இரவு தொழுகை "தராவிஹ்" கடமையா! கடமையில்லையா!!



நோன்பு மாதம் வந்துவிட்டால் இரவு தொழுகைக்கு நாம்கொடுக்கும் முக்கியத்துவம் மற்ற நல்ல விசயங்களுக்கு கொடுப்பதுயில்லை இரவு தொழுகைக்கு முக்கியத்துவம் அனுமதிக்க பட்டவையா?இல்லையா? நினைத்தல் வேதனையான உள்ளது நாம் ஏன் இன்னும் அறியாமையில் இருந்து கொண்டுள்ளோம்.

நாம் அனைவரும் எதற்காக தொழுகிறோம்? நன்மைகிடைக்கும் என்ற நோக்கில் தான். ரமலான் மாதம் நாம் செய்யும் ஒரு நன்மைக்கு ஆயிரம் நன்மைகள் என்பது அனைவர்களும் அறிந்த ஒன்றுதான். நாம் செய்யும் தவறுகளால் இறைவன் எப்படி நமக்கு எப்படி நன்மை கிடைக்கும் தவறு செய்கிறோம் என்று தெரிந்து செய்தால் எப்படி இறைவன் மன்னிப்பான்
சுன்னத் ஜமாஅத்என்று சொல்ல கூடியவர்களுக்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எட்டு ரகாயத் தான் தொழுதார்கள் என்று தெள்ள தெளிவாக தெரிந்த பின்பும் 20 ரகாயத்தான் தொழுவோம் என்று அடம்பிடிக்கிறார்கள் சரி அது தெரிந்த விஷயம் தான். ஆனால் இவர்கள் தொழும் வித்ரு தொழுகையாவது சரியா என்றால் அதுவும் நபிவழிப்படி இல்லை. வித்ரு தொழுகை தொழும் முறையில் மாற்றம் இருப்பது பலரால் இன்னும் கவனிக்க படாமலே இருக்கின்றதால் இங்கே தெளிவுபடுத்த வேண்டியிருக்கிறது.
"வித்ரு தொழுகை அவசியமானதாகும். யார் நாடுகிறாரோ அவர் ஐந்து ரக்அத் வித்ர் தொழட்டும்; யார் நாடுகிறாரோ அவர் மூன்று ரக்அத்கள் வித்ர் தொழட்டும்; யார் நாடுகிறாரோ அவர் ஒரு ரக்அத் தொழட்டும்" என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூ அய்யூப் ரளியல்லாஹு அன்ஹு நூல்கள்: நஸயீ 1692, அபூதாவூத் 1212, இப்னுமாஜா 1180)
   தொழுகையில் நிதானம்  
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கற்றுத் தராத இருபது ரக்அத் என்ற வழிமுறையை நாமாக உருவாக்கியதால் தொழுகையில் கடைப் பிடிக்க வேண்டிய பல ஒழுங்குகளை நாம் அலட்சியம் செய்து வருகிறோம். குறிப்பிட்ட நேரத்துக்குள் இருபது ரக்அத்களைத் தொழ வேண்டும் என்று வரையறுத்துக் கொண்டு தொழுவதால் அனைத்துக் காரியங்களும் மிக விரைவாகச் செய்யப்படுகின்றன. ருகூவு, ஸஜ்தாக்களில் ஓத வேண்டியதை ஓதி நிதானமாகக் குனிந்து நிமிர வேண்டும். இந்த ஒழுங்குகளைப் பேணாமல் தொழுத ஒரு மனிதரைக் கண்ட நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், அவர் தொழவே இல்லை என்று கடுமையாக எச்சரித்தனர்.(பார்க்க: புகாரி 389, 757, 793, 6251, 6667)
இந்த எச்சரிக்கையும் இருபது ரக்அத் என்ற பெயரில் மீறப்படுகிறது.
