நபி(ஸல்) அவர்கள் இன்று இருந்திருந்தால்..!
ㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤ ㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤ
ㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤ
قُلْ اِنْ كُنْتُمْ تُحِبُّوْنَ اللّٰهَ فَاتَّبِعُوْنِىْ يُحْبِبْكُمُ اللّٰهُ وَيَغْفِرْ لَـكُمْ ذُنُوْبَكُمْؕ وَاللّٰهُ غَفُوْرٌ رَّحِيْمٌ
"நபியே, நீர் கூறும்: 'நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பீர்களாயின், என்னைப்பின்பற்றுங்கள்; அல்லாஹ் உங்களை நேசிப்பான்; உங்கள் பாவங்களையும்உங்களுக்கு மன்னிப்பான்; மேலும், அல்லாஹ் மன்னிப்பவனாகவும், மிக்ககிருபையுடையோனாகவும் இருக்கிறான்.'" (அல்குர்ஆன் 3:31)
لاَ يُؤْمِنُ أَحَدُكُمْ، حَتَّى أَكُونَ أَحَبَّ إِلَيْهِ مِنْ وَالِدِهِ وَوَلَدِهِ وَالنَّاسِ أَجْمَعِينَ
"உங்களில் எவரும், நான் தன்னுடைய தந்தை, தன்னுடைய குழந்தை, மற்றும்மக்கள் அனைவரையும் விட அவருக்குப் பிரியமானவராக ஆகும் வரை அவர்ஈமான் கொண்டவராக ஆகமாட்டார்" என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள். (புகாரி)
இன்றைய ஹிஜ்ரி ஆண்டு 1447 ஆகும் (செப்டம்பர் 5, 2025).
எனவே, ஹிஜ்ரி காலண்டர் கணக்குப்படி, மு - கமது நபி அவர்கள் இறந்து சுமார் 1436 ஆண்டுகள் ஆகின்றன..
இந்திய நாட்டில் இன்று நிலவும் பல்வேறு சவால்களுக்குத் தீர்வு காண, முகமது நபி அவர்கள் இருந்திருந்தால், பின்வரும் வழிகாட்டுதல்களை அளித்திருப்பார்:
' மத நல்லிணக்கம் மற்றும் ஒற்றுமை
இந்தியாவின் பன்முகத்தன்மை நிறைந்த சமூகத்தில், மத நல்லிணக்கம் மிகவும் அவசியம். நபி அவர்கள் இருந்திருந்தால், அனைத்து மதங்களையும் மதித்து, அவற்றின் நம்பிக்கைகளையும், வழிபாட்டு முறைகளையும் ஏற்றுக்கொள்ளுமாறு வழிகாட்டியிருப்பார். “உங்களுக்கு உங்கள் மார்க்கம், எனக்கு என் மார்க்கம்” (குர்ஆன் 109:6) என்ற கோட்பாட்டைப் பின்பற்றி, அனைத்து மதத்தினரும் அமைதியாகவும், ஒற்றுமையாகவும் வாழ வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியிருப்பார். இது இந்தியாவில் மதங்களுக்கு இடையே ஏற்படும் மோதல்களைத் தவிர்க்க உதவியிருக்கும்.
சமூக நீதி மற்றும் சமத்துவம்
நபி அவர்கள் எந்தவிதமான சாதி, இன, நிற வேறுபாடுகளையும் ஏற்றுக்கொள்ளவில்லை. அவர் "அனைத்து மனிதர்களும் ஆதம் மற்றும் ஹவ்வாவிடமிருந்து வந்தவர்கள்" என்று போதித்தார். இந்தியாவில் உள்ள சாதிய ஏற்றத்தாழ்வுகள், வறுமை மற்றும் சமூக அநீதிகளைக் களைவதற்கு, அவர் அனைத்து மக்களும் சமமாக நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தியிருப்பார். ஏழைகள் மற்றும் ஒடுக்கப்பட்டோரின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டிருப்பார்.
பெண்களின் பாதுகாப்பு மற்றும் உரிமைகள்
இந்தியாவில் பெண்களுக்கு எதிரான வன்முறை, வரதட்சணை கொடுமைகள் மற்றும் பாலினப் பாகுபாடு போன்ற பிரச்சனைகள் அதிகமாக உள்ளன. நபி அவர்கள் இருந்திருந்தால், பெண்களுக்கு கல்வி, சொத்துரிமை, மற்றும் சமுதாயத்தில் உரிய மரியாதை ஆகியவற்றை உறுதி செய்திருப்பார். பெண் குழந்தைகளைப் பாதுகாப்பதற்கும், அவர்களுக்கு அதிகாரமளிப்பதற்கும் தேவையான வழிமுறைகளைச் சொல்லிக்கொடுத்திருப்பார்.
