ஈதுல் அழ்ஹா ஹஜ்ஜுப் பெருநாளுடன் தொடர்பு பட்ட சில சட்டங்கள்

 


1- இரு பெருநாட்கள்:


நபியவர்கள் மதீனாவுக்கு வருகை தந்த நேரத்தில் மதீனா வாசிகள் இரு நாட்களில் விளையாடி மகிழ்வதைப் பார்த்து அல்லாஹ் இதை விட சிறந்த இரு நாட்களை உங்களுக்குப் பகரமாக ஆக்கியிருக்கின்றான் அவைதான் நோன்புப் பெருநாளும் ஹஜ்ஜுப் பெருநாளும். " எனக் கூறினார்கள் (அறிவிப்பவர்: அனஸ் இப்னு மாலிக் (ரலி) அவர்கள், நஸாயி 1556).


2- பெருநாளுடைய நாட்களில் தக்பீர் கூறுதல்:


 وَاذْكُرُوا اللّٰهَ فِىْٓ اَيَّامٍ مَّعْدُوْدٰتٍ‌ؕ


"குறிப்பிடப்பட்ட நாட்களில் அல்லாஹ்வை திக்ரு செய்யுங்கள்"  (அல்குர்ஆன் 2: 203)


இந்த வசனத்திற்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் விளக்கமளிக்கும் போது துல் ஹஜ் பிறை 10,11,12,13 ஆகிய நாட்களையை இது குறிக்கும்.


كَذٰلِكَ سَخَّرَهَا لَـكُمْ لِتُكَبِّرُوا اللّٰهَ عَلٰى مَا هَدٰٮكُمْ‌ؕ وَبَشِّرِ الْمُحْسِنِيْنَ‏


"அல்லாஹ் உங்களுக்கு நேர்வழி காண்பித்ததற்காக அவனை நீங்கள் பெருமைப் படுத்தும் பொருட்டு - இவ்வாறாக அவற்றை உங்களுக்கு வசப்படுத்திக் கொடுத்திருக்கிறான்; ஆகவே நன்மை செய்வோருக்கு நீர் நன்மாராயங் கூறுவீராக!" (அல்குர்ஆன் 22: 37).


உம்மு அத்திய்யா (ரலி) அவர்கள் கூறியதாவது: "பெண்கள் (தொழும் திடலுக்குச் சென்று) ஆண்களுக்குப் பின்னால் இருந்து கொண்டு ஆண்கள் தக்பீர் சொல்லும்போது அவர்களும் தக்பீர் சொல்வார்கள்; ஆண்கள் பிரார்த்திக்கும்போது அவர்களும் பிரார்த்திப்பார்கள். அந்த நாளின் அருள் வளத்தையும் (பாவத்) தூய்மையையும் எதிர்பார்ப்பார்கள்." புஹாரி 971) ஹதீஸின் ஒரு பகுதி.


மினாவில் தனது குப்பாவிலிருந்து மஸ்ஜிதிலுள்ளவர்கள் கேட்குமளவுக்கு உமர் (ரலி) அவர்கள் தக்பீர் கூறுவார்கள், அதைத் தொடர்ந்து மஸ்ஜிதிலுள்ள, ஏனைய அனைத்து மக்களுகம் மினா அதிருமளவுக்கு தக்பீர் கூறுவாகாள். (புஹாரி)


அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அவர்கள் மினாவுடைய நாட்களில் தொழுகைக்குப் பின், சபைகளில், தனது விரிப்பில் நடந்து செல்லும் போது தக்பீர் கூறுபவர்களாக இருந்தார்கள். (புஹாரி)


3- புத்தாடை அணிதல்:


அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:


(என் தந்தை) உமர் (ரலி) அவர்கள் கடைத்தெருவில் விற்பனை செய்யப் பட்ட தடித்த பட்டு நீளங்கி ஒன்றை விலைபேச முற்பட்டார்கள். அதை எடுத்துக்கொண்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! இதைத் தாங்கள் வாங்கி பெருநாளிலும் தூதுக் குழுக்கள் தங்களிடம் வரும்போதும் (அணிந்து) அலங்கரித்துக்கொள்ளலாமே!” என்று கூறினார்கள்.


அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இது (மறுமையில்) எந்தப் பேறும் இல்லாத (ஆட)வர்களின் (இவ் வுலக) ஆடையாகும்” என்று கூறினார்கள். (புஹாரி 948).


4- ஈதுல் அழ்ஹா பெருநாள் தினத்தில் முதலில் செய்ய வேண்டியது:


பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் (ஈதுல் அள்ஹா பெருநாளில்) உரையாற்றியதை நான் கேட்டேன். அவர்கள் (தமது உரையில்) “நாம் இன்றைய தினம் செய்யும் முதல் வேலை (பெருநாள் தொழுகை) தொழுவ தாகும். பிறகு திரும்பி வந்து ‘குர்பானி’ பிராணிகளை அறுப்பதாகும். யார் (இதைச்) செய்கிறாரோ அவர் நமது வழிமுறையைப் பின்பற்றியவர் ஆவார்” என்று கூறி னார்கள். (புஹாரி 951).


