நன்றி மறப்பது நன்றன்று.

 

.

நன்றி நவிலும் நாகரிகப் பண்பியல்பு, மனிதர்களுக்கு பிறப்பியல்பிலேயே இருக்கும் ஓர் உள்ளார்ந்த உணர்ச்சியாகும். அது ஒரு நாகரிக முதிர்ச்சியுள்ள, ஒழுக்கமிக்க பண்பாகவும் கொள்ளப்படுகிறது. ஒரு முஃமினின் வாழ்வில் நன்றியுணர்வு ஈமானின் அடையாளத்தையும் இஸ்லாமிய பண்பியல் அழகையும் பிரதிபலிக்கிறது. அத்தோடு, அவனில் வெளிப்படும் நன்றியுணர்ச்சி, அளவற்ற அருளாளன் அல்லாஹ்வையும் அவன் அள்ளி வழங்கியுள்ள அருட்கொடைகளையும் உளமாற ஏற்றுக் கொள்வதையும் அதைப் பகிரங்கப்படுத்துவதையும் வெளிப்படுத்துகிறது.

وَاَمَّا بِنِعْمَةِ رَبِّكَ فَحَدِّثْ

‘உமது இரட்சகனின் அருட்கொடையை அறிவிப்பீராக!’ (93:11)

 என்று, அல்லாஹ் மனிதனுக்கு வழங்கியுள்ள அளவற்ற, நிறைவான ஆருள் வளங்களை அறிவிக்குமாறும், அதன் மூலம் நன்றி உணர்வை வெளிப்படுத்துமாறும் அல்குர்ஆன் மிகத் தெளிவாகப் பிரகடனப்படுத்துகிறது.

எனவே, நன்றியுணர்வை வெளிப்படுத்துகிற நற்பண்பும், சீரிய குணமும் நபிமார்களின் அடையாளமாகவும் இறை விசுவாசிகளின் சிறப்பான இயல்புகளாவும் சுவனவாசிகளின் தன்மையாகவும் வர்ணிக்கப்படுகிறது. ஏன்? அல்லாஹ்வின் பண்புகளில் ஒன்றாகவும் அது உள்ளது.

கல்வி,பொருளதாரம், மருத்துவம் மற்றும் ஏனைய வாழ்வியல் துறைகளின் வளர்ச்சியில் உதவியவர்களுக்கு நன்றியுணர்வை வெளிப்படுத்தி வாழ்பவன், இப்பூமியில் மதிக்கப்படுகின்றான். பாராட்டப்படுகின்றான், வாழ்த்துக்கள் பலவற்றிற்கு உரித்தானவனாகின்றான். நன்றியுணர்வு வெளிப்படுத்தத் தவறுபவன் வையகத்தில் வாழும் வரை இகழப்படுகின்றான். மக்களால் வெறுக்கப்படுகின்றான். சமூகத்தால் புறக்கணிக்கப்படுகின்றான். அல்லாஹ்வின் கோபப் பார்வைக்கும் உள்ளாகின்றான்.

கஸ்டங்கள், பிரச்சனைகளின் போது அல்லாஹ் ஓர் அடியானை சோதிக்கின்றான். அந்த சோதனையின் போது அடியான் பொறுமையாக இருந்தால் அவருக்கு அல்லாஹ் நன்மாராயம் சொல்கிறான்.

பிரச்சனைகளின் போது அல்லாஹ்வை வணக்கத்தின் மூலம் தொடர்ந்து அழைக்கிறான். ஆனால் அல்லாஹ் அந்த கஸ்டங்களையும், பிரச்சனைகளையும் நீக்கியதற்கு பின் அடியான் அல்லாஹ்வை மறந்து விடுகிறான்.

அடியார்கள் தனக்கு நன்றி செலுத்த வேண்டும் என்று அல்லாஹ் எதிர்பார்க்கிறான். அதை பின் வரும் குர்ஆன் வசனத்தின் மூலம் நமது நினைவுக்கு கொண்டு வருகிறான்.