ஊழல் மற்றும் நேர்மை
ஊழல் என்பது இந்தியாவின் வளர்ச்சிக்கு ஒரு பெரிய தடையாக உள்ளது. நபி அவர்கள், "மோசடி செய்தவன் நம்மைச் சேர்ந்தவன் அல்ல" என்று போதித்தார். இன்று இருந்திருந்தால், நேர்மையையும், வெளிப்படைத்தன்மையையும் கடைப்பிடிக்க வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தியிருப்பார். அரசியல், நிர்வாகம், மற்றும் வணிகம் என அனைத்துத் துறைகளிலும் நேர்மையாக நடந்துகொள்ளுமாறு வழிகாட்டியிருப்பார்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு
இந்தியாவில் சுற்றுச்சூழல் மாசுபாடு, நீர் பற்றாக்குறை, மற்றும் காடுகள் அழிப்பு போன்ற பிரச்சனைகள் அதிகரித்து வருகின்றன. நபி அவர்கள், "தண்ணீரை வீணாக்காதீர்கள், நீங்கள் ஓடும் ஆற்றங்கரையில் இருந்தாலும்" என்று போதித்தார். அவர் இருந்திருந்தால், இயற்கை வளங்களைப் பாதுகாக்கவும், சுற்றுச்சூழல் சமநிலையைப் பேணவும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியிருப்பார்.
இறுதியாக, அவர் தனிப்பட்ட நடத்தைகள் மற்றும் சமூக பொறுப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுத்திருப்பார். இந்திய மக்கள் தங்களின் அன்றாட வாழ்வில் நேர்மை, கருணை, மற்றும் சகோதரத்துவத்தைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தியிருப்பார். அதுமட்டுமின்றி, அமைதி மற்றும் அன்பின் மூலம் மட்டுமே சமூகத்தில் மாற்றத்தைக் கொண்டுவர முடியும் என்பதையும் வலியுறுத்தியிருப்பார்.
இறுதி இறைத்தூதர் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் இறந்து 14 நூற்றாண்டுகள் கடந்து விட்டது. ஆனாலும் அவர்கள் போதித்த போதனைகளும் வழிகாட்டுதல்களும் இன்றைக்கும் தேவைப்படுகிறது. நபிகளார் ஏதோ ஒரு காலகட்டத்தில் வாழ்ந்தார்கள் என்பதை விட இந்த நூற்றாண்டில் இந்த மண்ணிலே வாழ்ந்தால் என்ன செய்வார்கள் என்பதை எண்ணிப் பார்க்கிறேன்.
பாராட்டுக்குரிய பண்புகள்.
ü
விஞ்ஞான வளர்ச்சி
இன்று நபி(ஸல்) அவர்கள் வந்தால் அபரிமிதமான விஞ்ஞான வளர்ச்சி அவர்களுடைய கவனத்தைக் கவரும். தொலைத்தொடர்பு சாதனங்கள், போக்குவரத்துச் சாதனங்கள் என எவற்றையெல்லாமோ மனிதன் கண்டுபிடித்து இருக்கின்றானே, நான் சொல்லியதைச் சரியாகச் செய்தியிருக்கிறானா?
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ‘அறிவு என்பது நீங்கள் தொலைத்துவிட்ட ஒரு பொருள் போன்றது. அதன் மீது உங்களுக்கு உரிமை உண்டு. நீங்கள் எங்கு இருந்தாலும் அதனைத் தேடிப் பிடியுங்கள்’. இந்த உவமையை நன்றாகக் கவனியுங்கள். நம்மிடமுள்ள ஒரு பொருள் தொலைந்துவிட்டால் அது திரும்பக் கிடைக்கும் வரை நமக்கு நிம்மதி கிடையாது. பத்து ஆண்டுகள் கழிந்தாலும் ‘தொலைந்துவிட்டது’ என்றே கைசேதப்படுவோம். எவ்வாறு தொலைத்துவிட்ட பொருளை ஆர்வமாகத் தேடுவோமோ அதுபோன்றே அறிவைத் தேடவேண்டும். தொலைந்துபோன பொருள் நமக்குச் சொந்தமானது. நமக்கு உரிமை இருக்கிறது. எனவே கல்வி என்பது நமது உரிமை. எனவே அதைத் தேடிக் கண்டடைய வேண்டும்.
திருக்குர்ஆனும் ‘ஆய்ந்து பார், சிந்தித்துப் பார்’ என்றே சிந்திக்கச் சொல்கிறது. வானங்கள், பூமி, இரவு, பகல், ஒட்டகங்கள் என அனைத்தையும் குறித்துச் சிந்திக்கச் சொல்கிறது. எனவே அறிவுத் துறையிலே மனிதன் முன்னேறி இருப்பதைக் கண்டு நபிகளார் மகிழ்வார்கள்.
