன்று முறை அண்ணலாரின் சபைக்கு வருவதும், செல்வதுமாக இருந்தார்.

நான்காவது முறையாக முன்பு போல் அவர் அவ்வாறு கூறவே அவரை நோக்கி அண்ணலார் {ஸல்} அவர்கள் ”(அவளை) நீர் முத்தமிட்டிருக்கலாம்! அல்லது (கண்ணாலோ கையாலோ) சைகை செய்திரக்கலாம்! அல்லது (ஆசையுடன்) பார்த்திருக்கலாம்!” என்றார்கள்.

ஆனால், அவரோ முன்பு போலவே தாம் விபச்சாரம் புரிந்து விட்டதாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார்.

அப்போது அவரிடம் நபி(ஸல்) அவர்கள் உமக்குப் பைத்தியமா?” என்று கேட்டார்கள். அவர் “இல்லை” என்றார்.

ஆனால், அவரோ மீண்டும் முன்பு போலவே தாம் விபச்சாரம் புரிந்து விட்டதாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார்.

அப்போது, அருகில் இருந்த நபித்தோழர்களிடம் அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் இவர் மது அருந்தி இருக்கிறாரா?” என்று பரிசோதித்துப் பாருங்கள் என்றார்கள்.

பரிசோதித்த நபித்தோழர்கள் இல்லை, இவர் மது அருந்த வில்லை என்று பதில் கூறினார்கள்.

இறுதியாக அவர் நான்கு முறை தமக்கெதிராகத் தாமே சாட்சியம்அளித்தார். அப்போது, அவரிடம் நபி (ஸல்) அவர்கள் சாடைமாடையாகக் கேட்காமல் அவளுடன் நீர் உடலுறவு கொண்டீரா?” என்று (வெளிப்படையாகவே) கேட்டார்கள். அவர், ”ஆம்'” என்று கூறினார்.

அப்போதுதான் அவருக்குக் கல்லெறி தண்டனை வழங்கும்படி நபி(ஸல்) அவர்கள் உத்தரவிட்டார்கள்.

பெருநாள் தொழுகைத் திடல்  அருகில்  அவருக்குக் கல்லெறி தண்டனை நிறைவேற்றப்பட்டது.

 

அப்போது,  நபி (ஸல்) அவர்கள் அவரைக் குறித்து நல்லதைக் கூறியதோடு அவருக்காக இறுதித் தொழுகை (ஜனாஸா) தொழவைத்தார்கள்.

 

மாயிஸ் இப்னு மாலிக் (ரலி) அவர்கள் விபச்சாரம் செய்து கையும் களவுமாக பிடிக்கப்பட்டு தண்டனை நிறைவேற்றப் பட்டவர்கள் அல்ல.
 
மாறாக, தான் செய்த தண்டனைக்குரிய குற்றத்தை யாரும் பார்க்காவிட்டாலும் அல்லாஹ் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்ற அவர்களின் உள்ளத்தில் வெளிப்பட்ட தக்வா - இறையச்சம்தான் அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களின் சமூகம் நோக்கி இழுத்து வந்தது.

அங்கே, மாயிஸ் (ரலி) குற்றத்தை ஒப்புக் கொண்டு தண்டனை கேட்டபோது, மாயிஸ் (ரலி) அவர்களின் இறையச்சத்தை அறிந்த  நபியவர்கள்,
 போய் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புத் தேடுங்கள் என்றார்கள். பின்னர், உமக்குப் பைத்தியமா..? என்கிறார்கள், இவர் மது குடித்திருக்கின்றாரா? என பரிசோதிக்கச் சொல்கின்றார்கள்.

பின்பு நீர் முத்தமிட்டிருக்கலாம்; அல்லது சைகை செய்திருக்கலாம்; அல்லது ஆசையோடு பார்த்திருக்கலாம் என்றெல்லாம் சொல்லி மாயிஸ் (ரலி) அவர்களை திருப்பி அனுப்ப முயற்சிக்கின்றார்கள்.

ஆனாலும், மாயிஸ் (ரலி) அவர்களின் உறுதியான நிலைப்பாட்டால் அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் தண்டனையை நிறைவேற்ற உத்தரவிட்டார்கள்.
 தான் செய்த பாவத்தை தம்மைத் தவிர யாருமே பார்க்காத போதும், படைத்த இறைவன் பார்த்துக் கொண்டிருக்கின்றான் என்ற இறையச்சத்தால் உந்தப்பட்டு, வேதனை மிகுந்த தண்டனையை  ஏற்கும் அளவுக்கு சஹாபாக்கள் இறையச்சம் மிகுந்தவர்களாக திகழ்ந்திருக்கின்றார்கள்.