“ (கப்பலில் செல்லும்) அவர்களை, மலைமுகடுகளைப் போன்ற அலை சூழ்ந்து கொள்ளுமானால், அல்லாஹ்வுக்கே வழிபட்டு அந்தரங்க சுத்தியுடன் அவனிடம் பிரார்த்திக்கின்றனர்; ஆனால் அவன் அவர்களைக் காப்பாற்றிக்கரைசேர்த்து விட்டால், அவர்களில் சிலர் நடுநிலையாக நடந்து கொள்கிறார்கள் – எனினும் மிகவும் நன்றி கெட்ட, பெருந்துரோகிகளைத் தவிர வேறு எவரும் நம் அத்தாட்சிகளை நிராகரிப்பதில்லை… (31:32)

பிரச்சனைகள் வரும் போது அல்லாஹ்வை அடியார்கள் அழைக்கிறார்கள். பிரச்சனைகளிலிருந்து அல்லாஹ் அவர்களை காப்பாற்றியதற்கு பிறகு சிலர் அமல்கள் மூலம் நன்றியுணர்வோடு நடந்துக் கொள்கிறார்கள். அதிகமானவர்கள் அல்லாஹ் செய்த நன்றிக்கு பகரமாக நன்றி கெட்டவர்களாக இருக்கிறார்கள்.   நபிமார்கள் நன்றியுள்ளவர்களாக இருந்துள்ளார்கள்:                 ஏகத்துவப் பிரசாரத்தை மேற்கொண்ட பாதையில் நபிமார்கள் மிகப் பெரும் துன்பங்களை அனுபவித்தார்கள். எனினும், அவர்கள் அதிகமாக அல்லாஹ்விற்கு நன்றியுள்ளவர்களாக இருந்துள்ளார்கள் என்பதை அல்குர்ஆன் விவரிக்கிறது.                                 நூஹ் நபி : إِنَّهُ كَانَ عَبْدًا شَكُورًا நூஹ் நபி அவர்கள் பல நூறு ஆண்டுகள் பல்வேறு சோதனைகளை அனுபவித்தும்,அவர் நன்றி மறக்கவில்லை என்பதை ‘அவர் நன்றி மிக்க அடியாராக இருந்தார்’ (அல் இஸ்ர :03) என அல்லாஹ் சிறப்பித்துக் கூறுகின்றான்.

இப்றாஹீம் நபி :ஏகத்துவத்தை மிகத் துணிகரமாகப் பேசியவர். அதற்காக இளமை முதல் முதுமை வரை பல இன்னல்களை சந்தித்தவர். ஒவ்வொரு சோதனையிலும் வெற்றி பெற்று, அல்லாஹ்வின் நண்பராகவும் மனித குலத்தின் இமாமாகவும் உயர்வு பெற்றவர். விவசாயத்துக்குத் தகுதி இல்லாத பள்ளத்தாக்கில் மனைவியையும் தனது முதிய வயதில் கிடைத்த அன்பு மகனையும் குடியமர்த்திவிட்டு, அவர்களும் அல்லாஹ்வுக்கு நன்றியுள்ளவர்களாக இருக்க வேண்டும் என்று இப்றாஹீம் நபி அவர்கள் பிரார்த்தனை செய்ததை அல்லாஹ் சிலாகித்துச் சொல்கின்றான்.

رَبَّنَا إِنِّي أَسْكَنْتُ مِنْ ذُرِّيَّتِي بِوَادٍ غَيْرِ ذِي زَرْعٍ عِنْدَ بَيْتِكَ الْمُحَرَّمِ رَبَّنَا لِيُقِيمُوا الصَّلَاةَ فَاجْعَلْ أَفْئِدَةً مِنَ النَّاسِ تَهْوِي إِلَيْهِمْ وَارْزُقْهُمْ مِنَ الثَّمَرَاتِ لَعَلَّهُمْ يَشْكُرُونَ

எங்கள் இறைவா! எனது சந்ததிகளை உனது புனித ஆலயத்திற்கருகில், விவசாயத்துக்குத் தகுதி இல்லாத பள்ளத்தாக்கில், இவர்கள் தொழுகையை நிறைவேற்றுவதற்காக குடியமர்த்தி விட்டேன். எனவே, எங்கள் இறைவா! மனிதர்களில் சிலரது உள்ளங்களை இவர்களை நோக்கி விருப்பம் கொள்ள வைப்பாயாக! இவர்கள் நன்றி செலுத்திட இவர்களுக்குக் கனிகளை உணவாக வழங்குவாயாக!’ (இப்ராஹீம் :37-38)

