ரமலானும் அந்த நாட்களும்


  இஸ்லாமிய  சகோதரிகளுக்காகவே இந்தக் கட்டுரை
 அஸ் ஸலாமு அலைக்கும் நஸீமா எப்படி இருக்கே…..
வ அலைக்கும் அஸ் ஸலாம் பர்வீன்…. ஏதோ இருக்கேண்டீ…. நீ சொல்லு….
என்ன நஸீம்… ரமலான் மாசம்… கையில் பிடிக்க முடியாத குறையா பிஸியா இருப்பே… இப்ப என்ன சுரத்தே இல்லாம பேசறே??
இல்லடீ…. ரெண்டு நாளா நோன்பில்லை… அதான் டல்லா இருக்கேன்…. நோன்பில்லைன்னா என்னதான் செய்யறதுன்னு தெரியலை…. போரடிக்குது….
நஸீமாவின் இடத்தை நம்மில் பலரும் கடக்க வேண்டி இருக்கிறது. மாதம்தோறும் வரும் உதிரப்போக்கினாலோ அல்லது பிரசவத்திற்கு பின் வரும் உதிரப்போக்கினாலோ ரமலானை, அந்த ஆர்வத்துடனும், மகிழ்ச்சியுடனும், வேகத்துடனும் கடக்க இயலாமல் போகிறது. ஆனால் வருத்தப்பட்டு இந்த மாதத்தை நாம் விட்டு விடலாமா? அதன் ரஹ்மத்தை1, பரக்கத்தை2, அதில் கிடைக்கும் அளவிலா நன்மைகளை?????????????? தொழுக முடியாத நிலையில் என்ன இபாதத்3 செய்து விட முடியும் என்று நினைக்கும் சகோதரிகளுக்காகவே இந்தக் கட்டுரை. இன்ஷா அல்லாஹ் இதன் மூலம் பல சகோதரிகள் பயன் பெறக்கூடும் என்னும் நிய்யத்துடன், பிஸ்மில்லாஹ்…. :)
முதலில் ஒன்று தெரிந்து கொள்ளுங்கள் சகோதரிகளே… எப்படி அல்லாஹ் கட்டளையிட்ட ஐவேளைத் தொழுகையை தொழுவதிலும், நோன்பு நோற்பதிலும், ஸகாத்4 தருவதிலும் நமக்கு கூலிகள் உண்டோ… அதே போன்றுதான், அல்லாஹ்வின் கட்டளையை மதித்து இந்த உதிரப்போக்கு காலங்களில் நாம் தொழுகாமல் இருப்பதற்கும் கூலி கிடைக்கிறது. ஆம், அல்லாஹ்வின் கட்டளையை பின்பற்றித்தான் நம் தொழுகையை விட்டிருக்கிறோம் அல்லவா…. எனவே அதுவும் ஓர் இபாதத்தே…. எனவே முதலில் அந்தக் கவலையிலிருந்து மீண்டெழுங்கள்.
இரண்டாவது, இது தீண்டாமை போன்றதொரு கொடிய நோயோ, தீட்டோ அல்ல. மாறாக, தஹாரா என்னும் தூய நிலையை வராத ஒரு இயற்கை/நிலை மட்டுமே. எவ்வாறு ‘ஜனாபா5’ நிலையை அடைந்தால் ஆண், பெண் இருவருக்குமே ‘தூய்மை’ கட்டாயமாக்கப்பட்டுள்ளதோ அதே போல் இந்த நிலையும் வெளிப்புற அசுத்தமே தவிர அல்லாஹ்வின் முன் நிற்கக்கூடியவரின் அகத்தூய்மையை கேள்விக்குறியாக்கும் தீட்டல்ல. இதனையே அன்னை ஆயிஷா (ரலி) அவர்களின் ஓர் ஹதீஸ்6சில் குறிப்பிட்டுள்ளார்.
‘எனக்கு மாதவிடாய் ஏற்பட்டிருக்கும்போது நபி(ஸல்) அவர்கள் என்னுடைய மடியில் சாய்ந்து கொண்டு குர்ஆனை ஓதும் வழக்கமுடையவர்களாக இருந்தார்கள்” என ஆயிஷா(ரலி) அறிவி த்தார். (புகாரி 1:6:297)
தீட்டாக இருந்திருந்தால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இத்தகைய நிலையில் அன்னையின் மடியில் தலை வைத்து குர்’ஆன் ஓத செய்திருப்பார்களா?
