இறுதிப்பத்தில் இறைத்தூதர் (ஸல்)

 


நாம் ரமலானின் கடைசிப் பத்து நாட்களில் உள்ளோம். இந்த கடைசி பத்து நாட்கள் கிடைத்தற்கரியாத பத்து நாட்களாகும். அந்த கடைசி பத்து நாட்களை வீணாக்கிடாமல் பயனுள்ளதாக்கிட வழிகள் 

ல்லாஹ்வின்  பேரருளால்  [ رمضان  ]   மளான் மாதத்தின் நான்காம்  வார ஜுமுஆவில்  , இறைவனுக்கும் பிடித்தமான நோன்பை நோற்ற நோன்பாளியாகவும், இறைவனுக்கும் பிடித்த இல்லமான இறையில்லத்திலும் அமர்ந்திருக்கிறோம்ல்ஹம்துலில்லாஹ்

இன்றோடு சேர்த்து 22 நாட்கள் அல்லாஹ்வுக்காக நோன்பிருந்திருக்கிறோம்.  நாம் இதுவரைக்கும் வைத்த அனைத்து நோன்புகளையும், அமல்களையும், அல்லாஹ்  அங்கிகரிப்பானாக! ஆமீன்

இன்னும்  மீதமுள்ள எல்லா நோன்புகளையும், இதர வணக்க, வழிபாடுகளையும், எவ்வித தடங்கல் இன்றி பரிபூரணமாக நிறைவேற்றுகிற நற்பேற்றினை நம் அனைவருக்கும் நல்குவானாக! ஆமீன்!!.

அல்லாஹ்விடத்தில் அதிகமாக    اللْهُمَّ إِنَّكَ عَفُوٌّ تُحِبُّ الْعَفْوَ فَاعْفُ عَنِّي என்ற பிரார்தனையை அதிகமாக செய்வோமாக

இன்னும் மூன்றில் ஒரு பங்கு உள்ள நாட்கள் / கொஞ்ச நாட்கள்தாம் உள்ளன. ரமலான் முடிய. ஆக மீதியுள்ள நாட்களை பயனுள்ள நாட்களாக ஆக்கிட முயற்ச்சி செய்வோமாக!. 

அல்லாஹ்வை பயந்து வாழுமாறு, அல்லாஹ்வின் பயத்தை தனி வாழ்க்கையிலும், பொது வாழ்க்கையிலும், குடும்ப வாழ்க்கையிலும், பொருளாதாரத்திலும், அல்லாஹ்வுடைய இல்லத்திலும், கடை தெருவிலும் இப்படி எல்லா சூழ்நிலைகளிலும், எல்லா நேரங்களிலும் அல்லாஹ் நம்மை பார்க்கிறான்; கண்காணிக்கிறான்; நமது செயல்கள் பதிவு செய்யப்படுகிறது; ஒவ்வொரு சொல்லும் செயலும் எழுதப்படுகிறது; என்பதை நினைவில் வைத்தவர்களாக, அல்லாஹ்வை பயந்து அச்சத்தோடு வாழுமாறு எனக்கும் உங்களுக்கும் உபதேசித்துக் கொண்டு இந்த குத்பாவை ஆரம்பம் செய்கிறேன்.

அல்லாஹ் நம் அனைவருடைய பாவங்களையும் இந்த புனிதமான மாதத்தில் மன்னித்தருள்வானாக! நம்முடைய பெற்றோர், குடும்பத்தார், முஃமினான ஆண் பெண் அனைவருடைய பாவத்தையும் மன்னித்து நல்லடியார்கள் உடன் அல்லாஹ் உங்களையும் என்னையும் சேர்த்து அருள் புரிவானாக! ஆமீன்.

 எந்த ஒரு மாதத்தை நாம் எதிர்பார்த்துக் கொண்டிருந்தோமோ அல்லாஹ்வுடைய அருளால் அந்த மாதம் கிடைக்கப் பெற்றிருக்கிறோம். ரமலான் மாதம் வந்த உடனேயே முஃமின்களின் அடுத்த எதிர்பார்ப்பு; ரமலானில் கடைசிப் பத்து கிடைக்க வேண்டுமென்பது. இந்த ரமழானின் கடைசி பத்து எனக்கு எப்படி கிடைக்கும்? அந்த கடைசி பத்தை நான் பயனுள்ளதாக ஆக்கிக் கொள்ள வேண்டுமே என்று முஸ்லிம்கள் முஃமின்கள் ஆர்வம் கொள்கிறார்கள்.

