வாரிசுரிமையின் அவசியம்








     





வாழ்வின் எல்லாப் பிரச்னைகளுக்கும் வழிகாட்டும் இஸ்லாம், வாரிசுரிமைப் பற்றியும் மிகத் தெளிவானதொரு வழிமுறையைக் காட்டியுள்ளது. பல்வேறு வழிமுறைகளில் பொருளை அடைய முடிந்தாலும் அதை ஈட்டுவதற்கான சிறந்த வழி எது? அதை எந்தெந்த வழிகளில் செலவிட வேண்டும்? என்பன போன்ற வினாக்களுக்கு பொருளியல் நிபுணர்களே வியந்து பாராட்டும் வண்ணம் எக்காலத்திற்கும் பொருத்தமான தீர்வை இஸ்லாம் வழங்கியுள்ளது. அதுபோல பொருளாதாரம் ஓரிடத்தில் குவிந்து, சிலர் என்றும் பொருளாதார வசதி படைத்தோராகவும், சிலர் என்றுமே வறியவர்களாகவும் இருக்கும் நிலையை இஸ்லாம் அனுமதிக்கவில்லை.

மனிதன் கஷ்டப்பட்டு உழைத்துச் சம்பாதிப்பது தனக்கு மட்டுமின்றி, தனது பிற்கால வாழ்வு, தனது மரணத்திற்குப் பின்னர் தனது சந்ததிகள், உற்றார், உறவினர் போன்றவர்களுக்காகவும்தான். எனவே, அவன் அப்படி கடின உழைப்பின் மூலம் ஈட்டிய சொத்து, சுகங்கள் அவனது மரணத்திற்குப் பின்னர் உரியவர்களுக்குக் கிடைக்காமல் போய், ஒரு சிலரோ அல்லது உரிமையற்றவர்களோ அபகரித்து விடக்கூடாது என்ற விஷயத்தில் தனி கவனம் செலுத்தி, அதற்காக அச்சொத்தில் அவர்களுக்கு உரியது எந்த அளவு என்பதையும் இஸ்லாம் நிர்ணயித்துள்ளது. அளவு நிர்ணயிக்கப்படாதிருந்தால் பேராசையால் தனக்கே சொத்து முழுவதும் சேர வேண்டுமென்று வலியவர்கள் அதை அபகரித்து விடக்கூடும். எனவே, தகுதியானவர்களுக்கு தகுதியான விகிதத்திலேயே சொத்துரிமை அளித்துள்ளது இஸ்லாம்.

"ஒவ்வொரு சமூகத்தினருக்கும் ஒரு சோதனை உண்டு. எனது சமூகத்தினருக்கு பொருட் செல்வம் தான் பெரிய சோதனையாகும்" என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக கஃபு இப்னு இயாழ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நூல் : திர்மிதீ 2337, இப்னு ஹிப்பான் 2470,  
அஹ்மத் 4 :160, ஹாகிம் 4 :318

எனவே, நம் பொருட்செல்வம் என்ற சோதனையில் நாம் வெற்றி பெற, கவனமாக நடப்பது அவசியமாகும். சொத்து மனிதர்களுடன் சம்பந்தப்பட்டதாக இருப்பதால், "அடியார்கள் மன்னிக்காமல் நான் மன்னிக்க மாட்டேன்" என அல்லாஹ் குறிப்பிடும் "ஹுகூகுல் இபாத்" என்ற பிரிவுடனும் சேர்ந்ததாகும். தொழுகை, நோன்பு, ஹஜ், ஸக்காத் போன்றவைதான் கட்டாயக் கடமை என நாம் எண்ணிக் கொண்டிருக்கின்றோம். ஆனால் சொத்துரிமையும் கட்டாயக் கடமைதான்.

(மரணமடைந்த) தாய், தந்தையரும் நெருங்கிய உறவினரும் விட்டுச் சென்ற சொத்தில் ஆண்களுக்குப் பங்குண்டு. (அது போல) தாய், தந்தையரும் நெருங்கிய உறவினரும் விட்டுச் சென்ற சொத்தில் பெண்களுக்கும் பங்குண்டு; அச்சொத்து குறைவாகவோ, அதிகமாகவோ இருந்தாலும் சரியே! இந்தப் பங்கு அல்லாஹ்வினால் நிர்ணயிக்கப்பட்டதாகும்.
(அல்குர் ஆன் 4 :7)

4:11-வது வசனத்தில் பாகப்பிரிவினைப் பங்கீடுகளைப் பற்றிக் கூறிய பின்னர் "இது அல்லாஹ்விடமிருந்து வந்த கட்டளையாகும்" என்றும், 4:12-வது வசனத்தின் இறுதியில் "இது அல்லாஹ்வினால் விதிக்கப்பட்டதாகும்" என்றும், 4:13-வது வசனத்தில் "இவை அல்லாஹ்வின் வரையறைகளாகும்" என்றும் அல்லாஹ் கூறுகிறான். எனவே, வாரிசுரிமைப் பங்கீடு கட்டாயக் கடமையே.

