மக்தப் மதரஸாவின் வளர்ச்சி மார்க்கத்தின் எழுச்சி...!
மௌலவி ஹஸீப் பாகவி ஃபாஜில் தேவ்பந்த்.
நமது இந்தியத் திருநாட்டில் கடந்த நூற்றி ஐம்பது வருடங்களாக மஸ்ஜித்கள் தோறும் காலை மாலை குர்ஆன் மதராஸாக்கள் நடைபெற்று வருகின்றன. அவை மக்தப் மதரஸா என்று அழைக்கப்படுகின்றன.
மக்தப் மதரஸா என்றால் ஆரம்ப பாடசாலை என்று பொருள். நமது இளவல்களுக்கு மார்க்கத்தின் அடிப்படை கொள்கைகள்- கட்டாய கடமைகள் -பெரும் பாவங்கள் -உபரியாக நற்செயல்கள் ஆகியவற்றை குறித்த முதன்மை அறிமுகத்தை வழங்குவது தான் மக்தப் மதரஸாவின் பிரதான நோக்கமாகும்.
*பொதுக் கல்வியும் சமயக் கல்வியும்*...
ஆங்கிலேயர் ஆட்சிக்கு முன் குருகுலக்கல்வி மற்றும் ஓராசிரியர் முறை நடைமுறையில் இருந்தது. பொருளாதாரத் தேவைகளுக்கு ஏதேனும் தொழில் ஒன்றை தெரிந்து கொள்வதும் குடும்ப வணிகத்தை தொடர்வதும் அப்போதைய வழமையாக இருந்தது.
இன்றும் தொடரும் பிரிட்டிஷார் அறிமுகப்படுத்திய கல்விமுறை அப்போது மக்களிடையே பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. கல்வி நிறுவனமயமாக்கப்பட்டது. ஒரு ஆசிரியர் முறை அகற்றப்பட்டு பல ஆசிரியர்கள் பயிற்றுவிக்கும் பள்ளிக்கூடங்களும் கல்லூரிகளும் உருவாக்கப்பட்டன. ஒரு ஆசிரியர் பல மாணவர்களை உருவாக்கிய நடைமுறை மாறி பல ஆசிரியர்கள் சேர்ந்து மாணவர்களை உருவாக்கின்ற நிறுவன முறை மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. பிரபலமான ஆசிரியர்களை தேடி சென்று கல்வி பயிலும் முறை அகன்று பள்ளிக்கூடங்கள் அல்லது நிறுவனங்களின் பெயர் பிரபலமானது.
ஆங்கிலேயர் உருவாக்கிய கல்விமுறை தொழிற்கல்வியை வழங்கியது. ஆங்கிலம் பிரதான மொழியாக இருந்தது. ஆகவே வேலைவாய்ப்பை பெரும் பொருட்டு மக்கள் பொதுக் கல்வியை நோக்கி சென்றார்கள். பொது கல்வி சமய கல்வி என்ற பாகுபாடு அப்போது உருவானது. இந்த தருணத்தில் தான் அகில இந்திய அளவில் அறிஞர்கள் இஸ்லாமிய அடிப்படை கல்வியை இளைய தலைமுறைக்கு கொண்டு செல்லும் வகையில் காலை மாலை மதரஸாக்களை மஸ்ஜிதுகளில் உருவாக்கினார்கள். இன்று வரை இஸ்லாமிய மறுமலர்ச்சியை உருவாக்குவதில் மக்தப் மதரஸாக்களின் பங்களிப்பு மிகப் பெரியது.
*1.மக்தப் மதரஸாக்கள் ஏன் வேண்டும்*...?
