ஷைத்தான்களைப் பற்றிய விபரங்கள்

 

ஷைத்தான்கள்

ஷைத்தான்களைப் பற்றிய விபரங்கள்

1. ஜின் இனத்தைச் சார்ந்தவன்
2. ஷைத்தானின் உருவ அமைப்பு
3. ஷைத்தான் நெருப்பால் படைக்கப்பட்டவன்
4. ஷைத்தானின் உணவு
5. ஷைத்தான் அருந்தும் பானம்
6. ஷைத்தானின் இருப்பிடம்
7. இறைக் கட்டளையை மறுத்தான்
8. பெருமையின் காரணத்தால் வழிகெட்டான்
9. வானவர்களின் கூட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்டான்
10. அவகாசம் அளிக்கப்பட்டான்
11. ஷைத்தானின் சபதம்
12. முதன் முதலில் ஷைத்தான் வலையில் விழுந்தவர்கள்
13. மனிதர்களின் விரோதி
14. நபிமார்களுக்கு விரோதி
15. கெட்ட தோழன்
16. ஷைத்தானின் நண்பர்கள்
17. ஒவ்வொருவருடனும் இருக்கிறான்
18. உடலில் இரண்டரக் கலந்துள்ளான்
19. ஷைத்தானை விரட்டும் பெயரில் பித்தலாட்டம்
20. அனைவரிடமிருந்தும் ஷைத்தானை விரட்டுவார்களா?
21. ஷைத்தானால் ஏற்படும் தீங்கு
22. வேறெதுவும் செய்ய முடியாது?
23. ஷைத்தானுடன் தொடர்பு படுத்திக் கூறும் வழக்கம்
24. ஷைத்தான் பைத்தியத்தை ஏற்படுத்துவானா?
25. ஷைத்தான் நோயை ஏற்படுத்துவானா?
26. தீங்கை ஏற்படுத்துவது இறைவனின் அதிகாரம்
27. ஜின்களும் ஷைத்தான்களும் ஒன்றா?
28. கெட்ட ஜின்களும் ஷைத்தான்களும் ஒன்றா?
29. ஷைத்தான் உருமாறுவானா?
30. மனிதனாக உருமாறுவானா?
31. மனித ஷைத்தான்கள்.
32. நாய் வடிவில் வருவானா?
33. பாம்பு வடிவில் வருவானா?
34. பூனை வடிவில் வருவானா?

1.     ஜின் இனத்தைச் சார்ந்தவன்

ஷைத்தான் ஜின் இனத்தைச் சார்ந்தவனாவான் என்று குர்ஆன் கூறுகிறது.
“ஆதமுக்குப் பணியுங்கள்!” என்று வானவர்களுக்கு நாம் கூறிய போது இப்லீஸைத் தவிர அனைவரும் பணிந்தனர். அவன் ஜின் இனத்தைச் சேர்ந்தவனாக இருந்தான்.
அல்குர்ஆன் (18 : 50)

2.     ஷைத்தானின் உருவ அமைப்பு

நரகத்தில் ஸக்கூம் என்ற ஒரு கொடிய மரம் உள்ளது. இதனுடைய கொடூரமான வடிவத்தைப் பற்றி அல்லாஹ் விவரிக்கும் போது அது ஷைத்தான்களின் தலைகளைப் போன்று இருக்கும் என்று உவமை காட்டுகிறான். இதிலிருந்து ஷைத்தான்களின் வடிவம் அருவருக்கத்தக்க வகையில் கொடூரமாக இருக்கும் என்பதை அறிந்துகொள்ளலாம்.
இது சிறந்த தங்குமிடமா? அல்லது ஸக்கூம் மரமா? அதை அநீதி இழைத்தோருக்குச் சோதனையாக நாம் ஆக்கினோம். அது நரகத்தின் அடித்தளத்திலிருந்து வெளிப்படும் மரம். அதனுடைய பாளை ஷைத்தான்களின் தலைகளைப் போன்றது.
அல்குர்ஆன் (37 : 62.63.64.65)
ஷைத்தானிற்கு கொம்புகள் இருப்பதாக நபி (ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள். இதை பின்வரும் ஹதீஸ்களில் அறியலாம்.
“இறைவா! எங்கள் ஷாம் நாட்டில் எங்களுக்கு சுபிட்சத்தை வழங்குவாயாக! இறைவா! எங்கள் யமன் நாட்டில் எங்களுக்கு சுபிட்சத்தை வழங்குவாயாக!” என்று நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள். மக்கள் (சிலர்), “எங்கள் நஜ்து (இராக்) நாட்டிலும் (சுபிட்சம் ஏற்படப் பிரார்த்தியுங்களேன்!)” என்று (மூன்று முறை) கேட்க, நபி (ஸல்) அவர்கள், அங்குதான் நிலநடுக்கங்களும் குழப்பங்களும் தோன்றும்; அங்குதான் ஷைத்தானின் கொம்பு உதயமாகும்” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)
நூல் : புகாரி (1037)
நபி (ஸல்) அவர்கள் தொடர்ந்து கூறினார்கள் : மேலும், சூரியன் உதிக்கின்ற நேரத்திலும் அது மறைகின்ற நேரத்திலும் தொழாதீர்கள். ஏனெனில் அது, ஷைத்தானின் இரு கொம்புகளுக்கிடையே உதிக்கின்றது.
அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)
நூல் : புகாரி (3273)
3.     ஷைத்தான் நெருப்பால் படைக்கப்பட்டவன்
“நான் உனக்குக் கட்டளையிட்ட போது பணிவதை விட்டும் உன்னைத் தடுத்தது எது?” என்று (இறைவன்) கேட்டான். “நான் அவரை விடச் சிறந்தவன். என்னை நீ நெருப்பால் படைத்தாய்! அவரைக் களிமண்ணால் படைத்தாய்!” என்று கூறினான்.
அல்குர்ஆன் (7 : 12)
“நான் அவரை விடச் சிறந்தவன். என்னை நெருப்பால் நீ படைத்தாய். அவரைக் களிமண்ணால் படைத்தாய்” என்று அவன் கூறினான்.
அல்குர்ஆன் (38 : 76)
4.     ஷைத்தானின் உணவு

உணவு உண்பதற்கு முன்னால் பிஸ்மில்லாஹ் என்று கூற வேண்டும். இறைவனுடைய பெயரை கூறாமல் உணவு உட்கொண்டால் அந்த உணவு ஷைத்தானிற்கு செல்வதாக நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். பிஸ்மில்லாஹ் கூறப்படாமல் உண்ப்படுகின்ற உணவு தான் ஷைத்தானின் உணவாகும்.
ஹுதைஃபா பின் அல்யமான் (ரலிலி) அவர்கள் கூறியதாவது : நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் (சேர்ந்து) உணவு உண்பதற்கு அமர்ந்தால், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முதலிலில் கை வைப்பதற்கு முன் எங்கள் கைகளை (உணவில்) நாங்கள் வைக்கமாட்டோம். ஒரு முறை நாங்கள் உணவு உண்பதற்கு அவர்களுடன் அமர்ந்தோம். அப்போது ஒரு சிறுமி, (யாராலோ) தள்ளிவிடப்பட்டவளைப் போன்று (விரைந்து) வந்து, (பிஸ்மில்லாஹ் சொல்லாமல்) உணவில் கை வைக்கப்போனாள்.
உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவளது கையைப் பிடித்துக்கொண்டார்கள். பிறகு ஒரு கிராமவாசி, (யாராலோ) தள்ளி விடப்பட்டவரைப் போன்று (விரைந்து வந்து பிஸ்மில்லாஹ் சொல்லாமல் உணவில் கை வைக்க) வந்தார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவரது கையையும் பிடித்துக் கொண்டார்கள்.
அப்போது, “அல்லாஹ்வின் பெயர் சொல்லப்படாத உணவில் ஷைத்தான் பங்கேற்கிறான். அவன் இச்சிறுமியுடன் வந்து, அவள் மூலமே இந்த உணவில் பங்கேற்கப் பார்த்தான். ஆகவே, அவளது கையை நான் பிடித்து (அதைத் தடுத்து)விட்டேன். பிறகு இந்தக் கிராமவாசியுடன் வந்து அவர் மூலம் இந்த உணவில் பங்கேற்கப் பார்த்தான். ஆகவே, இவரது கையைப் பிடித்து (அதைத் தடுத்து)விட்டேன். என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! ஷைத்தானின் கை அச்சிறுமியின் கையுடன் எனது கைக்குள் சிக்கிக்கொண்டது” என்று கூறினார்கள்.
நூல் : முஸ்லிம் (4105)
பிஸ்மில்லாஹ் என்று கூறி உணவு உண்ணும் போது ஷைத்தானால் அந்த உணவை உண்ண முடியாது. அந்த உணவின் பலன் முழுமையாக பிஸ்மில்லாஹ் கூறி உண்டவருக்கே செல்கிறது. எனவே பிஸ்மில்லாஹ் என்று கூறி உண்ணுவதன் மூலம் நம்முடன் ஷைத்தானை உண்ணவிடாமல் தடுக்கலாம்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ஒருவர் தமது இல்லத்திற்குள் நுழையும் போதும் உணவு உண்ணும்போதும் அல்லாஹ்வை நினைவுகூர்ந்தால், ஷைத்தான் (தன் கூட்டத்தாரிடம்), “இன்றைய இரவில் உங்களுக்கு (இங்கே) தங்குமிடமும் இல்லை; உண்ண உணவுமில்லை” என்று கூறுகிறான். ஒருவர் இல்லத்திற்குள் நுழையும் போது அல்லாஹ்வை நினைவுகூராவிட்டால் ஷைத்தான் (தன் கூட்டத்தாரிடம்), “இன்றைய இரவில் உங்களுக்குத் தங்குமிடம் கிடைத்துவிட்டது” என்று சொல்கிறான்.
அவர் உணவு உண்ணும்போது அல்லாஹ்வின் பெயர்கூறாவிட்டால் ஷைத்தான் “இன்றைய இரவில் நீங்கள் தங்கும் இடத்தையும் உணவையும் அடைந்துகொண்டீர்கள்” என்று சொல்கிறான்.
அறிவிப்பவர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலிலி)
நூல் : முஸ்லிம் (4106)
5.     ஷைத்தான் அருந்தும் பானம்

உண்ணுவதற்கு அனுமதிக்கப்பட்ட பொருளாக இருந்தாலும் இஸ்லாம் கற்றுத்தந்தவாறு உண்ண வேண்டும். இஸ்லாமிய முறைக்கு மாற்றமாக உட்கொண்டாலோ பருகினாலோ அந்த உணவும் பானமும் ஷைத்தானிற்கு செல்கிறது. இதை பின்வரும் ஹதீஸ்கள் தெளிவுபடுத்துகிறது.
நின்று பருகக்கூடிய ஒரு மனிதரை நபி (ஸல்) அவர்கள் பார்த்த போது வாந்தி எடு என்று (பருகியவரைப் பார்த்துக்) கூறினார்கள். அவர் ஏன் என்று வினவினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் நீயும் பூனையும் ஒன்றாக சேர்ந்து பருகுவதை விரும்புவீரா என்று கேட்டார்கள். அவர் விரும்ப மாட்டேன் என்று கூறினார். (நீ நின்று குடித்த போது) பூனையை விட மோசமான ஷைத்தான் உன்னுடன் சோந்து பருகினான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
நூல் : அஹ்மத் (7662)
6.     ஷைத்தானின் இருப்பிடம்

ஷைத்தான்கள் அசுத்தமான இடங்களில் வசிக்கின்றன. கழிப்பறைகள் ஷைத்தான்கள் வருகின்ற இடமாக இருப்பதால் அங்கு செல்லும் போது ஷைத்தானிடமிருந்து பாதுகாவல் தேடுமாறு நபி (ஸல்) அவர்கள் நமக்கு கற்றுத்தந்துள்ளார்கள்.
நபி (ஸல்) அவர்கள் கழிப்பிடத்திற்குள் நுழைய முற்படும்போது, “இறைவா! (அருவருக்கத் தக்க செயல்கள், இழிவான எண்ணங்கள் ஆகியற்றைத் தூண்டும்) ஆண் பெண் ஷைத்தானி(ன் தீங்கி)லிருந்து உன்னிடம் நான் பாதுகாப்புத் தேடுகிறேன்” என்று கூறுவார்கள்.
அறிவிப்பவர் : அனஸ் (ரலி)
நூல் : புகாரி (142)
இந்த கழிப்பிடங்கள் (ஷைத்தான்கள்) வருகைதரும் இடமாக உள்ளது. ஆகவே உங்களில் ஒருவர் கழிப்பிடத்திற்குள் நுழைய முற்படும்போது, “இறைவா! (அருவருக்கத் தக்க செயல்கள், இழிவான எண்ணங்கள் ஆகியற்றைத் தூண்டும்) ஆண் பெண் ஷைத்தானி(ன் தீங்கிலி)லிருந்து உன்னிடம் நான் பாதுகாப்புத் தேடுகிறேன்” என்று கூறிக்கொள்ளட்டும்.
அறிவிப்பவர் : ஸைது பின் அர்கம் (ரலி)
நூல் : இப்னு மாஜா (292)
இறைவனை ஞாபகப்படுத்தும் நற்காரியங்கள் எதுவும் வீடுகளில் செய்யப்படாமல் இருந்தால் அந்த வீடு ஷைத்தான்கள் வசிப்பதற்கு ஏற்ற இடமாக ஆகிவிடுகிறது.
குர்ஆன் ஓதுவது தொழுவது திக்ர் செய்வது போன்ற இறைவனை ஞாபகப்படுத்தும் காரியங்கள் வீடுகளில் அரங்கேறினால் ஷைத்தானும் அவனது கூட்டத்தாரும் அந்த வீட்டில் வசிக்க இயலாமல் அதை விட்டும் வெளியேறிவிடுகிறார்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ஒருவர் தமது இல்லத்திற்குள் நுழையும் போதும் உணவு உண்ணும்போதும் அல்லாஹ்வை நினைவுகூர்ந்தால், ஷைத்தான் (தன் கூட்டத்தாரிடம்), “இன்றைய இரவில் உங்களுக்கு (இங்கே) தங்குமிடமும் இல்லை; உண்ண உணவுமில்லை” என்று கூறுகிறான். ஒருவர் இல்லத்திற்குள் நுழையும் போது அல்லாஹ்வை நினைவுகூராவிட்டால் ஷைத்தான் (தன் கூட்டத்தாரிடம்), “இன்றைய இரவில் உங்களுக்குத் தங்குமிடம் கிடைத்துவிட்டது” என்று சொல்கிறான்.
அவர் உணவு உண்ணும்போது அல்லாஹ்வின் பெயர்கூறாவிட்டால் ஷைத்தான் “இன்றைய இரவில் நீங்கள் தங்கும் இடத்தையும் உணவையும் அடைந்துகொண்டீர்கள்” என்று சொல்கிறான்.
அறிவிப்பவர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலிலி)
நூல் : முஸ்லிம் (4106)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : உங்கள் இல்லங்களை (தொழுகை, ஓதல் நடைபெறாத) சவக் குழிகளாக ஆக்கிவிடாதீர்கள். “அல்பகரா’ எனும் (இரண்டாவது) அத்தியாயம் ஒதப்படும் இல்லத்திலிலிருந்து ஷைத்தான் வெருண்டோடிவிடுகிறான்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலிலி)
நூல் : முஸ்லிம் (1430)
7.     இறைக் கட்டளையை மறுத்தான்

நல்லவனாக இருந்த ஷைத்தான் இறைவனுக்கு மாறுசெய்த ஒரே காரணத்திற்காக கெட்டவனாக மாறினான். இறைவன் ஒரு கட்டளையிட்டுவிட்டால் எந்த விருப்பு வெறுப்பின்றி கட்டுப்பட்டால் தான் முஸ்லிமாக இருக்க முடியும். வெற்றி பெற முடியும்.
இறைவன் ஷைத்தானிடம் ஆதம் (அலை) அவர்களுக்கு பணியுமாறு கூறும் போது இறைக்கட்டளைக்கு கட்டுப்படாமல் இறைவனை எதிர்த்துப் பேசினான். இறைமறுப்பாளனாக ஆனான்.
“சேற்றிலிருந்த கருப்புக் களிமண்ணால் வடிவமைக்கப்பட்டு நான் மனிதனைப் படைக்கவுள்ளேன்” என்று வானவர்களுக்கு உமது இறைவன் கூறியதை நினைவூட்டுவீராக! “அவரை நான் சீர்படுத்தி எனது உயிரை அவருக்குள் நான் ஊதும் போது, அவருக்குப் பணிந்து விழுங்கள்!” (என்று கூறினான்)
இப்லீஸைத் தவிர வானவர்கள் அனைவரும் ஒட்டு மொத்தமாகப் பணிந்தனர். அவன் பணிந்தவனாக இருக்க மறுத்து விட்டான். “இப்லீஸே! பணிந்தோருடன் நீ சேராமல் இருப்பது ஏன்?” என்று (இறைவன்) கேட்டான்.
“சேற்றிலிருந்த கருப்புக் களிமண்ணால் வடிவமைக்கப்பட்டு நீ படைத்த மனிதனுக்கு நான் பணிபவனாக இல்லை” என்று அவன் கூறினான்.
அல்குர்ஆன் (15 : 28)
8.     பெருமையின் காரணத்தால் வழிகெட்டான்
அல்லாஹ் அல்லவா நமக்கு உத்தரவு இடுகிறான் என்று ஷைத்தான் கவனிக்காமல் ஆதம் உயர்ந்தவரா? நான் உயர்ந்தவனா? என்று யோசிக்க முற்பட்டான். அவனிடம் ஏற்பட்ட இந்த ஆணவம் தான் அவனை வழிகெடுத்தது. படைத்த இறைவனிடத்திலேயே திமரிப் பேசத் தூண்டியது.
“ஆதமுக்குப் பணியுங்கள்!” என்று நாம் வானவர்களுக்குக் கூறிய போது இப்லீஸைத் தவிர அனைவரும் பணிந்தனர். அவனோ மறுத்துப் பெருமையடித்தான். (நம்மை) மறுப்பவனாக ஆகி விட்டான்.
அல்குர்ஆன் (2 : 34)
“ஆதமுக்குப் பணியுங்கள்!” என்று வானவர்களுக்கு நாம் கூறிய போது இப்லீஸைத் தவிர அனைவரும் பணிந்தனர். “களிமண்ணால் நீ படைத்தவருக்குப் பணிவேனா?” என்று அவன் கேட்டான்.
அல்குர்ஆன் (17 : 61)
“எனது இரு கைகளால் நான் படைத்ததற்கு நீ பணிவதை விட்டும் எது உன்னைத் தடுத்தது? அகந்தை கொண்டு விட்டாயா? அல்லது உயர்ந்தவனாக ஆகி விட்டாயா?” என்று (இறைவன்) கேட்டான்.
“நான் அவரை விடச் சிறந்தவன். என்னை நெருப்பால் நீ படைத்தாய். அவரைக் களிமண்ணால் படைத்தாய்” என்று அவன் கூறினான்.
அல்குர்ஆன் (38 : 75)
9.     வானவர்களின் கூட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்டான்

ஷைத்தான் இறைக்கட்டளையை மீறுவதற்கு முன்பு வரை வானவர்களின் கூட்டத்தில் ஒருவனாகவே இருந்தான். இவைனுக்கு கட்டுப்பட மறுத்த உடன் வானவர்களின் சபையிலிருந்து வெளியேற்றப்பட்டான்.
“இங்கிருந்து நீ இறங்கி விடு! இங்கே நீ பெருமையடிப்பது தகாது. எனவே வெளியேறு! நீ சிறுமையடைந்தவனாவாய்” என்று (இறைவன்) கூறினான்.
அல்குர்ஆன் (7 : 13)
இங்கிருந்து நீ வெளியேறு! நீ விரட்டப்பட்டவன். தீர்ப்பு நாள் வரை உன் மீது சாபம் உள்ளது (என்று இறைவன் கூறினான்)
அல்குர்ஆன் (15 : 34)
“இங்கிருந்து வெளியேறு! நீ விரட்டப்பட்டவன். தீர்ப்பு நாள் வரை உன் மீது எனது சாபம் உள்ளது” என்று (இறைவன்) கூறினான்.
அல்குர்ஆன் (38 : 77)
10.   அவகாசம் அளிக்கப்பட்டான்

தன்னை அழித்துவிடக்கூடாது. தனக்கு நீண்ட ஆயுளை அளிக்க வேண்டும் என்று ஷைத்தான் இறைவனிடம் கோரினான். ஷைத்தானுடைய இந்த கோரிக்கையை இறைவனும் ஏற்றுக்கொண்டு அவகாசம் அளித்தான்.
நீண்ட ஆயுள் ஷைத்தானிற்கு வழங்கப்பட்டாலும் உலகம் அழிக்கப்படும் போது ஷைத்தானும் அழிக்கப்படுவான். நிச்சயமாக அவனும் ஒரு நேரத்தில் மரணத்தை தழுவுவான்.
“அவர்கள் உயிர்ப்பிக்கப்படும் நாள் வரை எனக்கு அவகாசம் அளிப்பாயாக!” என்று அவன் கேட்டான். “நீ அவகாசம் அளிக்கப்பட்டவனாவாய்” என்று (இறைவன்) கூறினான்.
அல்குர்ஆன் (7 : 14)
“இறைவா! அவர்கள் உயிர்ப்பிக்கப்படும் நாள் வரை எனக்கு அவகாசம் தருவாயாக!” என்று அவன் கேட்டான். “குறிப்பிட்ட நேரம் வரும் நாள் வரை நீ அவகாசம் அளிக்கப்பட்டவன்” என்று (இறைவன்) கூறினான்.
அல்குர்ஆன் (15 : 36)
“என் இறைவா! அவர்கள் உயிர்ப்பிக் கப்படும் நாள் வரை எனக்கு அவகாசம் அளிப்பாயாக!” என்று அவன் கேட்டான். “அறியப்பட்ட நேரத்தை உள்ளடக்கிய நாள் வரை நீ அவகாசம் கொடுக்கப்பட்டவன்” என்று இறைவன் கூறினான்.
அல்குர்ஆன் (38 : 79)
11.   ஷைத்தானின் சபதம்

