ரீல்ஸ், வீடியோ பதிவிடும் மோகம்… வீணான காரியங்களில் இருந்து விலகி வாழ்வோம்


  وَلِكُلٍّ وِجْهَةٌ هُوَ مُوَلِّيهَا ۖ فَاسْتَبِقُوا الْخَيْرَاتِ ۚ أَيْنَ مَا تَكُونُوا يَأْتِ بِكُمُ اللَّهُ جَمِيعًا ۚ إِنَّ اللَّهَ عَلَىٰ كُلِّ شَيْءٍ قَدِيرٌ

ஒவ்வோர் சமுதாயமும் அதன் இலக்கை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. (மூமின்களே!) உங்களின் இலக்கு நன்மையானவற்றில் ஒருவருக்கொருவர் முன்னேறிச் செல்லுங்கள்” (அல் குர் ஆன்: 2:148)



وَالَّذِيْنَ لَا يَشْهَدُوْنَ الزُّوْرَۙ وَ اِذَا مَرُّوْا بِاللَّغْوِ مَرُّوْا كِرَامًا‏

திருந்திநல்லறம் செய்பவர் அல்லாஹ்வை நோக்கி முற்றிலும் திரும்புகிறார். அவர்கள் பொய் சாட்சி கூற மாட்டார்கள். வீணானவற்றைக் கடக்கும் போது கண்ணியமாகக் கடந்து விடுவார்கள். (அல்குர்ஆன்: 25: 72 )


مِنْ حُسْنِ إِسْلَامِ الْمَرْءِ تَرْكُهُ مَا لَا يَعْنِيهِ


ஓர் அடியானின் இஸ்லாம் அவனுக்கு தேவை இல்லாத காரியங்களில் இருந்து தவிர்ந்து கொள்ளும் போது அழகு பெறுகின்றது என்பதாக மாநபி {ஸல்} அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். ( நூல்:திர்மிதீ )



இன்றைய இள வயதினரிடையே இரண்டு மோகங்கள் நிரம்ப காணப்படுவதை அவதானிக்க முடிகின்றது.

ஒன்று ரீல்ஸ், வீடியோ பதிவிடும் மோகம். இன்னொன்று, பைக் ரேஸ் மோகம். முதலாவது மோகத்தில் பாலின, வயது, மத பேதமின்றி அனைவரும் ஈடுபட்டு வருவதையும், இரண்டாவது மோகத்தில் மிக இள வயதுடைய இளைஞர்கள் ஈடுபட்டு வருவதையும் நாம் பார்த்து வருகின்றோம்.

இரண்டிலும் முடிவு அபாயகரமான, நிலைகுலையச் செய்யும், பதை பதைக்க வைக்கும் மரணங்களே முடிவாக கிடைக்கின்றன.

சமீப காலங்களாக முஸ்லிம் சமூகத்தைச் சார்ந்தவர்கள் இந்த இரண்டு மோகத்திலும் சிக்குண்டு சீரழிந்து வருவதை சமூக ஊடகங்கள் வாயிலாக நாம் பார்த்து வருகின்றோம்.

ரீல்ஸ், வீடியோ பதிவிடும் மோகம்…

இணைய உலகில் நாம் வாழ்ந்து கொண்டு இருக்கின்றோம் என்ற சொல் புழக்கத்திலிருந்து அகன்று தற்போது நாம் இன்ஸ்டா உலகத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கின்றோம் என்ற சொல் வழக்கத்திற்கு வந்துள்ள அளவுக்குஇன்ஸ்டா போஸ்டுகளும் இன்ஸ்டா ரீல்ஸ்களும்  தற்போது பிரபலமடைந்துள்ளன.

பொதுவாகவே ஒரு புதிய தொழில்நுட்பம் பயன்பாட்டுக்கு வரும்போது அது கொண்டு வரப்பட்டதற்கான நோக்கம் சரியானதாக இருப்பினும் அதற்கு எதிர்மறையான சில பாதிப்புகளையும் துரதிர்ஷ்டவசமாக அது ஏற்படுத்தவே செய்யும். அந்த வகையில் மொபைல் போனும் சில பாதிப்புகளை சமூகத்திலே சமீப காலமாக ஏற்படுத்தவே செய்துள்ளது என்றால் அது மிகையாகாது.

மொபைல் போன் இல்லாத பகுதி எங்கேனும் உண்டா .. தேடி சொல்லுங்களேன் எனக் கேட்டால் உடனடியாக இல்லவே இல்லை என சொல்லும் அளவுக்கு இன்று மொபைல் போன் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை தாறுமாறாக அதிகரித்துள்ளது.

