ஒரு குடும்பத்தின் தலைவராக ஒரு மனிதனின் பங்கு (பிள்ளைகள் வளர்ப்பில்)

 


وَالَّذِيْنَ يَقُوْلُوْنَ رَبَّنَا هَبْ لَـنَا مِنْ اَزْوَاجِنَا وَذُرِّيّٰتِنَا قُرَّةَ اَعْيُنٍ وَّاجْعَلْنَا لِلْمُتَّقِيْنَ اِمَامًا

மேலும், அவர்கள் இறைஞ்சிய வண்ணம் இருப்பார்கள்: “எங்கள் இறைவனே! எங்கள் மனைவிமார்களையும், எங்கள் குழந்தைகளையும், எங்கள் கண்களுக்குக் குளிர்ச்சி அளிக்கக்கூடியவர்களாய் விளங்கச் செய்வாயாக! மேலும், எங்களை இறையச்சமுடையோருக்குத் தலைவர்களாய் திகழச் செய்வாயாக!”(அல்குர்ஆன் : 25:74)

اَلْمَالُ وَ الْبَـنُوْنَ زِيْنَةُ الْحَيٰوةِ الدُّنْيَا‌ ۚ وَالْبٰقِيٰتُ الصّٰلِحٰتُ خَيْرٌ عِنْدَ رَبِّكَ ثَوَابًا وَّخَيْرٌ اَمَلًا‏

செல்வமும், பிள்ளைகளும் இவ்வுலக வாழ்க்கையின் கவர்ச்சியாகும். நிலையான நல்லறங்களே உமது இறைவனிடம் கூலியில் சிறந்ததும், எதிர்பார்க்கப்படுவதில் சிறந்ததுமாகும். திருக்குர்ஆன் 18:46                                            பிள்ளைகள் அல்லாஹ் எமக்களித்த அருற்கொடையாகும். இவர்களை அமானிதமாகப் பார்த்து உருவாக்குவது பெற்றோர்களின் கடமையாகும். எனது பிள்ளைகளின் முன்னேற்றம், பலவீனங்களுக்கு நான் தான் காரணம் என்ற பொறுப்புணர்வுடன் நாம் எமது பிள்ளைகள் விடயத்தில் கவனம் எடுப்போம்.

பிள்ளைப் பாக்கியம் இறையருள்.

அல்லாஹ்வின் அருள்கள் எண்ணிலடங்காதவை. அதன் பயன்களும் பலதரப்பட்டவை. இந்த அருள்களில் இஸ்லாம் என்பது நிகரில்லா அருளாகும். பிள்ளைப் பாக்கியம் அல்லாஹ் வழங்கும் பெரிய அருள்களில் ஒன்றாகும்.

இது பற்றி அல்குர்ஆன் இப்படிக் கூறுகின்றது

لِلّٰهِ مُلْكُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ ‌ؕ يَخْلُقُ مَا يَشَآءُ‌ ؕ يَهَبُ لِمَنْ يَّشَآءُ اِنَاثًا وَّيَهَبُ لِمَنْ يَّشَآءُ الذُّكُوْرَ ۙ‏   اَوْ يُزَوِّجُهُمْ ذُكْرَانًا وَّاِنَاثًا‌ ۚ وَيَجْعَلُ مَنْ يَّشَآءُ عَقِيْمًا‌ؕ اِنَّهٗ عَلِيْمٌ قَدِيْرٌ

அல்லாஹ்வுக்கே வானங்களும், பூமியும் சொந்தமானது. அவன் நாடியதைப் படைக்கின்றான். தான் நாடுகின்றவனுக்கு பெண் பிள்ளைகளை கொடையாகக் கொடுக்கின்றான். நான் நாடுகின்றவனுக்கு ஆண் பிள்ளையை கொடையாகக் கொடுக்கின்றான். அல்லது ஆண் பிள்ளைகளையும் பெண் பிள்ளைகளையும் சேர்த்தும் கொடுக்கின்றான். மற்றும் தான் நாடியவனை மலடாக ஆக்குகின்றான். நிச்சயமாக அவன் மிக அறிந்தவன். ஆற்றலுள்ளவன்’ (42:49 &50).