நமது நாடுகளில் ஒருவர் இறந்தவுடன் சொத்துரிமைப் பங்கு பிரித்துக் கொடுக்கப்படாத காரணத்தால் அண்ணன், தம்பி, அக்காள், தங்கைகளுக்கிடையில் சண்டைகள் ஏற்பட்டு நீதிமன்றம் செல்லும் பலரைப் பார்க்கின்றோம். பெண்மக்களுக்கு சொத்துரிமை கொடுக்கப்படாத நிலையைப் பார்க்கின்றோம். ஆனால், இஸ்லாம் தான் பெண்களுக்கும் சொத்துரிமை உண்டு எனக் கட்டளையிட்டு பெண்ணுரிமை பேணிய மார்க்கம் ஆகும். எனவே, வாரிசுரிமைச் சொத்துப் பங்கீடு கட்டாயக் கடமை. அதன் மூலம் உலகில் நம்மிடையே, குடும்பங்களுக்கிடையே அமைதியை ஏற்படுத்தலாம்.



சொத்துரிமை ஏற்பட்ட வரலாறு:

ஸஃது இப்னு ரபீஃ (ரலி) அவர்களின் மனைவி, ஸஃதின் மூலம் தனக்குப் பிறந்த இரு பெண் மக்களுடன் வந்து, "அல்லாஹ்வின் தூதரவர்களே! இவ்விருவரும் ஸஃது இப்னு ரபீஃ அவர்களின் (மூலம் எனக்குப் பிறந்த) புதல்விகள். இவர்களின் தந்தை ஸஃது உஹதுப் போர்க்களத்தில் கொல்லப்பட்டார். இந்தப் பெண்களுக்கு எந்தப் பொருளையும் விட்டு வைக்காமல் அவரது சொத்து முழுவதையும் அவருடன் பிறந்த சகோதரர் எடுத்துக் கொண்டார். இவ்விருவரின் சொத்துகளுக்காகவே எவரும் திருமணம் செய்ய முன்வருவார்கள்" என முறையிட்டார். இதைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள், "இது விஷயமாக அல்லாஹ் தீர்ப்பளிப்பான்" எனக் கூறினார்கள். அப்போதுதான் சொத்துரிமை பற்றிய பின்வரும் (4 :11,12-வது) குர் ஆன் வசனங்கள் இறக்கி அருளப்பட்டன.

உங்கள் மக்களில் ஓர் ஆணுக்கு, இரண்டு பெண்களுக்குக் கிடைக்கும் பங்கு போன்றே கிடைக்கும் என்று அல்லாஹ் உங்களுக்கு உபதேசம் செய்கிறான். பெண்கள் மட்டும் இருந்து, அவர்கள் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்டு இருந்தால், அவர்களுக்கு இறந்து போனவர் விட்டுச் சென்றதில் மூன்றில் இரண்டு பாகம் கிடைக்கும். ஆனால், ஒரே பெண்ணாக இருந்தால் அவள் பங்கு பாதியாகும்.

இறந்தவருக்கு குழந்தை இருக்குமானால், இறந்தவர் விட்டுச் சென்றதில் ஆறில் ஒரு பாகம் (அவரது) பெற்றோர் ஒவ்வொருவருக்கும் உண்டு. ஆனால், இறந்தவருக்கு குழந்தை இல்லாதிருந்து பெற்றோர் மட்டுமே வாரிசாக இருந்தால், அவர் தாய்க்கு மூன்றில் ஒரு பாகம் (மீதி தந்தைக்கு உரியதாகும்). இறந்தவருக்கு சகோதரர்கள் இருந்தால், அவர் தாய்க்கு ஆறில் ஒரு பாகம்தான் (மீதி தந்தைக்கு சேரும்). இவ்வாறு பிரித்துக் கொடுப்பது அவர் செய்துள்ள மரண சாசனத்தையும், கடனையும் நிறைவேற்றிய பின்னர்தான். உங்கள் பெற்றோர்கள், குழந்தைகளில் யார் நன்மை பயப்பதில் உங்களுக்கு நெருக்கமாக இருப்பவர்கள் என்று நீங்கள் அறிய மாட்டீர்கள். ஆகையினால் (இந்தப் பாகப் பிரிவினை) அல்லாஹ்விடமிருந்து வந்த கட்டளையாகும். நிச்சயமாக அல்லாஹ் (யாவற்றையும்) நன்கறிந்தவனாகவும், மிக்க ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்.

இன்னும் உங்கள் மனைவியர் விட்டுச் சென்றதில் - அவர்களுக்குப் பிள்ளை இல்லாதிருந்தால் உங்களுக்குப் பாதி பாகம் உண்டு. அவர்களுக்குப் பிள்ளை இருந்தால் அவர்கள் விட்டுச் சென்றவற்றிலிருந்து. உங்களுக்கு கால் பாகம்தான் - (இதுவும்) அவர்கள் செய்திருக்கிற மரண சாஸனத்தையும், கடனையும் நிறைவேற்றிய பின்னர்தான் - தவிர உங்களுக்குப் பிள்ளையில்லாதிருப்பின் நீங்கள் விட்டுச் சென்றதிலிருந்து அவர்களுக்குக் கால் பாகம்தான். உங்களுக்குப் பிள்ளை இருந்தால், அப்போது அவர்களுக்கு நீங்கள் விட்டுச் சென்றதில் எட்டில் ஒரு பாகம்தான். (இதுவும்) நீங்கள் செய்திருக்கும் மரண சாஸனத்தையும் கடனையும் நிறைவேற்றிய பின்னரேதான்.