புனித மிக்க ரமழான் மாதத்தின் இறுதிப்பத்தை நாம் நெருங்கியிருக்கும் இவ்வேலையில் இந்த இறுதிப்பத்தின் மகத்துவத்தையும், கண்ணியத்தையும் மிகவும் தெளிவாகவும், ஆழமாகவும் விளங்கிக்கொள்ள வேண்டும்.

இன்று நமது ஊர்களில் ரமழான் மாதம் முழுவதும் தூய்மையான முறையில் மார்க்கக் கடமைகளை செயல்படுத்த வேண்டியவர்கள் மார்க்கத்திற்கு முரனான பல காரியங்களை செய்து கொண்டிருப்பதை கண்கூடாகக் கண்டு வருகின்றோம்.

அதிலும் குறிப்பாக இந்த ரமழானின் இறுதிப் பத்தில் லைலதுல் கத்ர் இரவை அடையப் போகின்றோம் என்று கூறி 27 வது இரவில் மாத்திரம் நின்று வணங்கி தவ்பா என்ற பெயரில் ஆலிம்கள் சொல்லிக் கொடுக்கும் வாசகங்களை கிளிப் பிள்ளை போல் மனப்பாடத்தில் சொல்லிவிட்டு ஒரு வருடம் செய்த பாவமும் இந்த 27 வது நாளில் கேட்ட தவ்பாவினால் மண்ணிக்கப்பட்டு விட்டது என்று எண்ணிக் கொண்டு குதூகலிக்கிறார்கள்

அதாவது இபாதத்துக்காக வாழக்கூடியவர்கள், இபாதத்துகளை சேகரித்துக் கொள்ள வேண்டும், அதிகப்படுத்த வேண்டும் என்று நாட்டம் உள்ளவர்கள் இப்படித்தான் இருப்பார்கள்.

 சகோதரர்களே! இங்கே நாம் ஒரு விஷயத்தை குறிப்பாக நினைவில் வைக்க வேண்டும். நம்முடைய இன்றைய கலாச்சாரத்தில் பல விஷயங்களில் நாம் இஸ்லாமிய அடிப்படைகளை விட்டு விலகி இருக்கிறோம் என்பதுடைய உதாரணங்களில் ஒன்று; இன்று நமது சமூக மக்கள் இந்தக் கடைசி பத்தை வீணடிப்பது. ஒரு சொற்ப கூட்டம்தான் இபாதத்துக்காக செலவழிக்கிறார்கள்; இபாதத்தில் கவனம் கொள்கிறார்கள்.

 உம்மத் உடைய பெரும்பாலான மக்களை நாம் கவனித்தால் கடைசி பத்து என்பது குடும்பத்தார்களுக்கு உள்ளது. அதாவது அவர்களுக்கு பெருநாளைக் கொண்டாடுவதற்கான ஏற்பாடு செய்வது, ஷாப்பிங் செய்வது. பெருநாளில் உணவுக்காக வேண்டியுள்ள ஏற்பாடு. இப்படியாக அந்த கடைசி 10 நாட்கள் பொருள்களை வாங்குவதில், பெருநாள் கொண்டாடும் தயாரிப்பில், ஆடை அலங்காரம் சேர்ப்பதில் வீணடிக்கப்படுவது மிகப்பெரிய வருத்தத்திற்குரிய செய்தி.

 ரமலான் மாதமா? இல்லை எனில் வேறு ஏதேனும் விழாவா? என்று நம் சமூக மக்களை பார்த்து கவலைப்பட வேண்டிய நிலையில் இருக்கிறோம்.

 வாழ்க்கையே வணங்குவதற்கு என்றால் வணக்கத்திற்கு பிறகுதான் மற்ற வேலைகள். படைத்த ரப்புல் ஆலமீனுக்கு முன்னால் சூஜூது செய்த பிறகுதான் மற்ற வேலைகள். அந்த படைத்த ரப்பு உடைய ஹக்கை நிறைவேற்றிய பிறகு தான் நம்முடைய மற்ற விருப்பங்கள்.