ஆணவத்தால் வழிகெட்ட ஷைத்தான் ஆதமுடைய மக்கள் அனைவரையும் வழிகெடுப்பேன் என்று அல்லாஹ்விடம் சபதம் எடுத்தான். கடும் முயற்சி செய்து மக்கள் அனைவரையும் நரகத்தில் தள்ளுவது தான் ஷைத்தானுடைய முழு நோக்கமாகும். மக்களை வழிகெடுப்பதற்காகத் தான் அவன் இறைவனிடம் அவகாசம் கேட்டான்.
அல்லாஹ் அவனை (ஷைத்தானை) சபித்து விட்டான். “உன் அடியார்களில் குறிப்பிட்ட தொகையினரை வென்றெடுப்பேன்” என்று அவன் (இறைவனிடம்) கூறினான்.
“அவர்களை வழி கெடுப்பேன்; அவர்களுக்கு(த் தவறான) ஆசை வார்த்தை கூறுவேன்; அவர்களுக்குக் கட்டளையிடுவேன்; அவர்கள் கால்நடைகளின் காதுகளை அறுப்பார்கள். (மீண்டும்) அவர்களுக்குக் கட்டளையிடுவேன்; அல்லாஹ் வடிவமைத்ததை அவர்கள் மாற்றுவார்கள்” (எனவும் கூறினான்). அல்லாஹ்வையன்றி ஷைத்தானைப் பொறுப்பாளனாக்கிக் கொள்பவன் வெளிப்படையான நஷ்டத்தை அடைந்து விட்டான்.
அல்குர்ஆன் (4 : 118.119)
“நீ என்னை வழி கெடுத்ததால் அவர்களுக்காக உனது நேரான பாதையில் அமர்ந்து கொள்வேன்” என்று கூறினான். “பின்னர் அவர்களின் முன்னும், பின்னும், வலமும், இடமும் அவர்களிடம் வருவேன். அவர்களில் அதிகமானோரை நன்றி செலுத்துவோராக நீ காண மாட்டாய்” (என்றும் கூறினான்).
அல்குர்ஆன் (7 : 16.17)
“என் இறைவா! என்னை நீ வழி கெடுத்ததால் பூமியில் (தீமைகளை) அழகாக்கிக் காட்டுவேன். அவர்களில் உன்னால் தேர்ந்தெடுக்கப்பட்ட உனது அடியார்களைத் தவிர (மற்றவர்கள்) அனைவரையும் வழி கெடுப்பேன்” என்று கூறினான்.
“இதோ என்னிடம் நேரான வழி உள்ளது” என்று (இறைவன்) கூறினான். எனது அடியார்களில் உன்னைப் பின்பற்றிய வழிகேடர்களைத் தவிர மற்றவர்கள் மீது உனக்கு எந்த அதிகாரமும் இல்லை.
அல்குர்ஆன் (15 : 40)
“என்னை விட நீ சிறப்பித்த இவரைப் பற்றிக் கூறுவாயாக! கியாமத் நாள் வரை எனக்கு நீ அவகாசம் அளித்தால் சிலரைத் தவிர இவரது சந்ததிகளை வேரறுப்பேன்” எனவும் கூறினான்.
அல்குர்ஆன் (17 : 62)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : (எனது இறைவா) உனது கண்ணியத்தின் மீதும் மகத்துவத்தின் மீதும் சத்தியமாக ஆதமுடைய மக்கள் உயிருடன் இருக்கும் காலமெல்லாம் அவர்களை நான் வழிகெடுத்துக்கொண்டே இருப்பேன் என்று இப்லீஸ் இறைவனிடம் கூறினான். அதற்கு இறைவன் எனது கண்ணியத்தின் மீதும் மகத்துவத்தின் மீதும் சத்தியமாக அவர்கள் என்னிடம் பாவமன்னிப்புத் தேடும் காலமெல்லாம் அவர்களை நான் மன்னித்துக்கொண்டே இருப்பேன் என்று கூறினான்.
அறிவிப்பவர் : அபூசயீத் அல்குத்ரீ (ரலி)
நூல் : அஹ்மத் (10814)
ஷைத்தான் எப்படியெல்லாம் மனிதனை வழிகெடுப்பான் என்பதை நபி (ஸல்) அவர்கள் பின் வரும் ஹதீஸில் விளக்கியுள்ளார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ஆதமுடைய மகனை வழிகெடுப்பதற்காக ஷைத்தான் (நல்) வழிகளில் அமர்ந்துகொள்கிறான். அவனை வழிகெடுப்பதற்காக இஸ்லாம் என்ற (நல்) வழியில் அமர்ந்துகொண்டு உனது மார்க்கத்தையும் உனது தந்தையின் மார்க்கத்தையும் உனது பாட்டனாரின் மார்க்கத்தையும் விட்டுவிட்டு நீ இஸ்லாத்தை ஏற்கப்போகிறாயா? என்று கூறுவான். ஆதமுடைய மகன் ஷைத்தானிற்கு மாறுசெய்து இஸ்லாத்தை ஏற்றுவிட்டால் அவனை வழிகெடுப்பதற்காக ஹிஜ்ரத் (இறைவனுக்காக நாடுதுறத்தல்) என்ற (நல்) வழியில் அமர்ந்துகொண்டு உனது பூமியையும் உனது வானத்தையும் விட்டுவிட்டு நீ ஹிஜ்ரத் செய்யப்போகிறாயா? ஹிஜ்ரத் செய்தவர் கட்டிப்போடப்பட்ட குதிரையைப் போன்றவர் ஆவார் என்று கூறுவான். ஷைத்தானிற்கு மாறுசெய்து ஹிஜ்ரத் செய்துவிட்டால் ஆதமுடைய மகனை வழிகெடுப்பதற்காக அறப்போர் என்ற (நல்) வழியில் ஷைத்தான் அமர்ந்துகொண்டு அறப்போரில் உயிரையும் பொருளையும் அற்பணிக்க வேண்டும். நீ போரிட்டு கொல்லப்பட்டுவிட்டால் (உன்) மனைவியை மற்றவர் மணமுடித்துக்கொள்வார். உனது செல்வம் பங்கிடப்பட்டு மற்றவரால் எடுத்துக்கொள்ளப்படும் என்று கூறுவான். (உறுதியுள்ள மனிதன்) இவனுக்கு மாறு செய்து அறப்போரில் கலந்துகொள்வான். இந்த நல்ல காரியங்களை செய்தவராக யார் மரணிக்கிறாரோ அவரை சொர்க்கத்தில் நுழையச் செய்வது அல்லாஹ்வின் மீது கடமையாகிவிடுகிறது.
அறிவிப்பவர் : சப்ரா பின் அபீ ஃபாகிஹ் (ரலி)
நூல் : அஹ்மத் (15392)
12.   முதன் முதலில் ஷைத்தான் வலையில் விழுந்தவர்கள்

ஷைத்தானுடைய சதியில் முதன் முதலில் ஆதம் (அலை) அவர்களும் ஹவ்வா (அலை) அவர்களும் விழுந்தார்கள். சொர்க்கத்தில் இன்பத்தை அனுபவித்துக்கொண்டிருந்த இவ்விருவருக்கும் பொய்யான தகவலை ஷைத்தான் தந்தான்.
அதை நம்பி அவ்விருவரும் இறைவனுடைய கட்டளையை மீறினார்கள். இதனால் இறைவன் அவ்விருவரையும் சொர்க்கத்திலிருந்து வெளியேற்றிவிட்டான்.
ஆதமே! இவன் உமக்கும், உமது மனைவிக்கும் எதிரியாவான். அவன் உங்களை சொர்க்கத்திலிருந்து வெளியேற்றி விட வேண்டாம். அப்போது நீர் துர்பாக்கியசாலியாவீர்!
இங்கே உமக்குப் பசிக்காது! நிர்வாணமாக மாட்டீர்! இங்கே உமக்குத் தாகமும் ஏற்படாது. உம்மீது வெயிலும் படாது! (என்று கூறினோம்).
அவரிடம் ஷைத்தான் தீய எண்ணத்தை ஏற்படுத்தினான். ஆதமே! நிலையான (வாழ்வளிக்கும்) மரத்தைப் பற்றியும், அழிவில்லா ஆட்சியைப் பற்றியும் நான் உமக்கு அறிவிக்கட்டுமா? (என்றான்.)
அவ்விருவரும் அதிலிருந்து சாப்பிட்டனர். அவ்விருவருக்கும் தங்களது வெட்கத்தலங்கள் வெளிப்பட்டன. அவ்விருவரும் சொர்க்கத்தின் இலையால் தங்களை மறைத்துக் கொள்ள முற்பட்டனர். ஆதம் தமது இறைவனுக்கு மாறு செய்தார். எனவே அவர் வழி தவறினார்.
அல்குர்ஆன் (20 : 117)
13.   மனிதர்களின் விரோதி

மனிதர்களை வெற்றியடைய விடாமல் நரகத்திற்கு அழைப்பது ஷைத்தானுடைய குறிக்கோள் என்பதால் அல்லாஹ் திருக்குர்ஆனில் பல இடங்களில் ஷைத்தானைப் பற்றி நமக்கு எச்சரிக்கை செய்கிறான். அவன் மனிதர்களுக்கு பகிரங்கமான விரோதி என்றும் குறிப்பிடுகிறான்.
ஷைத்தான் உங்களுக்கு எதிரியாவான். அவனை எதிரியாகவே ஆக்கிக் கொள்ளுங்கள்! நரகவாசிகளாக ஆவதற்காகவே அவன் தனது கூட்டத்தாரை அழைக்கிறான்.
அல்குர்ஆன் (35 : 6)
மனிதர்களே! பூமியில் உள்ளவற்றில் அனுமதிக்கப்பட்ட தூய்மையானதை உண்ணுங்கள்! ஷைத்தானின் அடிச்சுவடுகளைப் பின்பற்றாதீர்கள்! அவன் உங்களுக்குப் பகிரங்க எதிரி.
அல்குர்ஆன் (2 : 168)
ஷைத்தான் மனிதனுக்குப் பகிரங்க எதிரியாவான்.
அல்குர்ஆன் (12 : 5)
ஷைத்தான் மனிதனுக்குத் துரோகம் செய்பவனாகவே இருக்கிறான்.
அல்குர்ஆன் (25 : 29)
ஆதமுடைய மக்களே! உங்கள் பெற்றோர் இருவரையும் ஷைத்தான் சொர்க்கத்திலிருந்து வெளியேற்றியது போல் உங்களையும் அவன் குழப்பிவிட வேண்டாம். அவர்களின் வெட்கத்தலங்களை அவர்களுக்குக் காட்ட ஆடைகளை அவர்களை விட்டும் அவன் கழற்றினான். நீங்கள் அவர்களைக் காணாத வகையில் அவனும், அவனது கூட்டத்தாரும் உங்களைப் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். நம்பிக்கை கொள்ளாதோருக்கு ஷைத்தான்களை உற்ற நண்பர்களாக நாம் ஆக்கி விட்டோம்.
அல்குர்ஆன் (7 : 27)
14.   நபிமார்களுக்கு விரோதி

மக்களை வழிகேட்டிற்கு செல்ல விடாமல் நல்வழிபடுத்துவது நபிமார்களின் பணியாகும். இந்தப் பணி ஷைத்தானிற்கு பிடிக்காததும் அவனுக்கு எதிரானதுமாகும். எனவே இப்பணியில் ஈடுபட்ட நபிமார்களுக்கு ஷைத்தான் பல வழிகளில் இடஞ்சல்களை ஏற்படுத்தி இருக்கிறான்.
(முஹம்மதே!) உமக்கு முன் நாம் அனுப்பிய எந்த நபியானாலும், தூதரானாலும் அவர் ஓதும் போது ஷைத்தான் அவரது ஓதுதலில் (தவறான குழப்பத்தைப்) போடாமல் இருந்ததில்லை. எவரது உள்ளங்களில் நோய் இருக்கிறதோ அவர்களுக்கும், கடினசித்தம் கொண்டோருக்கும் ஷைத்தான் போட்டதைச் சோதனையாக ஆக்கிட ஷைத்தான் போட்டதை அல்லாஹ் மாற்றுகிறான். பின்னர் தனது வசனங்களை உறுதிப்படுத்துகிறான். அல்லாஹ் அறிந்தவன்; ஞானமிக்கவன். அநீதி இழைத்தோர் தூரமான பிளவில் உள்ளனர்.
அல்குர்ஆன் (22 : 52)
15.   கெட்ட தோழன்

இஸ்லாமிய விதிமுறைகளை மறந்து தீமைகளில் வீரியமாக ஈடுபடுபவர்களுக்கு ஷைத்தானே தோழனாவான். இவர்களுடைய மனதில் ஷைத்தான் போடுகின்ற தவறான எண்ணங்களுக்கிணங்க இவர்கள் செயல்படுகிறார்கள்.
எதிரியாக பார்க்க வேண்டிய ஷைத்தானை ஆலோசனைக் கூறும் நண்பனைப் போல் கருதி அவன் சொல்லுக்கு கட்டுப்படுவதால் இவர்களுக்கு ஷைத்தான் கெட்ட தோழனாகிவிடுகிறான்.
அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பாது மக்கள் மெச்சுவதற்காகத் தமது செல்வத்தைச் செலவிடுவோர் (ஷைத்தானின் நண்பர்கள்). யாருக்கு ஷைத்தான் நண்பனாக ஆகி விட்டானோ அவனே கெட்ட நண்பன்.
அல்குர்ஆன் (4 : 38)
எவர் அளவற்ற அருளாளனின் அறிவுரையைப் புறக்கணிக்கிறாரோ அவருக்கு ஒரு ஷைத்தானைச் சாட்டுவோம். அவன் அவருக்குத் தோழனாவான். அவர்கள் (நல்) வழியை விட்டும் மக்களைத் தடுக்கின்றனர். தாம் நேர் வழி பெற்றோர் எனவும் எண்ணுகின்றனர்.
முடிவில் அவன் நம்மிடம் வரும் போது “எனக்கும், உனக்கும் இடையே கிழக்கிற்கும், மேற்கிற்கும் இடைப்பட்ட தூரம் இருந்திருக்கக் கூடாதா? நீ கெட்ட தோழனாவாய்” என்று அவன் (ஷைத்தானிடம்) கூறுவான்.
அல்குர்ஆன் (43 : 36.37.38)
16.   ஷைத்தானின் நண்பர்கள்

ஷைத்தானின் விருப்பத்திற்கேற்ப தவறான காரியங்களில் ஈடுபடுபவர்கள் ஷைத்தானின் நண்பர்களாவர்.
சிலருக்கு அவன் நேர் வழி காட்டினான். மற்றும் சிலர் மீது வழி கேடு உறுதியாகி விட்டது. அவர்கள் அல்லாஹ்வையன்றி ஷைத்தான்களை உற்ற நண்பர்களாக்கிக் கொண்டனர். தாங்கள் நேர் வழி நடப்போர் எனவும் எண்ணிக் கொள்கின்றனர்.
அல்குர்ஆன் (7 : 30)
அல்லாஹ்வின் பெயர் கூறப்படாததை உண்ணாதீர்கள்! அது குற்றம். உங்களுடன் தர்க்கம் செய்யுமாறு ஷைத்தான்கள் தமது தோழர்களுக்குக் கூறு கின்றனர். நீங்கள் அவர்களுக்குக் கட்டுப் பட்டால் நீங்கள் இணை கற்பிப்பவர்களே.
அல்குர்ஆன் (6 : 121)
அல்லாஹ்வையன்றி ஷைத்தானைப் பொறுப்பாளனாக்கிக் கொள்பவன் வெளிப்படையான நஷ்டத்தை அடைந்து விட்டான்.
அல்குர்ஆன் (4 : 119)
17.   ஒவ்வொருவருடனும் இருக்கிறான்

நபி (ஸல்) அவர்களைத் தவிர்த்து ஷைத்தான் எல்லோரிடமும் இருக்கிறான். இதற்கு நல்லவர்களோ சஹபாக்களோ விதிவிலக்கில்லை. அனைவரிடமும் இருந்து கொண்டு கெட்ட எண்ணங்களை ஏற்படுத்துவான். நல்லவர்கள் இவன் கூறுவதை புறக்கணித்துவிடுவார்கள். தீயவர்கள் செயல்படுத்துவார்கள்.
நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலிலி) அவர்கள் கூறியதாவது : அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (என்னிடம் தங்கியிருந்த நாளில்) ஓர் இரவில் என்னிடமிருந்து புறப்பட்டுச் சென்றார்கள். அவர்கள்மீது எனக்கு ரோஷம் ஏற்பட்டது. பிறகு அவர்கள் (திரும்பி)வந்து என் நடவடிக்கையைக் கண்டபோது, “ஆயிஷா! உனக்கு என்ன நேர்ந்தது? ரோஷம் கொண்டுவிட்டாயா?” என்று கேட்டார்கள். அதற்கு நான், “என்னைப் போன்ற ஒருத்தி (பல துணைவியர் உள்ள) தங்களைப் போன்ற ஒருவர்மீது ரோஷம் கொள்ளாமல் எப்படி இருக்க முடியும்?” என்று சொன்னேன்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “உன் ஷைத்தான் உன்னிடம் வந்து விட்டானா?” என்று கேட்டார்கள். நான், “அல்லாஹ்வின் தூதரே! என்னுடனும் ஷைத்தான் உள்ளானா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “ஆம்’ என்றார்கள். “ஒவ்வொரு மனிதனுடனும் (ஷைத்தான்) உள்ளானா?” என்று கேட்டேன். அதற்கும் அவர்கள் “ஆம்’ என்றார்கள். நான், “தங்களுடனுமா, அல்லாஹ்வின் தூதரே?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “ஆம். ஆயினும், என் இறைவன் அவனுக்கெதிராக எனக்கு உதவி செய்துவிட்டான். அவன் (எனக்குப்) பணிந்துவிட்டான்” என்று சொன்னார்கள்.
நூல் : முஸ்லிம் (5422)
எல்லோரிடமும் ஷைத்தான் இருக்கிறான் என்ற இந்த உண்மையை பலர் புரிந்து கொள்ளாத காரணத்தால் சிலருக்கு பைத்தியமோ பலவீனங்களோ நோய்களோ ஏற்படும் போது அவர்களிடத்தில் ஷைத்தான் வந்துவிட்டதாக தவறாக நம்புகிறார்கள்.
ஷைத்தான் ஒருவரிடத்தில் இருப்பதால் அவருக்கு பாரதூரமான பாதிப்புகள் ஏற்படும் என்ற நம்பிக்கை உண்மையானால் மனிதர்கள் அனைவருக்கும் அப்படி பாரதூரமான பாதிப்புகள் ஏற்பட வேண்டும். ஏனென்றால் ஷைத்தான் அனைவரிடமும் இருக்கிறான்.
ஆனால் இவ்வாறு அனைவருக்கும் பைத்தியமோ மோசமான நோய்களோ உளறல்களோ ஏறபடுவதில்லை. குறிப்பிட்ட சிலருக்கு மாத்திரம் இது போன்ற பலவீனங்கள் ஏற்படுகிறது. இறைவனுடைய நாட்டத்தால் இந்த பலவீனங்கள் ஏற்படுகிறதே தவிர ஷைத்தானால் ஏற்படுவதில்லை என்பதை இதன் மூலம் அறியலாம்.
18.   உடலில் இரண்டரக் கலந்துள்ளான்

ஷைத்தான் நம் உடலுடன் ஒட்டிக்கொண்டிருக்கிறான் என்றக் கருத்தை பின்வரும் ஹதீஸ்கள் கூறுகின்றன.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : “நிச்சயமாக ஷைத்தான் மனிதனின் ரத்த நாளங்களில் ஊடுருவியிருக்கிறான்.
அறிவிப்பவர் : ஸஃபிய்யா (ரலி)
நூல் : புகாரி (2035)
உஸ்மான் பின் அபில் ஆஸ் (ரலி) கூறுகிறார்கள் : அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தாயிஃப் நகரத்திற்கு என்னை ஆளுநராக நியமித்தார்கள். நான் தொழுகும் போது வேறு விஷயங்களில் என் கவனம் சென்றுகொண்டிருந்தது. இதனால் நான் எத்தனை ரக்அத்துகள் தொழுதேன் என்பதை கூட மறக்கலானேன். இதை (அடிக்கடி) நான் கண்டபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்றேன். நீ அபுல் ஆஸுடைய மகன் (உஸ்மானா?) என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கு நான் ஆம் அல்லாஹ்வின் தூதரே என்றேன். நீங்கள் வந்ததற்கு என்ன காரணம்? என்று கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதரே நான் தொழுகும் போது வேறு விஷயங்களில் என் கவனம் சென்றுகொண்டிருக்கிறது. இதனால் நான் எத்தனை ரக்அத்துகள் தொழுதேன் என்பதை கூட மறந்துவிடுகிறேன் என்று கூறினேன். இது ஷைத்தானால் ஏற்படுகிறது என்று அவர்கள் கூறிவிட்டு அருகில் வா என்றார்கள். நான் நபியவர்களுக்கு அருகில் எனது குதிங்கால்களை ஊன்றி அமர்ந்துகொண்டேன். அவர்களது கரத்தால் என் நெஞ்சில் அடித்து எனது வாயில் உமிழ்ந்தார்கள். அல்லாஹ்வின் எதிரியே வெளியேறிவிடு என்று கூறினார்கள். இவ்வாறு அவர்கள் மூன்று முறை செய்துவிட்டு உன் பணியை துவங்கு என்று (என்னிடம்) கூறினார்கள்.
நூல் : இப்னு மாஜா (3538)
அல்லாஹ்வின் எதிரியே வெளியேறிவிடு என்று நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள். ஷைத்தான் உஸ்மான் என்ற இந்த நபித்தோழரின் உடலில் இருந்து கொண்டு தொழுகையில் கவனத்தைத் திருப்பும் வேலையை செய்துள்ளான் என்பதை இதிலிருந்து அறிய முடிகிறது.
ஷைத்தான் நமது உடலுடன் கலந்திருந்தாலும் தீய எண்ணங்களை மட்டுமே அவனால் ஏற்படுத்த முடியுமே தவிர கை கால்களை முடக்குவதோ நோய்களை ஏற்படுத்துவதோ பைத்தியமாக்குவதோ ஷைத்தானால் முடியாத காரியம்.
19.   ஷைத்தானை விரட்டும் பெயரில் பித்தலாட்டம்
ஷைத்தானை விரட்டுவதாகக் கூறி சம்பாதிக்க நினைப்பவர்களும் மக்களை ஏமாற்றுபவர்களும் ஷைத்தானால் மனிதனுக்கு ஏற்படும் இடஞ்சல்களை விவரிக்கும் சில ஹதீஸ்களை மக்களிடம் சொல்கிறார்கள்.
ஷைத்தானால் மனிதனுக்கு இவ்வளவு தீமைகள் ஏற்படுவதால் மனிதனை விட்டும் ஷைத்தானை நாங்கள் விரட்டுகிறோம். இதில் என்னத் தவறு இருக்கிறது? என்று கேள்வி கேட்டு பாமர மக்களை வழிகெடுக்கிறார்கள்.
இவர்கள் தங்களின் வாதத்தில் உண்மையாளர்களாக இருந்தால் ஷைத்தானை விரட்டிய பிறகு இவர்கள் யாரிடமிருந்து ஷைத்தானை விரட்டினார்களோ அவர்களுக்கு ஹதீஸ்களில் சொல்லப்பட்ட இடஞ்சல்கள் ஏற்படாது என்ற உத்தரவாதத்தை தர முடியுமா?
தொழுகையில் கவனம் திரும்புவது கொட்டாவி விடுவது சுப்ஹ‚ தொழாமல் உறங்குவது இவையெல்லாம் ஷைத்தானால் ஏற்படுவதாக ஹதீஸ்களில் சொல்லப்பட்டுள்ளது. அப்படியென்றால் இவர்கள் யாரிடமிருந்து ஷைத்தானை விரட்டினார்களோ அவர்களுக்கு தொழுகையில் கவனம் திரும்பாதா? அவர்களுக்கு இனி கொட்டாவியே வராதா? அவர்கள் சுப்ஹ‚ தொழுகையை விடாமல் கடைபிடிப்பார்களா? ஷைத்தானை விரட்டிய பிறகு இவர்களுக்குத் தவறான எண்ணங்களே ஏற்படாதா? இந்த அடிப்படையில் சிந்தித்துப் பார்த்தாலே ஷைத்தானை விரட்டுவதாக இவர்கள் கூறுவது வடிகட்டியப் பொய் என்பதை அறியலாம்.
20.   அனைவரிடமிருந்தும் ஷைத்தானை விரட்டுவார்களா?

