தவ்ஹீத் (ஏகத்துவம்)என்றால் என்ன

 *தவ்ஹீத் என்றால் என்ன என்பதை புரிந்து கொள்வோம்*

👇👇👇👇👇

தவ்ஹீத் என்றால் ஏகத்துவம் ஒருமைப்படுத்துதல் என்பதாகும். அதாவது வணக்கத்திற்கு தகுதி உள்ளவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லை என்று நம்புவதுடன் அவனன்றி வணங்கப்படக்கூடிய அனைத்தையும் விட்டு விட வேண்டும். இன்னும் அல்லாஹ்விற்கு மாத்திரம் உள்ள பண்புகளை அல்லாஹ்விற்கு மாத்திரம் செலுத்துவதுமாகும்.


ஒரு முஸ்லிம் முதன் முதலில் தெரிந்து கொள்ள வேண்டியது இதுதான். இதுதான் இஸ்லாத்தின் அடிப்படையாகும். இதில் தவறிழைப்பவர் மார்க்கத்திலேய தவறிழைத்து விட்டார். இதனால்தான் நபிமார்கள் எந்த சமுதாயத்துக்கெல்லாம் அனுப்பப்பட்டார்களோ அவர்கள் அந்த சமுதாயத்துக்கு முதலில் ஏவியதெல்லாம் இந்த ஏகத்துவத்தைப்பற்றித்தான். அல்லாஹ் திருமறையில் இவ்வாறு கூறுகின்றான்.


ஒவ்வொரு சமூகத்திலும் திட்டமாக நாம் ஒரு தூதரை அனுப்பியிருக்கின்றோம் (அத்தூதர் அச்சமூகத்தவர்களிடம்) அல்லாஹ்வையே வணங்குங்கள் (அல்லாஹ் அல்லாத வணங்கப்படும் ஷைத்தான்களாகிய அனைத்து) தாகூத்திலிருந்தும் நீங்கள் விலகிக்கொள்ளுங்கள். (16:36)


ஏகத்துவத்தைக் குறிக்கும் ஆயத்துக்கள்:- (51:56) (17:23) (4:36) (6:151,153) (2:256)


நபி (ஸல்) அவர்களும் நபித்துவம் கிடைத்த பின் மக்கா வாழ்க்கையில் அதிக காலத்தை இந்த ஏகத்துவத்தைப் பரப்புவதற்காகவே ஈடுபட்டிருந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் முஆத் (ரலி) அவர்களை யமன் நாட்டிற்கு பொறுப்பாளியாக அனுப்பும் போது நீங்கள் வேதங்கொடுக்கப்பட்ட ஒரு சமூகத்திடம் செல்கின்றீர்கள். அவர்களிடம் முதலில் அல்லாஹ்வைத் தவிர வணங்கப்படுவதற்கு வேறு இறைவன் யாரும் இல்லையென்றும் முஹம்மது (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்றும் சொல்லுங்கள் எனக்கூறும்படி கட்டளையிட்டார்கள். 


ஆகவே! ஏகத்துவத்தைப்பற்றித்தான் நாமும் முதன் முதலில் மக்களுக்கு சொல்ல வேண்டும். இதில் தவறிழைத்துக் கொண்டு எவ்வளவு நல் அமல்கள் செய்தாலும் அது வீணானதே. காரணம் ஏகத்துவத்தில் தவறிழைப்பவர் அல்லாஹ்வுக்கு இணைவைத்தவராகி விடுகின்றார். அல்லாஹ்வுக்கு இணைவைப்பவாரின் அமல்கலெல்லாம் அழிக்கப்படுவதாக அல்லாஹ் கூறுகின்றான்.


