இறைவழியில் செலவு செய்தல்



இவ்வுலகில் வாழும் மனிதர்களுக்கு இவ்வுலகம் நிரந்தரமில்லை, ஏனெனில் இது அழிந்துவிடக் கூடியது.       


அல்லாஹ் சொல்கிறான்: "நன்கு அறிந்து கொள்ளுங்கள்: இந்த உலக வாழ்க்கை விளையாட்டும், கேளிக்கையும், வெளிப்பகட்டும் மற்றும் உங்களிடையே ஒருவருக்கொருவர் பெருமையடித்துக் கொள்ளுதல், செல்வங்கள், குழந்தைகள் ஆகியவற்றில் ஒருவரையொருவர் மிஞ்சிவிட முற்படுதலுமேயன்றி வேறில்லை. அதற்கான உவமை: மழை பொழிந்திடும் போது அதன் மூலம் விளைகின்ற தாவரங்களைப் பார்த்து விவசாயிகள் மகிழ்ச்சியடைவது போன்றதாகும். பின்னர், அதே பயிர் காய்ந்துவிடுகின்றது. அது மஞ்சளித்துப் போவதையும், பின்னர் பதராகி விடுவதையும் நீர் பார்க்கலாம். (இதற்கு மாறாக) மறுமை எத்தகைய இடமெனில், அங்கு கடும் தண்டனை இருக்கிறது. அல்லாஹ்வின் மன்னிப்பும் திருப்தியும் இருக்கின்றன. ஆனால், உலக வாழ்க்கை ஓர் ஏமாற்றுச் சாதனமே தவிர வேறெதுவுமில்லை" (57:20) எனவே மறுமை வாழ்க்கைதான் நிரந்தரமானது.

இவ்வுலகில் நமக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் பொருள் வசதி ஒரு அமானிதாகும். அதை நாம் சரிவர பயன்படுத்தவேண்டும். ஏனெனில் அதைப் பற்றிய கேள்விகள் மறுமையில் கேட்கப்படும். நமது உயிரும், உடைமையும் இறைவனுக்குச் சொந்தமானவை. நம்மிடமிருந்து அவன் விலைக்கு வாங்கி கொண்டான்.

அல்லாஹ் கூறுகிறான்: "உண்மையாக, அல்லாஹ் இறைநம்பிக்கையாளர்களிடமிருந்து அவர்களின் உயிர்களையும், உடைமைகளையும் சுவனத்திற்குப் பகரமாய் விலைக்கு வாங்கிக் கொண்டான்". (09:111)

நபி(ஸல்) அவ / ர்களும் அவர்களின் தோழர்களும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட செல்வங்களில் வீண்விரயம் செய்யாமலும், கஞ்சத்தனம் செய்யாமலும் நடுநிலைமையுடன் நடந்து கொண்டார்கள். இறைவழியில் அதிகம் செலவிடுபவர்களாக இருந்தார்கள். எனவே இப்படியான மனிதர்கள்தாம் இம்மையிலும், மறுமையிலும் வெற்றி பெறுபவர்கள். இதற்கு மாறாக பொருட்களை அதிகம் சேகரித்து வைத்துக் கொண்டு அதை இறைவழியில் செலவுச் செய்யாமல் அழிந்து போனவர்களும் வரலாற்றில் இடம் பெற்றிருக்கிறார்கள். இவர்களில் இம்மை, மறுமை வாழ்வு வீணாகப் போய் விட்டது.

இறைவழியில் நாம் என்ன செலவு செய்யவேண்டும்?

அல்லாஹ் கூறுகிறான்: "(இறைவழியில்) என்ன செலவு செய்யவேண்டும் எனவும் அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர். ''உங்களுடைய தேவைக்குப் போக மீதமுள்ளதை செலவு செய்யுங்கள்"" என அவர்களிடம் கூறுவீராக!. இவ்வாறு அல்லாஹ் தன் கட்டளைகளை உங்களுக்குத் தெளிவாக விவரிக்கின்றான். நீங்கள் இம்மை - மறுமை பற்றி கருத்தூன்றிச் சிந்திக்கவேண்டும் என்பதற்காக!" (02:219)

"அல்லாஹ்வுக்கு அழகிய கடன் கொடுப்போர்(உங்களில்) யார் உளர்? (அப்படிக் கடன் கொடுத்தால்) அல்லாஹ் அதனைப் பல மடங்குகளாக்கி அவர்களுக்குத் திருப்பிக் கொடுப்பான்"(02:245)

நாம் இறைவழியில் செலவு செய்யும் போது நமது எண்ணம் அல்லாஹ்வுக்காக இதைச் செய்கிறேன் என உறுதியாக இருக்கவேண்டும். பிறர் நம்மைப் புகழவேண்டும் என்பதற்காக செய்யக்கூடாது. மேலும் கொடுத்ததை சொல்லிக் காட்டவும் கூடாது.

அல்லாஹ் கூறுகிறான்: "இறைநம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வின் மீதும், மறுமை நாளின் மீதும் ஈமான் கொள்ளாமல், மனிதர்களுக்குக் காண்பிப்பதற்காகவே தனது பொருளைச் செலவு செய்பவனைப்போல நீங்களும் கொடுத்ததைச் சொல்லிக் காண்பித்தும், மனம் புண்படச் செய்தும் உங்களுடைய தான தர்மங்களைப் பாழாக்கி விடாதீர்கள்" (02:264). எனவே அல்லாஹ்வுக்காக நாம் செலவு செய்யவேண்டும்.