உடலாலும் மனதாலும் தளர்ந்து போயிருக்கும் நம்மை கஷ்டப்படுத்தாமல் இபாதத்தை இலகுவாக்கவே அல்லாஹ் தந்த பரிசு என்பதை நினைவில் வையுங்கள். அதுவும் விட்டுப்போயிருக்கும் நோன்பை மட்டுமே நமக்கு மீண்டும் பிடிக்க கட்டளையுள்ளது. விட்டுப்போன தொழுகைகளையல்ல. அதையும் யோசித்துப் பாருங்கள். மார்க்கத்தை நமக்காக எத்தனை இலகுவாக்கி தந்துள்ளான் நம் இறைவன் என்பது புரியும். அல்லாஹு அக்பர்.
எல்லாம் வல்ல இறைவன் தன் திருமறையில் கூறி இருப்பது போல, அனைத்து பொருட்களுக்கும் ஒரு குறிப்பிட்ட வரைமுறை உண்டு, ஒரு ஒழுங்கு உண்டு, அது போல நமக்கும் வைத்துள்ளான். எப்படி சூரியனுக்கும் சந்திரனுக்கும் அததற்கான ஆர்பிட் / வழி உள்ளதோ அதே போல பெண்களுக்கும் இந்த குறிப்பிட்ட காலத்தை ஒரு ஒழுங்காக அமைத்துள்ளான்.
(உஹதுப் போரில்) உங்களுக்கு ஒரு காயம் ஏற்பட்டது என்றால் அதே போன்று அக்கூட்டத்தினருக்கும் (பத்ரு போரில்) காயம் ஏற்பட்டுள்ளது. அத்தகைய (சோதனைக்) காலங்களை மனிதர்களிடையே நாமே மாறி மாறி வரச்செய்கிறோம். இதற்குக்காரணம் நம்பிக்கை கொன்டோரை அல்லாஹ் அறிவதற்கும் உங்களில் உயிர்தியாகம் செய்வோரை உருவாக்குவதற்குமே ஆகும். அல்லாஹ் அநியாயம் செய்வோரை நேசிப்பதில்லை.(ஆலெ இம்ரான்:140)
இன்னும் ஒரு விஷயம் உற்று நோக்கினால் புரிபடும். அது ரமதானை நாம் தராவீஹ்7 + தொழுகை + குர்’ஆன் என்னும் மூன்று விஷயங்களுக்குள் மட்டும் கட்டுப்படுத்தி வைத்திருப்பதை. தொழுகை இல்லாதபோதுதான் மற்ற விஷயங்களைப் பற்றி நமக்கு தெரியவும் வருகிறது, அதன் மேலும் நம் ஃபோகஸை கொண்டு போக முடிகிறது. உதாரணத்திற்கு
“என்மீது அதிகமாக ஸலவாத்தை ஓதுபவர் கியாமத்து நாளில் என்னை அதிகம் நெருங்கியிருப்பார்! என்று நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஉமாமா (ரலி) அறிவித்துள்ளார்.”
என்னும் ஹதீஸ்சை நினைத்துப் பாருங்கள். எந்தளவிற்கு நாம் ஸலவாத்8தை நினைக்கிறோம் அல்லது ஓதுகின்றோம்?? தொழுகையில் அத்தஹியாத்9திற்கு பிறகு ஓதுவதோடு பலர் நிறுத்திக் கொள்கிறோம். அதன் மகத்தான கூலியை மேலே படித்துப் பாருங்கள்…….
அதே போல்தான் நோன்பாளிகளுக்கு உணவளிப்பதும், திக்ரு செய்வதும், து’ஆ செய்வதும்.