(நபியே!) நீர் இணைவைத்தால் நிச்சயமாக உம்முடைய செயல்(கள் யாவும்) அழிந்து விடும் நிச்சயமாக நீர் நஷ்டமடைபவர்களிலும் ஆகிவிடுவீர் என உமக்கும் உமக்கு முன்னிருந்தவர்களுக்கும் (வஹீ) அறிவிக்கப்பட்டது.(39:65)


நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வுக்கு இணைவைக்கமாட்டார்கள் என்பது நிச்சயமாக அல்லாஹ்வுக்குத் தெரியும். அப்படியிருந்தும் நபியவர்களுக்கே இந்த எச்சரிக்கையென்றால் நம்போன்றவர்களைப்பற்றி என்ன சொல்வது! சிந்தியுங்கள்... நம்மில் எத்தனையோ பேர் ஹஜ் கடமையை முடித்து விட்டு நபி (ஸல்) அவர்களின் கப்ருக்குச் சென்று நபியவர்களிடம் பாவமன்னிப்புத் தேடுபவர்கள் இருக்கின்றார்கள். இவர்களின் ஹஜ்ஜின் நிலை என்ன? இன்னும் இவர்கள் போன்ற எத்தனையோ முஸ்லிம்களின் நிலை என்ன?


இன்னும் ஷிர்க் வைப்பவர் தவ்பா செய்யாமல் மரணித்து விட்டால் அவருக்கு நிரந்தர நரகமே. நம் சமூகத்தில் அதிகமானவர்கள் இப்படிப்பட்ட ஷிர்க்கான காரியங்களில் ஈடுபட்டிருக்கின்றார்கள். அவர்களுக்கு இத்தவறை உணர்த்துவது நம் அனைவரின் கட்டாயக் கடமையாகும். அல்லாஹ் நம் அனைவரையும் ஷிர்க்கான எல்லாக் காரியங்களிலிருந்தும் பாதுகாப்பானாக.


#ஏகத்துவம் மூன்று வகைப்படும்


1. படைக்கும் விஷயத்தில் அல்லாஹ்வை ஒருமைப்படுத்துவது.


2. வணக்க விஷயத்தில் அல்லாஹ்வை ஒருமைப்படுத்துவது.


3. பெயர் இன்னும் அவனுக்குரிய தன்மை விஷயத்தில் அல்லாஹ்வை ஒருமைப்படுத்துவது.


முதல் வகை


படைக்கும் விஷயத்தில் அல்லாஹ்வை ஒருமைப்படுத்துவது


படைக்கும் விஷயத்தில் அல்லாஹுவை ஒருமைப்படுத்துவதென்பது இவ்வுலகத்தையும் இவ்வுலகத்திலுள்ளவைகளையும் படைத்தவன் அல்லாஹ் ஒருவன் மாத்திரமே. இவைகளைப்படைக்கும் விஷயத்தில் அல்லாஹ்வோடு அல்லாஹ்வின் வேறு எந்தப்படைப்பும் சம்மந்தப்படவில்லை என்று நம்புவது.


நபியவர்களின் காலத்தில் வாழ்ந்த இணைவைப்பாளர்கள் உட்பட இவ்வுலகத்தை படைத்து பாரிபாலிப்பது அல்லாஹ் மாத்திரம்தான் என்பதை ஏற்றுக்கொண்டிருந்தார்கள். அப்படி நம்பியிருந்தும் அவர்களை குர்ஆன் முஷ்ரிக்கீன்கள் எனக்கூறுகின்றது. காரணம் அவர்கள் மற்ற ஏகத்துவ வகைகளில் அல்லாஹ்வுக்கு இணைவைத்திருந்தார்கள்.


இந்த வகையை மாத்திரம் ஏகத்துவப்படுத்தி மற்ற இரு வகையையோ அல்லது அதில் ஒன்றையோ மறுத்தால் அவர் அல்லாஹுவுக்கு இணை வைத்தவராகவே கருதப்படுவார். மற்ற இரு வகைகளையும் ஏற்றுக்கொள்ள மறுத்த மக்கா முஷ்ரிக்கீன்கள் அல்லாஹுதான் இவ்வுலகத்தை படைத்தான் என்று எற்றுக்கொண்டிருந்தார்கள் என்பதை அறிவிக்கும் இறை வசனங்கள்.


வானத்திலிருந்தும் பூமியிலிருந்தும் உங்களுக்கு உணவளிப்பவன் யார்? 

