தவ்பா (பாவமன்னிப்பு)

 

தவ்பா (பாவமன்னிப்பு)

தாமதிக்காமல் விரைவாக செய்ய வேண்டும் என இஸ்லாம் வலியுறுத்திய விஷயம் தவ்பா. நாம் தவறு செய்து விட்டால் அதற்கான தவ்பாவை அல்லாஹ்விடம் உடனடியாக தேடிக் கொள்ள வேண்டும். பிறகு பார்த்துக் கொள்ளலாம்,கடைசி காலத்தில் செய்து கொள்ளலாம் என்று அதை தள்ளிப் போடுவது ஆரோக்கியமானதல்ல என்று இஸ்லாம் கூறுகிறது.

 

إِنَّمَا التَّوْبَةُ عَلَى اللَّهِ لِلَّذِينَ يَعْمَلُونَ السُّوءَ بِجَهَالَةٍ ثُمَّ يَتُوبُونَ مِن قَرِيبٍ فَأُولَٰئِكَ يَتُوبُ اللَّهُ عَلَيْهِمْ ۗ وَكَانَ اللَّهُ عَلِيمًا حَكِيمًا

எவர்கள் அறியாமையினால் தீமை செய்து விட்டு பின்பு விரைவாக தவ்பா செய்கிறார்களோ அவர்களுக்குத்தான் அல்லாஹ்விடம் மன்னிப்பு உண்டு. அல்லாஹ் அவர்களின் தவ்பாவை ஏற்றுக் கொள்கிறான்.(அல்குர்ஆன் : 4 ; 17)

كل بني ادم خطاء وخير الخطائين التوابون

மனிதர்கள் அனைவரும் பாவம் செய்பவர்கள்,பாவம் செய்பவர்களில் சிறந்தவர்கள் தவ்பா செய்பவர்கள். (அல்ஜாமிவுஸ் ஸகீர் ; 6274)

பாவம் செய்பவர்களில் தவ்பா செய்யக் கூடியவர்கள் சிறந்தவர்கள் என்றால் அந்த தவ்பா செய்பவர்களில் மிகச்சிறந்தவர்கள் அதை பிற்படுத்தாமல் உடனே செய்பவர்கள் தான்.

·     லுக்மான் அலை அவர்கள் தன் மகனுக்கு செய்த உபதேசங்களில் ஒன்று ; என் அன்பு மகனே! தவ்பாவை நீ தள்ளிப் போடாதே! ஏனென்றால் மரணம் திடீரென்று வந்து விடும். (அல்ஜாமிவு லிஷுஃபுல் ஈமான்)

 

அல்குர்ஆனில் யாருக்கு தவ்பா கிடைக்கும் யாருக்கு தவ்பா கிடைக்காது, யாருடைய தவ்பா ஏற்றுக் கொள்ளப்படும் யாருடைய தவ்பா ஏற்றுக் கொள்ளப்படாது என்று ஒரு இடத்தில் அல்லாஹ் தெளிவாகப் பேசுகிறான்.

إِنَّمَا التَّوْبَةُ عَلَى اللَّهِ لِلَّذِينَ يَعْمَلُونَ السُّوءَ بِجَهَالَةٍ ثُمَّ يَتُوبُونَ مِن قَرِيبٍ فَأُولَٰئِكَ يَتُوبُ اللَّهُ عَلَيْهِمْ ۗ وَكَانَ اللَّهُ عَلِيمًا حَكِيمًا

எவர்கள் அறியாமையினால் தீமை செய்து விட்டு பின்பு விரைவாக தவ்பா செய்கிறார்களோ அவர்களுக்குத்தான் அல்லாஹ்விடம் மன்னிப்பு உண்டு. அல்லாஹ் அவர்களின் தவ்பாவை ஏற்றுக் கொள்கிறான்.(அல்குர்ஆன் : 4 ; 17)

தவ்பா என்றால் இறைவன் பக்கம் மீள்வது என்பது பொருள் ஆகும்! மனிதன் பலகீனமானவனாக படைக்கப்பட்டு உள்ளான் அதனால் சில நேரங்களில் அவன் தெரிந்து அல்லது தெரியாமல் பாவம் செய்து விடுவான்!

 

அதனால் தான் அல்லாஹ் தன் அடியார்களின் பாவங்களை எப்பொழுதும், எச்சந்தர்ப்பத்திலும் மன்னிப்பதற்காக எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றான்!

அல்லாஹ் தவ்பாவின் வாசலை திறந்தே வைத்திருக்கிறான்.அடியான், தான் செய்த பாவங்களுக்காக, தான் செய்த குற்றங்களுக்காக வருந்தி திருந்தி கண்ணீர் வடித்து எப்போது தவ்பா கேட்டாலும் அதை ஏற்றுக் கொள்ள அல்லாஹ் தயாராக இருக்கிறான். அல்லாஹ்விடத்தில் தவ்பாவின் வாசல்கள் மூடப்படுவதே இல்லை. இருந்தாலும் இரண்டு விஷயங்கள் நடப்பதற்கு முன்பு தவ்பா செய்து விட வேண்டும். அந்த இரண்டு விஷயங்கள் நடந்து விட்டால் அல்லாஹ் தவ்பாவை ஏற்றுக் கொள்வதில்லை.ஒன்று கியாமத் வந்து விடுவது. அதைக் குறித்து நபிஅவர்கள் இப்படி சொல்வார்கள்.

ஒன்று

சூரியன் மேற்கிலிருந்து உதிக்கும் வரை, பகலில் தீங்கிழைத்தவன் தவ்பா செய்வதற்காக இரவிலும், இரவில் தீங்கிழைத்தவன் தவ்பா செய்வதற்காக பகலிலும் அல்லாஹ் தன் கரத்தை விரித்து வைத்திருக்கிறான். (முஸ்லிம் ; 2759)

சூரியன் மேற்கிலிருந்து உதிக்கும் (கியாமத் நாள்) வரை ஒவ்வொரு நாளும் இவ்வாறு செய்து கொண்டிருக்கிறான்!

(நூல் : முஸ்லிம் : 5324)

 

இரண்டாவது

மவ்த் நிகழ்வது. குறிப்பாக ரூஹ் பிடுங்கப்படும் வேளையில் அந்த ரூஹ் தொண்டைக்குழியை அடையும் வரை அல்லாஹ் தவ்பாவை ஏற்றுக் கொள்கிறான். அதற்குப் பிறகு தவ்பாவை ஏற்றுக் கொள்வதில்லை.

ஒரு அடியானின் ரூஹ் அவனின் தொண்டைக்குழியை அடையும் வரை அவனின் தவ்பாவை அல்லாஹ் ஏற்றுக் கொள்கிறான். (திர்மிதி ; 3537

கியாமத் நாள் வரை அல்லாஹ் நம்முடைய சிறிய பெரிய பாவங்களை மன்னிக்க தயராக உள்ளான் நம்மில் எத்தனை பேர் தவ்பா செய்ய தயாராக உள்ளோம்?

ஏதேனும் ஒரு பாவம் செய்து விட்டால் உள்ளத்தில் அல்லாஹ்வை பற்றி பயம் ஏற்படுவது பாவம் செய்து விட்டோம் அதற்கு தவ்பா செய்யவேண்டும் என்ற எண்ணம் உள்ளத்தில் ஏற்படுவது அல்லாஹ் நம்மை மன்னிக்க தயாராக உள்ளான் அல்லது நமது மீது அல்லாஹ் இரக்கம் காட்டி உள்ளான் என்பதற்கு மிக பெரிய அடையாளம் ஆகும்!

அல்லாஹ் பாதுகாக்கணும் இன்றும் பலர் சிறிய பெரிய அனைத்து பாவங்களையும் செய்து கொண்டு மகிழ்ச்சியாக உள்ளார்கள் இவர்களுக்கு உள்ளத்தில் பாவம் செய்கிறோம் என்ற எண்ணம் ஏற்படாது மாறாக அதில் மகிழ்ச்சி மட்டுமே இருக்கும்!