பிள்ளைகள் எமது வாழ்க்கைக்கு அழங்காரமாகும். இவர்கள் மூலம் வாழ்வில் நிம்மதியை சந்தோசத்தை தேடுகின்றோம். இவர்கள் வாழ்வை வளமாக்கும். வாழ்வில் ஏற்படும் பல்வேறு கஷ்டங்கள் பிள்ளைச் செல்வங்களைப் பார்க்கின்ற போது நீங்கி விடுகின்றது. ‘செல்வமும், பிள்ளைகளும் உலக வாழ்வின் அழங்காரங்களேஎன அல்குர்ஆன் கூறுகின்றது. (கஹ்ப்: 46).

பிள்ளைகள் அமானிதங்கள்

இறையருளாகக் கிடைக்கப்பெற்ற குழந்தைகள் எமக்கு அமானிதமாகும்.

ü நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளர்கள். நீங்கள் ஒவ்வொருவரும் அவரது பொறுப்பு பற்றி விசாரிக்கப்படுவீர்கள். தந்தை தனது வீட்டுக்குப் பொறுப்பானவன். அவன் அதனைப் பராமரிப்பது பற்றி விசாரிக்கப்படுவான்….’ (புஹாரி, முஸ்லிம்).

உமர் (ரழி) அவர்கள் கூறுகின்றார்கள்நீ உனது பிள்ளைக்கு பண்பாட்டைக் கொடுத்து வளர்ப்பீராக. அவனுக்கு என்ன ஒழுக்கத்தைக் கொடுத்தாய், எதனைக் கற்றுக் கொடுத்தாய் என நீ வினவப்படுவாய். மேலும் அவன் உனக்கு பணிவிடை செய்வது பற்றியும், உனக்கு கட்டுப்படுவது பற்றியும் வினவப்படுவான்’. ஒவ்வொரு பெற்றோரும் தங்களது குழந்தைகள் வெற்றியாளர்களாக வர வேண்டும் என்றே விரும்புகிறார்கள். தங்கள் ஒட்டுமொத்த வாழ்வையும் பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளுக்காக இழக்க தயாராக இருக்கிறார்கள். ஆனால் சிலரது பிள்ளைகள் வெற்றியாளராக மாறுகிறார்கள், சிலரது பிள்ளைகள் பின்னடைவை சந்திக்கிறார்கள். பிள்ளைகள் இளம் வயதில் இருக்கும் போது பெற்றோர்கள் செய்திடும் ஒவ்வொரு விசயமும் பிள்ளைகளின் எதிர்காலத்தை தீர்மானிப்பதில் முக்கிய பங்காற்றுகிறது என்பதை பல பெற்றோர்கள் உணர்ந்து இருப்பது இல்லை.

ஒருவர் நல்ல பெற்றோரா இல்லையா என்பது அந்த பிள்ளைகளை பொறுத்தே தீர்மானிக்கப்படும். பிள்ளைகள் செய்யும் நற்காரியங்கள், புகழ், பதவி, பணம், உதவி இவைகளும் பெறறோரை நல்லவர்களாக்கலாம் பெற்றோர்களின் உண்மையான வாழ்க்கை, தாம்பத்தியம், நல்ல குழந்தைகளை பெற்று வளர்ப்பது, உதவி செய்தல், தர்மம் செய்தல் இஸ்லாத்தை முறையாக பின்பற்றுவதும் கூட நல்ல பெறறோருக்கு அடையாளமாகும். குழந்தைகள் செய்யும் சில தவறுகள் கூட பெற்றோருக்கு கெட்ட பெயர் வாங்கித் தரும்.
எனது பெற்றோர்கள் என்னை நல்ல முறையில் வளர்த்து ஆளாக்கி, எனக்கு செய்ய வேண்டிய கடமைகள் அனைத்தையும் செய்ததுடன், அவர்களும் நல்லமுறையில் நல்லவர்களாக, இஸ்லாத்தை முறைப்படி பின்பற்றி என்னையும் பின்பற்ற செய்தார்களே, அதேபோல் நானும் எனது பிள்ளைகளையும் நல்லமுறையில் இஸ்லாத்தின் சட்டதிட்டம் நெறிமுறைகளையும், நபி(ஸல்) அவர்களின் வழியிலும் தீன் வழியினை போதித்து பின்பற்ற செய்வதுடன் என் எண்ணம், கனவு, ஆசைகள் விருப்பப்படி சமுதாயத்தில் எனது பிள்ளைகளின் திறமைகளை உணர்ந்து அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து அவர்களை நியாயமான முறையான, உண்மையானவர்களாக சமுதாயத்தில் நல்ல பொறுப்பில் அமர்த்தி, நல்ல பெற்றோருக்கான கடமையை எனது பெற்றோர்களைப் போல இன்ஷா அல்லாஹ் நான் சரியாக செய்வேன் என நம்புகிறேன்.