ஷைத்தான் நல்லவர்கள் கெட்டவர்கள் என்ற வித்தியாசம் இல்லாமல் அனைவருக்கும் தவறான எண்ணங்களை ஏற்படுத்துகிறான். அப்படியென்றால் ஷைத்தானை விரட்டுவதாக கூறும் போலி ஆண்மீகவாதிகள் அனைத்து மக்களுக்கும் ஓதிப்பார்த்து அவர்களிடமிருந்து ஷைத்தானை விரட்டுவார்களா?
நபிமார்களுக்கு ஷைத்தான் இடஞ்சல் தந்ததாக திருக்குர்ஆன் கூறுகிறது. இன்றைக்கு இவர்களுக்கு ஷைத்தானை விரட்டத் தெரிந்த யுக்தி நபிமார்களுக்கு ஏன் தெரியவில்லை என்று நாம் சிந்தித்துப்பார்க்க வேண்டும்.
இவ்வாறே மனிதர்களிலும், ஜின்களிலும் உள்ள ஷைத்தான்களை ஒவ்வொரு நபிக்கும் பகைவர்களாக ஆக்கினோம்.
அல்குர்ஆன் (6 : 112)
(முஹம்மதே!) உமக்கு முன் நாம் அனுப்பிய எந்த நபியானாலும், தூதரானாலும் அவர் ஓதும் போது ஷைத்தான் அவரது ஓதுதலில் (தவறான குழப்பத்தைப்) போடாமல் இருந்ததில்லை.
அல்குர்ஆன் (22 : 52)
ஷைத்தான் வலையில் விழுந்தவர்கள் ஷைத்தானை விரட்டுகிறார்களா?
ஷைத்தான்கள் யார் மீது இறங்குவார்கள் என்பதை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா? இட்டுக்கட்டும் ஒவ்வொரு பாவியின் மீதும் இறங்குகின்றனர்.
அல்குர்ஆன் (26 : 221)
ஷைத்தானை விரட்டுவதாக கூறுபவர்கள் மார்க்கத்தில் இல்லாத ஒரு விஷயத்தை இருப்பதாக இட்டுக்கட்டிக்கொண்டிருக்கிறார்கள். இத்தகையவர்களிடத்தில் தான் ஷைத்தான் இருக்கிறான்.
ஷைத்தானின் வலையில் சிக்கியவர்கள் மற்றவர்களிடமிருந்து ஷைத்தானை விரட்டுவதாக நினைப்பது எவ்வளவு அறிவீனம் என்பதை பொதுமக்கள் சிந்திக்க வேண்டும். ஏமாற்றுபவர்களின் சதியில் சிக்கி தங்கள் பொருளையும் அறிவையும் இழந்துவிட வேண்டாம்.
ஷைத்தானால் ஏற்படும் தீங்கு
தவறான எண்ணங்களை ஏற்படுத்தி தீய காரியங்களின் பால் அழைப்பதும் நன்மையானக் காரியங்களை புறக்கணிக்குமாறு ஏவுவதும் தான் ஷைத்தானால் செய்ய முடியும். அவன் ஏற்படுத்திய எண்ணத்திற்கு கட்டுப்படுபவர்கள் தீமையை செய்துவிடுகிறார்கள். அவனது ஆசை வார்த்தைக்கு மயங்காதவர்கள் நன்மையின் பால் விரைகிறார்கள்.
மனிதன் தான் ஷைத்தானிற்கு கட்டுப்பட்டு தவறிழைக்கிறானேத் தவிர ஷைத்தான் யாரையும் வழுக்கட்டாயமாக அவர்கள் விரும்பாமல் தீமைக்கு அழைத்துச் செல்வதில்லை. அதுபோன்று நல்ல விஷயங்களை வெறுப்பிற்குரியதாக நமக்குக் காட்டுவானேத் தவிர நன்மையான காரியங்களை செய்யவிடாமல் ஷைத்தான் யாரிடத்திலும் சண்டைக்குவர மாட்டான். இதை நாம் நமது வாழ்க்கையில் ஒவ்வொருவரும் அனுபவித்து வருகிறோம்.
தீய எண்ணங்களை ஏற்படுத்துவதும் தவறான வழிகளை காட்டுவதும் தான் ஷைத்தானுடைய வேலை என்பதை பின்வரும் குர்ஆன் வசனங்களிலிருந்து புரிந்துகொள்ளலாம்.
“அவர்களை வழி கெடுப்பேன்; அவர்களுக்கு(த் தவறான) ஆசை வார்த்தை கூறுவேன்; அவர்களுக்குக் கட்டளையிடுவேன்; அவர்கள் கால்நடைகளின் காதுகளை அறுப்பார்கள். (மீண்டும்) அவர்களுக்குக் கட்டளையிடுவேன்; அல்லாஹ் வடிவமைத்ததை அவர்கள் மாற்றுவார்கள்” (எனவும் கூறினான்). அல்லாஹ்வையன்றி ஷைத்தானைப் பொறுப்பாளனாக்கிக் கொள்பவன் வெளிப்படையான நஷ்டத்தை அடைந்து விட்டான்.
அல்குர்ஆன் (4 : 119)
அவன் தீமையையும், வெட்கக் கேடானதையும், நீங்கள் அறியாதவற்றை அல்லாஹ்வின் மீது இட்டுக்கட்டுவதையும் உங்களுக்குத் தூண்டுகிறான்.
அல்குர்ஆன் (2 : 169)
21.   அவன் மனிதர்களின் உள்ளங்களில் தீய எண்ணங்களைப் போடுகிறான்.

அல்குர்ஆன் (114 : 5)
அதிகபட்சமாக ஷைத்தானால் என்ன செய்ய முடியும் என்பதை பின்வரும் ஹதீஸ் தெளிவுபடுத்துகிறது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : இப்லீஸ், தனது சிம்மாசனத்தை (கடல்) நீரின் மீது அமைக்கிறான். பிறகு தன் பட்டாளங்களை (மக்களிடையே) அனுப்புகிறான். அவர்களில் மிகப் பெரும் குழப்பத்தை ஏற்படுத்துகின்ற (ஷைத்தான் எவனோ அ)வனே இப்லீஸிடம் மிகவும் நெருங்கிய அந்தஸ்தைப் பெறுகிறான். அவனிடம் ஷைத்தான்களில் ஒருவன் (திரும்பி)வந்து “நான் இன்னின்னவாறு செய்தேன்” என்று கூறுவான்.
அப்போது இப்லீஸ், “(சொல்லிக்கொள்ளும் அளவுக்கு) நீ எதையும் செய்யவில்லை” என்று கூறுவான். பிறகு அவர்களில் மற்றொருவன் வந்து, “நான் ஒரு மனிதனுக்கும் அவனுடைய மனைவிக்கும் இடையே பிரிவை ஏற்படுத்தாமல் அவனை நான் விட்டுவைக்கவில்லை” என்று கூறுவான். அப்போது இப்லீஸ், அவனை அருகில் வரச் செய்து, “நீதான் சரி(யான ஆள்)” என்று (பாராட்டிக்) கூறுவான்.
அறிவிப்பவர் : ஜாபிர் (ரலிலி)
நூல் : முஸ்லிம் (5419)
22.   வேறெதுவும் செய்ய முடியாது?

ஒருவரை பைத்தியமாக மாற்றுவது உடல் உறுப்புக்களை செயலிழக்கச் செய்து முடக்கிப்போடுவது போன்ற பாரதூரமான வேலைகளை ஷைத்தானால் செய்ய இயலாது. ஆனால் இவற்றையெல்லாம் ஷைத்தானால் செய்ய முடியும் என்று கூறித் தான் ஷைத்தானை விரட்டுகிறோம் என்று கூறுபவர்கள் மக்களை ஏமாற்றிக்கொண்டிருக்கிறார்கள்.
ஷைத்தானால் மனிதனுக்கு ஏற்படும் தீமை தவறான வழியை காட்டுவதைத் தவிர வேறெதுவும் இல்லை என்பதை பின்வரும் குர்ஆன் வசனங்களிலிருந்து விளங்கிக்கொள்ளலாம்.
“அல்லாஹ் உங்களுக்கு உண்மையான வாக்குறுதி அளித்தான். நானும் உங்களுக்கு வாக்குறுதி அளித்து உங்களிடம் வாக்கு மீறி விட்டேன். உங்களை அழைத்தேன். எனது அழைப்பை ஏற்றீர்கள் என்பதைத் தவிர உங்கள் மீது எனக்கு எந்த அதிகாரமும் இல்லை. எனவே என்னைப் பழிக்காதீர்கள்! உங்களையே பழித்துக் கொள்ளுங்கள்! நான் உங்களைக் காப்பாற்றுபவனும் அல்லன். நீங்கள் என்னைக் காப்பாற்றுவோரும் அல்லர். முன்னர் என்னை (இறைவனுக்கு) இணையாக்கியதை மறுக்கிறேன்” என்று தீர்ப்புக் கூறப்பட்டவுடன் ஷைத்தான் கூறுவான். அநீதி இழைத்தோருக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டு
அல்குர்ஆன் (14 : 22)
“எனது அடியார்கள் மீது உனக்கு எந்த அதிகாரமும் இல்லை” (என்றும் இறைவன் ஷைத்தானிடம் கூறினான்.) உமது இறைவன் பொறுப்பேற்கப் போதுமானவன்.
அல்குர்ஆன் (17 : 65)
அவனுக்கு அவர்கள் மீது எந்த அதிகாரமும் இல்லை.
அல்குர்ஆன் (34 : 21)
குர்ஆன் கூறும் இந்த அடிப்படையை மனதில் வைத்துக்கொண்டால் பில்லி சூனியம் ஏவல் போன்ற பல்வேறு மூடநம்பிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிடலாம். பில்லி சூனியம் ஏவல் போன்ற காரியங்கள் ஷைத்தானின் உதவியால் நடப்பதாக பலர் எண்ணிக்கொண்டிருக்கிறார்கள். மேற்கண்ட வசனங்கள் இந்த நம்பிக்கையை தகர்த்து எரிகிறது.
23.   ஷைத்தானுடன் தொடர்பு படுத்திக் கூறும் வழக்கம்

கெட்டக் காரியங்களையும் வெறுப்பிற்குரிய விஷயங்களையும் ஷைத்தானுடன் தொடர்புபடுத்திக் கூறும் வழக்கம் குர்ஆனிலும் ஹதீஸ்களிலும் அரபுமொழியிலும் உள்ளது. அடுத்து வரக்கூடிய தலைப்புகளுக்கு இந்த விஷயத்தை நாம் அறிந்து வைத்திருப்பது அவசியமாக இருப்பதால் இங்கே இது தொடர்பான ஆதாரங்களை குறிப்பிடுகிறோம்.
நம்பிக்கை கொண்டோரே! மது, சூதாட்டம், பலிபீடங்கள், (குறி கேட்பதற்கான) அம்புகள் ஆகியவை அருவருப்பானதும், ஷைத்தானின் நடவடிக்கையுமாகும். எனவே இதிலிருந்து விலகிக் கொள்ளுங்கள்! வெற்றி பெறுவீர்கள்!
அல்குர்ஆன் (5 : 90)
மது அருந்துவது சூதாடுவது பலிபீடங்களை உருவாக்குவது குறிபார்ப்பதற்கு அம்புகளை பயன்படுத்துவது இவையனைத்தும் கெட்ட மனிதர்களின் செயல்பாடுகளாகும். ஆனால் இவற்றை அல்லாஹ் ஷைத்தானின் செயல்களாக மேற்கண்ட வசனத்தில் கூறுகிறான்.
“நாம் அப்பாறையில் ஒதுங்கிய போது கவனித்தீரா? நான் மீனை மறந்து விட்டேன். அதை உம்மிடம் கூறுவதை விட்டும் ஷைத்தான் என்னை மறக்கச் செய்து விட்டான். அது கடலில் தனது பாதையை ஆச்சரியமாக அமைத்துக் கொண்டது” என்று (ஊழியர்) கூறினார்.
அல்குர்ஆன் (18 : 63)
மறதி உட்பட எல்லா தீமைகளும் இறைவன் புறத்திலிருந்து தான் மனிதர்களுக்கு ஏற்படுகிறது. என்றாலும் கெட்ட விஷயங்களை அல்லாஹ்வுடன் சேர்க்கக்கூடாது என்ற மரியாதைக்காகவே மறதியை ஷைத்தான் ஏற்படுத்துவதாக கூறப்பட்டுள்ளது.
24.   ஷைத்தான் பைத்தியத்தை ஏற்படுத்துவானா?

வட்டியை உண்போர் (மறுமை நாளில்) ஷைத்தான் தீண்டியவனைப் போல் பைத்தியமாகவே எழுவார்கள். “வியாபாரம் வட்டியைப் போன்றதே” என்று அவர்கள் கூறியதே இதற்குக் காரணம். அல்லாஹ் வியாபாரத்தை அனுமதித்து வட்டியைத் தடை செய்து விட்டான். தமது இறைவனிடமிருந்து அறிவுரை தமக்கு வந்த பின் விலகிக்கொள்பவருக்கு முன் சென்றது உரியது. அவரைப் பற்றிய முடிவு அல்லாஹ்விடம் உள்ளது. மீண்டும் செய்வோர் நரகவாசிகள். அதில் நிரந்தரமாக இருப்பார்கள்.
அல்குர்ஆன் (2 : 275)
பைத்தியமாக அவர்கள் எழுவதை ஷைத்தானால் தீண்டப்பட்டவன் என்று இவ்வசனம் (திருக்குர்ஆன் 2:275) கூறுகின்றது.
ஷைத்தான் தான் பைத்தியத்தை ஏற்படுத்துகிறான் என்று சிலர் இவ்வசனத்தைச் சான்றாகக் காட்டுகின்றனர்.
தீய காரியங்களைப் பற்றிக் கூறும் போது “ஷைத்தானுடன் தொடர்புபடுத்திக் கூறுவதைத் திருக்குர்ஆன் அனுமதிக்கிறது. இந்த அடிப்படையை முன்பே விரிவாக விளக்கிவிட்டோம். மேலும் இதற்கு சிறந்த உதாரணமாக பின்வரும் வசனத்தை எடுத்துக்கொள்ளலாம்.
இது சிறந்த தங்குமிடமா? அல்லது ஸக்கூம் மரமா? அதை அநீதி இழைத்தோருக்குச் சோதனையாக நாம் ஆக்கினோம். அது நரகத்தின் அடித்தளத்திலிருந்து வெளிப்படும் மரம். அதனுடைய பாளை ஷைத்தான்களின் தலைகளைப் போன்றது.
அல்குர்ஆன் (37 : 62)
நரகத்தில் உள்ள மரத்தின் பாளை ஷைத்தானின் தலைகளைப் போன்று இருக்கும் என்று இந்த வசனத்தில் கூறப்படுகிறது. இங்கு ஷைத்தானின் தலைகளைப் போல் என்று கூறப்பட்டிருப்பதை நேரடிப் பொருளில் விளங்கமாட்டோம். மோசமான தோற்றம் கொண்டதாக இருக்கும் என்பதை விவரிப்பதற்காக இவ்வாறு கூறப்பட்டுள்ளது என்றே புரிந்துகொள்வோம்.
இது போன்று தான் ஷைத்தானால் தீண்டப்பட்டு பைத்தியமாக எழுப்பப்படுவான் என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும். மோசமான நிலையில் எழுப்பப்படுவான் என்பது தான் இந்த வசனத்தின் பொருளே தவிர ஷைத்தானால் பைத்தியத்தை ஏற்படுத்த முடியும் என்றக் கருத்தில் புரிந்துகொள்ளக்கூடாது.
தீயகாரியங்களுக்கு அழைப்பு விடுவதைத் தவிர்த்து வேறெந்த அதிகாரமும் ஷைத்தானிற்கு வழங்கப்படவில்லை என்று குர்ஆன் தெளிவாக எடுத்துரைக்கிறது. அவ்வாறிருக்க இதற்கு மாற்றமாக ஷைத்தானிற்கு பைத்தியத்தை ஏற்படுத்த முடியும் என்று விளங்குவது குர்ஆனிற்கு முரணாகும்.
இஸ்லாமிய நம்பிக்கைப்படி பைத்தியங்கள் எந்தத் தீமை செய்தாலும் அவர்கள் பாவிகளாக மாட்டார்கள். ஷைத்தானின் வேலை அனைவரையும் பாவிகளாக்குவது தான்.
பைத்தியமாக்கப்படுவதால் ஷைத்தானுக்கு நட்டமே தவிர லாபம் இல்லை. எனவே ஷைத்தான் யாரையும் பைத்தியமாக்கும் அதிகாரத்தையும் பெறவில்லை. அது அவனது அலுவலும் இல்லை.
25.   ஷைத்தான் நோயை ஏற்படுத்துவானா?

ஷைத்தானிற்கு நோயை ஏற்படுத்தும் அதிகாரம் உள்ளது என்று வாதிடுபவர்கள் கீழ்கண்ட வசனத்தை தங்கள் வாதத்திற்கு ஆதாரமாக காட்டுகிறார்கள்.
நமது அடியார் அய்யூபை நினைவூட்டுவீராக! ஷைத்தான் வேதனையாலும், துன்புறுத்தலாலும் என்னைத் தீண்டி விட்டான் என்று தமது இறைவனிடம் அவர் பிரார்த்தித்த போது, உமது காலால் மிதிப்பீராக! இதோ குளிர்ந்த குளிக்குமிடம்! பானம்! (எனக் கூறினோம்).
அல்குர்ஆன் (38 : 41)
அய்யூப் நபியவர்களுக்கு நோயும் துன்பமும் ஏற்பட்ட போது ஷைத்தான் இவ்வாறு செய்து விட்டானே எனக் கூறினார்கள் (திருக்குர்ஆன் 38:41). இதனால் நோயையும், துன்பத்தையும் ஏற்படுத்தும் அதிகாரம் ஷைத்தானுக்கு உள்ளது என்று கருதக் கூடாது.
நோயை ஏற்படுத்துவது அல்லாஹ்விற்கு மட்டும் உரிய ஆற்றலாக இருந்தாலும் வெறுக்கத்தக்க விஷயங்களை அல்லாஹ்வுடன் சேர்க்கக்கூடாது என்ற மரியாதை நிமித்தமாகவே நோயை ஷைத்தான் ஏற்படுத்தியதாக அய்யூப் (அலை) அவர்கள் கூறினார்கள்.
குர்ஆனில் வேறொரு இடத்தில் அய்யூப் (அலை) அவர்கள் செய்த இதே பிரார்த்தனையை அல்லாஹ் விவரிக்கிறான்.
“எனக்குத் துன்பம் நேர்ந்து விட்டது. நீ கருணையாளர்களுக்கெல்லாம் கருணையாளன்” என அய்யூப் தமது இறைவனை அழைத்த போது, அவரது பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டோம். அவருக்கு ஏற்பட்ட துன்பத்தை நீக்கினோம். அவரது குடும்பத்தாரையும் அவர்களுடன் அவர்களைப் போன்றோரையும் நம் அருளாக அவருக்கு வழங்கினோம். வணங்குவோருக்கு இது அறிவுரை.
அல்குர்ஆன் (21 : 83.84)
38:41 வது வசனத்தின் சரியான பொருள் என்ன என்பதை இந்த வசனம் தெளிவாக விவரிக்கிறது. 21:83 இந்த வசனத்தில் ஷைத்தானைப் பற்றி எதுவும் பேசப்படவில்லை. எனக்குத் துன்பம் நேர்ந்துவிட்டது என்றே அய்யூப் (அலை) அவர்கள் கூறியதாக உள்ளது.
தனக்கு துன்பம் ஏற்பட்டுவிட்டது என்பதைத் தான் அய்யூப் (அலை) அவர்கள் ஷைத்தான் வேதனையாலும், துன்புறுத்தலாலும் என்னைத் தீண்டி விட்டான் என்று குறிப்பிடுகிறார்கள்.
தீயகாரியங்களுக்கு அழைப்பு விடுவதைத் தவிர்த்து வேறெந்த அதிகாரமும் ஷைத்தானிற்கு வழங்கப்படவில்லை என்று குர்ஆன் தெளிவாக எடுத்துரைக்கிறது. அவ்வாறிருக்க இதற்கு மாற்றமாக ஷைத்தானால் நோயை ஏற்படுத்த முடியும் என்று விளங்குவது குர்ஆனிற்கு முரணாகும்.
நம்பிக்கை கொண்டோர் மீதும், தமது இறைவனையே சார்ந்திருப்போர் மீதும் அவனுக்கு அதிகாரம் இல்லை.
அல்குர்ஆன் (16 : 99)
குறிப்பாக நல்லடியார்களின் மீது ஷைத்தானிற்கு எந்த அதிகாரமும் இல்லை என்று மேலுள்ள வசனம் தெரிவிக்கிறது. அய்யூப் நபிக்கு நோயை ஏற்படுத்தும் ஆற்றல் ஷைத்தானிற்கு இருந்தது என்று நம்பினால் அய்யூப் (அலை) அவர்கள் நம்பிக்கைக் கொண்டவராக இருக்கவில்லை. இறைவனை மட்டும் சாந்தவராக இருக்கவில்லை. எனவே தான் ஷைத்தான் அவர்கள் மீது ஆதிக்கம் செலுத்தினான் என்று கூற வேண்டிய அவல நிலை ஏற்படும்.
எனவே அய்யூப் (அலை) அவர்களுக்கு ஷைத்தான் நோயை ஏற்படுத்தவில்லை என்று நம்புவது தான் ஈமானிற்கு உகந்ததும் அய்யூப் நபியை கண்ணியப்படுத்தியதாகவும் அமையும்.
மேலும் நோய்களை ஏற்படுத்துவது இறைவனின் அதிகாரமாக இருக்கும் போது இந்த ஆற்றல் ஷைத்தானிற்கு உண்டு என்று நம்புவது இணைவைப்பில் கொண்டு போய் விடும்.
26.   தீங்கை ஏற்படுத்துவது இறைவனின் அதிகாரம்

நன்மையை ஏற்படுத்துவது இறைவனுடைய அதிகாரமாக இருப்பது போல் தீமைகளை ஏற்படுத்துவதும் இறைவனுக்கு மட்டும் உரிய அதிகாரமாகும். இதில் நபிமார்கள் உட்பட எப்படிப்பட்ட மகானிற்கும் எள்ளளவு கூட ஆற்றல் இல்லை என்கிற போது ஷைத்தானிற்கு இந்த ஆற்றல் இருப்பதாக நினைப்பது தவறாகும்.
“அல்லாஹ் உங்களுக்குத் தீமையை நாடினால் அல்லது நன்மையை நாடினால் அல்லாஹ்விடமிருந்து (தடுக்க) சிறிதளவேனும் சக்தி பெற்றவன் யார்?” என்று கேட்பீராக! அவ்வாறில்லை! நீங்கள் செய்து கொண்டிருப்பதை அல்லாஹ் நன்கறிந்தவனாக இருக்கிறான்.
அல்குர்ஆன் (48 : 11)
தீமைகளை செய்ய சக்தி பெற்றிருப்பதை இறைத் தன்மைக்கு அளவுகோலாக அல்லாஹ் குறிப்பிடுகிறான்.
“அல்லாஹ்வையன்றி உங்களுக்கு எந்த நன்மையும், தீமையும் செய்யச் சக்தியற்றவற்றை வணங்குகிறீர்களா?” என்று கேட்பீராக! அல்லாஹ்வே செவியுறுபவன்; அறிந்தவன்.
அல்குர்ஆன் (5 : 76)
அல்லாஹ்வையன்றி உமக்குப் பயனும், தீங்கும் தராதவற்றைப் பிரார்த்திக்காதீர்! (அவ்வாறு) செய்தால் நீர் அநீதி இழைத்தவராவீர்!
அல்குர்ஆன் (10 : 106)
27.   ஜின்களும் ஷைத்தான்களும் ஒன்றா?