ஒருவர் ஐந்து ஆண்டுகள் மருத்துவம் கற்றறிந்த பின்னர் அதில் நிபுணத்துவம் பெறுகின்றார். மருத்துவர் என்று அழைக்கப்படுகின்றார். ஏதேனும் ஒன்றை கற்றறிந்த பின்னர் தான் அதில் நிபுணத்துவம் அடைய முடியும். அப்படியென்றால் வாழ்நாள் முழுவதும் ஒருவர் முஸ்லிமாக வாழ்வதற்கு இஸ்லாம் குறித்த கற்றல் அவசியமாகிறது . ஆனால் சமூகத்தில் இஸ்லாத்தை கல்வியாக அறிகின்ற பருவத்தை கட்டாயமாக கடக்கின்ற ஒரு சூழல் சமூகத்தில் இருக்கின்றதா என்ற கேள்வி எழுகிறது. அதற்கான ஒரு ஏற்பாடு அவசியம் வேண்டும் என்பதை நாம் புரிந்து கொள்கின்ற பொழுது அதற்கான பதிலாக வந்து நிற்பது தான் மக்தப் மதரஸாக்கள். ஒருவர் பத்து வயதிலிருந்து பதினான்கு வயது வரை ஐந்து ஆண்டுகள் தினசரி ஒரு மணி நேரம் அல்லது அதைவிட குறைவாக மார்க்கத்தை கற்றுக்கொண்டால்... தன் வாழ்நாள் முழுவதும் பின்பற்றுகின்ற அளவிலான இஸ்லாத்தை தெரிந்து கொள்ள முடியும் என்ற சிறப்பான ஏற்பாடு உண்மையில் உன்னதமானதாகும்.
சிறுவர்களின் 10 வயது முதல் 14 வரை உள்ள ஐந்து ஆண்டுகள் மிக முக்கியமானவை. குழந்தை பருவத்தில் இருந்து பெரியவர்களாக மாறுகின்ற தருணம். இந்த காலகட்டத்தில் பெரியவர்களான பின் எப்படி வாழ வேண்டும்...? எதை செய்ய வேண்டும்...? எதை செய்யக்கூடாது...? இறையச்சம்... மறுமை சிந்தனை... இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைபின்பற்றுதல்... உள்ளிட்ட அடிப்படையான, வாழ்க்கை கலை சார்ந்த விஷயங்கள் பயிற்றுவிக்கப்பட வேண்டும். எதையும் கற்றுத் தராமல் எதுவும் கற்றறியாமல் வளர்கின்ற இளைய தலைமுறை குடும்பத்திற்கும் சமுதாயத்திற்கும் சுமையாக மாறிவிடுவார்கள். ஆகவே... நாளைய இளைய தலைமுறை அதாவது நமது குழந்தைகள் சிறப்பாக வார்த்தெடுக்கப்பட... நல்லவர்களாக உருவாகிட... மார்க்கத்தின் அடிப்படை அம்சங்கள் அறிந்து கொள்ள... மக்தம் மதரஸாவிற்கு சிறுவர்கள் வருவதை உறுதி செய்வது பெற்றோர்களின் மாபெரும் கடமையாகும்.
*2.மக்தப் மதரஸாக்கள் ஏன் வேண்டும்*...?
பல்வேறு சமூக மக்கள் கலந்து வாழ்கின்ற இந்திய பெருநாட்டில் ஒவ்வொருவரும் கலாச்சாரம் மதம் சார்ந்த புரிதல்களுக்கான ஏற்பாடுகளை செய்து கொள்வது அடிப்படை உரிமையும் கடமையும் ஆகும்.
உண்மையில் இந்துக்களுக்கு கிறிஸ்தவர்களுக்கு இதில் பெரும் பிரச்சனை இல்லை.
இந்துக்களை பொறுத்தவரை ஒருவர் இந்து மதத்தை புரிந்து கொள்வதற்கு மிகப்பெரிய ஏற்பாடுகளும் வாய்ப்புகளும் இயல்பாகவே இருப்பதை அறிகின்றோம் . பாட நூல்கள்- திரைப்படங்கள்- நெடுந்தொடர்கள்- மீடியாக்கள்-சமூக வலைதளங்கள் இப்படி பல்வேறு அம்சங்கள் இந்து மதத்தை தெரிந்து கொள்வதற்கு துணை நிற்கின்றன.
அதேபோன்று கிறிஸ்தவத்தை கிறிஸ்தவர்கள் அறிந்து கொள்வதற்குமான ஏற்பாடு அளப்பெரியது. ஏராளமான கல்வி நிறுவனங்கள்- மருத்துவமனைகள்- தொண்டு நிறுவனங்கள் அதற்கென துணை செய்கின்றன.
ஆனால் ஒரு முஸ்லிம் இஸ்லாத்தை அறிந்து கொள்வதற்கு சிறந்த ஏற்பாடு மக்தப் மதரஸாக்கள் மட்டும் தான். அவற்றை தவிர்த்து விட்டால் இளைய தலைமுறை இஸ்லாத்தை அறிந்து கொள்வதற்கு எந்த வாய்ப்பையும் பெற மாட்டார்கள்.
