யார் நோன்பாளி?

 


நாம் அதிகாலையிலிருந்து அந்திமலைவரை பசித்திருப்பது தாகித்திருப்பது மட்டும் நோன்பல்ல.. மாறாக நம்மின் உடலில் உள்ள எல்லா உறுப்புகளும், எல்லா செயல்பாடுகளும் நோன்பிருக்க வேண்டும். அதுவே உண்மையான/ மாண்பான நோன்பாகும்.

 இந்த மாதமும் புனிதமானது [ரமளான் மாதம்]

இன்றைய நாளும் புனிதமானது [வெள்ளிக்கிழமை]

இந்த இடமும் புனிதமானது [பள்ளிவாசல்]

இந்த நேரமும் புனிதமானது [ஜுமுஆவுடைய நேரம்]

இதனோடு சேர்ந்து நாமும் புனிதமான நோன்பை வைத்துள்ளோம்.

இதனையெல்லாம் ஒன்று சேர்ந்து நமக்கு கிடைத்திருப்பது மிகப்பெரும் பாக்கிமல்லவா?

ஆக இன்றோடு சேர்த்து 19 நாட்கள் அல்லாஹ்வுக்காக நோன்பிருந்திருக்கிறோம். அல்லாஹ் நாம் இதுவரைக்கும் வைத்த அனைத்து நோன்புகளையும், அமல்களையும், அங்கிகரிப்பானாக! ஆமீன். 

இன்னும் மீதமுள்ள எல்லா நோன்புகளையும், இதர வணக்க, வழிபாடுகளையும் எவ்வித தடங்கல் இன்றி பரிபூரணமாக நிறைவேற்றுகிற நற்பேற்றினை நம் அனைவருக்கும் நல்குவானாக! ஆமீன்!!.

ஆக இன்றைய ஜுமுஆவுடையபேருரையில் :-

20 நோன்பை எப்படி பயன்படுத்தினோம்?  பத்து நோன்பை எப்படியெல்லாம் பயன்படுத்த போறோம் என்று கணக்கு போட்டு [احتساب] இஹ்திஸாப் செய்து பார்ப்போம்! அடுத்ததாக

 நாம் மட்டும் நோன்பிருந்தால் மட்டும் போதாது. நம் உடலின் ஒவ்வொரு உறுப்பும் நோன்பிருக்க வேண்டும்.

[தினமும் சுய பரிசோதனை செய்வோம்!! சுகமான சுவர்கம் பெறுவோம்!!]

ஒரு வியபாரி தன் வியபாரத்தை முடிக்கும் போது இன்று எனக்கு எவ்வளவு லாபம்? கிடைத்திருக்கிறது. எவ்வளவு நஷ்டம்? அடைந்திருக்கிறது. என்பதாக கணக்கு போட்டு பார்த்து சுதாரிப்பு அடைகிறார். இப்படி உலக லாபங்களை அடைகிற நாம்; லாபம்- நஷ்டம் –  கணக்கு போட்டு பார்க்கிறோம். ஆனால்  அழியாத மறுமைக்காக நாம் எவ்வளவு தூரம் கணக்கு போட்டு பார்க்க வேண்டும்.

  அல்லாஹ்  நாளை மறுமையில் நம்மிடம் கேள்வி கேட்க்கும் முன், நமக்கு நாமே கேள்வி கேட்டு சுய பரிசோதனை செய்து கொள்வோம்.

  தன்னை சீர்திருத்தம் செய்ய நமக்கு நாமே கேட்டுக்கொள்ள வேண்டிய  கேள்விகள்:

  1] இன்றோடு நாம் 19 வது நோன்பை வைத்திருக்கிறோம். அல்லாஹ் கூறிய لَعَلَّكُمْ تَتَّقُوْنَۙ [நீங்கள் இறையச்சமுடையோர் ஆகலாம்] என்ற தக்வா  நம்மிடம் வந்திருக்கிறதா? இல்லையெனில் அப்போம் நம் நோன்பில் கொஞ்சம் பிழையுள்ளது.