முஹம்மது நபி (ஸல்) அவர்கள்

மனித குலத்தின் ஆருட்கொடையாகவும் அழகிய முன்மாதிரியாகவும் அனுப்பப்பட்டு, இறுதித் தூதை சுமந்த முஹம்மது நபி (ஸல்) அவர்கள் அழகிய முறையில் அல்லாஹ்வை வணங்கி வழிபடவும் அவனுக்கு நன்றி செலுத்தவும் உதவுமாறு ஒவ்வொரு தொழுகையின் பின்னரும் அல்லாஹ்விடம் பிரார்த்தனை புரிந்துள்ளார்கள்.

اللَّهُمَّ أَعِنِّى عَلَى ذِكْرِكَ وَشُكْرِكَ وَحُسْنِ عِبَادَتِكَ – سنن أبى داود

நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்விற்கு அதிகமதிகம் நன்றி தெரிவித்துள்ளார்கள்.

قَامَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حَتَّى تَوَرَّمَتْ قَدَمَاهُ فَقِيلَ لَهُ غَفَرَ اللهُ لَكَ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِكَ وَمَا تَأَخَّرَ قَالَ أَفَلَا أَكُونُ عَبْدًا شَكُورًا صحيح البخاري

ஆயிஷா(ரலி) அறிவித்தார் : நபி (ஸல்) அவர்கள் இரவு நேரத்தில் தம் பாதங்கள் வீங்கும் அளவிற்கு நின்று வணங்குவார்கள். எனவே நான், ‘ஏன் இப்படிச் செய்கிறீர்கள், இறைத்தூதர் அவர்களே! தங்களின் முந்தையபிந்தைய தவறுகளை அல்லாஹ் மன்னித்துவிட்டானே?’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘நான் நன்றியுள்ள அடியானாக இருக்க விரும்பவேண்டாமா?’ என்று கேட்டார்கள். (புகாரி 4837)

மனிதர்களுக்கு நன்றி நவிலல் :

ஆறாவது அறிவைப் பெறாத ஜீவன்களிடம் கூட அதிகம் வெளிப்படும் இப்பண்பு, அதனைப் பெற்றுள்ள மனிதனிடம் வெளிப்படாத போது, அவன் அவற்றைவிடவும் தாழ்ந்த நிலைக்குச் சென்று விடுகின்றான். எனவே, நன்றியுணர்வை அல்லாஹ்விற்கும் மனிதர்களிடத்திலும் அவனது அனைத்துப் படைப்பினங்களிடத்திலும் வெளிப்படுத்த வேண்டும் என இஸ்லாம் வலியுறுத்துகிறது.

عَنْ أَبِي سَعِيدٍ قَالَ : قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : مَنْ لَمْ يَشْكُرِ النَّاسَ لَمْ يَشْكُرِ اللَّهَ. سنن الترمذي

எவர் மனிதர்களுக்கு நன்றி நவிழவில்லையோ, அவர் அல்லாஹ்விற்கும் நன்றி நவிழமாட்டார்என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்:திர்மிதீ) (403)

நன்றி பாராட்டும் நாகரிக நல்லொழுக்கம் எப்போதும் ஏற்றி போற்றப்படும ஒரு நற்குணமாகும். இஸ்லாம் வலியுறுத்தும் அந்நல்லொழுக்க விதையிலிருந்து முளைத்து, செடியாகி, மரமாகி, மலராகி, காய்த்து, கனிந்த கனியே நன்றி என்ற உயர் பண்பாகும். ஒரு மனிதன் பிற மனிதனுக்குச் செய்த அற்ப உதவியின் அரிய, சிறிய பயனையும் பேருதவியாக கருதி, நன்றி பாராட்டுவது நல்லொழுக்க நல்லியல்பு என்றும் அதற்காக அல்லாஹ் அந்த மனிதனுக்க நன்றி பாராட்டுகின்றான் என்றும் நபி மொழிகள் நில சிலாகிக்கின்றன.

