இஸ்லாம் கூறும் அமானிதம்
மனைவியின் நகைகளையும் சொத்துக்களையும் விற்று, கடன் வாங்கிக் கொடுத்தப் பணத்தை,வெளிநாட்டிற்கு
அனுப்புவதாகக் கூறி வாயில் போட்டுக் கொள்ளும் மோசக்காரர்கள் கொஞ்சம் கூட இறைவனின்
பயம் இல்லாமல் தலை நிமிர்ந்து இந்த உலகத்தில் நடக்கிறார்கள்.
வாங்கிய கடனை திருப்பித் தராமல் ஏப்பம்
விட்டு விட்டு ஓடி ஒளியும் கல் நெஞ்சக்காரர்களை கணக்கில் அடக்கி விட முடியாது.
நிலத்தை விற்பதாகக் கூறி, பொய்யான பத்திரத்தைக் காட்டி ஏமாற்றும்
நெஞ்சில் ஈரமில்லாத ஆசாமிகள் அலைகடலெனத் திரண்டு விட்டார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்
கூறினார்கள்: நயவஞ்சகனின் அடையாளம்
மூன்று. அவன் பேசினால் பொய் பேசுவான். வாக்களித்தால் மாறு செய்வான். நம்பப்பட்டால்
மோசடி செய்வான்.
அறிவிப்பவர்:
அபூஹுரைரா (ரலி)நூல்கள்: புகாரீ (33), முஸ்லிம் (89)
இன்றைக்கு நாம் கண்கூடாகப் பார்க்கும் இந்தக்
கயவர்களைப் பற்றி நபி (ஸல்) அவர்கள் அன்றைக்கே எச்சரித்துள்ளார்கள்.
ü
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நிச்சயமாக உங்களுக்குப் பின் ஒரு
சமுதாயத்தார் (வர) இருக்கிறார்கள். அவர்கள் நம்பிக்கை மோசடி செய்வார்கள்.
அவர்களிடம் எதையும் நம்பி ஒப்படைக்கப்படாது. அவர்கள் சாட்சியாக இருக்கத் தாமாகவே
முன் வருவார்கள். ஆனால் சாட்சியம் அளிக்கும் படி அவர்களை யாரும் கேட்க
மாட்டார்கள். அவர்கள் நேர்ச்சை செய்வார்கள். ஆனால் அதை நிறைவேற்ற மாட்டார்கள்.
அவர்களிடையே பருமனாயிருக்கும் (தொந்தி விழும்) நிலை தோன்றும்.
அறிவிப்பவர்: இம்ரான் பின் ஹுசைன் (ரலி)நூல்:
புகாரி (2651)
ü
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்
கூறினார்கள்:
"விரைவில் ஒரு காலம் வரும். அப்போது
மக்களில் சிறந்தவர்கள் (இந்த உலகை விட்டும்) அகற்றப்பட்டு இழிவானவர்கள் மட்டும் எஞ்சியிருப்பார்கள்.
அவர்களுடைய உடன்படிக்கைகளும் அமானிதங்களும் (அவர்களின் அக்கரையின்மையால்)
சீர்கெட்டு, கருத்து வேறுபாடும் கொள்வார்கள்'' என்று கூறி, நபி
(ஸல்) அவர்கள் தம்முடைய விரல்களைக் கோர்த்து, "அவர்கள் இவ்வாறு (நல்லவருக்கும் தீயவருக்கும்
வித்தியாசம் இல்லாமல்) இருப்பார்கள்'' என்று
கூறினார்கள். அப்போது மக்கள், "அல்லாஹ்வின் தூதரே! அப்போது நாங்கள் என்ன
செய்ய வேண்டும்?'' என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், "நீங்கள் (எதை உண்மை என்று) அறிந்துள்ளீர்களோ அதை எடுத்துக் கொண்டு, (எதை
பொய்யென்று) மறுக்கிறீர்களோ அதை விட்டு விடுங்கள். பொதுமக்களின் காரியங்களை விட்டு
விட்டு உங்களுக்கு நெருங்கியவர்களின் விஷயத்தில் ஈடுபடுங்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் பின்
அல்ஆஸ் (ரலி)நூல்: அபூதாவூத் (3779)
மேற்கண்ட ஹதீஸ் இன்றைய காலத்தைச் சுட்டிக்
காட்டும் விதமாக உள்ளது. நபி (ஸல்) அவர்கள் கூறியதைப் போல் பார்ப்பதற்கு நல்லவனைப்
போல் தெரிகிறான். வாயைத் திறந்தால் இறையச்சம் மிகுந்தவனைப் போல் பேசுகிறான். ஆனால்
தன்னுடைய காரியம் முடிந்தவுடன் அமானிதத்தைப் பேண மறந்து விடுகிறான்.
உண்மையில் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும்
ஏற்றுக் கொண்ட எந்த ஒரு முஸ்லிமும் அமானிதம் சம்பந்தமாக மார்க்கம் சொன்ன
அறிவுரைகளைப் படித்திருந்தால் எப்பாடு பட்டாவது அமானிதத்தை அதற்குரியவர்களிடம்
ஒப்படைத்து விடுவான்.
இயற்கையாகவே அல்லாஹ் மனிதர்களின் உள்ளங்களில்
அமானிதத்தைப் பேணும் பண்பை படைத்திருக்கிறான். குர்ஆனும் நபிவழியும் வந்த போது
ஏற்கனவே இருந்த இந்தப் பண்பை மேலும் உறுதிப் படுத்தியது. எனவே தான் முந்தைய
காலங்களில் மக்களிடையே நாணயம் அதிகமாகக் காணப்பட்டது. இதற்குப் பின்வரும் சம்பவம்
ஆதாரமாக உள்ளது.
ü
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:(பனூ
இஸ்ராயீலில்) ஒரு மனிதர் இன்னொரு மனிதரிடமிருந்து அவருக்கிருந்த அசையாச் சொத்து
(நிலம்) ஒன்றை வாங்கினார். அந்த நிலத்தை வாங்கிய மனிதர் தனது நிலத்தில் தங்கம்
நிரம்பிய ஜாடி ஒன்றைக் கண்டெடுத்தார். நிலத்தை வாங்கியவர் (நிலத்தை) விற்றவரிடம்
"என்னிடமிருந்து உன் தங்கத்தை எடுத்துக் கொள். (ஏனெனில்) உன்னிடமிருந்து
நிலத்தைத் தான் நான் வாங்கினேன். இந்தத் தங்கத்தை வாங்கவில்லை'' என்று கூறினார். நிலத்தின் (முந்தைய)
உரிமையாளர் "நிலத்தை அதிலிருப்பவற்றுடன் சேர்த்துத் தான் நான் உனக்கு
விற்றேன். (ஆகவே இந்தத் தங்கம் உனக்குத் தான் உரியது)'' என்று கூறினார். (இருவருக்குமிடையே தகராறு
முற்றி) மற்றொரு மனிதரிடம் தீர்ப்பு கேட்டுச் சென்றனர். அவர்கள் இருவரும்
தீர்ப்புக் கேட்டுச் சென்ற அந்த மனிதர், "உங்கள் இருவருக்கும் குழந்தை இருக்கிறதா?'' என்று கேட்டார். அவ்விருவரில் ஒருவர், "எனக்குப் பையன் ஒருவன் இருக்கிறான்'' என்று
சொன்னார். மற்றொருவர், "எனக்குப் பெண் பிள்ளை இருக்கிறது'' என்று சொன்னார். தீர்ப்புச் சொல்பவர், "அந்தப் பையனுக்கு அந்தச் சிறுமியை மணமுடித்து வையுங்கள். அவர்கள்
இருவருக்காகவும் அதிலிருந்து செலவழியுங்கள். தான தர்மம் செய்யுங்கள்'' எனத் தீர்ப்பளித்தார்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)நூல்: புகாரி (3472)
ஆனால் மனிதர்களின் மோசமான நடவடிக்கைகளால்
இந்தக் குணம் நாளடைவில் இருந்த இடம் தெரியாமல் ஆகி விட்டது. இக்கருத்தையே
பின்வரும் ஹதீஸ் உணர்த்துகிறது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்கு
(நம்பகத்தன்மை தொடர்பாக) இரு செய்திகளைக் கூறினார்கள். அவற்றில் ஒன்றை நான்
(வாழ்நாளிலேயே) பார்த்து விட்டேன். மற்றொன்றை எதிர்பார்த்திருக்கிறேன். ஒரு செய்தி
யாதெனில் (இயற்கையாகவே) மனிதர்களின் ஆழ்மனதில் (அமானத் எனும்) நம்பகத்தன்மை இடம்
பிடித்தது. பின்னர் அவர்கள் குர்ஆனிலிருந்தும் (அதை) அறிந்து கொண்டார்கள். பிறகு
சுன்னாவிலிருந்தும் (அதை) அறிந்து கொண்டார்கள். (நபியவர்கள் கூறிய) இதை நான்
பார்த்து விட்டேன்.