அல்லது செவிப்புலனையும் பார்வைகளையும் சொந்தமாக்கிக் கொண்டிருப்பவன் யார்? இறந்ததிலிருந்து உயிருள்ளதை வெளிப்படுத்துபவனும் உயிருள்ளதிலிருந்து இறந்ததை வெளிப்படுத்துபவனும் யார்? (அகிலத்தாரின்) சகல காரியங்களைத்திட்டமிட்டு நிகழ்த்துபவனும் யார்? 

என (நபியே!) நீர் (அவர்களைக்) கேட்பீராக! அ(தற்க)வர்கள் அல்லாஹ்தான் என்று கூறுவார்கள். அவ்வாறாயின் (அவனுக்கு) நீங்கள் பயப்படமாட்டீர்களா? என்று நீர் கூறுவீராக. (10:31)


(நபியே!) அவர்களிடம் வானங்களையும் பூமியையும் படைத்தவன் யார்? என்று நீர் கேட்டால் (யாவையும்) மிகைத்தவன் நன்கறிகிறவன் (ஆகிய அல்லாஹ்) தான் அவைகளை படைத்தான் என்று நிச்சயமாக அவர்கள் (பதில்) கூறுவார்கள். (43:9)


(அன்றி) ஏழு வானங்களின் இரட்சகனும் மகத்தான அர்ஷின் இரட்சகனும் யார்? என்று (நபியே!) நீர் கேட்பீராக! அ(தற்க)வர்கள் (அவையாவும்) அல்லாஹ்வுக்கே உரியன என்று கூறுவார்கள். (அவ்வாறாயின்) நீங்கள் (அவனுடைய தண்டனையை) பயப்படமாட்டீர்களா? என்று நீர் கூறுவீராக. (23:86,87)


இரண்டாவது வகை


வணக்க விஷயத்தில் அல்லாஹ்வை ஒருமைப்படுத்துவது


அதாவது வணக்கத்திற்கு தகுதி உள்ளவன் அல்லாஹுவைத்தவிர வேறு யாரும் இல்லை என்று நம்புவதுடன் அவனன்றி வணங்கப்படக்கூடிய அனைத்தையும் விட்டு விட வேண்டும் நபிமார்கள் அனுப்பப்பட்ட நோக்கமே இந்த வகையை மக்களுக்கு அறிவிப்பதற்குத்தான்.


ஒவ்வொரு சமூகத்திலும் திட்டமாக நாம் ஒரு தூதரை அனுப்பியிருக்கிறோம் (அத்தூதர் அச்சமூகத்தவர்களிடம்) அல்லாஹ்வையே வணங்குங்கள் (அல்லாஹ் அல்லாத வணங்கப்படும் ஷைத்தான்களாகிய அனைத்து) தாகூத்திலிருந்தும் நீங்கள் விலகிக்கொள்ளுங்கள் (என்று கூறினார்கள்). (16:36)


வணக்கம் என்பது தொழுகை நோன்பு ஸக்காத் ஹஜ் போன்றவைகள் மட்டும் அல்ல எவைகளையெல்லாம் அல்லாஹுவுக்கு மாத்திரம் செய்யவேண்டுமென்று குர்ஆனிலும் ஹதீஸிலும் சொல்லப்பட்டிருக்கின்றதோ அவைகலெல்லாம் வணக்கம்தான். அவைகள் எல்லாவற்றையும் அல்லாஹுவுக்காக மாத்திரமே செய்ய வேண்டும். அவைகளில் எதையாவது ஒன்றை அல்லாஹ்வின் படைப்புக்கு செலுத்தினால் அதற்கு ஷிர்க் (இணைவைத்தல்) என்று சொல்லப்படும்.