2] இன்றோடு நாம் 19 வது நோன்பை வைத்திருக்கிறோம். ஒரு நாளைக்கு ஒரு ஜுஸ்வு ஓதினாலும் இன்றோடு சேர்த்து 13 ஜுஸ்வுகளை ஓதியிருக்கோமா? இல்லையெனில் அப்போம் நம் நோன்பில் கொஞ்சம் பிழையுள்ளது.

3] இன்றோடு நாம் 19- வது நோன்பை வைத்திருக்கிறோம். ஒரு நாளைக்கு 100 ருபாய் சதகா செய்தாலும் இன்றோடு சேர்த்து 1900 ருபாய் சதகா செய்துள்ளோமா? இல்லையெனில் அப்போம் நம் நோன்பில் கொஞ்சம் பிழையுள்ளது.

4] இன்றோடு நாம் 19- வது நோன்பை வைத்திருக்கிறோம். இந்த 19 நாட்களிலும் 5 நேரமும் இமாம் ஜமாத்தோடு, அவ்வல் தக்பீருடன் தொழுதுள்ளோமா? இல்லையெனில் அப்போம் நம் நோன்பில் கொஞ்சம் பிழையுள்ளது.

5] இன்றோடு நாம் 19- வது நோன்பை வைத்திருக்கிறோம்.இந்த 19 நாட்களிலும் தஹஜ்ஜத், இஷ்ராக், லுஹா, அவ்வாபின், தராவிஹ், முன், பின் சுன்னத்கள், நஃபில் தொழுகைகளை பேணுதலாக தொழுதுள்ளோமா? இல்லையெனில் அப்போம் நம் நோன்பில் கொஞ்சம் பிழையுள்ளது.

6] இன்றோடு நாம் 19 வது நோன்பை வைத்திருக்கிறோம். இந்த 19 நாட்களிலும் என்னேரமும் ஒழுவோடு இருக்கிறோமா? பள்ளிதொடர்பின் நிலை அதிகரித்திருக்கிறோமா? இல்லையெனில் அப்போம் நம் நோன்பில் கொஞ்சம் பிழையுள்ளது.

மேற்கூறப்பட்ட விஷயங்கள் நம்மிடம் எந்த அளவு இருக்குமோ அந்த அளவு நம் நோன்பின் தரம் உள்ளது.

தேர்வு எழுதுகிற மாணவர்கள் தமக்கு கிடைத்திருக்கிற நேரத்தில் எத்தனை சரியான பதில்கள் எழுத முடியுமோ அத்தனை பதில்களையும் எழுத முயற்சி செய்வார். அது போல ரமலானில் நமக்கு கிடைத்த நேரங்களில் அதிகமாக அமல் செய்யும் வாய்ப்புக்களை நாம் பயன்படுத்திக் கொள்ள முயற்சிக்க வேண்டும்.

 

நாம் மட்டும் நோன்பிருந்தால் மட்டும் போதாது. நம் உடலின் ஒவ்வொரு உறுப்பும் நோன்பிருக்க வேண்டும்.

  يٰٓـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا كُتِبَ عَلَيْکُمُ الصِّيَامُ ஈமான் கொண்டோர்களே! உங்களின் மீது நோன்பு கடமையாக்கப்பட்டிருக்கிறது என்ற ஆயத்திற்கு விரிவுரையாளர்கள் மனிதனுடைய ஒவ்வோர் உறுப்பின் மீதும் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது. என்று விளக்கம் எழுதியுள்ளனர்.
ஒவ்வோரு உறுப்பின் மீதும் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது என்பதனைப்பற்றி இப்போது விரிவாக பார்ப்போம் வாருங்கள்..

மனிதனுடைய உடலில் உள்ள 360 மூட்டுக்களுக்கு தர்மம் செய்ய வேண்டும் [முஸ்லிம் 1835, புகாரி 2989]  என்பது போல் மார்க்கம் நோன்பை விதியாக்கியதின் முக்கிய நோக்கம் நாம் மட்டும் நோன்பிருந்தால் மட்டும் போதாது. நம்மின் உடலில் உள்ள‌ ஒவ்வொரு உறுப்பும் நோன்பிருக்க‌ வேண்டும் என்பதாகும்.

[1] நமது  நாவு நோன்பிருக்கட்டும்.