 எனக்கு தூக்கம் தேவை; பிள்ளைகள்கள் தேவை; வியாபாரம் தேவை. ஆனால் எல்லா தேவைகளை விட அல்லாஹ்வின் கட்டளை எனக்கு முதன்மையானது என்ற அந்த அடிப்படை நோக்கத்தை அல்லாஹ்வுடைய தூதர் (ஸல்) அவர்கள் முன்வைத்து வாழ்ந்தார்கள். எனவே அவர்களுக்கு இபாதத்கள் லேசாக இருந்தது இலகுவாக இருந்தது

இபாதத் என்பது சிரமமான ஒன்று. ஆனால் நோக்கத்தை புரிந்த காரணத்தால் மறுமையை நம்பி இருந்த காரணத்தால் அந்த இபாதத் நபியவர்களுக்கு லேசாக இருந்தது.

 காரணம் என்ன? இந்த இபாதத் இல்லை என்றால் மறுமை சிரமமாகிவிடும். மறுமையின் சிரமம் மிக பயங்கரமானது.

 நரகவாசிகளை பார்த்து, பாவம் செய்யக் கூடியவர்களைப் பார்த்து, அல்லாஹ்வின் கட்டளைகளை புறக்கணிப்பவர்களைப் பார்த்து, ஹராம் செய்யக்கூடியவ மக்களைப் பார்த்து, மன இச்சைகளின் பின்னால் செல்லக்கூடிய மக்களைப் பார்த்து ரப்புல் ஆலமீன் கேட்கிறான்.

فَمَا أَصْبَرَهُمْ عَلَى النَّارِ

நரக நெருப்பை தாங்குவதற்கு உங்களுக்கு என்ன சக்தி இருக்கிறது? (அல்குர்ஆன் 2 : 175)

 சகோதரர்களே! நமது நபியின் வாழ்க்கையை நாம் பார்த்தால், அவர்கள் சுன்னத் தொழுதார்கள்; நஃபில் தொழுதார்கள்; துஆக்கள் ஓதினார்கள்; வணக்க வழிபாடுகளில் அவர்கள் சிறந்து இருந்தார்கள்; குர்ஆன் ஓதினார்கள்; மேலும் நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான தோழர்களுக்கு இந்த புனிதமான இஸ்லாமிய மார்க்கத்தை எடுத்து வைத்தார்கள்.

 சமூகப்பணிகள், குடும்ப சுமைகள், போர்கள் இவ்வளவு இருந்தும் அல்லாஹ்வுடைய தூதர் (ஸல்) அவர்கள் இபாதத்திற்காக தங்களை ஒதுக்கிக்கொண்டார்கள்.

நான் எனக்கும் உங்களுக்கும் ஒன்று சொல்கிறேன்; அவர்களுடைய பொறுப்புகளில் பணிகளில் கடமைகளில் ஒரு கடமை ஒருவருக்கு இருந்தாலும் நாம் என்ன செய்திருக்க முடியும்?

 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மகத்தான பணியை சுமந்தார்கள். இரவுபகலாக அவர்கள் சிரமப்பட்டார்கள். ஆனால் அவர்களுடைய அந்த சிரமங்கள், அசதி, களைப்பு, அவர்களுடைய கல்வி பணியாக இருக்கட்டும், சீர்திருத்த பணியாக இருக்கட்டும், குடும்ப சுமையாக இருக்கட்டும், அது எதுவும் அவர்களை அல்லாஹ்வின் இபாதத்துகளில் இருந்து திருப்பவில்லை. அல்லாஹ்வுக்கு சிரம் பணிவதை சுமையாக ஆக்கவில்லை.

 நபி (ஸல்) அவர்கள் நம்மை போன்ற வசதி உடையவராக இருந்தார்களா? வசதிகளை அனுபவித்தார்களா?

 இல்லை. தண்ணீர்கூட ஐந்து கிலோமீட்டர் தொலைவில் இருந்து கொண்டு வந்தால்தான் குடிப்பதற்கு தண்ணீர் கிடைக்கும். இன்னும் மற்ற மற்ற தேவைகளை நிறைவேற்றுவதிலும் சிரமங்கள் இருந்தன. இவ்வளவு சிரமங்கள் இருந்தும் அல்லாஹ்வுடைய இபாதத்துக்கு அவர்கள் கொடுத்த நேரத்தை கவனியுங்கள்.