ü
மனித நேயம்
இந்த உலகத்தில் நிலவி வருகின்ற மனித நேயம் குறித்தும் நபி(ஸல்) அவர்கள் மகிழ்வார்கள். ஆயிரம் வேறுபாடுகள் இருந் தாலும் இவ்வுலகில் எங்காவது அநீதி என்றால் முழு மனித இனமும் கொதித்து எழும். தென்னாப்பிரிக்காவில் கருப்பர்கள் ஒடுக்கப்பட்டார்கள் அது ஆப்பிரிக்க பிரச்னை என சும்மா இருந்துவிட்டோமா இல்லையே! உலகத்தில் உள்ள அத்தனை நாடுகளும் கொதித்து எழுந்த காரணத்தால் அங்கே வெள்ளையரின் கொட்டம் நின்று போனது. உலகின் எந்தப் பகுதியில் கொடுமைகள் நடந்தாலும் முழு மனித சமுதாயமும் அதை எதிர்ப்பதை நம்மால் பார்க்க முடிகிறது.
போஸ்னியாவில் கொடுமைகள் நிகழ்ந்த போது உலகமே கண்டித்த காட்சியை நாம் பார்க்கிறோம். இன்றும் இஸ்ரேல் செய்யக் கூடிய பல்வேறு கொடுமைகளை அமெரிக் காவைத் தவிர்த்து எல்லா நாடுகளும் கண்டித்துக்கொண்டு தான் இருக்கின்றன. மிகப்பெரிய மனிதநேயம் என்னவென்றால் நன்மையை ஏவி தீமையை விலக்குவது ஆகும்.
அதுபோல உலகத்தில் எங்காவது வெள்ளமோ, பஞ்சமோ, புயலோ, சுனாமியோ நடைபெற்றால் உலகமே அதற்கு ஆதரவுக் கை நீட்டியது. இது மிகச் சிறந்த மனிதநேயக் கோட்பாடு. நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் விரும்பியது அந்தக் கருத்தைதான். ‘மனித குலம் இறைவனுடைய குடும்பம். யார் மனித குலத்திற்கு உதவி செய்கின்றார்களோ அவர்கள் தான் இறைவனுக்கு நெருக்கமானவர்கள். யார் மனித குலத்திற்கு உதவினார்களோ அவர்கள் தான் மனிதர்களில் சிறந்தவர்கள்’ என்றார்கள் நபி(ஸல்) அவர்கள்.
மனிதநேயக் கோட்பாடு அவர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி தரக்கூடியதாக இருக்கும். காரணம் அநீதிகளைத் தட்டிக்கேட்பதில் அவர்கள் மிகவும் கவனம் செலுத்தினார்கள். அவர்கள் நபியாவதற்கு முன்பே ஹில்ஃபுல் ஃபுளூல் என்ற அமைப்பில் இணைந்து பணியாற்றினார்கள். வெளியூரிலிருந்து வந்து மக்காவில் பொருள்களை விற்பவர்களுக்குச் சில மக்காவாசிகள் பொருள்களை வாங்கிக்கொண்டு பணத்தைக் கொடுக்க மாட்டார்கள். இதனைத் தட்டிக் கேட்பதற்கு ஒரு சபை ஆரம்பிக்க வேண்டும் என்று அதனை ஆரம்பித்தார்கள்.
வேதனைக்குரிய பண்புகள்
ü
பண மோகம்
நபி(ஸல்) அவர்கள் கவலைப் படுகின்ற விஷயங்கள் இன்றைக்கு ஏராளம் இருக்கின்றன. மனிதனுக்குப் பிடித்திருக்கின்ற பணப் பைத்தியம். இதில் அரசியல்வாதிகள் மட்டும்தான் மோசம் என்று எண்ணிக் கொள்ளாதீர்கள். சாதாரண மனிதன் உட்பட பலரும் பணவெறி பிடித்து அலைகின்றனர். வரதட்சணை வாங்குகிறவர்கள் யார்? ஓர் ஏழை இன்னொரு ஏழையிடம் வரதட்சணை வாங்குகிறான். அரசியல்வாதி செய்கின்ற ஊழலுக்கும் இதற்கும் என்ன வித்தியாசம் இருக்கின்றது? நபி(ஸல்) அவர்கள் இன்றைக்கு இதுபோன்ற வரதட்சணைத் திருமணங்களைப் பார்த்தால் என்ன சொல்வார்கள்? அதையே நாம் செய்ய வேண்டும்.
நபிகளார் இப்போது சந்தைக்குச் சென்றால் அங்கே வெங்காயம் பதுக்கி வைக்கப்பட்டு இருக்கும். நபி(ஸல்) அவர்களின் காலத்தில் ஒருமுறை சந்தைக்குச் சென்றபோது, மேலே காய்ந்த கோதுமை இருந்தது. உள்ளே கையை விட்டால் ஈரக் கோதுமை. நபி(ஸல்) அவர்கள் அந்த வியாபாரியைக் கண்டித்தார்கள். ‘மக்களுக்குக் குறைகளைச் சொல்லாமல் விற்கக்கூடாது. பதுக்குபவன் பாவி ஆவான்’ என்று சொன்னார்கள்.