நாவின் நோன்பு என்பது : நாவைத் தவறாகப் பயன்படுத்தக் கூடாது என்பதாகும். புறம் பேசுதல், கோள் சொல்லுதல், வீண் பேச்சுகள் பேசுதல், தேவையின்றிப் பேசுதல், ஒழுக்கமின்றி எல்லாவிதப் பேச்சும் பேசுதல், வெட்கக்கேடான பேச்சுக்களைப் பேசுதல், சண்டை சச்சரவு செய்தல், திட்டுதல், கேலி செய்தல், இரகசியத்தை வெளிப்படுத்துதல், பொய் வாக்குறுதி அளித்தல், பொய்ச் சத்தியம் செய்தல்,

عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ “‏ مَنْ لَمْ يَدَعْ قَوْلَ الزُّورِ وَالْعَمَلَ بِهِ فَلَيْسَ لِلَّهِ حَاجَةٌ فِي أَنْ يَدَعَ طَعَامَهُ وَشَرَابَهُ ‏”‏‏.‏

யார் பொய்யான பேச்சுக்களையும் பொய்யான நடவடிக்கைகளையும் விடவில்லையோ அவர் பசித்திருப்பதோ தாகித்திருப்பதோ அல்லாஹ்வுக்குத் தேவை இல்லை  [புகாரீ 1903]

நோன்பைத் தவிர ஆதமுடைய மகனின் ஒவ்வொரு செயலும் அவனுக்குரியதாகும்! நிச்சயமாக, நோன்பு எனக்கு(மட்டுமே) உரியது; அதற்கு நானே கூலி கொடுப்பேன்! என்று அல்லாஹ் கூறினான். நோன்பு (பாவங்களிலிருந்து காக்கும்) கேடயமாகும்! எனவே, உங்களில் ஒருவர் நோன்பு நோற்றால் அவர் கெட்ட பேச்சுகள் பேச வேண்டாம்! கூச்சலிட்டு சச்சரவு செய்ய வேண்டாம்! யாரேனும் அவரை ஏசினால் அல்லது அவருடன் சண்டையிட்டால் நான் நோன்பாளி! என்று அவர் சொல்லட்டும்! [புகாரீ 6023]

யாகாவாராயினும் நாகாக்க:

நல்ல பேச்சுக்கள் சொர்க்கத்தை மாத்திரம் பெற்றுத்தராது. கடும் வேதனையான நரக நெருப்பி­ருந்து காக்கும் கேடயமாகவும் பயன்படும். நல்ல பேச்சுக்களை பேசியாவது நரகத்தை விட்டும் உங்களை காத்துக்கொள்ளுங்கள் என்று நபி  அவர்கள் கூறினார்கள்.

” اتَّقُوا النَّارَ وَلَوْ بِشِقِّ تَمْرَةٍ، فَإِنْ لَمْ تَجِدْ فَبِكَلِمَةٍ طَيِّبَةٍ “”.

நபி  அவர்கள் கூறினார்கள் பேரீச்சம் பழத்தின் ஒரு துண்டைத் தர்மம் செய்தேனும் நரகத்தி­ருந்து உங்களைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள். அதுவும் இல்லையானால் இன் சொல்லைக் கொண்டாவது (காப்பாற்றிக் கொள்ளுங்கள்) என்றார்கள். [புகாரீ 6023]

مَنْ كَانَ يُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الآخِرِ فَلْيَقُلْ خَيْرًا أَوْ لِيَصْمُتْ

அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் (ஒன்று) நல்லதைப் பேசட்டும். அல்லது வாய்மூடி இருக்கட்டும்.[புஹாரி 6018] 

நோன்பாளிகளே! உங்களின் நாவில் சாபம் வேண்டாம் ஏனென்றால்:

இந்த ரமலான் மாதம் முழுவது துஆ கபுலாகும் நேரமாகும். சில தவறான விஷயங்களை அந்த நேரத்தில் கேட்டு அது நிறைவேறி விட்டால் நம் நிலையை கொஞ்சம் யோசித்து பாருங்கள்..

