சனி, ஆகஸ்ட் 29, 2015

பெண் சொத்துரிமை


மகளிர் நாள் ஒவ்வோர் ஆண்டும் (மார்ச் 8 இல்) கொண்டாடப்படுகிறது. உலகில் முதன் முதலில் பெண்களுக்குச் சொத்துரிமை வழங்கியது இஸ்லாம். இஸ்லாமிய சொத்துரிமை சட்டங்களைப் பற்றி பல நூல்கள் எழுதலாம். விரிவான விளக்கங்களுக்குச் செல்லாமல் எந்த சூழ்நிலையில் ஆழ அறிவிக்கும் சட்டங்கள் திருக்குர்ஆனில் கூறப்பட்டன என்பதை மட்டும் எடுத்துரைக்கப்படுகிறது.
நபிகள் நாயகத்தின் தோழர் அவ்ஸ் பின் தாபித் அன்சாரி இறந்துவிட்டார். அவருக்கு ஒரு மனைவியும் மூன்று மகள்களும் இருந்தனர். இறந்தவரின் சிறிய தந்தையின் இரு மகன்கள் ஸýவைது, அர்பஜா ஆகிய இருவரும் சொத்துக்களை எடுத்துக் கொண்டனர். இறந்த அவ்ஸ் பின் தாபித் அன்சாரியின் மனைவிக்கோ மகளுக்கோ சொத்தில் எள்ளளவும் கொடுக்கவில்லை.
உண்ணும் உணவிற்கே வழியின்றி வாடிய அவ்ஸின் மனைவி அண்ணல் நபி (ஸல்) அவர்களிடம் முறையிட்டார். அப்பொழுது திருக்குர்ஆனின் 4- 7 ஆவது வசனம் அருளப்பட்டது. ""பெற்றோர்களோ உறவினர்களோ விட்டுச் சென்றவற்றில் ஆண்களுக்கும் பாகமுண்டு. பெண்களுக்கும் பாகமுண்டு. இது அல்லாஹ்வினால் விதிக்கப்பட்ட பாகம்''.
இச் சொத்துக்கள் எப்படி பிரிக்கப்பட வேண்டும் என்பதை 4-11, 12 ஆவது வசனங்கள் வரையறுக்கின்றன.
இவ்வரையறைப்படி அவ்ஸின் சொத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெண் குழந்தைகளுக்கும்
நான்கிலொரு பாகம் மனைவிக்கும் பிரித்து கொடுக்கப்பட்டதையும் இதுபோலவே உஹது போரில் உயிர்நீத்த ஸஅது பின் ரபீஉ என்பவரின் மனைவிக்கும் இரு மகள்களுக்கும் இறந்தவரின் சொத்திலிருந்து பாகம் பிரித்து கொடுக்கப்பட்டதையும் ஹழ்ரத் ஜாபிர் (ரலி) அறிவிப்பது புகாரி, முஸ்லிம் நூற்களில் காணப்படுகிறது.
முஆது (ரலி) யேமன் நாட்டின் ஆளுநராக இருந்தபொழுது ஒரு மகனையும் ஒரு சகோதரியையும் விட்டு இறந்தவரின் சொத்துக்களை மகளும் சகோதரியும் ஆளுக்குப் பாதி சமமாக எடுத்து கொள்ள தீர்ப்பளித்தார்கள். அறிவிப்பவர் அஸ்வது இப்னு யஜீது (ரலி) நூல் - புகாரி, அபூதாவூத்.
இறந்தவரின் தாய் அவருக்கு முன் இறந்திருந்தால் இறந்தவரின் பாட்டிக்கு ஆறில் ஒரு பாகம் என்று நபி (ஸல்) அவர்கள் நிர்ணயித்ததை நினைவுபடுத்துபவர் புரைதா (ரலி) நூல்- அபூதாவூத்.
ஒருமகள், மகளின் மகளான பெயர்த்தி, ஒரு சகோதரி இறந்தவருக்கு வாரிசாக இருந்தனர். இறந்தவரின் சொத்தை ஆறாக பங்கிட்டு மகளுக்குப் பாதி மூன்று பங்கும் பெயர்த்திக்கு ஆறில் ஒரு பங்கும் மீதமுள்ள ஆறில் இரண்டு பங்கு சகோதரிக்கும் என்று ஏந்தல் நபி (ஸல்) அவர்கள் தீர்ப்பளித்ததை ஈர்ப்புடன் இயம்புகிறார் இப்னு மஸ்வூத் (ரலி) நூல்- புகாரி, அபூ
தாவூத், திர்மிதீ.