இப்படி நபர்களை எல்லாம் அல்லாஹ் கடுமையாக பிடிக்கவே பாவத்திலேயே விட்டு விடுகிறான் நஊதுபில்லாஹ் அல்லாஹ் நம்மை இந்த நிலைமையில் வைக்க வில்லை!

 

ஒவ்வொரு மனிதனுக்கும் அவனுடைய உயிர் தொண்டை குழியை அடையும் வரை அதவாது சகராத் நேரம் வரை பாவமன்னிப்பு செய்ய அல்லாஹ் அவகாசம் அளித்து உள்ளான்! (நூல் : திர்மிதி : 3537)

நமக்கு மௌத் வரை தவ்பா செய்வதை தாமதம் செய்யவும் கூடாது பின்பு பாவத்தை விட்டு விலகி கொள்ளலாம் என்று விட்டு விடவும் கூடாது! மௌத் யாருக்கு எப்போது வரும் நாம் அறியமாட்டோம்!

அல்லாஹ்வின் அருளில் ஒரு போதும் நாம் நம்பிக்கை இழக்க கூடாது ஷைத்தான் பாவம் செய்யும் பொழுதும் சரி அதற்கு பின்பு தவ்பா செய்யும் பொழுதும் சரி அதிகம் உள்ளத்தில் உபதேசம் செய்வான்! பல முறை நீ தவ்பா செய்து விட்டாய் மீண்டும் மீண்டும் அல்லாஹ்விடம் தவ்பா செய்தால் அல்லாஹ் உன்னை மன்னிப்பான என்று அந்த நேரத்திலும் வழிகேடுப்பான்!

நாம் இது போன்ற உபதேசங்களை நம்பி தவ்பா செய்யாமல் விட்டு விட கூடாது! அல்லாஹ் மன்னிக்க கூடியவன் அவன் அருளில் ஒரு போதும் நம்பிக்கை இழக்க கூடாது!

என் அடியார்களே! (உங்களில்) எவரும் வரம்பு மீறி தமக்குத்தாமே தீங்கிழைத்துக் கொண்ட போதிலும், அல்லாஹ்வுடைய ரஹ்மத்தில் அவர் நம்பிக்கையிழக்க வேண்டாம் - நிச்சயமாக அல்லாஹ் பாவங்கள் யாவையும் மன்னிப்பான் - நிச்சயமாக அவன் மிக்க மன்னிப்பவன்! மிக்கக் கருணையுடையவன் (என்று நான் கூறியதை நபியே!) நீர் கூறுவீராக! (அல்குர்ஆன் : 39 : 53)

இன்றே பாவத்தில் இருந்து விலகி தவ்பா செய்ய வேண்டும்! தவ்பா என்றால் அதை எப்படி செய்யவேண்டும் என்பதை பற்றி விரிவாக பார்ப்போம்

தவ்பா செய்வதின் சிறப்பு :

நாம் அல்லாஹ்விற்கு மாறு செய்து அவன் தடுத்த ஒன்றை செய்தாலும் நாம் அதை தவறு என்று உணர்த்து அதில் மீண்டு அல்லாஹ்விடம் தவ்பா செய்யும் பொழுது அல்லாஹ் நம்மை மன்னிப்பது மட்டும் அல்லாமல் நமக்கு நன்மைகளும் வழங்குகிறான்!

1) நாம் செய்த பாவங்களுக்கு தவ்பா செய்து தொடர்ந்து நல்ல அமல்கள் செய்து வருவதால் அல்லாஹ் நம்முடைய பாவங்களை எல்லாம் நன்மையாக மாற்றி விடுகிறான்!

எவர் தவ்பா செய்து ஈமானுங் கொண்டு, ஸாலிஹான நற்செயல்கள் செய்கிறார்களோ - அவர்களுடைய பாவங்களை அல்லாஹ் நன்மையாக மாற்றிவிடுவான்!