பெரும்பாலோர் கோபப்படும் பொழுது தமது நாவுகளைக் கட்டுப்படுத்த முடியாமல் உடனே சாபமிட்டு விடுகின்றனர். அந்த நேரத்தில் மனிதர்கள், உயிரினங்கள், திடப்பொருட்கள், காலங்கள், நாட்கள், நேரங்கள் யாவற்றையும் சபித்து விடுகின்றனர். இன்னும் சொல்வதானால் சிலவேளை தங்களையும் தங்கள் குழந்தைகளையும் கூட சபித்து விடுகின்றனர். மட்டுமல்ல கணவன் மனைவியையும் மனைவி கணவனையும் சபிக்கின்றனர். இது தீய ஆபத்தான செயலாகும். இத்தகைய பண்புகள் உண்மையான முஃமின்களுக்கு உரிய பண்பு இல்லை.

முஃமினைச் சபிப்பது அவரைக் கொலை செய்வது போன்ற குற்றம். [முஸ்லிம்.] 

முஃமின்களைச் சபிப்பது குறித்து நபி  அவர்கள் மிகக் கடுமையாக எச்சரித்துள்ளார்கள்.ஒரு முஃமின் திட்டுபவனாகவோ, சபிப்பவனாகவோ, கெட்ட செயல் புரிபவனாகவோ, கெட்ட வார்த்தை பேசுபவனாகவோ இருக்க மாட்டான் என்று நபி  அவர்கள் கூறினார்கள். [திர்மிதீ.] 

மேலும் நபி  அவர்கள், அதிகம் சபிப்பது உண்மையானவர்களுக்கு அழகல்ல’ [முஸ்லிம் ] 

சபித்தவனையே சூழும் சாபம்:-

ஒரு அடியான் எதாவது ஒரு பொருளை சபித்தால் அந்த சாபம் வானத்தை நோக்கி உயரும். அப்போது வானத்தின் வாசல்கள் அடைக்கப்படும். பிறகு அந்த சாபம் பூமியை நோக்கி இறங்கும். அப்போது பூமியின் வாசல்களும் அடைக்கப்படும். பிறகு அது வலது இடது புறங்களின் பக்கம் திரும்பும். அங்கும் வழி கிடைக்காததால் யார் மீது சபிக்கப்பட்டதோ அவரின்பக்கம் திரும்பிச் செல்லும். அவர் அதற்கு தகுதியற்றவராக இருந்தால் சொன்னவரிடமே திரும்பிச் சென்றுவிடும் என்று நபி  அவர்கள் கூறினார்கள். [அபூதாவுத்.] 

  • பெண்கள் அதிகம் சபிக்கின்றார்கள். அதுவே அவர்கள் நரகில் நுழைவதற்குக் காரணமாக அமைகின்றது என்பதை நபி  அவர்களும் தெளிவுபடுத்தி உள்ளார்கள்.
  • அதுபோல சபிக்கின்றவர்கள் மறுமையில் பரிந்துரை செய்பவர்களாக இருக்க மாட்டார்கள்.
  • இதில் ஆபத்தானது என்னவெனில் அநியாயமாக ஒருவன் ஒருவனை சபித்தால் அவனது சாபம் அவன் மீதே திரும்பி விடுகின்றது. அந்த நேரத்தில் அவன் தனக்கெதிராக தானே இறையருளை விட்டும் தூரமாவதற்குப் பிரார்த்தித்தவனாகின்றான்.

[நோன்பு திறக்கும் நோரத்தில் கவனம் தேவை:]

நோன்பு திறக்கும் நேரம் மிக முக்கியமான நேரமாகும். இந்த நேரத்தில் வீணான செயல்களில் ஈடுபட வேண்டாம், துஆ கபுலாகும் நேரமாகும்.

நோன்பு திறக்கும் 10 நிமிடத்திற்க்கு  முன்

  • இன்றைய என் நோன்பை அமல்களால் அலங்கரித்தேனா? இல்லை பாழாக்கினேனா?
  • இன்றைய என் நோன்பில் என்னென்ன‌ அமல்கள் செய்தேன்? என்னென்ன‌ அமல்களை விடுபட்டேன் என்பதாக கணக்கு போட்டு [احتساب] இஹ்திஸாப் செய்து பார்ப்போம்!  நாளைய நோன்பை மாண்பாக்க உறுதி எடுப்போம்!

