ஒரு முஃமீனிடம் இருக்க வேண்டிய கவலைகள்
முஃமின்களிடம் சில கவலைகள் இடம் பெற்றிருக்க வேண்டும். அது முஃமின்களின் வாழ்க்கையில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
1. இறைவன் பொருந்திக் கொள்ளும் அமல்களைத் தான் செய்கின்றோமா?
அமல்கள் செய்வது எவ்வளவு முக்கியமோ அதே அளவு நாம் நிறைவேற்றும் வணக்க, வழிபாடுகள், நாம் செய்யும் சேவைகள் சமுதாயத்திற்கும், மார்க்கத்திற்கும் நாம் உழைக்கின்ற உழைப்புகள் என அனைத்தும் அல்லாஹ் பொருந்திக் கொள்ளும் வகையில் இருக்கின்றதா? என நாம் கவலைப்பட வேண்டும்.
ஏனெனில், இந்த உலகில் முஃமினுக்கு மிகப் பெரிய பொக்கிஷம் இறை பொருத்தமாகும்.
وَرِضْوَانٌ
مِنَ اللَّهِ أَكْبَرُ ذَلِكَ هُوَ الْفَوْزُ الْعَظِيمُ
“அல்லாஹ்வின் திருப் பொருத்தமே மிகப் பெரியதாகும். அது தான் மகத்தான வெற்றியுமாகும்”. ( அல்குர்ஆன்: 9: 72 )
இறைப் பொருத்தம் பெற்ற செயல்களைச் செய்யவே நபிமார்கள் விரும்பினார்கள் என குர்ஆன் சான்றுரைக்கின்றது.
وَقَالَ
رَبِّ أَوْزِعْنِي أَنْ أَشْكُرَ نِعْمَتَكَ الَّتِي أَنْعَمْتَ عَلَيَّ وَعَلَى
وَالِدَيَّ وَأَنْ أَعْمَلَ صَالِحًا تَرْضَاهُ وَأَدْخِلْنِي بِرَحْمَتِكَ فِي عِبَادِكَ
الصَّالِحِينَ
“என்னுடைய ரப்பே! என் மீதும், என் பெற்றோர் மீதும் நீ அருள் செய்த உன்னுடைய அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்துவதற்கும், எதனை நீ பொருந்திக் கொள்வாயோ அத்தகைய நற்செயலை நான் செய்வதற்கும் எனக்கு நீ அருள் புரிவாயாக! மேலும், உனது கருணையினால் உனது நல்லடியார்களில் என்னைப் பிரவேசிக்கச் செய்வாயாக!” என்று ஸுலைமான் பிரார்த்தித்தார். ( அல்குர்ஆன்: 27:19 )
2. இறைவன் நம்முடைய அமல்களை அங்கீகரிப்பானா?
இன்று முஃமின்களாகிய நாம் பல வணக்க வழிபாடுகளை நிறைவேற்றுகிறோம். ஏராளமான பொதுச் சேவைகளை செய்கின்றோம். மேலும், சமுதாயத்திற்காக பல்வேறு நற்பணிகளை ஆற்றுகின்றோம். ஆனால் இதை எல்லாம் அல்லாஹ் அங்கீகரிப்பானா? என்ற கவலையும் அது பற்றிய ஆர்வமும் நம்மிடம் இருக்க வேண்டும்.
அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்: “நான் அல் முஃமினூன் அத்தியாயத்தின் 60 –ம் வசனத்தைக் குறித்து நபி {ஸல்} அவர்களிடம் “இன்னும், எவர்கள் நிச்சயமாக தங்களுடைய ரப்பிடம் திரும்பிச் செல்கின்றவர்கள் என்று அவர்களுடைய இதயங்கள் அஞ்சக்கூடியதாயிருக்கும் நிலையில் தாம் கொடுப்பவற்றை அல்லாஹ்வுக்காக கொடுக்கின்றார்களோ அத்தகையோரும்” அல்லாஹ் இப்படிக் கூறுகின்றானே இவர்கள் மது அருந்துபவர்களா? இல்லை, திருடுபவர்களா? என்று கேட்டேன். அதற்கு, நபி {ஸல்} அவர்கள் “ஸித்தீக்கின் புதல்வியே! அவ்வாறில்லை, மாறாக, அவர்கள் நோன்பு நோற்பார்கள், தொழுவார்கள், தான தர்மம் செய்வார்கள். எனினும், அவர்கள் “எங்கே இந்த அமல்களெல்லாம் அல்லாஹ்வால் ஏற்றுக் கொள்ளப்படாமல் போகுமோ?” என அச்சமும் கவலையும் கொள்வார்கள். இவர்களே, நன்மையான காரியங்களில் முன்னேறிச் செல்பவர்கள்” என பதிலளித்தார்கள்.