(அல் குர்ஆன் : 25 : 70)

2) நாம் அல்லாஹ்விடம் நம்முடைய பாவங்களுக்கு தொடர்ந்து மன்னிப்பு கேட்பதால் நாம் பாவம் செய்யாதவர்களை போன்று ஆகி விடுவோம்!                        நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : யார் தாம் செய்த பாவத்திற்காக பாவமன்னிப்பு கோருகிறாரோ அவர் பாவமே செய்யாதவரைப் போலாவார்! நூல் : ஸஹீஹ் ஜாமிஃஅ : (3386)

3) நாம் அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு கேட்டு அவன் பக்கம் திரும்புவதால் அல்லாஹ் அதிகம் மகிழ்ச்சி அடைகிறான் :                                                                   அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

காணாமல் போன ஒட்டகத்தைக் கண்டு பிடிக்கும் போது, உங்களில் ஒருவருக்கு ஏற்படும் மகிழ்ச்சியைவிட, உங்களில் ஒருவர் பாவமன்னிப்புக் கோரி மீட்சி பெறுவதால் அல்லாஹ் அதிகமாக மகிழ்ச்சி அடைகிறான்! (நூல் : முஸ்லிம் : 5295)

தவ்பா செய்ய நிபந்தனைகள் :

1) செய்த பாவத்தை நினைத்து முதலில் வருந்த வேண்டும்!

2) மீண்டும் அந்த பாவத்தின் பக்கம் செல்ல கூடாது என்று உறுதியாக உள்ளத்தில் எண்ணம் வைக்க வேண்டும்!

3) செய்த பாவத்தை நினைத்து மனம் வருந்தி அல்லாஹ்விடம் தவ்பா செய்யவேண்டும்!

4) உள்ளத்தில் இக்லாஸ் (மன தூய்மை) உடன் தவ்பா செய்யவேண்டும்!

* தவ்பா செய்யும் பொழுதே மீண்டும் அந்த பாவத்தின் பக்கம் செல்லவேண்டும் என்ற எண்ணத்தில் தவ்பா செய்ய கூடாது!                                                  நம்பிக்கையாளர்களே! நீங்கள் கலப்பற்ற மனதுடன் (பாவத்திலிருந்து விலகி) அல்லாஹ்வின் பக்கம் திரும்புங்கள்! உங்கள் இறைவனோ உங்கள் பாவங்களுக்குப் பரிகாரமாக்கி, (மன்னித்து) சுவனபதியிலும் உங்களைப் புகுத்திவிடுவான்! அல்குர்ஆன் : (66 : 8)

 5) அல்லாஹ்விற்காக பாவத்தை விட வேண்டும் என்ற எண்ணத்துடன் தவ்பா செய்யவேண்டும்!

* மக்கள் நம்மை பற்றி என்ன கூறுவார்கள் அல்லது பிள்ளை கூறி விட்டான் வீட்டார் கூறி விட்டார்கள் அதற்கு தான் பாவத்தை விட்டு விட்டேன் என்ற நோக்கத்தில் தவ்பா செய்ய  செய்யக்கூடாது!

6) தவ்பா தனிமையில் செய்யவேண்டும்!

* மக்கள் பார்க்கும் விதமாக அழுவது தவ்பா செய்வதை தவிர்த்து கொள்ள வேண்டும் இது போன்ற சூழ்நிலை எளிதாக உள்ளத்தில் முகஸ்துதி ஏற்படுத்தி விடும்!

7) அல்லாஹ்விடம் மட்டுமே தவ்பா செய்யவேண்டும்!