உலகிலேயே அதிக மொபைல் பயன்படுத்தும் நாடுகளில் சீனா முதல் இடத்திலும்இந்தியா இரண்டாவது இடத்திலும் உள்ளது.

மொபைல் போன் பயன்பாட்டின் காரணமாக எந்த புதிய தொழில்நுட்பம்  வந்தாலும் அதனை உடனே பயன்படுத்தி ஆனந்தமடைவதில் இந்தியர்கள் முன்னணியில் உள்ளனர் என்கிறது ஒரு ஆய்வு.

மிகச் சாதாரணமான தகவல் தொடர்பு சாதனமாக அறிமுகமான மொபைல் போன் இன்று படம் எடுப்பது முதல் பாடம் எடுப்பது வரை,உணவினை ஆர்டர் செய்வது முதல் உளவு பார்ப்பது வரை இன்று மொபைல் போன் இல்லாமல் உலகம் இயங்குவதே இல்லை.

 

இன்று எல்லாமுமே மொபைல் போன் என்றாகி விட்டது. எதிர் வரும் காலங்களில் "மொபைல் இன்றி அமையாது உலகு" என்று புது மொழி எழுதும் அளவுக்கு வந்து விடும் போல் சூழல் உள்ளது.

சமூக வலைதள பயனர்கள் பலர் ரீல்ஸ் மோகத்தில் எந்த எல்லைக்கும் செல்லும் நிலைக்கு வந்துள்ளனர்.

சமீபத்தில் கர்நாடக மாநிலத்தில் உள்ள சிவ்மோக பகுதியில் உள்ள அரிசிணகுடி அருவிக்கு வனத்துறை அறிவுறுத்தலை மீறி சென்றுள்ளார்.

அங்கே ஆர்பரிக்கும் அருவிக்கு முன் நின்று ரீல்ஸ் எடுத்துக் கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக கால் இடறி தவறி விழுந்து ஆற்றில் அடித்து செல்லப்பட்டார். இந்த வீடியோ வெளியாகி பார்ப்போரை பதைபதைக்க வைத்தது.

மிக உயரமான கட்டடங்கள் மீது ஏறி சாகசங்களில்  முயற்சியில் ஈடுபடுபவர் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ரெமி லூசிடி. இவர் சிறுவயது முதலே கட்டடங்கள் மீது ஏறி சாகசம் செய்வதில் அதிக ஆர்வம் கொண்டவராக இருந்துள்ளார்.

ரெமிக்கு 30 வயதாகிறது.  பல உயரமான கட்டடங்கள் மீது ஏறி சாதனை படைத்துள்ள இவர் அதன் புகைப்படங்களையும் இணையத்தில் பதிவேற்றம் செய்து வருவது வழக்கம்.  இந்த நிலையில் கடந்த ஆண்டுஇவர் சீனாவின் ஹாங்காங்கில் உள்ள டிரெகன்டர் கோபுரத்தின் மீது ஏற முயன்றுள்ளார். அந்த கட்டடத்தின் 68வது மாடியிலிருந்தவாறு புகைப்படம் எடுக்கும்போது கால்தவறி கீழே விழுந்துள்ளார்.

அவர் கட்டடத்தின் மீது ஏறாமல்மின்தூக்கி வழியாக 68வது மாடிக்கு வந்து சில ஆபத்தான இடங்களில் நின்று புகைப்படம் எடுத்ததாக கூறப்படுகிறது. ரெமி தவறி விழுந்ததைப் பார்த்த அக்கட்டத்தின் பணிப்பெண் அளித்த தகவலின்பேரில் உடனடியாக ரெமியை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.  எனினும் அவர் வழியிலேயே உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. ( நன்றி: நியூஸ் 7, 01/08/2023 )

இதைபோன்று பல சமூகவலைதள பயனர்கள் ரீல்ஸ் மோகத்தால் தங்களது வாழ்க்கையையே தொலைப்பதோடு அவர்களை நம்பி இருக்கும் குடும்பத்தையும் அபாய நிலைக்கு அழைத்துச் செல்லும் போக்கு அதிகரித்துள்ளது.

சர்ச்சைக்கு பேர் போன இர்ஃபான் தமது மனைவியின் வயிற்றில் இருக்கும் கருவின் பாலினத்தை வீடியோவாக பதிவிட்டு சமூகத்தில் பலரின் எதிர்ப்பு காரணமாக மன்னிப்பு கேட்டு அந்த வீடியோவை தமது யூடியூப் பக்கத்தில் இருந்து அழித்திருந்தார்.