நோன்பாளி நோன்பு திறக்கும் போது கேட்கும் துஆ அங்கீகரிக்கப்படும். ” [சுனன் இப்னு மஜா 1753]

மூவரின் துஆ ஏற்றுகொள்வதில் எவ்வித சந்தேகமும் இல்லை

1.     நோன்பாளி அவர் நோன்பு திறக்கும் வரை ,

2.     நீதி செலுத்தும் தலைவரின் துஆ,

3.     அநீதி இழைக்கப்பட்டவரின் துஆ. [மிஷ்கத் அல் மசாபிஹ் 2249]  

துஆவினால் மூன்று பலன்கள் கண்டிப்பாக ஏற்படும் என்று நாயகம் சொல்லியிருக்கிறார்கள்.

1.     நாம் கேட்டதையே அல்லாஹ் கொடுத்துவிடுவான்.

2.     நமக்கு வரவிருந்த ஆபத்துகளை நீக்கிவிடுவான்.

3.     மறுமையில் முழுமையான கூலியை தருவான். இந்த நம்பிக்கையோடு நம் துஆக்கள் அமைய வேண்டும்.

ஹழ்ரத் மூஸா (عَلَيْهِ السَّلاَمُ) அவர்கள் ஃபிர்அவ்னை அழிப்பதற்காக துஆ செய்து 40 வருடங்களுக்கு பிறகு தான் அல்லாஹ் ஃபிர்அவ்னை அழித்தான்.

எனவே நாம் அஸரில் துஆ கேட்டுவிட்டு மகரிபில் என் துஆ கபூலாகவில்லை என்று புலம்பக்கூடாது. முழு நண்பிகையோடு துஆ செய்ய வேண்டும்.

அதேபோல ஹராமை விட்டு முழுமையாக ஒதுங்கி இருக்க வேண்டும். உணவிலோ, உடையிலோ, உடலிலோ நம் சம்பாத்தியத்திலோ ஹராம் கலந்து விட்டால் நம் துஆ கபூலாகாது.

துஆக்கள் அங்கீகரிக்கப்படும் இவ்வரிய மாதத்தைப் பயன்படுத்தி நாம் எமது தேவைகளுக்காகவும் சமூகத்தின் நலனுக்காகவும் அதிகமாக துஆவில் ஈடுபட வேண்டும்.

[2] நமது  கை நோன்பிருக்கட்டும்:

 عَنْ أَبِي مُوسَى ـ رضى الله عنه ـ قَالَ قَالُوا يَا رَسُولَ اللَّهِ أَىُّ الإِسْلاَمِ أَفْضَلُ قَالَ “” مَنْ سَلِمَ الْمُسْلِمُونَ مِنْ لِسَانِهِ وَيَدِهِ 

மக்கள், அல்லாஹ்வின் தூதரே! இஸ்லாத்தில் சிறந்தது எது? என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், எவரது நாவிலிருந்தும் கரத்திலிருந் தும் பிற முஸ்லிம்கள் பாதுகாப்புப் பெற்றிருக்கிறார்களோ அவரே (சிறந்தவர்; அவரது இஸ்லாமே சிறந்தது) என்று பதிலளித்தார்கள். [புகாரீ 11]

கையின் நோன்பு என்பது தீமைகளை தம் கையாள் செய்தல் [சுய இன்பம்] தம் கையாள் பிறரை அடித்தல், கையின் மூலம் கொடுக்கல் வாங்களில் ஏமாற்றுதல். என்பதாகும்.

[3] நமது  கால் நோன்பிருக்கட்டும்:

اَلْيَوْمَ نَخْتِمُ عَلٰٓى اَفْوَاهِهِمْ وَتُكَلِّمُنَاۤ اَيْدِيْهِمْ وَتَشْهَدُ اَرْجُلُهُمْ بِمَا كَانُوْا يَكْسِبُوْنَ அந்த நாளில் நாம் அவர்களின் வாய்களின் மீது முத்திரையிட்டு விடுவோம்; அன்றியும் அவர்கள் சம்பாதித்துக் கொண்டிருந்தது பற்றி அவர்களுடைய கைகள் நம்மிடம் பேசும்; அவர்களுடைய கால்களும் சாட்சி சொல்லும். [அல்குர்ஆன் 36:63,65] 

காலின் நோன்பு என்பது தீமையின் பக்கம் போகாமலிருத்தல், தீமைக்கு உதவுதல்,  என்பதாகும்.