 ஒரு நல்ல பெற்றோருக்கு அவசியம் சில தகுதிகள் வேண்டும். அது போன்ற தகுதிகள் தான் அவர்கள், குழந்தைகளை வளர்த்து பெரிய மனிதர்களாகச் செய்வதுடன் நல்ல குடும்ப தலைவர்களாகவும் நல்ல கணவன், மனைவியாகவும் இருக்கச் செய்யும்.
ஒரு நல்ல பெற்றோர் எப்போதும் தனது குழந்தைகளை அடுத்தவர் முன்பு தரம் தாழ்த்தி பேச மாட்டார்கள் என்பது என்னுடைய கருத்து. மற்றவர் முன்பு தம் குழந்தைகளை குறைத்து மதிப்பிடுவது தரம் தாழ்த்தி பேசுவது மரியாதைக் குறைவாக பேசுவது, குற்றம் சொல்வது, கிண்டல், கேலி இதுபோன்ற காரியங்கள் குழந்தைகளின் மனநிலையை பாதிப்பதுடன் பெற்றோர்கள் மீது வெறுப்பையும், இடைவெளியையும் உண்டாக்கும். அதுபோல் ஒரு குழந்தையை மற்றொரு குழந்தையுடன் ஒப்பிட்டு பேசுவதும் கூடாது.

ஒருவருக்கு இரண்டு குழந்தைகளோ அதற்கு மேற்பட்டோ இருப்பின் ஒரு குழந்தைக்கும் மற்றொரு குழந்தைக்கும் இடையில் பாகுபாடு காட்டக்கூடாது

Ø  பிள்ளைகளுக்கு செய்ய வேண்டிய பெற்றோரின் கடமைகள்

1. இறையன்பை வளர்த்தல்

இன்று மார்க்கத்தை விட்டு குறிப்பாக இளம் தலைமுறையை தூரமாக்குவதற்கான அனைத்து பிரயத்தனங்களும் மேற்கொள்ளப்படும் ஒரு காலத்தில் நாம் வாழ்கின்றோம். மார்க்க அடிப்படையில் வாழ்வதை பிற்போக்காகப் பார்க்கும் பலர் எமது சமூகத்தில் உள்ளனர்.

இதன்விளைவாகசமூகக்கட்டுக்கோப்புசிதைவடைந்துள்ளது மற்றும் மனோ இச்சைக்கு கட்டுப்பட்டு வாழும் நிலை தோன்றி சமூகத்திற்கும், நாட்டுக்கும் பயனற்ற பிரஜைகளாக அவர்கள் மாறிவிடுவார்கள்.

பிள்ளைகளின் உள்ளங்களில் ஈமானிய பெறுமானங்களை பலப்படுத்த வேண்டும். மஹப்பதுல்லாஹ், மஹப்பதுர் ரஸூல் மற்றும் அல்குர்ஆனில் ஆசை வைக்கின்ற பிள்ளைகளாக அவர்கள் மாற வேண்டும். இது அவர்களது வாழ்வு சீராக அமைவதுடன் இஸ்லாத்தின் போதனைகளை பின்பற்றும் பிள்ளைகளாக அவர்களை மாற்றி விடும்.

2. சிறந்த ஒழுக்கத்தை ஊட்டல்

இஸ்லாம் நல்ல பண்பாடுகளை பூர்த்தியாக்க வந்த மார்க்கமாகும். ஒழுக்கமில்லாத சமூகம் எப்போதும் குழப்பத்தில் வாழும். சுயநலம் மிகைத்து மனித நேயம் இல்லாது போகும். ‘ ஒரு தந்தை தனது பிள்ளைக்கு வழங்க முடியுமான சிறந்த ஒன்றாக பண்பாடு உள்ளது. ‘ (திர்மிதி) என நபி (ஸல்) அவர்கள் பண்பாட்டை போதிப்பதன் முக்கியத்துவத்தை விளக்கினார்கள்.