அலீ (ரலி) அவர்கள் கூறினார்கள்: “நீங்கள் குறைவாக அமல் செய்து விட்டதற்காக கவலை கொள்ளாதீர்கள்! மாறாக, அல்லாஹ் அந்த அமலை ஏற்றுக் கொள்ள வேண்டுமே என கவலைப்படுங்கள்! ஏனெனில், அல்லாஹ் “இறையச்சமுடையோரிடம் இருந்து தான் ( நல்லறங்களை ) ஏற்றுக் கொள்கின்றான்” என அல்மாயிதா அத்தியாயத்தின் 27 – வசனத்தை செவிமடுத்ததில்லையா?” எனக் கூறினார்கள்.
ஸலஃபுஸ் ஸாலிஹீன்களில் சிலர் ஆறுமாதம் ரமலானை அடைவதை அல்லாஹ்விடம் கேட்பார்கள். ரமலானை அடுத்த ஆறுமாதம் ரமலானில் செய்த அமல்களின் கபூலிய்யத்தை கேட்பார்கள்” என இப்னு ரஜப் ஹம்பலீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.
3. அமல் செய்ய முடியாமல் போனதற்காக கவலைப்பட வேண்டும்..
ஹஜ்ரத் இப்னு உமர் (ரலி) அவர்களுக்கு ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் ஒரு ஹதீஸினை சொல்லிக்காட்டினார்கள். “எவர் ஒருவர் ஜனாஸாவுடைய தொழுகை தொழுவாரோ அவருக்கு ஒரு கீராத் நன்மை கிடைக்கும் , எவர் மைய்யித்தை அடக்கம் செய்யும் வரை அதனுடன் இருப்பாரோ அவருக்கு இரண்டு கீராத் நன்மை கிடைக்கும், அவற்றில் ஒவ்வொன்றும் உஹத் மலைக்கு சமமானதாகும்.
ஹஜ்ரத் இப்னு உமர் (ரலி) இந்த ஹதீஸ் குறித்து ஹஜ்ரத் ஆயிஷா (ரலி) அவர்களிடம் வினவியபோது அவர்களும் ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) கூறியது உண்மையான செய்திதான் என்றதும், ஹஜ்ரத் இப்னு உமர் (ரலி) நாம் காரணமே இல்லாமல் வீணாக பலகீராத் நன்மைகளை இழந்து விட்டோமே என கவலையோடு சொன்னார்கள் – (ஜாமிவுத்திர்மிதி )
நபித்தோழர்களுக்கு நன்மையான காரியங்களின் மதிப்பு தெரிந்திருந்தது , அவர்கள் நன்மைகளில் பேராசைகொண்டிருந்தார்கள். அல்லாஹ் இன்ன காரியத்தை செய்வதால் மகிழ்ச்சி அடைகிறான் என்பது அவர்களுக்கு தெரிந்துவிட்டால் உடனடியாக அதை செய்ய ஆரம்பித்து விடுவார்கள். ஒரு செயலைப் பற்றிய நன்மை அவர்களுக்கு தாமதாமாக தெரியவந்தால் அந்தோ கைசேதமே! இது முன்பே தெரியாமல் போய்விட்டதே, தெரிந்திருந்தால் முன்பிருந்தே அதை செய்யும் பழக்கத்தை ஏற்படுத்தி இருப்பேனே! என அச்செயலை செய்யாமல் தவறி போனதற்காகத் தம் கவலையை வெளிப்படுத்துவார்கள்.