*3.மக்தப் மதரஸாக்கள் ஏன் வேண்டும்*...?
பல் சமய மக்களோடு கலந்து வாழ்கின்ற இந்தியா போன்ற நாடுகளில் இஸ்லாத்தைக் குறித்த அடிப்படை புரிதல் உள்ளவர்களால் மட்டும் தான் இஸ்லாம் தொடர்பான உரையாடலை மற்ற மக்களிடம் முன் வைக்க முடியும். அழைப்புப் பணி என்பது ஏதோ மேடைப்பேச்சோடு நின்று போகின்ற ஒன்று அல்ல. சக மனிதர்களோடு உரையாடுதல்... வெவ்வேறு விஷயங்களை குறித்து பேசுகின்ற பொழுது இஸ்லாமிய பார்வையை முன் வைத்தல்...
மற்ற மக்கள் இஸ்லாத்தைக் குறித்து பேசினாலே அதை கடந்து விடுகின்ற பழக்கம் முஸ்லிம்களிடத்தில் அதிகரித்து வருகின்றது. இஸ்லாத்தை ஒட்டியோ வெட்டியோ பேசும் பொழுது மற்றவரின் மனதை தொடும் வகையில் உரையாடும் வாய்ப்பை முஸ்லிம்கள் தவிர்த்துக் கொள்கின்றார்கள். எதைக் குறித்து பேசுவது என்ற தயக்கம். இஸ்லாம் தொடர்பான விசாலமான புரிதல் இல்லாமை. இஸ்லாம் தொடர்பான புரிதலை சிறுவயதில் ஏற்படுத்துவது மக்தப் மதரஸாக்கள்தான். உரிய வயதில் மார்க்க செய்திகளை உள்வாங்கிய சிறுவர்கள் பின்னாளில் சிறந்த தாயிகளாக உருவாகும் வாய்ப்புண்டு.
*4.மக்தப் மதரஸாக்கள் ஏன் வேண்டும்*...?
ஜும்ஆ உரைகள் மார்க்கம் தொடர்பான வேறு பிற சொற்பொழிவுகள் மற்றும் இஸ்லாமிய நூல்கள் அனைத்தையும் புரிந்து கொள்வதற்கு இஸ்லாமிய கலைச் சொற்கள் மற்றும் அடிப்படை செய்திகளை சிறு வயதில் அறிந்திருப்பது அவசியம்.மக்தப் மதரஸா அதற்கான சிறந்த வாய்ப்பு என்றால் அது மிகையல்ல. சிறுவயதில் மக்தப் மதரசாவில் இஸ்லாத்தின் அடிப்படை விஷயங்களை அறிந்த ஒருவரால் பிற்பாடு இஸ்லாம் குறித்த எந்த சொற்பொழிவுகளை நூல்களை உள்வாங்கிக் கொள்ள முடியும்.
வாசிப்பதும் கேட்பதும் அருகிப்போன இந்த காலகட்டத்தில் மக்தப் மதரஸாக்களும் இல்லாமல் போய்விட்டால் இளைய தலைமுறையின் இஸ்லாமிய எழுச்சி எப்படி சாத்தியமாகும்..?
*மக்தப் மதரஸாக்களின் வீழ்ச்சி ஏன்*...?
