முதியவர்களை மதிப்போம்

  

அன்புள்ளவர்களே!  அக்டோபர் 1- ஆம் தேதி உலக முழுவதும் சர்வதேச முதியோர் தினமாக‌ (International Day ofOlder Persons) 

அனுஷ்டிக்கப்பட்டுவருகிறது. ஆதலால் இன்றைய உரையில் 

இஸ்லாம்  முதியோர்களைப்பற்றி என்ன சொல்கிற்து? 

அவர்களிடம் நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் ? 

அவர்களிடம் நாம் எப்படி நடந்து கொள்ளக் கூடாது?

அவர்களின் மூலம் நமக்கு கிடைக்கும் நன்மைகள் / நலவுகள் என்னென்ன?

 அவர்களை  கஷ்டப்படுத்தினால் நமக்கு கிடைக்கும் ஈருலக தண்டனைகள் என்னென்ன?.

என்பதனைபற்றி தெரிந்து கொள்வோம் வாருங்கள்……!!!

பேசுகிற எனக்கும், கேட்கிற உங்களுக்கும், கேட்ட‌தின் படி அமல் செய்யும் பாக்கியத்தை வ‌ல்ல நாயகன் நம்மனைவருக்கும் தந்த‌ருள்புரிவானாக! ஆமீன்  

وَاللّٰهُ خَلَقَكُمْ ثُمَّ يَتَوَفّٰٮكُمْ‌ۙ وَمِنْكُمْ مَّنْ يُّرَدُّ اِلٰٓى اَرْذَلِ الْعُمُرِ لِكَىْ لَا يَعْلَمَ بَعْدَ عِلْمٍ شَيْــٴًــا‌ اِنَّ اللّٰهَ عَلِيْمٌ قَدِيْرٌ

மேலும் (பாருங்கள்!) அல்லாஹ் உங்களைப் படைத்தான்; பின்னர் உங்களை மரணமடையச் செய்கின்றான். மேலும், உங்களில் சிலர் தள்ளாத முதுமை வயதுவரை கொண்டு செல்லப்படுகின்றார்கள் எல்லாவற்றையும் அறிந்த பிறகு எதையும் அறியாமல் போவதற்காக! உண்மை யாதெனில், அல்லாஹ்தான் அறிவிலும் பேராற்றலிலும் முழுமையானவனாய் இருக்கின்றான்.(அல்குர்ஆன் : : 16:70)

அன்புள்ளவர்களே! நம்முடைய இஸ்லாமிய மார்க்கம் ஓர் அறிவான, அழகிய மார்க்கமாகும். ஏனென்றால்? உலகிலயே வயது முதிர்ந்த முதியோர்களிடம் அழகிய முறையில் நடந்து கொள்வது ஓர் இபாதத் என்றும், அவர்களின் மனம் புண்படியும்படி நடந்து கொள்ளக்கூடாது என்றும், அவர்களின் மூலம் நாம் சொர்க்கம் சென்றிடலாம் என்றும், அழகிய போதனைகளை கற்றுத்தரும் மார்க்கம் இஸ்லாமிய மார்க்கம் என்றால் அது மிகையாகாது.  (சற்று விரிவாக பார்ப்போம்)

நம் மார்கத்தின் கடமைகளைப் பொருத்த வரை நாம் அவைகளை  2 – ஆக பிரிக்கலாம்:-.

முதலாவது : ஹுகூகுல்லாஹ்:- அல்லாஹுவுக்கு நாம் செய்யும் கடமைகள் [உதாரணமாக‌ = தொழுகை, நோன்பு, ஸகாத், ஹஜ், முதலியனவைகளாகும்.]

இரண்டாவது :ஹுகூகுல்இபாத்:-  அதாவது அல்லாஹுத் தஆலாவுடைய அடியார்களுக்கு நாம் செய்யும் கடமைகளாகும் [உதாரணமாக‌ = முதியவர்களை மதித்தல், பெற்றோருக்கு செய்ய வேண்டிய கடமைகள், உறவினர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகள், அண்டை வீட்டாருக்கு நாம் செய்யவேண்டிய கடமைகள், முதலியனவைகளாகும்.]

அல்லாஹ்விற்கு [] செய்ய வேண்டிய கடமைகளில் தவறுகள், குறைகுற்றங்கள் ஏற்படின் குற்றப் பரிகாரங்களோடு மன்னிப்புக் கேட்கின்ற போது அடியானை  அல்லாஹ் மன்னித்துவிட இருக்கின்றது.

ஆனால், ஒரு முஸ்லிம் அல்லாஹ்வின் அடியார்களுடன் தொடர்புபடுகின்ற கடமைகளில், விவகாரங்களில் தவறிழைகின்ற பொழுது சம்பந்தப்பட்ட அடியார்கள் மன்னிக்காதவரை அல்லாஹ் மன்னிப்பதில்லை ஆக நாம்  முதியவர்களை மதிப்போம். அவர்களை நாம்  துன்புறுத்தினால் அவர்க‌ள் மன்னிக்காதவரை அல்லாஹ் [] நம்மை மன்னிக்கமாட்டான். ஆதலால் முதியவர்களுடைய விஷயத்தில் மிக கவனமாக நடந்து கொள்வேமாக!‌

ü  முதியவர்கள் நமக்குத் தேவை ஏன்? :-

 அன்புள்ளவர்களே!   மூத்தோர் சொல்லும் முதுநெல்லிக்கனியும் முதலில் கசக்கும்; பின்னர் இனிக்கும்’ என்பார்கள். உண்மையில் அனுபவபூர்வமாக உணர்ந்துகொள்ள வேண்டியது இது. அனுபவம்பெற்ற பழுத்த மரங்களாக இருக்கும் மூத்தவர்களை சொல் முதலில் கசக்கும் ஆனால் அவர்களின் அனுபவ பேச்சின் பலன் பின்னால் இனிக்கும்..