وَالَّذِيْنَ اِذَا فَعَلُوْا فَاحِشَةً اَوْ ظَلَمُوْۤا اَنْفُسَهُمْ ذَكَرُوا اللّٰهَ فَاسْتَغْفَرُوْا لِذُنُوْبِهِمْ وَمَنْ يَّغْفِرُ الذُّنُوْبَ اِلَّا اللّٰهُ وَلَمْ يُصِرُّوْا عَلٰى مَا فَعَلُوْا وَهُمْ يَعْلَمُوْنَ‏

மானக் கேடான ஏதேனும் ஒரு செயலை அவர்கள் செய்துவிட்டாலும், அல்லது (ஏதேனும் பாவத்தினால்) தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்டாலும் உடனே அவர்கள் (மனப்பூர்வமாக) அல்லாஹ்வை நினைத்து தங்கள் பாவங்களுக்காக மன்னிப்புத் தேடுவார்கள்; அல்லாஹ்வைத் தவிர வேறு யார் பாவங்களை மன்னிக்க முடியும்? மேலும், அவர்கள் அறிந்து கொண்டே தங்கள் (பாவ) காரியங்களில் தரிபட்டிருந்து விடமாட்டார்கள்

(அல் குர்ஆன் : 3 : 135)

தர்ஹாவிற்கு சென்று பாவமன்னிப்பு தேடுவது பெரியார் பொருட்டால் பாவமன்னிப்பு கேட்பது நபி (ஸல்) அவர்கள் பொருட்டால் தவ்பா செய்வது ஒரு போதும் கூடாது!

8) பாவத்தில் இருந்து விலகி தவ்பா செய்து விட்டால் இதன் பின்பு அந்த பாவத்தை பற்றி யாரிடமும் ஒரு போதும் கூற கூடாது!

செய்த பாவத்தை பற்றி பிறரிடம் கூறுவது அந்த பாவத்தை மீண்டும் செய்தது போன்று ஆகும் அல்லது அல்லாஹ் மறைந்த ஒன்றை நாமாக வெளிப்படுத்துவது போன்று ஆகும்! (நூல் : புகாரி : 6069)

இஸ்திஃபார் :

இஸ்திஃபார் என்ற அரபி சொல்லுக்கும் இறைவனிடம் பாவமன்னிப்பு கேட்பது என்பது பொருள் ஆகும்!

நாம் செய்த சிறு பாவங்களுக்கு - பெரும் பாவங்களுக்கும் அல்லாஹ்விடம் இஸ்திஃபார் செய்யலாம் !

அபூ ஹுரைரா (ரலி) அறிவித்தார்கள் :அல்லாஹ்வின் மீதாணையாக! நான் ஒரு நாளில் 70 முறைக்கு மேல் :

அஸ்தஃக் ஃபிருல்லாஹ அதூபு இலைஹி

பொருள்: நான் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரி அவன் பக்கமே திரும்புகிறேன்!என்று கூறுகிறேன் என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறக் கேட்டுள்ளேன்!

(நூல் : புகாரி : 6307)

பாவமன்னிப்பு துஆக்கள் :

தலை சிறந்த பாவமன்னிப்பு துஆ :

 

 اللَّهُمَّ أَنْتَ رَبِّي، لاَ إِلَهَ إِلاَّ أَنْتَ، خَلَقْتَنِي وَأَنَا عَبْدُكَ، وَأَنَا عَلَى عَهْدِكَ وَوَعْدِكَ مَا اسْتَطَعْتُ، أَعُوذُ بِكَ مِنْ شَرِّ مَا صَنَعْتُ، أَبُوءُ لَكَ بِنِعْمَتِكَ عَلَىَّ وَأَبُوءُ لَكَ بِذَنْبِي، فَاغْفِرْ لِي، فَإِنَّهُ لاَ يَغْفِرُ الذُّنُوبَ إِلاَّ أَنْتَ

(பொருள்: அல்லாஹ்! நீயே என் அதிபதி. உன்னைத் தவிர வேறு இறைவன் இல்லை. நீயே என்னைப் படைத்தாய். நான் உன் அடிமை நான் உனக்குச் செய்து கொடுத்த உறுதி மொழியையும் வாக்குறுதியையும் என்னால் இயன்ற வரை நிறைவேற்றியுள்ளேன். நான் செய்தவற்றின் தீமைகளிலிருந்து உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன். நீ எனக்கு அருட் கொடைகளை வழங்கியுள்ளாய் என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். மேலும், நான் பாவங்கள் புரிந்துள்ளதையும் உன்னிடம் (மறைக்காமல்) ஒப்புக்கொள்கிறேன். எனவே, என்னை மன்னிப்பாயாக! ஏனெனில், பாவத்தை மன்னிப்பவன் உன்னைத் தவிர வேறெவரும் இல்லை.)