[4] நமது  வயிறு நோன்பிருக்கட்டும்:

வயிற்றை நிரப்புவது போன்று வேறு எந்த பாத்திரத்தையும்  நிரப்புவது, அல்லாஹூ தஆலாவுக்கு வெறுப்பானதாக இல்லை. 

அவர் வயிற்றில் மூன்றில் ஒரு பாகம் உணவும், மூன்றில் ஒரு பாகம் தண்ணீருக்காகவும், மூன்றில் ஒரு பாகம் மூச்சுவிட காலியானதாக வைத்துக்கொள்ளவும்

வயிறின் நோன்பு என்பது நோன்பு வைக்கும் பொழுதும் நோன்பு திறக்கும் பொழுதும் ஹராமான‌ உணவை சாப்பிடாமல் இருத்தல் என்பதாகும்.

நோன்பு வைக்கும் பொழுதும், நோன்பு திறக்கும் பொழுதும் ஹலாலான உணவை வயிறு புடைக்க சாப்பிடுவதின் மூலம் நோன்பின் நோக்கம் தவறிவிடுகிறது. நோன்பு வைப்பதின் நோக்கம் மனோ இச்சைகளையும், மனிதர்களின் மனதில் உண்டாகும் மிருக இச்சைகளையும் குறைத்து ஒளிமயமான சக்திகளையும் மலக்குகளின் தன்மையுடன் வளர்த்துக் கொள்வதாகும் 11 மாதங்கள் வயிறு நிறைய சாப்பிட்டு இருக்கிறோம் ஒரு மாதம் அதில் கொஞ்சம் குறைத்துக் கொண்டால் என்ன?

ஆனால் நம்முடைய நிலை என்னவென்றால் நோன்பு திறக்கும் நேரத்தில் முன்னால் தவறவிட்ட உணவைச் சேர்த்துக் உட் கொள்ளும் எண்ணத்திலும் சஹர் நேரத்தில் முன் சேமிப்பாக கொள்ளும் எண்ணத்திலும் எந்த அளவு சாப்பிடுகிறோம் என்றால் ரமலான் அல்லாத காலத்தில் நோன்பு இல்லாத நிலையில் கூட சாப்பிட்டு இருக்க முடியாத அளவு சாப்பிட்டு விடுகிறோம் எனவே புனித ரமலான் மாதமும் நமக்கு உணவு சாப்பிடும் காலமாக ஆகிவிடுகிறது.

[5] நமது  காது நோன்பிருக்கட்டும்:

وَالَّذِيْنَ هُمْ عَنِ اللَّغْوِ مُعْرِضُوْنَۙ அவர்கள் வீணான (பேச்சு, செயல் ஆகிய)வற்றை விட்டு விலகியிருப்பார்கள். [அல்குர்ஆன் 23:3] 

காதின் நோன்பு என்பது எந்த விஷயங்களை நாவினால் கூறுவது கூடாதோ, அவற்றை காது கொடுத்து கேட்பதும் கூடாதாகும். [உதாரணமாக] இசை கேட்டல், புறம் பேசுவதை கேட்டல், தீமைகளை கேட்டும் அதை தடுக்காமல் இருத்தல் என்பதாகும்.

புறம் பேசுவது / கேட்பது விபச்சாரத்தைவிட மிகக் கொடியது என நபி  அவர்கள் கூறியபோது, யாரஸூலல்லாஹ்! புறம் பேசுவது விபச்சாரத்தைவிட மிகக் கொடியதாக எவ்வாறு ஆகும்? என ஸஹாபாக்கள் கேட்டனர். ஒருவன் விபச்சாரம் செய்துவிட்டுத் தவ்பா செய்தால் அல்லாஹுதஆலா அவனது தவ்பாவை ஒப்புக்கொள்வான், ஆனால், எவரைப் பற்றிப் புறம் பேசப்பட்டதோ அவர் மன்னிக்காதவரை அல்லாஹுதஆலாவின் புறத்திலிருந்து புறம் பேசியவனுக்கு மன்னிப்புக் கிடையாது” [பைஹகீ] 

[6] நமது  கண்க‌ள் நோன்பிருக்கட்டும்:

கண்ணின் நோன்பு என்பது  : எந்த விஷயங்களை நாவினால் கூறுவது கூடாதோ, அவற்றை கண் கொண்டு பார்பதும் கூடாதாகும். [உதாரணமாக] அந்நிய பெண்களை பார்க்காமல் இருத்தல். வீண் விளையாட்டான செயல்களைப் பார்பதை விட்டும் விலகியுருப்பதாகும்.