இறையில்லங்கள் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்; என்று சொல்வது போல‌ தாத்தா பாட்டி இல்லா வீட்டில் கூட குடியிருக்க வேண்டாம் என்கிறார்கள் சில அறிஞர்கள் காரணம் கேட்ட போது :-. அவர்கள் சிரார்களுக்கு நன்னெறிக்கதைகளை கூறி நற்வழிபடுத்துவார்கள், வீட்டில் நடைபெறும் சிறு, சிறு பிழைகளை சுட்டிக்காட்டி நம்மை நல்வழிபடுத்துவார்கள்.

தாத்தாக்களையும், பாட்டிகளையும், முதியோர் இல்லங்களில் விட்டு விட்டு நமது வீட்டுக் குழந்தைகளுக்கு கதைகள் சொல்லும் ‘சிடி’க்களை வாங்கி வைத்திருக்கிறோம். [தற்போது CELL பார்க்கும் சிறுசுகள்] அந்த குறுந்தகடுகள் சொல்லும் நன்னெறிக்கதைகளை குழந்தைகள் கேட்கிறதா? என்றெல்லாம் அது பார்ப்பதில்லை. செயற்கையான முறையில் கதைகள் பேசும் அந்த கணினிகள், உணர்வுகள் அறிந்து பேசும் தாத்தா பாட்டிகள் இல்லை என்பதை உணர வேண்டும். வீட்டுப் பெரியவர்களோடு குழந்தைகளை பேச விடுங்கள். அவர்களே நம்மை அன்போடு அரவணைத்தவர்கள்; நமது குழந்தைகளையும் அரவணைப்பார்கள்.

நாம் குழந்தைகளாக இருக்கும் போதும், நம் குழந்தைகள் அவர்களுடன் இருக்கும் போதும், நம் குடும்பத்தினர் அனைவரையும் நேசித்தது போல நமது வீட்டின் ஆணிவேர்களான இருக்கும் முதியவர்களை நேசிப்போம்!

நம் வீட்டில் முதியவர்கள் இருந்தால் நல்ல நல்ல… பலகாரங்களை ரசித்து.. ருசித்து சாப்பிடலாம்… இல்லையெனில்….?

ü  நம்மிடம் முதியவர்கள் இருப்பது பரக்கத்து !! அம்முதியவர்களை மதிப்பது இபாதத்து!!!

முதியவர்கள் நம்மிடம் இருப்பது பரக்கத்து; ஆதலால் அவர்களை மதிக்கச் சொல்கிறது இஸ்லாம்:-

عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏”‏ لَيْسَ مِنَّا مَنْ لَمْ يَرْحَمْ صَغِيرَنَا وَيُوَقِّرْ كَبِيرَنَا. ‏”»‏‏ , (رواه جامع الترمذي]

நம்மில் பெரியவர்களை கண்ணியப்படுத்தாதவரும், சிறியவர்கள் மீது இரக்கம் காட்டாதவரும், நம்மைச் சார்ந்தவரல்லர்…  (ஜாமிஉத் திர்மிதி 1919)

عَنِ ابْنِ عَبَّاسٍ ؓ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ ﷺ: اَلْبَرَكَةُ مَعَ اَكَابِرِكُمْ. رواه الحاكم

 நபி  அவர்கள், உங்களுடைய பெரியவர்களுடன் பரக்கத் இருக்கிறது” (முஸ்தத்ரக் ஹாகிம்)

முதியவர்களுக்கு ஏற்படும் உடல் மாற்றங்கள் மற்றும் ‘நரைமுடி’ ஏற்படுவது போன்றவை அனைத்தும் கண்ணியத்தின் அறிகுறிகளாகும். அவர்கள் மதிக்கப்பட வேண்டியவர்கள் என்பதின் குறியீடுகளாகும். ஆதலால் நபி  அவர்கள் நரை முடிகளைப் பிடுங்குவதைத் தடுத்துள்ளார்கள். மேலும் நரை முஸ்லிமுடைய ஒளி” என்று கூறினார்கள் (திர்மிதீ)

நரைமுடிகளைப் பிடுங்காதீர்கள், ஏனென்றால், கியாமத் நாளன்று இது பிரகாசத்திற்குக் காரணமாகும், எவர் இஸ்லாத்தில் இருக்கின்ற நிலையில் வயோதிகமடைகிறாரோ, (ஒரு முஸ்லிமுடைய ஒரு முடி நரைத்துவிட்டால்), அதன் காரணமாக அவருக்கு ஒரு நன்மை எழுதப்படுகிறது. ஒரு பாவம் மன்னிக்கப்படுகிறது. ஒரு பதவி உயர்த்தப்படுகிறது”  (இப்னு ஹிப்பான்)

ü  பெரியவருக்கு மரியாதை செய்து பணிவாக நடக்க வேண்டும் என்பதற்காக நபி  அவர்கள் கற்றுத் தந்த சலாம் சொல்லும் ஒழுங்கு முறை:-

சிறியவர்கள் பெரிவர்களுக்கு சலாம் சொல்லட்டும். [புகாரி 6231]

 சில குடும்பங்களில் பெரியவர்கள் பெரும்பாலான விஷயங்களில் ஒதுக்கப்படுகின்றார்கள். வயதாகி விட்ட காரணத்தினால் அவர்களை யாரும் பொருட்படுத்தாமல் முன்னுரிமை அளிப்பதில்லை. அவர்களிடத்தில் ஆலோசனை செய்யாமல் பல காரியங்கள் நடத்தப்படுகின்றன. ஆனால் நபி  அவர்கள் நன்மை – தீமை, லாப – நஷ்டம், இன்பம் – துன்பம், உயர்வு – தாழ்வு, வெற்றி – தோல்வி போன்ற வாழ்வின் அனைத்து கட்டங்களிலும் பெரியோர்களிடம் முதன்மையாக ஆலோசனைகளை கேட்டுள்ளார்கள்.