அந்த சுவடும்விமர்சனங்களும் மறையும் முன்னரே தமது மனைவியின் பிரசவ காலத்து வீடியோவை பதிவு செய்து தமது குழந்தையின் தொப்புள் கொடியை தமது கரங்களில் இருந்த கத்தரிக்கோலால் வெட்டுவது போன்ற வீடியோவை பதிவு செய்து மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

ரூபினா - ரூபிஸீனா இரட்டை சகோதரிகள் சமூக வலைத்தளங்களில் சாதாரணமாக வீடியோ பதிவு செய்ய ஆரம்பித்து விஜய் டிவி நடத்திய "கதாநாயகி" டைட்டிலில் வின்னராகிஅதில் ஒருவர் விஜய் டிவியின் ஒரு சீரியலில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

 

அவர்கள் கதாநாயகி டைட்டிலை வென்ற போது ஊடகத்திற்கு வழங்கிய பேட்டி ஒன்றில் "மதத்தை வச்சுப் பேசுறது கஷ்டமா இருந்தது. நடிப்புங்கிறது திறமை சார்ந்த விஷயம். மத ரீதியா எங்களைப் பேசுனது எங்களை ரொம்பவே காயப்படுத்துச்சு. கொஞ்ச நாள் உடைஞ்சு அழுதோம். எல்லாரும் உங்களை எத்தனை பேர் லவ் பண்றாங்கசப்போர்ட் பண்றாங்க. அதைப் பாருங்கன்னு ஆறுதலா இருந்தாங்க. இப்ப எதுனாலும் பார்த்துக்கலாம் என்கிற தைரியம் எங்களுக்கு வந்திருக்கு!" என்று கூறினார்கள்.

தற்போது அவர்கள் இருவரும் தசரா கோவில் விழாவில் பங்கேற்று பாட்டு பாடி நடனமாடிய வீடியோ வைரல் ஆனது. அதையும் நாம் ஊடகத்தின் வழியாக கண்டோம்.

ரீல்ஸ்வீடியோ என்று சாதாரணமாக துவங்கி இன்று சர்ச்சையிலும்ஒழுக்க கேடான காரியங்களிலும்மார்க்கத்திற்கு முரணாக நடந்து ஈமானின் ஒளியை களங்கப்படுத்துவதையும் மிகச் சாதாரணமாக கருதுகிற நிலைக்கு நமது சமூகத்தை சார்ந்தவர்கள் உருவாகி வருவது உள்ளபடியே கவலை அளிப்பதாக அமைந்துள்ளது.

முன்பு டிக் டாக் செயலி பயன்பாட்டில் இருந்த போதும் நமது சமூகத்தைச் சேர்ந்த பல பெண்களும் இது போன்றே வீடியோக்கள் பதிவிட்டு சமூகத்தை பதை பதைக்க விட்டனர்.

💚ஆனால் ஒரு இறைநம்பிக்கையாளரைப் பொறுத்தவரை அவர் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும். பொய்யான நடவடிக்கைகளை முற்றிலும் துறந்து பண்பட்டவராக வாழ்வது அவசியம். வீணான காரியங்கள் மற்றும் செயல்களில் இருந்து விலகி, ஒழுக்க நெறியோடு இருப்பது நம்பிக்கையாளர்களிடம் எப்போதும் இருக்க வேண்டிய பண்பாக ஏக இறைவன் திருமறையில் குறிப்பிடுகிறான்.

وَالَّذِيْنَ لَا يَشْهَدُوْنَ الزُّوْرَۙ وَ اِذَا مَرُّوْا بِاللَّغْوِ مَرُّوْا كِرَامًا‏

திருந்திநல்லறம் செய்பவர் அல்லாஹ்வை நோக்கி முற்றிலும் திரும்புகிறார். அவர்கள் பொய் சாட்சி கூற மாட்டார்கள். வீணானவற்றைக் கடக்கும் போது கண்ணியமாகக் கடந்து விடுவார்கள். (அல்குர்ஆன்: 25: 72 )

பொதுவாகநல்லவைகளைக் காட்டிலும் தீமைகள் ஷைத்தானால் அழகாகவும் ஈர்ப்பாகவும் காட்டப்படும். இதனால் அதிகமானோர் அவற்றின் பக்கம் படையெடுத்துச் செல்வார்கள்அவற்றில் அதீத ஆர்வம் காட்டுவார்கள். இத்தகைய நபர்களை விட்டும் அவர்கள் வரம்பு மீறும் வீணான செயல்களை விட்டும் அகன்று கொள்வதற்கான வழிமுறையை வல்ல ரஹ்மான் விளக்கியுள்ளான்.