 

எல்லாம் வல்ல அல்லாஹ் மாயிஸ் (ரலி) அவர்களை பொருந்திக் கொள்வானாக!

 

இந்த தண்டனை வழங்கப்பட்டு சில நாட்கள் கூட கழிந்திருக்காத நிலையில் அண்ணலாரையும், நபித்தோழர்களையும் அதிர்ச்சியடையச் செய்த ஓர் சம்பவம் நபிகளாரின் சபையில் நடந்தேறியது.

 

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களின் திருச்சமூகத்திற்கு அஸ்த் குலத்தின் கிளையான ஃகாமிதிய்யா கோத்திரத்தைச் சேர்ந்த ஒரு பெண்மணி வருகை தந்தார்கள்.

 

வந்த அந்தப் பெண்மணி அல்லாஹ்வின் தூதரே! நான் விபச்சாரம் செய்து விட்டேன். எனக்கு உரிய தண்டனையை நிறைவேற்றி என்னை தூய்மை படுத்துங்கள்! என்றார்.

 

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் அப்பெண்மணியை திருப்பி அனுப்பி விட்டார்கள். அப்பெண் மறு நாளும் அல்லாஹ்வின் தூதரின் முன் வந்து நின்று முன்பு சொன்னது போலவே சொன்னார்.

 

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் திரும்பிச் செல்லுமாறு கூறிய போது, அப்பெண்மணி அல்லாஹ்வின் தூதரே! ஏன் என்னை திருப்பியனுப்புகின்றீர்கள்? மாயிஸ் இப்னு மாலிக் {ரலி} அவர்களின் விஷயத்தில் நடந்து கொண்டதைப் போன்றல்லவா என் விஷயத்திலும் நடந்து கொள்கின்றீர்கள்.

 

அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நான் தகாத உறவில் ஈடுபட்டு கர்ப்பமாக இருக்கின்றேன் என்று கூறினார்.

 

நபி {ஸல்} அவர்கள் ஆச்சர்யத்தோடு நீயா அது?” என்று கேட்டார்கள். அதற்கு அப்பெண்மணி ஆம் என்றார்.

 

அப்படியானால் உமது வயிற்றினுள் உள்ள குழந்தையை பெற்றெடுத்து விட்டு வா!” என்று அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் கூறினார்கள்.

 

குழந்தையை பெற்றெடுத்த பின்னர் அப்பெண்மணி ஒரு துணியில் அந்தக் குழந்தையை சுற்றியெடுத்துக் கொண்டு, மாநபி {ஸல்} அவர்களிடம் வந்து இது நான் பெற்றெடுத்த குழந்தை என்று கூறினார்.

 

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள், “நீ சென்று அந்தக் குழந்தைக்கு அமுதூட்டு! பால்குடி மறக்கடிக்கப்பட்ட பின் வா! என்று கூறி அனுப்பி வைத்தார்கள்.

 

அமுதூட்டும் காலம் நிறைவடைந்த பின்னர், அக்குழந்தையை அழைத்துக் கொண்டு, அக்குழந்தையின் கையில் ரொட்டித் துண்டு ஒன்றை கொடுத்து அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களின் சபைக்கு வந்து, “அல்லாஹ்வின் தூதரே! இதோ நான் பால்குடி மறக்கடித்து விட்டேன். இப்போது என் குழந்தை உணவை உட்கொள்ள ஆரம்பித்து விட்டது என்று கூறினார்.

 

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள், அக்குழந்தையை அன்ஸாரிகளில் ஒருவரிடம் ஒப்படைத்தார்கள்.

 

அதன் பின்னர் அந்தப் பெண்ணுக்கு கல்லெறி தண்டனை வழங்குமாறு உத்தரவிட்டார்கள். எனவே, அவருக்காக மார்பளவு குழி தோண்டப்பட்டது.

 

பின்னர் அக்குழிக்குள் அப்பெண் நிறுத்தி வைக்கப்பட்ட பின் கல்லெறியுமாறு மக்களுக்கு கட்டளையிட, மக்கள் அவர் மீது கல்லெறிந்து அல்லாஹ்வின் தண்டனையை நிறைவேற்றினார்கள்.

 

அப்போது, காலித் இப்னு வலீத் (ரலி) அவர்கள் கல் ஒன்றை எடுத்து அப்பெண்ணின் தலைமீது எறிந்தார்கள். பீறிட்டு வந்த இரத்தம் காலித் இப்னு வலீத் (ரலி) அவர்களின் முகத்தில் தெரித்தது.

 

அப்போது, காலித் இப்னு வலீத் (ரலி) அவர்கள் அப்பெண்ணை சபித்தார்கள்; ஏசினார்கள்.