. சாப்பாடு, பானம் போன்று ஏதேனும் பொருட்களைக் பரிமாறும் போதும் முதலில் வயதில் மூத்தவருக்கு வழங்க வேண்டும். முதியோர்கள் ஒரு சமூகத்தின் விலைமதிக்க முடியாத நட்சத்திரங்கள்: பழுத்த அனுபவங்களைக் கொண்டவர்கள். அவர்களுக்கு அனைத்து காரியங்களிலும் முதல் மரியாதை கொடுக்க வேண்டும். என்பதற்க்காக‌ பல விஷயங்களில் வயதைக் கவனித்து பெரியவர்களை முற்படுத்தியுள்ளார்கள். நபி  அவர்கள்.

பயணம் புறப்படவிருந்த இருவர் நபி  அவர்களிடம் வந்தனர். அப்போது நபி  அவர்கள், “நீங்கள் பயணம் புறப்பட்டுச் செல்லும்போது (தொழுகை நேரம் வந்துவிட்டால்), தொழுகைக்காக ‘பாங்கு’ சொல்லப்பட்ட பின்னர் இகாமத்தும் சொல்லுங்கள். பின்னர் உங்களில் (வயதில்) பெரியவர் உங்களுக்குத் தலைமை தாங்கித் தொழுவிக்கட்டும்!” என்று சொன்னார்கள். [புகாரி 630]

ஒரு கூட்டத்திற்கு அவர்களில் அல்லாஹ்வின் வேதத்தை நன்கு ஓதத் தெரிந்தவர் இமாமத் செய்யட்டும். அவர்கள் ஓதுவதில் சமமாக இருந்தால் அவர்களில் சுன்னாவை நன்கு அறிந்தவர் இமாமத் செய்யட்டும். அவர்கள் சுன்னாவில் சமமாக இருந்தால் அவர்களில் முதலில் ஹிஜ்ரத் செய்தவர் இமாமத் செய்யட்டும். ஹிஜ்ரத்திலும் அவர்கள் சமமானவர்களாக இருந்தால் அவர்களில் மூத்தவர் இமாமத் செய்யட்டும்.. [முஸ்லிம் 1192]

அல்லாஹ்வின் தூதர்  அவர்கள் கூறினார்கள்: நான் கனவில் ஒரு குச்சியால் பல் துலக்குவதைப் போன்று கண்டேன். அப்போது (என் அருகிலிருந்த) இரு மனிதர்கள் (அந்தக் குச்சிக்காகப் போட்டியிட்டுக்கொண்டு) என்னை இழுத்தனர். அவர்களில் ஒருவர் மற்றவரைவிட வயதில் பெரியவராக இருந்தார். அவர்களில் வயதில் சிறியவரிடம் பல் துலக்கும் அந்தக் குச்சியை நான் கொடுத்தேன். அப்போது என்னிடம் “வயதில் மூத்தவருக்கு முன்னுரிமை தருவீராக” என்று சொல்லப் பட்டது. ஆகவே, நான் பெரியவரிடம் அந்தக் குச்சியைக் கொடுத்தேன். [முஸ்லிம் 4568]

நபி  அவர்களுக்கு ஏதேனும் பானம் கொண்டு வரப்பட்டால் அதை அருந்தி விட்டு மீதத்தை வலது புறத்தில் இருப்பவருக்குத் தருவார்கள். ஆனால் ஒரு முறை பெருமானாரிடத்தில் குவளையில் பானம் கொண்டு வரப்பட்டது. அப்போது அவர்களின் வலது புறம் சிறுவனும் இடது புறம் பெரியவர்களும் அமர்ந்திருந்தார்கள்.

பெரியவர்களுக்கு முதலில் தர வேண்டும் என்று எண்ணி அந்தச் சிறுவனிடத்தில், ‘இதை நான் இந்தப் பெரியவர்களுக்குத் தரட்டுமா?’ என்று அனுமதி வேண்டினார்கள். ஆனால் அந்த சிறுவன், ‘அல்லாஹ்வின் தூதரே! தங்களிடமிருந்து எனக்கு கிடைக்கக் கூடிய மீதத்தை நான் எவருக்கும் விட்டுக் கொடுக்க மாட்டேன்’ என்று கூறினார். எனவே நபி  அவர்கள் அதை அச்சிறுவனுடைய கையில் வைத்து விட்டார்கள். [புகாரி 2351]

வழமையாக நபி  அவர்கள் வலது புறத்தில் உள்ளவருக்குத் தான் தருவார்கள். ஆனால் இடது புறத்தில் பெரியவர்கள் இருந்ததால் அவர்களுக்குத் தர வேண்டும் என்று எண்ணினார்கள். ஆனால் அந்தச் சிறுவர் பெருமானாரின் மீது வைத்திருந்த அன்பினால் அவர்கள் வைத்த மீத பானத்தை நான் தான் குடிப்பேன் என்று கூறினார்.

வயதில் மூத்தவர்களை முன்னிலைப்படுத்துவது அவர்களுக்குக் கண்ணியம் சேர்ப்பதாகவும்; அவர்கள் அனுபவம் மிகுந்தவர்களாக இருப்பதால் நல்ல ஆலோசனையைத் தருவார்கள் என்பதற்காகவும்; நபி அவர்கள் இவ்வாறு கூறியுள்ளார்கள்.