وَاِذَا سَمِعُوا اللَّغْوَ اَعْرَضُوْا عَنْهُ وَقَالُوْا لَنَاۤ اَعْمَالُنَا وَلَـكُمْ اَعْمَالُـكُمْ سَلٰمٌ عَلَيْكُمْ لَا نَبْتَغِى الْجٰهِلِيْنَ‏

வீணானவற்றை அவர்கள் செவியுறும் போது அதை அலட்சியம் செய்கின்றனர். எங்கள் செயல்கள் எங்களுக்கு. உங்கள் செயல்கள் உங்களுக்கு. உங்கள் மீது ஸலாம் உண்டாகட்டும். அறிவீனர்களை விரும்ப மாட்டோம்’’ எனவும் கூறுகின்றனர்.( அல்குர்ஆன்: 28: 55 )

எனவேஎந்தவொரு செயலில் ஈடுபட்டாலும் அதன் மூலம் நமக்கோ அல்லது பிறருக்கோ ஏதேனும் பயனுள்ளதா என்று கவனிக்க மறந்து விடக் கூடாது. எப்போதும் எதிலும் பயன் தரும் பாதையில் பயணத்தை அமைத்துக் கொள்ள வேண்டுமென அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் நமக்கு அறிவுரை பகன்றுள்ளார்கள்.

«الْمُؤْمِنُ الْقَوِيُّ، خَيْرٌ وَأَحَبُّ إِلَى اللهِ مِنَ الْمُؤْمِنِ الضَّعِيفِ، وَفِي كُلٍّ خَيْرٌ احْرِصْ عَلَى مَا يَنْفَعُكَ، وَاسْتَعِنْ بِاللهِ وَلَا تَعْجَزْ، وَإِنْ أَصَابَكَ شَيْءٌ، فَلَا تَقُلْ لَوْ أَنِّي فَعَلْتُ كَانَ كَذَا وَكَذَا، وَلَكِنْ قُلْ قَدَرُ اللهِ وَمَا شَاءَ فَعَلَ، فَإِنَّ لَوْ تَفْتَحُ عَمَلَ الشَّيْطَانِ»

பலமான இறை நம்பிக்கையாளர்பலவீனமான இறை நம்பிக்கையாளரை விடச் சிறந்தவரும்அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமானவரும் ஆவார். ஆயினும்அனைவரிடமும் நன்மை உள்ளது. உனக்குப் பயனளிப்பதையே நீ ஆசைப்படு. இறைவனிடம் உதவி தேடு. நீ தளர்ந்துவிடாதே.உனக்கு ஏதேனும் துன்பம் ஏற்படும்போது, “நான் (இப்படிச்) செய்திருந்தால் அப்படி அப்படி ஆயிருக்குமே!” என்று (அங்கலாய்த்துக்) கூறாதே. மாறாக, “அல்லாஹ்வின் விதிப்படி நடந்துவிட்டது. அவன் நாடியதைச் செய்துவிட்டான்” என்று சொல். ஏனெனில், (“இப்படிச் செய்திருந்தால் நன்றாயிருந்திருக்குமே” என்பதைச் சுட்டும்) லவ்” எனும் சொல்லானது ஷைத்தானின் செயலுக்கே வழி வகுக்கும். இவ்வாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), ( நூல்: முஸ்லிம் )

ஓர் அடியானின் இஸ்லாம் அவனுக்கு தேவை இல்லாத காரியங்களில் இருந்து தவிர்ந்து கொள்ளும் போது அழகு பெறுகின்றது என்பதாக மாநபி {ஸல்} அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். ( நூல்:திர்மிதீ )


உங்களில் எவருடைய இஸ்லாம் அழகு பெறுமோ அப்போது அவர் செய்கிற ஒவ்வொரு நற்செயலுக்கும் பத்து மடங்கிலிருந்து எழுநூறு மடங்கு வரை நன்மைகள் எழுதப்படுகின்றன. ஒவ்வொரு தீமைக்கும் அது போன்ற பாவம் மட்டுமே எழுதப்படும் என மாநபி {ஸல்} அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.                                            ( நூல்: முஸ்லிம் )

 

 ( للذين أحسنوا الحسنى وزيادة ) والحسنى هي الجنة والزيادة النظر إلى وجه الله تعالى

எவர்கள் அழகிய முறையில் நன்மைகள் புரிகின்றனரோ, அவர்களுக்கு கூலி நன்மையே! இன்னும் அதிகப்படியான அருளும் கிடைக்கும். அவர்களின் முகங்களில் பாவப்புழுதியும் இழிவும் படியமாட்டாது! அவர்கள் சுவனத்திற்குரியவர்களாவர், அதில் அவர்கள் நிலையாக வாழ்வார்கள்”. ( அல்குர்ஆன்: 10: 26 )


வீணான செயல்களில் இருந்து விலகி இருப்பது சுவனத்தைப் பெற்றுத் தரும்! 