 

இதை அருகில் நின்று கேட்ட மாநபி {ஸல்} அவர்கள் காலிதே! நிறுத்துங்கள். என் உயிர் எவன் வசம் உள்ளதோ அவன் மீது ஆணையாக! அப்பெண்மணி அழகிய முறையில் தவ்பா பாவமன்னிப்புத் தேடிக்கொண்டார்.

 

பொது நிதியை மோசடி செய்த ஒருவன் இப்படி பாவமன்னிப்புக் கோரினால் அவனுக்கும்கூட மன்னிப்பு வழங்கப்பட்டிருக்கும். என்று கூறினார்கள்.

 

பிறகு அப்பெண்ணுக்கு ஜனாஸா தொழுகை நடத்த ஏற்பாடு செய்யுமாறு நபித்தோழர்களை பணித்தார்கள்.

 

அவருக்காக ஜனாஸா தொழுகையை தாமே தொழவைத்தார்கள். பின்னர் அப்பெண்மணி நல்லடக்கமும் செய்யப்பட்டார்.

 

( நூல்: முஸ்லிம், பாபு மன் இஃதரஃப அலா நஃப்ஸிஹி பிஸ்ஸினா, புகாரி, பாபு மன் தரகல் ஃபவாஹிஷ், ஹதீஸ் எண்: 6820, 6824, மிஷ்காத், கிதாபுல் ஹுதூத், பக்கம்: 310 )

 

தன் கண் முன்னால் ஒருவருக்கு தண்டனை வழங்கப்பட்டதைப் பார்த்த பின்னரும் கூட, தான் செய்த விபச்சார குற்றத்திற்குரிய  தண்டனையை நிறைவேற்றுமாறு ஒரு பெண்மணி பெருமானார் {ஸல்} அவர்களின் திருச்சமூகத்தின் முன் வந்து நின்றார்கள் என்றால் அந்தப் பெண்மணியை அங்கு வந்து நிறுத்தியது தக்வா எனும் இறையச்சம் தான்.

 

ரமழானை வரவேற்க உயரிய 8 வழி காட்டல்கள்:

1- பிரார்த்தனை: நல்ல உடல் ஆரோக்கியத்துடன் ரமழான் மாதத்தை அடைந்து அதிகம் அதிகம் நற்கருமங்கள் செய்து அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தைப் பெற்ற அடியானாக மாறுவதற்கு அவனிடம் உறுதியான உள்ளத்துடன் பிரார்த்தியுங்கள்.

2- தூய உள்ளம்: எந்த அற்ப உலகியல் நோக்கமும் இன்றி இறை திருப்தி, மறுமை வெற்றி, இறையச்சத்தை அதிகப்படுத்தல் போன்ற தூய எண்ணங்களை மாத்திரம் நோக்காகக் கொண்டு ரமழானை வரவேற்கத் தயாராகுங்கள்.

3- மன உறுதி: எனது உடல், மன வலிமைகளை இயன்ற வரை பயன்படுத்தி எவைகளெல்லாம் நற்கருமங்களோ அவைகளில் முந்திச் சென்று அதிகமதிகம் வணக்க வழிபாடுகள் செய்து இறை திருப்தியை பெறுவேன் என உறுதி பூணுங்கள்.

4- பாவ மீட்சி: கடந்த காலத்தில் நிழக்ந்த அனைத்து பாவங்களுக்கும் உள முறுகி தூய உள்ளத்துடன், மன உறுதியுடன் அந்தப் பாவங்களை மறு படியும் எனது வாழ்வில் நான் எண்ணிக் கூட பார்க்க மாட்டேன் என்ற மன உறுதியுடன் அல்லாஹ்விடம் பாவ மன்னிப்புத் தேடி அவன் பால் மீண்டவராக, எந்தப் பாவமும் அற்ற தூய மனிதராக ரமழானுக்குத் தயாராகுங்கள்.

5- நேரத்தை நன்றாகத் திட்டமிடுங்கள்:

ரமழான் வேகமாக நகரும் சில நாட்கள், அதன் ஒவ்வொரு நொடியும் நிமிடமும் மிகவும் பெருமதியானவை. 30 நாடகள் என்றால் 720 மணி நேரம் இதை உரிய முறையில் திட்டமிடுங்கள். ஒரு நாளுடைய 24 மணி நேரத்தை சரியாக திட்டமிட்டு வகுத்துக் கொள்ளுங்கள். கடமையாக தொழுகைகளை கூட்டாக நிறைவேற்றுங்கள், இரவுத் தொழுகையில் கவனம் செலுத்துங்கள், பிந்திய இரவில் எழுந்து தொழுது பாவ மன்னிப்பு தேடுங்கள், இரவுத் தொழுகையில் அதிகம் குர்ஆனை ஓதுங்கள், ஸஹர் உணவை எடுத்து விட்டு பஃஜ்ரின் முன் சுன்னத், பாங்கிற்கும் இகாமத்திற்கும் மத்தியில் பிரார்த்தனை, அல்குர்ஆன் ஓதுதல், பஃஜ்ரை ஜமாஅத்துடன் தொழுதல், கடமையான தொழுகையின் பின் ஓத வேண்டிய திக்ருகள், பிரார்த்தனைகள், அல்குர்ஆன் ஓதுதல். காலை திக்ருகளை, பிரார்த்தனைகளை ஓதுதல், ழுஹாத் தொழுகையை தொழுதல், ஸதகாக்கள் செய்தல், நன்மையை ஏவுதல், தீமையை தடுத்தல், உடல் உறுப்புக்களை பாவங்களை விட்டு பேணிக் கொள்ளல். குறிப்பாக நாவையும், கண்களையும், காதுகளையும் பேணல். ஆகக் குறைந்தது குர்ஆனை ஒரு முறையேனும் ஓதி முடித்தல். மார்க்க மஜ்லிஸ்களை தேடிச் செல்லல். இவ்வாறு ரமழானுடைய ஒவ்வொரு நாளின் நேரங்களையும் நன்றாகத் திட்டமிட்டு வகுத்துக் கொள்ளுங்கள்.

6- மனம் நிறைந்த மகிழ்ச்சி:

ஒரு முஃமினின் வாழ்வில் மிகவும் மகிழ்ச்சியான நாட்கள் இவைகள். சுவர்க்கத்தின் வாயில்கள் திறக்கப்படுகின்ற, நரகின் வாயில்கள் மூடப்படுகின்ற, ஷைத்தான்கள் விளங்கிடப்படுகின்ற, நரகத்திற்குரியவர்கள் ஒவ்வொரு இரவும் விடுதலை செய்யப்படுகின்ற, ஆயிரம் மாதங்களை விட சிறந்த ஓர் இரவுள்ள இப்படி அதிக பாக்கியங்கள் நிறைந்த சிறப்புமிகு ரமழானின் வருகை எப்படி ஒரு முஃமினுக்கு மகிழ்ச்சி தராமல் இருக்க முடியும்?

7- ரமழான் மற்றும் நோன்பு தொடர்பான சிறப்புகளை மார்க்க சட்ட திட்டங்களை அறிந்து கொள்ளுங்கள்:

ரமழான் மற்றும் நோன்பின் சிறப்புகள், மார்க்க சட்டதிட்டங்கள் தொடர்பாக மார்க்க ஆதாரங்களுடன் எழுதப்பட்ட ஆக்கங்களை, நூற்களை வாசிப்பது, ஆதாரங்களுடன் கூடிய உரைகளை செவிமடுப்பது, அப்படியான சிறப்பு நிகழச்சிகளில் பங்கெடுப்பது. முன் சென்ற நல்லோரின் வாழ்வில் ரமழான் எப்படி இருந்தது என்ற ஆக்கங்களை அதிகம் படித்து அந்த முன்மாதிரிகளை நமது வாழக்கைக்கு எடுத்துக் கொள்வது. இன்னும் குடும்ப உறவுகளுக்கும், மனைவி, மக்களுக்கும் அவைகளை வாசிப்பதற்கு கேட்பதற்குள்ள வசதிகளை செய்து கொடுப்பது.

8- ரமழானுக்கு முன் இயன்றவரை உலகியல் தேவைகளை முடித்துக் கொள்ளுங்கள்:

இயன்ற வரை ரமழானுக்கு முன்னரே உலகியல் தேவைகளை முடித்துக் கொள்வது, ரமழானுக்குப் பின்னர் வரையில் தள்ளிப் போட முடியமானவைகளைத் தள்ளிப் போடுவது. ரமழான் மாதம் என்பது நற்கருமங்கள் புரிவதற்குள்ள பொற்காலம் என்பதை மறந்து விடாமல் செயல் படுவது. உலகியல் தேவைகள், வகை வகையான உணவுகள் என்று பெறுமதியான நேரங்களை வீணடித்து விடாமல் புத்தியுடன் சிந்தித்து செயல் படுங்கள்.

ரமளான் நோன்பைச் சரியான முறையில் நோற்று அதன் நன்மைகளை இறைவனிடத்தில் முழுமையாகப் பெற வேண்டும்.

 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

1.கணவனைக் கவரும் வழிகள் 40

பத்ருப் போர் உணர்த்தும் பாடமும் படிப்பினைகளும்!

மண்ணறை வேதனை 001