ஒரு ஜமாத்தாக‌ முக்கியமான நபரைப் பார்த்துப் பேசுவதற்காகச் சென்றால்; அக்கூட்டத்தில் பெரியவர் முதலில் பேச வேண்டும். பெரியவர்களைப் பின் தள்ளி விட்டு இளையவர்கள் முந்திக் கொள்ளக் கூடாது:-

அப்துர்ரஹ்மான் பின் சஹ்ல் [ரலி] அவர்களும், முஹய்யிஸா பின் மஸ்ஊத் [ரலி] அவர்களும், ஹுவைய்யிஸா பின் மஸ்ஊத் [ரலி] அவர்களும், நபி  அவர்களிடம் வந்தார்கள்.

அப்துர்ரஹ்மான் பின் சஹ்ல் [ரலி] அவர்கள் (நபி  அவர்களிடம்) பேசத் துவங்கினார்கள். நபி  அவர்கள், ‘பெரியவர்களைப் பேச விடு! பெரியவர்களைப் பேச விடு!’ என்று கூறினார்கள். அந்த மூவரில் அப்துர்ரஹ்மான் பின் சஹ்ல் [ரலி] அவர்கள் வயதில் சிறியவராக இருந்தார்கள். உடனே அவர்கள் (வாய் மூடி) மௌனமாகி விட்டார்கள். பின்பு முஹய்யிஸா [ரலி] அவர்களும் ஹுவைய்யிஸா [ரலி] அவர்களும், நபி அவர்களிடம் பேசினார்கள். [புகாரி 3173]

ü  முதியவர்களை மதிப்பதும் / அவர்களை பராமரிப்பதும் இபாதத்து

உன்னிடத்தில் ஒப்படைக்கப்பட்ட‌ முதியோர்ககளை நல்ல முறையில் கவனி….

அன்புள்ளவர்களே! மனிதர்களுக்கு முத்தான மூன்று பருவங்கள் உண்டு. அவை 1) குழந்தைப் பருவம், 2) இளமைப்பருவம், 3) முதுமைப்பருவம். இவற்றில் இளமைப்பருவம் என்பது சுயமாக இயங்கும் ஆற்றல் உள்ள, அபார சக்திமிக்க, அழகான பருவமாக அமைந்திருக்கிறது. மற்ற இரண்டு பருவங்களான குழந்தைப் பருவமும், முதுமைப் பருவமும் பிறரைச் சார்ந்திருக்கிறது.  முதுமை என்பது மனிதனுக்கு ஏற்படுகின்ற ஒரு பலவீனமாகும். முதுமையை எட்டியவர்கள் சரியாக‌ சாப்பிட முடியாமல், சரியாக‌ நடக்க முடியாமல், சரியாக‌ தன்னுடைய இயற்கைத் தேவைகளைக் கூட நிறைவேற்றிக் கொள்ள இயலாமல், போகும் பருவமாகும்.

وَاللّٰهُ خَلَقَكُمْ ثُمَّ يَتَوَفّٰٮكُمْ‌ۙ وَمِنْكُمْ مَّنْ يُّرَدُّ اِلٰٓى اَرْذَلِ الْعُمُرِ لِكَىْ لَا يَعْلَمَ بَعْدَ عِلْمٍ شَيْــٴًــا‌ اِنَّ اللّٰهَ عَلِيْمٌ قَدِيْرٌ

மேலும் (பாருங்கள்!) அல்லாஹ் உங்களைப் படைத்தான்; பின்னர் உங்களை மரணமடையச் செய்கின்றான். மேலும், உங்களில் சிலர் தள்ளாத முதுமை வயதுவரை கொண்டு செல்லப்படுகின்றார்கள் எல்லாவற்றையும் அறிந்த பிறகு எதையும் அறியாமல் போவதற்காக! உண்மை யாதெனில், அல்லாஹ்தான் அறிவிலும் பேராற்றலிலும் முழுமையானவனாய் இருக்கின்றான்.(அல்குர்ஆன் : : 16:70)

ஒரு குழந்தை எப்படி பெற்றோரைச் சார்ந்து வாழுமோ அது போன்று பிள்ளைகளை சார்ந்து வாழும் பருவம்தான் முதுமைப்பருவமாகும்..

இதனால் இவர்களும் சிரமப்படுவதோடு மற்றவர்களும் இவர்களுக்காக சிரமப்பட வேண்டிய நிலை உருவாகிறது. எனவே தான் நபி அவர்கள் தள்ளாத வயதை விட்டும் இறைவனிடத்தில் அதிகமாக‌ பிரார்த்தனை செய்பவர்களாக இருந்தார்கள். (புகாரி 6363)

” اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْهَمِّ وَالْحَزَنِ، وَالْعَجْزِ وَالْكَسَلِ، وَالْبُخْلِ وَالْجُبْنِ، وَضَلَعِ الدَّيْنِ، وَغَلَبَةِ الرِّجَالِ “”.رواه البخاري

நாமும் ஒரு நாள் இது போன்ற நிலையை அடைந்தால் பிறருடைய உதவி நமக்கும் தேவைப்படும் என்பதை உணராமல் இன்றைக்கு முதியவர்களை கண்டும் காணாமல் பலர் இருக்கிறார்கள்.தான் சிறு குழந்தையாக இருக்கும் போது தன்னை எவ்வளவு சிரமப்பட்டு வளர்த்திருப்பார்கள் என்பதை நினைத்துப் பார்க்காமல்; வயது முதிர்ந்த உடன் அவர்களுடைய சொல்லுக்கு மதிப்பு கொடுக்காமல்; அவர்களுக்குத் தேவையான வசதிகளை செய்து தராமல் பலர் தங்கள் பெற்றோரை கொடுமைப்படுத்திக் கொண்டு இருக்கிறார்கள். பிள்ளைகளின் கவனிப்பில்லாமையால் ஓய்வெடுக்க வேண்டிய காலத்தில் பலர் பிச்சைஎடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