நாம் எந்த அமலைச் செய்தாலும் அந்த அமல் இறைப் பொருத்தத்தையும், கபூலிய்யத்தையும் பெற வேண்டுமானால் சில நிபந்தனைகளைக் கடைப்பிடிக்க வேண்டியது மிக மிக அவசியம்!. அவைகளாவன: –
1) ஈமான்: –
ஈமானோடு செய்யப்படாத அமல்கள் எதையுமே அல்லாஹ் ஏற்றுக் கொள்வதில்லை. அல்லாஹ் தன்னுடைய திருமறையிலே கூறுகிறான்: –
وَقَدِمْنَا
إِلَى مَا عَمِلُوا مِنْ عَمَلٍ فَجَعَلْنَاهُ هَبَاءً مَنْثُورًا
அவர்கள் செய்து வந்த அமல்களைக் கவனித்து அவற்றைப் பரப்பப்பட்ட புழுதியாக ஆக்குவோம். ( அல்குர்ஆன்: 25: 23 )
அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள், அல்லாஹ்வின் தூதரே ! இப்னு ஜுத்ஆன் என்பவர் ஜாஹிலிய்யா காலத்தில் உறவுகளை சேர்ந்து நடப்பவராகவும் ஏழை எளிய மக்களுக்கு உணவு அளிப்பவராகவும் இருந்தாரே! அது அவருக்கு பயனளிக்குமா? எனக் கேட்டார்கள். அது அவருக்கு எந்த பயனும் தராது. ஏனெனில் அவர் ” எனது இரட்சகனே! எனது பாவங்களை மறுமை நாளில் மன்னிப்பாயாக எனக் கூறவில்லை எனக் கூறினார்கள். ( நூல்: முஸ்லிம் ).
நபி {ஸல்} அவர்கள், முஆத் பின் ஜபல் (ரழி) அவர்களை எமன் பிரதேசத்திற்கு அழைப்பாளராக அனுப்பிய போது முஆத் (நீ வேதம் கொடுக்கப்பட மக்களிடம் செல்கின்றாய்). அவர்களை உண்மையாக வணங்கி வழிபடத் தகுதியானவன் அல்லாஹ்வைத் தவிர வேறு எவரும் கிடையாது, நிச்சயமாக நான் அல்லாஹ்வின் தூதராவேன் என்ற அடிப்படைக் கலிமாவின் பக்கம் அழைப்பீராக! அதற்கு அவர்கள் கட்டுப்பட்டால் தினசரி ஐவேளைத் தொழுகைகளை அல்லாஹ் அவர்கள் மீது கடமையாக்கி உள்ளான் எனக் கூறும், அதற்கும் அவர்கள் செவிசாய்த்தால் அவர்களின் செல்வத்தில் இருந்து “ஸகாத்” எடுக்கப்பட்டு அவர்களில் உள்ள ஏழை மக்களுக்கு விநியோகிக்கப்படும் எனக் கூறுவீராக …( புகாரி /1395 )
ஒருவர் கலிமாவை தனது வாழ்க்கை நெறியாக அங்கீகரித்த பின்பே மற்ற கடமைகள் அவர் மீது கடமையாகும் என்பதை இந்த இரு ஹதீஸ்களும் உணர்த்துகின்றது.
மேலும், ஒருவருடைய அமல்கள் ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு அவர் ஈமான் கொண்ட முஸ்லிமாக இருப்பது மிக மிக அவசியம் என்பதையும் இந்த நபிமொழிகள் நமக்கு உணர்த்துகின்றது.
2) மனத்தூய்மை: –
நாம் எந்த ஒரு அமலை செய்வதாக இருந்தாலும் நன்மையை எதிர்பார்த்து இஹ்லாஸோடு - மனத்தூய்மையோடு செய்ய வேண்டும். அல்லாஹ் கூறுகின்றான்.
وَأَقِيمُوا
وُجُوهَكُمْ عِنْدَ كُلِّ مَسْجِدٍ وَادْعُوهُ مُخْلِصِينَ لَهُ الدِّينَ
ஒவ்வொரு தொழுகையின் போதும் உங்கள் முகங்களை அவன் பக்கமே நிலைப்படுத்திக்கொள்ளுங்கள்; வணக்கத்தை அவனுக்கே தூய்மையாக்கியவர்களாக அவனை அழையுங்கள். ( அல்குர்ஆன்: 7: 29 )
ஒரு அமலை நாம் உளப்பூர்வமாக செய்கிறோம் என்றால் அல்லாஹ் ரப்பூல் ஆலமீன் அந்த அமலை கபூல் செவதோடு, கூலிகளை வழங்குவதோடு அதன் மூலம் பல்வேறு அஸராத்துகளை – நல்ல விளைவுகளை ஏற்படுத்துகின்றான்.
அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள்: “உங்களுக்கு முன் சென்ற காலத்தில் வாழ்ந்த ஒரு மனிதர் இன்று இரவு நான் (யாருக்கும் தெரியாமல்) இரசியமாக தர்மம் செய்வேன் என உறுதி பூண்டார். சொன்னது போன்றே இரவில் தர்மப் பொருளை ஒருவரின் கையில் கொடுத்து விட்டு வந்தார். மறுநாள் காலை மக்கள் ஒரு விபச்சாரிக்கு யாரோ வாரிக் கொடுத்திருக்கிறார் என பேசிக்கொண்டனர்.
அன்று இரவும் அவர் தன் தர்மப் பொருளை கொண்டு சென்று ஒருவரிடம் கொடுத்து விட்டு வந்தார். மறுநாள் காலை மக்கள் ஒரு செல்வந்தர் கையில் யாரோ வாரிக் கொடுத்திருக்கிறார்கள் என பேசிக் கொண்டனர்.
அன்று இரவும் அவர் தன் தர்மப்பொருளை கொண்டு சென்று ஒருவரிடம் கொடுத்துவிட்டு வந்தார்.மறுநாள் காலை மக்கள் ஒரு திருடன் கையில் யாரோ வாரிக் கொடுத்திருக்கிறார் என பேசிக் கொண்டனர்.
ஒவ்வொரு முறையும் இன்னொருவருடைய கையில் நான் கொடுத்துவிட்டேன். அல்லாஹ்வே உனக்கு புகழ் அனைத்தும்! என்று கூறினார்.அவரிடம் உம்முடைய தர்மம் ஏற்றுக்கொள்ளப்பட்டது என அசரீரி மூலம் சொல்லப்பட்டது.
மேலும், அல்லாஹ் அந்த விபச்சாரியை நல்லவளாகவும், செல்வந்தரை அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்யும் கொடையாளியாகவும், திருடனை உழைத்து சாப்பிடும் மனிதனாகவும் மாற்றினான்” என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( நூல்: இப்னு கஸீர்: பாகம் : 1, பக்கம் : 423 )
இங்கே, அவர் அந்த அமலை உளப்பூர்வமாக செய்ததால் அல்லாஹ் அந்த அமலை ஏற்றுக் கொண்டதோடு சம்பந்தப்பட்ட நபர்களின் வாழ்க்கை தரத்தையும் உயர்த்தி வாழ்க்கை பாதையையும் மாற்றி அமைத்தான்.
இந்த உலகில் சிலர்கள், அமல்களின் மூலம் மக்களிடையே பிரபலமடைய விரும்புகின்றனர். மனத்தூய்மையற்ற அமல்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. அதுமட்டுமல்லாமல் அந்த அமல்களுக்கு மறுமையில் எவ்வித பலனும் கிடைப்பதில்லை.
3) விருப்பத்துடன் செய்வது..
எந்தவொரு அமலையும் அலட்சியமாகச் செய்யாமல் அதன்மூலம் நன்மைகளை நாடியவராக செய்யவேண்டும். இறைப்பொருத்தத்தை எதிர்ப்பார்த்தவராக இறையருளின் மீது ஆசைப்பட்டவராக அனைத்து அமல்களையும் அமைத்துக் கொள்ளவேண்டும்.
நபி {ஸல்} அவர்கள் நபித்தோழர்களுக்கு உபதேசம் செய்வதை தடுக்கும் நோக்கோடும், நபி {ஸல்} அவர்களுக்கு நோவினை கொடுக்கும் நோக்கோடும் நபி {ஸல்} அவர்களின் பெரும்பாலான நேரங்களை நயவஞ்சகர்கள் இரகசியம் பேச வேண்டும் என்ற கோரிக்கையோடு மாநபி {ஸல்} அவர்களிடம் அனுமதி கோரி அடிக்கடி சந்தித்து நீண்ட நேரம் தேவையில்லாத ஏதாவது விஷயங்களை பேசிக்கொண்டிருப்பார்கள்.
மாநபி {ஸல்} அவர்களுக்கு இது சிரமமாக இருந்த போதும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் இன்முகத்தோடு அவர்களிடம் உரையாடிக் கொண்டிருந்தார்கள்.
அதே நேரத்தில் நபித்தோழர்கள் பலருக்கு மிக முக்கியமான தேவைகள் ஏற்படும் போது அண்ணலாரை அணுகுவதற்கு மிகவும் சிரமமாகவும் இருந்தது.