ஒட்டு மொத்த ஜின் இனத்தையும் ஷைத்தான்கள் என்று குறிப்பிடும் வழக்கத்தை ஹதீஸ்களில் நம்மால் காணமுடிகிறது. குர்ஆனிலும் ஹதீஸ்களிலும் பொதுவாக ஜின்களை குறிப்பதற்கு ஷைத்தான்கள் என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது.
ஜின்கள், மனிதர்கள், பறவைகள் ஆகியவற்றின் படைகள் ஸுலைமானுக் காகத் திரட்டப்பட்டு, அவர்கள் அணி வகுக்கப்பட்டனர்.
அல்குர்ஆன் (27 : 17)
ஸுலைமானுக்குக் காற்றை வசப்படுத்தினோம். அதன் புறப்பாடு ஒரு மாதமாகும். அதன் திரும்புதல் ஒரு மாதமாகும். அவருக்காக செம்பு ஊற்றை ஓடச் செய்தோம். தனது இறைவனின் விருப்பப்படி அவரிடம் பணியாற்றும் ஜின்களும் இருந்தனர். அவர்களில் நமது கட்டளையை யாரேனும் புறக்கணித்தால் நரகின் வேதனையை அவருக்கு சுவைக்கச் செய்வோம்.
அல்குர்ஆன் (34 : 12)
மேற்கண்ட இரு வசனங்களிலும் சுலைமான் நபிக்கு ஜின்களை வசப்படுத்திக்கொடுத்ததாக அல்லாஹ் கூறுகிறான். இதேக் கருத்தை அல்லாஹ் திருக்குர்ஆனில் வேற இடங்களில் கூறும் போது ஜின்கள் என்று குறிப்பிடுவதற்கு பதிலாக ஷைத்தான்கள் என்று கூறுகிறான். இதை பின்வரும் வசனங்கள் தெளிவுபடுத்துகிறது.
அவருக்குக் காற்றை வசப்படுத்திக் கொடுத்தோம். அவரது கட்டளைப் படி அவர் நினைத்தவாறு பணிந்து அது சென்றது. ஷைத்தான்களில் கட்டடம் கட்டுவோரையும், முத்துக் குளிப்போரையும், விலங்கிடப்பட்ட வேறு சிலரையும் (அவருக்கு) வசப்படுத்திக் கொடுத்தோம்.
அல்குர்ஆன் (38 : 36)
ஷைத்தான்களில் அவருக்காக முத்துக்குளிப்போரையும், அது தவிர வேறு பணியைச் செய்வோரையும் (வசப்படுத்திக்) கொடுத்தோம். நாம் அவர்களைக் கண்காணிப்போராக இருந்தோம்.
அல்குர்ஆன் (21 : 82)
இவ்விருவசனங்களும் ஜின்களை ஷைத்தான்கள் என்று குறிப்பிடுகிறது. ஜின்களை ஷைத்தான்கள் என்று குறிப்பிடலாம் என்பதை தெளிவாக இதன் மூலம் அறியமுடிகிறது.
மனிதர்களின் ஆதிப்பிதாவாக ஆதம் (அலை) அவர்கள் இருப்பது போல் ஜின்களின் ஆதிப்பிதா ஷைத்தானாகும். ஜின்கள் அனைவரும் ஷைத்தானின் வழிதோன்றலாகும். ஜின்கள் அனைவரும் ஷைத்தானின் வழிதோன்றலாக இருப்பதால் தான் அல்லாஹ் ஜின்களுக்கு ஷைத்தான்கள் என்ற பெயரை சூட்டுகிறான்.
ஜின் இனத்தை கூறும் போது ஷைத்தான்கள் என்று ஹதீஸ்களிலும் குறிப்பிடப்படுகிறது. இதை பின்வரும் ஹதீஸ்களில் பார்க்கலாம்.
நபி (ஸல்) அவர்கள் தம் தோழர்கள் சிலருடன் “உ(க்)காழ்’ எனும் சந்தையை நோக்கிச் சென்றார்கள். (இந்த நேரத்தில்) ஷைத்தான்களுக்கும் வானுலகச் செய்திகளுக்குமிடையே திரையிடப்பட்டு (அச்செய்திகளைக் கேட்கவிடாமல் ஷைத்தான்கள் தடுக்கப்பட்டு)விட்டது. (வானுலகச் செய்திகளை ஒட்டுக் கேட்கச் சென்ற) ஷைத்தான்கள் மீது விண் கொள்ளிகள் ஏவிவிடப்பட்டன. (ஒட்டுக்கேட்கச் சென்ற) அந்த ஷைத்தான்கள் (ஒரு செய்தியும் கிடைக்காமல்) தம் கூட்டத்தாரிடம் திரும்பி வந்தனர். அப்போது அக்கூட்டத்தார்கள், “உங்களுக்கு என்ன நேர்ந்தது?” என்று கேட்டனர். ஷைத்தான்கள், “வானத்துச் செய்திகளுக்கும் எங்களுக்குமிடையே திரையிடப்பட்டுவிட்டது; எங்கள் மீது விண்கொள்üகள் ஏவிவிடப்பட்டன” என்று பதிலüத்தனர். “புதியதொரு நிகழ்ச்சி ஏதேனும் சம்பவித்திருக்கும். அதுவே உங்களுக்கும் வானத்துச் செய்திகளுக்குமிடையே தடையாக அமைந்திருக்க வேண்டும். எனவே, நீங்கள், பூமியின் கீழ்த்திசை, மேல்திசை (என நாலா பாகங்கüலும் பரவிச்) சென்று புதிதாக நிகழ்ந்துவிட்ட இ(ந்த சம்பவத்)தை என்னவென்று ஆராயுங்கள்” என்றனர்.
அவ்வாறே அந்த ஷைத்தான்கள் திரும்பிச் சென்றனர். (அவர்கள் எல்லாத் திசைகளையும் ஆராய்ந்தபடி) திஹாமா எனும் (மக்கா) பகுதியை நோக்கி வந்தபோது, “உகாழ்’ சந்தையை நோக்கிச் சென்றுகொண்டிருந்த நபி (ஸல்) அவர்கள் “நக்லா’ எனுமிடத்தில் தம் தோழர்களுக்கு ஃபஜ்ர் தொழுகையைத் தொழுவித்துக்கொண்டிருந்தார்கள். அப்போது ஓதப்பட்ட குர்ஆன் வசனங்களை அந்த ஷைத்தான்கள் கவனமாகச் செவிகொடுத்துக் கேட்டனர். அப்போது ஷைத்தான்கள் (தங்களுக்கிடையில்) அல்லாஹ்வின் மீதாணையாக! வானத்துச் செய்திகளை (கேட்கமுடியாமல்) உங்களைத் தடுத்தது இதுதான்” என்று கூறிவிட்டு, தம் கூட்டத்தாரிடம் திரும்பிச் சென்று, “எங்கள் கூட்டாத்தாரே! திண்ணமாக நாங்கள் ஆச்சரியமானதொரு குர்ஆனை செவிமடுத்தோம். அது நேர்வழியைக் காட்டுகின்றது. எனவே இறைவனுக்கு (இனி) நாங்கள் (ஒரு போதும்) யாரையும் இணையாகக் கருதமாட்டோம்” என்று கூறினர். (இதையொட்டி) அல்லாஹ் தன் தூதருக்கு “நபியே! நீர் கூறுக: வஹீ மூலம் எனக்கு அறிவிக்கப்பட்டுள்ளது…” என்று தொடங்கும் (இந்த 72ஆவது அத்தியாயத்தை)அருüனான்.
ஜின்கள் (தம் கூட்டத்தாரிடம்) கூறியதைப் பற்றி “வஹி’யின் மூலம்தான் நபி (ஸல்) அவர்களுக்கு அறிவிக்கப்பட்டது.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலிலி)
நூல் : புகாரி (773)
வானுலகத்தில் வானவர்கள் பேசிக்கொள்ளும் செய்தியை ஒட்டுக்கேட்பதற்காக ஜின்கள் சென்றன என்று குர்ஆனும் ஹதீஸ்களும் கூறுகிறது. இந்த ஜின்களில் குர்ஆனை செவிமடுத்து அல்லாஹ்வை ஈமான் கொண்ட ஜின்களும் உண்டு. மேற்கண்ட ஹதீஸீல் ஜின்கள் என்று கூறுவதற்கு பதிலாக ஷைத்தான்கள் என்று கூறப்பட்டுள்ளது.
ஜின்கள் ஷைத்தானுடைய வழிதோன்றல்கள் என்பதால் தான் ஜின்களை பொதுவாக ஷைத்தான்கள் என்று குறிப்பிடும் வழக்கம் உள்ளது என்பதை அறியலாம்.
28.   கெட்ட ஜின்களும் ஷைத்தான்களும் ஒன்றா?

ஷைத்தான்கள் எனப்படுபவர்கள் ஜின்களில் கெட்டவர்கள் தான் என்று சிலர் கூறுகிறார்கள். இதற்கு மாற்றமாக கெட்ட ஜின்கள் வேறு. ஷைத்தான் வேறு என்றக் கருத்தையும் சிலர் கூறுகிறார்கள். இவ்விரண்டில் கெட்ட ஜின்களும் ஷைத்தான்களும் ஒன்றே என்றக் கருத்துத் தான் சரியானதாகும்.
நல்ல ஜின்களுக்கு ஷைத்தான்கள் என்ற இப்பெயரை சூட்டாமல் கெட்ட ஜின்களை குறிப்பிடும் போது மட்டும் இப்பெயரை கூறும் வழக்கமும் உள்ளது. ஷைத்தானிடத்தில் இருக்கின்ற கெட்ட குணம் இருப்பதால் கெட்ட குணம் உள்ள ஜின்களுக்கு ஷைத்தான்கள் என்று கூறப்படுகிறது. இதை பின்வரும் வசனத்திலிருந்து விளங்கலாம்.
இவ்வாறே மனிதர்களிலும், ஜின்களிலும் உள்ள ஷைத்தான்களை ஒவ்வொரு நபிக்கும் பகைவர்களாக ஆக்கினோம். ஏமாற்றுவதற்காக கவர்ச்சி கரமான சொற்களை அவர்களில் ஒருவர் மற்றவருக்கு அறிவிக்கின்றனர். (முஹம்மதே) உமது இறைவன் நாடியிருந்தால் அவர்கள் இதைச் செய்திருக்க மாட்டார்கள். அவர்கள் இட்டுக் கட்டுவதோடு அவர்களை விட்டு விடுவீராக!
அல்குர்ஆன் (6 : 112)
ஜின்களிலும் மனிதர்களிலும் நபிமார்களுக்கு இடஞ்சல் கொடுத்த தீயவர்களை ஷைத்தான்கள் என்று அல்லாஹ் குறிப்பிட்டுள்ளான். கெட்ட ஜின்கள் என்பதும் ஷைத்தான்கள் என்பதும் ஒன்று என்பதை இதன் மூலம் அறியலாம்.
29.   ஷைத்தான் உருமாறுவானா?

ஷைத்தான் தான் விரும்பும் போது விரும்பிய வடிவில் உருவமாறும் ஆற்றல் கொண்டவன் என்று பரவலாக பலரால் நம்பப்படுகிறது. சில ஆதாரங்களை தவறாக புரிந்து கொண்டதின் விளைவாக இப்படியொரு தவறான கருத்து பரவியுள்ளது.
ஆனால் உண்மையில் இவ்வாரு நம்புவதற்கு ஏற்கத்தக்க எந்த ஆதாரமும் இல்லை. விரும்பிய வடிவில் உருமாறும் ஆற்றல் ஷைத்தானிற்கு வழங்கப்படவுமில்லை.
30.   மனிதனாக உருமாறுவானா?

ஷைத்தான் மனித வடிவில் உருவெடுப்பான் என்று கூறுபவர்கள் கீழ்கண்ட ஹதீஸை ஆதாரமாக காட்டுவார்கள்.
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது : நபி (ஸல்) அவர்கள் ரமளானுடைய (ஃபித்ரா) ஸகாத்தைப் பாதுகாக்கும் பொறுப்பை என்னிடம் கொடுத்தார்கள். அப்போது ஒருவன் இரவில் வந்து உணவுப் பொருட்களை அள்ளலானான். அவனை நான் பிடித்து, “உன்னை நபி (ஸல்) அவர்களிடம் கொண்டு செல்லப் போகிறேன்!” என்று கூறுகிறேன். அதற்கவன், “நான் ஒரு ஏழை! எனக்குக் குடும்பம் இருக்கிறது; கடும் தேவையும் இருக்கிறது!” என்று கூறினான். அவனை நான் விட்டுவிட்டேன். விடிந்ததும் நபி (ஸல்) அவர்கள், “அபூஹுரைராவே! நேற்றிரவு உம்மால் பிடிக்கப்பட்டவன் என்ன செய்தான்?” என்று கேட்டார்கள். நான், “அல்லாஹ்வின் தூதரே! தான் கடுமையான வறுமையில் இருப்பதாகவும் தனக்குக் குடும்பம் இருப்பதாகவும் அவன் முறையிட்டான்; ஆகவே, இரக்கப்பட்டு அவனை விட்டுவிட்டேன்!” என்றேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் “நிச்சயமாக அவன் பொய் சொல்லியிருக்கிறான்! மீண்டும் அவன் வருவான்!” என்றார்கள். “மீண்டும் வருவான்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதால் அவன் மீண்டும் வருவான் என்று நம்பி அவனுக்காக (அவனைப் பிடிப்பதற்காகக்) காத்திருந்தேன். அவன் வந்து உணவுப் பொருட்களை அள்ளத் தொடங்கிய போது அவனைப் பிடித்தேன். “உன்னை நபி (ஸல்) அவர்களிடம் கொண்டு செல்லப்போகிறேன்!” என்று கூறினேன். அதற்கவன், “என்னை விட்டுவிடு! நான் ஒரு ஏழை! எனக்கு குடும்பமிருக்கிறது; இனி நான் வரமாட்டேன்!” என்றான். அவன்மேல் இரக்கப்பட்டு அவனை விட்டுவிட்டேன். விடிந்ததும், நபி (ஸல்) அவர்கள் “அபூஹுரைராவே! உம்மால் பிடிக்கப்பட்டவன் என்ன செய்தான்?” என்று கேட்டார்கள்.
நான், அல்லாஹ்வின் தூதரே! அவன் (தனக்குக்) கடும் தேவையும் குடும்பமும் இருப்பதாக முறையிட்டான்; ஆகவே, அவன் மேல் இரக்கப்பட்டு அவனை விட்டுவிட்டேன்!” என்றேன். நிச்சயமாக அவன் உம்மிடம் பொய் சொல்லியிருக்கிறான்; திரும்பவும் உம்மிடம் வருவான்!” என்றார்கள். மூன்றாம் தடவை அவனுக்காகக் காத்திருந்தபோது, அவன் வந்து உணவுப் பொருட்களை அள்ளத் தொடங்கினான். அவனைப் பிடித்து, “உன்னை நபி (ஸல்) அவர்களிடம் கொண்டு செல்லப் போகிறேன்( (ஒவ்வொரு முறையும்) “இனிமேல் வரமாட்டேன்!’ என்று சொல்லிவிட்டு, மூன்றாம் முறையாக நீ மீண்டும் வந்திருக்கிறாய்! என்று கூறினேன்.
அதற்கவன், “என்னை விட்டுவிடும்! அல்லாஹ் உமக்குப் பயளிக்கக்கூடிய சில வார்த்தைகளைக் கற்றுத் தருகிறேன்!” என்றான். அதற்கு நான், “அந்த வார்த்தைகள் என்ன?” என்று கேட்டேன். “நீர் படுக்கைக்குச் செல்லும்போது ஆயத்துல் குர்சியை ஆரம்பத்திலிருந்து கடைசி வரை ஓதும்! அவ்வாறு செய்தால், விடியும்வரை அல்லாஹ்வின் தரப்பிலிலிருந்து உம்மைப் பாதுகாக்கின்ற (வானவர்) ஒருவர் இருந்து கொண்டேயிருப்பார்; ஷைத்தானும் உம்மை நெருங்க மாட்டான்! என்றான். அவனை நான் விட்டுவிட்டேன். விடிந்ததும் நபி (ஸல்) அவர்கள் “நேற்றிரவு உம்மால் பிடிக்கப்பட்டவன் என்ன செய்தான்? என்று கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதரே அல்லாஹ் எனக்குப் பயனளிக்கக் கூடிய சில வார்த்தைகளைக் கற்றுத் தருவதாக அவன் கூறினான்; அதனால் அவனை விட்டுவிட்டேன்!’என்றேன். அந்த வார்த்தைகள் என்ன? என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். நீர் படுக்கைக்குச் செல்லும்போது ஆயத்துல் குர்சியை ஆரம்பம் முதல் கடைசிவரை ஓதும்! அவ்வாறு ஓதினால், விடியும் வரை அல்லாஹ்வின் தரப்பிலிலிருந்து உம்மைப் பாதுகாக்கின்ற(வானவர்) ஒருவர் இருந்துகொண்டேயிருப்பார்; ஷைத்தானும் உம்மை நெருங்க மாட்டான்!” என்று என்னிடம் அவன் கூறினான்” எனத் தெரிவித்தேன். -நபித் தோழர்கள் நன்மையான(தைக் கற்றுக் கொண்டு செயல்படுத்துவ)தில் அதிக ஆர்வமுடையவர்களாக இருந்தனர்- அப்போது நபி (ஸல்) அவர்கள், “அவன் பெரும் பொய்யனாக இருந்தாலும் உம்மிடம் உண்மையைத்தான் அவன் சொல்லியிருக்கின்றான்! மூன்று இரவுகளாக நீர் யாரிடம் பேசி வருகிறீர் என்று உமக்குத் தெரியுமா?” என்று கேட்டார்கள். தெரியாது! என்றேன். அவன்தான் ஷைத்தான்! என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல் : புகாரி (2311)