முஹம்மத் இப்னு கஅபுல் குறழீ (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “மாநபி {ஸல்} அவர்கள் தங்களின் முன்பாக திரண்டிருந்த சபையொன்றில் இன்று  இந்த வாசலில் யார் முதலில் நுழைகின்றாரோ அவர் சுவனவாசி என்று மஸ்ஜிதுன் நபவீயின் முன் வாசலை காண்பித்துக் கூறினார்கள்.

அந்த அறிவிப்பைக் கேட்டதில் இருந்து மாநபித்தோழர்கள் அனைவரின் பார்வையும் அங்கு நோக்கி இருந்தது.

உள்ளே ஒருவர் நுழைகின்றார்! அனைவரின் முகத்திலும் சந்தோஷம்! ஆம்!  யூதபாதிரியாக இருந்து அல்லாஹ்வின் தூதரின் கரம்பிடித்து சத்திய சன்மார்க்கத்தை ஏற்ற அப்துல்லாஹ் இப்னு ஸலாம் (ரலி) அவர்கள் தான் அந்த சோபனத்தைத்  தட்டிச் சென்றார்கள்.

சபையில் இருந்த ஒருவர் எழுந்து, நேராகச் சென்று அப்துல்லாஹ் இப்னு  ஸலாம் (ரலி) அவர்களிடம் மாநபி {ஸல்} அவர்கள் சொன்ன சோபனத்தைச் சொல்லி விட்டு உங்களுக்கு இந்த சோபனம் கிடைப்பதற்கு உங்களிடம் இடம்  பெற்றிருக்கின்ற எந்த அம்சத்தை காரணமாக கூறுவீர்கள்?” என்று கேட்டார்.

அதற்கு, அப்துல்லாஹ் இப்னு ஸலாம் (ரலி) அவர்கள் நான் வயது  முதிர்ந்தவன், உடல் பலவீனமானவன் ( என்னால் மிகப்பெரிய வணக்க  வழிபாடுகளைச் செய்ய இயலாது. அப்படிச் செய்தால் அல்லவா நான் அவைகளைக் காரணமாக கூறமுடியும் ) என்றாலும் மாநபி {ஸல்} அவர்கள் கூறிய சோபனத்தைப் பெறுவதற்கு காரணமாக என்னிடம் காணப்படுகிற இரண்டு அம்சங்களை ஆதரவு வைக்கிறேன்.

1. எப்போதும் என் உள்ளத்தை எந்தச் சலனமும் ஏற்படாதவாறு கட்டுப்படுத்தி வைத்திருக்கின்றேன்

2. எனக்கு தேவை இல்லாத, அவசியம் இல்லாத எந்த ஒன்றிலும் நான்  தலையிடுவதில்லை, அவைகளில் பங்கு கொள்ளாமல் விட்டு விடுவேன் என்று  பதில் கூறினார்கள்.                ( நூல்: இப்னு ஹிப்பான் )

வீணான காரியங்களில், செயல்களில் ஈடுபடக்கூடாது என்றதும் பேசுவது மட்டும் தான் நமக்கு ஞாபகம் வருகின்றது. ஆனால்மனித உடலின் அனைத்துப் பாகங்களையும் வீணான காரியங்கள், செயல்கள் அனைத்தில் இருந்தும் விலக்கி வைக்க வேண்டும் என்பதை பின் வரும் நபிமொழி நமக்கு உணர்த்துகின்றது.


அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “அல்லாஹ்விடத்தில் எப்படி வெட்கப்பட வேண்டுமோ அப்படி வெட்கப்படுங்கள்! என நபி {ஸல்} அவர்கள் எங்களிடம் கூறிய போது, அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களே! அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்! நாங்கள் வெட்கப்படத்தானே செய்கின்றோம்!” என்று கூறினோம்.