உண்மையாக நடந்து கொள்ளல், வாக்கை நிறைவேற்றல், பொறுமை, தைரியம், பிறருக்கு உதவியாக இருத்தல், வெற்கம், நேரத்தின் உச்ச பயனைப் பெறல் போன்ற நல்ல பண்புகள் பிள்ளைகளிடம் வளர்க்கப்பட வேண்டும். அதே நேரம் இஸ்லாம் கண்டிக்கும் தீய பண்புகள் பிள்ளைகளிடம் வராமல் இருப்பதில் பெற்றோர்கள் கவனம் எடுக்க வேண்டும்.

3. பயனுள்ள அறிவு

اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ عِلْمًا نَافِعًا وَرِزْقًا طَيِّبًا وَعَمَلاً مُتَقَبَّلاً

அல்லாஹ்வே! நிச்சயமாக நான் உன்னிடம் பயனுள்ள கல்வியை, தூய்மையான (ஆகுமான) உணவை, ஏற்றுக் கொள்ளப்பட்ட அமலைக் கேட்கிறேன். (ஸுனன் இப்னுமாஜா-925)

பயனுள்ள அறிவைத் தேடுவதற்கு நாம் பிள்ளைகளுக்கு வழிகாட்ட வேண்டும். பாடசாலைக் கல்வியில் அவர்களது ஆர்வம் அதிகரிக்க வேண்டும். பிள்ளைகளுக்கு படிப்பதற்கான அமைதியான, அழகிய சூழலை நாம் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். சிறிய அளவிலாவது அவர்களுக்கு ஒரு வாசிகசாலை வீட்டில் இருக்க வேண்டும். நல்ல புத்தகங்கள், சஞ்சிகைகளுடன் அவர்களது உறவு அதிகரிப்பது அவசியம்.

இதன் மூலம் வாசிப்புப் பழக்கம் அவர்களின் நாளாந்த பண்பாக ஆகுவதற்கு வழியேற்படுத்தலாம். இதனால் கல்வியில் அவர்களது ஈடுபாடு அதிகரித்து அறிவைத் தேடும் சமூகமாக அவர்கள் ஆகிவிடுவார்கள். கல்வியில்லாத சமூகம் நாளை எப்படி சவால்களுக்கு முகம் கொடுத்து நிலைத்து நிற்பது? தொ(ல்)லைக்காட்சி

தற்போது விடுமுறை நாட்களிலும், இரவுப் பொழுதிலும் தொலைக்காட்சி பார்ப்பது மிக அதிகமாகி விட்டது. அதிக நேரம் டிவி பார்க்கும் குழந்தைகள் படிப்பில் மந்தமாகவும், ஞாபக சக்தி குறைந்தும், கலகலப்பின்றி இருப்பதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. தற்போது ஸ்மார்ட் போன், ஆன்டிராய்டு போன் போன்றவற்றை விளையாடக் கொடுத்து விடுகின்றனர். இது டிவி பார்ப்பதைவிட அதிக ஆபத்தானது.

4. உடல் வலிமை.

நோய்கள் தாராளமாக அதிகரித்து வரும் இக்காலத்தில் குறிப்பாக பிள்ளைகள் கடைஉணவை விரும்புகின்றவர்களாக மாறி வருகின்றனர். பொதுப் பிரச்சினையாக உருவாகியுள்ள இந்நிலையில் இருந்து எமது இளந் தலைமுறையை பாதுகாப்பது சவாலாக மாறியுள்ளது.

இதற்கு தீர்வாக ஆரோக்கியமான உணவுப் பழக்கவழக்கம் வீடுகளில் இருந்து ஆரம்பிக்கப்பட வேண்டும். சத்துள்ள உணவுகள் பிள்ளைகளுக்குக் கொடுக்கப்படுவதன் மூலம் பிள்ளைகளின் உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கலாம். இது அவர்களது கல்வி வளர்ச்சியிலும் தாக்கம் செலுத்தும். இதனால் தான்சிறந்த அறிவு சிறந்த உடலில் தான் காணப்படுகின்றதுஎன அறிஞர்கள் கூறினார்கள்.