இஸ்லாமிய அடிப்படை கல்வியை முஸ்லிம் சமூகம் இந்த நிமிடம் வரை புரிந்து கொள்ளவில்லை. ஒரு குழந்தையின் எதிர்காலம் என்பது மரணத்திற்கு முந்தைய காலம் மட்டுமல்ல... மரணத்திற்கு பிந்திய மறுமை வாழ்க்கையும் எதிர்காலம் தான் என்பதை புரிந்து கொள்ளாத அறியாமை இன்றும் முஸ்லிம்களிடம் தொடர்கிறது. ஆகவே தான் தன்னுடைய குழந்தையின் முப்பதாவது வயதில் 40 வது வயதில் சுபிட்சமாக இருக்க வேண்டும் என்று நினைக்கும் பெற்றோர் மரணத்திற்குப் பிறகும் சுவனம் சென்று சுபிட்சமாக இருக்க வேண்டும் என்பதை கவனத்தில் கொள்ளவில்லை. இவர்களை குறித்து தான் திருக்குர்ஆன் மறுமையை விற்று உலகத்தை விலைக்கு வாங்கிக் கொண்டவர்கள் என்று சாடுகிறது. உலக கல்வியின் முக்கியத்துவத்தை மிகத் தாமதமாக புரிந்து கொண்ட முஸ்லிம் சமுதாயம் அதற்கு பலிகேடாக இஸ்லாமிய அடிப்படை கல்வியை ஆக்கி இருப்பது வேதனையின் உச்சகட்டமாகும். மத்த மதரசாவின் அனைத்து வகையான வீழ்ச்சிக்கும் முழு காரணமாக இருப்பது பள்ளிக்கூட கல்விக்கு அதீத முக்கியத்துவத்தையும் தேவைக்கும் அதிகமான நேரத்தை வழங்குவதும் தான். 10 மணி நேரம் பள்ளிக்கூடம் அதற்குப் பிறகு நான்கு மணி நேரம் டியூஷன் என்ற அடிப்படையில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு கூடுதல் மதிப்பெண்களை பெற வேண்டும் என்ற நோக்கத்தை அடைய ஐந்து வயது முதலே குழந்தைகளின் சுவன வாழ்வு அடமானம் வைக்கப்படுகிறது.
அதுமட்டுமில்லாமல் ஆங்காங்கே தெருவுக்கு தெரு குர்ஆன் வகுப்புகள் நடைபெறுவதும் மிக முக்கியமான காரணமாகும். ஒவ்வொரு மஹல்லாவிலும் நம்முடைய குழந்தைகள் பள்ளிவாசலுக்கு சென்று அங்கே நடைபெறும் மக்தப் மதரசாவில் பயில்வதை உறுதி செய்ய வேண்டும். பள்ளிவாசல்களில் வகுப்புகள் நடைபெறுவதற்கு தடையாக இருக்கின்ற எந்த காரணத்தையும் மஹல்லா நிர்வாகம் கண்டு கொள்ளாமல் விட்டு விடக்கூடாது.
அது மட்டுமில்லாமல் குர்ஆனை அரபியில் ஓத கற்றுக் கொள்வது என்பது பெருமையாக பார்க்கப்படும் அதே நேரத்தில் இஸ்லாத்தை அறிவது பின்னுக்கு தள்ளப்படுகின்றது. ஒருவர் தனக்குத் தேவையான இஸ்லாமிய அறிவை கற்றுக் கொள்வதும் குர்ஆனை அரபியில் மட்டும் ஓத கற்றுக் கொள்வதற்கும் மிகப்பெரிய வேறுபாடு உண்டு. ஆகவே தான் இன்றைக்கு இணையத்தில் தஜ்வீது வகுப்புகள் மிகப்பெரிய செல்வாக்கு பெற்று வருகின்றன. முஸ்லிம்கள் நடத்தும் பல பள்ளிக்கூடங்கள் இந்த ஒன்றை மட்டுமே வைத்துக்கொண்டு முஸ்லிம் குழந்தைகளை இஸ்லாமியத்தில் வார்த்தெடுப்பதாக கூறிக்கொண்டு லட்சக்கணக்கில் கட்டணங்கள் பெறும் கல்வி நிறுவனங்களாக மாறி வருகின்றன. அத்தகைய பள்ளிக்கூடங்களில் நடைபெறும் ஆண்டு விழாக்களில் தொடக்கம் என்னவோ திருக்குர்ஆன் வசனங்களாக இருந்தாலும் ஆடலும் பாடலும் கொண்ட சாதாரண திருவிழா நிகழ்ச்சிகளாக நடைபெறுவதை பார்க்க முடிகின்றது.
*கவனம்*...மக்தப் மதரஸாக்களின் தடைகளை உரிய முறையில் கலைந்து சீர் செய்யாவிட்டால்... பொருளாதாரத்திலும் நவீன தொழில்நுட்பத்திலும் மிளிர்கின்ற அடுத்த தலைமுறை உருவாகுவார்கள். ஆனால் மறுமையில் வெற்றி பெற்று சுவனம் செல்லும் முஸ்லிம்களாக அவர்கள் இருக்க மாட்டார்கள்.
---
கருத்துகள்
கருத்துரையிடுக