‘ஒருவர் (தொழுவதற்காக) நடந்து வரும் பாதையில் ஒரு முள் மரக்கிளை கிடப்பதைக் கண்டு, அதை அந்தப் பாதையைவிட்டும் அகற்றும் பணியில் ஈடுபட்டார். அப்பணி அவரை (ஆரம்ப நேரத்தில் தொழுவதைவிட்டும்) பிற்படுத்திவிட்டது. இப்படிப்பட்ட அந்த மனிதருக்கு அல்லாஹ் நன்றி செலுத்துகிறான். அவருக்குப் பாவமன்னிப்பும் அளிக்கிறான்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புகாரி : 652

ஒரு மனிதன் பிற மனிதனுக்கு உதவி செய்தால், அதற்கு நாம் நன்றி செலுத்த வேண்டும். அதேவேளை, அவனது தவறான கொள்கையை ஏற்க வேண்டும் என்ற நிலைக்கு நாம் சென்று விடக் கூடாது. சிலரின் தவறான கொள்கையை விமர்சிப்பது, அவர்களை விமர்சிப்பதாகப் பாரக்கப்படுகிறது. இது தவறான போக்காகும். எமக்குக் கற்பித்த ஆசான்களுக்கு நாம் நன்றி தெரிவிக்க வேண்டும். அதே வேளை, அவர் ஒரு தவறான கொள்கை நிலையில் இருந்தால், அதை நாம் தவறு என்று சுட்டிக் காட்டுவது எந்தவகையிலும் நன்றி மறந்த செயலாக ஆகாது. தவறைச் சுட்டிக்காட்டுவதே நன்றி தெரிவிக்கும் நல்ல பண்பு என்பதை சமூகம் புரிந்து கொள்ள வேண்டும்.

நாம் செய்கின்ற உதவி அற்பமானதாக இருந்தாலும், அதற்கு நிறைவான கூலி அல்லாஹ்வினால் வழங்கப்படும். சில போது, அந்த நன்றி உணர்விற்கான பலன் இந்த உலகத்திலேயே கிடைக்கலாம். அதற்கு பின்வரும் நிகழ்வு ஒரு சான்றாக உள்ளது.

‘கோபர்ட் கில்லி அமெரிக்காவின் மிகப்பெரிய மருத்துவராக புகழ் பெற்றவர். ஆனால், தனது சிறுவயதில் வறுமையுடன் போராடினார். தனது 13-வது வயதில் தான் வசித்த பகுதியில் உள்ள வீடுகளுக்கு பேப்பர் போடுவது, பால் பெகட் போடுவது என பகுதி நேர வேலை செய்து வந்தார். ஆனாலும், வருமானம் போதவில்லை. ஒருமுறை கையில் இருந்த பணம் முழுவதும் தீர்ந்து போய், உண்ண உணவில்லாமல் திண்டாடினார். ஒரு ரொட்டித்துண்டு கிடைத்தாலும் போதும் பசியமர்த்திவிடலாம் என்று நினைத்தார்.

ஆனால், அதற்கான வழிதான் கிடைக்கவில்லை. ஒருவாறாக, தான் பேப்பர், பால் போடுகிற வீடுகளில் பிச்சையெடுக்கலாம் என்கிற முடிவுக்கு வந்து, ஒரு வீட்டின் கதவை தட்டினார். கதவைத் திறந்தது| அவர் வயதில் இருந்த ஒரு சின்னப் பெண். அந்தப் பசியிலும் அவரின் சுயமரியாதை விழித்துக் கொண்டது. போயும் போயும் ஒரு சின்னப் பெண்ணிடம் பிச்சைக் கேட்பதா? என்று எண்ணினார். அதனால் நிலையை சமாளித்துக் கொண்டு, ‘எனக்கு ஒரு கிளாஸ் தண்ணீர் கிடைக்குமா?’ என்று கேட்டார். அந்த சின்னப்பெண் அவரின் கண்ணில் அவரின் பசியை விளங்கிக் கொண்டார். உள்ளே சென்ற அவள் ஒரு கோப்பை நிறைய பாலைக் கொண்டு வந்து கொடுத்தாள். பசியுடன் பாலை அருந்தியவர், ‘இதற்கு நான் எவ்வளவு பணம் கொடுக்க வேண்டும்?’ என்று கேட்டார். தன் கவுரவத்தை சிறிதும் விட்டுக்கொடுக்காமல். அந்தச் சிறுமி நாங்கள் ஒன்றும் பால் வியாபாரம் செய்யவில்லை உன் கண்னில் பசியின் கோரம் தெரிந்தது. அதனால் தான் பாலைக் கொடுத்தேன், காசுக்கு அல்ல என்றாள்.