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஓதியதைப் போன்றும், ருகூவு, சுஜுது செய்ததைப் போன்றும் ஒருவர் தொழுவதாக இருந்தால் இவர்கள் இருபது ரக்அத் தொழும் நேரத்தில் எட்டு ரக்அத்கள் தொழுவது கூடச் சாத்தியமாகாது. இன்றைக்கும் நடைமுறையில் இருபது ரக்அத் தொழுகைக்கு மற்றவர்கள் எடுத்துக் கொள்ளும் நேரத்தை விட எட்டு ரக்அத்துக்கு நாம் அதிக நேரம் எடுத்துக் கொள்கிறோம்.
அல்லாஹ் எண்ணிக்கையை விட தரத்தைத் தான் பார்ப்பான் என்பதை அறிந்தால் வேகமாக தொழுகையை விட்டுவிட்டு இருபது ரக்அத்திலிருந்து விலகி அதை விட அதிக நேரம் செலவிட்டு நபிவழியில் தொழ முன் வந்திடுவோம்.
   முழுக் குர்ஆனையும் ஓதுதல்  
ரமளான் மாதத்தில் முழுக் குர்ஆனையும் தொழுகையில் ஓத வேண்டும் என்ற நம்பிக்கை மக்களிடம் பரவலாகக் காணப்படுகிறது. இதற்காகக் குர்ஆன் மனனம் செய்தவரைத் தொழ வைப்பதற்காக நியமிக்கின்றனர். தினமும் ஒரு ஜுஸ்வு என்ற கணக்கில் ஓதி அவர் தொழ வைத்து ரமளான் மாதத்தில் குர்ஆனை முடிப்பார் என்பதற்காக இவ்வாறு செய்யப்படுகிறது. இதற்கு நபிவழியில் எந்த ஆதாரமும் இல்லை.
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எந்த ரமளான் மாதத்திலும் முழுக் குர்ஆனையும் ஓதியிருக்கவே முடியாது.
குர்ஆன் ஓரே சமயத்தில் ஒட்டு மொத்தமாக அவர்களுக்கு அருளப்படவில்லை. சிறிது சிறிதாக 23 ஆண்டுகளில் குர்ஆன் அருளி முடிக்கப்பட்டது என்பதை நாம் அனைவரும் அறிவோம்.
அவர்கள் நபியாக நியமிக்கப்பட்ட முதல் வருடத்தில் குர்ஆனின் மிகச் சிறிய பகுதிகளே அவர்களுக்கு அருளப்பட்டன.
இப்படியே ஒவ்வொரு வருடமும் சிறிது சிறிதாகக் குர்ஆன் இறங்கிக் கொண்டே வந்தது.
அவர்களின் கடைசி ரமளானில் கூட முழுக் குர்ஆனும் அருளப்பட்டிருக்க முடியாது.
அவர்களின் கடைசி ரமளானுக்குப் பின்னர் ஷவ்வால், துல்கஃதா, துல்ஹஜ், முஹர்ரம், ஸஃபர் ஆகிய ஐந்து மாதங்களும் ரபீயுல் அவ்வல் பன்னிரண்டு நாட்களும் வாழ்ந்தனர். இந்தக் கால கட்டத்தில் அருளப்பட்டதும் சேர்த்தே முழுக் குர்ஆன்.இந்தக் கால கட்டத்தில் அருளப்பட்டதை ரமளானில் ஓத வேண்டுமானால் மறு ரமளானில் தான் சாத்தியம். ரபீயுல் அவ்வலில் அவர்கள் மரணித்து விட்டதால் நிச்சயமாக முழுக் குர்ஆனையும் எந்த ரமளானிலும் அவர்கள் ஓதியிருக்க முடியாது.மேலும் ரமளானில் முழுக் குர்ஆனையும் ஓதுங்கள் என்று வாய்மொழி உத்தரவு எதுவும் அவர்கள் பிறப்பிக்கவில்லை.