 அன்பானவர்களே! இன்று நம்மிடம் எல்லா வசதிகளும் இருக்கின்றன. ஆனால் இபாபதத்துடைய நேரத்தை நாம் எவ்வளவு குறைக்க முடியுமோ குறைத்து மற்ற விஷயங்களுக்கு எவ்வளவு கூட்டம் முடியுமோ கூட்டி வைத்திருக்கிறோம்.

 ஓய்விற்கு, உணவிற்கு இன்னும் பல விஷயங்களுக்கு நேரத்தை கூட்டிவிட்டு இபாதத்துக்கு மட்டும் நேரத்தை குறைத்து வைத்திருக்கிறோம்.

 மஸ்ஜிதுக்கு வரும்போதே மணியை பார்த்து உள்ளே வருவோம். தொழுது முடித்த உடனே அவசரமான வேலை இருக்கிறது என கூறி வெளியேறி விடுவது.

 அன்பானவர்களே! நாம் வெட்கப்பட வேண்டும். வாழ்நாளை இபாதத்துக்காக செலவழித்த ரசூலுல்லாஹ் இரவிலே நீண்ட நேரம் தொழும் வழக்கம் உடையவராக இருந்த நபி (ஸல்) அவர்களைப் பற்றி அவர்களின் மனைவியார் கூறுகிறார்கள்.

كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ

« إِذَا دَخَلَ العَشْرُ شَدَّ مِئْزَرَهُ، وَأَحْيَا لَيْلَهُ، وَأَيْقَظَ أَهْلَهُ»

ரமலானுடைய கடைசி பத்து வந்துவிட்டால் முழு இரவிலும் இபாதத் செய்வார்கள். தனது குடும்பத்தாரையும் அவர்கள் தூங்க விடமாட்டார்கள் (எழுப்பி விடுவார்கள்). தன்னுடைய கீழ் ஆடையை இருக்க கட்டிக்கொள்வார்கள்.

 அறிவிப்பாளர் : ஆயிஷா ரழி, நூல் : புகாரி, எண் : 2024.

இன்னும் மேலாக, தான் வேறு எதிலும் ஈடுபடக் கூடாது என்பதற்காக அல்லாஹ்வுடைய மஸ்ஜிதில் இஃக்திகாஃபிற்கு வந்துவிடுவார்கள். படைப்புகளின் தொடர்பில் இருந்து விலகி படைத்தோனுடைய தொடர்புக்கு நபி (ஸல்) அவர்கள் முழுமையாக வந்து விடுவார்கள்.

 சகோதரர்களே! ரமலான் நன்மைகளுக்கான மாதம். அதிலும் இந்த கடைசி பத்து மிக விஷேசமான ஒன்று. இந்த கடைசி பத்தில் தான் அல்லாஹ் விசேஷமான இரவை வைத்திருக்கிறான். அதுதான் லைலத்துல் கத்ர்.

 ❆❆ லைலதுல் கத்ர் இரவு

❆❆ அல்-குர்ஆன் இறக்கி வைக்கப்பட்ட இரவு

❆❆ விதிகள் விதிக்கப்படும் இரவு

❆❆ மகத்துவங்கள் நிறைந்த இரவு

❆❆ ஆயிரம் மாதங்களைவிட சிறந்த இரவு

❆❆ ஜிப்ரயீலும், மலாயிகாமார்கள் அதிக அதிகமாக வானத்தில் இருந்து இறங்கும் இரவு

❆❆ சாந்தி பெற்ற இரவு

❆❆ முன்சென்ற பாவங்களுக்கு மன்னிப்பை பெற்றுத் தரும் இரவு

❆❆ ஒரு சூரா இரக்கி வைக்கப்பட்ட இரவு

تَنَزَّلُ الْمَلَائِكَةُ وَالرُّوحُ فِيهَا بِإِذْنِ رَبِّهِمْ مِنْ كُلِّ أَمْرٍ

அதில் வானவர்களும், ஜிப்ரயீலும், தங்கள் இறைவனின் கட்டளையின் படி (நடைபெற வேண்டிய) எல்லா காரியங்களுடன் இறங்குகின்றனர். (அல்குர்ஆன் 97 : 4)

நீங்கள் இங்கு ஒரு ''சுப்ஹானல்லாஹ் '' அல்ஹம்துலில்லாஹ் '' அல்லாஹு அக்பர் '' கூறினால் ரப்புல் ஆலமீன் சொர்க்கத்திலே உங்களுக்கு ஒரு மரத்தை நடுகின்றான்.

 அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : இப்னு மாஜா, எண் : 3807, தரம் : ஸஹீஹ் (அல்பானி)

 அந்த மரத்தைப் பற்றி நபி ஸல் அவர்கள் மற்றொரு இடத்தில் சொன்னார்கள் ;

 வேகமாக குதிரையில் சவாரி செய்யும் ஒரு குதிரை வீரர் நூறு ஆண்டுகள் பயணித்தாலும் கூட அந்த மரத்தை சுற்றி விடமுடியாது.

 அறிவிப்பாளர் : சஹ்ல் இப்னு சஃத் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 6552.

 நாம் கூறக்கூடிய திக்ருகளுக்கு பதிலாக அல்லாஹ் சொர்க்கத்தில் ஒரு மாளிகை தருகிறானே அது பரக்கத்தான வியாபாரம்.

  அல்லாஹ்வின் அடியார்களே! இந்த லைலத்துல் கத்ர் உடைய இரவிலே லவ்ஹூல் மஹ்ஃபூலில் எழுதப்பட்ட நம் முடிவுகள் அதிலிருந்து எடுக்கப்பட்டு வானவர்களுக்கு ஒப்படைக்கப்படுகிறது. ஒரு ஆண்டின் அடுத்த ரமலான் வரை அடுத்த லைலத்துல் கத்ர் வரை யார் மரணிப்பார்? யாருக்கு திருமணம்? எது நடக்கும்? ஒவ்வொரு செயலும் எடுக்கப்பட்டு அவர்களுக்கு கொடுக்கப்படுகிறது.

 அப்படி ஒரு பரக்கத்தான இரவு. அல்லாஹ் படைப்பினங்கள் உடைய அந்த தக்தீரை லவ்ஹுல் மஹ்ஃபூலில்  இருந்து எடுத்து வானவர்களிடம் ஒப்படைக்கிறான். இந்த இரவிலே நம்முடைய விதிகள் வானவர்களுக்கு அறிவிக்கப்படுகிறது.

 புனிதமான குர்ஆன் அருளப்பட்ட லைலத்துல் கத்ருடைய இரவு இந்த கடைசி பத்தில் இருக்கிறது. அல்லாஹ்வுடைய தூதர் (ஸல்) அவர்கள் இந்த லைலத்துல் கத்ர் இரவைத் தேடி இஃதிகாஃப் இருந்தார்கள். ஒவ்வொரு இரவையும் அவர்கள் ஹயாத் ஆக்கினார்கள்.

 நபி (ஸல்) அவர்கள் ரமலான் அல்லாத மற்ற மாதங்களில் ஒருநாள் கால் வீங்க வணங்கிய போது அவர்களுடைய மனைவியார் ஆயிஷா (ரலி) கேட்கிறார்கள்; '' யா ரசூலுல்லாஹ் நீங்கள் தான் முன் பின் பாவங்கள் மன்னிக்கப்பட்டவராயிற்றே! நீங்கள் ஏன் வணங்குகிரீர்கள்? '' அதற்கு நபி (ஸல்) அவர்கள் சொன்ன பதில்;'' நான் அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக வேண்டும்'' (1)

 நூல் : புகாரி, எண் : 4837.

 இப்படி வாழ்நாள் முழுவதும் இபாதத்கள் செய்துகொண்டு இருந்தவர்கள் இந்த லைலத்துல் கத்ரை தேடி இரவெல்லாம் விழித்திருந்தார்கள் என்றால் இதனுடைய மகத்துவத்தை நாம் விளங்க வேண்டும்.

 இதன் நன்மதிப்பை புரிந்தவர்களுக்கு தான் இது புரியும். யார் இந்த உலக விஷயங்களில் உழன்று கொண்டு மறுமையில் அலட்சியமாக இருக்கிறார்களோ அவர்களுக்கு இதெல்லாம் புரிய வாய்ப்பில்லை.

அல்லாஹ்வுடைய தூதர் (ஸல்) அவர்கள் இந்த கடைசி பத்திலே தங்களுடைய குடும்பத்தார்களை எழுப்பி விடுவார்கள். தங்களுடைய தோழர்களுக்கு லைலத்துல் கதர் இரவை தேடுமாறு கட்டளை கொடுத்தார்கள்.