காலம் தான் எத்தனை முகங்களுடையது. கோபர்ட், டாக்டர் படிப்பை முடித்தார். டாக்டராக பிரபலமான போது, மிகப் பெரிய மருத்துவமனை ஒன்றை நிறுவி, அதன் தலைமை மருத்துவரானார்.

அந்த மருத்துவமனையில் சிகிச்சைக்காக ஒரு வயது முதிர்ந்த பெண்மணி நோயாளியாக வந்து சேர்ந்தார். அவள் நோயின் தீவிரம் அவசர சிகிச்சை மேற்கொள்ள வேண்டிய நிலையில் இருந்தது.

ஒரு நாள் அவள் வார்டில் நுழைந்த டாக்டர் கோபர்ட், அவளது கேஷ் சீட்டைப் பார்த்தார். அவள் கொடுத்திருந்த முகவரியை பார்த்ததும் அப்படியே ஷாக்காகிப் போனார். அவளிடம் பேச்சுக் கொடுத்து, அவள் முகவரி குறித்து விசாரித்தார். தாம் அந்த முகவரியில் கடந்த 60 ஆண்டுகளாக வசித்து வருவதாக அப்பெண்மணி குறிப்பிட்டார்.

மேற்கொண்டு எதுவும் பேசாமல் அங்கிருந்து கிளம்பினார். அப்போதே, தமது மருத்துவ குழுவினர்களை அழைத்து, ‘அப்பெண்மணிக்கு எத்தகைய உயர்சிகிச்சை செய்ய வேண்டுமானாலும் செய்யுங்கள். உடனே செய்யுங்கள். அவருக்குத் தேவையான அத்துணை வசதிகளையும் செய்து கொடுங்கள்’ என்று உத்தரவிட்டார்.

அவருக்கு அளித்த ராஜ சிகிச்சையில் நோய் நீங்கி, முழுமையாக குணமானாள். தலைமை டாக்டர் வந்து சென்றது முதலே, தமக்கு அளிக்கப் பட்ட சிகிச்சை முறையை அப்பெண்மணியும் அறிந்து வைத்திருந்தாள்.

ஆனாலும், தமக்கான பில் எவ்வளவு வருமோ என்கிற கவலையில் இருந்த போது, நீங்கள் டிஸ்சார்ஜ் ஆகலாம் என தலைமை மருத்துவர் கூறிவிட்டார்’ என்று நர்ஸ் ஒருவர் கூறிவிட்டு, பில்லை நீட்டினார்.

பில்லை வாங்கிய அந்தப் பெண், அந்தச் சீட்டில் தலைமை டாக்டர் இப்படி எழுதியிருந்ததைப் பார்த்தாள். அதில் ‘இந்தப் பெண்ணின் சிகிச்சைக்கான பில் 40 வருடத்திற்கு முன்பே ஒரு கோப்பை பாலில் தீர்க்கப்பட்டு விட்டது.’ என்று எழுதியிருந்தது.

அப்போது தான், அந்தப் பெண்னுக்கே அந்த தலைமை டாக்டர் யார் என்பது தெரியவந்தது. அவர் பசியின் கொடுமையில் சிக்கித் தவித்த போது, கொடுத்த ஒரு கோப்பை பாலுக்கு இப்படி நன்றியுணர்வோடும் ஒருவரால் நடந்து கொள்ளமுடியுமா? என வியந்தவாறு அப்பெண்மணி வீட்டிற்குச் சென்றாள். (தினத்தந்தி : குடும்ப மலர், 4.8.2013, பக்கம்:11)

ஒரு கோப்பை பாலிற்கு உலகில் மிகப் பெரிய வெகுமதி கிடைத்ததாக இந்தக் கதை கூறுகிறது. நம்மைப் படைத்து, நமக்கு உணவளித்து, அருள்பாளிக்கும் அல்லாஹ்விற்கு நன்றிபாராட்டினால், எப்படியெல்லாம் ஈருலகிலும் கூலி கிடைக்கும் என்று நாம் எண்ணிப்பார்க்க வேண்டும்.