இந்த தருணத்தில் அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அல் முஜாதலா (58- ம்) அத்தியாயத்தின் 12- ஆம் இறைவசனத்தை இறக்கியருளினான்.
“இறைநம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் இறைத்தூதருடன் தனிமையில் பேச வேண்டுமாயின், அவ்வாறு பேசுவதற்கு முன்பாக தான தர்மம் செய்யுங்கள். இது உங்களுக்கு நன்மையானதும், மிகத்தூய்மையானதும் ஆகும். ஆனால், தர்மம் செய்வதற்கு எதுவும் இல்லை என்றால் திண்ணமாக, அல்லாஹ் பெரிதும் மன்னிப்பவனாகவும் கருணை மிக்கவனாகவும் இருக்கின்றான்”. (அல்குர்ஆன்: 58: 12 )
இந்த இறைவசனம் இறங்கியதன் பின்னர் நபி {ஸல்} அவர்களைத் தொந்தரவு செய்து எந்த நயவஞ்சகர்களும் நெருங்கவில்லை. அதே நேரத்தில் நபித்தோழர்கள் அன்று குறைந்த பொருளாதாரத்தோடு இருந்தமையால் தர்மம் செய்து விட்டு தனிமையில் இரகசியம் பேசும் வாய்ப்பை பெற முடியாமல் போனது.
அலீ இப்னு அபீ தாலிப் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “அருள்மறையின் ஒரு வசனம் எனக்கு முன்பாக யாரும் அமல் செய்தது கிடையாது, எனக்குப் பின்பும் யாரும் அமல் செய்ய முடியாது. என்னிடம் ஒரு தீனார் இருந்தது நான் பத்து திர்ஹம்களாக மாற்றி வைத்துக் கொண்டேன். எப்போதெல்லாம் நான் நபி {ஸல்} அவர்களிடம் இரகசியம் பேச வேண்டும் என்று விரும்பினேனோ அப்போதெல்லாம் ஒரு திர்ஹத்தை தர்மம் செய்து விட்டு நபி {ஸல்} அவர்களிடம் சென்று பேசினேன். பின்பு இந்த சட்டம் மாற்றப்பட்டது. என்று கூறி மேற்கூறிய இறைவசனத்தை ஓதிக் காண்பித்தார்கள்.
இமாம் முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: “அலீ (ரலி) அவர்கள் நபி {ஸல்} அவர்களிடம் பத்தி சிறப்பு பண்புகள் குறித்து கேட்டார்கள்
பிரபல விரிவுரையாளர் இமாம் முகாத்தில் இப்னு ஹய்யான் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: “இந்த சட்டம் பத்து நாட்கள் அமலில் இருந்தது. பின்னர் 13 –ஆம் வசனம் இறக்கியருளப்பட்டு இந்த சட்டம் மாற்றப்பட்டது.
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறுவார்கள்: அலீ (ரலி) அவர்களிடத்தில் இருந்த மூன்று அம்சங்கள் ஏதாவது ஒன்று என்னிடம் இருப்பதை நான் செந்நிற ஒட்டகைகள் கிடைப்பதை விட உயர்ந்ததாக எண்ணிணேன்
1,இந்த இறைவசனத்தின் அமல். 2.கைபர் யுத்தத்தில் நபி {ஸல்} அவர்கள் அலீ (ரலி) அவர்களை “நாளை ஒருவரிடம் நான் இஸ்லாமியக் கொடியை வழங்குவேன். அவரை அல்லாஹ்வும், அவனது தூதரும் நேசிக்கின்றார்கள். அவரும் அல்லாஹ்வையும், அவனது தூதரையும் நேசிக்கின்றார்” என்று புகழ்ந்து கூறியது. 3.அன்னை ஃபாத்திமா (ரலி) அவர்களை திருமணம் செய்திருந்தது.
அலீ (ரலி) அவர்கள் நன்மையான காரியங்களை விரைந்து செய்வதிலே எவ்வளவு ஆர்வமாக இருந்தார்கள் என்பதை இந்த நிகழ்வு நமக்கு உணர்த்துகின்றது.
உதாரணமாக செல்வத்தை இறைவழியிலே செலவழிப்பதைப்பற்றி அருள்மறையிலே அல்லாஹ் கூறும்போது அவனுடையத் திருமுகத்திற்காகத் தரவேண்டுமென்று கூறுகிறான்.
