நாய்கள் ஜாக்கிரதை

 



 


وَكَلْبُهُمْ بَاسِطٌ ذِرَاعَيْهِ بِالْوَصِيدِ


அவர்களின் நாய் (குகை)வாயிலில் தன் முன்னங்கால்கள் இரண்டையும் விரித்து வைத்(துக் கொண்டு அமர்ந்திருந்)தது. திருக்குர்ஆன்:- 18:18


 


இஸ்லாமியப் பெரும் தலைவர் நபிகள் நாயகம் முஹம்மத் (ஸல்) அவர்கள் நாய்கள் குறித்து எவ்வாறு பேசினார்கள். மற்றும் நடத்தினார்கள் என்பதை ஆராய்வது அவசியம். நபியவர்களின் கூற்றுகளும், செயல்களும் அனைத்து உயிரினங்கள் மீதும் கருணையை பிரதிபலிக்கும் ஒரு சமநிலையான பார்வையை வழங்குகின்றன.


 


இஸ்லாமிய சட்டத் தீர்ப்புகள் முஸ்லிம்களுக்கும் நாய்களுக்கும் இடையிலான தொடர்பு குறித்து முறையான வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது.


 


இஸ்லாம், வீட்டில் நாய்களை தேவையற்ற முறையில் வைத்திருப்பதை கூடாது என்று சொன்னாலும், நாய்களை வளர்ப்பதை முற்றிலுமாக தடை செய்யவில்லை. வீடுகளில் தேவைக்குரிய வளர்ப்பு நாய்களுக்கு சிறிது இடத்தை அனுமதிக்கிறது. இருப்பினும், தூய்மை முறையாகப் பராமரிக்கப்படவேண்டும்.


 


நாயின் உமிழ்நீர் தூய்மையற்றதாகக் கருதப்படுகிறது. இருப்பினும், நாய் இயல்பாகவே தூய்மையற்றது அல்ல. நாயைத் தொடுவது ஹராம் அல்ல. இருப்பினும், அதன் உமிழ்நீர் பட்டால், அதை முறையான சுத்தம் செய்ய வேண்டும்.


 


குர்ஆனில் நாய்கள் பற்றி மூன்று இடங்களில் மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளன. (5:4, 7:176, 18:18) அவற்றில் எதுவும் எந்த வகையிலும் எதிர்மறையாகக் குறிப்பிடப்படவில்லை. அந்த இரண்டு இடங்களில் உண்மையில் நாய்களை மக்களின் தோழர்களாகப் புகழப்படுகின்றன.


 


நாட்டு நடப்பு


 


டெல்லியில் தெருநாய்க் கடியால் பாதிக்கப்பட்ட மாணவி ஒருவர் ரேபிஸ் தொற்று ஏற்பட்டு உயிரிழந்தார். இதையடுத்து, 11-8-2025 அன்று இந்திய உச்ச நீதிமன்றம், தலைநகரின் தெருக்களில் இருந்து தெருநாய்களை அகற்றி, ஆறு முதல் எட்டு வாரங்களுக்குள் தங்குமிடங்களில் அடைத்து வைக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.


 


குறிப்பாக, டெல்லியின் அனைத்து பகுதிகளிலும் உடனடியாக நாய் காப்பகங்களை கட்ட வேண்டும். டெல்லியின் அனைத்து பகுதிகளில் இருந்தும், தெருநாய்களை விரைவில் பிடிக்கத் தொடங்க வேண்டும். அதை எப்படிச் செய்வது என்பது பற்றி அதிகாரிகள் பரிசீலிக்க வேண்டும். அவர்கள் இதற்காக ஒரு படையை உருவாக்க வேண்டுமானால், அதை விரைவில் செய்யுங்கள்.


 


உடனடியாக அனைத்து பகுதிகளில் இருந்தும் தெருநாய்களை கொண்டுவந்து காப்பகங்களில் அடைக்கவேண்டும். இந்த காப்பகங்களில், நாய்களை கையாளக் கூடிய, கருத்தடை மற்றும் நோய்த்தடுப்பு மருந்துகளை வழங்கக் கூடிய நிபுணர்கள் இருக்க வேண்டும். எந்தக் காரணத்தை கொண்டும் இந்த நாய்களை வெளியே விடக்கூடாது. நாய்கள் இந்த காப்பகங்களில் இருந்து தப்பிக்க முடியாது என்பதை உறுதிப்படுத்த சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட வேண்டும்.


 


நாய்க்கடி சம்பவங்கள் குறித்து புகாரளிக்க ஒரு ஹெல்ப்லைனைத் தொடங்கவேண்டும். டெல்லி தெருக்களை முற்றிலும் தெருநாய்கள் இல்லாததாக மாற்ற வேண்டும். தெரு நாய்களைத் தத்தெடுக்கவும் அனுமதிக்கக் கூடாது’ என உத்தரவிட்டனர்.