வணக்கம் இரண்டு வகைப்படும்


1. உள்ளத்தால் செய்யும் #வணக்கம்


2. உறுப்புக்களால் செய்யும் #வணக்கம்


உள்ளத்தால் செய்யும் வணக்கத்திற்கு சில உதாரணங்கள்


அல்லாஹ்வை மாத்திரம் #ஈமான் கொள்வது அல்லாஹ்வை மாத்திரம் அஞ்சுவது அல்லாஹ்வை மாத்திரம் எந்த ஒரு விஷயத்திலும் ஆதரவு வைப்பது அல்லாஹ்விடத்தில் மாத்திரம் தவக்குல் வைப்பது இன்னும் இது போன்றவைகள். இவைகள் அல்லாஹ்வுக்குத்தான் செய்ய வேண்டும் என்பதற்கு குர்;ஆனின் ஆதாரங்கள்.


அல்லாஹ்வை மாத்திரம் #ஈமான் கொள்வதற்கு ஆதாரம்:


விசுவாசங்கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் அவன் தன்னுடைய (இத்)தூதர் மீது இறக்கிவைத்த இவ்வேதத்தையும் (இதற்கு) முன்னர் அவன் இறக்கிய வேதங்களையும் விசுவாசியுங்கள். (4:136)


அல்லாஹ்வை மாத்திரம் நேசிப்பதற்கு ஆதாரம்:


(நபியே! மனிதர்களிடம்) நீர் கூறுவீராக நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பவர்களாக இருந்தால் என்னை நீங்கள் பின்பற்றுங்கள் (அவ்வாறு நீங்கள் செய்தால்) உங்களை அல்லாஹ் நேசிப்பான். (3:31)


அல்லாஹ்வை மாத்திரம் அஞ்சுவதற்கு ஆதாரம்:


இது ஒரு ஷைத்தான்தான் அவன் தன் நண்பர்களைப்பற்றி (அவர்கள் பலசாலிகள் கடுமையானவர்கள் என) உங்களைப் பயப்படுத்துகிறான். ஆகவே நீங்கள் (உண்மை) விசுவாசிகளாக இருந்தால் அவர்களுக்கு பயப்பட வேண்டாம் எனக்கே பயப்படுங்கள்.(4:175)


அல்லாஹ்விடத்தில் மாத்திரம் தவக்குல் வைக்க வேண்டும் என்பதற்கு ஆதாரம்


நீங்கள் விசுவாசிகளாக இருந்தால் (உங்கள் காரியங்களை ஒப்படைத்து முழுமையாக) அல்லாஹ்வின்மீதே நம்பிக்கை வையுங்கள். (5:23)


இன்னும் (32:48) (65:3) (14:12) போன்ற வசனங்களை பார்வையிடுக


அல்லாஹ்வின் மீது மாத்திரமே ஆதரவு வைக்க வேண்டும் என்பதற்கு ஆதாரம்


எவர் தன் இரட்சகனை சந்திக்க ஆதரவு வைக்கிறாரோ அவர் நற்கருமங்களைச் செய்யவும். (18:110)


இன்னும் (33:21) (21:90) (94:7,8) போன்ற வசனங்களை பார்வையிடுக.


உறுப்புக்களால் செய்யும் வணக்கத்திற்கு உதாரணம்


1. துஆ செய்வது


சிறிய காரியமாக இருந்தாலும் சரி பெரிய காரியமாக இருந்தாலும் சரி அல்லாஹ்விடத்திலேயே மாத்திரம் பிரார்த்தனை செய்ய வேண்டும் அவன் மாத்திரமே நம் தேவைகளை நிறைவு செய்து தர முடியும். அவனுடைய படைப்புகளால் நமது தேவைகளை செய்து தரமுடியாது. 


அப்படி செய்வோமேயானால் நாம் அல்லாஹ்வுக்கு இணை வைத்த குற்றவாளிகளாகி விடுவோம். இன்று நமது முஸ்லிம்களில் அதிகமானோர் அல்லாஹ்விடத்தில் மாத்திரம் கேட்காமல் அல்லாஹ்வின் படைப்புகளாகிய நல்லடியார்களிடத்தில் தங்களின் தேவைகளை கேட்கின்றார்கள் இது முற்றிலும் அல்லாஹ்வுக்கு இணைவைக்கும் செயலாகும். இணைவைப்பதற்கு கிடைக்கும் தண்டனையைப்பற்றி அதற்குரிய இடத்திலே கூறுகின்றேன்.


அல்லாஹ்விடத்தில் மாத்திரம்தான் துஆ கேட்க வேண்டும் என்பதற்கு ஆதாரம்:


அன்றியும் நிச்சயமாக மஸ்ஜிதுகள் அல்லாஹ்வுக்காக இருக்கின்றன எனவே (அவற்றில்) அல்லாஹ்வுடன் (சேர்த்து வேறு) எவரையும் நீங்கள் பிரார்த்திக்காதீர்கள். (72:18)


இன்னும் (2:186) (3:135) (27:62) போன்ற வசனங்களையும் பார்வையிடுக.


2. நேர்ச்சை செய்வது


நேர்ச்சையையும் அல்லாஹ்வுக்கு மாத்திரமே நிறைவேற்ற வேண்டும் இன்று முஸ்லிம்களில் அதிகமானோர் அவர்களுக்கு ஏதாவது பிரச்சினை வந்து விட்டால் போதும் அந்த பிரச்சினையிலிருந்து தீர்வு கிடைக்க வேண்டுமென்ற நோக்கத்தில் ஏதோ ஒரு அவ்லியாவின் பெயரில் நேர்ச்சை செய்து அதை நிறைவேற்றியும் விடுகின்றார்கள். இது மாபெரும் ஷிர்க்காகும். அல்லாஹ்வுக்கு மாத்திரமே நேர்ச்சை செய்ய வேண்டும் என்பதற்கு ஆதாரம்.


இன்னும் செலவு வகையிலிருந்து நீங்கள் என்ன செலவு செய்தாலும் அல்லது நேர்ச்சைகளில் எந்த நேர்ச்சை செய்தாலும் நிச்சயமாக அல்லாஹ் அதனை நன்கறிவான். (2:265)


விளக்கம்:- நேர்ச்சை அல்லாஹ்வுக்குரிய வணக்கம் என்பதினால்தான் அதை அவன் நன்கறிந்து அதற்குரிய கூலியை கொடுப்பதாக கூறுகின்றான்.


இவர்கள் (தங்கள்) நேர்ச்சையை நிறைவேற்றுவார்கள். (76:7)


விளக்கம்:- அல்லாஹ் முஃமின்களின் பண்புகளை கூறும் போது அவர்கள் செய்த நேர்ச்சையை அல்லாஹ்வின் பெயரால் நிறைவேற்றுவார்கள் என்று கூறுகின்றான். ஆகவே நேர்ச்சை என்பது அல்லாஹ்வுக்குரிய வணக்கம்தான் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.


யார் அல்லாஹ்வுக்கு அடிபணிவதாக நேர்ச்சை செய்கின்றார்களோ அதை நிறைவேற்றட்டும் யார் அல்லாஹ்வுக்கு மாறு செய்வதாக நேர்ச்சை செய்கின்றார்களோ அதை நிறைவேற்றக்கூடாது என்பதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)


3. உதவி தேடுவது


நாம் உதவி தேடும் போதும் அல்லாஹ்விடத்தில் மாத்திரமே உதவி தேட வேண்டும் அல்லாஹ் குர்ஆனில் இவ்வாறு கூறுகின்றான். (இறைவா!) உன்னையே நாங்கள் வணங்குகிறோம் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம். (1:4)


நீ கேட்டால் அல்லாஹ்விடத்திலேயே கேள் இன்னும் நீ உதவி தேடினால் அல்லாஹ்-விடத்திலேயே உதவியும் தேடு என்பதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (திர்மிதி)


4. சத்தியம் செய்வது


சத்தியம் செய்வதாக இருந்தால் அல்லாஹ்வின் மீதே சத்தியம் செய்ய வேண்டும். அல்லாஹ்வின் எந்த படைப்பின் மீதும் சத்தியம் செய்யக்கூடாது. யார் அல்லாஹ் அல்லாத ஒன்றின் மீது சத்தியம் செய்கின்றாரோ அவர் அல்லாஹ்வின் மீது உறுதியாக இணைவைத்து விட்டார் என்பதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.


