நோன்பு அல்லாஹுகுரியதா? ஏன்?

 


 

எதற்காக அல்லாஹ் நோன்பு மட்டும் தனக்குரியது என்று சொல்லிக் காட்டுகிறான் இதைப்பற்றி உலமாக்கள் பல காரணங்களை கூறினார்கள்.

 

1. காரணம் :

நோன்பில்ரியா’ (முகஸ்துதி) ஏற்படுவதற்கு வாய்ப்பில்லை யாரெல்லாம் நோன்பாளி என்றும், நோன்பாளியில்லை என்றும் நம்மால் கண்டுபிடிக்க முடியாது...

ஆனால் வேறு அமல்களைப் பொறுத்த வரை அப்படியல்ல ஒருவர் தொழுகைக்கு வருகிறார் என்றால் அவரை நாம் தொழுகையாளி என்று அறியலாம் ஒருவர் ஜகாத் கொடுக்கிறாரென்றால் குறைந்த பட்சம் இவர் ஜகாத் கொடுக்கக் கூடியவர் என்று அவரிடமிருந்து ஜகாத்தைப் பெறுபவர் அறிந்து கொள்வார்.

ஒருவர் தர்மம் செய்கிறார், அது கொடுக்கும் கைக்கும் வாங்கும் கைக்கும் தெரியும் ஒருவர் ஹஜ் செய்கிறார் அது ஊருக்கே தெரியும் அதை விளம்பரப்படுத்தவே சிலர் நான் ஹஜ்ஜுக்குச் செல்கிறேன், அரஃபாவில் இருக்கிறேன் ஜம்ராவில் கல்லெறிகிறேன் என்று செல்பி எடுத்து வாட்ஸ்அப், ஃபேஸ்புக் மூலமாக பலருக்கும் அனுப்புகிறார்கள்.

 இப்படி நாம் அமல்களை விளம்பரப்படுத்திக் கொண்டு இருக்கிறோம். ஆனால் நமது அமல்களில் விளம்பரம் செய்ய முடியாதது நோன்பாக மட்டும்தான் இருக்க முடியும். எனவே தான் நோன்பு எனக்குரியது அதற்கு நானே கூலி வழங்குவேன் என்று அல்லாஹ் கூறுகின்றான் .

 

2.காரணம் :

ஏனைய அமல்களை பொறுத்தவரை அதற்காக அல்லாஹ்விடம் எவ்வளவு கூலி வழங்கப்படும் என்பதை நம்மால் அறியமுடியும் தொழுகிறோம், ஜமாஅத்தாக தொழுகிறோம் அல்லது இன்னபிற அமல்களைச் செய்கிறோம் அதற்கெல்லாம் எவ்வளவு கூலி என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது அதைத் துல்லியமாக இல்லாவிட்டாலும் ஒரளவிற்கு இவ்வளவுதான் இதற்குக் கூலி கிடைக்கும் என்று நம்மால் புரிந்து கொள்ள முடியும். உதாரணமாக ஒருவர் ஸலாம் கூறுவது.

நபி (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அவர்களிடம் ஒரு மனிதர் வந்துஅஸ்ஸலாமு அலைக்கும்என்று கூறினார். நபியவர்கள் அவருக்கு பதில் ஸலாம் கூறினார்கள். பின்னர் அவர் உட்கார்ந்தார். நபி (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அவர்கள் (இவருக்கு) பத்து (நன்மைகள்) என்று கூறினார்கள். பிறகு மற்றொருவர் வந்தார். அவர்அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ்என்று கூறினார். நபி (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அவர்கள் அவருக்கு பதில் கூறியவுடன் அவர் அமர்ந்தார். நபியவர்கள் ‘(இவருக்கு) இருபது (நன்மைகள்)” என்று கூறினார்கள். பிறகு மற்றொருவர் வந்தார். அவர்அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹு‎” என்று கூறினார். அவருக்கு நபியவர்கள் பதில் கூறினார்கள். பிறகு அவர் உட்கார்ந்தார். நபி (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அவர்கள் ‘(இவருக்கு) முப்பது (நன்மைகள்)” என்று கூறினார்கள்.”

அறிவிப்பவர்: இம்ரான் பின் ஹுசைன் (ரலியல்லாஹு அன்ஹு) நூல்: அபூ தாவூத் (4521)

 

தனியாகத் தொழுவதை விட ஜமாஅத்தாக தொழுவதன் அதிக நன்மை பற்றி அல்லாஹ்வின் தூதர் அவர்கள் கூறினார்கள்:

தனியாக தொழுவதை விட ஜமாஅத்தாக தொழுவது இருபத்தேழு மடங்கு சிறந்ததாகும்.’

(அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலியல்லாஹு அன்ஹு)

நூல்: ஸஹீஹுல் புஹாரி 645.

 

மனிதன் செய்யக்கூடிய ஒவ்வொரு அமலுக்கும் குறைந்தபட்சம் பத்து மடங்கும் அதிகபட்சமாக எழுநூறு மடங்கும் கூலி கிடைக்கும் இதில் அமல்களைச் செய்யக்கூடியவபர்களின் இஹ்லாஸிற்கேற்பவும், அமல்களுக்கேற்பவும் அதில் கூடுதல் குறைவு ஏற்படும் அதே நேரத்தில் நோன்பைப் பொறுத்தவரை அதற்கான கூலி வரையறுக்கப்படவில்லை அதன் கூலியை அல்லாஹ் மட்டும் தான் அறிவான் ஏனைய இபாதத்களைப் பொறுத்தவரை சில மனிதர்கள் மேலோட்டமாக அதன் கூலியின் அளவை அறிந்து கொள்வார்...

 

இமாம் குர்துபி (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் கூறினார்கள்: அமல்களின் கூலியின் அளவை மனிதர்களுக்கு அல்லாஹ் வெளிப்படுத்தியுள்ளான் அது பத்திலிருந்து எழுநூறு மடங்காகும். நோன்பைத் தவிர.’’

அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்: ‘ஆதமின் மகனுடைய (மனிதனுடைய) ஒவ்வொரு நற்செயலுக்கும் ஒன்றுக்குப் பத்து முதல் எழுநூறு மடங்குகள்வரை நன்மைகள் வழங்கப்படுகின்றன; அல்லாஹ் கூறுகின்றான்: நோன்பைத் தவிர. ஏனெனில், நோன்பு எனக்கு உரியதாகும். அதற்கு நானே நற்பலன் வழங்குகிறேன். அவன் எனக்காகவே தனது உணர்வையும் உணவையும் கைவிடுகிறான் (என அல்லாஹ் கூறுகின்றான்). நோன்பாளிக்கு இரண்டு மகிழ்ச்சிகள் உள்ளன. அவர் நோன்பைத் துறக்கும்போது ஒரு மகிழ்ச்சியும், தம் இறைவனைச் சந்திக்கும் போது மற்றொரு மகிழ்ச்சியும் (அடைகிறார்). நோன்பாளியின் வாயிலிருந்து வரும் வாடை, அல்லாஹ்விடம் கஸ்தூரியின் மணத்தைவிட நறுமணமிக்கதாகும்.

அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள்,

நூல்:ஸஹீஹ் முஸ்லிம் 2119.

 

அல்லாஹ் கூறுகிறான்,

பொறுமையாளர்களுக்கு அவர்களின் கூலி கணக்கின்றி வழங்கப்படும்.” (அல்குர்ஆன் 39:10)

நோன்பாளிகளைத்தான் இவ்வசனத்தில் பொறுமையாளர்கள் என்று சொல்லப்பட்டுள்ளது என்பதாக குர்ஆன் விரிவுரையாளர்கள் கூறுகிறார்கள்.

 

நோன்பைப் பொறுத்தவரை ஒரு சிலர் குளிர் அறையில் இருந்து நோன்பு வைக்கிறார்கள், வேறு சிலர் வெயிலில் நாக்கு வறண்டு மிகவும் சிரமத்துடன் நோன்பு நோற்கிறார்கள், சில நாடுகளில் இருபத்தி ஒரு மணிநேரம் நோன்பு நோற்கிறார்கள், நம்முடைய நோன்பும் அவர்களுடைய நோன்பும் ஒரே மாதிரி இருக்குமா என்றால் நிச்சயமாகக் கிடையாது அதைப்போன்று பாலைவனத்தில் சுடுமணலில் இருந்து நோன்பு நோற்பவரும் கடும் குளிர் நிறைந்த துருவப்பிரதேசத்தில் நோன்பு நோற்பவரும் ஒரே மாதிரியா என்றால் நிச்சயமாக கிடையாது இதனைத் தரம் பிரித்துக் கூலியை கொடுப்பவன் அல்லாஹ் தான்.

 

3.காரணம் :

நோன்பு என்பது அல்லாஹ்வுக்கு மிகவும் பிடித்தமான அமலாகும்.

அபூஉமாமா அவர்கள் கூறினார்கள்: ‘‘நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அவர்களிடம் வந்து எனக்கு ஒரு விஷயத்தைக் கட்டளையிடுங்கள் அதனை நான் உங்களிடமிருந்து பற்றிப்பிடித்து கொள்கிறேன் என்றேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அவர்கள் நீ நோன்பைக் கடைப்பிடிப்பாயாக! அது போன்ற அமல் வேறு எதுவும் இல்லை என்று கூறினார்கள்.