 


இந்த புதிய உத்தரவு நாய்களால் பாதிக்கப்படும் மக்களுக்கு ஆறுதலளிக்கும் விஷயமாக அமைந்துள்ளது. அதேநேரம், நாய்களைப் பிடிப்பதற்கு எதிராக ஆட்சேபம் தெரிவிக்கும் தனிநபர்கள் மற்றும் அமைப்புகள் மீதும் நடவடிக்கை எடுப்போம் என்றும் உச்ச நீதிமன்றம் எச்சரித்துள்ளதன் மூலம், இதுவரை நாய்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்துவந்த விலங்கு நல ஆர்வலர்கள் மற்றும் ‘பீட்டா’ போன்ற அமைப்புகளும் அதிர்ச்சியடைந்துள்ளன.


 


ஆகஸ்ட் 11 ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்கள் மீதான தீர்ப்பை உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 14, 2025) ஒத்திவைத்தது.


 


உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து, நாடு முழுக்க அந்த உத்தரவுக்கு எதிராக போராட்டங்கள் தொடங்கியுள்ளன.


 


டெல்லி, சென்னை, மும்பை, கொல்கத்தா உள்ளிட்ட நகரங்களில் விலங்கு நல அமைப்புகள் மற்றும் ஆர்வலர்கள் பதாகைகள் ஏந்தி, கோஷங்களை எழுப்பி பேரணி நடத்தி உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு தங்களது எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். இந்த விவகாரத்தில் நாடு முழுக்க பொதுமக்கள் இரண்டு பிரிவாக பிரிந்து நாய்களுக்கு ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.


 


வாயில்லா ஜீவன்களை காப்பகத்தில் அடைக்க உத்தரவிடுவது மனிதத் தன்மையற்ற செயல் என்றும், அந்த உத்தரவை உடனே திரும்பப் பெற வேண்டும் என்றும் நடிகர் நடிகைகள் உட்பட அதன் ஆதரவாளர்கள் நாய்களுக்கு ஆதரவாக போராடி வருகின்றனர்.


 


மறுபுறம் நாய்களுக்கு எதிரான குரலும் ஓங்கி ஒலித்து வருகிறது. சிறுவர்கள், முதியவர்கள், பெண்கள் என பலரும் தெருக்களில் அச்சமற்ற நிலையில் நடமாட இயலவில்லை" என்று எதிர்தரப்பினர் தெரிவிக்கின்றனர். எனவே, “நாய்கள்மீது இரக்கம் காட்டுவோர், சற்று மனிதர்கள்மீதும் இரக்கம்காட்டுங்கள். தெருநாய்களுக்கு எதிராக எடுக்கப்படும் நீதிமன்ற நடவடிக்கைகளைத் தடுத்திட முனையாதீர்கள்” என்று கூறுகின்றனர்.


 


உலக சுகாதார நிறுவன புள்ளிவிவரத்தின்படி, 2024-ல் மட்டும் இந்தியாவில் 37 லட்சம் பேர் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 305 பேருக்கு ரேபிஸ் நோய் பாதிப்பு ஏற்பட்டு இறந்துள்ளனர். 15 வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமிகளே பெரும்பாலும் நாய்க்கடி பாதிப்புக்கு ஆளாகின்றனர். இந்த அவலத்தை தடுக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. அதேநேரம் எது சாத்தியம் என்பதை ஆராய்ந்து நிபுணர்களின் ஆலோசனைப்படி நடவடிக்கை எடுப்பதே சிறந்த முடிவாக அமையும்.


 


நாய்களுக்கு இனவிருத்தி கட்டுப்பாடு மேற்கொள்வதும், ரேபிஸ் தடுப்பூசி செலுத்துவதுமே இப்போதைக்கு நம் கையில் உள்ள தீர்வாகும். இதிலுள்ள சிக்கல்களைக் களைந்து ஆண்டுக்கொரு முறை பெரிய அளவில் நாடு முழுக்க இப்பணியை மேற்கொள்ள வேண்டும். தொடர்ந்து இதனை மேற்கொள்ளும்போது நாய்களின் எண்ணிக்கை கட்டுக்குள் வரும்.


 


மனிதர்களை பாதுகாக்க நாய்களை அழிக்க முயல்வது எந்த வகையிலும் தீர்வாகாது. மனித இனத்தின் பாதுகாப்பு, விலங்குகளின் மீதான அக்கறை இரண்டுக்கும் இடையே சமநிலை பேணும்போது தீர்வு கிட்டும்.