 நபி (ஸல்) அவர்களின் ஆர்வத்தை முயற்சியை பார்த்த தோழர்களும் இஃதிகாஃப் இருந்தார்கள். நபி (ஸல்) அவர்களின் மனைவிமார்களும் இஃதிகாஃப் இருந்தார்கள்.

 நபி (ஸல்) அவர்களின் காலத்திற்கு பிறகு அல்லாஹ்வின் மஸ்ஜிதிலே இருக்கும் வழக்கம் உடையவர்களாக அவர்கள் இருந்தார்கள்.

 இரவு வணக்க வழிபாடுகள், அவருடைய நோன்புகள், தர்மங்கள் என்று இவ்வளவு தீவிரமாக இபாதத்திலே இருந்தவர்கள் ரமலானுடைய இந்த கடைசி பத்திலே ரசூலுல்லாஹ்வை  பின்பற்றி அவர்களும் இஃதிகாஃப் இருந்தார்கள்.

 இவையெல்லாம் நமக்கு எப்படி சாத்தியம்? நம்மில் யாராவது இப்படி செய்வோமா? நம் வீட்டுப் பெண்களை நாம் அனுமதிப்போமா?

 அல்லாஹ்வின் அடியார்களே! அவர்களுடைய நோன்பு பேரித்தம் பழத்திலும் அவர்களுடைய இப்தார் பேரீத்தம்பழத்திலும் தண்ணீரிலும் இருந்தது. அதனால் அவர்களுக்கு இஃதிகாஃப் எடுப்பதில் சிரமம் இல்லை.

ஆனால் நம் இப்தார், வகைவகையான உணவு பட்டியலில் இருந்தால் நாமும்  இஃதிகாஃப் இருக்க முடியாது. மனைவிமார்களும் இருக்க முடியாது.

 நாம்தான் தலைகீழாக மாற்றி வைத்திருக்கிறோம். இன்றைய நாட்களில் பள்ளிவாசல்களுக்கு இஃதிகாஃபிற்கு அழைத்தால், முதலில் என்னென்ன வசதிகள் உள்ளது? உணவு அளிப்பீர்களா? என்று கேட்கிறார்கள். நம்முடைய சிந்தனை எப்படி இருக்கிறது பாருங்கள்.

 நபி (ஸல்) அவர்களின் மஸ்ஜிதில் என்ன அளித்தார்கள்? சஹாபாக்கள் அவரவர் தனியாக கொண்டு வந்து அனைவருக்கும் அளித்து சேர்ந்து உண்பார்கள்.

 நாம் நம்முடைய உணவு தேவைகளையும் சுருக்க வேண்டும். ஸஹாபாக்களுக்கு ஏன் இலகுவானது? அவர்கள் அதை லேசாக்கி கொண்டார்கள். நம்மிடம் என்ன பிரச்சனை என்றால், இப்படி எல்லாம் இருந்தால் நோன்பு வைக்க முடியுமா? என்று சந்தேகிப்பது.

 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்;

مَنْ قَامَ رَمَضَانَ إِيمَانًا وَاحْتِسَابًا، غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ»

யார் இந்த லைலத்துல் கத்ர் இரவில் நின்று வணங்கிறார்களோ அவர்களுடைய முந்தைய பாவங்களை அல்லாஹ் மன்னித்து விடுகிறான்.

அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா, நூல் : புகாரி, எண் : 37.

 இந்த ரமலான் மாதத்தில் நாம் அதிகமாக குர்ஆன் ஓத வேண்டும் என்று அல்லாஹ்வும் அல்லாஹ்வுடைய தூதரும் நமக்கு வலியுறுத்தினார்கள். இந்தக் குர்ஆன் கூறக்கூடிய அடிப்படை என்ன? சொர்க்கத்தின் மீது ஆசை; நரகத்தின் மீது பயம்.