5. விளையாட்டுமற்றும் ஓய்வு

ஆரம்ப காலங்களில் பிள்ளைகள் விளையாடுவதற்கான அதிகமான சந்தர்ப்பங்களை பெற்றுக் கொண்டார்கள். இன்று பாடசாலைக்கு வெளியில் நடாத்தப்படும் இதர வகுப்புகளினால் பிள்ளைகளுக்கு சரியான ஓய்வு கிடைப்பதில்லை. தமது ஆளுமை விருத்தியில் பங்களிக்கும் விளையாட்டுக்களில் ஈடுபட நேரம் இல்லாது இருக்கின்றனர். இது ஆரோக்கியமானதல்ல.

விளையாட்டு, கலை அம்சங்களில் கவனம் செலுத்தாத சமூகம் மனித இயல்புக்கு மாற்றமாக நடப்பதற்கான சாத்தியப்பாடு இருப்பதாக சில ஆய்வுகள் கூறுகின்றன. இளைஞர்கள் போதைப் பொருள் பாவனைக்கு அடிமையாக மாறுவதற்கு விளையாட்டு, கலைப் அம்சங்களில் ஈடுபாடு இல்லாமை ஒரு காரணியாக இருக்கலாம்.

சமநிலை கொண்ட ஆளுமையுள்ளவர்களாக எமது பிள்ளைகள் உருவாக வேண்டுமானால் இப்பகுதிக்கும் முக்கியத்துவம் இருத்தல் அவசியம். இது தொடர்பில் பெற்றோர்கள் கவனம் எடுக்க வேண்டிய  உள்ளது.

6. தீவிரவாத சிந்தனைகயை விட்டும் பாதுகாத்தல்

இன்று இஸ்லாத்தின் பெயரில் தீவிரவாத சிந்தனைகளை சிலர் பரப்பி வருகின்றனர். அதற்கு ஷரீஅத்தின் ஆதாரங்களைக் காட்டுகின்றனர். அதனை நோக்கி குறிப்பாக இளைஞர்களை தூண்டுகின்றனர். வாழ்வின் கஷ்டங்கள், இலக்குகளை சரியாக அறிந்து கொள்ளாவர்கள் இப்படிப்பட்ட சிந்தனைகளால் கவரப்படுகின்றனர். இதன் விளைவு மிகவும் பாரதூரமானது என்பதை அவர்கள் அறியாது செயற்பட முனைகின்றனர்.

இத்தகைய நிலையிலிருந்து நாம் எமது பிள்ளைகளைப் பாதுகாக்க வேண்டும். பிள்ளைகளுக்கு நல்ல நண்பர்களைத் தெரிவு செய்து கொடுக்க வேண்டும். இஸ்லாத்தின் நடுநிலையான சிந்தனை கொண்ட சிறந்த ஆளுமைகளுடன் சகவாசத்தை அவர்களுக்கு ஏற்படுத்திக் கொடுப்பதன் மூலம் நாம் பிள்ளைகளை சரியான பாதையில் உருவாக்க முடியும்.

7. சமூகப் பணிகளில் ஈடுபடுத்தல்

பிள்ளைகள் எதிர்காலத்தில் சமூகத்திற்கும், நாட்டிற்கும் தலைமைத்துவத்தை கொடுக்க வேண்டியவர்கள். அதன் மேம்பாட்டுக்காக உழைக்கக் கடமைப்பட்டவர்கள். இதற்காக அவர்கள் தயார்படுத்தப்பட வேண்டும். திறன்கள் வளர்க்கப்பட வேண்டும்.

இவ்வகையில் சமூகப் பணிகளில் அவர்கள் ஈடுபடுத்தப்பட முடியும். நபி இப்ராஹீம் (அலை) அவர்கள் தனது மகன் இஸ்மாஈல் (அலை) அவர்களை புனித கஃபாவை நிர்மானிக்கும் பணியில் இணைத்துக் கொண்டார்கள்.