 


அவசிய தேவைகளுக்கு


 


அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( مَنْ أَمْسَكَ كَلْبًا فَإِنَّهُ يَنْقُصُ كُلَّ يَوْمٍ مِنْ عَمَلِهِ قِيرَاطٌ إِلاَّ كَلْبَ حَرْثٍ أَوْ مَاشِيَةٍ ) எவர் நாய் வைத்திருக்கிறாரோ அவரது நற்செயல்களில் இருந்து ஒவ்வொரு நாளும் ஒரு "கீராத்" அளவுக்கு (அவற்றின் நன்மை) குறைந்து போய்விடும்; விவசாய பண்ணையையோ கால்நடைகளையோ (திருடு போய்விடாமல்) பாதுகாப்பதற்காக வைத்திருக்கும் நாய்களைத் தவிர. அறிவிப்பாளர்:- அபூஹுரைரா (ரலி) அவர்கள் நூல்:- புகாரீ-2322, முஸ்லிம்-3211, நசாயீ-4211


 


ஒருமுறை கண்பார்வையற்ற அப்துல்லாஹ் பின் உம்மி மக்தூம் (ரலி) அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து, "நாயகமே! நான் தொழுகைக்காகவும் வேறு தேவைகளுக்காகவும் வெளியே சென்று வருகிறேன். அப்போது பாதையில் பல்வேறு இடையூறுகள் ஏற்படுகிறது. எனவே, என்னிடம் ஒரு நாய் உள்ளது. அதை நான் துணைக்கு அழைத்துச் செல்கிறேன். இதுபோன்ற தேவைக்காக நான் அதைப் பயன்படுத்திக்கொள்ளலாமா? வினவினார். அப்போது நபியவர்கள் அவ்வாறு பயன்படுத்தி கொள்ளலாம் என அவருக்கு அனுமதியளித்தார்கள்.


 


இஸ்லாத்தில் செல்லப்பிராணியாக நாயை வளர்ப்பது (ஹராம் எனும்) தடுக்கப்பட்டவையாகும். என்றாலும், கண் பார்வையற்றவர்கள் கூடவே வரக்கூடிய நாய்கள் அவர்களுக்கு சில நேரங்களில் சரியான வழியை அறிவிக்கிறது. இப்படியான சில நன்மைகளை கருதி, நாய் வளர்ப்புச் சட்டங்களில் சிலருக்கு சலுகைகள் வழங்குகிறது இஸ்லாம்.


 


பாதுகாவல் நாய்கள், வேட்டை நாய்கள், பணி நாய்கள், துப்பறிவு நாய்கள் இவ்வாறு அவற்றில் பல பயன்பாடுகள் உண்டு.


 


துப்பறிவுக்காகவும் வேட்டைக்காகவும், வீடு தோட்டம் கால்நடைகள் ஆகியவற்றின் பாதுகாப்பிற்காகவும், இன்ன பிற பணிகளுக்காகவும் நாய்களை வளர்க்கலாம். (பனி பிரதேசங்களில் வண்டி இழுக்க நாய்கள் உதவுகிறது.)


 


நாய்கள் மனிதர்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகின்றன. வெறுமனே ஒரு செல்லப்பிராணியாக வளர்க்காமல் பல்வேறு வகையான வேலைகளைச் செய்யப் பழக்கப்படுத்தப்பட்டதாய் இருக்க வேண்டும். காவல் துறை, துப்பறியும் துறை போன்றவற்றில் நாய்களின் பங்கு இன்றமையாதது. “ஷெப்பர்ட்” இன நாய்கள் ஆடு மேய்க்கப் பயன்படுகின்றன. மோப்ப நாய்கள் குற்றவாளிளை கண்டறிதல், வெடிபொருள்களைக் கண்டறிதல் போன்றவற்றிற்குப் பயன்படுகின்றன.


 


பாதுகாப்புக்காக


 


அல்லாஹுத்தஆலா குர்ஆனில் கஹ்ஃப் அத்தியாயத்தில், "குகைவாசிகள்" என்று சிலாகித்துக் கூறுகின்ற இறையச்சமுள்ள இளைஞர்கள் (மத்திய துருக்கியில் அமைந்துள்ள அப்சுஸ் எனும் ஊரில் கி.பி. 337 அல்லது 384 வாக்கில்) "திக்யானூஸ்" என்று அழைக்கப்படும் அரசனின் காலத்தில் வாழ்ந்து வந்தனர்.


 


இந்த இறையச்சமுள்ள இளைஞர்கள் வாழ்ந்த பகுதியில் இறைமறுப்பும் அசத்திய கொள்கையும் கொடிகட்டிப் பறந்தன. இந்நிலையில் அந்த இளைஞர்கள் ஓரிறைக் கொள்கையில் உறுதியோடு நிலைத்திருந்தனர். அவர்கள் தமது சமய கோட்பாட்டை பாதுகாக்கவும், இறைவன் மறுப்பாளர்களுடன் கலந்து வாழாமல் ஒதுங்கிவிடவும் வேண்டி தனிமையைத் தேர்ந்தெடுத்தனர்.