அதற்கு, அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் நீங்கள் சொல்வது போன்று  அல்ல, நான் சொல்கிற வெட்கம் என்பது!“அல்லாஹ்விடத்தில் எப்படி வெட்கப்பட வேண்டுமோ அப்படி வெட்கப்படுங்கள்! என்றால் நீங்கள் தலையையும், அதைச்  சுற்றியுள்ள இதர உறுப்புக்களையும் ( அல்லாஹ் தடுத்திருக்கிற, தேவையற்ற  காரியங்களில் ஈடுபடுத்துவதிலிருந்து ) பாதுகாப்பதாகும்.

வயிற்றையும், வயிற்றுக்கு மேலும் வயிற்றுக்கு கீழும் இருக்கிற உறுப்புக்கள் அனைத்தையும் ( அல்லாஹ் தடுத்திருக்கிற, தேவையற்ற காரியங்களில் ஈடுபடுத்துவதிலிருந்து ) பாதுகாப்பதாகும்.

மேலும், மரணத்தையும், மண்ணறை வாழ்வையும் நினைவு கூர்வதும்,  மறுமை வாழ்விற்காக இவ்வுலக மோகத்தை விட்டு விடுவதும் தான் என்று  பொருள் ஆகும்.

மேலும், எவர் மேற்கூறிய அம்சங்களை சரிவரச் செய்கின்றாரோ அவர் அல்லாஹ்விடத்தில் எப்படி வெட்கப்பட வேண்டுமோ அப்படி வெட்கப்பட்டு விட்டார் என மாநபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.                ( நூல்: திர்மிதீ )

சமூக வலைதள பயனாளர்கள் பலர் பல சமயங்களில் தங்களது கடமைகளையும் பொறுப்புகளையும் கூட மறந்து விடுவதை மறுக்க முடியாது. இந்த மாதிரி இருப்பவர்கள் இரட்சகனைப் பயந்து தங்களை திருத்திக் கொள்ளட்டும்.

وَاِذَا رَاَوْا تِجَارَةً اَوْ لَهْوَا۟ اۨنْفَضُّوْۤا اِلَيْهَا وَتَرَكُوْكَ قَآٮِٕمًا‌ ؕ قُلْ مَا عِنْدَ اللّٰهِ خَيْرٌ مِّنَ اللَّهْوِ وَمِنَ التِّجَارَةِ‌ ؕ وَاللّٰهُ خَيْرُ الرّٰزِقِيْنَ

“(முஹம்மதே) அவர்கள் வியாபாரத்தையோ, வீணானதையோ கண்டால் நின்ற நிலையில் உம்மை விட்டு விட்டு அதை நோக்கிச் சென்று விடுகின்றனர். அல்லாஹ்விடம் இருப்பது வீணானதையும், வியாபாரத்தையும் விட சிறந்தது. அல்லாஹ் உணவளிப்போரில் சிறந்தவன்’’ எனக் கூறுவீராக!. ( அல்குர்ஆன்: 62: 11 )

நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் (ஜும்ஆத்) தொழுது கொண்டிருந்தபோது உணவுப் பொருட்களை ஏற்றிக்கொண்டு (வாணிப) ஒட்டகக் கூட்டம் ஒன்று வந்தது. அதை நோக்கி மக்கள் சென்று விட்டனர். பன்னிரெண்டு நபர்களைத் தவிர வேறு எவரும் எஞ்சி இருக்கவில்லை. இந்த நேரத்தில் தான், “அவர்கள் வியாபாரத்தையோவீணானதையோ கண்டால் நின்ற நிலையில் உம்மை விட்டு விட்டு அதை நோக்கிச் சென்று விடுகின்றனர்’’  என்ற் மேற்கூறிய வசனம் இறங்கியது.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி), ( நூல்: புகாரி )

அனுமதிக்கப்பட்ட வியாபாரத்திற்காகக் கூட ஜுமுஆத் தொழுகையை விட்டுவிடுவதை அல்லாஹ் கண்டிப்பதில் நமக்குப் பெரும் பாடம் இருக்கிறது. மார்க்கம் தடுத்த வீணான நிகழ்வுகளில் பொழுதைக் கழித்துகடமையான தொழுகை போன்ற வணக்கங்களில் கவனக்குறைவாக இருப்பவர்கள் ஒரு கணம் சிந்திக்கக் கடமைப்பட்டு உள்ளனர்.

வீணான காரியங்களுக்கு ஏன் வீண் சிரமமும், முயற்சியும்?..