5- பெருநாள் தொழுகையில் கலந்து கொள்வதன் அவசியம்:


உம்மு அத்திய்யா (ரலி) அவர்கள் கூறியதாவது: "பெருநாளன்று (பெண்களாகிய) நாங்கள் (தொழும் திடலுக்குப்) புறப்பட்டுச் செல்ல வேண்டுமெனவும் திரையினுள் இருக்கும் குமரிப் பெண்களையும் புறப் படச் செய்ய வேண்டுமெனவும் கட்டளை யிடப்பட்டிருந்தோம். மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண்களைக்கூடப் புறப்படச் செய்ய வேண்டுமெனக் கட்டளையிடப்பட்டோம்." (புஹாரி 971) ஹதீஸின் ஒரு பகுதி.


6- மாதவிடாய்ப் பெண்கள் எவ்வாறு நடந்து கொள்வது?:


உம்மு அத்திய்யா (ரலி) அவர்கள் கூறியதாவது: "மாத விடாய் ஏற்பட்டுள்ள பெண்கள் தொழும் இடத்தைவிட்டு ஒதுங்கிருப்பார்கள்” (புஹாரி  974) ஹதீஸின் ஒரு பகுதி. 


உம்மு அத்திய்யா (ரலி) அவர்கள் கூறியதாவது:

"மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண்களோ முஸ்லிம்கள் கூடும் இடங்களிலும் அவர் களின் பிரார்த்தனையிலும் கலந்துகொள் வார்கள். ஆனால், அவர்கள் தொழும் இடத்தி-ருந்து ஒதுங்கியிருப்பார்கள்." (புஹாரி 981) ஹதீஸின் ஒரு பகுதி. 


7- திடலில் பெருநாள் தெழுகை:


இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: "நோன்புப் பெருநாளிலும் ஹஜ்ஜுப் பெருநாளிலும் (திறந்தவெளித் திடல் தொழுகை நடைபெறும்போது) நபி (ஸல்) அவர்களுக்கு முன்னால் (தடுப்பாக) ஒரு ஈட்டி நட்டு வைக்கப்படும். பிறகு நபி (ஸல்) அவர்கள் (அதை நோக்கித்) தொழு வார்கள். புஹாரி 972).


8- பெருநாள் தொழுகைக்கு முன் பின் எந்தத் தொழுகையும் இல்லை:


இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாள் தினத்தில் (தொழும் திடலுக்குப்) புறப்பட்டுச் சென்று இரண்டு ரக்அத்கள் (பெருநாள் தொழுகை) தொழுதார்கள். அதற்கு முன்பும் எதையும் தொழவில்லை; அதற்குப் பின்பும் எதையும் தொழவில்லை. அப்போது அவர்களுடன் பிலால் (ரலி) அவர்களும் இருந்தார்கள். (புஹாரி 989).


9- பெருநாள் தொழுகைக்கு பாங்கு, இகாமத் இல்லை:


நான் நபி (ஸல்) அவர்களுடன் பல தடவை பெருநாள் தொழுகையில் கலந்து கொண்டிருக்கின்றேன். அந்தத் தொழுகையில் அதான் (பாங்கு) , இகாமத் இருக்கவில்லை. என ஜாபிர் இப்னு ஸமுரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள், முஸ்லிம் 887)


இப்னு அப்பாஸ் (ரலி), ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) ஆகியோர் கூறியதாவது: "(நபி (ஸல்) அவர்களது காலத்தில்) நோன்புப் பெருநாளிலோ ஹஜ்ஜுப் பொருநாளிலோ பாங்கு சொல்லும் வழக்கம் இருக்கவில்லை.  (புஹாரி 960).


10- தொழுகைக்குப் பின் உரை:


அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஹஜ்ஜுப் பெருநாளிலும் நோன்புப் பெருநாளிலும் (முதலில்) தொழுவார்கள். தொழுகையை முடித்தபிறகே உரை (குத்பா) நிகழ்த்துவார்கள்." (புஹாரி 957


11- பெண்களுக்குத் தனியான உரை:


இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: "நபி (ஸல்) அவர்கள் நோன்புப் பெரு நாளில் இரண்டு ரக்அத்கள் (மட்டுமே) தொழுதார்கள். அதற்கு முன்போ பின்போ அவர்கள் (கூடுதலாக எதையும்) தொழ வில்லை. (உரை நிகழ்த்திய) பிறகு தம்முடன் பிலால் (ரலி) அவர்கள் இருக்க, பெண்கள் பகுதிக்கு நபி (ஸல்) அவர்கள் வந்து (அறிவுரை கூறினார்கள். அப்போது) தர்மம் செய்யுமாறு அவர்களைப் பணித் தார்கள். உடனே பெண்கள் (தம்மிடம் இருந் ததை பிலால் அவர்களின் கரத்திலிருந்த துணியில்) இடலாயினர். சில பெண்கள் தம் காதணிகளையும் தம் (கழுத்தில் அணிந்திருந்த) நறுமண மாலைகளையும் இட்டனர். (புஹாரி 964).


இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: "நான் (சிறுவனாக இருந்தபோது) ‘நோன்புப் பெருநாளிலோ’ அல்லது ‘ஹஜ்ஜுப் பெருநாளிலோ’ நபி (ஸல்) அவர்களுடன் (தொழும் திடலுக்குப்) புறப்பட்டுச் சென்றேன். நபி (ஸல்) அவர்கள் (பெருநாள் தொழுகை) தொழுதுவிட்டுப் பிறகு உரை நிகழ்த்தினார்கள். பிறகு பெண்கள் பகுதிக்குச் சென்று அவர்களுக்கு அறிவுரை கூறினார்கள்; (மறுமை குறித்து) அவர்களுக்கு நினைவூட்டிப் பேசினார்கள்; தர்மம் செய்யும்படி அவர்களுக்குக் கட்டளையிட்டார்கள். (புஹாரி 975)


12- வேறு பாதைகளில் செல்வதும், வருவதும்:


ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: "பெருநாள் வந்துவிட்டால், நபி (ஸல்) அவர்கள் (ஒரு பாதையில் தொழும் திடலுக்குச் சென்றுவிட்டு) வேறு பாதையில் திரும்பி வருவார்கள்" புஹாரி  986).


13- மார்க்கம் அனுமதித்த முறையில் பெருநாளைக் கொண்டாடுதல்:


ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: ‘மினா’வின் நாட்களில் என் அருகில் (அன்சாரிச்) சிறுமியர் இருவர் (சலங்கை யில்லா) கஞ்சிராக்களை அடித்து (புஆஸ் போர் பரணிகளைப் பாடி)க்கொண்டி ருந்தனர். நபி (ஸல்) அவர்கள் தமது ஆடையால் போர்த்தி(ப் படுத்து)க்கொண்டி ருந்தார்கள். அப்போது (என் தந்தை) அபூபக்ர் (ரலி) அவர்கள் என்னிடம் வந்து அவ்விருவரையும் அதட்டினார்கள். 


உடனே நபி (ஸல்) அவர்கள் தமது முகத்திலிருந்து ஆடையை விலக்கி, “அவ்விருவரையும் விட்டுவிடுங்கள், அபூபக்ரே! (அவர்கள் பாடட்டும்.) ஏனெனில், இவை பண்டிகை நாட்களாகும்” என்று கூறினார்கள். அந்த நாட்கள் (துல்ஹஜ் 10, 11, 12, 13 ஆகிய) ‘மினா’வின் நாட்களாக அமைந்திருந்தன. (புஹாரி 987)


ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: "அன்று பெருநாள் (ஈத்) தினமாக இருந்தது. சூடானியர்கள் தோல் கேடயத்தாலும் ஈட்டிகளாலும் (பள்ளிவாசல் வளாகத்தில் வீர விளையாட்டுகள்) விளையாடிக்கொண்டி ருந்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்களிடம் நான் (அந்த விளையாட்டைப் பார்க்க அனுமதி) கேட்டிருக்க வேண்டும்; அல்லது அவர்களே என்னிடம், “நீ (இவர்களு டைய வீர விளையாட்டுகளைப்) பார்க்க விரும்புகிறாயா?” என்று கேட்டிருக்க வேண்டும். (சரியாக எனக்கு நினைவில்லை). அதற்கு நான், ‘ஆம்’ என்று பதிலளித் தேன்.


உடனே நபி (ஸல்) அவர்கள் என் கன்னம் அவர்களது கன்னத்தின் மீது ஒட்டியபடி இருக்க, என்னைத் தமக்குப் பின்னால் நிற்கவைத்துக்கொண்டார்கள். “அர்ஃபிதாவின் மக்களே! (எத்தியோப்பி யர்களே!) விளையாட்டைத் தொடருங்கள்” என்று கூறினார்கள். இறுதியில் நான் (விளையாட்டை நன்கு பார்த்து) சலிப் புற்றுவிட்டபோது ‘போதுமா?’ என்று நபி (ஸல்) அவர்கள் கேட்க நான், “ஆம் (போதும்)” என்று சொன்னேன். நபி (ஸல்) அவர்கள், “அப்படியானால் நீ போகலாம்” என்று சொன்னார்கள். (புஹாரி 950).


14- துல்ஹஜ் பிறை 11,12, 13 ஆகிய நாட்கள்:


அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

"அய்யாமுத் தஷ்ரீக்" (எனும் ஹஜ்ஜுப் பெருநாளுக்கு அடுத்த மூன்று) நாட்கள், உண்பதற்கும் பருகுவதற்கும், மேலும் இறைவனை நினைவுகூர்(ந்து திக்ர் செய்)வதற்கும் உரிய நாட்களாகும். இதை நுபைஷா பின் அம்ர் பின் அவ்ஃப் அல்ஹுதலீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (முஸ்லிம் 2099).


✍நட்புடன்

அஸ்ஹர் யூஸுப்ஃ ஸீலானி

2021/07/20

➖➖➖➖➖➖➖➖➖➖➖

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

1.கணவனைக் கவரும் வழிகள் 40

பத்ருப் போர் உணர்த்தும் பாடமும் படிப்பினைகளும்!

மண்ணறை வேதனை 001