 


எனவே, அவர்கள் ஒரு குகைக்குள் தஞ்சம் அடைந்தனர். அவர்களுடன் (பாதுகாப்புக்காக) ஒரு நாயும் சென்று அமர்ந்தது. அந்த நாய் அந்த இளைஞர்களில் ஒருவருடைய வேட்டை நாயாகும். அவர்களின் நல்லெண்ணத்தை வரவேற்று கண்ணியப்படுத்தும் வகையில் அந்த இளைஞர்களை நீண்ட காலம் அக்குகையில் இறைவன் உறங்க வைத்தான்.


 


அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள். அந்த நாய் அவர்களுக்காக வாயிலில் இருந்து காவல் காத்துக்கொண்டிருந்தது. இவ்வாறு அந்தக் குகைவாயிலில் அவர்களைக் காவல் காப்பது போல் மண்டியிட்டு அமருவது அந்த நாயின் வழக்கமாக இருந்தது. இருப்பினும், அது வாயிலுக்கு வெளிப்பகுதியில் தான் அமர்ந்திருந்தது. குகைவாசிகளுக்குக் கிடைத்து வந்த அந்த இறையருள், அவர்களுடன் இருந்த நாய்க்கும் சேர்த்து கிடைத்தது. எனவே, அவர்களை தழுவிய துயில் அமர்ந்திருந்த அந்த நிலையிலேயே அவர்களின் நாயையும் தழுவிக்கொண்டது.


 


இதை நல்லோருடனான சகவாசத்தின் பலன் எனலாம். ஆம்! வரலாற்றில் இடம்பெறுகின்ற தகுதியை அந்த நாயும் பெற்றுவிட்டது. நூல்:- தஃப்சீர் இப்னு கஸீர், தஃப்சீர் அத்தஹ்ரீர் வத்தன்வீர்


 


நெடுங்காலமாக நாய்கள் மனிதர்களின் பாதுகாப்புக்கு உதவியாக இருந்து வருகின்றன. நாய்களுக்கு முறையான உணவு, சுதந்திரமான நடமாட்டம், உயிரியல் தேவைகள் போன்றவை கிடைக்கும்போது மனிதர்களிடம் அவை இயல்பாக நடந்து கொள்கின்றன.


 


வேட்டைக்காக


 


(நபியே!) நீர் கூறுவீராக! தூய்மையான (உண்) பொருள்கள், வேட்டையாடும் மிருகங்களில் எவற்றுக்கு நீங்கள் பயிற்சி அளித்து, அல்லாஹ் உங்களுக்குக் கற்றுக் கொடுத்ததைக் கற்றுக் கொடுத்தீர்களோ அவை (வேட்டையாடிய பிராணி)கள் ஆகியவை உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளன. உங்களுக்காக அவை பிடித்(துக் கொண்டு வந்)தவற்றை நீங்கள் உண்ணலாம். (வேட்டைக்கு அனுப்பும்போது) அவற்றின்மீது அல்லாஹ்வின் பெயர் கூறுங்கள். திருக்குர்ஆன்:- 5:4


 


அருமை நாயகம் (ஸல்) அவர்களால் விடுதலை செய்யப்பட்ட முன்னாள் அடிமை அபூராஃபிஉ (ரலி) அவர்கள் கூறியதாவது. ஒருமுறை கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள் நாய்களைக் கொல்லுமாறு உத்தரவிட்டார்கள். அவை கொல்லப்படலாயின. அப்போது மக்கள் நபியவர்களிடம் வந்து, ( يَا رَسُولَ اللَّهِ، مَا يَحِلُّ لَنَا مِنْ هَذِهِ الْأُمَّةِ الَّتِي أَمَرْتَ بِقَتْلِهَا؟ ) "நாயகமே! நீங்கள் கொல்லுமாறு உத்தரவிட்ட இந்த இனத்தில் எதையேனும் நாங்கள் பயன்படுத்த அனுமதி உண்டா?" என்று கேட்டனர். அப்போது நபியவர்கள் சற்று நேரம் அமைதியாக இருந்தார்கள். பின்னர் (மேற்காணும் 5:4) திருவசனம் அருளப்பெற்றது. நூல்:- தப்ரானீ, தஃப்சீர் இப்னு அபீஹாத்திம், தஃப்சீர் இப்னு கஸீர்


 


அதீ பின் ஹாத்திம் (ரலி) அவர்கள் கூறியதாவது. ‘‘நாங்கள் இந்த (வேட்டை) நாய்களின் மூலம் வேட்டையாடும் ஒரு சமுதாயத்தார் ஆவோம்” என்று நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கூறி (அதன் சட்டம் என்னவென்று) வினவினேன்.


 


அதற்கு அவர்கள், ( إِذَا أَرْسَلْتَ كِلاَبَكَ الْمُعَلَّمَةَ وَذَكَرْتَ اسْمَ اللَّهِ، فَكُلْ مِمَّا أَمْسَكْنَ عَلَيْكُمْ، وَإِنْ قَتَلْنَ إِلاَّ أَنْ يَأْكُلَ الْكَلْبُ، فَإِنِّي أَخَافُ أَنْ يَكُونَ إِنَّمَا أَمْسَكَهُ عَلَى نَفْسِهِ، وَإِنْ خَالَطَهَا كِلاَبٌ مِنْ غَيْرِهَا فَلاَ تَأْكُلْ ) ‘‘பயிற்சியளிக்கப்பட்ட உங்கள் (வேட்டை) நாய்களை அல்லாஹ்வின் பெயர் சொல்லி (வேட்டையாட) நீங்கள் அனுப்பியிருந்தால் உங்களுக்காக அவை கவ்விப் பிடித்து வைத்திருப்பவற்றை நீங்கள் உண்ணலாம்; அவை அதைக் கொன்றுவிட்டாலும் சரியே! நாய் தின்றுவிட்டதை மட்டும் உண்ணாதீர்கள்! ஏனென்றால், அது தனக்காக அதைப் பிடித்துவைத்திருக்குமோ என நான் அஞ்சுகிறேன். இவ்வாறே வேறு நாய்கள் அதனுடன் கலந்துவிட்டிருந்தாலும் (அது வேட்டையாடிக் கொண்டுவரும் பிராணியை) உண்ணாதீர்கள்” என்று கூறினார்கள். நூல்:- புகாரீ-5483, முஸ்லிம்-3900, நசாயீ-4190


 


 


வேட்டைப் பிராணியைப் பிடித்து வருவதற்கென்றே நாய்களுக்கு பயிற்சி அளிப்பார்கள். உரிமையாளர் உத்தரவுக்குக் கட்டுப்பட்டு நடப்பதும், வேட்டைப் பிராணியைத் தின்று விடாமல் அப்படியே கவ்விக் கொண்டு வந்து சேர்ப்பதும் நாய் பயிற்சி பெற்றுவிட்டது என்பதற்கு அடையாளங்கள் ஆகும்.


 


இவ்வாறு பயிற்சி அளிக்கப்பட்ட நாயை வேட்டைக்காக அனுப்பும் போதே அல்லாஹ்வின் பெயரைக் கூறி அனுப்ப வேண்டும். அது சென்று வேட்டைப் பிராணியைக் கவ்விக்கொண்டு வந்து உரிமையாளரிடம் சேர்த்தவுடன் பிராணி உயிருடன் இருந்தால் அதை முறைப்படி அறுத்து உண்ணலாம். நாய் கொண்டுவரும்போது வேட்டைப் பிராணி செத்துப்போயிருந்தால் அறுக்க வேண்டிய அவசியமில்லை; அதையும் உண்ணலாம் ஆனால், வேட்டைப் பிராணியைக் கவ்விபிடிக்கும்போது, வேட்டை நாய் அதைத் தான் உண்ணாமல் இருந்திருக்க வேண்டும். நாய் அதைத் தின்றிருந்தால் நாம் அதை உண்ணலாகாது என்பதே பெரும்பாலான அறிஞர்களின் கருத்து. அவ்வாறே, பயிற்சி அளிக்கப்பட்ட நாயுடன் வேறொரு நாயும் சேர்ந்து வேட்டையாடினால் அதையும் நாம் உண்ணலாகாது. நூல்:- அல்மின்ஹாஜ்


 


முஸ்லிம்கள் வளர்க்கக்கூடிய வேட்டை நாயின் வாயில் கவ்விய வேட்டைப் பிராணியை சாப்பிடலாம் என்பதால், வளர்ப்பு நாயின் உமிழ்நீர் அசுத்தமாக இருக்க முடியாது என்கிறனர் சிலர். அல்லாஹ்வே அறிந்தவன்.


 


இவ்வாறு வளர்க்கும்போது அந்த நாய்களைத் தொட வேண்டிய நிலை அவசியம் ஏற்பட்டால் தொடுவது தவறல்ல. “நாயின் எச்சில் கடுமையான அசுத்தம்” என்று நபிமொழி எச்சரிக்கிறது. எனவே, அதனுடைய எச்சில் நம்மீது படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இது போன்ற தேவைகளின்றி செல்லப்பிராணியாக நாய்களை வளர்க்கக் கூடாது. நாயை செல்லப்பிராணியாக வளர்ப்பது பாவக்காரியமாகும்.


 


அவசியத் தேவைகளுக்காக நாய் வளர்த்தாலும், நடுவீட்டில் வைத்து (அதாவது நமது படுக்கையறை வரை வரும் அளவுக்கு மிகுந்த செல்லம் கொடுத்து) வளர்க்கக்கூடாது. வீட்டின் ஒரு ஓரத்தில் அல்லது கொல்லைப்புறத்தில் வைத்து வளர்க்கலாம். அது நம்மை அல்லது நமது குழந்தைகளை தொடவோ, நக்கவோ அனுமதிக்கக்கூடாது.


 


மண்ணே மருந்து


 


அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( يُغْسَلُ الإِنَاءُ إِذَا وَلَغَ فِيهِ الْكَلْبُ سَبْعَ مَرَّاتٍ أُولاَهُنَّ أَوْ أُخْرَاهُنَّ بِالتُّرَابِ ) நாய் வாய்வைத்த பாத்திரம் ஏழு தடவை (தண்ணீரால்) கழுவப்பட வேண்டும். அவற்றின் முதல் தடவையோ அல்லது கடைசித் தடவையோ மண்ணிட்டு கழுவ வேண்டும். அறிவிப்பாளர்:- அபூஹுரைரா (ரலி) அவர்கள் நூல்:- புகாரீ-172, முஸ்லிம்-469, திர்மிதீ-84


 


நாய் ஒரு பாத்திரத்தில் வாய் வைத்துவிட்டால் அந்தப் பாத்திரத்தில் உள்ள உணவுப் பொருளை கொட்டிவிட வேண்டும். மேலும், அந்தப் பாத்திரத்தை நன்றாகக் கழுவிட வேண்டும். ஏழு தடவை அந்தப் பாத்திரத்தை கழுவிட வேண்டும். முதல் தடவை(யோ அல்லது கடைசித் தடவையோ) மண்ணைப் பயன்படுத்தி இவ்வாறு செய்வது கட்டாயம் என்று அறிஞர்களில் சிலரும், ஏற்றது என்று வேறு சிலரும் கூறுகின்றனர். மேலும், நாயின் எச்சில் அசுத்தமானது என இதிலிருந்து அறிய முடிகிறது. நூல்:- அல்மின்ஹாஜ், ஃபத்ஹுல் முல்ஹிம்


 


மேலை நாட்டு ஆய்வாளர் ஒருவர் நாயின் வாயில் இருந்து வரக்கூடிய எச்சிலில் பயங்கரமான நோய்களை உருவாக்கும் கிருமிகள் இருப்பதை கண்டறிந்து, இந்தக் கிருமிகளை அழிப்பதற்கான மருந்தை கண்டுபிடிப்பதற்கான ஆய்வில் இறங்கினார். எந்த மருந்தாலும் அவற்றைக் கொல்ல முடியவில்லை. இறுதியில் அவர் தோற்றுப்போனார். வெறுத்துப்போய் கோபத்தில் ஆய்வுக்காக வைத்திருந்த அந்த எச்சிலை மண்ணில் வீசியெறிந்தார். பிறகு மண்ணில் கிடந்த அந்த கிருமிகளைப் பார்க்கிறார். அந்த கிருமிகள் அனைத்தும் செத்துப்போய் கிடந்தன. அவருக்கோ ஆச்சரியம். மீண்டும் ஆய்வை தொடர்ந்தார். இறுதியில் அந்த கிருமிகளை கொல்வதற்கு சரியான மருந்து மண் தான் என்று கண்டறிந்து வெற்றி கண்டார்.


 


விற்பனை


 


அபூ மஸ்வூத் அல்அன்சாரி (ரலி) அவர்கள் கூறியதாவது. ( أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنْ ثَمَنِ الْكَلْبِ ) அருமை நாயகம் (ஸல்) அவர்கள் நாய் விற்ற காசை தடை செய்தார்கள். நூல்:- புகாரீ-2237, முஸ்லிம்-3191, அபூதாவூத்-, திர்மிதீ-1200, நசாயீ-4218


 


அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது. ( نَهَى عَنْ ثَمَنِ الْكَلْبِ إِلاَّ كَلْبَ الصَّيْدِ ) (அண்ணல் நபி - ஸல் அவர்கள்) வேட்டை நாயைத் தவிர மற்ற நாய்களை விற்ற காசுக்கு தடை விதித்தார்கள். நூல்:- திர்மிதீ-1202


 


நாயை விற்பதும், நாய் விற்ற காசைப் பயன்படுத்துவதும் கூடாது. ஆனால், வீட்டுக் காவல், தோட்டக் காவல், வேட்டையாடல் போன்ற பயன்பாடுகளுக்காக உள்ள நாய்களை விற்பதும் வாங்குவதும் செல்லும் என்றும், அவற்றை விற்று காசு செல்லும் என்றும் சில மார்க்க அறிஞர்கள் கூறுகிறார்கள். ஏனெனில், மேற்சொன்ன நோக்கங்களுக்காக நாய்களைப் பயன்படுத்த அனுமதி உண்டு. எனவே, அவற்றை விற்பதும் செல்லும்; இந்த நபிமொழியில் தடைசெய்யப்பட்டது வேறு நோக்கங்களுக்காக (அதாவது செல்லப்பிராணி, பொழுதுபோக்கு) பயன்படுத்தப்படும் நாய்களுக்கே பொருந்தும் என்பது இவர்களின் கருத்தாகும். நூல்:- அல்மின்ஹாஜ், தக்மிலா


 


கருணைக் காட்டுதல்


 


நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( فِي كُلِّ كَبِدٍ رَطْبَةٍ أَجْرٌ ) உயிருடைய பிராணி ஒவ்வொன்றின் விஷயத்திலும் (அதற்கு உதவி செய்யும்பட்சத்தில் மறுமையில் உங்களுக்கு) அதற்கான பிரதிபலன் கிடைக்கும். நூல்:- புகாரீ-2363


 


அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( بَيْنَمَا كَلْبٌ يُطِيفُ بِرَكِيَّةٍ كَادَ يَقْتُلُهُ الْعَطَشُ، إِذْ رَأَتْهُ بَغِيٌّ مِنْ بَغَايَا بَنِي إِسْرَائِيلَ، فَنَزَعَتْ مُوقَهَا فَسَقَتْهُ، فَغُفِرَ لَهَا بِهِ ) (முன்னொரு காலத்தில்) நாய் ஒன்று ஒரு கிணற்றைச் சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்தது. அது தாகத்தால் செத்துவிடும் நிலையில் இருந்தது. அப்போது, இஸ்ரவேலர் சமுதாயத்தின் விபச்சாரிகளில் ஒருத்தி அதைப் பார்த்தாள். உடனே, அவள் தன் காலுறையைக் கழற்றி (அதில் தண்ணீரை எடுத்து) அந்த நாய்க்குப் புகட்டினாள். அதன் காரணமாக அவளுக்குப் பாவமன்னிப்பு வழங்கப்பட்டது. அறிவிப்பாளர்:- அபூஹுரைரா (ரலி) அவர்கள் நூல்:- புகாரீ-3467


 


ஒருவர் பெரும்பாவியாகவே இருந்தாலும் அவர், தன்னலமின்றி ஒரு மிருகத்தை தாகத்திலிருந்து காப்பாற்றினால்கூட அவருக்கு சொர்க்கத்திற்குச் செல்லும் பாதை இலேசாகும். மற்றும் இறைவனின் மன்னிப்பும் கிடைக்கக்கூடும் என்று தெரிகிறது. சுருங்கக்கூறின், பிற உயிரினங்கள்மீது இரக்கம் காட்டினால் அதற்கும் நன்மை உண்டு


 


வானவர்கள் வருவதில்லை


 


கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( لاَ تَدْخُلُ الْمَلاَئِكَةُ بَيْتًا فِيهِ كَلْبٌ وَلاَ صُورَةُ تَمَاثِيلَ ) நாயும், உருவப் படங்களும் உள்ள வீட்டினுள் வானவர்கள் நுழைய மாட்டார்கள். அறிவிப்பாளர்:- அபூதல்ஹா (ரலி) அவர்கள் நூல்:- புகாரீ-3225, முஸ்லிம்-4274, நசாயீ-4208


 


ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது. (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் கண்மணி பெருமானார் (ஸல்) அவர்களிடம் ஒரு (குறிப்பிட்ட) நேரத்தில் வருவதாக வாக்களித்திருந்தார்கள். ஆனால் அந்த நேரம் வந்ததும் ஜிப்ரீல் வரவில்லை. “அல்லாஹ்வும், அவனது தூதர்களும் வாக்குறுதிக்கு மாறு செய்ய மாட்டார்கள்” என்று அண்ணலார் கூறிவிட்டு பின்னர் திரும்பிப் பார்த்தபோது, தமது கட்டிலுக்கு கீழே நாய்க்குட்டியொன்று இருப்பதைக் கண்டார்கள்.


 


உடனே ( يَا عَائِشَةُ مَتَى دَخَلَ هَذَا الْكَلْبُ هَا هُنَا ) “ஆயிஷா! இந்த நாய் இங்கு எப்போது நுழைந்தது?” என்று கேட்டுவிட்டு, உடனே அதை அப்புறப்படுத்துமாறு உத்தரவிட்டார்கள். அவ்வாறே அப்புறப்படுத்தப்பட்ட பின்னர் ஜிப்ரீல் (அலை) அவர்கள் வந்தார்கள்.


 


அண்ணலார், ( وَاعَدْتَنِي فَجَلَسْتُ لَكَ فَلَمْ تَأْتِ ) "நீங்கள் வருவதாகச் சொன்னீர்கள் உங்களுக்காக நான் (எதிர்பார்த்து) அமர்ந்திருந்தேன். ஆனால், நீங்கள் வரவில்லையே (ஏன்)?" என்று வினவினார்கள். அதற்கு ஜிப்ரீல் (அலை) அவர்கள் ( مَنَعَنِي الْكَلْبُ الَّذِي كَانَ فِي بَيْتِكَ إِنَّا لاَ نَدْخُلُ بَيْتًا فِيهِ كَلْبٌ وَلاَ صُورَةٌ ) "உங்கள் வீட்டினுள்ளிருந்த நாயே என(து வருகை)க்குத் தடையாக அமைந்துவிட்டது. (வானவர்களாகிய) நாங்கள் நாயும், உருவப்படமும் உள்ள வீட்டுக்குள் நுழையமாட்டோம்" என்று கூறினார்கள். நூல்:- முஸ்லிம்-4272, நசாயீ-4209


 


அலங்காரத்திற்காகவும், செல்லப் பிராணி போன்று விளையாட்டிற்காகவும் வளர்க்கப்படும் நாயையே இங்கே குறிப்பிடப்படுகிறது.


 


பாசத்திற்குரியவர்களை தள்ளிவைத்துவிட்டு நாய் போன்ற செல்லப் பிராணிகளை பஞ்சணையில் பக்கத்தில் வைத்துக்கொள்ளும் பைத்தியங்கள் வாழும் காலமிது.


 


உயிர்களிடத்தில் ஜீவகாருண்யமும், மிருகங்கள்மீது பெரும் இரக்கமும் தங்களுக்கு மட்டுமே உண்டு என்று சிலர் கருதுகின்றனர். மேலும், நாய் போன்ற வளர்ப்புப் பிராணிகளிடம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்ற இஸ்லாத்தின் அணுகுமுறையை அவர்கள் வெறுக்கின்றனர்.


 


நாய்களை வளர்ப்பது மட்டுமல்ல அவற்றையும் முத்தமிட்டு அவற்றைத் தடவி, அவற்றுடன் விளையாடி, முதியவர்களும் சிறுவர்களும் தங்களுடைய கைகளை நக்குமாறு அவற்றிடம் கொடுக்கும் அளவுக்குச் சென்றுவிட்டனர். அது மட்டுமல்ல; பல்வேறு சந்தர்ப்பங்களில் உணவுத் தட்டுகளில் மீதமிருக்கும் உணவுகளையும் பானங்களையும் நக்குமாறும் அருந்துமாறும் நாய்களை அனுமதிக்கின்றனர்.


 


நாயின் வாயில் உள்ள கிருமிகள் பற்றிய ஆய்வு செய்த லண்டன் ராணி மேரி பல்கலைக்கழகத்தின் நச்சுயிரியல் மற்றும் நுண்மவியல் (Virology and bacteriology) பேராசிரியர் “ஜான் ஆக்ஸ்போர்ட்” கூறும்போது, " நாய்கள், வாழ்க்கையின் பாதி நாட்களை பல அசுத்தமான இடங்களை முகர்ந்து வருவதால், அதன் வாய் முழுவதும் பல வகையான அசுத்தங்களும் கிருமிகளும் நிறைந்து காணப்படுகின்றன.


 


நாய்களை முத்தமிடுவது, அவைகளின் நாக்கால் நம்மை நக்க விடுவதின் மூலம் பல கொடுமையான கிருமிகள் மனிதனை பாதிக்கின்றன.




ஒருவீட்டில் நாய் வளர்த்தார்கள். அவர்கள் வெளியே செல்லும்போது, கணவன் மனைவியை நோக்கி! "நாயை கட்டிடியா?" என்று கேட்டான்.


மனைவி, "நான் தான் நாயை எப்பவோ கட்டிடேனே!" என்றாள்.


 


நாய்களைக் கொல்லலாம்


 


அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நாய்களைக் கொல்லும்படி உத்தரவிட்டார்கள்; உடனே நாங்கள் மதீனாவிற்குள்ளேயும் அதன் சுற்று வட்டாரங்களிலும் பரவிச் சென்று, ஒரு நாயையும் விடாமல் அனைத்தையும் கொன்றோம். நூல்:- முஸ்லிம்-3197


 


நாய்களால் சுகாதாரக் கேடு ஏற்படுவது தெரிந்ததே. நாயின் எச்சிலால் நோய்க்கிருமிகள் பரவும் ஆபத்து உண்டு. இதனாலேயே ஆரம்பத்தில் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் பொதுவாக நாய்களை கொன்றுவிடுமாறு உத்தரவிட்டார்கள். பின்னர் வெறிநாய், தொல்லை தரும் நாய்களை மட்டும் கொன்றுவிடுங்கள் என நபியவர்கள் சட்டத்தை தளர்த்தினார்கள். எனவே, நாய்களைக் கொல்லுமாறு நபியவர்கள் உத்தரவிட்டதே வெறிநாய் போன்றவற்றுக்கே பொருந்தும். நூல்:- அல்மின்ஹாஜ், தக்மிலா


 


ஒருவர் காரணமே இல்லாமல் ஒரு மிருகத்தை துன்புறுத்தினால், அது அல்லாஹ்வின் கோபத்திற்கு ஆளாக்கும்.


 


பேராசான் பெருமானார் (ஸ

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

1.கணவனைக் கவரும் வழிகள் 40

மண்ணறை வேதனை 001

பத்ருப் போர் உணர்த்தும் பாடமும் படிப்பினைகளும்!