இரண்டாவது செய்தி நம்பகத்தன்மை அகற்றப்படுவது
தொடர்பானதாகும். மனிதன் ஒருமுறை உறங்குவான். (உறக்கத்திலேயே) அவனது
உள்ளத்திலிருந்து நம்பகத் தன்மை (சிறிது) கைப்பற்றப்படும். அதையடுத்து (அது
அகற்றப்பட்டதன்) அடையாளம் சிறு (கரும்) புள்ளி அளவுக்கு (அவனில்) தங்கி விடும்.
பிறகு மீண்டும் ஒருமுறை அவன் உறங்குவான். அப்போது (மறுபடியும்) அது
கைப்பற்றப்படும். இம்முறை அ(து அகற்றப்பட்ட)தன் அடையாளம் காய்ப்பு அளவுக்கு (அவனில்)
நிலைத்து விடும். (இவ்வாறு முதலில் நம்பகத்தன்மை என்னும் ஒளி உள்ளத்தில்
ஏற்றப்பட்டு பிறகு சிறிது சிறிதாக அது அணைக்கப்படுவது) காலில் தீக்கங்கை உருட்டி
விட்டு அதனால் கால் கொப்பளித்து உப்பி விடுவதைப் போன்றதாகும். பார்வையில் அது
உப்பி பெரிதாகத் தெரியுமே தவிர அதனும் ஒன்றும் இருக்காது.
பின்னர் காலையில் மக்கள் தங்களிடையே
கொடுக்கல் வாங்கல் செய்து கொள்வார்கள். (ஆனால் அவர்களில்) யாருமே நம்பிக்கையைக்
காப்பாற்ற எத்தனிக்க மாட்டார்கள். "இன்னாருடைய மக்களில் நம்பிக்கையான ஒருவர்
இருக்கிறார்'' என்று (தேடிக் கண்டுபிடித்து) சொல்லப்படும்
(அளவுக்கு நம்பிக்கைக்குரியவர்கள் அரிதாகி விடுவார்கள்). மேலும் ஒருவரைப் பற்றி
"அவருடைய அறிவு தான் என்ன? அவருடைய
விவேகம் தான் என்ன? அவருடைய
வீரம் தான் என்ன?'' என்று (சிலாகித்துக்) கூறப்படும். ஆனால் அந்த
மனிதருடைய உள்ளத்தில் கடுகளவு கூட நம்பிக்கை இருக்காது.
அறிவிப்பவர்: ஹுதைஃபா (ரலி)நூல்: புகாரி (6497)
மேற்கண்ட ஹதீஸ் கூறும் நிகழ்வை இன்று
கண்கூடாகக் கண்டு வருகிறோம். ஆயிரக்கணக்கானோரில் ஒருவரைக் கூட நம்பிக்கைக்குத்
தகுந்தவராக நம்மால் காண முடியவில்லை. அல்லாஹ்விற்கும் அடியார்களுக்கும் செய்ய
வேண்டிய அமானிதங்களைப் பேணுபவர்கள் அரிதிலும் அரிதாகி விட்டார்கள். சிலர் தொழுகை, நோன்பு, ஜகாத்
போன்ற அமானிதங்களை முறையாக நிறைவேற்றுவார்கள். ஆனால் அவர்களுடைய
குடும்பவிஷயங்களிலோ அல்லது வியாபார விஷயங்களிலோ நம்பிக்கைக்குரியவராக இருக்க
மாட்டார்கள்.
கடனாக வாங்கும் தொகை, ஒரு அமானிதம். கடன் வாங்கி நிறைவேற்றாமல்
மரணித்தவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் ஜனாஸா தொழ வைக்கவில்லை. அந்தக் கடனுக்கு
யாராவது ஒருவர் பொறுப்பேற்ற பின்பு தான் தொழ வைத்தார்கள். இந்த அளவிற்கு
அமானிதத்தை ஒப்படைக்காமல் இருப்பதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வெறுத்துள்ளார்கள்.
தொழுகை நடத்துவதற்காக ஒரு ஜனாஸா கொண்டு
வரப்பட்டது. "இவர் கடனாளியா?'' என்று
நபி (ஸல்) அவர்கள் கேட்ட போது, நபித்தோழர்கள், இல்லை என்றனர். அவருக்கு நபி (ஸல்) அவர்கள்
தொழுகை நடத்தினார்கள். பிறகு மற்றொரு ஜனாஸா கொண்டு வரப்பட்டது. "இவர்
கடனாளியா?'' என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள்.
நபித்தோழர்கள், ஆம் என்றனர். நபி (ஸல்) அவர்கள்
அப்படியென்றால் உங்கள் தோழருக்கு நீங்களே தொழுகை நடத்துங்கள் என்றார்கள். அப்போது
அபூகதாதா (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதரே! இவரது கடனுக்கு நான்
பொறுப்பு!''என்று கூறியதும் அவருக்கு நபி (ஸல்) அவர்கள் தொழுகை நடத்தினார்கள்.
அறிவிப்பவர்: ஸலமா (ரலி)நூல்: புகாரி (2295)
v
அமானிதத்தை
பேணியவர் சுவர்க்கம் செல்வார்
நாம் அதிகமான நன்மைகளை சேகரித்து
வைத்திருந்தாலும் அமானிதத்தை உரியவரிடத்தில் ஒப்படைக்காவிட்டால் சொர்க்கத்திற்குச்
செல்வதற்கு அது தடைக்கல்லாகி விடும்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "பெருமை, மோசடி மற்றும் கடன் ஆகிய மூன்று விஷயங்களை
விட்டும் நீங்கிய நிலையில் உடம்பை விட்டும் உயிர் பிரியுமானால் அது சொர்க்கத்தில்
நுழைந்துவிடும்'' என்று கூறினார்கள்.அறிவிப்பவர்: சவ்பான்
(ரலி)நூல்: இப்னுமாஜா (2403)
நம்மிடத்தில் ஒப்படைக்கப்பட்ட பொருளை நம்மால்
முடிந்த அளவு பாதுகாக்க வேண்டும். நமது முயற்சிக்குப் பின்னால் அதை பாதுகாக்கும்
படி இறைவனிடத்தில் பிரார்த்திக்க வேண்டும். நம்முடைய சொந்தப் பொருட்களை
பாதுகாப்பதற்காக இறைவனிடத்தில் மன்றாடி வேண்டுகிறோம். அமானிதம் நம்மிடம் இருக்கும்
வரை அதுவும் நமது சொந்தப் பொருளைப் போன்று தான். நபி (ஸல்) அவர்கள் பிறருக்காகப்
பல பிரார்த்தனைகளைச் செய்துள்ளார்கள். அதில் ஒன்று பிறருடைய அமானிதம் பாதுகாப்பாக
இருப்பதற்காக அல்லாஹ்விடம் அவர்கள் பிரார்த்திப்பார்கள். அமானிதம் பாதுகாக்கப்படவில்லையானால்
அதனால் அவர்களுக்கு மிகப் பெரிய இடைஞ்சல்கள் ஏற்படும் என்பதால் நபியவர்கள் இந்தப்
பிரார்த்தனையைச் செய்துள்ளார்கள்.
என்னுடைய தந்தை அப்துல்லாஹ் பின் உமர்
அவர்கள் பிரயாணம் செய்யும் மனிதரிடத்தில் வந்தால் அவரிடத்தில் (பின்வருமாறு)
கூறுவார்கள். "அருகில் வாருங்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களை
வழியனுப்பி வைத்ததைப் போல் நான் உங்களை அனுப்பி வைக்கிறேன். நபி (ஸல்) அவர்கள்
(ஒருவரை வழியனுப்பும் போது) உங்களுடைய மார்க்கத்தையும் அமானிதத்தையும் இறுதி
செயல்களையும் பாதுகாக்க நான் அல்லாஹ்விடம் வேண்டுகிறேன் என்று
கூறுவார்கள்.அறிவிப்பவர்: சாலிம் பின் அப்தில்லாஹ்
நூல்: அஹ்மத் (4295)
v
அழிவுகளுக்குக் காரணம்
தற்காலத்தில் நம்பிக்கை மோசடி பெருகி
விட்டதால் பூகம்பங்களும் சுனாமிகளும் பெருகி விட்டன. மனிதர்கள் செய்யும் பாவச்
செயல்களால் இது போன்ற மாற்றங்கள் பல இடங்களில் இடைவிடாது தொடர்ந்து ஏற்பட்டுக்
கொண்டே இருக்கின்றன.
அழிவுகளில் எல்லாம் மிகப் பெரிய அழிவு, அதற்குப் பின்னால் எந்த உயிரினமும் ஜீவிக்க
முடியாத நிலையை உருவாக்கும் அழிவு இறுதி நாளாகும். இக்காலத்தில் வாழ்பவர்கள்
படைப்பினங்களிலேயே மிக மோசமானவர்களாக இருப்பார்கள். இப்படிப்பட்ட கொடிய நாள்
வருவதற்கு அடையாளம் அமானிதங்கள் பாழ்படுத்தப்படுவது தான். இது மாபெரும் குற்றமாக
இருப்பதினால் மக்களிடத்தில் இது பெருகும் போது உலக அழிவு ஏற்படுகிறது. அமானிதங்களை
உரிய முறையில் ஒப்படைக்காமல் ஏமாற்றுபவர்கள் பெரும் பெரும் அழிவுகளைச் சந்திக்க
வேண்டிய நிலை உருவாகும்.
ஒரு அவையில் நபி (ஸல்) அவர்கள் மக்களுக்கு
அறிவுரை வழங்கிக் கொண்டிருந்த சமயம் அவர்களிடம் நாட்டுப்புறத்து அரபி ஒருவர்
வந்தார். "மறுமை நாள் எப்போது?'' எனக்
கேட்டார். நபி (ஸல்) அவர்கள் தமது பேச்சைத் தொடர்ந்து கொண்டிருந்தார்கள். அப்போது
மக்களில் சிலர்,
"நபி (ஸல்) அவர்கள் அம்மனிதர் கூறியதை செவியுற்றனர், எனினும் அவரது இந்தக் கேள்வியை அவர்கள்
விரும்பவில்லை'' என்றனர். வேறு சிலர், "அவர்கள் அம்மனிதர் கூறியதைச் செவியுறவில்லை'' என்றனர்.
முடிவாக நபி (ஸல்) அவர்கள் தமது பேச்சை முடித்துக் கொண்டு, "மறுமை நாளைப் பற்றிக் கேட்டவர் எங்கே?'' என்று
கேட்டார்கள். உடனே (கேட்டவர்) "அல்லாஹ்வின் தூதரே, இதோ நான் தான்'' என்றார்.
அப்போது "அமானிதம் பாழ்படுத்தப் பட்டால் நீர் மறுமை நாளை எதிர்பார்க்கலாம்'' என்று கூறினார்கள். அதற்கவர், "அது எவ்வாறு பாழ்படுத்தப்படும்?'' எனக்
கேட்டார். அதற்கு, "எந்தக் காரியமாயினும் அது தகுதி
அற்றவர்களிடம் ஒப்படைக்கப்பட்டால் நீர் மறுமை நாளை எதிர்பாரும்'' என நபி (ஸல்) அவர்கள்
கூறினார்கள்அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)நூல்: புகாரி (59)
v
இறைநம்பிக்கையும் மோசடியும்
இந்த அக்கிரமங்கள் இறை நம்பிக்கை இல்லாதவர்களிடத்தில்
காணப்படுவதைப் போன்றே இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவர் களிடமும் குறைவில்லாமல் காணப்படு
கிறது. எல்லா விஷயங்களிலும் சரியாக நடந்து கொள்பவர்கள் பெரும்பாலும் பொருள்
விஷயத்தில் சறுகி விடுகிறார்கள். நாணயம் மனிதனிடம் அவசியம் இருக்க வேண்டிய பண்பு
என்பதை இந்த உலகம் உணர்ந்திருந்தாலும் இறைவனை நம்பியவர்களிடம் இப்பண்பு அவசியம்
இருக்க வேண்டும் என்பதால் அல்லாஹ் மனிதர்களுக்கு நேர்வழி காட்டியான திருமறைக்
குர்ஆனில் பல இடங்களில் அமானிதங்களைப் பேண வேண்டும் என வலியுறுத்திக் கூறுகிறான்.
உங்களில் ஒருவர் மற்றவரை நம்பினால்
நம்பப்பட்டவர் தனது நாணயத்தை நிறைவேற்றட்டும். தனது இறைவனாகிய அல்லாஹ்வை அஞ்சிக்
கொள்ளட்டும்! (அல்குர்ஆன் 2:283)
ஒரு குவியலையே நம்பி ஒப்படைத்தால் உம்மிடம்
திருப்பித் தருவோரும் வேதமுடையோரில் உள்ளனர். ஒரு தங்கக் காசை நீர் நம்பி
ஒப்படைத்தால் நிலையாய் நின்றால் தவிர உம்மிடம் திருப்பித் தராதோரும் அவர்களில்
உள்ளனர். (அல்குர்ஆன் 3:75)
அனாதைகளின் சொத்துக்களை அவர்களிடம் அளித்து
விடுங்கள்! (அவர்களின் சொத்துக்களில்) நல்லதை (உங்களிடம் உள்ள) கெட்டதற்குப்
பகரமாக மாற்றி விடாதீர்கள்! அவர்கள் சொத்துக்களை உங்கள் சொத்துக்களுடன் சேர்த்துச்
சாப்பிடாதீர்கள். (அல்குர்ஆன் 4:2)
அமானிதங்களை அதற்கு உரியோரிடம்
ஒப்படைக்குமாறும், மக்கள்
மத்தியில் தீர்ப்பளிக்கும் போது நீதியாக நீங்கள் தீர்ப்பளிக்க வேண்டும் எனவும்
அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிடுகிறான். அல்லாஹ்வின் இந்த அறிவுரை உங்களுக்கு மிகவும்
நல்லது. அல்லாஹ் செவியுறுபவனா கவும், பார்ப்பவனாகவும்
இருக்கிறான். (அல்குர்ஆன் 4:58)
இந்த வசனத்தின் இறுதியில் அல்லாஹ், தான் பார்ப்பவனாகவும் செவியுறுபவனாகவும்
இருப்பதாகச் சொல்கிறான். அமானிதங்களை ஒப்படைக்காவிட்டால் இது அல்லாஹ்விற்குத்
தெரியாமல் இருந்து விடாது. அவன் பார்ப்பதால் நிச்சயமாக மறுமையில் அதைப் பற்றி
விசாரித்துத் தக்க தண்டனையை வழங்குவான். நம்மை எச்சரிக்கை செய்யும் விதமாக இறைவன்
இவ்வாறு இறுதியில் கூறுகிறான்.
அமானிதம் யாரிடத்தில் கொடுக்கப்பட்டதோ அவர்
கொடுத்தவரிடத்தில் மறுபடியும் ஒப்படைக்கும் போது அந்தப் பொருளுக்கு எந்த வித
சேதமும் இல்லாமல் ஒப்படைக்க வேண்டும். நம்மிடம் வரும் போது அது இருந்ததைப் போலவே
கொடுக்கும் போதும் இருக்க வேண்டும்.
நம்பிக்கை கொண்டோரே! அறிந்து கொண்டே
அல்லாஹ்வுக்கும் இத் தூதருக்கும் (முஹம்மதுக்கும்) மோசடி செய்யாதீர்கள்! உங்களிடம்
நம்பி ஒப்படைக்கப்பட்டவற்றிலும் மோசடி செய்யாதீர்கள்! (அல்குர்ஆன் 8:28)
தமது அமானிதங்களையும், தமது உடன்படிக்கையையும் அவர்கள் பேணுவார்கள்.
(அல்குர்ஆன்23:8)
தன்னை ஒரு முஸ்லிமாகக் காட்டிக் கொண்டு
உள்ளத்தில் இஸ்லாத்தை வெறுப்பவனிடத்தில் இருக்கும் பண்புகளில் ஒரு பண்பு தான்
நம்பிக்கை துரோகம் செய்வது. உண்மையில் இஸ்லாத்தை நேசிப்பவனிடத்தில் நம்பிக்கை
மோசடியின் வாடையை கூடப் பார்க்க முடியாது. நம்பிக்கை மோசடிக்கும் இறை
நம்பிக்கைக்கும் வெகுதூரம். இதை நபி (ஸல்) அவர்கள் பின்வரும் ஹதீஸில்
தெளிவுபடுத்துகிறார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்
கூறினார்கள்: நயவஞ்சகனின் அடையாளம்
மூன்று. அவன் பேசினால் பொய் பேசுவான். வாக்களித்தால் மாறு செய்வான். நம்பப்பட்டால்
மோசடி செய்வான்.
அறிவிப்பவர்:
அபூஹுரைரா (ரலி)நூல்கள்: புகாரீ (33), முஸ்லிம் (89)
மேலுள்ள இந்த ஹதீஸ் இரண்டு விஷயங்களை விட்டும்
நம்மை எச்சரிக்கிறது. ஒன்று நம்மிடத்தில் நயவஞ்சகத் தன்மை இருக்கக் கூடாது.
ஏனென்றால் உலகக் காரியங்களில் ஆரம்பித்த
நயவஞ்சகத்தனம் இறுதியில் மார்க்க விஷயத்திலும் அவ்வாறு நடந்து கொள்ளும் படி நம்மை
மாற்றி விடும் என்பதால் தான்.இரண்டாவது இந்த அடையாளங்களை நமக்கு சுட்டிக்
காட்டுவதன் மூலம் இந்தப் பண்பு யாரிடத்தில் இருக்குமோ அவரிடத்தில் நம்பி நாம்
ஏமாந்து விடாமல் இருப்பதற்கு நபி (ஸல்) அவர்கள் வழிகாட்டுகிறார்கள்.
இறை நம்பிக்கையாளன் யார் என்பதைப் பற்றி நபி
(ஸல்) அவர்கள் விளக்கும் போது,மக்களுடைய பொருள் விஷயத்தில் சரியாக நடந்து
கொள்பவனே இறை நம்பிக்கையாளன் என்று கூறியுள்ளார்கள்.
மோசடி செய்பவர்கள் இஸ்லாமியப் பெயர்களை
தங்களுக்கு வைத்துக் கொண்டாலும் உண்மையில் பெருமானார் (ஸல்) அவர்கள் கூறிய
விளக்கத்தின்படி இறைநம்பிக்கையாளனாக ஆக மாட்டார்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மக்கள்
தங்களுடைய உயிரிலும் பொருட்களிலும் யாருடைய (தீமையை விட்டும்) பாதுகாப்பு அடைந்து
உள்ளார்களோ அவனே இறை நம்பிக்கையாளன் ஆவான். பாவமான காரியங்களையும் குற்றங்களையும்
எவர் வெறுத்து ஒதுக்குகிறாரோ அவரே ஹிஜ்ரத் செய்தவர் ஆவார்.
அறிவிப்பவர்: ஃபளாலா பின் உபைத் (ரலி)நூல்:
இப்னு மாஜா (3924)
ஒருவர் ஒரு பொருளை வாங்குவதற்காகக்
குறிப்பிட்ட தொகையை தன்னிடம் தந்தால் வாங்கிய விலையை விட அதிகமாகக் கூறி அவரை
ஏமாற்றிப் பிழைப்பவர்கள் பின்வரும் செய்தியை மனதில் நிலை நிறுத்த வேண்டும்.
நபி (ஸல்) அவர்கள் தனக்காக ஒரு ஆட்டை
வாங்குவதற்காக உர்வா (ரலி) அவர்களிடம் ஒரு தீனாரை (பொற்காசைக்) கொடுத்தார்கள்.
அதைக் கொண்டு அவர் இரண்டு ஆடுகளை வாங்கினார். அவ்விரண்டில் ஒன்றை அவர் ஒரு
தீனாருக்கு விற்று விட்டு, ஒரு
தீனாரையும் ஒரு ஆட்டையும் கொண்டு வந்தார். (அதைக் கண்ட) நபி (ஸல்) அவர்கள் அவரது
வியாபாரத்தில் அவருக்கு பரக்கத் (எனும் அருள் வளம்) கிடைத்திடப்
பிரார்த்தித்தார்கள். (அதன் பயனாக) அவர் மண்ணை வாங்கினாலும் அதில் இலாபமடைந்து
விடுவார் என்ற நிலையில் இருந்தார். அறிவிப்பவர்: ஷபீப் பின் கர்கதாநூல்: புகாரி
(3642)
அமானிதத்தைப் பேணுவது இறைத் தூதர்களின்
பண்பாகும். ரோம மன்னர் ஹெர்குலிஸ், நபி
(ஸல்) அவர்களைப் பற்றி விசாரித்த போது பெருமானாரின் நடத்தைகள் அவரிடம் எடுத்து
உரைக்கப்பட்டது. அதில் அமானிதத்தை முறையாக ஒப்படைப்பதும் ஒன்று. இந்தக் குணங்களை
வைத்து அவர் நபி (ஸல்) அவர்களை நல்லவர் என்றும் உண்மையாளர் என்றும் முடிவு செய்தார்.
ஒருவர் உண்மையாளரா அல்லது பொய்யரா என்று கண்டறிய அமானிதத்தைப் பேணுவது சிறந்த
அளவுகோலாகும்.
(ரோம மன்னர் ஹிராக்ளியஸ் என்னிடம் சில கேள்விகளைக் கேட்டார். அதற்கு நான்
அளித்த பதிலைக் கேட்டு விட்டு அவர் கூறியதாவது:) "உம்மிடம் "முஹம்மத்
எதையெல்லாம் கட்டளையிடுகின்றார்?' என்று
நான் கேட்டேன். அதற்கு நீர் "அவர் தொழுகையைத் தொழும்படியும், வாய்மையையும் நல்லொழுக்கத்தையும்
கடைபிடிக்கும் படியும், ஒப்பந்தத்தையும்
வாக்குறுதியையும் நிறைவேற்றும்படியும் நம்பி ஒப்படைக்கப்பட்ட அடைக்கலப் பொருளைச்
சரிவரப் பாதுகாத்துத் திரும்பத் தரும்படியும் கட்டளை இடுகிறார்' என்று சொன்னீர். இது தான் ஒரு இறைத்தூதரின்
பண்பாகும்'' என்று கூறினார்.அறிவிப்பவர்: அபூசுஃப்யான்
(ரலி)
நூல்: புகாரீ (2681)
நபி (ஸல்) அவர்கள் அமானிதத்தைப் பேணுவதைப்
போல் எவரும் பேண மாட்டார்கள் என்பது அவர்கள் காலத்தில் வாழ்ந்த யூதர்களுக்கு, தெள்ளத் தெளிவாகத் தெரிந்த ஒரு விஷயம். ஆனால்
நபி (ஸல்) அவர்களை தூதராக ஏற்றுக் கொள்ளாத காரணத்தினால் மக்கள் மத்தியில் அவரைப்
பொய்யராகச் சித்தரித்துக் காட்டுவதற்காக, "மோசடி செய்து விடுவார்' என்று உள்ளத்தில் ஒன்றை வைத்துக் கொண்டு
வெளியில் ஒன்றைப் பேசினார்கள். மோசடி செய்தார் என்று உறுதிபட சொல்லாமல் மோசடி
செய்வார் என்று யூகமாகத் தான் அவர்களால் சொல்ல முடிந்தது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குக்
கடினமான சிவப்புநிற இரு ஆடைகள் இருந்தன. அவர்கள் அமர்ந்து (பேசும் போது) வியர்வை
வெளிப்படுவதால் அந்த இரு ஆடைகளும் அவர்களுக்குக் கஷ்டத்தை அளித்தன. ஷாம்
நாட்டிலிருந்து ஒரு யூத நபருக்கு துணிகள் வந்தன.
அப்போது நான் (நபியவர்களிடம்) "தாங்கள்
அந்த யூதரிடம் ஆளனுப்பி குறுகிய காலத்தில் (பணத்தை தருவதாகக் கூறி) இரண்டு துணிகளை
வாங்கிக் கொள்ளலாமே!'' என்று
கூறினேன். நபி (ஸல்) அவர்களும் அவனிடம் ஆள் அனுப்பி (வாங்கி வரச் சொன்)னார்கள்.
அதற்கு அவன், "முஹம்மத்
என்ன நினைக்கிறார் என்று எனக்குத் தெரியும். என்னுடைய பொருளை பறித்துச் செல்லத்
தான் அவர் நாடுகிறார்'' என்று
கூறினார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நான்
அவர்களை விட அதிகம் அல்லாஹ்விற்கு அஞ்சுபவன் என்றும் அதிகம் அமானிதத்தை ஒப்படைப்
பவன் என்றும் அவர் அறிந்து கொண்டு பொய் சொல்கிறார்''என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)நூல்: திர்மிதி 1134
நமக்கெல்லாம் அழகிய முன்மாதிரியான நபி (ஸல்)
அவர்கள் அமானிதத்தைப் பேணுவதில் தலைசிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ்ந்துள்ளார்கள்
என்பதைப் பின்வரும் ஹதீஸும் தெளிவாக எடுத்துரைக்கிறது.
நபி (ஸல்) அவர்களைப் பின்பற்றி மதீனாவில்
நான் அஸர் தொழுதேன். அவர்கள் சலாம் கொடுத்ததும் மக்களைத் தாண்டிக் கொண்டு தம்
மனைவியரில் ஒருவரின் இல்லத்துக்கு வேகமாகச் சென்றார்கள். அவர்களது விரைவைக் கண்டு
மக்கள் திடுக்குற்றனர். நபி (ஸல்) அவர்கள் திரும்ப வந்து, தான் விரைவாகச் சென்றது பற்றி மக்கள்
வியப்பில் ஆழ்ந்திருப்பதைக் கண்டார்கள். "என்னிடம் இருந்த (ஜகாத் நிதியான)
வெள்ளிக் கட்டி ஒன்று நினைவுக்கு வந்தது. அது என் கவனத்தைத் திருப்பி விடுவதை நான்
விரும்பவில்லை. அதைப் பங்கீடு செய்யுமாறு கூறிவிட்டு வந்தேன்'' என்று நபி (ஸல்) அவர்கள்
கூறினார்கள்.அறிவிப்பவர்: உக்பா (ரலி)நூல்: புகாரி 851
ஜகாத்தாக வந்த வெள்ளிக்கட்டி தன்னுடைய
நினைவுக்கு வந்தவுடன் உடனே அதை பங்கு வைக்கும் படி கூறி விடுகிறார்கள். தொழுகையை
முடித்து விட்டு நிதானமாகச் சென்றாலே போதுமானது. ஆனால் நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு
செய்வதன் மூலம் நமக்கு ஒரு விஷயம் தெளிவாகின்றது.
அமானிதமாகக் கிடைத்த பொருளை தாமதப்படுத்தாமல்
உடனே ஒப்படைத்து விட வேண்டும்;இல்லையென்றால் காலமாக காலமாக அதை நிறைவேற்றும்
எண்ணம் நம்மை விட்டுச் சென்று விடும்; அல்லது
நமக்குத் தெரியாமல் வேறு யாராவது நம்முடைய பொருள் என்று விளங்கி அதை பயன்படுத்தி
விடுவார்கள். என்று நபி (ஸல்) அவர்கள் அஞ்சுகின்றார்கள். அதனால் தான் நபி (ஸல்)
அவர்கள் "என் கவனத்தை அது திருப்பி விடுவதை நான் விரும்பவில்லை'' என்று கூறினார்கள்.
v
அமானிதத்தைப் பேணுவது தர்மம்
நல்ல காரியங்களைச் செய்தால் அல்லாஹ் நன்மைகளை
வழங்குவதைப் போல் தீமைகள் செய்வதற்குரிய சூழல்களில் அதைவிட்டுத் தவிர்ந்து
கொண்டால் தீமை செய்யாமல் இருந்ததற்காக நன்மைகளைத் தருகிறான்.
பணி புரியாமல் சம்பளம் கிடைப்பதைப் போல், நல்ல காரியங்களைச் செய்யாவிட்டாலும் நமக்கு
நன்மை கிடைக்கிறது. தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட பொருளில் மோசடிகள் செய்வதற்கு
வாய்ப்புகள் இருந்தாலும், மோசடி
செய்தால் யாருக்கும் தெரியாது என்ற நிலை இருந்த போதிலும் நாணயமாக நடப்பவர் தர்மம்
செய்தவருக்குச் சமமாவார்.
இதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்
பின்வரும் ஹதீஸில் தெளிவுபடுத்துகிறார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்
கூறினார்கள்: தனக்கு ஏவப் பட்டதை மனமுவந்து திருப்தியுடன் நிறைவேற்றும்
நம்பிக்கைக்குரிய கருவூலக் காப்பாளர் தர்மம் செய்தவராவார்.
அறிவிப்பவர்: அபூ மூஸல் அஷ்அரீ (ரலி)நூல்:
அஹ்மத் 18836
v
அலட்சியமாக்கப்படும் அமானிதங்கள்
நாம் ஒவ்வொருவரும் கண்டிப்பாக ஏதோ ஒரு
விதத்தில் நமக்கே தெரியாமல் அமானிதங்களை ஏற்றவர்களாக இருக்கிறோம். இறைவன் நமக்கு
வழங்கிய உடல் உறுப்புக்களும் செல்வங்களும் அமானிதம் தான். இவைகளை நல்ல
காரியங்களுக்குப் பயன்படுத்துவதற்காக வழங்கியுள்ளான்.
தீய காரியங்களுக்கு இவைகளை நாம்
பயன்படுத்தினால் இறைவன் நமக்கு வழங்கிய அமானிதங்களை பாழ் படுத்தியவர்களாக
ஆகிவிடுவோம்.
இதை உணராத காரணத்தினால் நம்முடைய கண்கள் தீய
காரியங்களைக் கண்டு ரசிக்கிறது; நமது
கால்கள் செல்லக் கூடாத இடங்களுக்குச் செல்கின்றன.
மறுமையில் ஒவ்வொரு உறுப்பும் விசாரணைக்கு
உட்படுத்தப்படும்.
செவி, பார்வை
மற்றும் உள்ளம் ஆகிய அனைத்துமே விசாரிக்கப் படுபவை. (அல்குர்ஆன் 17:36)
கணவனை நம்பி வந்த மனைவியும் ஓர் அமானிதம்.
அவளுக்குரிய உரிமைகளை முறையாகக் கொடுப்பது அவன் மீது கடமை. வாடகைக்கு
எடுக்கப்படும் அனைத்துப் பொருட்களும் அமானிதம் தான். அதை சேதப் படுத்தாமல் தன்
பொருட்களைப் போல் பாதுகாத்து வைத்துக் கொள்ள வேண்டும். அதுபோல் இரவலாக வாங்கிய
பொருளும் அமானிதமே!
ரகசியமாகச் சொல்லப்பட்ட செய்தியும் அமானிதமே!
அமானிதம் என்பது பொருளை மட்டும் குறிக்காது.
ஒருவர் நம்மிடம் ஒரு செய்தியைக் கூறி இதை யாரிடமும் கூற வேண்டாம் என்று சொன்னால்
அந்தச் செய்தி அமானிதமாகி விடும். ஆனால் ரகசியமாக எத்தனையோ விஷயங்களைக்
கேட்டுவிட்டு நாம் பலரிடம் பரப்பிக் கொண்டிருக்கிறோம். ஸஹாபாக்களிடம் நபி (ஸல்)
அவர்கள் ஒன்றை ரகசியமாகக் கூறினால் அதை அவர்கள் பரப்பியதில்லை.
ஃபாத்திமா (ரலி) அவர்களிடம் நபி (ஸல்)
அவர்கள், ரகசியமாக ஏதோ சொன்னார்கள். அதைக் கேட்ட போது
ஃபாத்திமா பலமாக அழுதார்.
அவருடைய துக்கத்தைக் கண்ட நபி (ஸல்) அவர்கள்
இரண்டாவது முறையாக அவரிடம் ஏதோ இரகசியம் சொன்னார்கள். அப்போது அவர் சிரித்தார்.
அப்போது நான் நபி (ஸல்) அவர்களின்
துணைவியரிடையே இருந்து கொண்டு ஃபாத்திமாவிடம், "எங்களை
விட்டு விட்டு உங்களிடம் மட்டும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ரகசியம்
சொன்னார்கள். பிறகு நீங்கள் அழுதீர்களே'' என்று
கூறிவிட்டு, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எழுந்தவுடன்
அவர்கள் கூறிய ரகசியம் பற்றி ஃபாத்திமாவிடம் கேட்டேன். அதற்கு ஃபாத்திமா அவர்கள், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் ரகசியத்தைப் பரப்ப நான் விரும்பவில்லை'' என்று கூறி விட்டார். அறிவிப்பவர்:
ஆயிஷா (ரலி)நூல்: புகாரி 3623
நான் சிறுவர்களுடன் விளையாடிக்
கொண்டிருக்கும் போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வந்து எங்களுக்கு ஸலாம்
சொன்னார்கள். பிறகு என்னை ஒரு காரியமாக அனுப்பி வைத்தார்கள். அதனால் நான் என்னுடைய
தாயாரிடம் வருவதற்குத் தாமதமாகி விட்டேன். பிறகு வந்ததும், "தாமதமானதற்கான காரணம் என்ன?'' என்று
என் தாயார் வினவினார். "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு காரியமாக என்னை
அனுப்பி வைத்தார்கள்'' என்று
பதிலளித்தேன். "அவர்களுடைய அந்தக் காரியம் என்ன?'' என்று கேட்டார். "அது ரகசியமாகும்''என்றேன்.
"அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் ரகசியத்தை யாரிடமும் தெரிவிக்காதே!''என்று
கூறினார்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)நூல்: முஸ்லிம் 4533
v
கணவன் மனைவிக்கு மத்தியில் நடக்கும் இல்லற
வாழ்க்கை அமானிதம்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்
கூறினார்கள்: ஒருவன் தன் மனைவியுடன் இணைந்து,அவளும் அவனுடன் இணைந்து விட்ட பின்பு அவளுடைய
இரகசியத்தை (கணவன்) பரப்புவது மறுமை நாளில் அல்லாஹ்விடத்தில் மிகப் பெரிய
அமானிதமாகும்.
அறிவிப்பவர்: அபூசயீத் அல்குத்ரீ (ரலி)நூல்:
முஸ்லிம் 2832
v
பொறுப்புகளும் அமானிதம்
நாம் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு பொறுப்பையாவது
பெற்றிருப்போம். நாம் ஏற்றிருக்கக்கூடிய பொறுப்பை உணர்ந்து அதற்குத் தக்கவாறு நாம்
செயல்பட வேண்டும். நமது கடமைகளை முறையாக செய்யத் தவறினால் அமானிதத்தைப்
பாழ்படுத்திய குற்றத்தைச் செய்தவராகி விடுவோம். மக்களை வழிநடத்தும் பதவியில்
இருப்பவர்கள் அமானிதத்தை ஏற்றிருக்கிறார்கள். முறையான ஆட்சி புரியாவிட்டால்
இறைவனிடத்தில் அவர்களால் தப்ப முடியாது.