சிறப்பு :

* இந்தப் பிரார்த்தனையை நம்பிக்கையோடும் தூய்மையான எண்ணத்தோடும் பகலில் கூறிவிட்டு அதே நாளில் மாலை நேரத்திற்கு முன்பாக இறப்பவர் சொர்க்கவாசிகளில் ஒருவராக இருப்பார்!

* இந்த துஆவை நம்பிக்கையோடும் தூய்மையான எண்ணத்தோடும் இரவில் கூறிவிட்டுக் காலை நேரத்திற்கு முன்பே இறந்து விடுகிறவரும் சொர்க்கவாசிகளில் ஒருவராக இருப்பார்! (நூல் : புகாரி : 6306)

Ø நபி ஆதம் (அலை) அவர்கள் கேட்ட பாவமன்னிப்பு துஆ :

رَبَّنَا ظَلَمْنَا أَنفُسَنَا وَإِن لَّمْ تَغْفِرْ لَنَا وَتَرْحَمْنَا لَنَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ

(பொருள் : எங்கள் இறைவனே! எங்களுக்கு நாங்களே தீங்கிழைத்துக் கொண்டோம் - நீ எங்களை மன்னித்துக் கிருபை செய்யாவிட்டால், நிச்சயமாக நாங்கள் நஷ்டமடைந்தவர்களாகி விடுவோம்)(அல்குர்ஆன் 7: 23)

Ø நபி யூனுஸ் (அலை) அவர்கள் கேட்ட பாவமன்னிப்பு துஆ :

 لَّاۤ اِلٰهَ اِلَّاۤ اَنْتَ سُبْحٰنَكَ   اِنِّىْ كُنْتُ مِنَ الظّٰلِمِيْنَ 

(பொருள் : உன்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. நீ தூயவன். நான் அநீதி இழைத்தோரில் ஆகி விட்டேன்) (அல்குர்ஆன் : 21:87)

Ø நபி (ஸல்) அவர்கள் கூறிய அழகிய துஆ :

அல்லாஹும்ம இன்னீ ளலம்(த்)து நஃப்ஸீ ளுல்மன் கஸீரன் வலா யக்ஃபிருத் துனூப இல்லா அன்(த்) ஃபக்ஃபிர்லீ மக்ஃபிர(த்)தன் மின் இந்தி(க்) வர்ஹம்னீ இன்ன(க்) அன்(த்)தல் கஃபூருர் ரஹீம்

பொருள் : இறைவா! எனக்கே நான் அதிகம் அநீதி இழைத்துக் கொண்டேன். உன்னைத் தவிர வேறு எவரும் பாவங்களை மன்னிக்க முடியாது. எனவே, என்னை மன்னிப்பாயாக! மேலும், எனக்கு அருள் புரிவாயாக! நிச்சயமாக நீ பாவங்களை மன்னிப்பவனும் நிகரில்லா அன்புடையோனுமாய் இருக்கிறாய்!(நூல் : புகாரி : 834)

தவ்பா செய்து விட்டால் :

பாவங்களை விட்டு விலகி தவ்பா செய்து விட்டால் நாம் மீண்டும் அந்த பாவத்தின் பக்கம் செல்லாமல் இருக்க நம்மையும் நம்மை பாவம் செய்ய தூண்டும் சூழ்நிலைகளையும் மாற்றி கொள்ள வேண்டும்!

1) தொழுகை பேணுதல் :

நாம் ஒவ்வொரு நாளும் கடமையான தொழுகைகளை முறையாக நேரம் உடன் தொழ வேண்டும் இதன் பின்பு உபரியான தஹஜ்ஜத் தொழுகை லுஹா தொழுகைகள் பர்ளு தொழுகைகளுடன் சேர்ந்த சுன்னத் தொழுகைகள் தொழ வேண்டும்!