31.   மனித ஷைத்தான்கள்

அபூஹுரைரா (ரலி) அவர்களிடத்தில் வந்த மனிதனை நபி (ஸல்) அவர்கள் ஷைத்தான் என்று கூறி இருக்கிறார்கள். எனவே ஷைத்தான் மனித வடிவில் உருவெடுப்பான் என்றக் கருத்தை இந்த ஹதீஸ் தருகிறது என்று சிலர் வாதிடுகிறார்கள்.
கெட்ட செயலை செய்பவர்களையும் கெட்ட குணமுள்ளவர்களையும் ஷைத்தான் என்று குறிப்பிடும் போங்கு குர்ஆனிலும் ஹதீஸ்களிலும் இடம்பெற்றுள்ளது. இந்த அடிப்படையை ஆதாரங்களோடு விளங்கிக்கொண்டால் மேற்கண்ட ஹதீஸையும் இது போன்று அமைந்த இன்ன பிற ஹதீஸ்களையும் சரியான பொருளில் விளங்கிக்கொள்ள முடியும்.
கெட்ட குணம் மற்றும் கெட்ட செயல் உள்ளவர்களுக்கு ஷைத்தான் என்று கூறப்படும்
நம்பிக்கை கொண்டோரை அவர்கள் சந்திக்கும் போது “நம்பிக்கை கொண்டுள்ளோம்” எனக் கூறுகின்றனர். தமது ஷைத்தான்களுடன் தனித்திருக்கும் போது “நாங்கள் உங்களைச் சேர்ந்தவர்களே. நாங்கள் (அவர்களை) கேலி செய்வோரே” எனக் கூறுகின்றனர்.
அல்குர்ஆன் (2 : 14)
கெட்ட மனிதர்களை ஷைத்தான்கள் என்று அல்லாஹ் மேற்கண்ட வசனத்தில் குறிப்பிட்டுள்ளான்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : நீங்கள் தொழுது கொண்டிருக்கும் போது உங்கள் முன்னால் எவராவது நடந்து செல்ல முனைந்தால் அவரைத் தடுங்கள். அவர் (விலகிக் கொள்ள) மறுத்தால் அப்போதும் அவரைத் தடுங்கள். அவர் (மீண்டும் விலக) மறுத்தால் அப்போது அவருடன் சண்டையி(ட்டுத் த)டுங்கள். ஏனெனில், அவன் தான் ஷைத்தான்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
நூல் : புகாரி (3275)
(ஒரு முறை) நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் “அல்அர்ஜ்’ எனுமிடத்தில் பயணம் செய்துகொண்டிருந்தோம். அப்போது கவிஞர் ஒருவர் கவிதைகளைப் பாடிக்கொண்டு எதிரில் வந்தார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அந்த ஷைத்தானைப் பிடியுங்கள். ஒரு மனிதருடைய வயிறு கவிதையால் நிரம்பியிருப்பதைவிடச் சீழ் சலத்தால் நிரம்பியிருப்பது நன்று” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூசயீத் அல்குத்ரீ (ரலிலி)
நூல் : முஸ்லிம் (4548)
தொழுபவரின் குறுக்கே செல்பவரையும் கவிதை பாடித்திரிபவரையும் ஷைத்தான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். இங்கு சொல்லப்பட்டுள்ள ஷைத்தான் என்ற வார்த்தையை அதன் நேரடிப் பொருளில் விளங்கமாட்டோம்.
நேரடிப் பொருளில் விளங்கினால் தொழுபவரின் குறுக்கே செல்பவரையும் கவிதை பாடுபவரையும் ஷைத்தான் என்று கூற வேண்டிய நிலை வரும். இவர்களிடம் கெட்ட செயல் உள்ளது என்ற அடைப்படையில் தான் இவர்களை ஷைத்தான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று எல்லோரும் புரிந்துகொள்கிறோம்.
அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கும் ஹதீஸில் சொல்லப்பட்ட ஷைத்தான் என்ற வார்த்தையும் இது போன்றே நேரடிப்பொருளில் பயன்படுத்தப்படாமல் கெட்டவன் என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது. திருடவந்தவனை பொய்யன் என்று நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டிருப்பது இதையே உணர்த்துகிறது.
ஸகாத் பொருளை திருடுவதற்காக வந்தவன் அபூஹுரைரா (ரலி) அவர்களை ஏமாற்றி திருட்டு வேளையில் ஈடுபட்டதால் அவனை ஷைத்தான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். ஆனால் உண்மையில் அவன் மனிதனாகத் தான் இருந்தான்.
மனிதர்களின் கண்களுக்குப்படாமல் வாழும் நிலையை ஷைத்தான்களுக்கு அல்லாஹ் ஏற்படுத்தியுள்ளான். வந்தது ஷைத்தானாக இருந்தால் அவனை அபூஹுரைரா (ரலி) அவர்களால் பார்த்திருக்க முடியாது.
ஆனால் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அவனை பார்த்ததோடு மட்டுமல்லாமல் அவனை தன் கைகளால் பிடித்தும் கொள்கிறார்கள். வந்தவன் உண்மையான ஷைத்தானாக இருக்கவில்லை. கெட்ட மனிதனாகவே இருந்தான் என்பதை இதன் மூலம் அறியலாம்.
மேலும் மனிதர்கள் யாரும் பார்க்க முடியாத வகையில் ஷைத்தானால் வர இயலும். இது தான் ஷைத்தான்களின் எதார்த்த தன்மையும் கூட. அபூஹுரைரா (ரலி) அவர்களிடம் வந்தவன் உண்மையான ஷைத்தானாக இருந்தால் அவன் அபூஹுரைரா (ரலி) அவர்களின் கண்களுக்குத் தெரியாமல் வந்து திருடிச் சென்றிருப்பான்.
திருடக்கூடியவன் யாரும் கண்டிராத வகையில் திருடிச் செல்லத் தான் விரும்புவான். ஆனால் அவனால் அவ்வாரு செய்ய இயலவில்லை. திருட வந்தவன் அபூஹுரைராவிடம் மாட்டிக் கொண்டு கெஞ்சுவதிலிருந்து அவன் சாதாரண மனிதன் தான் என்பதை சந்தேகமற அறியலாம்.
ஷைத்தான்களின் உணவு முறையும் மனிதர்களின் உணவு முறையும் முற்றிலும் வேறுபட்டதாகும். கால்நடைகளின் சாணங்களும் எலும்புகளும் கரிக்கட்டைகளும் தான் ஜின்களின் உணவு என்று ஹதீஸில் சொல்லப்பட்டுள்ளது.
அபூஹுரைரா (ரலி) அவர்களிடம் வந்தவன் முன்பு கூறிய பொருட்களை திருடுவதற்காக வரவில்லை. மனிதர்களின் உணவாக இருக்கக்கூடிய பொருட்களையே திருடுவதற்காக வந்துள்ளான். வந்தவன் சாதாரண மனிதன் தான் என்பதை இக்கருத்து மேலும் வலுவூட்டுகிறது.
எனவே இந்த செய்தியை வைத்துக்கொண்டு ஷைத்தான் மனித வடிவத்தில் வருவான் என்று வாதிடுவது தவறாகும்.
32.   நாய் வடிவில் வருவானா?

அபூதர் அல்கிஃபாரீ (ரலிலி) அவர்கள், “உங்களில் ஒருவர் (திறந்தவெளியில்) தொழ நிற்கும்
போது தமக்கு முன்னால் வாகன (ஒட்டக)த்தின் (சேணத்திலுள்ள) சாய்வுக்கட்டை போன்றது இருந்தால் அதுவே அவருக்குத் தடுப்பாக அமைந்துவிடும். சாய்வுக்கட்டை போன்றது இல்லாவிட்டால் கழுதை, பெண் மற்றும் கறுப்புநாய் ஆகியன அவரது (கவனத்தை ஈர்த்து) தொழுகையை முறித்துவிடும்” என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்றார்கள்.
உடனே நான், “அபூதர் (ரலிலி) அவர்களே! சிவப்பு நிற நாய், மஞ்சள் நிற நாய் ஆகியவற்றை விட்டுவிட்டுக் கறுப்பு நிற நாயை மட்டுமே குறிப்பிடக் காரணம் என்ன?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “என் சகோதரரின் புதல்வரே! நீங்கள் என்னிடம் கேட்டதைப் போன்றே நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள் “கறுப்பு நாய் ஷைத்தான் ஆகும்” என்று கூறினார்கள் என்றார்கள்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அஸ்ஸாமித் (ரஹ்)
நூல் : முஸ்லிம் (882)
ஷைத்தான் நாய் வடிவில் உருமாறுவான் என்று கூறுபவர்கள் மேற்கண்ட ஹதீஸையே ஆதாரம் காட்டுகிறார்கள். கருப்பு நாயை ஷைத்தான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதை வைத்து ஷைத்தான் நாய் வடிவில் வர முடியும் என்று வாதிடுகிறார்கள்.
ஆனால் உண்மையில் ஷைத்தான் நாயாக உருமாறினான் என்பதற்கோ அல்லது சாதாரண நாயாக இருந்த பிராணியின் உடம்பில் ஷைத்தான் நுழைந்து கொண்டான் என்று கூறுவதற்கோ இந்த செய்தியில் எந்த ஆதாரமும் இல்லை.
தீய குணமுள்ளவைகளுக்கும் கெடுதல் தருபவைகளுக்கும் ஷைத்தான் என்று கூறப்படும் என்பதற்கு முன்பு ஆதாரங்களை கூறியிருக்கிறோம். இந்த அடிப்படையில் தான் இந்த ஹதீஸிலும் கறுப்பு நாயை ஷைத்தான் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது மிகவும் கெடுதல் தரக்கூடிய பிராணி என்ற கருத்தில் கூறப்பட்டுள்ளது.
நாய் பாம்பு போன்ற பிராணிகளை நபியவர்கள் ஷைத்தான் என்று குறிப்பிட்டதைப் போல் ஒட்டகங்களையும் ஷைத்தான் என்று குறிப்பிட்டுள்ளார்கள்.
ஒட்டகத் தொழுவத்தில் தொழுவது தொடர்பாக நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள் ஒட்டகத் தொழுவத்தில் தொழாதீர்கள். ஏனென்றால் ஒட்டகங்கள் ஷைத்தான்களாகும் என்று கூறினார்கள். ஆட்டுகளை கட்டுமிடத்தில் தொழுவது பற்றி கேட்கப்பட்ட போது அங்கே நீங்கள் தொழுகலாம். ஏனென்றால் அவை பரகத்தாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : பராஉ பின் ஆஸிப் (ரலி)
நூல் : அபூதாவுத் (156)
ஒட்டகங்கள் ஆடுகளைப் போன்று அமைதியாக இருக்கும் பிராணி இல்லை. தொழுது கொண்டிருக்கும் போது தொழுகையாளியின் கவனத்தை திசைதிருப்பும் வகையில் இடஞ்சல்களை தரும் பிராணி என்பதால் நபியவர்கள் ஒட்டகங்களை ஷைத்தான்கள் என்று கூறியுள்ளார்கள். இந்த அடிப்படையில் தான் நாய் பாம்பு போன்ற பிராணிகளையும் நபியவர்கள் ஷைத்தான் என்று கூறியுள்ளார்கள்.
பொதுவாக நாய்கள் அனைத்துமே கெடுதல் தரக்கூடியவை தான். வேட்டையாடுவதற்கும் சொத்துக்களை பாதுகாப்பதற்கும் இப்பிராணி உதவுவதால் இந்த வகை நன்மைக்காக மட்டும் நாய்களை பயன்படுத்திக்கொள்வதை மார்க்கம் அனுமதிக்கிறது.
ஆனால் கறுப்பு நிற நாய்கள் பார்ப்பதற்கு கொடூரமாகவும் கெடுதல் தரக்கூடியதாகவும் இருப்பதால் நபி (ஸல்) அவர்கள் கறுப்பு நிற நாயை மட்டும் கொல்லுமாறு கூறினார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நாய்களைக் கொல்லும்படி எங்களுக்கு உத்தரவிட்டார்கள். அதையடுத்து, கிராமத்திலிலிருந்து ஒரு பெண் (மதீனாவை நோக்கி) தனது நாயுடன் வந்தால், அதையும் நாங்கள் கொன்றோம். பின்னர் நபி (ஸல்) அவர்கள் நாய்களைக் கொல்வதற்குத் தடை விதித்தார்கள். மேலும், “கண்களுக்கு மேலே இரு வெண் புள்ளிகள் உள்ள கன்னங்கரிய நாயை (மட்டும்) கொல்லுங்கள். ஏனெனில், அது ஷைத்தான் ஆகும்” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)
நூல் : முஸ்லிம் (3199)
கறுப்பு நிற நாய் வெறிபிடித்த நாயாக இருப்பதால் அதைக் கொல்லுமாறு நபி (ஸல்) அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள். இதை பின்வரும் ஹதீஸிலிருந்து விளங்கலாம்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ஐந்து உயிரினங்கள் தீங்கு இழைக்கக் கூடியவையாகும்! அவற்றை இஹ்ராம் கட்டியவர் கொன்றால் அவர் மீது குற்றமில்லை! அவை காகம், பருந்து, தேள், எலிலி, வெறிநாய் ஆகியனவாகும்.
அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)
நூல் : புகாரி (1829)
எனவே கெடுதல் தரக்கூடிய வஸ்த்துக்களுக்கு ஷைத்தான் என்று கூறும் வார்த்தைப் பிரயோகம் ஹதீஸ்களில் காணப்படுவதால் இது போன்ற ஹதீஸ்களை கொண்டு வந்து ஷைத்தான் உருமாறுவான் என்று வாதிடுவதற்கு ஆதாரமாக காட்டடக்கூடாது.
ஷைத்தான் திடீரென நாயாக மாறினான் அல்லது நாயுடைய உடலில் ஷைத்தான் புகுந்து கொண்டதால் அந்த நாய் ஷைத்தானக மாறியது என்று தெளிவாக ஹதீஸில் இருந்தால் மட்டுமே ஷைத்தான் என்பது அதன் நேரடிப் பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது என்று கூறுவது சரியாகும்.
உருமாறிய செய்தியோ உடலில் புகுந்த செய்தியோ ஹதீஸில் இல்லை என்கிற போது இவ்வாறு வாதிடுவது தவறாகும். மாற்று மதத்தினர் தங்கள் கடவுள்களுக்கு இவ்வாறு உருமாறும் தன்மை இருப்பதாக நினைக்கிறார்கள். எனவ ஷைத்தான் இவ்வாறு மாறுவான் என்று நம்புவது ஒரு வகையில் மாற்று மதத்தினர்களின் நம்பிக்கையை ஒத்திருக்கிறது.
33.   பாம்பு வடிவில் வருவானா?

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : மதீனாவில் இஸ்லாத்தைத் தழுவிய ஜின்கள் சில உள்ளன. உங்களில் ஒருவர், அவற்றில் எதையேனும் இந்தக் குடியிருப்புகளில் (பாம்பின் உருவில்) கண்டால் மூன்று நாட்கள் அவற்றுக்கு அவர் அறிவிப்புச் செய்யட்டும். அதற்குப் பின்னரும் அது அவருக்குத் தென்பட்டால், அதைக் கொன்றுவிடட்டும்! ஏனெனில், அது ஷைத்தான் ஆகும்.
அறிவிப்பவர் : அபூசயீத் அல்குத்ரீ (ரலி)
நூல் : முஸ்லிம் (4504)
ஷைத்தான் பாம்பு வடிவில் வருவான் என்று கூறுபவர்கள் மேற்கண்ட செய்தியை தங்கள் வாதத்திற்கு ஆதாரமாக காட்டுகிறார்கள். ஷைத்தான் மனிதாகவும் நாயாகவும் வர முடியாது என்பதற்கு நாம் என்ன விளக்கங்களை கூறினோமோ அவ்விளக்கங்கள் அனைத்தும் இங்கேயும் பொருந்திப்போகிறது.
கெடுதல் தருகின்ற வஸ்த்துக்களை ஷைத்தான்கள் என்று குறிப்பிடும் வார்த்தை பிரயோகத்தை நபி (ஸல்) அவர்கள் கடைபிடித்துள்ளார்கள் என்பதை முன்பே பார்த்தோம். மூன்று நாட்கள் ஆகியும் வீட்டை விட்டு வெளியேறாவிட்டால் அது சாதாரண கெடுதல் தரக்கூடிய நச்சுப்பாம்பு என்பதால் ஷைத்தான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அதைக் கொல்லுமாறும் கட்டளையிட்டார்கள்.
கெடுதல் தராத அல்லது கெட்ட குணமில்லாத உயிரினங்களுக்கு ஷைத்தான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக எந்த ஆதாரமும் இல்லை. பாம்பு பள்ளி பருந்து தேள் எலி வெறிநாய் ஆகிய மனிதர்களுக்கு இடஞ்சல் தரும் பிராணிகளை நபி (ஸல்) அவர்கள் கொல்லுமாறு கட்டளையிட்டுள்ளார்கள். இவைகளால் கேடு உண்டு என்ற காரணித்திற்குத் தான் நபியவர்கள் இவைகளை கொல்லுமாறு கட்டளையிட்டார்கள்.
கருப்பு நாயும் பாம்பும் உண்மையில் ஷைத்தானாக இருந்தால் இவற்றை நாம் கொல்லும் போது ஷைத்தானையே கொல்கிறோம் என்று அர்த்தமாகிறது. மறுமை நாள் ஏற்படும் வரை இறைவனிடம் ஷைத்தான் சாகாவரம் வாங்கி இருக்கும் போது நம்மால் ஷைத்தானை எவ்வாறு கொல்ல முடியும் என்று சிந்தித்துப் பார்த்தாலும் நாயையும் பாம்பையும் ஷைத்தான் என்று குறிப்பிட்டதின் சரியான பொருளை விளங்கிக்கொள்ளலாம்.
நாமும் நமது பேச்சுக்களில் இந்த முறையை கடைபிடிக்கிறோம். ஒருவரை ஏசும் போது ஷைத்தான் என்று கூறி ஏசும் பழக்கம் நம்மிடம் உள்ளது. ஷைத்தான் என்று ஏசப்பட்டவர் உண்மையில் ஷைத்தான் என்று கேட்பவர்கள் யாரும் புரிந்துகொள்ள மாட்டார்கள். கெட்ட செயல்பாடு உள்ளதை உணர்த்துவதற்காகவே இவ்வாறு சொல்லப்பட்டது என்றே புரிந்துகொள்வோம்.
34.   பூனை வடிவில் வருவானா?

பூனை வடிவில் ஷைத்தான் வருவான் என்றக் கருத்தையும் சிலர் கூறிக்கொண்டிருக்கிறார்கள். இதற்கு ஆதாரமாக இமாம் இப்னு ஹஜர் அவர்கள் தொகுத்த ஃபத்ஹுல் பாரி என்ற நூலை மேற்கொள்காட்டுகிறார்கள்.
ஃபத்ஹுல் பாரி என்பது ஹதீஸ்களை பதிவு செய்கின்ற நூல் அல்ல. இமாம் புகாரி அவர்கள் தொகுத்த சஹீஹுல் புகாரிக்கு விரைவுரையாகும். பூனை வடிவில் ஷைத்தான் வந்ததாக எந்த அறிவிப்பாளர் தொடரும் இல்லாமல் இப்னு ஹஜர் அவர்கள் குறிப்பிடுகிறார்கள். நாம் தேடிப்பார்த்தவரை இப்படி ஒரு செய்தி ஹதீஸ் நூற்களில் எங்கும் இடம்பெறவில்லை. எனவே ஆதாரமில்லாமல் பூனை வடிவில் ஷைத்தான் வருவான் என்று நம்புவது தவறாகும்.