நல்லவற்றில் நீங்கள் எதைச் செலவிட்டாலும் அல்லாஹ்வின் திருப்தியைப் பெறவே செலவிடுகிறீர்கள். நல்லவற்றில் நீங்கள் எதைச் செலவிட்டாலும் உங்களுக்கே அது முழுமையாக வழங்கப்படும். நீங்கள் அநீதி இழைக்கப்படமாட்டீர்கள். ( அல்குர்ஆன்: 2: 272 )
தர்மம் மட்டுமல்ல தொழுகை நோன்பு ஹஜ் உட்பட எந்தக் கடமைகளாக இருப்பினும் வெறுப்பில்லாமல் விருப்பத்தோடு செய்யவேண்டும். சும்மா தானே இருக்கின்றோம், ஆகவே தொழுவோம் கோடி கோடியாய் பணமும், செல்வமும் வீணாகத்தானே இருக்கின்றது. எனவே, தர்மம் செய்வோம். நல்ல உடல் நலமும், ஆரோக்கியமும் இருப்பதால் நோன்பு நோற்போம். ஏதோ தேவைக்காகக் கேட்டுவிட்டார் என்பற்காக உதவி செய்வோம் என்று அலட்சியமாக ஆர்வமின்றி செயல்படாமல் அல்லாஹ்வின் அருள் மீது ஆசைப்பட்டவராக இக்காரியத்தை அவன் பொருந்திக் கொள்ள வேண்டும் என்று செயல்பட வேண்டும். அப்போதுதான் அந்த அமல்கள் அல்லாஹ்விடத்திலே அங்கீகரிக்கப்படும். இதை திருமறையில் கூறுகிறான்.
وَمَا
مَنَعَهُمْ أَنْ تُقْبَلَ مِنْهُمْ نَفَقَاتُهُمْ إِلَّا أَنَّهُمْ كَفَرُوا
بِاللَّهِ وَبِرَسُولِهِ وَلَا يَأْتُونَ الصَّلَاةَ إِلَّا وَهُمْ كُسَالَى وَلَا
يُنْفِقُونَ إِلَّا وَهُمْ كَارِهُونَ
அல்லாஹ்வையும் அவனது தூதரையும் மறுத்ததும் சோம்பலாகவே தொழுது வந்ததும் விருப்பமில்லாமல் (நல்வழியில்) செலவிட்டதுமே அவர்கள் செலவிட்டதை அவர்களிடமிருந்து ஏற்கப்படுவதற்கு தடையாக இருக்கிறது. ( அல்குர்ஆன்: 9: 54 )
நபி (ஸல்) அவர்கள் ரமழான் மாதத்திலே நின்று வணங்குவதைப் பற்றி கூறும் போது கூட பின்வருமாறு நவின்றார்கள்.
எவரொருவர் ஈமான் கொண்டவராகவும், நன்மையை எதிர் பார்த்தவராகவும் ரமழானிலே நின்று வணங்குகிறாரோ அவரது முன்பாவங்கள் மன்னிக்கப்படும். (நூல்: புகாரி)
ஈமான் கொண்டவராக இருப்பதோடு இறைப்பொருத்தத்தினை எதிர் பார்த்தவராக இரவுத் தொழுகையிலே ஈடுபடும் போதுதான் அதற்குரிய பிரதிபலன் கிடைக்கும் என்பதை இதிருந்து அறிந்து கொள்ளலாம்.
4) முகஸ்துதி இல்லாத வகையில் இருக்க வேண்டும்
இறைவனை வணங்குவதற்காகவே நாம் படைக்கப்பட்டுள்ளோம். அதுவும் கட்டளைகளுக்கு அடிபணிந்து மனத்தூய்மையோடு அவனை வணங்க வேண்டும் என்று அல்லாஹ் அருள் மறையிலே கூறுகிறான்.
وَمَا
أُمِرُوا إِلَّا لِيَعْبُدُوا اللَّهَ مُخْلِصِينَ لَهُ الدِّينَ حُنَفَاءَ
وَيُقِيمُوا الصَّلَاةَ وَيُؤْتُوا الزَّكَاةَ وَذَلِكَ دِينُ الْقَيِّمَةِ
வணக்கத்தை அல்லாஹ்விற்கே கலப்பற்றதாக்கி வணங்குமாறும் உறுதியாக நிற்குமாறும் தொழுகையை நிலைநாட்டுமாறும் ஸகாத்தை கொடுக்குமாறும் தவிர அவர்களுக்கு வேறுகட்டளை பிறப்பிக்கப்படவில்லை. இதுவே நேரான மார்க்கம்.