5. குர்பானி கொடுப்பது


நிச்சயமாக என்னுடைய தொழுகையும் என்னுடைய அறுப்பு(குர்பானியு)ம் என் வாழ்வும் என் மரணமும் அகிலத்தாரின் இரட்சகனாகிய அல்லாஹ்வுக்கே உரித்தானவையாகும் என்று (நபியே) நீர் கூறுவீராக. (6:162)


ஆகவே நீர் உமதிரட்சகனைத் தொழுது இன்னும் (குர்பானியம் கொடுத்து அதை) அறுப்பீராக. (108:2)


அல்லாஹ் அல்லாத ஒன்றுக்காக யார் குர்பானி கொடுக்கின்றாரோ அவருக்கு அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்‎)


6. ருகூவு சுஜுது


ருகூவு என்பது தலை சாய்ப்பது சுஜுது என்பது தலையை தரையில் வைப்பது இவ்விரண்டையும் அல்லாஹ் அன்றி வேறு யாருக்கும் செய்யக்கூடாது. இன்று முஸ்லிம்களில் பலர் அரசியல் தலைவர்களுக்கும் பிள்ளைகள் தாய் தந்தைக்கும் மனைவி கணவனுக்கும் ருகூஉ சுஜுது செய்கின்றார்கள் இதுவும் ஷிர்க்காகும்.


விசுவாசங்கொண்டோரே! நீங்கள் (குனிந்து) ருகூஉச் செய்யுங்கள் இன்னும் (சிரம்பணிந்து) சுஜுதும் செய்யுங்கள் இன்னும் உங்கள் இரட்சகனை வணங்குங்கள் மேலும் நீங்கள் வெற்றியடைவதற்காக நன்மையைச் செய்யுங்கள். (22:77)


7-தவாபு செய்தல்


(ஹஜ்ஜின் அடிப்படைக் கடமையான தவாபை நிறைவேற்ற) பூர்வீக ஆலயமான (கஃபா எனும்) வீட்டையும் அவர்கள் (தவாபு செய்ய) சுற்றி வரவும். (22:29)


மேலே கூறப்பட்ட வணக்கங்களைப்போல் இன்னும் குர்ஆனிலும் ஹதீஸிலும் கூறப்பட்டிருக்கக்கூடிய எல்லா வணக்கங்களையும் அல்லாஹ்வுக்கு மாத்திரமே செய்ய வேண்டும் அவைகளில் எதையாவது அல்லாஹ்வின் படைப்புகளுக்கு செய்தால் அல்லாஹ்வுக்கு இணைவைத்த குற்றமாகவே கருதப்படும். அல்லாஹ் நம் அனைவரையும் அவனுக்கு இணைவைக்கும் குற்றத்திலிருந்தும் மற்ற எல்லா குற்றங்களிலிருந்தும் பாதுகாப்பானாக.


மூன்றாவது வகை


அல்லாஹ்வின் பெயர் மற்றும் அவனின் தன்மைகளில் அவனை ஒருமைப்படுத்துவது


அதாவது அல்லாஹ்வுக்குரிய திருநாமங்கள் இன்னும் அவனுக்குரிய தன்மைகள் குர்ஆனிலும் ஹதீஸிலும் எப்படி கூறப்பட்டிருக்கின்றதோ அதை அப்படியே நம்ப வேண்டும் அதை கூட்டவோ குறைக்கவோ கூடாது அல்லாஹ்வின் தன்மைகள் மற்றும் அவனின் பெயருக்கு இணையாக அல்லாஹ்வின் எந்தப்படைப்பையும் ஆக்கக்கூடாது.