மன இச்சைகளைப் பின்பற்றுபவர்கள் நாய்க்கு ஒப்பாவார்கள். நாயை நீங்கள் விரட்டினாலும் நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டுதான் இருக்கும். அதை விரட்டா விட்டாலும் நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டுதான் இருக்கும் இந்தப் பணவெறி பிடித்த மனிதர்களுக்கு திருப்தி என்பது கிடையாது.
ü
சாதிய மோதல்கள்
நபி(ஸல்) அவர்கள் இப்போது நம்மைப் பார்த்துக் கவலைப்படும் விஷயம் மக்களிடையே இருக் கின்ற மோதல்கள். சாதி, இன, நாடு, பிராந்திய மோதல்கள் என்று அடித்துக் கொள்பவர்களைப் பார்த்து அவர்கள் மிகவும் கவலைப்படுவார்கள். அன்றைய அரேபிய குலம் அப்படித்தான் இருந்தது. அவர்கள்இரண்டுகூறாக்கப்பட்டார்கள்.அரேபியர் அஜமியர்(மொழியற்றவர்கள்). அரேபியர்களை விட மற்றவர்களெல்லாம் ஒன்றும் தெரியாத முட்டாள்கள் என்று கருதினார்கள். இன்று நம் நாட்டில் மிலேச்சர்கள், பறையர்கள் என்று சொல்வது போல யூதர்கள் அல்லாதவர்களை ஜென்டல்ஸ்என்றுஅழைப்பதைப்போல அரேபியரல்லாதவர்களைக் கருதினார்கள்.
குறைஷிகள் குறைஷி அல்லாதவர்கள் என்று பிரித்தார்கள். ஹஜ் செய்யும் போது இரண்டு பேரும் ஒன்றாக ஹஜ் செய்ய மாட்டார்கள். இப்படி எல்லாம் இருந்த ஒரு சூழலைத் தான் நபி(ஸல்) அவர்கள் மாற்றிக் காட்டினார்கள். ஆனால் 14 நூற்றாண்டுக்குப் பிறகும் ஹோட்டலில் உயர் சாதிக்கு ஒரு டம்ளர், தாழ்ந்த சாதிக்கு இன்னொரு டம்ளர், என்ன சாதி என்று தெரி யாதவனுக்கு டிஸ்போசபில் டம்ளர் என்று மூன்று டம்ளர்களை வைத்திருப்பதைப் பார்த்தால் என்ன நினைப்பார்கள்? உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்று சக மனிதனுக்கு இழைக்கப்படும் கொடுமைகளைக் கண்டு ‘மனித இனத்தை இப்படியா கேவலப்படுத்துவீர்கள்? மனிதனுடைய உணர்வுகளை இப்படியா காயப்படுத்துவீர்கள்?’ என்று மன வேதனைக்குள்ளாவார்கள்.
இந்த நிலைமைக்குக் காரணம் என்ன? ஆணவம், அகந்தை. உண்மையை மறுப்பதும் பிறரை இழிவாகக் கருதுவதும் ஆணவம். ஆணவக்காரர்கள் உண்மையை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். மனித இனம் சமம் என்பது யாவரும் அறிந்த உண்மை. ஆனால் அவர்களுடைய ஆணவம் அதை ஏற்றுக் கொள்ள மறுக்கின்றது. எல்லாம் சமம் என்றால் ஒன்றாக அமர்ந்து உணவருந்த வேண்டும். ஒரே மாதிரி நடத்தப்பட வேண்டும். வழிபாட்டுத் தலத்தில் ஒரே மாதிரி நடந்து கொள்ள வேண்டும். இதை எல்லாம் செய்ய முடியுமா? ஆகவே அவன் வேறு, நான் வேறு என்றுதான்மனிதனை அடிமைப்படுத்துகின்றான்.
ü
மதவெறி
மதவெறி இன்றைக்கு உலகத்தில் எல்லா நாட்டிலும் இருக்கின்றது. பாபரி மஸ்ஜித் தகர்க்கப்பட்டது. குஜராத்தில் 3000 முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டனர். ஒரிசாவில் கிரஹாம் ஸ்டெயின்ஸ் என்ற கிறித்தவப் பாதிரியõரும் அவரது இரண்டு குழந்தைகளும் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டனர். இன்றைக்கு மேலை நாடுகளில் இஸ்லாத்தின் மீதும் முஸ்லிம்கள் மீதும் வெறுப்பலைகள் வீசுகின்றது. மதத்தின் பெயரால் துவேஷம் உருவாக்கப்பட்டுள்ளது.
மதம், இனம், குலத்தின் பெயரால் மனிதன் நெறி தவறிச் செல்வதற்கு நபி (ஸல்) அவர்கள் முற்றுப்புள்ளி வைத்தார்கள். பிற மதங்களைப் பழித்துப்பேசாதீர்கள். அவர்கள்வணங்குகின்றஅல்லாஹ் அல்லாதவற்றைநீங்கள்திட்டாதீர்கள் விமர்சனம் என்பது வேறு, இழிவு படுத்துவது என்பது வேறு இரண்டுக்கும் வித்தியாசம் இருக்கிறது. உன்னுடைய கருத்தை பிறர்மீது திணிக்காதே! திணித்தால் பிரச்னைகள் வரும்.
கட்டாய மதமாற்றம் செய்தால் பிரச்னைகள் வரும். பணத்தைக் கொடுத்து, பொருளைக் கொடுத்து கட்டாயப்படுத்துவது கூடாது. இஸ்லாத்தில் கட்டாயம் இல்லை. எந்தக் கருத்தையும் திணிக்காதே எவருடைய உரிமையும் பறிக்காதே! உனக்குப் பிடிக்காத சமுதாயம் என்ற காரணத்திற்காக எவருடைய உரிமையும் பறிக்காதே! ஒரு சமூகத்தின் மீது கொண்டுள்ள பகையின் காரணமாக அந்தச் சமூகத்திற்கு எதிராக நீங்கள் அநீதி இழைக்காதீர்கள்’ என்று நபி(ஸல்) அவர்கள் போதித்தார்கள்.
இந்துவோ, முஸ்லிமோ, கிறித்தவர்களோ எல்லோரும் நல்லவரே! எல்லா சமூகத்திலும் நல்லதும் கெட்டதும் இருக்கின்றன. திருக்குர்ஆனிலே கிறித்தவர்களைப் புகழ்ந்து பல வசனங்கள் இருக்கின்றது.
لَـتَجِدَنَّ اَشَدَّ النَّاسِ عَدَاوَةً لِّـلَّذِيْنَ اٰمَنُوا
الْيَهُوْدَ وَالَّذِيْنَ اَشْرَكُوْا ۚ وَلَـتَجِدَنَّ اَ قْرَبَهُمْ مَّوَدَّةً
لِّـلَّذِيْنَ اٰمَنُوا الَّذِيْنَ قَالُوْۤا اِنَّا نَصٰرٰى ؕ ذٰ لِكَ بِاَنَّ
مِنْهُمْ قِسِّيْسِيْنَ وَرُهْبَانًا وَّاَنَّهُمْ لَا يَسْتَكْبِرُوْنَ
وَاِذَا سَمِعُوْا مَاۤ اُنْزِلَ اِلَى الرَّسُوْلِ تَرٰٓى اَعْيُنَهُمْ
تَفِيْضُ مِنَ الدَّمْعِ مِمَّا عَرَفُوْا مِنَ الْحَـقِّۚ يَقُوْلُوْنَ
رَبَّنَاۤ اٰمَنَّا فَاكْتُبْنَا مَعَ الشّٰهِدِيْنَ
‘நிச்சயமாக நாங்கள்
கிறித்தவர்கள் என்று சொல்பவர்கள் தான் மற்ற அனைவரையும் விட இறைநம்பிக்கையாளருடன் நேசம் கொண்டிருப்பதை நீர் காண்பீர். இதற்குக்
காரணம் அவர்களுக்குள் வணக்கத்தில் திளைத்த அறிஞர்களும் துறவிகளும் இருக்கின்றனர். மேலும் அவர்கள்
அகந்தை கொண்டவர்களாகவும் இல்லை’ (திருக்குர்ஆன் 5:82)
இன்னும் (இத்தகையோர்) இத்தூதர் மீது இறக்கப்பட்டதை செவியேற்றால், உண்மையை அவர்கள் உணர்ந்துகொண்ட காரணத்தால் அவர்கள் கண்கள் கண்ணீர் வடிப்பதை நீர் காண்பீர் “எங்கள் இறைவனே! நாங்கள் (இவ் வேதத்தின் மீது) நம்பிக்கை கொண்டோம்; எனவே, (இவ்வேதம் சத்தியமானது என்று,) சாட்சி சொல்வோருடன் எங்களையும் நீ பதிவு செய்து கொள்வாயாக! என்றும் அவர்கள் கூறுவார்கள்5:83.
எல்லாருடைய உணர்வுகளுக்கும் மதிப்பளிக்க வேண்டும். நபிகள் நாயகத்தைச் சந்திப்பதற்காக நஜ்ரான் தேசத்து கிறித்தவர்கள் வந்தபோது நபிகளார் அவர்களைப் பள்ளிவாசலில் தங்க வைத்தார்கள். அவர்களுக்கு விருந்தளிக்க நபி(ஸல்) அவர்கள் எழுந்து சென்றார்கள். ‘நாங்கள் விருந்து கொடுக்கின்றோம்’ என்று தோழர்கள் சொன்னபோது நபி(ஸல்) அவர்கள் ‘இல்லை இல்லை என்னுடைய தோழர்கள் அபிசீனியாவிற்கு அகதிகளாகச் சென்ற போது நஜ்ஜாஷி என்றகிறித்தவ மன்னர் எனது தோழர்களை நன்றாகக் கவனித்துக் கொண்டார். அங்கிருந்து வந்தவர்களைக் கவனிக்க வேண்டிய பொறுப்பு எனக்கு இருக்கிறது’ என்று கூறினார்கள்.
ü
வறுமை
நாட்டில் எங்கு பார்த்தாலும் குடிசைகள். எங்கு பார்த்தாலும் யாசகர்கள். வறுமையின் காரணமாக விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கிறார்கள். இன்றைக்கும் மருத்துவ வசதிகள் இல்லாத கிராமங்கள் ஏராளம். நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் வறுமையை ஒழித்துக் காட்டியவர்கள். ‘வறுமை இல்லாத சமுதாயம் உருவாக்கப்பட வேண்டும்’ என விரும்பினார்கள். ‘இறைவா..! என்னை வறுமையில் இருந்தும் இறை நிராகரிப்பில் இருந்தும் பாதுகாப்பாயாக!’ என்று நபி(ஸல்) அவர்கள் பிரார்த்தித்தபோது தோழர்கள் ‘வறுமையையும், இறை நிராகரிப்பையும் ஒன்றாகச் சேர்த்துச்சொல்கிறீர்களே வறுமை இறைநிராகரிப்புக்கு இட்டுச் செல்லுமா?’ என்று வினவினார்கள். அதற்கு நபிகளார் ‘ஆம் இரண்டும் ஒன்று தான். பசி இருந்தால் இறைவனை எங்கு நினைப்பது?’ என்றார்கள். எனவே வறுமை ஒழிப்பில் உறுதியாக இருந்தார்கள்.
‘நான் ஒரு சமுதாயத்தை உருவாக்கப் போகிறேன். அந்தச் சமுதாயம் எப்படி இருக்கும் தெரியுமா? ஒருவர் தான தர்மப் பொருட்களை எடுத்துக்கொண்டு தெருத்தெருவாகச் செல்வார். வாங்குவதற்கு ஆட்கள் இருக்காது. அப்படிப்பட்ட ஒரு சமுதாயத்தை நான் உருவாக்க விரும்புகிறேன்’ என்று ஒருமுறை நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். இஸ்லாமிய வரலாற்றில் அப்படிப்பட்ட ஒரு சமூகம் உருவானது.
வறுமையைப் போக்குவதற்கு நபி(ஸல்) அவர்கள் காட்டிய வழிமுறைகள்
கடுமையாக உழைக்க வேண்டும்
உழைப்பைத் தவிர வறுமைக்கு வேறு எந்த மருத்துவமும் கிடையாது. இலவசத்தை வாங்கித் தின்று கொண்டு இருந்தால் முன்னேற முடியாது. பள்ளிவாசலில் ஒருவர் தங்கியிருந்து தொழுது கொண்டே இருந்தார். ‘பள்ளியிலேயே இருக்கின்றீர்களே.. உங்கள் வாழ்வாதாரத்திற்கு என்ன செய்கின்றீர்கள்?’ என்று கேட்டார்கள். அதற்கு அவர், ‘என் சகோதரர் எனக்கும் சேர்த்துத் தருகிறார்’ என்றார். ‘உங்களை விட உங்கள் சகோதரரே சிறந்தவர்’ என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நபி(ஸல்) அவர்களிடம் யாசகம் கேட்டு வந்தவரிடம் வீட்டிலிருந்த குவளையையும் போர்வையையும் எடுத்துவரச் செய்து அதனை ஏலம் விட்டுக் கிடைத்த இரண்டு திர்ஹத்தில் கோடாரி வாங்கி வரச் செய்து தாமே பிடியும் போட்டுக் கொடுத்து ‘காட்டிற்குச் சென்று விறகு வெட்டிப் பிழைத்துக் கொள்’ என அறிவுரை சொல்லி அனுப்பினார்கள். தனி மனிதன் மட்டுமல்ல, எந்தச் சமுதாயம் உழைக்கின்றதோ அந்தச் சமுதாயம் முன்னேறும். எந்த நாடு கடும் உழைப்பைச் செலுத்துகிறதோ அந்த நாடு முன்னேறும்.
இல்லாதவர்களுக்குக் கொடுங்கள்
‘செல்வம் செல்வந்தர்களுக்கு மத்தியிலே சுழன்று கொண்டிருக்க வேண்டாம்’ என்று திருமறைக் குர்ஆன் அறிவுறுத்துகிறது. பணக்காரர்கள் தங்களுக்குள்ளேயே கொடுக்கல் வாங்கல் செய்து கொண்டிருக்காமல் ஏழை எளியோருடனும் தொடர்பு கொள்ள வேண்டும். அதற்கான மிக முக்கியமான ஏற்பாடுதான் ஜகாத்
எனும் அழகிய திட்டம். ஜகாத்தை முறைப்படி கொடுத்தாலே வறுமையை ஒழித்துவிட முடியும்.
இருப்பவர்கள் இல்லாதவர்களுக்குத் தர்மமாகக் கொடுக்க வேண்டும். இயலாதவர்கள் வட்டி இல்லாத கடனாகக் கொடுக்க வேண்டும். இல்லையெனில் பணம் இருப்பவர் பணத்தை முதலீடு செய்யட்டும். உடல் உழைப்பைக் கொடுப்பவர் வியாபாரம் செய்யட்டும். வருகின்ற இலாப, இழப்பில் இருவரும் பங்கு போட்டுக் கொள்ளட்டும். இவ்வாறு இருப்பவர்கள் இல்லாதவர்களுக்குக் கொடுக்க வேண்டும்.
வேலை வாய்ப்புகளைப் பெருக்க வேண்டும்
நபி(ஸல்) அவர்களுடைய காலத்தில் தொழிற்சாலைகள் இல்லை. அப்போது விவசாயம்தான் பொருளாதாரத்தின் ஆணி வேர். அப்போது அவர்கள் இயற்றிய சட்டம் என்ன தெரியுமா? ‘உழ வேண்டிய நிலத்தை உழாமல் மூன்று ஆண்டுகள் வைத்திருந்தால் அது அரசாங்கத்துக்குச் சொந்தம்’. ஒன்று
நீ உழுது வைத்துக்கொள். உழாமல் தரிசாக ஒரு நிலத்தை வைத்திருந்தால் அது அரசுக் குச் சொந்தம். அதை அரசாங்கம் எடுத்துக் கொண்டு யாருக்குக் கொடுக்க வேண்டுமோ அவருக்குக் கொடுக்கும். அன்றைய காலகட்டத்தில் வேலைவாய்ப்பைப் பெருக்க விவசாயம்தான் இருந்தது.
வீண் செலவுகளைக் குறைக்க வேண்டும்
ஊதாரித்தனமான செலவுகளைக் குறைத்தாலே வறுமை கட்டுக்குள் வரும். எதற்காகக் கடன் வாங்க வேண்டும்? கடன் வாங்கி விருத்தசேனம் செய்பவர்கள் இருக்கின்றார்கள். சடங்குகளுக்காக, வீடு குடி போவதற்காகக் கடன் வாங்கி வறுமையாகிப் போனவர்கள் இருக்கின்றார்கள். மதுவுக்கு அடிமையாகி வறுமையாகிப் போனவர்கள் இருக்கின்றார்கள். ஆண்களுக்கு அதிகமான செலவுகளை ஏற்படுத்துவது பெண்கள் தான். இது போன்ற செலவுகளைக் குறைத்தால் வறுமை குறையும்.
ü
மது
நபி(ஸல்) அவர்கள் மதுக்கடைகளைப் பார்த்தால் கடும் கோபமடைவார்கள். ‘மது தீமைகளின் தாய்’ என்று கூறியவர்கள் அவர்கள். ஆனால் இன்று நாம் மதுவை வருமானங்களின் தாயாக ஆக்கி இருக்கின்றோம். எவ்வளவு வருமானம் வந்தாலும் பரவாயில்லை என்று மதுக்கடைகளை இழுத்து மூடி விடுவார்கள்.
நம்பிக்கையாளர்களுக்கு ஆட்சி அதிகாரம் அளிக்கப்பட்டால் அவர்கள் நல்லவற்றை ஏவுவார்கள். தீயவற்றைத் தடுப்பார்கள். மக்களுக்கு நன்மை செய்வதற்காக அரசே தவிர வருமானத்தைப் பெருக்குவதற்கு அல்ல. மக்களைக் குடிகாரர்களாக மாற்றி அதில் இருந்து வருமானமா? எனவே அதனைத் தடை செய்து விடுவார்கள்.
அரசியல்
இன்றைய சட்டமன்ற, நாடாளுமன்ற அவைகளைப் பார்த்தால் நபி(ஸல்) அவர்கள் கோபமடைவார்கள். சண்டைகளும், மோதல்களும் நடைபெறும் இடமாக அவை மாறிவிட்டன.
‘பதவிக்காக ஏங்குபவர்களையும் பதவியை அடைய முயற்சி செய்பவர்களையும் பதவிகளிலே அமர்த்தாதீர்கள். பதவியை வெறுப்பவர்களே பதவிக்கு உரியவர்கள்.’ என்று நபி(ஸல்) அவர்கள் போதித்துள்ளார்கள். பதவியை வேண்டாம் என்று சொல்லக்கூடிய மக்களிடம் பதவியைக் கொடுக்க வேண்டும்.
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ‘பதவிக்குத் தகுதியானவர்கள் இருக்க அவர்களை விட்டு தகுதியற்றவர்களைப் பதவியில் அமர்த்துவது இறைவனுக்கும், இறைத்தூதருக்கும், மக்களுக்கும் செய்கின்ற துரோகம்’
2000 ரூபாய் வாங்கிக்கொண்டு ஓட்டுப் போடுவது துரோகம் இல்லையா? நாட்டைக் காட்டிக் கொடுக்கின்ற துரோகம். அவன் கொள்ளை அடித்ததில் கொஞ்சம் தருகிறான். அதற்கு அதிகமாகக் கொள்ளை அடிக்கப் போகிறான். இது ஒரு விஷச் சக்கரம்.
சாதாரண மனிதர்களால் தேர்தலில் நிற்க முடியாது.கொள்ளைக்காரர்களும் சுவிஸ் வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்களும் தான் தேர்தலில் நிற்க முடியும்.
நல்லவர்களைப் பதவியில் மர்த்துங்கள். மதத்தை, இனத்தை, சினிமா கவர்ச்சியைப் பார்த்து ஓட்டுப் போடாதீர்கள். பதவியில் அமர்த்தினால் மட்டும் போதாது, தட்டிக் கேட்க வேண்டும். நாம் கேள்வி கேட்க வேண்டும். கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றினாயா? என்று மக்கள் கேட்க வேண்டும்.
அறப்போரிலேயே சிறந்த அறப்போர் ஆட்சியாளர்களிடம் உண்மையை எடுத்துரைப்பதுதான். அதனால்தான் கலீஃபாக்கள் ஆட்சி செய்கின்றபோது கலீஃபாக்களிடமே மக்கள் கேள்வி கேட்டார்கள்.
இந்தப் பிரச்னைகளுக்குத் தனித் தனியாக நாம் தீர்வுகளைச் சொன்னாலும் சில அடிப்படையான விஷயங்களைப் பற்றி மனிதன் அறியாத வகையில் இந்த பிரச்னைகளுக்குத் தீர்வு கிடையாது. மனிதன் இந்த உலகத்தில் படைக்கப்பட்ட நோக்கம் இறைவனுடைய கட்டளைகளை ஏற்றுக்கொண்டு வாழ்வதுதான். எனவே இறைவனுக்குக் கீழ்ப்படிந்து வாழ வேண்டும். பொறாமை, பதவி ஆசை, நயவஞ்சகம், ஆணவம் இது போன்ற பல்வேறு கெட்ட குணங்களால் ஆன்மா அழிந்து போகும். எனவே ஆன்மாவைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.
இந்த உலக வாழ்க்கையோடு எல்லாம் முடிந்து விடவில்லை. இதற்குப் பிறகு இன்னும் ஒரு வாழ்க்கை இருக்கின்றது. அது கணக்குக் கேட்கப்படுகின்ற நாள், அது கூலி வழங்கப்படுகின்ற நாள். எந்த ஒரு பேரமும், பரிந்துரையும் உங்களுக்கு உதவாது. ஆகவே மறுமைக்கு முன் தப்பிக்க முடியாது என்பதை நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும்.
மனித சமூகத்திற்கு ஆற்ற வேண்டிய கடமைகள் மனித சமூகத்தினுடைய பிரச்னைகளைத் தீர்க்க வேண்டிய பொறுப்பு முஸ்லிம்களுக்கு இருக்கின்றது. எனவேதான் முஸ்லிம் சமுதாயத்தைச் சிறந்த சமுதாயம் என்று இறைவன் குறிப்பிடுகின்றான். நன்மையை ஏவி தீமையை விலக்குகின்ற சமுதாயம் தான் சிறந்த சமுதாயம்.
நபி(ஸல்) அவர்கள் இன்றைக்கு இல்லை. ஆனால் அவர்களுடைய போதனைகளும், வழிகாட்டுதல்களும் இன்றைக்கும், என்றைக்குமாக இருக்கின்றன. அவற்றைப் பின்பற்றினால் மட்டுமே இந்த உலகில் அமைதியும், மறு உலகில் வெற்றியும் பெற முடியும்.
டாக்டர் K.V.S. ஹபீப் முஹம்மத், செப்டம்பர் 1-15, 2025
கருத்துகள்
கருத்துரையிடுக