‘எவர் ஒருவரை நோன்பு திறக்க வைப்பாரோ அவருக்கு அந்த நோன்பாளிக்குக் கிடைக்கும் கூலியைப் போன்றே வழங்கப்படும். அவரது கூலியில் எந்த ஒன்றும் குறைக்கப்பட மாட்டாது’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அஹ்மத், திர்மிதி)
“து’ஆ என்பது வணக்க வழிபாட்டின் சாராம்சமாகும்.” (அஹ்மத், திர்மிதி, ஹஸன் ஸஹீஹ்)
(நபியே!) என் அடியார்கள் என்னைப்பற்றி உம்மிடம் கேட்டால்; “நிச்சயமாக நான் சமீபமாகவே இருக்கிறேன், பிரார்த்தனை செய்பவரின் பிரார்த்தனைக்கு அவர் பிரார்த்தித்தால் விடையளிக்கிறேன்; அவர்கள் என்னிடமே(பிரார்த்தித்துக்) கேட்கட்டும்; என்னையே நம்பட்டும். அப்பொழுது அவர்கள் நேர்வழியை அடைவார்கள்” என்று கூறுவீராக. (பகரா 2:185)
அல்லாஹ் எந்த இபாதத்தின் கூலியையும் குறைத்துக் கொடுப்பவனல்ல. ஒவ்வொரு ஆன்மாவும் அது செய்த நன்மைக்கான கூலியை வழங்குவேன் என்று வாக்களித்துள்ளான். அதுவும் அணுவளவும் குறையாமல். இன்னும் குர்’ஆனை திலாவத்தாக மட்டும் அல்லாமல் மனனம் செய்யவோ, கற்கவோ, கற்றுக்கொடுக்கவோ கூட செய்யலாம். வீட்டிலுள்ள பிள்ளைகளுக்கு புதிதாக ஒரு சூறா / குர்’ஆனின் அத்தியாயம் கற்றுக்கொடுக்கலாம். அல்லது நீங்களே மனனம் செய்யலாம்.
இன்னும் ஈஈஈஈஸியான வழி, அவரவர் செல்ஃபோன் மூலமாகவோ, மடிக்கணிணி மூலமாகவோ, அல்லது டேப் ரிக்கார்டர், ஆடியோ சிஸ்டம் கொண்டோ எத்தனை முறை வேண்டுமானாலும் கேளுங்கள், மகிழுங்கள், மனனம் செய்யுங்கள். அல்லது மனனம் செய்து மறந்து போன சூறா எனில் அதை மீண்டும் சரி செய்து கொள்ளுங்கள். மாஷா அல்லாஹ்…. நினைத்துப் பாருங்கள், தொழும் நிலையில் இருக்கும்போது இத்தனை விதத்தையும் நாம் எண்ணிப்பார்க்கிறோமா??
தஃப்ஸீர்10 படிப்பதற்கும், படித்ததை பகிர்வதற்கும், அதற்கான கூலிகளும் உண்டு. எத்தனை விதமான தஃப்ஸீர்கள் உள்ளன. ஒவ்வொன்றிலும் எத்தனை படிப்பினைகள் உள்ளன… எத்தனை எத்தனை புதிய செய்திகளை / ஹதீத்துக்களை / ரிவாயத்துக்களை அறிந்து கொள்ள முடிகிறது??? அதை பகிர்வதிலும் கிடைக்கும் நன்மையை நானோ நீங்களோ அளக்க முடியுமா??
எனவே இந்த காலத்தை (ஹைல் / நிஃபாஸ்) துவண்டு போகும் காலமாக அன்றி, நமக்கு ஒரு இடைவேளை தரப்பட்டுள்ளது, அதுவும் அல்லாஹ்விடமிருந்து, அதை மனதார ஏற்றுக்கொள்வதிலும் நமக்கு கூலியுண்டு என்பதை நினைவில் வையுங்கள். தொழுகையும், குர்’ஆன் ஓதுவதும் மட்டுமே இபாதத்தல்ல என்பதை புரிந்து கொள்ளவும் ஏனைய அமல்களிலும் திக்ரையும், இறையச்சத்தையும் கொண்டு வர வேண்டும் என்பதை நமக்கு நாமே நினைவுபடுத்திக் கொள்ளவும் இந்த காலத்தை ஒதுக்குங்கள்.
இன்ஷா அல்லாஹ், இனி நடைமுறையில் செய்யக்கூடிய, நற்கூலியை பெற்றுத்தரும் செயல்களை ஒரு சேர பார்ப்போம்.
நோன்பாளிகளுக்கு உணவு தயார் செய்யவும், பரிமாறவும், இஃப்தார் குழுக்களிலும் பங்கு பெறுங்கள்.
இஃப்தார் முடிந்த பின் மஸ்ஜிதில் சுத்தப்படுத்தும் வேலையில் பங்கெடுத்துக் கொள்ளுங்கள்.

தராவீஹ் தொழுக வரும் தாய்மார்களின் குழந்தைகளை (Baby Care) கவனித்துக்கொள்ளுங்கள். அதனால் எவ்வளவு நன்மை யோசியுங்கள். குழந்தையின் தாய்மார் மட்டுமல்ல. இன்னும் மற்றவர்களும் சிரமம் இன்றி தொழுகையில் ஒன்றி தொழுக முடியும். அதற்கான கூலியும்….மாஷா அல்லாஹ் :) )
இது வரை மனனம் செய்யாத சூறாக்கள், து’ஆக்களை மனனம் செய்யுங்கள். 