நூல்: சுனன் நஸாயி 2220.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்: இறைவழியில் (அறப் போருக்குச் செல்லும்போது) ஒரு நாள் நோன்பு நோற்றவரின் முகத்தை அல்லாஹ் நரக நெருப்பைவிட்டு எழுபது ஆண்டுகள் (பயணத்) தொலைவிற்கு அப்புறப்படுத்தி விடுவான்.

அறிவிப்பாளர்: அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலியல்லாஹு அன்ஹு),

நூல்: ஸஹீஹுல் புஹாரி: 2840

 

4. காரணம் :

நோன்பை தனக்குரியது என்று அல்லாஹ் கூறுவதன் மூலம் அதனை மகத்துவப்படுத்தியுள்ளான் இறையில்லங்கள் அனைத்தும் அல்லாஹ்வுக்குரியதாக இருந்தும் எப்படி கஃபாவை அல்லாஹ்வின் வீடு என்று கூறுகிறானோ அதே போன்றாகும்.

5. காரணம் :

மறுமையில் மனிதர்கள் செய்த அநியாயங்களுக்காக அவர்களின் அனைத்து இபாதத்திலிருந்தும் பரிகாரம் செய்யப்படும் நோன்பைத் தவிர.

அபூஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள், அபுல்காஸிம் (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறியதாக, நான் செவிமடுத்தேன் மேன்மையும் மகத்துவமும் மிக்க அல்லாஹ் கூறினான்: எல்லா அமல்களுக்கும் பரிகாரமுள்ளது நோன்பைத் தவிர நோன்பு எனக்குரியது நானே அதற்கு கூலி வழங்குவேன்.

(நூல் : முஸ்னத் அஹ்மத் 10025.)

மனிதன் இவ்வுலகில் செய்யக்கூடிய அநியாயங்கள் அனைத்தும் மறுமையில் விசாரணை செய்யப்பட்டு அதற்குத் தக்க கூலியும் கொடுக்கப்படும் அப்படியிருக்கும் போது நாம் பிறருக்கு அநீதம் செய்திருந்தால் நம்முடைய நன்மைகள் அவர்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும் நாம் தொழுத தொழுகை, கொடுத்த தர்மம், ஹஜ் இன்னபிற நல்லறங்கள் அனைத்தின் நன்மையும் பிறருக்கு எடுத்துக் கொடுக்கப்படும் ஆனாலும் நமது நோன்பு அவ்வாறு யாருக்கும் பங்கிட்டுக் கொடுக்கப்படாது.

6.காரணம் :

மனிதன் தான் விரும்பக்கூடிய உணவு, குடிபானம், இல்லறம், மனோ இச்சை ஆகியவற்றிலிருந்து தவிர்ந்து கொள்வதால் மனோ இச்சைக்கு முரணாக நடந்து சத்தியத்திற்கு இசைவாக நடந்து கொள்கிறான்.

7.காரணம்:

 நோன்பின் போது பொய்யான பேச்சையும் தீய நடவடிக்கையையும் தவிர்ந்து கொள்வதன் மூலம் அல்லாஹ் விரும்புவதைச் செய்தவராவார்.

8.காரணம் :

நோன்பு என்பது அனைவருக்கும் பொதுவான இபாதத் ஆகும் அடிமை சுதந்திரமானவர் ஆண்கள் பெண்கள் என அனைவரும் ஒரே மாதிரி நிறைவேற்ற வேண்டும். ஏனைய இபாதத்களைப் பொறுத்தவரை அதில் சலுகை உள்ளது ஐவேளை தொழுகை ஜமாஅத்தாகத் தொழுவது என்பது பெண்கள் மீது கடமையில்லை ஜுமுஆ தொழுகை பெண்கள் மீதும் அடிமைகள் மீதும் பயணிகள் மீதும் கடமையில்லை அதேபோல் ஹஜ் ஏழைகள் மீது கடமையில்லை அதே போன்றுதான் ஜகாத்தும். ஆனால் ஏழையாக இருக்கட்டும் பணக்காரராக இருக்கட்டும் அடிமையாக இருக்கட்டும் யாராக இருந்தாலும் அனைவருக்கும் நோன்பு கடமையாகும்.