இரவுத் தொழுகையில் ஓதுவது பற்றிக் குர்ஆன் கூறும் போது பின்வருமாறு தெளிவாக விளக்குகின்றது.
'(முஹம்மதே!) நீரும், உம்முடன் உள்ள ஒரு தொகையினரும் இரவில் மூன்றில் இரு பகுதிக்கு நெருக்கமாகவும், இரவில் பாதியும், இரவில் மூன்றில் ஒரு பகுதியும் நின்று வணங்குகின்றீர்கள்' என்பதை உமது இறைவன் அறிவான். அல்லாஹ்வே இரவையும், பகலையும் அளவுடன் அமைத்துள்ளான். நீங்கள் அதைச் சரியாகக் கணிக்க மாட்டீர்கள் என்பதையும் அவன் அறிவான். எனவே அவன் உங்களை மன்னித்தான். ஆகவே குர்ஆனில் உங்களுக்கு இயன்றதை ஓதுங்கள். உங்களில் நோயாளிகளும், அல்லாஹ்வின் அருளைத் தேடி பூமியில் பயணம் செய்வோரும், அல்லாஹ்வின் பாதையில் போரிடுவோரும் உருவாவார்கள் என்பதை அவன் அறிந்து வைத்துள்ளான். எனவே அதில் உங்களுக்கு இயன்றதை ஓதுங்கள்! தொழுகையை நிலை நாட்டுங்கள்! ஸகாத் கொடுங்கள்! அல்லாஹ்வுக்கு அழகிய கடன் கொடுங்கள்! உங்களுக்காக நீங்கள் முற்படுத்தும் நன்மையை அல்லாஹ்விடம் பெற்றுக் கொள்வீர்கள். அதுவே சிறந்தது. மகத்தான கூலி. அல்லாஹ்விடம் பாவ மன்னிப்புத் தேடுங்கள்! அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன். (திருக்குர்ஆன் 73:20)
எனவே சிரமமில்லாமல் எந்த அளவுக்கு ஓத இயலுமோ, திருத்தமாக எந்த அளவுக்கு ஓத இயலுமோ அந்த அளவுக்கு ஓதித் தொழுவது தான் நபிவழியாகும்.
நான்கு ரக்அத் முடிவில் தஸ்பீஹ்? ஒவ்வொரு நான்கு ரக்அத் முடிந்த பின் நீண்ட திக்ருகளை ஓதுகின்றனர்.முதல் நான்கு ரக்அத் முடிவில் அபூபக்ர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களைப் புகழ்ந்து போற்றும் வகையிலும்,
இரண்டாவது நான்கு ரக்அத் முடிந்த பின் உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களைப் போற்றிப் புகழும் வகையிலும், மூன்றாவது நான்கு ரக்அத் முடிவில் உஸ்மான் ரளியல்லாஹு அன்ஹு அவர்களைப் போற்றிப் புகழும் வகையிலும், நான்காவது நான்கு ரக்அத்துக்குப் பின் அலீ ரளியல்லாஹு அன்ஹு அவர்களைப் போற்றிப் புகழும் வகையிலும் அமைந்த வாசகங்களை ஓதுகின்றனர். இவர்களைப் பற்றியெல்லாம் ஓதுவதிலிருந்தே இது நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காலத்தில் உள்ள நடைமுறை இல்லை என்பதை அறிந்து கொள்ளலாம். தொழுகைக்கு இடையே இவர்களின் பெயர்களைக் கூறும் போது அவர்களுக்காகத் தொழுதது போன்ற தோற்றம் ஏற்படுகிறது.தொழுகை முடிந்த பின் எவரையும் புகழ வேண்டும் என்பது நபிகள் நாயகம் காட்டிய வழி முறை அல்ல என்பதால் இதை விட்டொழிக்க வேண்டும்.