‘‘ஒரு வாலிபர் வயது முதிர்ந்தவருக்கு மரியாதை செலுத்தும் போது, வாலிபர் வயோதிக பருவத்தை அடையும்போது, அவருக்கு மரியாதை செலுத்தும் ஒருவரை இறைவன் ஏற்படுத்தாமல் விடமாட்டான் என நபி ) கூறினார்கள்’’ ( திர்மிதி)

ü  முதியோர்களுக்கு உதவி செய்:-

  அன்புள்ளவர்களே! முன்பெல்லாம் பேருந்தில் உட்கார இடமில்லாமல் வயதானவர்கள் நின்று கொண்டு வந்தால் எல்லோரும் எழுந்து இடம் கொடுப்பார்கள் ஆனால்; இன்று அந்த பழக்கம் காணாமல் போனது அதிக கவலையைத்தருகிற்து.

வயது முதிர்ந்தவர்கள் நீண்ட நேரம் தொழ நின்றால் அது அவர்களுக்குக் கஷ்டத்தைத்தரும் என்பதால், மக்களுக்குத் தொழ வைப்பவர் சுருக்கித் தொழ வேண்டும் என்று நபியவர்கள் கூறியது அவர்களை எந்த நிலையிலும் சிரமப்படுத்தக்கூடாது என்பதனை தெரியவருகிறது.  .

உங்களில் ஒருவர் மக்களுக்குத் தொழுகை நடத்தும்போது சுருக்கமா(கத் தொழுவி)க்கட்டும்! ஏனெனில், மக்களில் பலவீனர்களும் நோயாளிகளும் முதியவர்களும் உள்ளனர். உங்களில் ஒருவர் தமக்காகத் தொழும்போது தாம் விரும்பும் அளவுக்கு நீட்டிக்கொள்ளட்டும்! (புகாரி 703)

இந்த ஹதீஸில் நபி  அவர்கள் இபாதத் செய்யும் போதும்  பலவீனமானவர்களைக் கவனத்தில் கொண்டு இபாதத் செய்ய வேண்டும் என்று கூறியது போல்; . நம் கூட எந்த நிலைகளிலெல்லாம் பலவீனமானவர்கள் பயனிக்கிறார்களோ அதற்கு ஏற்றவாறு நாம் நடந்து கொள்ள வேண்டும் என்பதை உணர்த்துகிறார்கள்.

ü  முதிர்ந்த பெற்றோர்களுக்கு உதவி செய்தால் இறையுதவி நமக்கு கிடைக்கும்:-

‘(முற்காலத்தில்) மூன்று மனிதர்கள் நடந்து சென்றனர். அப்போது மழை பொழிந்தது. அவர்கள் மலையில் உள்ள ஒரு குகையில் நுழைந்தனர். ஒரு பெரிய பாறை உருண்டு வந்து குகைவாசலை அடைத்துக்கொண்டது. அப்போது அவர்கள் தமக்குள், ‘‘நீங்கள் செய்த நல்லறங்களில் மிகச் சிறந்ததைக் கூறி அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்” என்றனர்.

அவர்களில் அவர்களில் முதலான‌வர், ‘‘இறைவா! எனக்கு வயது முதிர்ந்த பெற்றோர் இருந்தனர்; நான் ஆடு மேய்க்க வெளியே சென்றுவிட்டுப் பிறகு வந்து, பால் கறந்து, பால் பாத்திரத்தைப் பெற்றோர்களிடம் கொண்டுவருவேன். அவர்கள் அருந்து வார்கள். பிறகுதான் குழந்தைகளுக்கும் குடும்பத்தாருக்கும் என் மனைவிக்கும் கொடுப்பேன்.

(இந்நிலையில்) ஓர் இரவு தாமதமாக நான் வந்தேன். பெற்றோர் உறங்கிவிட்டனர். அவர்களை எழுப்புவதை நான் விரும்ப வில்லை. குழந்தைகள் (பால் கேட்டு) என் காலடியில் அழுது கூச்சலிட்டுக் கொண்டிருந்தனர். வைகறைவரை இதே நிலை நீடித்தது. இறைவா! நான் இதை உனது அன்பை நாடியே செய்தேன் என்று நீ கருதியிருந்தால், எங்களுக்கு (இந்தப் பாறையை) சற்றே நகர்த்துவாயாக! நாங்கள் அதன் வழியாக ஆகாயத்தைப் பார்த்துக் கொள்வோம்” என்று பிரார்த்தித்தார். அவ்வாறே பாறை (சற்று) நகர்ந்தது.  (புகாரி 2215)

ü  முதிர்ந்த பெற்றோர்களை துன்புறுத்துவது பெரும் பாவமாகும்.

முதிர்ந்த பெற்றோர்களை நாம் கைவிட்டால் இறையருள் நம்மை விட்டும் தூரமாகிடும்:-

வயது முதிர்ந்த தன் பெற்றோர் இருவரையோ; அல்லது ஒருவரையோ; பெற்றிருந்து அவர்களின் மூலம் சுவனம் செல்லாமல் போய் விட்டவன் அல்லாஹ்வின் அருளை விட்டும் தூரமாகட்டும் என்ற ஜிப்ரயீல் [அலை] அவர்களின் துஆவிற்கு நபி  அவர்கள் ஆமீன் சொன்னார்கள். {அபூநஈம்}

ஒரு குழந்தை எவ்வாறு தனக்குரியதை தானே செய்து கொள்ள இயலாதோ இன்னொரு நபர் அதன் தேவையை நிவர்த்தி செய்ய வேண்டுமோ; அத்தகைய நிலையை அவர்கள் அடைந்து விடுகிறார்கள். இந்நேரத்தில் பிள்ளைகள் தாம் அவர்களைக் கனிவுடன் பராமரித்து நடந்திடல் வேண்டும்.