உதாரணமாக அல்லாஹ் மறைவானவற்றை அறியக்கூடியவன் அத்தன்மையை அல்லாஹ்வின் எந்தபடைப்புக்கும் கொடுக்கக்கூடாது அல்லாஹ்வைத்தவிர மறைவானவற்றை யாரும் அறியமுடியாது. என்றும் உள்ளத்தில் உள்ளவைகளை அறியக்கூடியவன் என்றும் கண் சாடைகளைக்கூட அறியக்கூடியவன் என்றும் இப்படி மறைவானவற்றை அறிவது அது எனக்குரிய பண்பாக அல்லாஹ் கூறுகின்றான். 


ஆகவே அல்லாஹ்வுக்குரிய பண்புகள் இன்னும் அவனுக்குரிய பெயர்களை அவனுக்கே சொந்தமாக்க வேண்டும். அல்லாஹ்வுக்கு 99 திருநாமங்கள் மாத்திரம் இல்லை அதைவிட அதிகமாக இருக்கின்றது குர்ஆன் ஹதீஸில் அறிவிக்கப்பட்டிருக்கக்கூடிய பெயர்களைத்தவிர வேறு பெயர்களும் உண்டு அவைகளை அவனுடைய படைப்புகளில் யாருக்கு அறிவித்து கொடுத்தானோ அவர்களைத்தவிர வேறு யாருக்கும் தெரியாது. மேலே வரும் ஹதீஸ் அதை தெளிவு படுத்துகின்றது.


ஒரு நீளமான ஹதீதில் வந்துள்ளது:- உனக்கு நீ பெயர் வைத்துக்கொண்ட எல்லா பெயர்களின் உதவியாலும் அல்லது உன் படைப்புகளில் யாருக்காவது நீ கற்றுக்கொடுத்த பெயர்களின் உதவியாலும் அல்லது நீ உன் வேதத்தில் இறைக்கிவைத்த பெயர்கள் அல்லது மறைவான உன் அறிவில் நீ தேர்ந்தெடுத்த பெயரின் உதவியாலும் நான் உன்னிடம் கேட்கின்றேன். ஆதாரம்:- (அஹ்மத்)


இந்த ஹதீஸிலிருந்து விளங்கிக்கொள்வது:- அல்லாஹ்வுக்கு குறிப்பிட்ட பெயர்கள்தான் இருக்குமென்று சொல்ல முடியாது நாம் தெரிந்திருக்கும் பெயர்கள் அல்லாது இன்னும் பல பெயர்கள் அல்லாஹ்வுக்கு உண்டு அவைகளை அப்படியே நம்ப வேண்டும் அவைகளை எந்த கூட்டுதல் குறைத்தல் இன்றி அப்படியே நம்ப வேண்டும் இதுதான் ஒரு முஸ்லிமின் பண்பாகும்.


இன்னும் அல்லாஹ்வுக்கு மிக்க அழகான பெயர்கள் இருக்கின்றன ஆகவே அவற்றைக்கொண்டே நீங்கள் அழையுங்கள் அவனுடைய பெயர்களில் (தவறான பொருள் கொண்டு) திரித்துக்கூறுவோரை விட்டுவிடுங்கள் அவர்கள் செய்து கொண்டிருந்தவைக்குரிய கூலியைக் கொடுக்கப்படுவார்கள். (7:180)


இதே போல் அல்லாஹ்வுக்கு மாத்திரம் கூறப்பட்ட பல பண்புகள் இருக்கின்றன அவைகளையும் எந்த கூட்டுதல் குறைத்தல் இன்றி நம்ப வேண்டும்.


அல்லாஹ்வின் பெயருக்கு சில உதாரணங்கள்:- சக்தியுள்ளவன் அறிவுள்ளவன் இரக்கமுள்ளவன் உணவளிப்பவன் பாவங்களை மன்னிப்பவன் இப்படி இன்னும் பல பெயர்கள்.


அல்லாஹ்வின் பண்புகளுக்கு உதாரணம்:- சக்தி அறிவு இரக்கம் மன்னித்தல் இன்னும் இது போன்றவைகள்.


நன்றி - கிதாபுத் தவ்ஹீத்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

1.கணவனைக் கவரும் வழிகள் 40

பத்ருப் போர் உணர்த்தும் பாடமும் படிப்பினைகளும்!

மண்ணறை வேதனை 001