ஹிஜ்ரத்தின் போது நபி (ஸல்) அவர்கள் தம்மிடம் காணப்பட்ட அமானிதங்களை அலி (ரழி) அவர்களிடம் ஒப்படைத்தார்கள். எனவே இதற்கான வாய்ப்புக்கள்  ஏற்படுத்தப்பட வேண்டும். சிறுவர்கள், இளைஞர்களின் இயலுமைகள், விருப்புகளுக்கு ஏற்ப அவர்கள் உரிய இடங்களில் பயன்படுத்தப்பட வேண்டும். இதன் மூலமாக பிள்ளைகளிடம் சுய நம்பிக்கை. தலைமைத்துவ ஆற்றல் வளர்வதுடன், தேவையற்ற செயற்பாடுகளில் நேரத்தைக் கழித்து, வழிதவறிப் போவதில் இருந்து அவர்களைக் காப்பாற்ற முடியும்.

நமது பிள்ளை நமது பொறுப்பு

ஒவ்வொரு பெற்றோரும் தமது பிள்ளைகள் சிறந்தவர்களாக வர வேண்டும் என ஆசைப்படுகின்றோம். இதில் பெற்றோர்கள் முன்மாதிரியாக வாழ வேண்டும். பிள்ளைகளிடம் எதிர்பார்க்கும் பண்புகளை ஆரம்பத்தில் பெற்றோர்கள் கடைபிடித்து ஒழுக வேண்;டும்.

பிறரை குற்றம் சுமத்தி பெற்றோர்கள் பொறுப்பில் இருந்து ஒரு போதும் நீங்க முடியாது. அடுத்தவர்கள் இது விடயத்தில் எமக்கு ஒத்துழைக்கலாம். அவர்களது ஒத்தாசையை பெற்றுக் கொள்ளலாம். இதேநேரம் பிள்ளைகள், இளைஞர்களை நல்ல ஆளுமைகளாக உருவாக்கி எடுப்பதில் சமூகத்திற்கும் கடமை உள்ளது என்பதை மறக்க முடியாது.

லுக்மான்  தன் மகனுக்கு செய்த உபதேசம் இங்கு பெற்றோர்களின் அரவணைப்பு, பிள்ளை வளர்ப்பதில் அவர்கள் காட்ட வேண்டிய ஈடுபாடு, அதன் பொறுப்புணர்ச்சியை விளக்கப் போதுமானது.

லுக்மான் தனது மகனுக்கு அறிவுரை கூறுபவராக இருந்தார். ஒருநாள் அவர் தனது மகனை அழைத்து அவருக்கு அறிவுரை கூறினார். அந்த அறிவுரைகள் நமக்கும் அவசியமானதாகும். இதோ லுக்மான்  அறிவுரை.

1.“என்னருமை மகனே! நீ அல்லாஹ்வுக்கு இணை வைத்துவிடாதே! இணை வைத்தல் என்பது அல்லாஹ்வுக்கு அடியான் செய்யும் மிகப்பெரும் அநியாயமாகும்.”

2,பெற்றோருடன் நல்லமுறையில் நடந்துகொள்! உனது பெற்றோர்கள் உனக்காகப் பட்ட கஷ்டங்களை நினைத்துப் பார். உன் தாய் கஷ்டத்தின்மேல் கஷ்டத்தை அனுபவித்து உன்னைச் சுமந்தாள். கஷ்டப்பட்டு உன்னைப் பெற்றெடுத்தாள். அதன்பின்னும் 2 வருடங்கள் உனக்குப் பாலூட்டினாள். எனவே அல்லாஹ்வுக்கும் நன்றியுடையவனாக இரு! உன் பெற்றோருக்கும் நன்றி செலுத்துபவனாக இரு!

3.“என்னருமை மகனே! நீ செய்வது கடுகைப் போன்ற சிறிய செயலாக இருந்தாலும் அதை நீ பூமியிலோ வானத்திலோ பாலைவனத்திலோ யாரும் பார்க்காத வண்ணம் செய்தாலும் அல்லாஹ் அதைக் கொண்டு வருவான். எனவே தனியாக இருக்கிறோம், யாரும் பார்க்க மாட்டார்கள் என்று பாவம் செய்துவிடக் கூடாது. அல்லாஹ் பார்த்துக் கொண்டிருக்கின்றான். இதை நீ மறந்துவிடக் கூடாது!

4,“மகனே! தொழுகையைப் பேணி தொழுதுவா! நன்மையை ஏவு, தீமையைத் தடு! இதனால் ஏற்படும் இன்னல்களைப் பொறுத்துக் கொள்! இதில் நீ பின்வாங்காதே!