நிச்சயமாகத் தொழுகை மானக்கேடான காரியங்களிலிருந்தும்! பாவங்களிலிருந்தும் மனிதனை விலக்கிவிடும்!(அல்குர்ஆன் : 29 : 45)

2) நல்ல அமல்கள் செய்வது :

நாம் பாவத்தின் பக்கம் செல்லமல் இருக்க இயன்ற அளவுக்கு நல்ல அமல்கள் செய்யவேண்டும் ஸதகா செய்வது பிறருக்கு உதவி செய்வது பிறரை மன்னிப்பது குடும்ப உறவுகள் உடன் நல்ல முறையில் நடந்து கொள்ளுவது! போன்ற நற்செயல்களில் அதிகம் ஈடுப்பட வேண்டும்!

3) சூழ்நிலையை மாற்றி கொள்ளுவது :

ஒரு மனிதன் பாவம் செய்ய மிக முக்கிய காரணங்களில் ஒன்று அவனுடைய சூழ்நிலை ஆகும்! சிலருக்கு தனிமையில் இருந்தால் பாவம் செய்ய எண்ணம் ஏற்படும் இன்னும் சிலருக்கு நண்பர்கள் உடன் சேர்ந்தால் பாவம் செய்ய எண்ணம் ஏற்படும்!

முதலில் நாம் பாவம் செய்ய என்ன சூழ்நிலை காரணமாக உள்ளது என்பதை அறிந்து கொள்ளுங்கள் அதை எந்த வழியில் எதிர்க்கலாம் அதை எவ்வாறு தவிர்த்து இருக்கலாம் என்று சிந்தித்து அதை செயல் படுத்துங்கள்!

4) உள்ளதை தூய்மை படுத்துவது :

ஒரு மனிதன் நல்லவனாக இருக்கவும் அல்லது பாவம் செய்ய கூடியவனாக இருக்கவும் மிக முக்கியம் காரணம் அவன் உள்ளம் தான்! அல்குர்ஆனிலும் சரி ஸஹீஹான ஹதீஸ்களிலும் சரி உள்ளதை பற்றி இடங்களில் முக்கியத்துவம் படுத்தி வந்து உள்ளது!

ஆனால் இன்று நம்மில் பலர் அதை ஒரு பொருட்டாக கருதாமல் விட்டு விடுவதால் உள்ளம் பாழடைந்து போகிறது இதனால் எளிதாக உள்ளத்தில் வீணான எண்ணங்கள் குழப்பம் வெறுப்பு பாவம் செய்யும் எண்ணம் என அனைத்தும் தோன்றும்!                           நாம் முதலில் உள்ளதை தூய்மை படுத்தவேண்டும்! அதற்கு முதலில் பாவத்தில் இருந்து முழுமையாக விலக வேண்டும் பின்பு இயன்ற அளவுக்கு நல்ல அமல்களை செய்யவேண்டும்!

உள்ளத்திற்கு அதிகம் துஆ செய்வது அல்குர்ஆன் பொருள் உணர்ந்து ஓதுவது அதை கேட்பது திக்ர்கள் செய்வது காலை மாலை துஆக்கள் வழமையாக ஓதுவது!

இது போன்ற அமல்களை நாம் தினமும் செய்து வந்தாலே உள்ளம் இன்ஷாஅல்லாஹ் தூய்மை ஆகி விடும்! உள்ளம் தூய்மை ஆகி விட்டால் உங்களுக்கு பாவம் செய்ய சூழ்நிலை அமைந்தாலும் நமது அதன் பக்கம் செல்ல எண்ணம் ஏற்படாது மாறாக பாவத்தின் மீது வெறுப்பு தான் ஏற்படும்!

 

 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

1.கணவனைக் கவரும் வழிகள் 40

மண்ணறை வேதனை 001

பத்ருப் போர் உணர்த்தும் பாடமும் படிப்பினைகளும்!