டிவி(TV),FACEBOOKபேஸ்புக்,WHATSUPவாட்ஸப்,இண்ஸ்டாகிராம், யூட்யூப், ஐபி எல் மேட்ச், ஆகிய எதிலும் ரமலானின் நன்மைகள் பறிபோகாமல் பார்த்துக் கொள்வோம்.

[7] நமது நப்ஸு நோன்பிருக்கட்டும்;

நப்ஸுடைய நோன்பு என்பது : பேராசை, மனோ இச்சை ஆகியவற்றை விட்டும் நீங்கி இருப்பதாகும்.

நோன்பு நோற்றுக் கொண்டு சினிமாக் கொட்டகைகளில் தவம் கிடப்பது, நோன்பு நோற்றுக் கொண்டு கலப்படம், மோசடி போன்ற செயல்களில் ஈடுபடுவது, 

நோன்பு (பாவங்களிலிருந்து காக்கின்ற) கேடயமாகும்; எனவே, நோன்பாளி கெட்ட பேச்சுகளைப் பேசவேண்டாம்! முட்டாள் தனமான செயல்களில் ஈடுபட வேண்டாம்! யாரேனும் அவருடன் சண்டைக்கு வந்தால் அல்லது ஏசினால் நான் நோன்பாளி! என்று இருமுறை கூறட்டும்!  [புகாரீ 1894

இந்த ஹதீஸில் நிறைய உபதேசங்களும், ரப்பின் நெருக்கம் பெற வழியும் பேசபட்டுள்ளது.

[8] நமது உள்ளம் நோன்பிருக்கட்டும்:

உள்ளத்தின் நோன்பு என்பது  : உலக ஆசைகளை விட்டும் நீங்கியிருப்பதாகும்.

قَدْ اَفْلَحَ مَنْ تَزَكّٰىۙதூய்மையடைந்தவன், திட்டமாக வெற்றி பெறுகிறான். [87:14] وَذَكَرَ اسْمَ رَبِّهٖ فَصَلّٰى‌ ؕ‏ அவன் தன் இறைவனுடைய நாமத்தைத் துதித்துக் கொண்டும், தொழுது கொண்டும் இருப்பான். [87:15]

நம் நோன்பில் இறைசிந்தனை மட்டுமே அதிகமாக இருக்க வேண்டும்.

[9] நமது ரூஹு நோன்பிருக்கட்டும்:

ரூஹுடைய நோன்பு என்பது : மறுமையின் இன்பங்களை விட்டும் நீங்காதிருப்பதாகும்.

 

ஒரு இறை நம்பிக்கையாளன் ரமளான் மாதம் முழுவதும் நோன்பு நோற்றிருக்கும் போது, நாம் யாரையும் ஏமாற்றக் கூடாது; யாருக்கும் மோசடி செய்யக் கூடாது, தீமையான பேச்சுக்களைப் பேசாமல், தீமையான காரியங்களில் ஈடுபடாமல் அந்த மாதம் முழுவதும் அல்லாஹ் என்னை மறைமுகமாக இருந்து பார்த்துக் கொண்டிருக்கிறான் என்று எண்ணி அல்லாஹ்வுக்கு அஞ்சி நடக்க வேண்டும்.

இவ்வாறே மற்றெல்லா உறுப்புகளையும் தீமைகளை விட்டும் பாதுகாத்து கொள்வது அவசியமாகும்.

 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

1.கணவனைக் கவரும் வழிகள் 40

பத்ருப் போர் உணர்த்தும் பாடமும் படிப்பினைகளும்!

மண்ணறை வேதனை 001