கடமையான தொழுகை ஜமாஅத்தாகத் தொழுவது ஆண்களுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளதை நாம் அறிவோம். இரவுத் தொழுகை இவ்வாறு வலியுறுத்தப்பட்டுள்ளதா என்றால் இல்லை.
   ஜமாஅத்தாகத் தொழ விரும்பினால்... 
சிலர் விரும்பி ஜமாஅத்தாகத் தொழ விரும்பினால் நபிவழியில் அதற்கு அனுமதி உள்ளது என்பதற்குப் பல சான்றுகள் உள்ளன.
மைமூனா ரளியல்லாஹு அன்ஹா வீட்டில் தங்கிய இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் பின் வருமாறு கூறுகிறார்கள்.
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இஷா தொழுது விட்டு வீட்டுக்கு வந்தார்கள். நான்கு ரக்அத்கள் தொழுது விட்டுத் தூங்கினார்கள். பின்னர் எழுந்தார்கள். சிறுவன் தூங்கி விட்டானா?' என்று கேட்டு விட்டுத் தொழலானார்கள். நான் எழுந்து அவர்களின் வலது புறம் நின்றேன். என்னைத் தமது இடது புறத்தில் ஆக்கினார்கள். அப்போது ஐந்து ரக்அத், பின்னர் இரண்டு ரக்அத் தொழுதார்கள். அவர்களின் குறட்டைச் சத்தத்தை நான் கேட்டும் அளவுக்குத் தூங்கினார்கள். பின்னர் தொழுகைக்குப் புறப்பட்டார்கள். (நூல்: புகாரி 117, 138, 183, 697, 698, 699, 726, 728, 859)
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இரவுத் தொழுகை தொழுத போது இப்னு அப்பாஸ் தனியாகத் தொழாமல் நபிகள் நாயகத்துடன் ஜமாஅத்தாகச் சேர்ந்து தொழுதார். இது மார்க்கத்தில் இல்லாதது என்றால் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அதைக் கண்டித்திருப்பார்கள். தொழுது முடித்த பிறகு, இப்படி நடக்கக் கூடாது என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறவில்லை. எனவே இரவுத் தொழுகையை ஜமாஅத்தாகத் தொழ அனுமதி உள்ளது என்பதை இதிலிருந்து அறியலாம்.
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தமது அறையில் இரவுத் தொழுகை தொழுவார்கள். அந்த அறையின் சுவர் குட்டையாக இருந்ததால் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை மக்கள் பார்க்க முடியும். விடிந்ததும் இது பற்றிப் பேசிக் கொண்டனர். இரண்டாம் இரவில் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தொழுத போது நபிகள் நாயகத்தைப் பின்பற்றி மக்களில் சிலரும் தொழலானார்கள். இப்படி இரண்டு அல்லது மூன்று இரவுகள் நடந்தன. இதன் பின்னர் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் (அறைக்கு வராமல்) அமர்ந்து விட்டனர். சுபுஹ் நேரம் வந்ததும் இது பற்றி நபிகள் நாயகத்திடம் மக்கள் கேட்டனர். அதற்கு நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், 'இரவுத் தொழுகை உங்கள் மீது கடமையாக்கப்பட்டு விடுமோ என்று அஞ்சினேன்' என்று விளக்கமளித்தார்கள். (அறிவிப்பவர்: ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா, நூல்: புகாரி 729)
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஓர் இரவின் நடுப் பகுதியில் (வீட்டை விட்டு) வெளியேறி பள்ளிவாசலில் தொழுதார்கள். அவர்களைப் பின்பற்றி சிலர் தொழுதனர். விடிந்ததும் மக்கள் இது பற்றி பேசிக் கொண்டனர். (இதன் காரணமாக மறு நாள்) மக்கள் மேலும் அதிகரித்து நபிகள் நாயகத்தைப் பின்பற்றித் தொழுதனர். விடிந்ததும் மக்கள் (இது பற்றி) பேசிக் கொண்டனர். மூன்றாம் இரவில் இன்னும் அதிகமாக மக்கள் திரண்டனர். நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வந்து தொழுதார்கள். அவர்களைப் பின்பற்றி மக்களும் தொழுதார்கள். நான்காம் இரவு ஆன போது பள்ளிவாசல் கொள்ள முடியாத அளவுக்கு மக்கள் திரண்டனர். (இரவுத் தொழுகைக்கு நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வராமல்) பஜ்ருத் தொழுகைக்குத் தான் வந்தனர். பஜ்ரு தொழுததும் மக்களை நோக்கித் திரும்பி அல்லாஹ்வைப் போற்றி புகழ்ந்து விட்டு, 'நீங்கள் இருந்தது எனக்குத் தெரியாமல் இல்லை. இத்தொழுகை உங்கள் மேல் கடமையாக்கப்பட்டு அதை நிறைவேற்ற இயலாதவர்களாகி விடுவீர்களோ என்று அஞ்சினேன்' என்று கூறினார்கள். இந்த நிலையிலேயே நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மரணித்தார்கள். (அறிவிப்பவர்: ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 2012)
இந்தக் கருத்தில் இன்னும் பல அறிவிப்புக்கள் உள்ளன.
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மூன்று நாட்கள் இரவுத் தொழுகையை ஜமாஅத்தாக நடத்தினார்கள் என்பதும், பின்னர் அதை விட்டு விட்டார்கள் என்பதும் இதிலிருந்து தெரிகிறது.இந்த ஹதீஸை நாம் சரியான முறையில் புரிந்து கொள்ள வேண்டும்.நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மூன்று நாட்கள் மட்டுமே ஜமாஅத்தாகத் தொழுதுள்ளதால் மூன்று நாள் மட்டும் ஜமாஅத்தாகத் தொழுவதே நபிவழி என்று சிலர் புரிந்து கொள்கிறார்கள்.மூன்று நாட்கள் ஜமாஅத்தாகத் தொழுத நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பின்னர் அதை விட்டு விட்டதால் அதையே நாம் சட்டமாக எடுத்துக் கொள்ள வேண்டும்; அதாவது இரவுத் தொழுகையை ஜமாஅத்தாகத் தொழுவது கூடாது. தனித் தனியாகத் தான் தொழ வேண்டும் என்று மற்றும் சிலர் புரிந்து கொள்கிறார்கள்.இந்த இரண்டு கருத்துக்களுமே தவறாகும்.
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒரு செயலைச் செய்தால் அல்லது செய்ததை விட்டு விட்டால் நாமும் அவ்வாறே நடக்க வேண்டும் என்பதில் நமக்கு மாற்றுக் கருத்து இல்லை.ஆனால் செயலைச் செய்வதற்கோ, விடுவதற்கோ நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காரணம் ஏதாவது கூறியிருந்தால் அதைப் பொதுவானதாகப் புரிந்து கொள்ளக் கூடாது. அந்தக் காரணம் இருக்கும் வரை அதைக் கடைப்பிடிக்க வேண்டும். அந்தக் காரணம் விலகி விட்டால் கடைப்பிடிக்கத் தேவையில்லை என்று புரிந்து கொள்ள வேண்டும்.இன்னொரு ஹதீஸை உதாரணமாகக் கொண்டு இதைத் தெளிவாக விளங்கிக் கொள்ளலாம்.இரவில் தூங்கச் செல்லும் போது விளக்கை அணைத்து விடுங்கள். இல்லாவிட்டால் எலிகள் விளக்கை இழுத்துச் சென்று வீட்டைக் கொளுத்தி விடும் என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்துல்லாஹ் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 3316)
விளக்கை அணைத்து விடுங்கள் என்று மட்டும் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறி, அதற்கான காரணம் எதையும் கூறாமல் இருந்தால் எந்த விளக்கையும் நாம் இரவில் அணைக்க வேண்டும் என்றே புரிந்து கொள்ள வேண்டும். மின் விளக்குகளைக் கூட தூங்கும் போது அணைத்தாக வேண்டும் என்ற முடிவுக்கு நாம் வருவோம்.ஆனால் எலிகள் இழுத்துச் சென்று வீடுகளைக் கொளுத்தி விடும் என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இதற்கான காரணத்தையும் கூறுகிறார்கள். அதாவது எலிகள் இழுத்துச் செல்வதால் வீடுகள் தீப்பற்றி விடும் என்பதே இத்தடைக்குக் காரணம்.
எண்ணெய் ஊற்றி எரிக்கும் விளக்குகளால் தான் இது போன்ற நிலைமை ஏற்படும். மின் விளக்குகளால் இது போன்ற நிலை ஏற்படாது. எனவே நைட் லாம்ப் போன்ற வெளிச்சத்தில் உறங்குவது இந்த நபிமொழிக்கு எதிரானதாக ஆகாது.இது போல் தான் நபிகள் நாயகம் அவர்கள் மூன்று நாட்கள் மட்டும் ஜமாஅத்தாகத் தொழுது விட்டுப் பின்னர் ஜமாஅத்தை விட்டதற்கு ஒரு காரணத்தைக் கூறுகிறார்கள்.
இரவுத் தொழுகையில் மக்கள் காட்டும் பேரார்வம் காரணமாக இறைவன் இத்தொழுகையை முஸ்லிம்கள் மீது கடமையாக்கி விடுவானோ என்ற அச்சத்தின் காரணமாகவே தொழுகை நடத்த வரவில்லை என்பதே அந்தக் காரணம்.எந்த ஒரு காரியமும் கடமையாவது என்றால் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வழியாகத் தான் இறைவன் கடமையாக்குவான். நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இறுதி நபி என்பதால் அவர்களுக்குப் பின்னர் எதுவும் கடமையாக முடியாது.நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காலத்துக்குப் பின் இரவுத் தொழுகையில் மக்கள் எவ்வளவு தான் ஆர்வம் காட்டினாலும் அத்தொழுகை கடமையாகவே போவதில்லை. நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எதற்காக அஞ்சி ஜமாஅத் தொழுகை நடத்த வரவில்லையோ அந்த அச்சம் அவர்களின் மரணத்திற்குப் பின் இல்லாததால் இரவுத் தொழுகையை ஜமாஅத்தாகத் தொழுவதற்குத் தடையேதும் இல்லை என்பதே சரியான கருத்தாகும்.
   வீடுகளில் தொழுவதே சிறந்தது  
பள்ளிவாசல்களில் ஜமாஅத்தாகத் தொழ அனுமதி இருந்தாலும் வீடுகளில் தொழுவதே சிறந்தது என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அறிவுரை கூறியுள்ளார்கள்.நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ரமளான் மாதத்தில் பாய்களால் ஒரு அறையைத் தயார் செய்தார்கள். அதில் சில இரவுகள் தொழுதார்கள். அவர்களின் தோழர்களில் சிலர் அவர்களைப் பின்பற்றித் தொழுதார்கள். இதை அறிந்த நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வீட்டிலேயே அமர்ந்து கொண்டார்கள். பின்னர் மக்களிடம் வந்து, 'உங்கள் செய்கையை நான் அறிந்திருக்கிறேன். மக்களே! உங்கள் வீடுகளிலேயே தொழுங்கள். ஏனெனில் கடமையான தொழுகை தவிர மற்ற தொழுகைகளை ஒருவர் தனது வீட்டில் தொழுவதே சிறந்தது' என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: ஸைத் பின் ஸாபித் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 731)

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

1.கணவனைக் கவரும் வழிகள் 40

மண்ணறை வேதனை 001

பத்ருப் போர் உணர்த்தும் பாடமும் படிப்பினைகளும்!