அவர்களுக்கு உடை உடுத்திவிட்டு, அசுத்தம் நீக்கிவிட்டு, இன்ன பிற தேவைகளை நிவர்த்தி செய்து கொடுக்கும் கடமை பிள்ளைகளுக்கு உண்டு. ஆனால் பிள்ளைகளோ; இந்நேரத்தில்தான் தம்மைப் பராமரித்த தாயை தாம் பராமரிக்க மறுத்து சனியன் போன்ற தடித்த வார்த்தைகளால் திட்டுகிறார்கள். தாய் மனம் வேதனையுறும்படி கனிவற்ற முறையில் நடந்து கொள்கிறார்கள்.

இறைவனுக்கு இணை கற்பிப்பதும், மனிதனைக் கொலை செய்வதும், தாய் தந்தையரைப் புண்படுத்துவதும், ‘பொய் கூறுவதும்’ அல்லது ‘பொய் சாட்சியம் சொல்வதும்’ பாவங்களிலேயே மிகப்பெரும் பாவங்களாகும். (புகாரி 6871)

பெற்றெடுத்த , தாய் தந்தையரின் மனதை புண்படுத்துவது மிகப்பெரும் பாவங்களென்றால்; சர்வ சாதாரணமாய் அடிப்பதையும், உதைப்பதையும், வழக்கமாகக் கொண்டிருக்கும் கேடு கெட்ட ஜென்மங்களை என்னவென்பது? நாம் சிறுவராக இருந்த போது நமக்கு அழகான பெயரிட்டு, அகமகிழ்ந்து தங்கமே! செல்லமே! என செல்லப்பெயர் சூட்டி அழைத்த தாய்க்கு முதுமை அடைந்த அவரை சனியன் போன்ற தடித்த வார்த்தைகளால் திட்டுவது என்ன விதத்தில் நியாயம்.. ?

ü  முதியோர்களிடம் நாம் நடந்து கொள்ளும் முறைக‌ள்:-

 ரபீஉ (ரஹ்) கூறுகிறார்கள்:- ‘எனது ஆசிரியப் பெருந்தகை இமாம் ஷாபிஈ (ரஹ்) அவர்கள் என்னை பார்த்துக் கொண்டிருக்கும் போது, நான் தண்ணீர் அருந்த துணியமாட்டேன்’ எனும் பணிவடக்கத்தை தெரிவிக்கிறார்கள்.

மக்கா வெற்றியின்போது:- நபித்தோழர் அபூபக்கர் رَضِيَ ٱللَّٰهُ عَنْهُ அவர்களின் தந்தை தூய இஸ்லாத்தை வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டு, நபி (ஸல்) அவர்களை பார்க்க வரும்போது, நபி  அவர்கள் அந்தப் பெரியவரைப் பார்த்து ‘நீங்கள் ஏன் என்னைப் பார்க்க வர வேண்டும்? நீங்கள் உங்கள் வீட்டிலேயே இருந்திருக்கலாமே. நாங்கள் வந்து உம்மை பார்த்திருப்போமே’ என்று பணிவுடன் கூறினார்கள்.

இமாம் ஷாபிஈ (ரஹ்) கூறுவதாவது:- ‘நான் எனது ஆசிரியப் பெருந்தகை இமாம் மாலிக் (ரஹ்) அவர்களுக்கு முன்பு அமர்ந்து புத்தகம் படிக்கும்போது, புத்தகத்தின் ஒரு பகுதியை திருப்பும்போது மெதுவாக திருப்புவேன். ஏனென்றால் அதன் சப்தத்தின் தொந்தரவு அவர்கள் கேட்கக்கூடாது என்பதற்காக’ என்கிறார்கள்.

இஸ்லாமிய மார்க்கம் முதியோர்களை அதிகமாக‌ மதிக்கச் சொல்கிறது. முதியோர்களின் நலனை அதிகமாக‌ பாதுகாக்கிறது. குழந்தைகளை விழுந்து விழுந்து, மனமுவந்து, ஆசை ஆசையாய் கவனிப்பது போன்று முதியோர்களையும் கவனிக்கும்படி  தூண்டுகிறது.

நமது முதியோர்களை முதியோர் இல்லத்தில் சேர்க்காமல் அவர்களுக்கு பணிவிடை செய்வது இறைவனுக்கு விருப்பமான செயல்:-

பத்து மாதம் சுமந்து பல துயரங்களை தாங்கிக் கொண்டு; பிள்ளைகளை பெற்றெடுத்த தாய் இரவு பகலாய் கண் விழித்து பிள்ளைகளை ஆளாக்குகிறாள். தந்தையோ; தன் இளமையை வீணடித்து தன் சுகம் முக்கியமல்ல, தன் பிள்ளைகளின் சுகமே தன் சுகம் என்றெண்ணி ஊரை விட்டு ஊர் கடந்து நாட்டை விட்டு நாடு கடந்து உழைத்து தன் பிள்ளைகளை வளர்க்கிறார்.  இப்படி தங்கள் பிள்ளைகளின் வாழ்க்கைக்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணிப்பதோடு தங்கள் வாழ்க்கையை தொலைக்கும் பெற்றோர்களை முதியோர் இல்லத்தில் சேர்க்காமல்; தமது இல்லத்திலேயே வைத்து கண்ணின் இமை போன்று அவர்களை பாதுகாக்க வேண்டும். அவர்களுக்கு உணவு, உடை, உறைவிடம், மருத்துவ வசதி போன்றவற்றிற்கு அவர்களின் பிள்ளைகள் மனதார செய்து கொடுக்க‌ பொறுப்பேற்க வேண்டும். இவ்வாறு செய்தால், பெரியோர்களின் அபிவிருத்தியும், பிரார்த்தனையும் அவர் தம் குடும்பத்தாருக்கும் கிடைக்கும் என்பது நிதர்சனமான உண்மை.