நான் (நபி (ஸல்) அவர்களிடம்)
"அல்லாஹ்வின் தூதரே! தாங்கள் என்னை (எதாவது) பணியில் அமர்த்தக் கூடாதா?'' என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள் தன்னுடைய
கையால் எனது தோள் பட்டையில் அடித்துவிட்டு, "அபூதர்ரே! நீர் பலவீனமானவர். அதுவோ அமானிதம்.
யார் அதைக் கையாள வேண்டிய முறைப்படி கையாண்டு, தன்
மீதுள்ள கடமையை நிறைவேற்றுகிறாரோ அவரைத் தவிர (மற்றவர்களுக்கு) மறுமை நாளில் அது
இழிவாகவும் கைசேதமாகவும் இருக்கும்''என்று கூறினார்கள். அறிவிப்பவர்:
அபூதர் (ரலி)நூல்: முஸ்லிம் 3729
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்
கூறினார்கள்: பூமியின் கிழக்குப் பகுதிகளையும் மேற்குப் பகுதிகளையும் நீங்கள்
வெற்றி கொள்வீர்கள். இறைவனை அஞ்சி அமானிதத்தை நிறைவேற்றியவரைத் தவிர அவைகளை
நிர்வகிப்பவர்கள் நரகத்தில் இருப்பார்கள்.நூல்: அஹ்மத் 22030
v மார்க்க நெறிமுறைகளும் அமானிதம்
நமக்குச் சரியான பாதையைக் காட்டுவதற்காக
இறைவன் தன்னுடைய தூதர்களின் மூலம் இஸ்லாமிய மார்க்கத்தை வழங்கியுள்ளான். இந்த
மார்க்கம் நமக்குக் கிடைப்பதற்காக அந்த இறைத்தூதர்கள் சொல்ல முடியாத அளவுக்கு
இன்னலுற்று தூதுத்துவப் பணியைச் செய்தார்கள். இதற்காகப் பல இறைத்தூதர்களும்
அவர்களுக்குப் பக்கபலமாக இருந்தவர்களும் கொல்லப்பட்டார்கள்.
கியாமத் நாள் வரை வருகின்ற மக்களுக்கு நபி
(ஸல்) அவர்கள் கூறிய உபதேசங்கள் சென்றடைவதற்காக இமாம்கள் தங்களுடைய வாழ்நாட்களை
மார்க்கத்திற்காக அர்ப்பணித்து அரும்பெருந்தொண்டாற்றினார்கள். இவ்வளவு நபர்களின்
தியாகத்தால் ஹதீஸ்கள் நமக்கு கிடைத்துள்ளன.
ஒரு காலத்தில் குர்ஆனும் ஹதீஸும்
சொல்லப்படாமல் வெறும் கட்டுக் கதைகள் மாத்திரம் மார்க்கமாக போதிக்கப்பட்டு வந்தது.
ஆனால் இன்று எத்தனையோ வசனங்களும் ஹதீஸ்களும் உரைகளிலும் புத்தகம் வாயிலாகவும் மாத
இதழ்கள் வாயிலாகவும் இலகுவாகக் கிடைக்கின்றன.
ஆனால் நாம் எந்தவிதமான ஆர்வமும் காட்டாமல்
இவைகளைப் புறக்கணித்து வருகிறோம். இறைவன் அளித்த இந்த மாபெரும் அமானிதத்தை பேணத்
தவறி விடுகிறோம்.
வணக்க வழிபாடுகளை அல்லாஹ்விற்குச் செலுத்த
வேண்டிய கடன் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். இவைகளை நிறைவேற்றுவதில்
மற்றதை விட அதிக ஆர்வம் நாம் காட்ட வேண்டும்.
"ஜுஹைனா' எனும் கோத்திரத்தைச் சேர்ந்த பெண் ஒருவர்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து, "என் தாயார் ஹஜ் செய்வதாக நேர்ச்சை
செய்திருந்தார்; மரணிக்கும் வரை அவர் ஹஜ் செய்யவில்லை. அவர்
சார்பாக நான் ஹஜ் செய்யலாமா?'' என்று
கேட்டார்.
அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்
"ஆம்! அவர் சார்பாக நீ ஹஜ் செய்! உன் தாயார் மீது கடனிருந்தால் அதனை நீர்
தானே நிறைவேற்றுவாய்! அல்லாஹ்வின் கடனை நிறைவேற்றுங்கள்! அல்லாஹ்வின் கடனே
நிறைவேற்ற அதிக தகுதியுடையது'' என்று
கூறினார்கள்.அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)நூல்: புகாரி 1852, 6699
அமானிதமான இந்த மார்க்கத்தை ஏற்றுக் கொண்டு, அதை முறையாகக் கடைபிடிக்காமல் நாம் வாழ்ந்து
கொண்டிருப்பதை அல்லாஹ் பின்வரும் வசனத்தில் சுட்டிக் காட்டுகிறான்.
வானங்கள், பூமி
மற்றும் மலைகளுக்கு அமானிதத்தை நாம் முன் வைத்தோம். அதைச் சுமக்க அஞ்சி அவை
மறுத்து விட்டன. மனிதன் அதைச் சுமந்து கொண்டான். அவன் அநீதி இழைப்பவனாகவும்,
அறியாதவனாகவும் இருக்கிறான். (அல்குர்ஆன் 33:72)
v நம்பிக்கைத் துரோகத்தால் ஏற்படும் விளைவுகள்
கூட்டுச் சேர்ந்து நடத்தப்படும் கடைகள்
பெரும்பாலும் நீண்ட நாட்கள் நிலைப்பதில்லை. மிகக் குறைந்த நாளிலேயே பிரச்சனைகள்
ஏற்பட்டு அடைக்கப்பட்டு விடுகின்றன.
இதற்குக் காரணம் கூட்டுச் சேர்ந்தவர்கள்
தங்களுக்குரிய பங்கை விட அதிகமான லாபத்தை எடுப்பதும் தன்னுடைய உழைப்பைச்
செலுத்தாமல் இருப்பதுமேயாகும். வருகின்ற லாபத்தை அமானிதமாகக் கருதி உரிய முறையில்
பங்கு வைத்துக் கொண்டால் அழகிய முறையில் வியாபாரம் செய்து செழித்தோங்கலாம்.
அல்லாஹ்வின் உதவியும் கிடைக்கும்.
அல்லாஹ் அவர்களுடன் மூன்றாவது கூட்டாளியாகச்
சேர்ந்து கொண்டு செல்வத்தை வளர்ப்பான்.
அல்லாஹ் கூறுவதாக நபி (ஸல்) அவர்கள்
கூறினார்கள்: இரண்டு கூட்டாளிகளில் ஒருவர் தன்னுடைய தோழருக்கு மோசடி செய்யாத வரை
நான் அவர்களுடன் மூன்றாவது (கூட்டாளி) ஆவேன். ஆனால் மோசடி செய்தால்
அவ்விருவரிடமிருந்து நான் வெளியேறி விடுகிறேன்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)நூல்: அபூதாவூத் 2936
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மோசடி
செய்பவனுக்கு மறுமை நாளில் (அவனுடைய மோசடியை வெளிச்சமிட்டுக் காட்டும் முகமாக
அடையாளக்) கொடி ஒன்று நாட்டப்பட்டு, "இது இன்னாருடைய மகன் இன்னாரின் மோசடி' என்று கூறப்படும்.அறிவிப்பவர்: இப்னு உமர்
(ரலி)
நூல்: புகாரி 6177
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு உணவுக்
குவியலைக் கடந்து சென்றார்கள். அதிலே தன் கையை விட்டார்கள். அவர்களுடைய விரல்களில்
ஈரம் பட்டது. (அந்த உணவுக்காரரைப் பார்த்து) "உணவுக்குச் சொந்தக்காரரே! இது
என்ன?'' என்று கேட்டார்கள். அதற்கு அவர், "அல்லாஹ்வின் தூதரே! மழை நீர் இதில் விழுந்து விட்டது'' என்று கூறினார். அதற்கு அவர்கள், "மக்கள் பார்க்கும் வண்ணம் இதை உணவுப் பொருளுக்கு மேலே வைத்திருக்க வேண்டாமா? யார் ஏமாற்றுகிறாரோ அவர் நம்மைச் சார்ந்தவர்
அல்ல!'' என்று கூறினார்கள்..