9.காரணம் :

நோன்பின் நேரம் ஏனைய இபாதத்களைப் போன்றல்ல நாள் ஒன்றுக்கு தொழுகைக்காக நாம் செலவழிக்கக்கூடிய நேரத்தைக் கணக்கிட்டுப் பார்த்தோமேயானால் அதிகபட்சமாக இரண்டு மணி நேரத்தைச் செலவிடுவோம். ஹஜ்ஜை எடுத்துக்கொண்டால் அதன் கடமைகளை நிறைவேற்ற நான்கு நாட்கள் போதுமானது ஆனால் நோன்பைப் பொறுத்தவரை நாள் ஒன்றுக்கு குறைந்தபட்சம் பதிமூன்று மணிநேரத்தை செலவிடாமல் இதை நாம் நிறைவேற்ற முடியாது.

10.காரணம் :

மேற்கூறிய அனைத்திற்கும் மேலாக மறுமையில் நோன்பாளி அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாத் செய்து உயிர்த்தியாகம் செய்த தியாகிக்கு முன்னதாக சொர்க்கம் செல்வார்.

தல்ஹா பின் உபைதுல்லாஹ் அவர்கள் அறிவிக்கிறார்கள்: பலீ என்ற பகுதியைச்சார்ந்த இரண்டு நபர்கள் அல்லாஹ்வின் தூதரிடம் வந்தார்கள் இருவரும் ஒரே நேரத்தில் இஸ்லாமை ஏற்றுக்கொண்டார்கள் அவர்களில் ஒருவர் மற்றவரை விட இபாதத்தில் அதிகம் ஈடுபடக்கூடியவராக இருந்தார் அவ்விருவரில் இபாதத்தில் அதிகம் ஈடுபாடுகொண்டவர் போரில் கலந்து அதில் ஷஹீத் ஆக்கப்பட்டார், அதன் பின்னர் ஒருவருடம் கழித்து மற்றவர் மரணித்தார் பிறகு தல்ஹா அவர்கள் கூறினார் ஒரு நாள் நான் சொர்க்கத்தின் வாசலில் அமர்ந்திருப்பதாகக் கனவு கண்டேன் நான் அவர்கள் இருவருடன் இருந்தேன் அப்போது அந்த இரண்டு நபர்களுடன் அவர்கள் இருவரில் இரண்டாவதாக மரணித்தவருக்கு சொர்க்கத்தில் நுழைய அனுமதியளிக்கப்பட்டது. பிறகு மீண்டும் வெளியே வந்து ஷஹீத் ஆக்கப்பட்டவருக்கு அனுமதியளிக்கப்பட்டது. பிறகு என்னிடம் திரும்பி வந்து நீ திரும்பிச்செல் உனக்கு இன்னும் நேரம் வரவில்லை! என்று கூறப்பட்டது. காலையில் தல்ஹா அவர்கள் இதை மக்களிடம் தெரிவிக்க ஆரம்பித்தார். இதைக் கேட்ட மக்கள் ஆச்சரியம் அடைந்தார்கள் இச்செய்தி அல்லாஹ்வின் தூதரை அடைந்தது அவர்களிடம் இச்செய்தியை மக்கள் தெரிவித்தார்கள் அப்போது நபி (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அவர்கள் எதனால் நீங்கள் ஆச்சரியமடைகிறீர்கள்–? அதற்கு அவர்கள் கூறினார்கள் அல்லாஹ்வின் தூதர் அவர்களே! இவர் இபாதத்தில் அதிகம் ஈடுபாடுகொண்டவர் பிறகு அவர் ஷஹீத் ஆக்கப்பட்டார் ஆனாலும் இரண்டாமவர் அவருக்கு முன்னர் சொர்க்கம் சென்றாரே! அப்போது அல்லாஹ்வின் தூதர் அவர்கள் இவர் அவருக்குப் பின் ஒரு வருடம் உலகில் இருக்கவில்லையா? என்று கேட்டார்கள் அதற்கு அவர்கள் ஆம் என்று கூறினார்கள் மேலும் அவர் ரமலானை அடைந்து நோன்பை நோற்று அந்த வருடத்தின் சில தொழுகைகளைத் தொழவில்லையா? என்று கேட்டார்கள் அதற்கும் அவர்கள் ஆம் என்று கூறினார்கள் அதற்கு அல்லாஹ்வின் தூதர் அவர்கள் அப்படியானால் அவ்விருவருக்கும் இடையில் வானத்திற்கும் பூமிக்கும் மத்தியிலான தூரமுள்ளது என்று கூறினார்கள்.

நூல்: இப்னு மாஜா 3925

இது போன்ற இன்னும் பல காரணங்கள் உள்ளன. இத்தகைய அனைத்து நன்மைகளையும் முழுமையாகப் பெற நமது நோன்பை அல்லாஹ்வுக்காக அமைத்துக்கொள்வோம்



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

1.கணவனைக் கவரும் வழிகள் 40

பத்ருப் போர் உணர்த்தும் பாடமும் படிப்பினைகளும்!

மண்ணறை வேதனை 001