தாய் தந்தையர்களை உபசரிப்பது, அவர்களுக்கு நன்மை செய்து அரவணைப்பது, இறைவனுக்கு மிகவும் உவப்பான செயல் என இஸ்லாம் எடுத்துரைக்கின்றது.

நான் நபி  அவர்களிடம், “அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமான செயல் (அமல்) எது?” என்று கேட்டேன். அவர்கள், “உரிய நேரத்தில் தொழுகையை நிறைவேற்றுவது” என்றார்கள். “பிறகு எது?” என்று கேட்டேன். “தாய் தந்தையருக்கு நன்மை புரிவது” என்றார்கள். “பிறகு எது?” என்றேன். அவர்கள், “அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரிவது” என்று பதிலளித்தார்கள்.. [புகாரி 527]

இறைவனுக்காக போர்க்களம் சென்று போரிடுவதற்கு சமமான நற்செயலாக பெற்றோர்களுக்கு உபகாரம் புரிவது இஸ்லாத்தில் சொல்லப்பட்டுள்ளது.

ஒரு மனிதர் நபி  அவர்களிடம், “நான் (இந்த) அறப்போரில் கலந்து கொள்ளட்டுமா?” என்று கேட்டார். நபி  அவர்கள், “உமக்குத் தாய் தந்தை இருக்கின்றனரா?” என்று கேட்டார்கள். அவர், “ஆம் (இருக்கிறார்கள்)” என்று கூறினார். நபி  அவர்கள், “(அவ்வாறாயின் திரும்பிச் சென்று) அவர்கள் இருவருக்காகவும் பாடுபடுவீராக!” என்றார்கள். [புகாரி 5972]

அல்லாஹ்வின் தூதர்  அவர்களிடம் ஒரு மனிதர் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! நான் அழகிய முறையில் உறவாடுவதற்கு மிகவும் அருகதையானவர் யார்?’’ என்று கேட்டார். நபி  அவர்கள், “உன் தாய்’’ என்றார்கள். அவர், “பிறகு யார்?’’ என்று கேட்டார். நபி  அவர்கள், “உன் தாய்’’ என்றார்கள். அவர், “பிறகு யார்?’’ என்றார். “உன் தாய்’’ என்றார்கள். அவர், “பிறகு யார்?’’ என்றார். அப்போது நபி  அவர்கள், “பிறகு, உன் தந்தை’’ என்றார்கள்.. [புகாரி 5971]

ü  தம் பெற்றோரை முதியோர் இல்லத்தில் சேர்க்கும் முன் 

முதியோர் பற்றியுள்ள‌ இறை மொழியையும், நபி மொழியையும் கவனி…:-

அல்லாஹ் []  திருமறையில் கூறுகின்றான்:–  

وَقَضٰى رَبُّكَ أَلَّا تَعْبُدُوٓا إِلَّآ إِيَّاهُ وَبِالْوٰلِدَيْنِ إِحْسٰنًا ۚ إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَآ أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَآ أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قَوْلًا كَرِيمًا ‏‏

“அவனையன்றி (வேறு எவரையும்) நீர் வணங்கலாகாது என்றும், பெற்றோருக்கு நன்மை செய்யவேண்டும் என்றும் உம்முடைய இறைவன் விதித்திருக்கின்றான்; அவ்விருவரில் ஒருவரோ அல்லது அவர்கள் இருவருமோ உம்மிடத்தில் நிச்சயமாக முதுமை அடைந்து விட்டால், அவர்களை உஃப் (சீ) என்று (சடைந்தும்) சொல்ல வேண்டாம் – அவ்விருவரையும் (உம்மிடத்திலிருந்து) விரட்ட வேண்டாம் – இன்னும் அவ்விருவரிடமும் கனிவான கண்ணியமான பேச்சையே பேசுவீராக!. [அவனையன்றி (வேறு எவரையும்) நீர் வணங்கலாகாது என்றும், பெற்றோருக்கு நன்மை செய்யவேண்டும் என்றும் உம்முடைய இறைவன் விதித்திருக்கின்றான்; அவ்விருவரில் ஒருவரோ அல்லது அவர்கள் இருவருமோ உம்மிடத்தில் நிச்சயமாக முதுமை அடைந்து விட்டால், அவர்களை உஃப் (சீ) என்று (சடைந்தும்) சொல்ல வேண்டாம் – அவ்விருவரையும் (உம்மிடத்திலிருந்து) விரட்ட வேண்டாம் – இன்னும் அவ்விருவரிடமும் கனிவான கண்ணியமான பேச்சையே பேசுவீராக!. [அல்குர்ஆன்  17:23.]

وَاخْفِضْ لَهُمَا جَنَاحَ الذُّلِّ مِنَ الرَّحْمَةِ وَقُلْ رَّبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيٰنِىْ صَغِيْرًا

“இன்னும், இரக்கம் கொண்டு பணிவு என்னும் இறக்கையை அவ்விருவருக்காகவும் நீர் தாழ்த்துவீராக; மேலும், “என் இறைவனே! நான் சிறு பிள்ளையாக இருந்த போது, என்னை(ப்பரிவோடு) வ்விருவரும் வளர்த்தது போல், நீயும் அவர்களிருவருக்கும் கிருபை செய்வாயாக!” என்று கூறிப் பிரார்த்திப்பீராக!.- [அல்குர்ஆன்  17:24]

 நபி  அவர்கள் கூறினார்கள்:-  كما قال النبي صلى الله عليه وسلم 

الْجَنَّةُ تَحْتَ أَقْدَامِ الأمَّهَات

தாயின் காலடியில் சொர்க்கம் உள்ளது [ஹதிஸ்].