 

அல்லாஹ்விற்கு நன்றி நவிலல் :

ஒரு மனிதனின் இகபர வாழ்வின் உயர்வுக்கு வழி வகுக்கும் நன்றியுணர்வு, அல்லாஹ்வினுடைய அளவற்ற, விரிந்த அருட்பேறுகளை அடையச் செய்திடும் என இஸ்லாம் உயர்த்திக் கூறுகிறது.

ஒரு மனிதனை அவனது தாயின் வயிற்றில் ஜனிக்கவைத்து, எதையும் அறிந்தவனாக தரணியில் அவனை ஜனனிக்க வைத்தான், அல்லாஹ். அதற்காக மனிதன், அவனுக்கு நன்றி செலுத்த வேண்டும் என்று காதுகளையும் கண்களையும் இதயங்களையும் வழங்கினான்.

وَاللَّهُ أَخْرَجَكُمْ مِنْ بُطُونِ أُمَّهَاتِكُمْ لَا تَعْلَمُونَ شَيْئًا وَجَعَلَ لَكُمُ السَّمْعَ وَالْأَبْصَارَ وَالْأَفْئِدَةَ لَعَلَّكُمْ تَشْكُرُونَ

‘நீங்கள் எதையும் அறியாதிருந்த நிலையில், அன்னையரின் வயிறுகளிலிருந்து அல்லாஹ் உங்களை வெளியேற்றினான். நீங்கள் நன்றி செலுத்துவதற்காக செவியையும், பார்வைகளையும், உள்ளங்களையும் உங்களுக்கு ஏற்படுத்தினான்.’ ( அந்நஹ்ல் : 78)

மனிதனை ஆறறிவுள்ளவனாகப் படைத்து, அவனை விலங்கிலிருந்து வேறுபடுத்தி, அவனது கண்ணியத்தை உயர்த்தி, நல்ல உடல் அமைப்பை உருவாக்கி, உடல் அங்கங்களைக் குறைவின்றி இயங்க வைக்கும் இறைவனுக்கு நன்றி செலுத்த வேண்டியதை விளம்புகிறது விழுமிய அல்குர்ஆனின் அந்நஹ்ல் அத்தியாயத்தின் 78 ஆவது வசனம்.

மனிதன் பெற்றுள்ள ஏனைய உறுப்புகளினும், இம்மூன்று உறுப்புகளை முக்கியப்படுத்திக் குறிப்பிட்டுக் கூறுவது ஏனென்றால், மனிதன் தனது கண்களால் பார்த்து, காதுகளால் கேட்டு, இதயத்தால் உணர்ந்து, அழகுறப் பபடைத்த அகிலத்தின் படைப்பாளன் அல்லாஹ்விற்கு நிறைவாக நன்றி செலுத்துவதற்கே என்பதை தெளிவாக உணர்த்துகிறது. இக்கருத்தை மீண்டும் வலியுறுத்தி இன்னொரு வசனம் பின்வருமாறு பேசுகிறது.

ثُمَّ سَوَّاهُ وَنَفَخَ فِيهِ مِنْ رُوحِهِ وَجَعَلَ لَكُمُ السَّمْعَ وَالْأَبْصَارَ وَالْأَفْئِدَةَ قَلِيلًا مَا تَشْكُرُونَ

‘பின்னர் அவனைச் சீரமைத்து தனது உயிரை அவனிடம் ஊதினான். உங்களுக்குச் செவியையும், பார்வைகளையும், உள்ளங்களையும் ஏற்படுத்தினான். நீங்கள் குறைவாகவே நன்றி செலுத்துகின்றீர்கள். (அஸ்ஸஜதா: 09)

اِنَّ الْاِنْسَانَ لِرَبِّهٖ لَـكَنُوْدٌ ۚ

100:6. நிச்சயமாக, மனிதன் தன் இறைவனுக்கு நன்றி கெட்டவனாக இருக்கின்றான்.