(அல்குர்ஆன்: 98: 5)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “நாங்கள் தஜ்ஜாலைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தபோது நபி (ஸல்) அவர்கள் எங்களிடம் வந்து, ‘தஜ்ஜாலை விட உங்களின் மீது நான் மிகவும் பயப்படக்கூடிய ஒன்றை அறிவிக்கட்டுமா?’ எனக் கேட்டார்கள். நாங்கள் அறிவியுங்கள் என்றோம். அதற்கு அவர்கள், ‘அது மறைமுகமான ஷிர்க் ஆகும். அதாவது ஒருவர் தொழுவதற்காக நிற்கிறார், அப்போது அவரை வேறொருவர் பார்க்கிறார் என்பதற்காக அத்தொழுகையை அவர் அழகுறச் செய்வதாகும்’ எனக் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூசயீத் (ரலி), ஆதாரம்: இப்னுமாஜா.
நமது செயல்களைப் பற்றி மற்றவர்கள்பெருமையாக போற்றி பேச வேண்டுமென்றோ நம்மைப் புகழ்ந்து வாழ்த்த வேண்டுமென்றோ அமல் செய்தால் அவற்றை அல்லாஹ் நன்மையை விட்டும் அப்புறப்படுத்திவிடுவான். முகஸ்துதியோடு செய்யப்படுகின்ற அமல்களை அல்லாஹ் அணு அளவு கூட அவற்றை அங்கீகரிக்கமாட்டான். இதைத் திருமறையிலே தெளிவுபடுத்துகிறான்.
يَاأَيُّهَا
الَّذِينَ آمَنُوا لَا تُبْطِلُوا صَدَقَاتِكُمْ بِالْمَنِّ وَالْأَذَى كَالَّذِي
يُنْفِقُ مَالَهُ رِئَاءَ النَّاسِ
நம்பிக்கைக் கொண்டோரே அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பாது மக்களுக்குக் காட்டுவதற்காக தனது செல்வத்தை செலவிட்டவனைப் போல உங்கள் தர்மங்களை சொல்லிக்காட்டியும் தொல்லை தந்தும் பாழாக்கி விடாதீர்கள்.
(அல்குர்ஆன்
:2:264)
வெறும் கை தட்டலுக்காகவும், பிறர் பாராட்டிற்காகவும் செய்யப்படுகின்ற காரியங்கள் யாவும் நன்மையை விட்டும் தடுக்கப்பட்டுவிடும் என்பதை நபி (ஸல்) அவர்கள் அழகிய சம்பவத்தின் மூலம் எச்சரிக்கின்றார்கள்.
செல்வத்தை வாரி வழங்கிய வள்ளல், மார்க்கத்தை தெளிவுபடுத்திய ஆலிம், மார்க்கப் பாதையில் உயிரை விட்ட தியாகி இம்மூவரும் மனிதர்களிடம் கிடைக்கின்ற நன்மதிப்பிற்காகவும் பெருமைக்காகவும் புகழுக்காகவும் செயல்பட்டதால் அவர்களின் அமலை மறுமையிலே அல்லாஹ் ஏற்றுக் கொள்ளமாட்டான். (ஹதீஸின் கருத்து) அறிவிப்பவர்: அபூஹீரைரா (ரலி) ( நூல்: முஸ்லிம் )
ரோமர்களை எதிர்த்து நடைபெற்ற போர்களத்தில் எதிரிகளில் ஒருவன் முஸ்லிம்களை நோக்கி என்னுடன் உங்களின் யார் சண்டைக்கு வருகிறீர்? என கூச்சலிட்டான்.என்னை எதிர்கொள்ள உங்களில் யாருக்கு தைரியம் இல்லையா?என கொக்கரித்தான். முஸ்லிம்களில் அவனை எதிர்கள்ள யாரும் தயாரில்லை.அப்போது முஸ்லிம்களின் படையில் இருந்த அப்துல்லா இப்னு முபாரக் ரஹ் அவர்கள் தன் தைலைப்பாகையை கொண்டு தன் முகத்தை மறைத்துக் கொண்டு வாளுடன் களத்தில் அந்த எதிரியை எதிர்கொண்டார்கள். அவனுடன் சண்டையிட்டு அவனை கொலை செய்துவிட்டார்கள்.