ஜாஹிமா (ரலி) அவர்கள் நபிகள் நாயகம்  அவர்களிடம் வந்து அல்லாஹ்வின் தூதரே நான் போர் செய்ய நாடுகிறேன். இது தொடர்பாக உங்களிடம் ஆலோசிக்க வந்துள்ளேன் என்று கூறினார்கள். உமக்கு தாய் இருக்கிறார்களா? என்று நபிகள் நாயகம்  அவர்கள் கேட்டார்கள். அவர் ஆம் என்றார். அவரை பற்றிக் கொள் ஏனெனில் சொர்க்கம் அவரது பாதங்களுக்குக் கீழ் உள்ளது. [நஸாயீ].

‏‏அல்லாஹுதஆலாவின் பொருத்தம் தந்தையின் பொருத்தத்திலும். அல்லாஹுதஆலாவின் வெறுப்பு தந்தையின் வெறுப்பிலும் உள்ளது. [ஜாமிஉத் திர்மிதி 1899]

ü  வயிற்றில் இடம் கொடுத்த அன்னைக்கு வீட்டில் இடம் இல்லை :-

 அன்புள்ளவர்களே!  வீட்டின் பெயரோ அன்னை இல்லம், ஆனால் அன்னை இருப்பதோ முதியோர் இல்லம் என்பார்கள். இம்முதுமொழிக்கேற்ப தங்களைச் சிரமத்துடன் பெற்றெடுத்து, அரவணைத்து, ஆளாக்கிய பெற்றோர்களை சிரமம் என்று கருதி தங்கள் வீட்டில் இடம் தராமல் முதியோர் இல்லங்களில் கொண்டு போய் சேர்க்கும் மக்கள்கள்  அதிகரித்து வருகின்ற‌னர். இதுபோன்றவர்களின் வீட்டின் பெயரில்தான் அன்னை இருக்கும். ஆனால் வீட்டில் அவர்களின் அன்னையர்கள் இருக்க மாட்டார்கள்.

தான், தன் மனைவி, தன் மக்களுக்கு என சொகுசான வாழ்க்கையைத் தேர்வு செய்து அயல்நாட்டுக்குப் படையெடுத்துச் செல்லும் இன்றைய சமூகம் தமக்காக தன் வாழ்நாளை அர்ப்பணித்த தன் தாயை முதியோர் இல்லத்தில் சேர்த்து விடுகின்றார்கள். தன் தாய் இறப்புத் தருவாயில் இருக்கிறார் எனும் செய்தி வந்தால்கூட பணம் அனுப்புகிறேன். நீங்களே எல்லாவற்றையும் பார்த்துக் கொள்ளுங்கள் என்று ஒற்றை வரியில் தம் கடமையை முடித்துக் கொள்கிறார்கள் பலர்.

பிள்ளைகள் இல்லாமல் பெற்றோர்கள் முதியோர் இல்லத்தில் காலத்தைக் கழித்தால் அது வேறு. ஆனால் பல பிள்ளைகள் இருந்தும் ஆதரவற்று, அனாதையாக்கப்பட்டு முதியோர் இல்லங்களில் சேர்க்கப்படுகின்றார்கள் என்றால் அது எவ்வளவு வேதனைக்குரிய விஷயம்.

எத்தனையே முதியோர்கள்; முதியோர் இல்லத்தில் தன் மகன் தன்னைக் காண வரமாட்டானா? அவன் என்னிடம் கொஞ்சம் நேரம் பேசமாட்டானா? என்ற ஏக்கத்திலேயே, மனப்புழுக்கத்திலேயே அவர்களும் இறந்து விடுகிறார்கள்.

இன்னும் எழுத்தில் எழுதிட‌முடியாத துயரங்களையும், துன்பங்களையும் முதியோர் இல்லத்தில் தாய்மார்கள் தம் பிள்ளைகளிடமிருந்து அனுபவித்து வருகிறார்கள். ஆனால் இவர்களோ அதைப் பற்றி கொஞ்சமும் கவலை செய்யாமல் முதியோர் தினம் கொண்டாடுகிறார்கள். இது தான் முதியோர் தின கொண்டாட்டத்தின் இலட்சணமா? இதுபோன்ற மனிதர்கள் வருடாவருடம் முதியோர் தினம் கொண்டாடுவதால் என்ன பயன்?

ஒப்புக்காக பெயரளவில் முதியோர் தினம் கொண்டாடுவதில் இஸ்லாம் உடன்படவில்லை. பெற்றோருக்கு இது போன்ற துயரங்கள் ஏற்பட்டுவிடக்கூடாது, தாய் என்பவள் வருடத்திற்கு ஒருமுறை அல்ல ஒவ்வொரு நாளும் போற்றப்படவேண்டியவள் என்பதுதான் இஸ்லாத்தின் கோட்பாடாகும்.

ஆக நமது கண்களில் இருந்து கண்ணீர் வரக்கூடாது என்பதற்காகவே செந்நீர் சிந்தி உழைத்த நம் முதியோர்களை . இன்றைய தினத்தில் நினைவு கூறுவோம். … “

இன்னும் சொல்ல வேண்டியது அதிகமாக உள்ளது நேரத்தின் நலனை கருதி முடித்துக் கொள்கிறேன்  வ ஆகிரு தஃவானா அனில் ஹம்து லில்லாஹி ர‌ப்பில் ஆலமீன்……

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

1.கணவனைக் கவரும் வழிகள் 40

பத்ருப் போர் உணர்த்தும் பாடமும் படிப்பினைகளும்!

மண்ணறை வேதனை 001