5,“நீ பூமியில் ஆணவத்துடன் நடக்காதே! மக்களில் பலவீனமானவர்களைக் கண்டால் அவர்களை விட்டும் உன் முகத்தை திருப்பி விடாதே! அல்லாஹ் பெருமைப் பிடித்தவர்களை விரும்புவதில்லை. மக்களுடன் சராசரியாக சாமானியமாகப் பழக வேண்டும்!

6,“நீ நடந்தால் அந்த நடை நடுநிலையாக இருக்க வேண்டும். பிறருடன் பேசும் போது சப்தத்தை உயர்த்திப் பேச வேண்டாம். கழுதை கத்துவதைப் போல் கத்த வேண்டாம். கழுதையின் சப்தம் யாருக்கும் பிடிக்காதல்லவா?

இந்தச் செய்தி அத்தியாயம் லுக்மான் 31:12-19 வரையுள்ள வசனங்களில் இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு லுக்மான் தனது மகனுக்கு அறிவுரைக் கூறுவார். லுக்மான் கூறிய அறிவுரை அவருடைய மகனுக்கு மட்டும் உரியது அல்ல. அது எமக்கும் உரியதுதான். எனவே லுக்மான் கூறிய உபதேசத்தை நாமும் எமது வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டும்.

அப்போதுதான் நாம் உலகில் அடுத்தவர்களால் நேசிக்கப்படுவோம். அல்லாஹ்வும் எம்மை நேசிப்பான். மறுமையில் நாம் சுவனத்தையும் பெற முடியும்.                                      DO

1. முன்மாதிரியாக நீங்கள் நடந்துகொள்ளுங்கள்

2. பிள்ளைகளின் நம்பிக்கைக்கு உரியவராக மாறுங்கள்

3. குழந்தைகளோடு நேரம் செலவிடுங்கள்

4. தோல்வியை கையாள கற்றுக்கொள்ளுங்கள்

5. நேர்மையாக இருப்பதன் முக்கியத்துவத்தை உணர்த்துங்கள்.            DO’T

நல்லபெற்றோராக இருப்பது எளிதல்ல.  ஒரு சில தவறுகளைச் செய்வது இயற்கைதான்.எனினும், நல்லபெற்றோருக்குரிய இந்த 10 தவறுகளை நீங்கள் செய்யவே கூடாது.

1.சீரற்றதாக இருப்பது.

يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لِمَ تَقُوْلُوْنَ مَا لَا تَفْعَلُوْنَ كَبُرَ مَقْتًا عِنْدَ اللّٰهِ اَنْ تَقُوْلُوْا مَا لَا تَفْعَلُوْنَ‏

ஈமான் கொண்டவர்களே! நீங்கள் செய்யாததை ஏன் சொல்கிறீர்கள்?நீங்கள் செய்யாததை நீங்கள் கூறுவது அல்லாஹ்விடம் பெரிதும் வெறுப்புடையதாக இருக்கிறது. 61:2&3

2.உங்கள் பிள்ளையை எதிர்மறையான சிந்தனைகளுக்கு வெளிப்படுத்துதல்

 3.குழந்தைகள்முன் சண்டையிடுவது

4.குழந்தைகளுக்காக வளைந்து கொடுப்பது

5.உங்கள் குழந்தைக்கு ஆதரவாக இல்லாமல் இருப்பது

6.தவறான எடுத்துக்காட்டாக இருப்பது.

(பெற்றோர்கள் தங்கள் குழந்தைக்கு தப்பான உதாரணமாக இருக்கக்கூடாது.புகை பிடித்தல், கெட்ட வார்த்தையில் திட்டுவது அல்லது பிறரிடம் கோபமாக நடந்துகொள்வது பொய் பேசுதல்)

7.உறவினர்களை கேலி செய்யாதீர்கள்

8.பொத்திப்பொத்தி வளர்ப்பது

9.உங்கள் தோல்விகளைப் பேசாதீர்கள்.  

10.தேவையற்றதை வாங்காதீர்கள்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

1.கணவனைக் கவரும் வழிகள் 40

பத்ருப் போர் உணர்த்தும் பாடமும் படிப்பினைகளும்!

மண்ணறை வேதனை 001