ரீல்ஸ், வீடியோ எடுப்பவர்கள் பல்வேறு வகையான ரிஸ்க்கான முயற்சிகளை எடுக்கின்றனர். பல நேரங்களில் அதுவே அவர்களுக்கு ஆபத்தாக முடிவடைந்து விடுவதைப் பார்க்கின்றோம். மரணம் வரை அழைத்துச் செல்ல இது போன்ற வீண் சிரமங்களே காரணமாக அமைகின்றது.

சிலவற்றை எளிமையாகவும் செய்ய இயலும்கஷ்டப்பட்டும் செய்ய இயலும். இதுபோன்று இரண்டு நிலை இருக்கும் போது வீண் சிரமம் எடுப்பதைத் தேர்வு செய்து விடக் கூடாது. எந்தவொரு காரியத்திலும் வீணான முயற்சியே எடுக்கக் கூடாது எனும் போதுவீண் காரியங்களைச் செய்து வாழ்வைக் கழிப்பவர்கள் கொஞ்சம் சிந்திக்க வேண்டும்.

كُنَّا عِنْدَ عُمَرَ فَقَالَ: «نُهِينَا عَنِ التَّكَلُّفِ»

உமர் (ரலி) அவர்களிடம் நாங்கள் இருந்தோம். அப்போது அவர்கள், ‘வீண் சிரமம் எடுத்துக்கொள்ளக் கூடாது என எங்களுக்குத் தடை விதிக்கப்பட்டது’ என்றார்கள். அறிவிப்பவர்: அனஸ் (ரலி) நூல்: புகாரி

இந்த மார்க்கம் எளிதானது. இந்த மார்க்கத்தை எவரேனும் (தம்மீது) சிரமமானதாக ஆக்கிக் கொண்டால், அது அவரை மிகைத்துவிடும். எனவே, (கூடுதலான வணக்கங்கள் உட்பட அனைத்துக் காரியங்களிலும்) நடுநிலையையே கடைப்பிடியுங்கள்.இயன்றவற்றைச் செய்யுங்கள்; நற்செய்தியையே சொல்லுங்கள்; (கூடுதல் வணக்கங்களை உற்சாகத்துடனும் நிரந்தரமாகவும் நிறைவேற்றிட) காலையையும் மாலையையும் இரவில் சிறிது நேரத்தையும் ஒத்தாசையாக்கிக் கொள்ளுங்கள். இவ்வாறு நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)( நூல்: முஸ்லிம் )

கால நேரத்தை பயனுள்ள வகையில் பயன் படுத்துவோம்!

அல்லாஹ் தனது திருமறையிலே அல்அஸ்ர் எனும் 103 வது அத்தியாயத்தில்எந்தக் காலத்தை மனிதன் வீணடித்துவிடக்கூடாதோ அந்த காலத்தின்மீது சத்தியமிட்டு கூறுகின்றான்.

காலத்தின் மீது சத்தியமாகமனிதன் நட்டத்திலிருக்கிறான். எவர்கள் விசுவாசங்கொண்டு நற்கருமங்களைச் செய்தும்சத்தியத்தைக் கொண்டு ஒருவருக்கொருவர் உபதேசம் செய்தும்பொறுமையைக் கொண்டும் ஒருவருக்கொருவர் உபதேசிக்கிறார்களோ அத்தகையோரைத் தவிர”.

ஆக நேரத்தை வீணடித்தவன் நாளை மறுமையில் மிகப்பெரிய கைசேதத்துக்குரியவன்.

இன்னும் இரண்டு அருட்கொடைகளை மக்கள் முழுமையாக பயன்படுத்துவதில்லை என்று நபி(ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள். அவற்றில் ஒன்று ஓய்வு நேரம்மற்றது ஆரோக்கியம். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரலி)நூல்: புகாரி.

இறுதித்தீர்ப்பு நாளில் ஐந்து கேள்விகளுக்கு விடை தராதவரை மனிதன் இறைவனின் நீதிமன்றத்திலிருந்து அகன்று செல்லவே முடியாது. அதில் இரண்டு நேரத்தைப் பற்றியது அவை: 1) உன் ஆயுளை எவ்வாறு செலவிட்டாய், 2) உன் இளமையை எவ்வாறு கழித்தாய். என்பதாகும். ஆதாரம்: திர்மிதி

அபூபக்கர் சித்தீக்(ரலி) அவர்களின் பிரார்த்தனையில் இடம் பெறும் ஒரு வாசகம். இறைவா! எங்களை நேரம் குறித்து அலட்சியமாக இருக்க விட்டு விடாதே” என்பதாகும்.