கஞ்சத்தனம் செய்யக்கூடாது. 

அல்லாஹ் கூறுகிறான்: "இதோ! (பாருங்கள்) அல்லாஹ்வின் வழியில் செலவு செய்யுங்கள் என்று உங்களுக்கு அழைப்பு விடுக்கப்படுகின்றது. இவ்விசயத்தில் கஞ்சத்தனம் காட்டுகின்ற சிலர் உங்களில் இருக்கின்றனர். ஆனால், யார் கஞ்சத்தனம் செய்கிறாரோ, அவர் உண்மையில் தன் விசயத்திலேயே கஞ்சத்தனம் செய்து கொண்டிருக்கிறார். அல்லாஹ்வோ தேவைகள் அற்றவன். நீங்கள்தான் (அவன் பக்கம்) தேவையுடையோர்களாய் இருக்கின்றீர்கள். நீங்கள் புறக்கணித்துவிட்டால், அல்லாஹ் உங்களுடைய இடத்தில் வேறு ஒரு சமுதாயத்தைக் கொண்டுவருவான்: மேலும், அவர்கள் உங்களைப் போல் இருக்கமாட்டார்கள்".(47:38)

கஞ்சத்தனம் செய்வது மிக மோசமான செயலாகும். 

அல்லாஹ் கூறுகிறான்: "எனவே, உங்களால் முடிந்த வரை அல்லாஹ்வுக்கு அஞ்சிய வண்ணம் வாழுங்கள். மேலும் செவிதாழ்த்திக் கேளுங்கள், கீழ்படியுங்கள். மேலும், உங்கள் செல்வத்தை செலவு செய்யுங்கள். இது உங்களுக்கே சிறந்ததாகும். தம்முடைய உள்ளத்தின் கஞ்சத்தனத்தை விட்டு எவர்கள் விலகி இருக்கின்றார்களோ அத்தகையவர்கள்தாம் வெற்றி பெறக் கூடியவர்கள். நீங்கள் அல்லாஹ்வுக்கு அழகிய கடன் கொடுத்தால், அதனை அவன் உங்களுக்கு பன்மடங்கு அதிகமாக்கித் தருவான். மேலும் உங்கள் பாவங்களைப் புறக்கணித்துவிடுவான். அல்லாஹ் உரிய மதிப்பளிப்பவனாகவும், சகிப்புத் தன்மை கொண்டவனாகவும் இருக்கின்றான். மறைந்திருப்பவை மற்றும் வெளிப்படையானவை அனைத்தையும் அறிந்தவனாகவும் இருக்கின்றான். வல்லமை மிக்கவனாகவும், நுண்ணறிவாளனாகவும் இருக்கின்றான்".(64:16,17,18) எனவே நாம் மறுமையில் வெற்றிக்காக இறைவழியில் செலவு செய்தே ஆகவேண்டும்.

எப்படி இறைவழியில் செலவு வேண்டும் என்றால் 1. ஜகாத் 2. ஸதகா என்ற இருவழிகளில் செய்யலாம். ஜகாத்தைக் கணக்கிட்டுக் கொடுக்கவேண்டும். இல்லையென்றால் நாளை மறுமையில் தண்டனை உண்டு. ஜகாத்தைத் தனியாகவும் கொடுக்கலாம். ஆனால் தனிநபராகத் கொடுப்பதை விட ஒரு கூட்டமைப்பாக சேர்ந்து கொடுப்பது சிறந்ததாகும். நபி(ஸல்) அவர்கள் காலத்திலும், கலீஃபாக்களின் காலத்திலும் மொத்தமாக ஜகாத்தை வசூலித்து பிறகு அதைப் பங்கு வைத்தார்கள். இப்படியே நாமும் செய்யவேண்டும்.

அடுத்து நாம் மனமுவந்து ஸதகா(தர்மம்) செய்யவேண்டும். குறிப்பாக நம் உறவுகளில் இருக்கும் ஏழைகளுக்கு உதவவேண்டும். நாம் தர்மம் செய்கின்றபொழுது நமக்காக வானவர்கள் பிரார்த்திக்கின்றனர். 

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள், "இருவானவர்கள் தினமும் வருகின்றார்கள் ஒருவர் தானதர்மம் செய்பவருக்கு செல்வத்தை மேலும் வழங்கு என்றும், மற்றொருவர் கஞசனுக்கு நஷ்டத்தைக் கொடு என்றும் பிரார்த்திக்கின்றனர்".  (அறிவிப்பாளர்: அபூஹுரைரா(ரலி)).

நம்மிடம் இருக்கும் அத்தனை செல்வங்களையும் செலவிட வேண்டும் என்பதில்லை. 

அல்லாஹ் கூறுகிறான்: "உமது கையை கழுத்தோடு சேர்த்து கட்டிவிடாதீர். முற்றிலும் அதனை விரித்துவிடாதீர். அப்படிச் செய்தால் பழிப்புக்குரியவராகவும் இயலாதவராகவும் நீர் ஆகி விடுவீர்" (17:29)

எனவே கஞ்சத்தனமும் கூடாது, ஒரேயடியாக எல்லாவற்றையும் செலவும் செய்யக் கூடாது. நடுநிலையோடு செயல்பட்டு மற்றவர்களுக்கு உதவி செய்தோம் என்றால் நம்முடைய இம்மை, மறுமை வாழ்வு வெற்றி பெற்றதாக அமையும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

1.கணவனைக் கவரும் வழிகள் 40

மண்ணறை வேதனை 001

எட்டு விதமான சொர்க்கங்கள்