اِنَّمَا الْمُؤْمِنُوْنَ الَّذِيْنَ اِذَا ذُكِرَ اللّٰهُ وَجِلَتْ قُلُوْبُهُمْ وَاِذَا تُلِيَتْ عَلَيْهِمْ اٰيٰتُهٗ زَادَتْهُمْ اِيْمَانًا وَّعَلٰى رَبِّهِمْ يَتَوَكَّلُوْنَ ‌‌ۖ ‌ۚ‏

8:2. உண்மையான முஃமின்கள் யார் என்றால், அல்லாஹ்(வின் திருநாமம் அவர்கள் முன்) கூறப்பட்டால், அவர்களுடைய இருதயங்கள் பயந்து நடுங்கிவிடும்; அவனுடைய வசனங்கள் அவர்களுக்கு ஓதிக்காண்பிக்கப்பட்டால் அவர்களுடைய ஈமான் (பின்னும்) அதிகரிக்கும்; இன்னும் தன் இறைவன் மீது அவர்கள் முற்றிலும் நம்பிக்கை வைப்பார்கள்.

 

فَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ (7) وَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ

 

நீ செய்யக் கூடிய நன்மை அணு அளவு இருந்தாலும் சரி, அதையும் நீ காண்பாய். நீ செய்யக்கூடிய பாவம் அணுவளவு இருந்தாலும் சரி அதையும் நீ காண்பாய். (அல்குர்ஆன் 99 : 7,8)

கடைசிப் பத்தில் ஒற்றைப் படை இரவில் தேடுங்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எங்களுக்கு லைலதுல் கத்ரு இரவைப் பற்றிச் சொல்லும் போது, “அது ரமலான் மாதத்தில் தான் இருக்கிறது. எனவே அதை ரமலானில் கடைசிப் பத்தில் தேடுங்கள். அது ஒற்றைப்படை இரவான இருபத்தி ஒன்று அல்லது இருபத்தி மூன்று அல்லது இருபத்தி ஐந்து அல்லது இருபத்தி ஏழு அல்லது ரமலானின் கடைசி இரவில் (29) இருக்கும் என்று சொல்லி விட்டு, “யார் அதில் ஈமானோடும் நன்மையை எதிர்பார்த்தவராகவும் நின்று வணங்குகிறாரோ அவருடைய முந்திய பாவங்கள் மன்னிக்கப்படும் என்று கூறினார்கள்.     அறிவிப்பவர்: உபாதா பின் ஸாமித் (ரலி), நூல்: அஹ்மத்

மேற்கூறிய ஹதீஸ்கள் ஐயத்திற்கு இடமின்றி லைலதுல் கத்ர், ரமலான் மாதத்தில் கடைசிப் பத்து இரவுகளில் 21, 23, 25, 27, 29 ஆகியவற்றில் ஏதாவது ஒன்றில் தான் இருக்கும் என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது.

 

27 வது இரவில் தான் லைலதுல் கத்ர் வருமா?

லைலதுல் கத்ர் இரவு ரமலானின் கடைசிப் பத்தில் ஒற்றைப்படை இரவுகளில் ஒன்றாகத் தான் இருக்கும் என்பதற்கு ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களை நாம் பார்த்தோம். ஆனால் ஹதீஸ்களைக் காணாத பொதுமக்கள் லைலதுல் கத்ர் இரவு, ரமலான் 27வது இரவு தான் என்று முடிவு செய்து பெரிய விழாவாகக் கொண்டாகிறார்கள்.

ஆகவே இந்த ரமலானில் அல்லாஹ்விடத்தில் பாவமன்னிப்பு தேடுவதோடு இந்த இறுதிப் பத்தில் அதிகம் நன்மை செய்வோம். அல்லாஹ்விடம் "யா அல்லாஹ் இபாதத்துத்களை செய்வதற்கு எனக்கு லேசாக்கி கொடு, எனக்கு துணையாக இருப்பாயாக" என்று அல்லாஹ்விடத்தில் மனம் வருந்தி பாவமன்னிப்பு கேட்டு அல்லாஹ்வின் பக்கம் நாம் மீள்வோமாக. இன்று இரவுகளிலே நம் உணவு தேவைகளை குறைத்து பாவ மன்னிப்பு கேட்பதற்கும், அல்லாஹ்வின் வேதத்தை ஓதி முடிப்பதற்கும் அல்லாஹ் அருள் புரிவானாக!

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

1.கணவனைக் கவரும் வழிகள் 40

பத்ருப் போர் உணர்த்தும் பாடமும் படிப்பினைகளும்!

மண்ணறை வேதனை 001