பின்பு இன்னொருவன் வந்தான்.அவனையும் அவர்களே எதிர்கொண்டு கொன்று விட்டார்கள்.பின்பு மூன்றாவது ஒருவன் வந்தான்.அவனையும் எதிர்கொண்டு இப்னுல்முபாரக் ரஹ் அவர்கள் அவன் கதையையும் முடித்தார்கள். இறுதியில், மக்கள் யார் அந்த மகா பெரிய வீரர்? என பார்க்க ஆவல் கொண்டனர்.இந்த தீனின் கண்ணியத்தை நிலைநிறுத்திய அப்போராளி யார் என மக்கள் அனைவரின் எதிர்பார்ப்பாக இருந்தது. மக்கள் முட்டிமோதி அவரை காண முற்பட்டபோதும் முடியவில்லை. அக்கூட்டத்தில் இருந்த அபூஉமர் அவர்களுக்கு இவர் நம் நண்பர் அப்துல்லாஹ் இப்னுல் முபாரக்காக இருக்குமோ என சந்தேகம் வந்து அவரை பின் தொடர்ந்து சென்றார்.
இறுதியாக வலுக்கட்டாயமாக அவரிம் முகத்திரையை நீக்கி பார்த்து விட்டார்கள். மக்களிடமிருந்து ஏன் உங்களை மறைக்கிறீர்கள்?என இமாமிடம் காரணம் கேட்டபோது,நான் அல்லாஹ்வுக்காக ஜிஹாத் செய்ய வந்தேன்.வேறு யாரும் என்னை புகழவேண்டுமென்றோ,நன்றி சொல்லவேண்டுமென்றோ வரவில்லை. என் அமல் அல்லாஹ்வுக்காகவே ஒப்படைக்கப்படவேண்டும்.என்று பதில் கூறினார்கள்.
5) தீமைகளோடு கலந்திருக்கக் கூடாது..
ادْفَعْ
بِالَّتِي هِيَ أَحْسَنُ السَّيِّئَةَ نَحْنُ أَعْلَمُ بِمَا يَصِفُونَ
நல்லதைக் கொண்டு கெடுதியைத் தடுப்பீராக. அவர்கள் கூறுவதை நாம் நன்கு அறிவோம்.
( அல்குர்ஆன்: 23: 96 )
وَلَا
تَسْتَوِي الْحَسَنَةُ وَلَا السَّيِّئَةُ ادْفَعْ بِالَّتِي هِيَ أَحْسَنُ
فَإِذَا الَّذِي بَيْنَكَ وَبَيْنَهُ عَدَاوَةٌ كَأَنَّهُ وَلِيٌّ حَمِيمٌ
நன்மையும் தீமையும் சமமாகாது. நல்லதைக் கொண்டு (பகைமையைத்) தடுப்பீராக. எவருக்கும் உமக்கும் பகை இருக்கிறதோ அவர் அப்போதே உற்ற நண்பராகிவிடுவார். ( அல்குர்ஆன்: 41: 34 )
தடுக்கப்பட்ட வழிகளிலே நிறைவேற்றப்படுகின்ற அனைத்து நற்காரியங்களும் நன்மைகளைப் பெற்றுத் தருவதற்கு தகுதியற்றவைகளாகும்.
உமர் (ரலி) அவர்கள் அங்கத் தூய்மை செய்யாமல் எந்தத் தொழுகையும் ஏற்கப்படாது. மோசடி செய்த பொருளால் செய்யப்படும் எந்த தான தர்மமும் ஏற்கப்படாது என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுவதை நான் கேட்டிருக்கிறேன் என்று கூறினார்கள். ( நூல்: முஸ்லிம் )
ஆகவே, மறுமைநாளிலே நம்மைக் காப்பாற்றக்கூடியதாக நமது அமல்கள் இருக்க வேண்டுமெனில், அவை கபூலிய்யத் பெற்றதாக இருக்க வேண்டும்.
அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நம் அனைவரின் அனைத்து அமல்களையும் கபூல் செய்தருள்வானாக! ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்! வஸ்ஸலாம்!!!
கருத்துகள்
கருத்துரையிடுக