அறிவிப்பவர்: அபுஹுரைரா (ரலி)நூல்: முஸ்லிம் 164
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மக்களிடம்)
"முஃப்லிஸ் (திவாலாகிப் போனவன்) பற்றி உங்களுக்குத் தெரியுமா?'' என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், "யாரிடத்தில் பொற்காசுகளும் இன்னும் எந்தப் பொருளும் இல்லையோ அவன் தான்
முஃப்லிஸ் (திவாலானவன்)'' என்று
கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "என்னுடைய சமுதாயத்தில் முஃப்லிஸ், மறுமை நாளில் தொழுகை, நோன்பு, ஜகாத்துடன்
வருவான். (உலகில் வாழும் போது) இவனை இட்டிகட்டியிருப்பான். இவனைத்
திட்டியிருப்பான். இவனது இரத்தத்தை ஓட்டியிருப்பான். இவனை அடித்திருப்பான். எனவே
இவனுக்கு அவனுடைய நன்மைகளிலிருந்து எடுத்துக் கொடுக்கப்படும். அவன் மீது கடமையாக
உள்ளவற்றை நிறைவேற்றுவதற்கு முன்பே அவனது நன்மைகள் அழிந்து விட்டால் அவர்களுடைய
தீமைகளிலிருந்து எடுத்து அவன் மீது வைக்கப்படும். பிறகு அவன் நரகில் வீசப்படுவான்'' என்று கூறினார்கள்.அறிவிப்பவர்: அபூஹுரைரா
(ரலி)நூல்: முஸ்லிம் 4678
அமானிதத்தைப் பேணாமல் தடுக்கப்பட்ட முறையில்
உண்பவர்கள் செய்யும் பிரார்த்தனைகளுக்கு இறைவனிடம் சற்றும் மதிப்பிருக்காது.
அந்தப் பிரார்த்தனைகள் எல்லாம் அசுத்தமானவைகளாகத் தான் கணக்கில் எடுத்துக்
கொள்ளப்படும்.
மனிதர்களே! பூமியில் உள்ளவற்றில்
அனுமதிக்கப்பட்ட தூய்மையானதை உண்ணுங்கள்! ஷைத்தானின் அடிச்சுவடுகளைப்
பின்பற்றாதீர்கள்! அவன் உங்களுக்குப் பகிரங்க எதிரி. (அல்குர்ஆன் 2:168)
நம்பிக்கை கொண்டோரே! நாம் உங்களுக்கு வழங்கிய
தூய்மையானவற்றை உண்ணுங்கள்! நீங்கள் அல்லாஹ்வையே வணங்குவோராக இருந்தால் அவனுக்கே
நன்றி செலுத்துங்கள்! (அல்குர்ஆன் 2:172)
அல்லாஹ் உங்களுக்கு வழங்கிய, அனுமதிக்கப்பட்ட தூய்மையானதை உண்ணுங்கள்!
நீங்கள் நம்புகின்ற அல்லாஹ்வையே அஞ்சுங்கள்! (அல்குர்ஆன் 5:88)
அல்லாஹ் உங்களுக்கு வழங்கியவற்றிலிருந்து
அனுமதிக்கப்பட்ட தூய்மையானதை உண்ணுங்கள்! நீங்கள் அவனையே வணங்குவோராக இருந்தால்
அல்லாஹ்வின் அருட்கொடைக்கு நன்றி செலுத்துங்கள்! (அல்குர்ஆன் 16:114)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்
: அல்லாஹ் தூய்மையானவன். தூய்மையானதைத் தவிர வேறு எதையும் அவன்
ஏற்றுக் கொள்ளமாட்டான். அல்லாஹ் நபிமார்களுக்கு எதை ஏவினானோ அதையே
முஃமின்களுக்கும் ஏவுகின்றான் என்று கூறி விட்டு,தூதர்களே! நல்ல
பொருள்களி லிருந்தே நீங்கள் உண்ணுங்கள். நல்லமல்களைச்
செய்யுங்கள். நிச்சயமாக நீங்கள் செய்பவற்றை நான் நன்கு அறிபவன். (அல்குர்ஆன் 23:51)
நம்பிக்கை கொண்டவர்களே! நாம் உங்களுக்கு
அளித்துள்ளவற்றில் இருந்து தூய்மையானவற்றையே உண்ணுங்கள். நீங்கள்
அல்லாஹ் வையே வணங்குபவர்களாக இருப்பின் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தி வாருங்கள்.
(அல்குர்ஆன் 2:172)
ஆகிய வசனங்களை ஓதிக் காட்டினார்கள். பின்பு ஒரு மனிதரைப் பற்றி குறிப்பிட்டார்கள். "அவனோ
நீண்ட தூரம் பயணத்தில் இருக்கின்றான். அவனுடைய
தலை புழுதி படிந்து பரட்டையாக இருக்கின்றது. அவன்
வானத்தின் பால் கைகளை உயர்த்தி, "எனது இறைவனே! எனது இறைவனே!'' என்று அழைக்கின்றான். அவனது
ஆடை, அவனது உணவு, அவனது
குடிப்பு ஆகிய அனைத்தும் ஹராமாக இருக்கின்றது. அவனே
ஹராமில் மூழ்கி விட்டான். இந்த நிலையில் அவனது துஆ எவ்வாறு ஏற்றுக்
கொள்ளப்படும்?'' என்று நபி (ஸல்) அவர்கள்
கூறினார்கள்.அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)நூல்: முஸ்லிம் 1844
v அமானிதங்களைப் பேணாதவர்கள் மறுமை நாளில் நரகத்தின் மீதுள்ள பாலத்தைக் கடக்கும்
போது அவர்களைக் கடக்க விடாமல் இந்த அமானிதம் தடுக்கும்.
(மறுமையில்) மக்கள் முஹம்மத் (ஸல்) அவர்களிடம் செல்வார்கள். உடனே அவர்கள்
எழு(ந்து பரிந்துரைக்க அனுமதி கோரு)வார்கள். அவர்களுக்கு அனுமதி வழங்கப்படும்.
அப்போது நம்பகத்தன்மையும் இரத்த பந்த உறவும் அனுப்பி வைக்கப்படும். அவையிரண்டும்
(நரகத்தின் மீதுள்ள) அப்பாலத்தின் இரு மருங்கிலும் வலம், இடமாக நின்று கொள்ளும். அப்போது உங்களில்
முதல் அணியினர் மின்னலைப் போன்று அதைக் கடந்து செல்வார்கள்.
அறிவிப்பவர்: அபுஹுரைரா (ரலி)நூல்: முஸ்லிம் 329
எனவே அமானிதங்களை ஒழுங்காக பேணி, இறைக் கட்டளையின்படியும் இறைத்தூதரின்
வழிகாட்டுதலின்படியும் நடக்க முயற்சிப்போம்.
கருத்துகள்
கருத்துரையிடுக