 

பெற்றோருக்கு நன்றி நவிலல் :

மனிதர்களிலேயே அதிகம் நன்றிக்குரியவர் யார் என்றால், நம்மைப் பெற்றெடுத்த தாய்தான். தாய் என்பவள் கருவுற்ற நாள் முதல் பலவீனத்துக்கு மேல் பலவீனப்பட்டவளாகச் நம்மைச் சுமக்கின்றாள். இரண்டு ஆண்டுகள் பாலூட்டுகின்றாள். ஒரு குழந்தையைப் பெற்றெடுப்பதற்காக அவளது அழகை இழக்கின்றாள். வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத தியாகங்களைச் செய்கின்றாள். எனவேதான், நபி (ஸல்) அவர்கள் தாயுடன் அதிகம் நட்புப் பாராட்டப் பணித்துள்ளார்கள்.

அல்லாஹ்விற்கு அடுத்து, மனிதன் அதிகம் நன்றி செலுத்தக் கடமைப்பட்டவர்கள் பெற்றோர்கள் ஆவர் என அல்குர்ஆன் கட்டளையிட்டுள்ளது.

وَوَصَّيْنَا الْإِنْسَانَ بِوَالِدَيْهِ حَمَلَتْهُ أُمُّهُ وَهْنًا عَلَى وَهْنٍ وَفِصَالُهُ فِي عَامَيْنِ أَنِ اشْكُرْ لِي وَلِوَالِدَيْكَ إِلَيَّ الْمَصِيرُ

‘மனிதனுக்கு அவனது பெற்றோரைக் குறித்தும் வலியுறுத்தியுள்ளோம். அவனை அவனது தாய் பலவீனத்துக்கு மேல் பலவீனப்பட்டவளாகச் சுமந்தாள். அவன் பாலருந்தும் பருவம் இரண்டு ஆண்டுகள். எனக்கும், உனது பெற்றோருக்கும் நன்றி செலுத்துவாயாக! என்னிடமே திரும்பி வருதல் உண்டு.'(லுக்மான் : 14)

إِنَّ اللَّهَ لَذُو فَضْلٍ عَلَى النَّاسِ وَلَكِنَّ أَكْثَرَ النَّاسِ لَا يَشْكُرُونَ

அல்லாஹ் மனிதர்கள் மீது அருளுடையவன். எனினும் மனிதர்களில் பெரும்பாலோர் நன்றி செலுத்துவதில்லை. ( அல்பகரா: 243)

அடியார்களிடம் இருந்து அல்லாஹ் அதிகமாக நன்றிகளை எதிர்ப் பார்க்கிறான்.

நன்றிகளைப் பொருத்த வரை நாம் அவைகளை மூன்றாக கவனிக்கலாம்.

முதலாவது மனிதன் மனிதனுக்கு செய்யும் நன்றியாகும். அதாவது ஒரு மனிதன் ஒரு மனிதனுக்கு ஏதாவது ஓர் உதவியை செய்தவுடன் அதற்கு பகரமாக ஜஸாக்கல்லாஹூ கைரா என்பதாகும்.

இரண்டாவது அடியான் அல்லாஹ்விற்கு நன்றி செலுத்துவதாகும் அல்லாஹ் மனிதனுக்கு வழங்கி இருக்கும் அருட் கொடைகளுக்கு பகரமாக அமல்களை செய்து அடியான் அல்லாஹ்விற்கு நன்றி செலுத்துவதாகும்

. மூன்றாவது அல்லாஹ் அடியானுக்கு நன்றி செலுத்துவதாகும். அதாவது அடியான் அமல்கள் மூலம் அல்லாஹ்விற்கு செய்யும் நன்றிகளுக்கு பகரமாக அல்லாஹ் தனது அருட் கொடைகளை அடியானுக்கு வழங்குவதாகும்.

அல்லாஹ்வை பொருத்த வரை அடியார்கள் எப்போதும் தனக்கு நன்றி செலுத்திக் கொண்டிருக்க வேண்டும் என்று அடியார்களுக்கு தான் செய்த அருட் கொடைகளை அல்லாஹ் அடிக்கடி நினைவுப் படுத்திக் கொண்டிருக்கிறான்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

1.கணவனைக் கவரும் வழிகள் 40

பத்ருப் போர் உணர்த்தும் பாடமும் படிப்பினைகளும்!

மண்ணறை வேதனை 001