ஷைத்தானின் சூழ்ச்சிகள்


1.    தீயவற்றை அலங்கரித்துக்காட்டுவான்
அவர்களுக்கு நமது வேதனை வந்ததும் அவர்கள் பணிந்திருக்க வேண்டாமா? மாறாக அவர்களின் உள்ளங்கள் இறுகி விட்டன. அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றை ஷைத்தான் அவர்களுக்கு அழகாக்கிக் காட்டினான்.
அல்குர்ஆன் (6 : 43)
அல்லாஹ்வின் மீது ஆணையாக! உமக்கு முன் சென்ற சமுதாயங்களுக்குத் தூதர்களை அனுப்பினோம். அவர்களது செயல்களை ஷைத்தான் அழகாக்கிக் காட்டினான். இன்னும் அவனே இன்று அவர்களின் உற்ற நண்பன். அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டு.
அல்குர்ஆன் (16 : 63)
அவளும், அவளது சமுதாயமும் அல்லாஹ்வையன்றி சூரியனுக்கு ஸஜ்தா செய்யக் கண்டேன். அவர்களின் செயல்களை ஷைத்தான் அவர்களுக்கு அழகாக்கிக் காட்டி, அவர்களை (நல்) வழியை விட்டும் தடுத்துள்ளான். அவர்கள் நேர் வழி பெற மாட்டார்கள் (என்றும் அந்தப் பறவை கூறிற்று.)
அல்குர்ஆன் (27 : 24)
இவ்வாறே இணை கற்பிப்போரில் அதிகமானோர் தமது குழந்தைகளைக் கொல்வதை அவர்களின் தெய்வங்கள் அழகாக்கிக் காட்டி, அவர்களை அழித்து, அவர்களது மார்க்கத்தையும் அவர்களுக்குக் குழப்பி விட்டன. அல்லாஹ் நாடியிருந்தால் அவர்கள் இதைச் செய்திருக்க மாட்டார்கள். அவர்கள் இட்டுக் கட்டுவதோடு அவர்களை விட்டு விடுவீராக!
அல்குர்ஆன் (6 : 137)
2.    தீய காரியங்களை செய்யுமாறு ஏவுவான்
நம்பிக்கை கொண்டோரே! ஷைத்தானின் அடிச்சுவடுகளைப் பின்பற்றாதீர்கள்! யார் ஷைத்தானின் அடிச்சுவடுகளைப் பின்பற்றுகிறாரோ (அவர் வழி கெடுவார்). ஏனெனில் அவன் வெட்கக்கேடானவற்றையும் தீமையையும் தூண்டுகிறான்.
அல்குர்ஆன் (24 : 21)
ஷைத்தான் வறுமையைப் பற்றி உங்களைப் பயமுறுத்துகிறான். வெட்கக் கேடானதை உங்களுக்குத் தூண்டுகிறான். அல்லாஹ்வோ தனது மன்னிப்பையும், அருளையும் வாக்களிக்கிறான். அல்லாஹ் தாராளமானவன்; அறிந்தவன்.
அல்குர்ஆன் (2 : 268)
மனிதர்களே! பூமியில் உள்ளவற்றில் அனுமதிக்கப்பட்ட தூய்மையானதை உண்ணுங்கள்! ஷைத்தானின் அடிச்சுவடுகளைப் பின்பற்றாதீர்கள்! அவன் உங்களுக்குப் பகிரங்க எதிரி. அவன் தீமையையும், வெட்கக் கேடானதையும், நீங்கள் அறியாதவற்றை அல்லாஹ்வின் மீது இட்டுக்கட்டுவதையும் உங்களுக்குத் தூண்டுகிறான்.
அல்குர்ஆன் (2 : 168.169)
மது, மற்றும் சூதாட்டம் மூலம் உங்களுக்கிடையே பகைமையையும், வெறுப்பையும் ஏற்படுத்தவும், அல்லாஹ்வின் நினைவை விட்டும், தொழுகையை விட்டும் உங்களைத் தடுக்கவுமே ஷைத்தான் விரும்புகிறான். எனவே விலகிக்கொள்ள மாட்டீர்களா?
அல்குர்ஆன் (5 : 91)
3.    தீய எண்ணங்களைத் தோற்றுவிப்பான்
“அவர்களை வழி கெடுப்பேன்; அவர்களுக்கு(த் தவறான) ஆசை வார்த்தை கூறுவேன்; அவர்களுக்குக் கட்டளையிடுவேன்; அவர்கள் கால்நடைகளின் காதுகளை அறுப்பார்கள். (மீண்டும்) அவர்களுக்குக் கட்டளையிடுவேன்; அல்லாஹ் வடிவமைத்ததை அவர்கள் மாற்றுவார்கள்” (எனவும் கூறினான்). அல்லாஹ்வையன்றி ஷைத்தானைப் பொறுப்பாளனாக்கிக் கொள்பவன் வெளிப்படையான நஷ்டத்தை அடைந்து விட்டான்.
அல்குர்ஆன் (4 : 119)
அவர்களுக்கு அவன் வாக்களிக்கிறான். ஆசை வார்த்தை கூறுகிறான். ஷைத்தான் அவர்களுக்கு ஏமாற்றத்தையே வாக்களிக்கிறான்.
அல்குர்ஆன் (4 : 120)
அவன் மனிதர்களின் உள்ளங்களில் தீய எண்ணங்களைப் போடுகிறான். ஜின்களிலும், மனிதர்களிலும் இத்தகையோர் உள்ளனர்.
அல்குர்ஆன் (114 : 4)
ஸஃபிய்யா (ரலிலி) அவர்கள் கூறியதாவது : நபி (ஸல்) அவர்கள் ரமளானில் கடைசிப் பத்து நாட்களில் இஃதிகாஃப் இருக்கும்போது அவர்களைச் சந்திக்க நான் செல்வேன். சற்று நேரம் அவர்களுடன் பேசிவிட்டு எழுவேன். அப்போது நபி (ஸல்) அவர்களும் என்னுடன் எழுந்து பள்ளியின் வாசல் வரை வருவார்கள். பள்ளியின் வாசலுக்கு அருகிலிலிருந்த உம்மு சலமாவின் வாசலை அடைந்தபோது அன்ஸாரிகளில் இருவர் நடந்து சென்றனர். நபி (ஸல்) அவர்களுக்கு சலாம் கூறினர். அவர்களிடம் நபி (ஸல்) அவர்கள், “நில்லுங்கள்; இவர் (என் மனைவி) ஸஃபிய்யா பின்த் “ஹுயை ஆவார்” எனக் கூறினார்கள். அவ்விருவரும் (ஆச்சரியத்துடன்) “சுப்ஹானல்லாஹ்’ (அல்லாஹ் தூயவன்) என்றனர். இவ்வாறு நபி (ஸல்) அவர்கள் கூறியது அவ்விருவருக்கும் உறுத்தியது. அப்போது நபி (ஸல்) அவர்கள், “நிச்சயமாக ஷைத்தான் மனிதனின் ரத்த நாளங்களில் ஊடுருவியிருக்கிறான்; உங்கள் உள்ளங்களில் தவறான எண்ணத்தை அவன் போட்டுவிடுவான் என நான் அஞ்சினேன்” எனக் கூறினார்கள்.
நூல் : புகாரி (2035)
4.    இறைமறுப்பாளர்களாக்க முயற்சிப்பான்
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : உங்கüல் ஒருவரிடம் (அவர் மனத்திற்குள்) ஷைத்தான் வந்து, “இதைப் படைத்தவர் யார்? இதைப் படைத்தவர் யார்?” என்று கேட்டுக் கொண்டே வந்து, இறுதியில், “உன் இறைவனைப் படைத்தவர் யார்?” என்று கேட்கின்றான். இந்தக் (கேள்வி கேட்கும்) கட்டத்தை அவன் அடையும்போது அவர் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடட்டும். (இத்தகைய சிந்தனையிலிருந்து) விலகிக்கொள்ளட்டும்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
நூல் : புகாரி (3276)
5.    இறைநினைவை மறக்கடிக்க முயலுவான்
மது, மற்றும் சூதாட்டம் மூலம் உங்களுக்கிடையே பகைமையையும், வெறுப்பையும் ஏற்படுத்தவும், அல்லாஹ்வின் நினைவை விட்டும், தொழுகையை விட்டும் உங்களைத் தடுக்கவுமே ஷைத்தான் விரும்புகிறான். எனவே விலகிக்கொள்ள மாட்டீர்களா?
அல்குர்ஆன் (5 : 91)
ஷைத்தான் அவர்களை மிகைத்து விட்டான். அல்லாஹ்வின் நினைவை அவர்களுக்கு மறக்கச் செய்தான். அவர்களே ஷைத்தானின் கூட்டத்தினர். கவனத்தில் கொள்க! ஷைத்தானின் கூட்டத்தினரே நஷ்டமடைந்தவர்கள்.
அல்குர்ஆன் (58 : 19)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : தொழுகைக்கு பாங்குசொல்லப்பட்டதும் பாங்கைக் கேட்கக் கூடாது என்பதற்காக ஷைத்தான் காற்று விட்டவனாக ஓடுகிறான். பாங்கு முடிந்ததும் முன்னே வருகிறான். இகாமத் சொல்லப்பட்டதும் திரும்பி ஓடுகிறான். இகாமத் முடிந்ததும் முன்னே வருகிறான். தொழுதுகொண்டிருக்கும் மனிதரிடம் ” நீ இதுவரை நினைத்திராதவற்றையெல்லாம் நினைத்துப் பார்” என்று கூறுவான். முடிவில் அம்மனிதர் தாம் எத்தனை ரக்அத்கள் தொழுதோம் என்பதை அறியாதவராகி விடுவார்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலிலி)
நூல் : புகாரி (1222)
6.    உறுதியாக இருந்தால் அஞ்சுவான்
ஷைத்தான் கூறும் ஆசைவார்த்தைகளுக்குக் கட்டுப்படாமல் தீமைகளை வெறுத்து ஒதுக்குவதில் உறுதியாக இருந்தால் ஷைத்தான் நம்மைப் பார்த்து பயப்படுவான். உமர் (ரலி) அவர்கள் இவ்வாறு இருந்ததால் அவர்களைப் பார்த்து ஷைத்தான் அஞ்சியதாக நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
(ஒருமுறை) அல்லாஹ்வின் தூதரிடம் (அவர்களுடைய மனைவிமார்களான) குறைஷிப் பெண்கள் பேசிக் கொண்டிருந்தார்கள். அந்தப் பெண்கள் நபி (ஸல்) அவர்கüடம் (ஜீவனாம்சத் தொகையை) அதிகமாகத் தரும்படி தம் குரல்களை உயர்த்தி கேட்டுக் கொண்டிருந்தார்கள். அப்போது உமர் (ரலி) அவர்கள் வந்து (உள்ளே வர) அனுமதி கேட்டார்கள். உமர் (ரலி) அவர்கள் அனுமதி கேட்ட போது அப்பெண்கள் அவசர அவசரமாகத் தங்கள் பர்தாக்களை அணிந்தபடி எழுந்து கொண்டனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சிரித்தபடியே உமர் (ரலி) அவர்களுக்கு (உள்ளே வர) அனுமதி கொடுத்தார்கள். உமர் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! தங்களை ஆயுள் முழுதும் அல்லாஹ் சிரித்தபடி (மகிழ்ச்சியாக) இருக்கச் செய்வானாக” என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள், “என்னிடமிருந்த இந்தப் பெண்களைக் கண்டு நான் வியப்படைகிறேன். (என்னிடம் சகஜமாக அமர்ந்திருந்தவர்கள்) உங்கள் குரலைக் கேட்டவுடன் அவசர அவசரமாகப் பர்தா அணிந்து கொண்டார்களே” என்று சொன்னார்கள். உமர் (ரலி) அவர்கள், “எனக்கு அஞ்சுவதை விட அதிகமாக அஞ்சத் தாங்கள் தாம் தகுதியுடையவர்கள் அல்லாஹ்வின் தூதரே!” என்று கூறிவிட்டு, (அப்பெண் களை நோக்கி) “தமக்குத் தாமே பகைவர்களாகிவிட்ட பெண்களே! அல்லாஹ் வின் தூதருக்கு அஞ்சாமல் எனக்கா நீங்கள் அஞ்சுகிறீர்கள்?” என்று கேட்டார்கள். அதற்கு அந்தப் பெண்கள், “ஆம், அல்லாஹ்வின் தூதருடன் ஒப்பிடும் போது நீங்கள் கடின சித்தமுடையவராகவும் அதிகக் கடுமை காட்டக்கூடியவராகவும் இருக்கின்றீர்கள்” என்று பதிலüத்தார்கள். (அப்போது) அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள், “என் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீது சத்தியமாக! (உமரே!) நீங்கள் ஒரு பாதையில் சென்றுகொண்டிருக்கையில் உங்களை ஷைத்தான் கண்டால் உங்களுடைய பாதையல்லாத வேறொரு பாதையில்தான் அவன் செல்வான்” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : சஅத் பின் அபீவக்காஸ் (ரலி)
நூல் : புகாரி (3294)
7.    தன்னை பின்பற்றியவர்களை ஏமாற்றுவான்
அறிவுரை எனக்குக் கிடைத்த பின்பும் அதை விட்டு என்னை அவன் (ஷைத்தான்) கெடுத்து விட்டான். ஷைத்தான் மனிதனுக்குத் துரோகம் செய்பவனாகவே இருக்கிறான் (என்றும் கூறுவான்.)
அல்குர்ஆன் (25 : 29)
ஷைத்தான் அவர்களின் செயல்களை அவர்களுக்கு அழகானதாகக் காட்டியதை எண்ணிப் பாருங்கள்! “இன்று மனிதர்களில் உங்களை வெல்ல யாருமில்லை; நான் உங்களுக்கு அருகில் இருக்கிறேன்” எனவும் கூறினான். இரு அணிகளும் நேருக்கு நேர் சந்தித்த போது பின் வாங்கினான். “உங்களை விட்டும் நான் விலகிக் கொண்டவன். நீங்கள் பார்க்காததை நான் பார்க்கிறேன். நான் அல்லாஹ்வுக்கு அஞ்சுகிறேன். அல்லாஹ் கடுமையாகத் தண்டிப்பவன்” என்று கூறினான்.
அல்குர்ஆன் (8 : 48)
“(ஏக இறைவனை) மறுத்து விடு” என்று மனிதனிடம் கூறி, அவன் மறுத்த பின் “நான் உன்னை விட்டு விலகியவன். அகிலத்தின் இறைவனாகிய அல்லாஹ்வை அஞ்சுகிறேன்” எனக் கூறிய ஷைத்தானைப் போன்றவர்கள்.
அல்குர்ஆன் (59 : 16)
“அல்லாஹ் உங்களுக்கு உண்மையான வாக்குறுதி அளித்தான். நானும் உங்களுக்கு வாக்குறுதி அளித்து உங்களிடம் வாக்கு மீறி விட்டேன். உங்களை அழைத்தேன். எனது அழைப்பை ஏற்றீர்கள் என்பதைத் தவிர உங்கள் மீது எனக்கு எந்த அதிகாரமும் இல்லை. எனவே என்னைப் பழிக்காதீர்கள்! உங்களையே பழித்துக் கொள்ளுங்கள்! நான் உங்களைக் காப்பாற்றுபவனும் அல்லன். நீங்கள் என்னைக் காப்பாற்றுவோரும் அல்லர். முன்னர் என்னை (இறைவனுக்கு) இணையாக்கியதை மறுக்கிறேன்” என்று தீர்ப்புக் கூறப்பட்டவுடன் ஷைத்தான் கூறுவான். அநீதி இழைத்தோருக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டு
அல்குர்ஆன் (14 : 22)
அவர்களுக்கு அவன் வாக்களிக்கிறான். ஆசை வார்த்தை கூறுகிறான். ஷைத்தான் அவர்களுக்கு ஏமாற்றத்தையே வாக்களிக்கிறான்.
அல்குர்ஆன் (4 : 120)
8.    இறுதியில் நரகம் செல்வான்
“அல்லாஹ் உங்களுக்கு உண்மையான வாக்குறுதி அளித்தான். நானும் உங்களுக்கு வாக்குறுதி அளித்து உங்களிடம் வாக்கு மீறி விட்டேன். உங்களை அழைத்தேன். எனது அழைப்பை ஏற்றீர்கள் என்பதைத் தவிர உங்கள் மீது எனக்கு எந்த அதிகாரமும் இல்லை. எனவே என்னைப் பழிக்காதீர்கள்! உங்களையே பழித்துக் கொள்ளுங்கள்! நான் உங்களைக் காப்பாற்றுபவனும் அல்லன். நீங்கள் என்னைக் காப்பாற்றுவோரும் அல்லர். முன்னர் என்னை (இறைவனுக்கு) இணையாக்கியதை மறுக்கிறேன்” என்று தீர்ப்புக் கூறப்பட்டவுடன் ஷைத்தான் கூறுவான். அநீதி இழைத்தோருக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டு
அல்குர்ஆன் (14 : 22)
வழி கெட்டவர்களுக்கு நரகம் வெளிப்படுத்தப்படும். “அல்லாஹ்வையன்றி நீங்கள் வணங்கிக் கொண்டிருந்தவை எங்கே?” அவர்கள் உங்களுக்கு உதவுவார்களா? அல்லது தமக்குத்தாமே உதவிக் கொள்வார்களா? என்று அவர்களிடம் கேட்கப்படும். அவர்களும், வழி கெட்டவர்களும், இப்லீஸின் படையினர் அனைவரும் அதில் முகம் குப்புற தள்ளப்படுவார்கள்.
அல்குர்ஆன் (26 : 91)