வீட்டிலுள்ள வயதானோருக்கு (எழுத படிக்க இயலாமல் இருப்பவர்களுக்கு) மற்றும் குழந்தைகளுக்கு சூறாக்களையும், து’ஆக்களையும் கற்றுக் கொடுங்கள். தஃப்சீர் உரக்க படித்துக் காட்டுங்கள்.
உங்கள் வீட்டிலுள்ள / தெருவில் / அணுகக் கூடிய அருகாமையில் உள்ள நோன்பு வைக்கும் வயதானோருக்கு / ஏழைகளுக்கு / சின்னஞ்சிறு பிள்ளைகளுக்கு / புதிதாய் இஸ்லாத்தை ஏற்றவர்களுக்கு உணவுக்கும் / மற்ற தேவைகளுக்கும் உதவுங்கள்.
“யார் தன் சகோதரனின்தேவையை நிறைவேற்றுகிறாரோ அவரது தேவையை அல்லாஹ் நிறைவேற்றுகிறான்.”  அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி). நூல்: புகாரீ 2262, முஸ்லிம்
(உங்களின் வீட்டுக்கு இஃப்தாருக்கு அழைத்துப்பாருங்களேன்… இன்னும் அதிகமான மகிழ்ச்சி, கூலி மாஷா அல்லாஹ்)
நிஃபாஸில் இருக்கும் தாய்மார்களே… உங்கள் குழந்தைக்கு பாலூட்டும் ஒவ்வொரு முறையும்(மற்ற எல்லா வேளைகளிலும் கூட:) ) ஒரு சூறாவோ/து’ஆவோ/திக்ரோ அதிகமதிகம் ஓதுங்கள். பக்கத்தில் ஒரு ஆடியோ பிளேயர் வைத்து குர்’ஆனோ / தஃப்ஸீரோ ஒலிக்க வையுங்கள். உங்கள் மேலும், இன்ஷாஅல்லாஹ் உங்களின் குழந்தை மேலும் அதன் எஃபெக்ட்டை உணர முடியும் (இது சொந்த அனுபவமே….)
அதிகமதிகம் திக்ரு செய்யுங்கள். இதுவரை மனனம் செய்யாத காலை மற்றும் மாலை திக்ருக்களை மனனம் செய்யுங்கள். ஃபஜ்ரிலும் அஸ்ரிலும் மற்றவர்கள் தொழும்போது நீங்களும் அமர்ந்து அந்தந்த வேளைகளுக்கான திக்ருக்களை ஓதுங்கள்.
இரவில் தஹஜ்ஜுத் நேரத்தில் எழுந்து, உள்ளம் ஒன்றி, கண்ணீர் மல்க து’ஆ கேளுங்கள். து’ஆவிற்கு முன்னும் பின்னும் திக்ரையும், ஸலவாத்தையும் அதிகப்படுத்துங்கள்.
வீட்டில் பிரிண்டர் / சிடி ரைட்டர் இருந்தால் இலவசமாக து’ஆக்கள் / திக்ருக்களை பிரிண்ட் செய்தோ / சிடியில் காப்பி செய்தோ எத்தனை பேருக்கு இயலுமோ பகிருங்கள். (இதை அச்சிட்டது / காப்பி செய்தது…ஜனாப் / ஹாஜி/இன்னாரின் ஹக்கில் து’ஆ—- என்னும் போஸ்டரெல்லாம் அடிக்காமல் இன்ஷா அல்லாஹ்…. :) ) )
தஜ்வீத் சரி செய்து கொள்ளவும், அதன் சட்டங்களை கற்றுக்கொள்ளவும், கற்றுக்கொடுக்கவும், தகவல்களை / பாடங்களை பகிர்ந்து கொள்ளவும் நேரம் ஒதுக்குங்கள்.
அஸ்மா உல் ஹுஸ்னாவை மனனம் செய்யுங்கள். அதற்கான கூலியும் உண்டு…கூடவே உங்களின் து’ஆக்களின் போது அல்லாஹ்வின் எந்தப்பெயரை உபயோகிக்கலாம் என்பது தெள்ளென விளங்கும்…. 
“அல்லாஹ்வுக்கு 99 திருநாமங்கள் உள்ளன. யார் அவற்றை மனனமிட்டுக்கொள்கிறாரோ அவர் சுவனம் நுழைவார்!” என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி 6410, முஸ்லிம் 2677) இன்னும் அதிகமாகவும் து’ஆவில் ஒன்ற வைக்கும்.