இவ்வாரிசு பெண்களில் மனைவி பெற்ற தாய், தந்தையைப் பெற்ற பாட்டி என்று மேல் நோக்கி செல்லும். சகோதரி, மகள், மகனின் மகள் என்று மற்றொரு தொடர் கீழ்நோக்கி போகும். இப்படி எல்லா பெண்களுக்கும் சொத்துரிமை 1400 ஆண்டுகளுக்கு முன்னே இஸ்லாத்தில் வழங்கப்பட்டது. இந்தியாவில் பெண்களுக்குச் சொத்துரிமை 1969 இல் அமலான இந்து வாரிசுரிமை சட்டத்தில் தான் வழங்கப்பட்டது. அதுவரை இந்தியாவில் இந்து சமய பெண்களுக்குச் சொத்தில் உரிமை இல்லை.
முஹம்மது நபி (ஸல்) அவர்கள் இஸ்லாத்தைப் போதிப்பதற்கு முன் அரபியரில் ரபிஆ, முலர் முதலிய கோத்திரத்தினர் பெண் குழந்தைகளைக் கொன்றதைக் கண்டித்து விண்டுரைக்கும் குர்ஆனின் 6- 140 ஆவது வசனம், ""தங்களின் குழந்தைகளை அறிவின்றி கொலை செய்து விட்டவர்கள் திட்டமாக நட்ட
மடைந்தவர்கள்''
"உங்களுக்கு மரணம் சமீபித்து பொருளை விட்டு இறப்பவராயின் அவரின் தாய், தந்தைக்கும் பந்துக்களுக்கும் நியாயமான முறையில் பொருள் சேர மரண சாசனம் கூறுவது விதியாக்கப்பட்டுள்ளது. இது இறையச்சமுடையோரின் கடமையாகும்'' என்றுரைக்கும் குர்ஆனின் 2-180 ஆவது வசனத்தில் சொத்து பிரிவினையில் தாய்க்கே முதலிடம் தரப்படுகிறது''
மனைவிகளை விட்டு இறப்பவர் அம்மனைவிகளுக்கு ஓராண்டு வரையிலும் உணவு, உடை முதலிய செலவுகளை வழங்குமாறு வாரிசுகளுக்கு மரண சாசனம் கூற கூறும் குர்ஆனின் 2-240 ஆவது வசனத்தில் அம்மனைவியர் விரும்பினால் ஓராண்டிற்குள் முறைப்படி மறுமணம் செய்து வாழும் உரிமையும் வழங்கப்பட்டுள்ளது.
"விவாகரத்து செய்யப்பட்ட பெண்ணுக்கும் இத்தா காலம் (100 நாள்கள்) முடியும்வரை முறைப்படி கணவனின் சொத்திலிருந்து பாரமரிப்பு செலவினைப் பெற தகுதியுண்டு. அவ்வாறு அப்பெண்களைப் பராமரிப்பது இறையச்சமுடையோரின் கடமையாகும்'' என்று கட்டளை இடுகிறது கவின்மிகு குர்ஆனின் 2-241 ஆவது வசனம்.
"அனாதை பெண்களாயினும் மஹர் (மணகொடை) கொடுக்காமல் திருமணம் செய்வது கூடாது'' என்று கூறுகிறது குர்ஆனின் 4-127 ஆவது வசனம்.
ஒருவர் மனைவிக்கு உரிய மஹரைக் கொடுக்காமல் இறந்தால் அந்த மஹரை இறந்தவரின் சொத்திலிருந்து கொடுத்த பிறகே வாரிசுதாரர்கள் சொத்தைப் பிரிக்க வேண்டும்.
குர்ஆன் கூறும் முறையில் திரு நபி (ஸல்) அவர்கள் தீர்ப்பளித்தவாறு சொத்துரிமை முதலிய அனைத்து உரிமைகளையும் உரிய வழியில் வழங்கி பெருமையுடன் பெண்கள் வாழ வழி வகுப்போம். வல்லோன் அல்லாஹ் நல்லருள் புரிவான்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக