பாவமன்னிப்பு




அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும் உரித்தானது.

நம்முடைய ஆதி பிதா ஆதாம் (அலை) மற்றும் அன்னை ஏவாள் (அலை) அவர்கள் செய்த முதல் பாவத்தின் (Original Sin) காரணமாக இறுதி நாள் வரை அவர்களுடைய சந்ததியினர்களுக்குப் பிறக்கின்ற குழந்தைகள் அனைத்தும் பாவத்துடனே பிறக்கின்றன என்றும் நம்முடைய பாவங்களை நீக்குவதற்காகவே இயேசு நாதர் சிலுவையில் உயிர் நீத்தார் என்றும் கிறிஸ்தவர்களால் நம்பப்படுகின்றது. மேலும் இதுவே கிறிஸ்தவத்தின் உயிர் நாடியாகவும் இருக்கிறது. 

ஆனால் இஸ்லாம் மார்க்கம் இதற்கு மாற்றமான கருத்தைக் கொண்டுள்ளது. பிறக்கின்ற ஒவ்வொரு குழந்தையும் பாவமற்ற நிலையில் முஸ்லிமாகவே பிறக்கிறது என்றும் அக்குழந்தையின் பெற்றோர்களே அக்குழந்தையை யூதராகவோ, அல்லது கிறிஸ்தவராகவோ அல்லது இன்ன பிற மதத்தினராகவோ வளர்க்கிறார்கள் என்றும் கூறுகிறது.

மேலும் இஸ்லாம் மார்க்கம் என்பது இயற்கையான மார்க்கம் என்பதால் மனிதனின் இயற்கை குணங்களை எடுத்துக் கூறுகிறது. மனிதன் என்பவன் பாவம் செய்யும் குணமுடையவன் என்றும் ஆனால் எவர்கள் தம்முடைய பாவத்திற்கு இறைவனிடம் மன்னிப்புக் கோருகிறாரோ அவரே மனிதர்களில் சிறந்தவர் என்றும் கூறுகிறது.

‘எல்லா மனிதர்களும் தவறு செய்பவர்களே! தவறு செய்பவர்களில் சிறந்தவர்கள் மன்னிப்பு தேடுபவர்களே!’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அனஸ் (ரலி), ஆதாரரம் : திர்மிதி2499.

ஆதாம் (அலை) மற்றும் ஏவாள் (அலை) அவர்களுடைய பாவச் சுமையை அவர்களின் சந்தததியினர் சுமந்துக் கொண்டிருக்கிறார்கள் என்று கிறிஸ்தவம் கூறிக்கொண்டிருக்க இஸ்லாம் மார்க்கமோ ஆதாம் (அலை) மற்றும் ஏவாள் (அலை) அவர்கள் இறைவனிடம் பாவ மன்னிப்பு கோரினார்கள் என்றும் அதனால் இறைவன் அவர்களை மன்னித்து விட்டான் என்றும் கூறுகிறது. மேலும் அவர்களின் சந்ததியினர் செய்கின்ற பாவங்களுக்காக அவர்கள் பாவமன்னிப்பு கோரினால் இறைவன் மன்னித்து விடுகிறான் என்றும் இஸ்லாம் கூறுகிறது.

இறைவன் கூறுகிறான் : -
“அப்போது ஆதம் தம் இறைவனிடமிருந்து சில வார்த்தைகளைப் பெற்று (அறிந்து) கொண்டார். (அந்தச் சொற்கள் முலம் மன்னிப்பு கேடடார்) அவரை அவன் மன்னித்தான்” (அல்குர்ஆன் 2:37)

மேலும் இறைவன் கூறுகிறான் : -
“ஈமான் கொண்டவர்களே! கலப்பற்ற (மனதோடு) அல்லாஹ்விடம் தவ்பா செய்து, பாவமன்னிப்புப் பெறுங்கள்; உங்கள் இறைவன் உங்கள் பாவங்களை உங்களை விட்டுப் போக்கி உங்களைச் சுவனச் சோலைகளில் பிரவேசிக்கச் செய்வான்” (அல்-குர்ஆன் 66:8)

ஒருவரின் பாவ சுமையை இன்னொருவர் சுமக்க மாட்டார்!
“பாவம் செய்யும் ஒவ்வோர் ஆத்மாவும் தனக்கே, கேட்டைத் தேடிக்கொள்கிறது; ஓர் ஆத்மாவின் (பாவச்)சுமையை மற்றோர் ஆத்மா சுமக்காது” (அல்-குர்ஆன் 6:164)

“எவன் நேர்வழியில் செல்கின்றானோ, அவன் தன்னுடைய நன்மைக்காகவே நேர் வழியில் செல்கிறான்; எவன் வழி கேட்டில் செல்கின்றானோ, அவன் தனக்கே கேடு செய்து கொண்டான்; (நிச்சயமாக) ஒருவனுடைய பாவச்சுமையை மற்றொருவன் சுமக்கமாட்டான்” (அல்-குர்ஆன் 17:15)

“(மறுமை நாளில் தன்) சுமையைக் சுமக்கும் ஒருவன், வேறொருவனுடைய சுமையைச் சுமக்க மாட்டான்; அன்றியும் பளுவான சுமையைச் சுமப்பவன், அதில் (சிறிதேனும்) சுமந்து கொள்ளும்படி (வேறொருவனை) அழைத்தாலும், அவன் சொந்தக்காரனாக இருந்தபோதிலும் – அதில் சிறிதளவு கூட அவ்வாறு சுமந்து கொள்ளப்படாது” (அல்-குர்ஆன் 35:18)

இதையே பைபிளும் பின்வருமாறு கூறுகிறது!

“பிள்ளைகளுக்காகப் பிதாக்களும், பிதாக்களுக்காகப் பிள்ளைகளும் கொலைசெய்யப்படவேண்டாம்; அவனவன் செய்த பாவத்தினிமித்தம் அவனவன் கொலைசெய்யப்படவேண்டும்” (உபாகமம் 24:16)

இறைவன் மன்னப்பவன், மிகப் பெரும் கிருபையாளன்: -
“என் அடியார்களே! (உங்களில்) எவரும் வரம்பு மீறி தமக்குத்தாமே தீங்கிழைத்துக் கொண்ட போதிலும், அல்லாஹ்வுடைய ரஹ்மத்தில் அவர் நம்பிக்கையிழக்க வேண்டாம் – நிச்சயமாக அல்லாஹ் பாவங்கள் யாவையும் மன்னிப்பான் – நிச்சயமாக அவன் மிக்க மன்னிப்பவன்; மிக்கக் கருணையுடையவன்’ (என்று நான் கூறியதை நபியே!) நீர் கூறுவீராக” (அல்-குர்ஆன் 39:53)

இறைவன் மன்னிப்பவனாகவும்,மிகப்பெரும் கிருபையாளனாகவும், அனைத்துப் பாவங்களையும் மன்னிப்பவனாகவும் இருப்பதால் ஒருவர் தன் வாழ்க்கையில் செய்த தவறுகளுக்காக இறைவனுடைய அருளின் மேல் நம்பிக்கை இழக்கக் கூடாது.

இஸ்லாம் மார்க்கத்தில் சேருவதால் ஏற்படும் நன்மைகள்!

ஒருவர் இஸ்லாம் மார்க்கத்திற்கு திரும்பும் போது அவர் முன் செய்த அனைத்து பாவங்களையும் இறைவன் மன்னிக்கின்றான்.

“அம்ர் என்ற ஒருவர் முஹம்மது நபி (ஸல்) அவர்களிடம் வந்து உங்களுடைய வலது கையை கொடுங்கள்! நான் என்னுடைய உறுதி மொழியை தருகிறேன் என்று கூறிய போது முஹம்மது நபி (ஸல்) அவர்கள் தம்முடைய வலது கையை நீட்டினார்கள். அப்போது அம்ர் அவர்கள் தன்னுடைய கையை எடுத்துக்கொண்டார்கள். (அப்போது) முஹம்மது நபி (ஸல்) அவர்கள் அம்ரிடம் உமக்கு என்ன நேர்ந்தது? என்று கேட்டபோது, நான் ஒரு நிபந்தனை இட வேண்டும் என பதிலளித்தார்கள். முஹம்மது நபி (ஸல்) அவர்கள் அம்ரிடம் என்ன நிபந்தனையை முன் வைக்க விரும்புகிறாய்? என்று கேட்ட போது ‘இறைவன் என்னுடைய பாவங்களை மன்னிக்க வேண்டும் என்று கூறினார்கள். (அதற்கு) முஹம்மது நபி (ஸல்) அவர்கள், ஒருவர் இஸ்லாம் மார்க்கத்திற்குத் திரும்பும் போது அவருடைய முன்பாவங்களை அல்லாஹ் அழித்துவிடுகிறான் என்று உமக்குத் தெரியாதா? என்று கேட்டார்கள். (ஆதாரம் : முஸ்லிம்)

நற்செயல்களை செய்வதற்கு நினைத்தாலேயே நன்மைகள் கிடைக்கும்!

ஒருவர் இஸ்லாம் மார்க்கத்திற்குத் திரும்பிய பிறகு அவரின் நல்ல மற்றும் தீய செயல்கள் கணிக்கப்படுகின்றன. முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்: -

‘உங்கள் இறைவன் மகத்தானவன்! மிகவும் கிருபையாளன். ஒருவர் நற்செயல் புரிவதாக நினைத்து பிறகு அதை செய்யவில்லை எனில் அது அவருக்கு ஒரு நற்செயல் புரிந்ததாக எழுதப்படும். அதை அவர் செய்து விட்டால் பத்து முதல் 700 மடங்கு அல்லது அதற்கு அதிகமான நன்மைகள் எழுதப்படும்.
அதே போல் ஒருவர் ஒரு தவறான செயல் செய்ய நினைத்து அதை அவர் செய்யவில்லை எனில் ஒரு நற்செயல் செய்ததாக எழுதப்படும். அதை அவர் செய்து விட்டால் ஒரே ஒரு தீமை அவரின் மீது ஒழுதப்படும். அல்லது இறைவன் அதையும் அழத்துவிடுவான். (ஆதாரம் : முஸ்லிம்)

பாவமன்னிப்பு தேடுவது எவ்வாறு?

ஒருவர் எவ்வளவு தான் பாவங்கள் செய்திருப்பின், அவர் மனம் திருந்தி அல்லாஹ்வின் பக்கம் திரும்பியவராக தூய மனதுடன் அவனிடம் பாவமன்னிப்பு கோருவாராயின், அந்த முஃமின் ஷிர்க் போன்ற படுபயங்கரமான பாவங்களைச் செய்திருப்பினும் அவருடைய பாவங்கள் அனைத்தையும் மன்னித்து விடுவதாக அல்லாஹ் தன் திருமறையிலே கூறியிருக்கிறான்.

அதுமட்டுமல்லாமல் அளவற்ற அருளாளனும் தன்னுடைய படைப்பினங்களின் மேல் கொண்டுள்ள அளவில்லாத கருணையினாலும் அந்த முஃமினுடைய பாவங்களை மன்னிப்பதோடு அல்லாமல் அவர் செய்த தீய செயல்களை நற்செயல்களாக மாற்றி விடுவிடுகிறான்.

அளவற்ற அன்புடையயோனாகிய அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு கோருவதற்கான நிபந்தனைகள்: -
  1. மனத் தூய்மையுடன் பாவமன்னிப்பு கோரவேண்டும்
  2. செய்துக் கொண்டிருக்கின்ற பாவமான செயல்களை உடனே நிறுத்த வேண்டும்
  3. மீண்டும் அந்தப் பாவமான செயல்களின் பால் திரும்பக் கூடாது
  4. தாம் செய்த பாவமான செயல்களை நினைத்து கைசேதப்படவேண்டும்
  5. ஒரு அடியான் மற்றொரு அடியானுக்குச் செய்த பாவங்களுக்காக முதலில் அந்த அடியானிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்.
  6. மரணத்தருவாயில் உயிர் தொண்டைக் குழியை அடைவதற்கு முன்னர் பாவமன்னிப்பு கோரவேண்டும்
  7. சூரியன் மேற்கில் உதயமாவதற்கு முன்னர் பாவமன்னிப்பு கோரவேண்டும்
வரம்பு மீறி தீங்கிழைத்த பாவிகளையும் அல்லாஹ் மன்னிக்கிறான்: -

அல்லாஹ் தன்னுடைய திருமறையில் அத்தியாயம் 39, வசனங்கள் 53-54 ல் கூறுகிறான்: -

39:53 ‘என் அடியார்களே! (உங்களில்) எவரும் வரம்பு மீறி தமக்குத்தாமே தீங்கிழைத்துக் கொண்ட போதிலும், அல்லாஹ்வுடைய ரஹ்மத்தில் அவர் நம்பிக்கையிழக்க வேண்டாம் – நிச்சயமாக அல்லாஹ் பாவங்கள் யாவையும் மன்னிப்பான் – நிச்சயமாக அவன் மிக்க மன்னிப்பவன்; மிக்கக் கருணையுடையவன்’ (என்று நான் கூறியதை நபியே!) நீர் கூறுவீராக.
39:54 ஆகவே (மனிதர்களே!) உங்களுக்கு வேதனை வரும் முன்னரே நீங்கள், உங்கள் இறைவன் பால் திரும்பி, அவனுக்கே முற்றிலும் வழிபடுங்கள்; (வேதனை வந்துவிட்டால்) பின்பு நீங்கள் உதவி செய்யப்பட மாட்டீர்கள்.
செய்த தவறுக்காக உடனே அல்லாஹ்வை நினைத்து, வருந்தி பாவமன்னிப்பு கோரினால் அவர்களுடைய பாவங்களை மன்னித்து அவர்களுக்கு சுவனபதியை பரிசாக தருவான்: -
அல்லாஹ் தன்னுடைய திருமறையில் அத்தியாயம் 3, வசனங்கள் 135-136 ல் கூறுகிறான்: -
3:135 தவிர, மானக் கேடான ஏதேனும் ஒரு செயலை அவர்கள் செய்துவிட்டாலும், அல்லது (ஏதேனும் பாவத்தினால்) தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்டாலும் உடனே அவர்கள் (மனப்பூர்வமாக) அல்லாஹ்வை நினைத்து தங்கள் பாவங்களுக்காக மன்னிப்புத் தேடுவார்கள்; அல்லாஹ்வைத் தவிர வேறு யார் பாவங்களை மன்னிக்க முடியும்? மேலும், அவர்கள் அறிந்து கொண்டே தங்கள் (பாவ) காரியங்களில் தரிபட்டிருந்து விடமாட்டார்கள்.

3:136 அத்தகையோருக்குரிய (நற்) கூலி, அவர்களுடைய இறைவனிடமிருந்து மன்னிப்பும்; சுவனபதிகளும் ஆகும்; அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக் கொண்டே இருக்கும்; அவர்கள் அங்கே என்றென்றும் இருப்பர்; இத்தகைய காரியங்கள் செய்வோரின் கூலி நல்லதாக இருக்கிறது.

தவ்பா செய்து, ஈமான் கொண்டு நற்கருமங்கள் செய்பவருடைய பாவங்களை நன்மையாக அல்லாஹ் மாற்றி விடுகிறான்: -

அல்லாஹ் தன்னுடைய திருமறையில் அத்தியாயம் 25, வசனங்கள் 63-71 ல் கூறுகிறான்: -

25:63 இன்னும் அர்ரஹ்மானுடைய அடியார்கள் (யாரென்றால்) அவர்கள்தாம் பூமியில் பணிவுடன் நடப்பவர்கள்; மூடர்கள் அவர்களுடன் பேசி(வாதா)ட முற்பட்டால் ‘ஸலாம்’ (சாந்தியுண்டாகட்டும் என்று) சொல்லி (விலகிப் போய்) விடுவார்கள்.

25:64 இன்னும், அவர்கள் தங்கள் இறைவனை ஸஜ்தா செய்தவர்களாகவும், நின்றவர்களாகவும் வழிபாடு செய்து இரவிலிருப்பார்களே அவர்கள்.

25:65 ‘எங்கள் இறைவனே! எங்களைவிட்டும் நரகத்தின் வேதனையைத் திருப்புவாயாக; நிச்சயமாக அதன் வேதனை நிரந்தரமானதாகும்’ என்று கூறுவார்கள்.

25:66 நிச்சயமாக அது வாழ்வதற்கும் வசிப்பதற்கும் மிகக் கெட்ட இடமாகும்.

25:67 இன்னும், அவர்கள் செலவு செய்தால் வீண் விரையம் செய்யமாட்டார்கள்; (உலோபித்தனமாகக்) குறைக்கவும் மாட்டார்கள் – எனினும், இரண்டுக்கும் மத்திய நிலையாக இருப்பார்கள்.

25:68 அன்றியும், அவர்கள் அல்லாஹ்வுடன் வேறு நாயனைப் பிரார்த்திக்கமாட்டார்கள்; இன்னும், அல்லாஹ்வினால் விலக்கப் பட்ட எந்த மனிதரையும் அவர்கள் நியாயமின்றிக் கொல்லமாட்டார்கள், விபசாரமும் செய்ய மாட்டார்கள் – ஆகவே, எவர் இவற்றைச் செய்கிறாரோ, அவர் தண்டனை அடைய நேரிடும்.

25:69 கியாம நாளில் அவருடைய வேதனை இரட்டிப்பாக்கப்படும்; இன்னும் அதில் இழிவாக்கப்பட்டவராக என்றென்றும் தங்கிவிடுவர்.

25:70 ஆனால் (அவர்களில் எவர்) தவ்பா செய்து ஈமானுங் கொண்டு, ஸாலிஹான (நற்) செய்கைகள் செய்கிறார்களோ – அவர்களுடைய பாவங்களை அல்லாஹ் நன்மையாக மாற்றிவிடுவான். மேலும், அல்லாஹ் மிக்க மன்னிப்போனாகவும், மிக்க கிருபையுடையோனாகவும் இருக்கின்றான்.

25:71 இன்னும், எவர் தவ்பா செய்து ஸாலிஹான (நற்) செய்கைகள் செய்கின்றாரோ, அவர் நிச்சயமாக அல்லாஹ்விடம் பாவ மன்னிப்புத் தேடியவராவார்.

அறியாமையினால் தீமை செய்துவிட்டு, பாவத்தை விட்டும் திருந்திக் கொண்டால் அல்லாஹ் மன்னிக்கிறான்: -

அல்லாஹ் தன்னுடைய திருமறையில் அத்தியாயம் 6, வசனம் 54 ல் கூறுகிறான்: -

6:54 நம் வசனங்களை நம்பியவர்கள் உம்மிடம் வந்தால், ‘ஸலாமுன் அலைக்கும் (உங்கள் மீது சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக)’ என்று (நபியே!) நீர் கூறும், உங்கள் இறைவன் கிருபை செய்வதைத் தன் மீது கடமையாக்கிக் கொண்டான்; உங்களில் எவரேனும் அறியாமையினால் ஒரு தீமையைச் செய்து விட்டு அதற்குப் பின், பாவத்தை விட்டும் திரும்பி, திருத்திக் கொண்டால், நிச்சயமாக அவன் (அல்லாஹ்) மன்னிப்பவனாகவும், மிக்க கருணையுடையவனாகவும் இருக்கின்றான்.

பாவ மன்னிப்பு கோருபவர் பாவமே செய்யாதவரைப் போலாவார்: -

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: -

‘யார் தாம் செய்த பாவத்திற்காக பாவமன்னிப்பு கோருகிறாரோ அவர் பாவமே செய்யாதவரைப் போலாவார்’ (அறிவிப்பவர் : அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத், ஆதாரம்: திர்மிதி)

உயிர் தொண்டைக் குழியை அடைவதற்கு முன் பாவமன்னிப்பு கோரவேண்டும்: -

‘அல்லாஹ் தன்னுடைய அடியானுடைய பாவமன்னிப்பை மரணத்தருவாயில் அவர் உயிர் விடும் வரைக்கும் ஏற்றுக் கொள்கிறான்’ (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு உமர், ஆதாரம்: திர்மிதி)

பாவமன்னிப்புக் கோருவதன் அவசியம்: -

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: -
“அல்லாஹ்விடம் பாவ மன்னிப்பு கேளுங்கள்; அவன் பால் திரும்புங்கள்; என்னைப் பாருங்கள்! நான் ஒரு நாளைக்கு நூறு தடவை பாவ மன்னிப்பு கோரி இறைஞ்சுகிறேன்” அறிவிப்பவர்: அகர் பின் யஸார்(ரலி) நூல்: முஸ்லிம்

முன் பின் பாவங்கள் மன்னிக்கபட்ட இறைத்தூதர் (ஸல்) அவர்களே அல்லாஹ்விடம் தினமும் நூறு முறை பாவமன்னிப்பு கோரினார்கள் என்றால் நாம் எவ்வாறு கோரவேண்டும் என்பதைச் சற்று சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளோம்.

“எங்கள் இறைவா! நாங்கள் மறந்து போயிருப்பினும் அல்லது நாங்கள் தவறு செய்திருப்பினும் எங்களைக் குற்றம் பிடிக்காதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்கள் சக்திக்கப்பாற்பட்ட (எங்களால் தாங்க முடியாத) சுமையை எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் பாவங்களை நீக்கிப் பொறுத்தருள்வாயாக! எங்களை மன்னித்தருள் செய்வாக! எங்கள் மீது கருணை புரிவாயாக! நீயே எங்கள் பாதுகாவலன்; காஃபிரான கூட்டத்தாரின் மீது (நாங்கள் வெற்றியடைய) எங்களுக்கு உதவி செய்தருள்வாயாக!” (அல்குர்ஆன் 2:286)

பாவம் என்று தெரிந்தே செய்தால் பாவமன்னிப்பு கிடைக்குமா?

ஒருவருக்கு அல்லாஹ்வுடைய சட்ட திட்டங்களைப் பற்றி ஒன்றுமே தெரியாது என்பதனால் அவர் பாவமான காரியங்களை செய்யலாம் என்பதற்கு இஸ்லாத்தில் அனுமதியில்லை. அதாவது ஒரு காரியம் பாவமானது என்றோ அல்லது அந்த காரியம் இஸ்லாத்தில் தடை செய்யப்பட்டது என்று முன்பே தனக்கு தெரியாது என்று ஒருவர் கூறுவதினாலோ அந்த பாவமான செயல் அவருக்கு அனுமதியளிக்கப்பட்டதாகாது. ஏனெனில், மார்க்க கல்வியைத் தேடி, கற்று அதன்படி நடக்க வேண்டியது முஃமினான ஆண் பெண் அனைவர் மீதும் கடமையாக இருக்கிறது. 

முஃமினான ஒரு ஆணோ அல்லது பெண்ணோ ஒரு பாவமான செயலைச் செய்து விட்டு பின்னர் மனம் திருந்தியவராக தான் செய்த தவறான செயல்களுக்காக அல்லாஹ்விடம் மன்னிப்பு கோரவில்லையென்றால் தவிர்க்க முடியாத அந்த நியாயத் தீர்ப்பு நாளில் அந்த செயல்களுக்கு அல்லாஹ்விடம் பதில் சொல்லியே ஆகவேண்டும்.

அல்லாஹ் கூறுகிறான்: -
“தவிர, மானக் கேடான ஏதேனும் ஒரு செயலை அவர்கள் செய்துவிட்டாலும், அல்லது (ஏதேனும் பாவத்தினால்) தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்டாலும் உடனே அவர்கள் (மனப்பூர்வமாக) அல்லாஹ்வை நினைத்து தங்கள் பாவங்களுக்காக மன்னிப்புத் தேடுவார்கள்; அல்லாஹ்வைத் தவிர வேறு யார் பாவங்களை மன்னிக்க முடியும்? மேலும், அவர்கள் அறிந்து கொண்டே தங்கள் (பாவ) காரியங்களில் தரிபட்டிருந்து விடமாட்டார்கள்.
அத்தகையோருக்குரிய (நற்) கூலி, அவர்களுடைய இறைவனிடமிருந்து மன்னிப்பும், சுவனபதிகளும் ஆகும்; அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக் கொண்டே இருக்கும்; அவர்கள் அங்கே என்றென்றும் இருப்பர்; இத்தகைய காரியங்கள் செய்வோரின் கூலி நல்லதாக இருக்கிறது” (அல்-குர்ஆன் 3:135-136)

“நம் வசனங்களை நம்பியவர்கள் உம்மிடம் வந்தால், ‘ஸலாமுன் அலைக்கும் (உங்கள் மீது சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக)’ என்று (நபியே!) நீர் கூறும், உங்கள் இறைவன் கிருபை செய்வதைத் தன் மீது கடமையாக்கிக் கொண்டான்; உங்களில் எவரேனும் அறியாமையினால் ஒரு தீமையைச் செய்து விட்டு அதற்குப் பின், பாவத்தை விட்டும் திரும்பி, திருத்திக் கொண்டால், நிச்சயமாக அவன் (அல்லாஹ்) மன்னிப்பவனாகவும், மிக்க கருணையுடையவனாகவும் இருக்கின்றான்” (அல்-குர்ஆன் 6:54)

ஒரு முஃமின் எவ்வளவு தான் பாவங்கள் செய்தவராகயிருப்பினும் அவர் முற்றிலும் மனம் திருந்தியவராக தாம் செய்த பாவமான செயல்களுக்காக வருந்தி அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரினால் அல்லாஹ் அவருடைய எல்லா பாவங்களையும் மன்னித்து விடுவதாக அவனடைய திருமறையில் வாக்களித்திருக்கிறான். அளவற்ற அருளாளனும் கருணையாளனுமான அல்லாஹ் அவ்வாறு பாவமன்னிப்பு கோருபவருடைய பாவங்களை மன்னிப்பதோடல்லாமல் அந்தப் பாவங்களை நன்மையாக மாற்றி விடுகிறான்.

ஒருவர் அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு கோரும்போது பின்வருபவற்றை கடைப்பிடிக்க வேண்டும்:
  1. தாம் செய்த பாவங்களை ஒப்புக்கொண்டு மனம் திருந்தி வருந்த வேண்டும்.
  2. இந்த பாவமான காரியத்தை மீண்டும் செய்யமாட்டேன் என்று அல்லாஹ்விடம் உறுதிமொழி எடுக்கவேண்டும்.
  3. அவருக்கு மரணம் வருமுன் அல்லாஹ்விடம் சரணடைந்து பாவமன்னிப்பு கோரவேண்டும்.
  4. பின்னர் ஒரு உண்மையான முஃமினாக வாழ்ந்து நற்கருமங்களை செய்து வரவேண்டும்.
அல்லாஹ் தன்னுடைய திருமறையில் அத்தியாயம் 39, வசனங்கள் 53-54 ல் கூறுகிறான்: -

‘என் அடியார்களே! (உங்களில்) எவரும் வரம்பு மீறி தமக்குத்தாமே தீங்கிழைத்துக் கொண்ட போதிலும், அல்லாஹ்வுடைய ரஹ்மத்தில் அவர் நம்பிக்கையிழக்க வேண்டாம் – நிச்சயமாக அல்லாஹ் பாவங்கள் யாவையும் மன்னிப்பான் – நிச்சயமாக அவன் மிக்க மன்னிப்பவன்; மிக்கக் கருணையுடையவன்’ (என்று நான் கூறியதை நபியே!) நீர் கூறுவீராக.

எனவே நான் பாவங்கள் அதிகம் செய்த பாவியாக இருக்கிறேன் என்று பாவத்திலேயே மீண்டும் மூழ்கியிருக்காமல் உடனடியாக இந்த பாவச் செயல்களிலிருந்து மீண்டு, இந்த பாவச் செயல்களை திரும்பவும் செய்ய மாட்டேன் என்ற உறுதியுடன் அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு கோரவேண்டும்.

அல்லாஹ் தன்னுடைய திருமறையில் கூறுகிறான்: -

“இன்னும் அர்ரஹ்மானுடைய அடியார்கள் (யாரென்றால்) அவர்கள்தாம் பூமியில் பணிவுடன் நடப்பவர்கள்; மூடர்கள் அவர்களுடன் பேசி(வாதா)ட முற்பட்டால் ‘ஸலாம்’ (சாந்தியுண்டாகட்டும் என்று) சொல்லி (விலகிப் போய்) விடுவார்கள்.

இன்னும், அவர்கள் தங்கள் இறைவனை ஸஜ்தா செய்தவர்களாகவும், நின்றவர்களாகவும் வழிபாடு செய்து இரவிலிருப்பார்களே அவர்கள்.
‘எங்கள் இறைவனே! எங்களைவிட்டும் நரகத்தின் வேதனையைத் திருப்புவாயாக; நிச்சயமாக அதன் வேதனை நிரந்தரமானதாகும்’ என்று கூறுவார்கள். நிச்சயமாக அது வாழ்வதற்கும் வசிப்பதற்கும் மிகக் கெட்ட இடமாகும்.

இன்னும், அவர்கள் செலவு செய்தால் வீண் விரையம் செய்யமாட்டார்கள்; (உலோபித்தனமாகக்) குறைக்கவும் மாட்டார்கள் – எனினும், இரண்டுக்கும் மத்திய நிலையாக இருப்பார்கள். அன்றியும், அவர்கள் அல்லாஹ்வுடன் வேறு நாயனைப் பிரார்த்திக்கமாட்டார்கள்; இன்னும், அல்லாஹ்வினால் விலக்கப் பட்ட எந்த மனிதரையும் அவர்கள் நியாயமின்றிக் கொல்லமாட்டார்கள், விபசாரமும் செய்ய மாட்டார்கள் – ஆகவே, எவர் இவற்றைச் செய்கிறாரோ, அவர் தண்டனை அடைய நேரிடும். கியாம நாளில் அவருடைய வேதனை இரட்டிப்பாக்கப்படும்; இன்னும் அதில் இழிவாக்கப்பட்டவராக என்றென்றும் தங்கிவிடுவர்.

ஆனால் (அவர்களில் எவர்) தவ்பா செய்து ஈமானுங் கொண்டு, ஸாலிஹான (நற்) செய்கைகள் செய்கிறார்களோ – அவர்களுடைய பாவங்களை அல்லாஹ் நன்மையாக மாற்றிவிடுவான். மேலும், அல்லாஹ் மிக்க மன்னிப்போனாகவும், மிக்க கிருபையுடையோனாகவும் இருக்கின்றான்.
இன்னும், எவர் தவ்பா செய்து ஸாலிஹான (நற்) செய்கைகள் செய்கின்றாரோ, அவர் நிச்சயமாக அல்லாஹ்விடம் பாவ மன்னிப்புத் தேடியவராவார்” (அல்-குர்ஆன் 6:63-71)

பாவங்களின் பரிகாரங்கள்!

பிறர் குறைகளை மறைத்தல்!
யார் இவ்வுலகில் பிறருடைய குற்றங்குறைகளை மறைக்கிறாரோ அவருடைய குற்றங்குறைகளை அல்லாஹ் மறுமையில் மறைப்பான். (முஸ்லிம்)

சபையினில் ஏற்பட்ட தவறுகளுக்கு பரிகாரமாக!

ஒரு சபையினில் பங்கெடுத்துவிட்டுக் கலையும் போது,
‘ஸூப்ஹானகல்லாஹூம்ம வபிஹம்திக அஷ்ஹது அன்லாயிலாஹ இல்லா அன்த்த அஸ்தஃபிருக வஅதூபு இலைக்’

பொருள் : அல்லாஹ்வே உன்னைப்புகழ்வதுடன் உனது தூய்மையை நான் துதிக்கின்றேன். உன்னைத்தவிர உண்மையில் வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை என நான் சாட்சி கூறுகின்றேன். உன்னிடம் நான் மன்னிப்புக் கோருகின்றேன். உன் பக்கமே மீளுகின்றேன்’

என்று ஓதினால் அக்கூட்டத்தில் ஏற்பட்ட பாவங்கள் அனைத்தும் (இறைவனால்) மன்னிக்கப்பட்டுவிடும். (திர்மிதீ)

உழுவை முறையாகச் செய்வது!
யார் உழுவை முறையாகச் செய்கின்றாரோ அவருடைய நகக்கண்கள் உட்பட அவரது உடம்பு முழுவதிலிருந்து பாவங்கள் வெளியேறி விடுகின்றன. (முஸ்லிம்)

சிறிய பாவங்கள் அனைத்தும் மன்னிக்கபட கடமையான தொழுகை:
கடமையான தொழுகைக்கான நேரம் வந்ததும் யார் முறையாக உழு செய்து உள்ளச்சத்துடன் ஒழுங்காகத் தொழுகின்றாரோ அவருடைய அத்தொழுகை – அவர் பெரும்பாவங்கள் செய்யாதவரை – அவருடைய சிறிய பாவங்கள் அனைத்திற்கும் பரிகாரமாகிவிடும். அந்நிலை அவருடைய ஆயுள் முழுவதும் உண்டு. (முஸ்லிம்)

பாவம் போக்கும் ஐவேளைத் தொழுகை:
“உங்களில் ஒருவரின் வாசலில் ஆறு ஒன்று (ஓடிக் கொண்டு) இருக்கிறது. அதில் அவர் தினமும் ஐந்து முறை குளிக்கிறார். அவரின் மேனியிலுள்ள அழுக்குகளில் எதுவும் எஞ்சியிருக்குமா எனக் கூறுங்கள்” என்று தோழர்களிடம் நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். ‘அவரின் அழுக்குகளில் சிறிதளவும் எஞ்சியிராது’ என நபித் தோழர்கள் கூறினர். ‘இது ஐவேளைத் தொழுகைகளின் உவமையாகும். இதன் மூலம் அல்லாஹ் பாவங்களை அகற்றுகிறான்’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.(புகாரி)

10 நாட்கள் செய்த பாவங்களைப் போக்கும் ஜூம்ஆத் தொழுகை!
யார் முறையாக உழு செய்து ஜூம்ஆவுக்(காக பள்ளிக்)கு வந்து மௌனமாக இருந்து குத்பா – உரையைக் கேட்கின்றாரோ அவருடைய ஒரு ஜூம்ஆவுக்கும் மறு ஜூம்ஆவுக்கும் இடையேயான பாவங்களும் மேலும் அதிகப்படியான மூன்று நாட்களின் பாவங்களும் மன்னிக்கப்பட்டுவிடும் (முஸ்லிம்)

ஒரு வருட பாவங்களை போக்க ஆஷூரா நோன்பு!
ஆஷூரா (முஹர்ரம் பிறை 9, 10 அல்லது 10, 11 ஆகிய) தினங்களில் நோன்பு நோற்பதன் மூலம் கடந்த ஒரு வருட (சிறிய) பாவங்களை அல்லாஹ் மன்னிப்பான் என நான் நம்புகிறேன். (முஸ்லிம்)

இரண்டு வருடங்கள் செய்த சிறிய பாவங்களைப் போக்கும் அரஃபா நோன்பு!
அரஃபா (துல்ஹஜ் பிறை 9 ஆம்) தினத்தில் நோன்பு நோற்பது கடந்த ஒரு வருடம் மற்றும் அடுத்த ஒரு வருட (சிறிய) பாவங்களுக்குப் பரிகாரமாகும். (முஸ்லிம்)

பாவம் போக்கும் ஃநபில் தொழுகை!
ஒரு முஸ்லிம் பாவம் செய்துவிட்டால் (அதை உணர்ந்து) உழுசெய்து சுத்தமாகி இரு ரக்அத்துகள் தொழுது மன்னிப்புக் கோரினால் அவரது பாவங்களை அல்லாஹ் மன்னித்துவிடுகிறான் (அபூதாவுத்)

சிறிய முன்பாவங்கள் மன்னிக்கப்பட!
‘உஸ்மான் இப்னு அஃப்பான்(ரலி) ஒரு பாத்திரத்தில் தண்ணீர் கொண்டு வரச் சொல்லித் தம் இரண்டு முன் கைகளில் மூன்று முறை ஊற்றிக் கழுவினார்கள். பின்னர் தம் வலக்கரத்தைப் பாத்திரத்தில் செலுத்தி, வாய்க் கொப்பளித்து, மூக்கிற்குத் தண்ணீர் செலுத்தித் சீந்தினார்கள். பின்னர் தம் முகத்தை மூன்று முறை கழுவினார்கள். பின்பு தலையை ஈரக் கையால் தடவினார்கள். பின்னர் தம் இரண்டு கால்களையும் கரண்டை வரை மூன்று முறை கழுவினார்கள். பிறகு ‘நான் உளூச் செய்வதைப் போன்றே நபி(ஸல்) அவர்கள் உளூச் செய்வதை பார்த்திருக்கிறேன்’ என்று கூறிவிட்டு, நபி(ஸல்) அவர்கள் என்னிடம், ‘யாரேனும் என்னுடைய இந்த உளூவைப் போன்று செய்து, பின்னர் தீய எண்ணங்களுக்கு இடம் தராமல் இரண்டு ரக்அத்துகள் தொழுதால் அவர் முன்னர் செய்த (சிறு) பாவங்களை அல்லாஹ் மன்னிக்கிறான்” என்று கூறினார்கள் என்றார்கள்” என ஹும்ரான் அறிவித்தார். (புகாரி)

முன்பாவங்களைப் போக்கும் ரமலான்!
ரமளானில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் (தொழுது) வணங்குகிறவரின், முன்னர் செய்த பாவங்கள் மன்னிக்கப்படும் (புகாரி)
ரமலானில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் நோன்பு நோற்கிறவர்களின் முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன. (புகாரி)
லைலத்துல் கத்ரில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் வணங்குகிறவரின் முன் பாவம் மன்னிக்கப்படுகிறது. (புகாரி)

நடைபாதையில் உள்ள தடைகளை அகற்றினால்?
ஒருவர் (தொழுவதற்காக) நடந்து வரும் பாதையில் ஒரு முள் மரக்கிளை கிடப்பதைக் கண்டு, அதை அந்தப் பாதையைவிட்டும் அகற்கும் பணியில் ஈடுபட்டார். அப்பணி அவரை (ஆரம்ப நேரத்தில் தொழுவதைவிட்டும்) பிற்படுத்திவிட்டது. இப்படிப்பட்ட அந்த மனிதருக்கு அல்லாஹ் நன்றி செலுத்துகிறான். அவருக்குப் பாவமன்னிப்பும் அளிக்கிறான். (புகாரி)
பிந்திய இரவில் பாவமன்னிப்பு வழங்கப்படும்!

நம்முடைய இறைவன் ஒவ்வொரு இரவும் கீழ் வானத்திற்கு இறங்கி இரவில் மூன்றில் ஒரு பகுதி இருக்கும்போது, ‘என்னிடம் யாரேனும் பிரார்த்தித்தால் அதை நான் அங்கீகரிக்கிறேன். யாரேனும் என்னிடம் கேட்டால் அவருக்கு கொடுக்கிறேன். யாரேனும் என்னிடம் பாவமன்னிப்புக் கோரினால் அவரை நான் மன்னிக்கிறேன்’ என்று கூறுவான். (புகாரி)

அன்று பிறந்த பாலகனைப்போல் பாவமற்றவராக ஆக!
மனைவியுடன் உடலுறவு கொள்ளாமல், எந்தப் பாவமும் செய்யாமல், இந்த ஆலயத்தை ஹஜ் செய்கிறவர் அன்று பிறந்த பாலகனைப் போல் திரும்புகிறார். (புகாரி)

கடன்பட்டோருக்காக உதவுவதல்:
யார் ஏழையின் (கடன்போன்ற) சிரமங்களை எளிதாக்கி உதவுகின்றாரோ அவருடைய இம்மை- மறுமை சிரமங்களை அல்லாஹ் எளிதாக்கிவிடுகின்றான். (முஸ்லிம்)

பொறுமையுடன் இருந்தால் பாவங்கள் மன்னிக்கப்படும்!
ஒரு முஸ்லிமுக்கு நோய், வேதனை, துக்கம், கவலை, தொல்லை, துயரம் முதலான முள் குத்துவது உட்பட ஏதேனும் சோதனை நிகழ்ச்தால் அ(தனைப் பொறுத்துக் கொள்வ)தற்காக அவனுடைய பாவங்களை அல்லாஹ் மன்னித்து விடுகிறான். (புகாரி)

அல்லாஹ்விற்காக நோன்பு நோற்பது!
யார் அல்லாஹ்வின் வழியில் ஒரு நாள் நோன்பிருக்கிறாரோ அந்த ஒருநாள் நோன்பிற்காக அல்லாஹ் அவருடைய முகத்தை எழுபது ஆண்டுகள் நரகத்திலிருந்து தூரமாக்கி விடுகிறான். (புகாரி)

பாவங்களை அழிக்கும் தர்மம்!
தர்மம் பாவங்களை அழித்துவிடும். நீர் நெருப்பை அணைப்பதைப் போல. (திரிமிதீ)

ஹஜ் மற்றும் உம்ரா – பாவங்களுக்கான சிறந்த பரிகாரங்கள்!
ஓர் உம்ரா செய்வது அடுத்த உம்ரா செய்யும் வரையிலான பவத்திற்குப் பரிகாரமாகும். ஏற்றுக்கொள்ளப்பட்ட ஹஜ்ஜிற்கு சொர்க்கத்தைத் தவிர வேறு கூலியில்லை. (முஸ்லிம்)

கடல் நுரை போல உள்ள அதிகமான பாவங்களும் மன்னிக்கப்பட வேண்டுமானால்…
‘சுப்ஹானல்லாஹ் வபி ஹம்திஹி’ (அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்து துதிக்கிறேன்) என்று யார் ஒரு நாளில் நூறு முறை சொல்வாரோ அவரின் தவறுகள் அழிக்கப்பட்டுவிடுகின்றன. அவை கடலின் நுரை போன்று (மிகுதியாக) இருந்தாலும் சரியே! (புகாரி)


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

1.கணவனைக் கவரும் வழிகள் 40

பத்ருப் போர் உணர்த்தும் பாடமும் படிப்பினைகளும்!

மண்ணறை வேதனை 001