ஈத் பெருநாளைக்கான ஷாப்பிங்கையெல்லாம் இந்த நேரங்களில் வைத்துக் கொண்டால் தொழும் நிலை கிடைக்கும்போது அதைப்பற்றிய கவலை இருக்காது.
இன்னும் வேறு எந்த விதத்தில் நற்கூலி பெறலாம் என்று உங்களை நீங்களே கேள்வி கேட்டுக்கொண்டே இருங்கள்…. அதுவே உங்களுக்கு இன்னும் பல வழிகளைக் காட்டும் இன்ஷா அல்லாஹ். மனித மனம் எப்படிப்பட்டதெனில், ஒரு கதவு மூடப்படும்போதுதான் மற்ற வழிகளை தேட ஆரம்பிக்கும் :) 
மிக முக்கியமாக, ஹலால்11-ஆன அமல்களை செய்வதை விடவும், ஹராம்12-ஆன செய்கைகளிலிருந்து நம்மை காத்துக் கொள்வதே மிக மிக முக்கியமானது, மேன்மையானது. எனவே புறம் பேசுவதை விட்டும், அவதூறு சொல்வதை விட்டும், பொய்யிலிருந்தும், வீண் பேச்சுக்களிலிருந்தும், நேரத்தை வீணாக்கும் செயல்களிலிருந்தும் காத்துக்கொள்ளுங்கள். இந்த காலமானது உங்களை அல்லாஹ்விடமிருந்து தூரமாக்குவதில்லை, உங்களின் அமல்களில் குறை வைப்பதில்லை என்பதையும் ஆனால் வீண் செயல்களால் குறையேற்படக்கூடும் என்பதையும் நினைவில் வையுங்கள்.
இன்ஷா அல்லாஹ் இந்த இடைவெளியானது இன்னும் அதிக ஈர்ப்புடனும், சக்தியுடனும், பலமான ஈமானுடனும் உங்களை தயார் செய்கிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள். எனவே மகிழ்ச்சியுடனும், ஒவ்வொரு அமலுக்கும் கூலி இருப்பதில் நம்பிக்கை கொண்டும் களத்தில் இறங்குங்கள்.
…அல்லாஹ் உங்களுக்கு இலகுவானதை நாடுகிறானே தவிர, உங்களுக்கு சிரமமானதை அவன் நாடவில்லை; குறிப்பிட்ட நாட்கள் (நோன்பில் விடுபட்டுப் போனதைப்) பூர்த்தி செய்யவும், உங்களுக்கு நேர்வழி காட்டியதற்காக அல்லாஹ்வின் மகத்துவத்தை நீங்கள் போற்றி நன்றி செலுத்துவதற்காகவுமே (அல்லாஹ் இதன் மூலம் நாடுகிறான்)… (2:185)
அகராதி:
1. ரஹ்மத்- பேரளுள்
2. பரக்கத்- அபிவிருத்தி
3. இபாதத்- இறைவணக்க வழிபாடு
4. ஜகாத் – ஏழைகளுக்கு வழங்கப்படுவதற்கான வரி / தூய்மையாக்குதல் என்னும் பொருளும் உண்டு
5. ஜனாபா- பெருந்தொடக்கு-சிறு தொடக்கு உடையவர்
6. ஹதீஸ் – நபிமொழி
7. தராவீஹ் – ரமதான் மாதத்தில் மஸ்ஜிதில் தொழும் இரவு நேர தொழுகை
8. ஸலவாத்– நபிகள் நாயகம் அவர்களின் மீது அல்லாஹ்வின் ரஹ்மத்தும், பரக்கத்தும் இறங்க வேண்டி ஓதப்படுவது
9. அத்தஹியாத்து – தொழுகையின் கடைசி ரக்’அத்தில் ‘இருத்தல்’ நிலையில் ஓதுவது
10. தஃப்ஸீர் – திருக் குர்’ஆனின் பொருளுரை
11. ஹலால் – இஸ்லாமிய சட்டப்படி ஆகுமாக்கப்பட்டது.
12. ஹராம் — இஸ்லாமிய சட்டப்படி அனுமதிக்கப்படாதது.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

1.கணவனைக் கவரும் வழிகள் 40

பத்ருப் போர் உணர்த்தும் பாடமும் படிப்பினைகளும்!

மண்ணறை வேதனை 001