தந்தை, பாட்டன் போன்ற முன் வாரிசுகளோ அல்லது பிள்ளை, பேரன் போன்ற பின் வாரிசுகளோ இல்லாத ஓர் ஆணோ அல்லது ஒரு பெண்ணோ - இவர்களுக்கு ஒரு சகோதரனோ அல்லது சகோதரியோ இருந்தால் - அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஆறில் ஒரு பாகம் உண்டு. ஆனால் இதற்கு அதிகமாக இருந்தால் அவர்கள் மூன்றில் ஒரு பாகத்தில் சமமாகப் பங்கிட்டுக் கொள்ளவேண்டும் - (இதுவும்) அவர்களின் மரண சாஸனமும் கடனும் நிறைவேற்றிய பின்னர்தான். ஆனால் (மரண சாஸனத்தைக் கொண்டு வாரிசுகள்) எவருக்கும் நஷ்டம் ஏற்படக் கூடாது. (இது) அல்லாஹ்வினால் விதிக்கப்பட்டதாகும். இன்னும் அல்லாஹ் (யாவற்றையும்) நன்கறிந்தவனாகவும், மிக்க பொறுமையுடையோனுமாகவும் இருக்கின்றான்.
அல்குர் ஆன் 4 :11,12

அப்போது, நபி (ஸல்) அவர்கள் அப்பெண்களின் சிறிய தந்தையை அழைத்து, ஸஃதின் புதல்விகள் இருவருக்கும் சொத்தில் மூன்றில் இரண்டு பங்கும், ஸஃதின் மனைவிக்கு எட்டில் ஒரு பங்கும் கொடுத்துவிட்டு, மீதியை அவர் எடுத்துக் கொள்ளும்படி ஆணையிட்டார்கள்.

ஆதாரம்: அபூதாவூத் 2891, திர்மிதீ 2092
இப்னுமாஜா 2720, அஹ்மத் 3307

மற்றொரு வரலாறு:

பனீஸலமா கூட்டத்தினரில் நான் நோய்வாய்ப்பட்டிருக்கும்போது, என்னை நபி (ஸல்) அவர்களும் அபூபக்ர் (ரலி) அவர்களும் நோய் விசாரிக்க வந்தனர். என்னால் எதையும் விளங்கிக் கொள்ள முடியாத நிலையில் என்னைக் கண்டார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் தண்ணீரை வரவழைத்து உளூச் செய்து, பின்னர் என் மீது தண்ணீரைத் தெளித்தார்கள். அப்போது நான் விழித்து, அல்லாஹ்வின் தூதர் அவர்களே! எனது செல்வத்தை நான் என்ன செய்யச் சொல்கிறீர்கள்? எனக் கேட்க, அப்போது 4:11வது வசனம் இறங்கிற்று என ஜாபிர் இப்னு அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

(புகாரி 4577, 6723, 5651, 5676 மற்றும் முஸ்லிம்)

இன்னொரு வரலாறு:

ஹஸ்ஸான் இப்னு ஸாபித் (ரலி) அவர்களின் சகோதரரான அப்துர்ரஹ்மான் இப்னு ஸாபித் (ரலி) அவர்கள் மரணமானபோது ஆண் வாரிசுகள் அனைவரும் வந்து, சொத்து முழுவதையும் எடுத்துக் கொண்டனர். அவரது மனைவி உம்மு கஹ்ஹா மற்றும் அவரது சகோதரிகள் ஐவருக்கும் எதுவும் கொடுக்கவில்லை. அப்போது உம்மு கஹ்ஹா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் முறையிட்டபோது மேற்கண்ட வசனம் இறங்கியதாகவும் வரலாறு காணப்படுகிறது. (தஃப்ஸீர் இப்னு ஜரீர்)

ஆக எது எப்படியாயினும், பெண்களுக்குக் கிடைக்க வேண்டிய சொத்து கிடைக்காமல் பெண்களுக்கு அநீதி இழைக்கப்பட்ட போதுதான் சொத்துரிமை பற்றிய தெளிவான சான்றுகள் தோன்ற ஆரம்பித்தன என்பது உண்மையாகும். (அல்லாஹ் மிக அறிந்தவன்)

பயிற்சி வினாக்கள்:

(1) வாரிசுரிமை கட்டாயக் கடமையா? அதற்கான ஆதாரங்கள் என்ன?

(2) அல்குர் ஆன் 4:11,12வது வசனங்கள் இறங்கக் காரணம் என்ன?


 2. இஸ்லாமிய வாரிசுரிமைச் சட்டத்தின் சிறப்பு

search this website

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

1.கணவனைக் கவரும் வழிகள் 40

பத்ருப் போர் உணர்த்தும் பாடமும் படிப்பினைகளும்!

மண்ணறை வேதனை 001