காத்துக்கொள்ளும் வழிமுறைகள்


ஷைத்தான்களிடமிருந்து தங்களை காத்துக்கொள்ள அனைவரும் விரும்புகிறோம். இதற்கான வழிமுறைகள் குர்ஆனும் ஹதீஸ்களும் நமக்கு தெளிவாக கற்றுத்தருகிறது. இவற்றை அறியாத காரணத்தால் இஸ்லாமிய சமூகத்தில் வாழும் பலர் தகடு தாயத்து போன்ற இணைவைப்புக் காரியங்களிலும் சூடமேற்றுதல் திருஷ்டி கழித்தல் முட்டையை உடைத்தல் குர்ஆன் வசனங்களை எழுதி கரைத்து குடித்தல் போன்ற மூடநம்பிக்கைகளிலும் ஈடுபட்டு வருகிறார்கள்.
மாற்று மதத்தினரைப் பார்த்து காப்பியடிக்கப்பட்ட இந்த அநாச்சரங்கள் ஷைத்தானின் செயல்பாடுகளாகும். இவற்றை செய்தால் ஷைத்தானின் வலையில் விழுமுடியுமே தவிர அவனிடமிருந்து ஒரு போதும் காத்துக்கொள்ள இயலாது. பின்வருகின்ற விஷயங்களை கடைபிடிப்பதன் மூலமே ஷைத்தானிடமிருந்து நம்மை காத்துக்கொள்ள முடியும்.
1.    சிறந்த பாதுகாவலன்
ஷைத்தானுடைய சதியிலிருந்து தப்பிப்பதற்கு அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருவதை விட சிறந்த வழி எதுவும் இருக்க முடியாது. ஷைத்தானை படைத்த வல்ல இறைவன் ஷைத்தானின் தீங்குகளிலிருந்து நம்மைக் காக்கும் சிறந்த பாதுகாவலன் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. பின்வரும் வசனங்களை இதையே நமக்கு எடுத்துரைக்கிறது.
அவர்கள் புறக்கணித்தால் அல்லாஹ் உங்களின் பாதுகாவலன் என்பதை அறிந்து கொள்ளுங்கள்! அவன் சிறந்த பாதுகாவலன். சிறந்த உதவியாளன்.
அல்குர்ஆன் (8 : 40)
உங்கள் பகைவர்களை அல்லாஹ் நன்கறிவான். அல்லாஹ் பொறுப்பேற்கப் போதுமானவன்; அல்லாஹ் உதவி செய்யப் போதுமானவன்.
அல்குர்ஆன் (4 : 45)
“இவ்வேதத்தை அருளிய அல்லாஹ்வே எனது பொறுப்பாளன். அவனே நல்லோருக்குப் பொறுப்பேற்றுக் கொள்கிறான்” (என்றும் கூறுவீராக!)
அல்குர்ஆன் (7 : 196)
நம்பிக்கை கொண்டோருக்கு அல்லாஹ் உதவுபவன். இருள்களிலிருந்து வெளிச்சத்திற்கு அவர்களைக் கொண்டு செல்கிறான். (ஏக இறைவனை) மறுப்போருக்கு தீய சக்திகளே உதவியாளர்கள். வெளிச்சத்திலிருந்து இருள்களுக்கு அவர்களைக் கொண்டு செல்கின்றனர். அவர்கள் நரகவாசிகள். அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பர்.
அல்குர்ஆன் (2 : 257)
2.    இறைவனிடம் கையேந்துங்கள்
சகல வல்லமையும் படைத்த இறைவனிடத்தில் கையேந்தி பாதுகாப்புத் தேடுமாறு திருக்குர்ஆ நமக்குக் கற்றுத்தருகிறது. ஷைத்தானிடமிருந்து தப்பிப்பதற்கு அற்புதமான இந்த வழியை விட்டால் வேறு வழி இல்லை.
ஷைத்தானின் தாக்கம் உமக்கு ஏற்பட்டால் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுவீராக! அவன் செவியுறுபவன்; அறிந்தவன்.
அல்குர்ஆன் (7 : 200)
ஷைத்தானிடமிருந்து உமக்கு ஏதும் தீண்டுதல் ஏற்பட்டால் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுவீராக! அவன் செவியுறுபவன்; அறிந்தவன்.
அல்குர்ஆன் (41 : 36)
“என் இறைவா! ஷைத்தான்களின் தூண்டுதல்களை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்” என்றும் “என் இறைவா! என்னிடம் அவர்கள் வருவதை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.” என்றும் கூறுவீராக!
அல்குர்ஆன் (23 : 97)
(முஹம்மதே!) மனிதர்களின் அரசனும், மனிதர்களின் கடவுளுமான மனிதர்களின் இறைவனிடம் மறைந்து கொண்டு தீய எண்ணங்களைப் போடுபவனின் தீங்கை விட்டும் பாதுகாப்புத் தேடுகிறேன் என்று கூறுவீராக!
அல்குர்ஆன் (114)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (இவ்வாறு) பிரார்த்திப்பார்கள். இறைவா உயரமான இடத்திலிருந்து கீழே விழுந்து மரணிப்பதை விட்டும் இடிபாடுகளுக்குள் சிக்கி மரணிப்பதை விட்டும் நீருக்குள் மூழ்கி மரணிப்பதை விட்டும் நெருப்பில் கருகி மரணிப்பதை விட்டும் உன்னிடம் நான் பாதுகாவல் தேடுகிறேன். மரண வேளையில் ஷைத்தான் என்னை தீண்டுவதை விட்டும் உன்னிடம் நான் பாதுகாவல் தேடுகிறேன். உன்னுடைய வழியை விட்டு புறக்கணித்தவனாக நான் மரணிப்பதை விட்டும் (விஷ ஜந்துக்களால்) தீண்டப்பட்டு மரணிப்பதை விட்டும் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன்.
அறிவிப்பவர் : அபுல் யசர் (ரலி)
நூல் : நஸயீ (5436)
3.    குர்ஆனை ஓதும் போது….
முக்கியமான சில இடங்களில் ஷைத்தானிடமிருந்து பாதுகாப்புத் தேடுமாறு இஸ்லாம் கற்றுத்தருகிறது. இதை தொடர்ந்து கடைபிடித்து வந்தால் ஷைத்தானின் தீங்குகளை விட்டும் நாம் பாதுகாக்கப்படுவோம்.
நீ குர்ஆனை ஓதும் போது விரட்டப்பட்ட ஷைத்தானை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடிக்கொள்!
அல்குர்ஆன் (16 : 98)
4.    கழிவறைக்குள் நுழையும் போது…
நபி (ஸல்) அவர்கள் கழிப்பிடத்திற்குள் நுழைய முற்படும்போது, “இறைவா! (அருவருக்கத் தக்க செயல்கள், இழிவான எண்ணங்கள் ஆகியற்றைத் தூண்டும்) ஆண் பெண் ஷைத்தானி(ன் தீங்கி)லிலிருந்து உன்னிடம் நான் பாதுகாப்புத் தேடுகிறேன்” என்று கூறுவார்கள்.
அறிவிப்பவர் : அனஸ் (ரலி)
நூல் : புகாரி (142)
5.    உடலுறவு கொள்ளும் போது…
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : உங்கüல் ஒருவர் தன் வீட்டாரிடம் (உடலுறவு கொள்ள) வந்து, “பிஸ்மில்லாஹ் -அல்லாஹ்வின் திருப்பெயரால்- இறைவா! ஷைத்தானை எங்கüடமிருந்து விலகியிருக்கச் செய். எங்களுக்கு நீ அüக்கும் சந்ததிகüடமிருந்தும் ஷைத்தானை விலகியிருக்கச் செய்” என்று பிரார்த்தனை புரிந்து, பிறகு அவர்களுக்குச் சந்ததி அüக்கப்பட்டால் அந்தச் சந்ததிக்கு ஷைத்தான் தீங்கு செய்ய மாட்டான்.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)
நூல் : புகாரி (3271)
6.    காலையிலும் மாலையிலும்
அல்லாஹ்வின் தூதரே காலையிலும் மாலையிலும் ஓத வேண்டியதை எனக்குக் கற்றுத்தாருங்கள் என்று அபூபக்ர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் காலையிலும் மாலையிலும் உறங்கச் செல்லும் போது அல்லாஹும்ம ஆலிமல் கைபி வஷ்ஷஹாததி ஃபாதிர ஸ்ஸமாவாதி வல்அர்ளி ரப்பி குல்லி ஷையின் வமலீகஹு அஷ்ஹது அன்லாயிலாஹ இல்லா அன்த அவூது மிக மின் ஷர்ரி நஃப்ஸி வமின் ஷர்ரிஷ்ஷைதானி வஷிர்கிஹி என்று சொல்லுங்கள் எனக் கூறினார்கள்.
பொருள் : “அல்லாஹ்வே! வானங்களையும் பூமியையும் படைத்தவனே! மறைவானதையும் வெளிப்படையானதையும் அறிந்தவனே! அனைத்துப் பொருட்களின் இரட்சகனும் அதிபதியுமானவனே உன்னைத் தவிர வேறு இறைவன் இல்லை என்று நான் சாட்சி கூறுகிறேன். உன்னிடத்தில் என் உள்ளதின் தீங்கை விட்டும் ஷைத்தானின் தீங்கை விட்டும் அவனை இணையாக்குவதை விட்டும் பாதுகாவல் தேடுகிறேன்.
அறிவிப்பவர் : அபூஹூரைரா (ரலி)
நூல் : திர்மிதி (3314)
7.    ஃபஜர் தொழுத பிறகு….
நபியவர்கள் கற்றுக் கொடுத்த ஏகத்துவ வாக்கியத்தை மொழியும் போது அழிவுகளிலிருந்து முஸ்லிம் காக்கப்படுகிறான். ஆனால் இணை வைப்பு என்ற பாவத்தைச் செய்து விட்டால் இந்த பாதுகாப்பு அகன்று நாசமாகி விடுகிறான்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ஃபஜர் தொழுகைக்குப் பிறகு இரு கால்களையும் மடக்கியவாறே (வேறு விஷயங்களை) பேசுவதற்கு முன்னால் லாயிலாஹ இல்லல்லாஹூ வஹ்தஹூ லாஷரீக்க லஹூ லஹுல் முல்(க்)கு வலஹுல் ஹம்து யுஹ்யீ வயுமீ(த்)து வஹுவ அலா குல்லி ஷையின் கதீர் என்று பத்து முறை எவர் கூறுகிறாரோ அவருக்குப் பத்து நன்மைகள் எழுதப்படுகின்றன. பத்து பாவங்கள் அவரை விட்டும் அழிக்கப்படுகின்றன. அவருக்காகப் பத்து தகுதிகள் உயர்த்தப்படுகின்றன. அந்த நாள் முழுவதும் அனைத்து ஆபத்துகளிலிருந்தும் பாதுகாக்கப்படுகிறார். ஷைத்தானிடமிருந்தும் பாதுகாக்கப்படுகிறார். அந்நாளில் அல்லாஹ்விற்கு இணை கற்பிப்பதைத் தவிர வேறெந்த பாவத்தாலும் அவரை நாசமாக்க இயலாது.
பொருள் : அல்லாஹ் ஒருவனையன்றி வேறு யாரும் வணக்கத்திற்குத் தகுதியானவர்கள் இல்லை. அவனுக்கு எந்த நிகரும் இல்லை. அதிகாரமும், புகழும் அவனுக்கே உரியது. அவன் உயிர்பிக்கிறான். மரணிக்கச் செய்கிறான். எல்லாவற்றின் மீதும் அவன் ஆற்றல் உள்ளவனாக இருக்கிறான்.
அறிவிப்பவர் : அபூதர் (ரலி)
நூல் : திர்மிதி (3396)
8.    உறங்கச் செல்லும் முன்….
அல்வலீத் பின் வலீத் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் : அல்லாஹ்வின் தூதரே எனக்கு பயம் ஏற்படுகிறது என்று (நபி (ஸல்) அவர்களிடம்) நான் கூறினேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் நீ உறங்கச் செல்லும் போது அவூது பிகலிமாதில்லாஹித் தாம்மதி மின் கலபிஹி வஇகாபிஹி வஷர்ரி இபாதிஹி வமின் ஹமசாதிஷ்ஷயாதீனி வஅய்யஹ்ளுரூனி என்று கூறு. இவ்வாறு நீ கூறினால் ஷைத்தானால் உனக்கு எந்த தீங்கும் ஏற்படாது. அவனால் உன்னை நெருங்கவே முடியாது.
பொருள் : அல்லாஹ்வின் முழுமையான வார்த்தைகளை கொண்டு அல்லாஹ்வின் கோபத்தை விட்டும் அவனது தண்டனையை விட்டும் அடியார்களின் தீங்கை விட்டும் ஷைத்தான்களின் தூண்டுதல்களை விட்டும் ஷைத்தான்கள் என்னிடம் வருவதை விட்டும் நான் பாதுகாவல் தேடுகிறேன்.
நூல் : அஹ்மத் (22719)
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது : ரமளானுடைய ஸகாத் பொருளைப் பாதுகாத்திடும் பொறுப்பை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம் ஒப்படைத்தார்கள். அப்போது (இரவில்) ஒருவன் வந்து அந்த (ஸகாத்) உணவுப் பொருளை அள்ளலானான். உடனே, நான் அவனைப் பிடித்துக் கொண்டேன்; “உன்னை அல்லாஹ்வின் தூதரிடம் இழுத்துச் சென்று முறையிடுவேன்” என்று கூறினேன். (அறிவிப்பாளர் முழு நிகழ்ச்சியையும் விபரமாகச் சொல்கிறார்……..) இறுதியில் அவன், “நீங்கள் படுக்கைக்குச் செல்லும் போது ஆயத்துல் குர்ஸீயை ஓதுங்கள். (அவ்வாறு ஓதினால்) உங்களுடன் பாதுகாவலர் (வானவர்) ஒருவர் இருந்து கொண்டேயிருப்பார். காலை நேரம் வரும் வரை ஷைத்தான் உங்களை நெருங்க மாட்டான்” என்று என்னிடம் சொன்னான். (இதை நபி (ஸல்) அவர்கüடம் சொன்ன போது,) “அவன் பொய்யனாயிருந்தும், உங்கüடம் உண்மை பேசியுள்ளான். அவன் ஷைத்தான் தான்” என்று கூறினார்கள்.
நூல் : புகாரி (3275)
9.    கெட்ட கனவுகள் ஏற்படும் போது….
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : நல்ல (உண்மையான) கனவு அல்லாஹ்விடமிருந்து வருவதாகும். கெட்ட (பொய்யான) கனவு ஷைத்தானிடமிருந்து வருவதாகும். ஆகவே, எவரேனும் தாம் விரும்பாத (தீய கனவு) ஒன்றைக் கண்டால் அவர் தமது இடப்பக்கத்தில் மூன்று முறை துப்பட்டும்; ஷைத்தானிடமிருந்து (காக்குமாறு அல்லாஹ்விடம்) அவர் பாதுகாப்புக் கோரட்டும். ஏனெனில், (இப்படிச் செய்தால்) அவருக்கு அது எந்தத் தீங்கும் இழைத்திட இயலாது. மேலும், ஷைத்தான் என் உருவத்தில் காட்சி தரமாட்டான்.
அறிவிப்பவர் : அபூகத்தத்தா (ரலி)
நூல் : புகாரி (6995)
10.    ஓரிடத்தில் தங்கும் போது…
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : உங்களில் ஒருவர் (பயணத்தில்) ஓரிடத்தில் இறங்கித் தங்கும்போது. “அஊது பி கலிலிமாத்தில் லாஹித் தாம்மாத்தி மின் ஷர்ரி மா கலக’ என்று கூறினால். அவர் அங்கிருந்து புறப்பட்டுச் செல்லும்வரை அவருக்கு எதுவும் தீங்கிழைக்காது.
அறிவிப்பவர் : கவ்லா பின்த் ஹகீம் அஸ்ஸுலமிய்யா (ரலிலி)
நூல் : முஸ்லிம் (5248)
11.    பள்ளிக்குள் நுழையும் போது
நபி (ஸல்) அவர்கள் பள்ளிவாசலிற்குள் நுழைந்தால் அவூதுபில்லாஹில் அளீம் வபிவஜ்ஹிஹில் கரீம் வசுல்தானிஹில் கதீம் மினஷ்ஷைதானிர் ரஜீம் என்று கூறுவார்கள்.
பொருள் : அல்லாஹ்வின் சங்கைக்குரிய முகத்தின் பொருட்டாலும் அவனது நிரந்தரமான அதிகாரத்தின் பொருட்டாலும் எடுத்தெரியப்பட்ட ஷைத்தானிடமிருந்து மகத்துவமிக்க அல்லாஹ்விடத்தில் நான் பாதுகாவல் தேடுகிறேன்.
அறிவிப்பவர் : அம்ர் பின் ஆஸ் (ரலி)
நூல் : அபூதாவுத் (394)
12.    பள்ளியிலிருந்து வெளியேறும் போது….
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : உங்களில் ஒருவர் பள்ளிக்குள் நுழைந்தால் (உங்கள்) நபிக்காக சலாத்தை வேண்டிய பிறகு அல்லாஹூம் மஃப்தஹ்லீ அப்வாப ரஹ்மதிக (இறைவா எனக்காக உனது அருள் வாயில்களை திறந்துவிடு) என்று கூறட்டும். அவர் வெளியே செல்லும் போது (உங்கள்) நபிக்காக சலாத்தை வேண்டிய பிறகு அல்லாஹூம் மஃஸிம்னீ மினஷ்ஷைதானிர் ரஜீம் (இறைவா எடுத்தெரியப்பட்ட ஷைத்தானிடமிருந்து என்னை காப்பாயாக) என்று கூறட்டும்.
அறிவிப்பவர் : அபூஹூரைரா (ரலி)
நூல் : இப்னு மாஜா (765)
13.    தொழுகையில் குழப்பம் ஏற்பட்டால்….
உஸ்மான் பின் அபில்ஆஸ் (ரலிலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் சென்று, “அல்லாஹ்வின் தூதரே! (நான் தொழுது கொண்டிருக்கும்போது) எனக்கும் எனது தொழுகைக்கும் எனது ஓதலுக்குமிடையே ஷைத்தான் தடையாய் நின்று எனக்குக் குழப்பத்தை ஏற்படுத்துகிறான்” என்று கூறினார்கள்.
அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அவன்தான் “கின்ஸப்’ எனப்படும் ஷைத்தான் ஆவான். அவனை நீங்கள் உணர்ந்தால் அவனிடமிருந்து காக்குமாறு அல்லாஹ்விடம் கோரி, உங்கள் இடப் பக்கத்தில் மூன்று முறை துப்பிவிடுங்கள்” என்று கூறினார்கள். அவ்வாறே நான் செய்தபோது, என்னிடமிருந்து அவனை அல்லாஹ் அப்புறப்படுத்திவிட்டான்.
அறிவிப்பவர் : அபுல்அலாஉ அல்ஆமிரீ (ரஹ்)
நூல் : முஸ்லிம் (4431)
14.    கோபம் ஏற்பட்டால்….
நான் நபி (ஸல்) அவர்களுடன் அமர்ந்து கொண்டிருந்தேன். அப்போது இரண்டு மனிதர்கள் ஒருவரையொருவர் திட்டிக் கொண்டிருந்தனர். அவர்கüல் ஒருவரின் முகம் (கோபத்தால்) சிவந்து விட்டது. அவருடைய தொண்டை நரம்பு புடைத்துக் கொண்டது. உடனே, நபி (ஸல்) அவர்கள், “எனக்கு ஒரு (பிரார்த்தனை) வார்த்தை தெரியும். அதை இவர் சொல்வாராயின் இவருக்கு ஏற்பட்டுள்ள கோபம் போய் விடும், “ஷைத்தானிடமிருந்து அல்லாஹ்விடம் நான் பாதுகாப்புக் கோருகிறேன்’ என்று இவர் பிரார்த்தித்தால் இவருக்கு ஏற்பட்டுள்ள கோபம் போய்விடும்” என்று கூறினார்கள். ஆகவே, மக்கள் அந்த மனிதரிடம், “நபி (ஸல்) அவர்கள், “ஷைத்தானிடமிருந்துஅல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோரு’ என்று கூறினார்கள்” எனத் தெரிவித்தார்கள் அதற்கு அவர், “எனக்குப் பைத்தியம் பிடித்திருக்கிறதா?” என்று கேட்டார்.
அறிவிப்பவர் : சுலைமான் பின் சுரத் (ரலி)
நூல் : புகாரி (3282)
15.    கழுதையின் சப்தத்தை கேட்டால்..
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : நீங்கள் சேவல்கள் கூவுகின்ற சத்தத்தைக் கேட்டால் அல்லாஹ்விடம் அவனது அருளைக் கேளுங்கள்: ஏனெனில், அவை வானவரைப் பார்த்திருக்கின்றன. (அதனால் தான் கூவுகின்றன.) கழுதை கத்தும் சத்தத்தை நீங்கள் கேட்டால் ஷைத்தானிடமிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருங்கள். ஏனெனில், அது ஷைத்தானைப் பார்த்திருக்கின்றது. (அதனால் தான் கத்துகின்றது.)
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
நூல் : புகாரி (3303)
16.    குழந்தைக்காகப் பாதுகாப்புத் தேட வேண்டும்
ஷைத்தானிடமிருந்து நமது குழந்தைகளை பாதுகாக்குமாறு அல்லாஹ்விடம் வேண்டினால் அல்லாஹ் குழந்தைகளை பாதுகாப்பான்.
அவர் ஈன்றெடுத்த போது, “என் இறைவா! பெண் குழந்தையாக ஈன்றெடுத்து விட்டேனே” எனக் கூறினார். அவர் எதை ஈன்றெடுத்தார் என்பதை அல்லாஹ் நன்கறிவான். “ஆண், பெண்ணைப் போன்றவன் அல்ல. நான் இவளுக்கு மர்யம் என்று பெயரிட்டேன். விரட்டப்பட்ட ஷைத்தானை விட்டும் இவருக்கும், இவரது வழித் தோன்றல்களுக்கும் உன் பாதுகாப்பை வேண்டுகிறேன்” எனவும் அவர் கூறினார்.
அல்குர்ஆன் (3 : 36)
” “ஆதமின் மக்கüல் (புதிதாகப்) பிறக்கும் குழந்தை எதுவாயினும் அது பிறக்கும் போதே ஷைத்தான் அதைத் தீண்டுகிறான். ஷைத்தானின் தீண்டலால் அக்குழந்தை கூக்குரலெழுப்பும். மர்யமையும் அவருடைய மகனையும் தவிர’ என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொன்னார்கள்” என அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவித்து விட்டு பிறகு, ” நான் இக் குழந்தைக்காகவும் வருங்கால வழித்தோன்றலுக்காகவும் சபிக்கப்பட்ட ஷைத்தானை விட்டு உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்” என்னும் (மர்யமுடைய தாய் செய்த பிரார்த்தனையை கூறும்-என்ற 3:36-வது இறைவசனத்தை ஓதுவார்கள்.
அறிவிப்பவர் : சயீத் பின் முஸய்யப் (ரலி)
நூல் : புகாரி (3431)
நமது பிள்ளைகளுக்காக நாமே குர்ஆன் சூராக்களையும் நபி (ஸல்) அவர்கள் கற்றுக்கொடுத்த துஆக்களையும் வைத்து ஓதிப்பார்க்கலாம்.
நபி (ஸல்) அவர்கள், ஹஸன் (ரலி) மற்றும் ஹுஸைன் (ரலி) ஆகியோருக்காக (அல்லாஹ்விடம்) பாதுகாப்புக் கோரி வந்தார்கள். “அல்லாஹ்வின் முழுமையான (குணமüக்கும்) சொற்களைக் கொண்டு ஒவ்வொரு ஷைத்தானிடமிருந்தும் நச்சுப் பிராணியிடமிருந்தும் தீய எண்ணத்துடன் தீண்டும் (பொறாமைக்) கண்ணிலிருந்தும் அவனிடம் பாதுகாப்புக் கோருகின்றேன்” எனும் இந்தச் சொற்கüன் மூலம் உங்கள் இருவரின் தந்தை(யான இப்ராஹீம் (அலை) அவர்கள் தம் மகன்களான) இஸ்மாயீல் (அலை) மற்றும் இஸ்ஹாக் (அலை) ஆகியோருக்காகப் பாதுகாப்புக் கோரி வந்தார்கள்-என்று கூறுவார்கள்.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)
நூல் : புகாரி (3371)
17.    தகடு தாயத்துகளைத் தொங்கவிடுவது இணை வைப்பாகும்
குர்ஆன் வசனங்கள் எழுதப்பட்ட தாளை மடித்து தாவீஸாகத் தயாரித்து கழுத்திலும், கையிலும், இடுப்பிலும் பலர் மாட்டிக் கொள்கிறார்கள். குறிப்பிட்ட சில வார்த்தைகளைச் செம்புத் தகட்டில் எழுதி கடைகளில் தொங்க விடுகிறார்கள்.
என்னைப் பார் யோகம் வரும் என்று எழுதப்பட்ட கழுதையின் படத்தை கடைகளில் தொங்க விட்டிருக்கிறார்கள். இன்னும் சிலர் தட்டில் எதையோ எழுதி கறைத்துக் குடிக்கிறார்கள்.
அல்லாஹ்வின் மீது வைக்க வேண்டிய நம்பிக்கையை கையிற்றின் மீதும் செம்புத் தட்டின் மீதும் தாளின் மீதும் வைத்து விடுவதால் இது இணை வைப்பாகும். நபி (ஸல்) அவர்கள் இதை தடை செய்துள்ளார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடத்தில் (பைஅத் செய்வதற்காக பத்து பேர் கொண்ட) சிறு கூட்டம் ஒன்று வந்தது. அவர்களில் ஒன்பது நபர்களிடம் நபி (ஸல்) அவர்கள் உறுதிமொழி வாங்கினார்கள். ஒருவரிடம் உறுதிமொழி வாங்கவில்லை. மக்கள் அல்லாஹ்வின் தூதரே ஒன்பது பேர்களிடத்தில் உறுதிமொழி வாங்கினீர்கள். இவரை விட்டு விட்டீர்களே என்று கேட்டார்கள். அதற்கு நபியவர்கள் அவர் மீது தாயத்து உள்ளது என்று கூறினார்கள். அப்போது அந்த மனிதர் தன் கையை உள்ளே விட்டு அந்த தாயத்தைக் கழற்றினார். அவரிடத்தில் நபியவர்கள் பைஅத் செய்த பிறகு யார் தாயத்தைத் தொங்க விடுகிறானோ அவன் இணை வைத்து விட்டான் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : உக்பா பின் ஆமிர் (ரலி)
நூல் : அஹ்மத் (16781)
நபி (ஸல்) அவர்கள் ஒரு மனிதரின் கை புஜத்தில் மஞ்சல் நிற உலோகத்தால் ஆன வளயத்தைக் கண்டார்கள். உனக்கு என்ன ஆனது? இது வென்ன? என்று நபி (ஸல்) அவர்கள் (அவரிடம்) கேட்டார்கள். அதற்கு அவர் கை புஜத்தில் ஏற்பட்ட நோயின் காரணமாக (இதை அணிந்துள்ளேன்) என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள் (அவரிடம்) அறிந்து கொள். இது உனக்கு சிரமத்தைத் தவிர வேறெதையும் அதிகப்படுத்தாது. உன்னை விட்டு இது எரிந்துவிடு. இது உன்மீது இருக்கும் நிலையில் நீ மரணித்து விட்டால் ஒரு போதும் நீ வெற்றியடைய முடியாது என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : இம்ரான் பின் ஹுசைன் (ரலி)
நூல் : அஹ்மத் (19149)
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய பிரயாணம் ஒன்றில் அவர்களுடன் இருந்தேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தூதுவர் ஒருவரை அனுப்பி,”எந்த ஒட்டகத்தின் கழுத்திலும் (ஒட்டக வாரினால் ஆன, கண் திருஷ்டி கழிவதற்காகக் கட்டப்படுகின்ற) கயிற்று மாலையோ அல்லது (காற்று, கருப்பு விரட்டுவதற்காகக் கட்டப்படுகின்ற) வேறெந்த மாலையோ இருக்கக் கூடாது. அப்படியிருந்தால் கட்டாயம் அதைத் துண்டித்து விட வேண்டும்” என்று (பொது மக்கüடையே) அறிவிக்கச் செய்தார்கள்.
அறிவிப்பவர் : அபூ பஷீர் அல் அன்சாரீ (ரலி)
நூல் : புகாரி (3005)
18.    மார்க்கம் காட்டித்தராத முறையில் ஓதிப்பார்க்கக் கூடாது
ஓதிப் பார்ப்பதற்கு நபி (ஸல்) அவர்களிடம் சிலர் அனுமதி கேட்ட போது ஓதிப் பார்க்கும் முறையைத் தன்னிடம் கூறுமாறு நபியவர்கள் கூறினார்கள். அதில் குறை ஏதும் இல்லை என்று அவர்கள் அங்கீகாரம் அளித்த பிறகே ஓதிப் பார்ப்பதற்கு அனுமதியளித்தார்கள்.
எனவே நம் இஷ்டத்திற்கு ஆதாரமில்லாம் மனதில் தோன்றியவாரெல்லாம் ஓதிப்பார்க்கக் கூடாது. எப்படி ஓதிப்பார்க்க வேண்டும் என்று மார்க்கம் கற்றுத் தந்துள்ளது. அந்த அடிப்படையில் ஓதிப் பார்க்க வேண்டும்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஓதிப்பார்க்க வேண்டாமெனத் தடை விதித்தார்கள். அப்போது அம்ர் பின் ஹஸ்ம் குடும்பத்தார் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! தேள் கடிக்காக ஓதிப் பார்க்கும் வழக்கம் எங்களிடம் இருந்தது. (ஆனால்,) தாங்களோ ஓதிப் பார்க்க வேண்டாமெனத் தடை விதித்து விட்டீர்கள்!” என்று கூறினார்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அ(வர்கள் ஓதிப்பார்த்து வ)ந்த வாசகத்தைக் கூறுமாறு கேட்டார்கள். அவர்கள் அ(ந்த வாசகத்)தைக் கூறியபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நான் (இதில்) குறையெதையும் காணவில்லை. உங்களில் ஒருவரால் தம் சகோதரருக்குப் பயனளிக்க முடியுமானால் அவ்வாறே பயனளிக்கட்டும்!” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஜாபிர் (ரலிலி)
நூல் : முஸ்லிம் (4226)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : (தவறான முறையில்) ஓதிப் பார்க்கிறவர் அல்லது சூடுபோட்டுக் கொள்பவர் (அல்லாஹ்வின் மீது) நம்பிக்கை வைப்பதை விட்டும் விலகி விட்டார்.
அறிவிப்பவர் : முஃகீரா பின் ஷுஃபா (ரலி)
நூல் : திர்மிதி (1980)
19.    சூரத்துல் பாத்திஹாவை வைத்து ஓதிப் பார்க்கலாம்.
நபி (ஸல்) அவர்களுடைய தோழர்கüல் சிலர் (ஒரு பயணத்தின் போது) ஓர் அரபுக் குலத்தாரிடம் சென்றார்கள். அவர்களுக்கு அக்குலத்தார் விருந்தüக்க முன்வரவில்லை. இந்நிலையில் அக்குலத்தாரின் தலைவனுக்குத் தேள் கொட்டி விட்டது. அப்போது அக்குலத்தார் (நபித்தோழர்கüடம் வந்து) “உங்கüடம் (இதற்கு) மருந்து ஏதும் உள்ளதா? அல்லது ஓதிப் பார்ப்பவர் எவரும் இருக்கிறாரா?” என்று கேட்டனர். அதற்கு நபித்தோழர்கள், “நீங்கள் எங்களுக்கு விருந்தüக்க முன்வரவில்லை. ஆகவே, நீங்கள் எங்களுக்கு (ஒரு) குறிப்பிட்ட கூலியைத் தந்தாலே தவிர (வெறுமனே) உங்களுக்கு நாங்கள் ஓதிப் பார்க்க மாட்டோம்” என்று கூறினர்.
உடனே, நபித் தோழர்களுக்காக அக்குலத்தார் (முப்பது ஆடுகள் கொண்ட) ஓர் ஆட்டு மந்தையைக் கூலியாக நிர்ணயித்தார்கள். நபித் தோழர்கüல் ஒருவர் (எழுந்து சென்று) “குர்ஆனின் அன்னை’ எனப்படும் “அல்ஃபாத்திஹா’ அத்தியாயத்தை ஓதித் தமது எச்சிலைக் கூட்டி (கடிபட்ட இடத்தில்) உமிழ்ந்தார். உடனே அவர் வலி நீங்கி குணமடைந்தார். (பேசியபடி) அவர்கள் ஆடுகளைக் கொண்டு வந்(து கொடுத்)தனர். நபித்தோழர்கள், “நபி (ஸல்) அவர்கüடம் (அனுமதி) கேட்காத வரை இதை நாம் எடுத்துக் கொள்ளக் கூடாது” என்று (தமக்குள்) பேசிக்கொண்டு அவ்வாறே நபி (ஸல்) அவர்கüடம் (வந்து அனுமதி) கேட்டனர். நபி (ஸல்) அவர்கள் சிரித்துவிட்டு “அல் ஃபாத்திஹா’ அத்தியாயம் ஓதிப் பார்க்கத் தகுந்தது என்று உமக்கு எப்படித்தெரியும்? அந்த ஆடுகளை எடுத்துக் கொள்ளுங்கள்; எனக்கும் அதில் ஒரு பங்கு கொடுங்கள்” என்று சொன்னார்கள்.
அறிவிப்பவர் : அபூசயீத் அல்குத்ரீ (ரலி)
நூல் : புகாரி (5736)
20.    112, 113, 114 ஆகிய அத்தியாயங்களை ஓதி ஊதலாம்
நபி (ஸல்) அவர்கள் தமது படுக்கைக்கு (உறங்கச்) சென்றால் ஒவ்வோர் இரவிலும் தமது உள்ளங்கைகளை இணைத்து, அதில் “குல் ஹுவல்லாஹு அஹத்’, “குல் அஊது பிரப்பில் ஃபலக்’, “குல் அஊது பிரப்பின்னாஸ்’ ஆகிய (112, 113, 114) அத்தியாயங்களை ஓதி ஊதிக் கொள்வார்கள். பிறகு தம் இரு கைகளால் (அவை எட்டும் அளவிற்கு) தமது உடலில் இயன்ற வரையில் தடவிக் கொள்வார்கள். முதலில் தலையில் ஆரம்பித்து, பிறகு முகம், பிறகு தம் உடலின் முற்பகுதியில் கைகளால் தடவிக் கொள்வார்கள். இவ்வாறு மூன்று முறை செய்வார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)
நூல் : புகாரி (5017)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நோய்வாய்ப்பட்டு விட்டால் பாதுகாப்புக் கோரும் வசனங்களை(க் கொண்ட குர்ஆனின் கடைசி மூன்று அத்தியாயங்களை) ஓதித் தம் மீது ஊதி, தமது கையை (தம் உடல் மீது) தடவிக் கொள்வார்கள். நபி (ஸல்) அவர்கள் எந்த நோயில் இறந்து போனார்களோ அந்த நோயின் போது, அவர்கள் (ஓதி) ஊதிக் கொள்ளும் பாதுகாப்பு வசனங்களை நான் அவர்கள் மீது (ஓதி) ஊதலானேன். அதை நபி (ஸல்) அவர்கüன் (கையில் ஊதி அந்தக்) கையாலேயே அவர்கüன் (உடல்) மீது தடவலானேன்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)
நூல் : புகாரி (4439)
21.    நபியவர்கள் கற்றுக்கொடுத்த பிரார்த்தனைகளை வைத்து…
நோயாளி குணமாவதற்காக செய்ய வேண்டிய பிரார்த்தனையை நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தந்துள்ளார்கள். குழந்தைகள் நோயுறும் போது அவற்றை நாம் ஓதிக் கொள்ள வேண்டும்.
நானும் ஸாபித் பின் அஸ்லம் அல்புனானீ (ரஹ்) அவர்களும் அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கüடம் சென்றோம். ஸாபித் (ரஹ்) அவர்கள் “அபூஹம்ஸாவே! நான் நோய் வாய்ப்பட்டுள்ளேன்” என்று சொல்ல, அனஸ் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எதனால் ஓதிப் பார்த்தார்களோ அதனால் உங்களுக்கும் நான் ஓதிப் பார்க்கட்டுமா?” என்று கேட்டார்கள். ஸாபித் (ரஹ்), “சரி (அவ்வாறே ஓதிப் பாருங்கள்)” என்று சொல்ல, அனஸ் (ரலி) அவர்கள், “அல்லாஹும்ம ரப்பன்னாஸ்! முத்ஹிபல் பஃஸி, இஷ்ஃபி அன்த்தஷ் ஷாஃபீ, லா ஷாஃபிய இல்லா அன்த்த, ஷிஃபாஅன் லா யுஃகாதிரு சகமன்’ என்று கூறி ஓதிப் பார்த்தார்கள்.
(பொருள்: இறைவா! மக்களை இரட்சிப்பவனே! துன்பத்தைப் போக்குபவனே! குணமüப்பாயாக! நீயே குணமüப்பவன். உன்னைத் தவிர குணமüப்பவர் வேறு எவருமில்லை. அறவே நோய் இல்லாதவாறு குணமüப்பாயாக.)
அறிவிப்பவர் : அப்துல் அஸீஸ் பின் ஸுஹைப் (ரஹ்)
நூல் : புகாரி (5742)
உஸ்மான் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து (அல்லாஹ்வின் தூதரே) என்னை அழிக்கின்ற அளவிற்கு எனக்கு வலி ஏற்பட்டுள்ளது என்று கூறினார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (வலி ஏற்பட்ட இடத்தில்) ஏழு முறை தடவி அவூது பிஇஸ்ஸதில்லாஹி வகுத்ரதிஹீ மின் ஷர்ரீ மா அஜிது என்று கூறு என்று சொன்னார்கள்.
பொருள் : அல்லாஹ்வின் கண்ணியத்தின் பொருட்டாலும் அவனது ஆற்றலின் பொருட்டாலும் நான் அடைந்த தீங்கிலிருந்து (அவனிடம்) பாதுகாப்புத் தேடுகிறேன்.
நான் இவ்வாறு கூறினேன். எனக்கிருந்த வலியை அல்லாஹ் போக்கினான். எனது குடும்பத்தார்களுக்கும் மற்றவர்களுக்கும் இவ்வாறு செய்யுமாறு நான் ஏவிக் கொண்டே இருக்கிறேன்.
அறிவிப்பவர் : உஸ்மான் பின் அபில் ஆஸ் (ரலி)
நூல் : மாலிக் (1479)
22.    குழந்தைகளை வெளியில் விடக்கூடாத நேரம்
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : “இரவின் இருள் படரத் தொடங்கி விட்டால் உங்கள் குழந்தைகளை (வெüயே திரிய விடாமல்) தடுத்து விடுங்கள். ஏனெனில், ஷைத்தான்கள் அப்போதுதான் (பூமியெங்கும்) பரவி விடுகின்றன. இரவு வேளையில் சிறிது நேரம் கழிந்து விட்டால் அவர்களை (வெüயே செல்ல) விட்டு விடுங்கள்.
அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி)
நூல் : புகாரி (3280)
23.    இறைவனை அதிகம் நினைக்க வேண்டும்
இறைவனை மறந்தவரிடம் ஷைத்தான் நன்கு விளையாடுவான். இறைநினைவு உள்ளவரிடம் ஷைத்தான் நெருங்மாட்டான். எனவே இறைவனை அதிகமாக நினைவுகூற வேண்டும்.
எவர் அளவற்ற அருளாளனின் அறிவுரையைப் புறக்கணிக்கிறாரோ அவருக்கு ஒரு ஷைத்தானைச் சாட்டுவோம். அவன் அவருக்குத் தோழனாவான்.
அல்குர்ஆன் (43 : 36)
நம்பிக்கை கொண்டோரின் உள்ளங்கள் அல்லாஹ்வின் நினைவால் அமைதியுறுகின்றன. கவனத்தில் கொள்க! அல்லாஹ்வின் நினைவால் தான் உள்ளங்கள் அமைதியுறுகின்றன.
அல்குர்ஆன் (13 : 28)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : நீங்கள் அல்லாஹ்வை நினைவுகூற வேண்டும் என்று உங்களுக்கு வலியுறுத்திக் கூறிக்கொள்கிறேன். எதிரி ஒருவரை பின்தொடர்ந்து விரட்டிச் செல்கிறான். அவர் பாதுகாப்பான கோட்டைக்குள் நுழைந்து தன்னை எதிரிகளிடமிருந்து காத்துக்கொள்கிறார். அல்லாஹ்வை நினைப்பதற்கு உதாரணம் இதுவாகும். அடியான் அல்லாஹ்வை நினைப்பதின் மூலமே தன்னை ஷைத்தானிடமிருந்து காத்துக்கொள்ள முடியும் என்று யஹ்யா (அலை) அவர்கள் இஸ்ரவேலர்களுக்குக் கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஹாரிஸ் அல்அஷ்அரீ (ரலி)
நூல் : அஹ்மத் (2790)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ஒருவர் தமது இல்லத்திற்குள் நுழையும் போதும் உணவு உண்ணும்போதும் அல்லாஹ்வை நினைவுகூர்ந்தால், ஷைத்தான் (தன் கூட்டத்தாரிடம்), “இன்றைய இரவில் உங்களுக்கு (இங்கே) தங்குமிடமும் இல்லை; உண்ண உணவுமில்லை” என்று கூறுகிறான். ஒருவர் இல்லத்திற்குள் நுழையும் போது அல்லாஹ்வை நினைவுகூராவிட்டால் ஷைத்தான் (தன் கூட்டத்தாரிடம்), “இன்றைய இரவில் உங்களுக்குத் தங்குமிடம் கிடைத்துவிட்டது” என்று சொல்கிறான்.
அவர் உணவு உண்ணும்போது அல்லாஹ்வின் பெயர்கூறாவிட்டால் ஷைத்தான் “இன்றைய இரவில் நீங்கள் தங்கும் இடத்தையும் உணவையும் அடைந்துகொண்டீர்கள்” என்று சொல்கிறான்.
அறிவிப்பவர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலிலி)
நூல் : முஸ்லிம் (4106)
24.    இறைத்தூதர் கற்றுத்தந்தவாறு நினைக்க வேண்டும்
இன்றைக்கு திக்ர் என்ற பெயரில் பல்வேறு அநாச்சாரங்கள் அறங்கேற்றப்பட்டுக்கொண்டிருக்கிறது. இருட்டறையில் கும்பலாக பள்ளிவாசல் அதிறும் அளவிற்கு கத்துகிறார்கள். அல்லாஹ் என்று கூறாமல் ஆஹ் என்றும் ஹு அல்லாஹ் ஹு ஹு அல்லாஹ் என்றும் அர்த்தமில்லாத வார்த்தைகளை கூறி இறைதியானத்தை கொச்சைப்படுத்திக்கொண்டிருக்கிறார்கள்.
இவையெல்லாம் ஷைத்தானுடைய செயல்களாகும். இவ்வாறு செய்தால் ஷைத்தானின் வலையில் விழலாமே தவிர ஷைத்தானிடமிருந்து பாதுகாப்பு பெய இயலாது. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கற்றுத்தந்த வார்த்தைகளை கூறுவதன் மூலம் அவனிடமிருந்து பாதுகாப்பு பெற முடியும்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : “வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் இல்லை. அவன் தனித்தவன். அவனுக்கு இணை யாரும் இல்லை. அவனுக்கே ஆட்சியதிகாரம் உரியது. அவனுக்கே புகழ் அனைத்தும் உரியது. அவன் எல்லாவற்றிற்கும் வலிமையுடையவன் – லா இலாஹ இல்லல் லாஹ், வஹ்தஹு லாஷரீக்க லஹு, லஹுல் முல்க்கு வ லஹுல் ஹம்து, வ ஹுவ அலா குல்லி ஷய்இன் கதீர் – என்று எவர் ஒரு நாüல் நூறு முறை சொல்கிறாரோ அவருக்கு, அது பத்து அடிமைகளை விடுதலை செய்வதற்குச் சமமா(க நற்பலன் பெற்றுக் கொடுப்பதா)கும். மேலும், அவருக்கு நூறு நன்மைகள் எழுதப்படும். அவரது கணக்கிலிருந்து (அவர் புரிந்த) நூறு தீமைகள் அழிக்கப்படும். மேலும், அவருடைய அந்த நாüல் மாலை நேரம் வரும் வரை ஷைத்தானிடமிருந்து (பாதுகாக்கும்) அரணாக அது அவருக்கிருக்கும். மேலும், அவர் புரிந்த சிறந்த நற்செயலை எவரும் செய்ய முடியாது; ஒருவர் இதை விட அதிகமான (தடவைகள் இதை ஓதினால் அல்லது மிக முக்கியமான) ஒரு நற்செயல் புரிந்தாலே தவிர.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
நூல் : புகாரி (3293)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஃபாத்திமா (ரலி) அவர்களிடம் கூறினார்கள் : லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீக்க லஹு என்று காலையில் நீ கூறினால் மாலையில் மறுபடியும் நீ இதை கூறும் வரை ஒவ்வொரு ஷைத்தானிடமிருந்தும் எல்லா தீமையிலிருந்தும் உனக்குப் பாதுகாப்பாக அமையும்.
பொருள் : அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை. அவன் தனித்தவன். அவனுக்கு நிகராக யாருமில்லை.
அறிவிப்பவர் : உம்மு சலமா (ரலி)
நூல் : அஹ்மத் (25340)
25.    நற்குணங்களை வளர்த்துக்கொள்ள வேண்டும்
இறைநம்பிக்கை இறையச்சம் மனத்தூய்மை போன்ற நற்குணங்களை வளர்த்துக்கொண்டால் ஷைத்தான் நம்மை வழிகெடுக்க முடியாது.
எனது அடியார்களில் உன்னைப் பின்பற்றிய வழிகேடர்களைத் தவிர மற்றவர்கள் மீது உனக்கு எந்த அதிகாரமும் இல்லை.
அல்குர்ஆன் (15 : 42)
நம்பிக்கை கொண்டோர் மீதும், தமது இறைவனையே சார்ந்திருப்போர் மீதும் அவனுக்கு (ஷைத்தானிற்கு) அதிகாரம் இல்லை.
அல்குர்ஆன் (16 : 99)
(இறைவனை) அஞ்சுவோருக்கு ஷைத்தானின் தாக்கம் ஏற்பட்டால் உடனே சுதாரித்துக் கொள்வார்கள்! அப்போது அவர்கள் விழித்துக் கொள்வார்கள்.
அல்குர்ஆன் (7 : 201)
26.    ஃபஜர் தொழுக வேண்டும்
ஃபஜர் தொழுகை நமக்கு உற்சாகத்தையும் சுறுசுறுப்பையும் ஏற்படுத்துகிறது. ஃபஜர் தொழுகாவிட்டால் ஷைத்தானின் வலையில் மனிதன் விழுந்துவிடுகிறான். ஷைத்தான் அவனுக்கு சோம்பலையும் குழப்பத்தையும் ஏற்படுத்துகிறான்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : உங்களில் ஒருவர் உறங்கும்போது உங்கள் தலையின் பின்பக்கத்தில் ஷைத்தான் மூனு முடிச்சுகளைப் போட்டுவிடுகிறான். ஒவ்வொரு முடிச்சின்போதும் “இன்னும் உனக்கு நீண்ட இரவு (ஓய்வெடுக்க எஞ்சி) இருக்கிறது. ஆகவே, நீ உறங்கு’ என்று கூறி (உங்களை விழிக்கவிடாமல் உறங்க வைத்து)விடுகிறான். நீங்கள் (அவனது கூற்றை ஏற்காமல்) கண்விழித்து அல்லாஹ்வை நினைவு கூர்ந்தால் ஒரு முடிச்சு அவிழ்ந்து விடுகிறது. நீங்கள் அங்கசுத்தி (உளூ) செய்தால் மற்றொரு முடிச்சு அவிழ்ந்துவிடுகிறது. நீங்கள் தொழுது விட்டால் முடிச்சுகள் முழுவதும் அவிழ்ந்துவிடுகிறது. நீங்கள் சுறுசுறுப்புடனும் உற்சாகத்துடனும் காலைப் பொழுதை அடைவீர்கள். இல்லையெனில் மனக்குழப்பத்துடனும், சோம்பலுடனும் காலைப் பொழுதை அடைவீர்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலிலி)
நூல் : புகாரி (1142)
நபி (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் பொழுது விடியும் வரை (தொழுகைக்கு எழாமல்) உறங்கிக் கொண்டேயிருப்பது பற்றிக் கூறப்பட்டது. அப்போது நபி (ஸல்) அவர்கள், “அவரது காதில் ஷைத்தான் சிறுநீர் கழித்துவிட்டான்” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலிலி)
நூல் : புகாரி (1144)
27.    குர்ஆன் ஓத வேண்டும்
வீடுகளில் நற்காரியங்களை அதிகமாக செய்வதன் மூலம் ஷைத்தானை விரட்டலாம். இது தான் ஷைத்தானை விரட்டுவதற்கான வழியாகும். இதை அறியாத பலர் பல்வேறு விதமான மூடநம்பிக்கைகளிலும் இணைவைப்புக்காரியங்களிலும் ஈடுபடுகிறார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : உங்கள் இல்லங்களை (தொழுகை, ஓதல் நடைபெறாத) சவக் குழிகளாக ஆக்கிவிடாதீர்கள். “அல்பகரா’ எனும் (இரண்டாவது) அத்தியாயம் ஒதப்படும் இல்லத்திலிருந்து ஷைத்தான் வெருண்டோடிவிடுகிறான்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலிலி)
நூல் : முஸ்லிம் (1430)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : “அல்பகரா’ எனும் (2ஆவது) அத்தியாயத்தின் இறுதி இரு வசனங்களை (285, 286) எவர் இரவில் ஓதுகின்றாரோ அவருக்கு அந்த இரண்டுமே போதும்!
அறிவிப்பவர் : அபூ மஸ்ஊத் (ரலி)
நூல் : புகாரி (5040)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : வானங்கள் மற்றும் பூமியை படைப்பதற்கு இரண்டாயிரம் வருடத்திற்கு முன்பு அல்லாஹ் ஒரு புத்தகத்தை எழுதினான். அதிலிருந்து இரு வசனங்களை சூரா அல்பகராவின் இறுதியில் அல்லாஹ் அருளியுள்ளான். மூன்று இரவுகள் ஒரு வீட்டில் அவை ஓதப்பட்டால் அவ்வீட்டை ஷைத்தானால் நெருங்க முடியாது.
அறிவிப்பவர் : நுஃமான் பின் பஷீர் (ரலி)
நூல் : திர்மிதி (2807)
28.    சஜ்தாவை அதிகப்படுத்த வேண்டும்
சஜ்தா செய்யாத காரணத்தால் தான் ஷைத்தான் வழிகெட்டான். அந்த சஜ்தாவை இறைவனுக்கு நாம் அதிகமாக செய்தால் ஷைத்தான் அழ ஆரம்பிக்கிறான். நம்மை விட்டு விலகிச் செல்கிறான்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ஆதமின் மைந்தன் (-மனிதன்) சஜ்தா (சிரவணக்கத்திற்கான) வசனத்தை ஓதி சிரவணக்கம் (சஜ்தா) செய்தால் ஷைத்தான் அழுதவாறே “அந்தோ எனக்கு வந்த நாசமே! ஆதமின் மைந்தன் சிரவணக்கம் செய்யும்படி கட்டளையிடப்பட்டான். அவன் சிரவணக்கம் செய்துவிட்டான். அவனுக்குச் சொர்க்கம் கிடைக்கப்போகிறது. ஆனால் (ஆதி மனிதர் ஆதமுக்குச்) சிரம் பணியும்படி எனக்குக் கட்டளையிடப்பட்டது. நானோ மறுத்து விட்டேன். எனவே, எனக்கு நரகம்தான்” என்று கூறியபடி விலகிச்செல்கிறான்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலிலி)
நூல் : முஸ்லிம் (133)
29.    தொழும் போது வேறு காரியங்களில் ஈடுபடக்கூடாது
தொழுதுகொண்டிருக்கும்போது திரும்பிப் பார்ப்பது குறித்து நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கüடம் கேட்டேன். அதற்கு அவர்கள், “அ(வ்வாறு செய்வ)து ஓர் அடியாருடைய தொழுகையை ஷைத்தான் பறித்துச் செல்வ(தற்கு வழிவகுப்ப)தாகும்” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)
நூல் : புகாரி (751)
30.    தொழும் போது யாரையும் குறுக்கே செல்லவிடக் கூடாது
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : நீங்கள் தொழுது கொண்டிருக்கும் போது உங்கள் முன்னால் எவராவது நடந்து செல்ல முனைந்தால் அவரைத் தடுங்கள். அவர் (விலகிக் கொள்ள) மறுத்தால் அப்போதும் அவரைத் தடுங்கள். அவர் (மீண்டும் விலக) மறுத்தால் அப்போது அவருடன் சண்டையி(ட்டுத் த)டுங்கள். ஏனெனில், அவன் தான் ஷைத்தான்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
நூல் : புகாரி (3274)
31.    ஸஃப்பை நெருக்கமாக்கிக் கொள்ள வேண்டும்
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : (தொழுகையில்) உங்கள் வரிசைகளை நேராக்குங்கள். நெருக்கமாக நில்லுங்கள். (உங்கள்) கழுத்துகளை நேராக அமைத்துக்கொள்ளுங்கள். முஹம்மதுடைய உயிர் எவனது கைவசம் உள்ளதோ அந்த இறைவனின் மீதாணையாக ஆட்டுக்குட்டிகளைப் போன்று ஷைத்தான்கள் வரிசைகளுக்கிடையில் நுழைவதை நான் காண்கிறேன்.
அறிவிப்பவர் : அனஸ் (ரலி)
நூல் : நஸயீ (806)

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

1.கணவனைக் கவரும் வழிகள் 40

பத்ருப் போர் உணர்த்தும் பாடமும் படிப்பினைகளும்!

மண்ணறை வேதனை 001