அடுத்து உமர்(ரலி) அவர்கள், ”இறைவா! எனது நேரத்தை அதிகப்படுத்துவாயாக. நேரத்தை சரியாகசிறப்பாக பயன்படுத்தும் நற்பேற்றை அருள்வாயாக” என்று பிரார்த்திப்பார்கள்.

கால நேரத்தை சரியாக பயன்படுத்தியவர்கள் காலத்துக்கும் போற்றப்படுவார்கள்…

1) இப்னு மஸ்வூத்(ரலி): என்னுடைய அமல்களை அதிகரித்துக் கொள்ளாமல் என்னை கடந்து செல்லும் நாட்களைத்தவிர வேறு எதற்கும் நான் நொந்துக்கொண்டது இல்லை.

2) 16 வயது இளைஞராக இருக்கும் போது உஸாமா பின் ஜைத்(ரலி) அவர்கள் படைத்தளபதி ஆனார்கள். இறைவன் மீது ஆணையாக இதற்கு இவர் முழுத்தகுதிவாய்ந்தவர் என நபி(ஸல்) அவர்களின் சான்றிதழையும் பெற்றிருந்தார்கள்.

3) சஅத் பின் முஆத்(ரலி) 30-ஆம் வயதில் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்கள். 37-ஆம் வயதில் மரணித்தார்கள். அவரின் வருட முஸ்லிமான வாழ்க்கைக்காகல்லாஹ்வின் அர்ஷ் அவரின் மரணத்திற்காக நடுங்கியது.

4) 10 வயதில் இஸ்லாத்தை ஏற்ற ஜைத் பின் தாபித்(ரலி), 14 வது வயதில் ஹிப்ரு மொழியைக் கற்று நபி(ஸல்) அவர்களின் பிரத்யேக மொழிபெயர்ப்பாளர் ஆனார்கள். 17 வயதில் வஹி எழுதும் எழுத்தாளர்களில் ஒருவராகவும் நபியவர்களுக்குப்பிறகு குர்ஆனை தொகுத்த குழுவிற்கு தலைவராகவும் நியமிக்கப்பட்டார்கள்.

5) உமர் அல்-முக்தார் அவர்கள் தனது 60-வது வயதில் இத்தாலிய ஆக்கிரமிப்பை அகற்றுவதற்கு தலைமையேற்று 10 வருடம் படை நடத்தினார்.

வீணானவற்றிலிருந்து விலகி இலட்சியத்தோடு வாழ்வோம்!

இலட்சியத்தோடும், குறிக்கோளோடும் தமது வாழ்க்கையை வாழத்துவங்கும் ஓர் இறை நம்பிக்கையாளன் தமது இலட்சியத்தையும், குறிக்கோளையும் உயர்வான ஒன்றை இலக்காக அமைத்து முன்னேறிச் செல்ல வேண்டும் ஏனெனில்,

  وَلِكُلٍّ وِجْهَةٌ هُوَ مُوَلِّيهَا ۖ فَاسْتَبِقُوا الْخَيْرَاتِ ۚ أَيْنَ مَا تَكُونُوا يَأْتِ بِكُمُ اللَّهُ جَمِيعًا ۚ إِنَّ اللَّهَ عَلَىٰ كُلِّ شَيْءٍ قَدِيرٌ

ஒவ்வோர் சமுதாயமும் அதன் இலக்கை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. (மூமின்களே!) உங்களின் இலக்கு நன்மையானவற்றில் ஒருவருக்கொருவர் முன்னேறிச் செல்லுங்கள்” (அல் குர் ஆன்: 2:148)

ஹஸன் இப்னு அலி (ரலி) அறிவிக்கின்றார்கள்:

(إِنَّ اللهَ تَعَالَى يُحِبُّ مَعَالِيَ الأُمُوِر وَأَشرَافَهَا، وَيَكَرهُ سَفْسَافَهَا

திண்ணமாக!அல்லாஹ் காரியங்களில், செயல்களில் மிக உயர்ந்தவற்றையும், சிறப்பானவற்றையும் பிரியப்படுகின்றான் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் நூல் தப்ரானீ )

வீணான காரியங்கள் மற்றும் மறுமை மற்றும் இம்மை வாழ்க்கையை பாழாக்கும் அனைத்து செயல்களில் இருந்தும் எல்லாம் வல்ல ரப்புல் ஆலமீன் நம் அனைவரையும் காத்தருள்வானாக! ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!! வஸ்ஸலாம்!!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

1.கணவனைக் கவரும் வழிகள் 40

மண்ணறை வேதனை 001

பத்ருப் போர் உணர்த்தும் பாடமும் படிப்பினைகளும்!