சுயமதிப்பீட்டின் முக்கியத்துவம்

 

       மதிப்பீடு பற்றி மிக அதிகமாக அக்கறைகொள்ளும் காலத்தில்தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். பெரும் பெரும் பன்னாட்டு நிறுவனங்கள் முதல் சிறிய சிறிய பெட்டிக் கடைகள் வரை தங்களது பொருளாதார மேன்மைக்காக தொடர்மதிப்பீடு செய்கின்றன. மாதாந்திர, காலாண்டு, அரையாண்டு மறறும் வருடாந்திர கணக்குத் தணிக்கைகள்(Audit) போன்ற மதிப்பீட்டு முறைமைகள் தொடர்கின்றன.

நிச்சயமாக, சுய பரிசோதனை (Muhasabah) என்பது இஸ்லாமிய வரலாற்றில் வாழ்ந்த சிறந்த மனிதர்களின் அன்றாடப் பழக்கமாகவே இருந்துள்ளது.
பொருளாதார மேம்பாட்டிற்காக தொடர்மதிப்பீடு செய்யும் மனிதன் தனது வாழ்க்கையின் மேம்பாட்டிற்காக, ஈருலக வெற்றிக்காக மதிப்பீடு செய்ய மறந்துவிட்டான். ஷைத்தான் மனிதர்களை உலகமோகத்தில் மூழ்கடித்து மறக்கடித்துவிட்டான். ஆனால், படைத்த இறைவனோ திருமறையில் சுயமதிப்பீட்டின் பக்கம் நம்மை அழைக்கின்றான்.

یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوا اتَّقُوا اللّٰهَ وَلْتَنْظُرْ نَفْسٌ مَّا قَدَّمَتْ لِغَدٍ ۚ وَاتَّقُوا اللّٰهَ اِنَّ اللّٰهَ خَبِیْرٌ بِمَا تَعْمَلُوْنَ ؕ

  'இறைநம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள், மேலும், ஒவ்வொரு மனிதனும், நாளைய தினத்திற்காக எதனைத் தயார் செய்து வைத்திருக்கின்றான் என்று பார்க்கட்டும். அல்லாஹ்வுக்கு அஞ்சிய வண்ணம் இருங்கள். நீங்கள் செய்யும் செயல்கள் அனைத்தையும் திண்ணமாக அல்லாஹ் அறிபவனாக இருக்கின்றான்'. (59:18)

இந்த வசனத்தின்படி, நம்மில் ஒவ்வொருவரும் சுயமதிப்பீடு செய்யக் கடமைப்பட்டிருக்கிறோம். நாளை என்னும் மறுமை வெற்றிக்காக. சகோதரன், தாய், தந்தை, மனைவி, குழந்தை போன்ற நெருக்கமான உறவுகளும் உதவி புரியாத மறுமை நாளைக் குறித்து நாம் கவலைப்பட வேண்டும். அதற்காக ஏற்பாடுகள் செய்ய திருமறை நம்மை அழைக்கின்றது.

'அந்நாளில் தன் சகோதரனையும், தாயையும் தந்தையையும், தன்னுடைய மனைவியையும் குழந்தைகளையும் விட்டு மனிதன் வெருண்டோடுவான். அவர்களில் ஒவ்வொருவருக்கும் அந்நாளில் தன்னைத் தவிர வேறெவரைப் பற்றியும் கவனம் செலுத்தமுடியாத நிலை வந்தே தீரும்!' (80:34-37)

இரண்டாம் கலீஃபா உமர்(ரலி) இவ்வாறு கூறுகிறார்கள்: 'உங்கள் கணக்கு கேட்கப்படுமுன் நீங்களே உங்கள் கணக்கைப் பார்த்துக் கொள்ளுங்கள்'.

இந்த ரீதியில் சுயமதிப்பீட்டின் அவசியம் அதிக முக்கியத்துவம் பெறுகின்றது.


வாழ்க்கை முழுவதும் சுயமதிப்பீடு செய்யவேண்டும் என்றாலும், ஒரு முஸ்லிம் குறைந்தபட்சம் பின்வரும் வாழ்க்கைப் பகுதிகளிலாவது கட்டாயமாக சுயமதிப்பீடு செய்யவேண்டும்.

01. கடமையாக்கப்பட்ட வழிபாடுகளின் நோக்கம் பற்றிய சுயமதிப்பீடு:

இறைவன் விதித்த ஐவேளை கடமைகளும், ரமலான் நோன்பும் எந்த நோக்கத்திற்காக கடமையாக்கப்பட்டனவோ அவை நிறைவேற்றப்படுகின்றனா என்று சுயமதிப்பீடு செய்யவேண்டும்.

எடுத்துக்காட்டாக:

அல்லாஹ் தொழுகையைப்பற்றி கூறுகின்றான்: '(நபியே)வஹியின் மூலம் உமக்கு அனுப்பப்பட்டிருக்கும் இந்த வேதத்தை நீர் ஓதுவீராக. மேலும், தொழுகையை நிலைநிறுத்துவீராக! திண்ணமாக, தொழுகை மானக்கேடான மற்றும் தீயசெயல்களைத் தடுக்கின்றது. மேலும், அல்லாஹ்வை நினைவுகூர்;வது இதைவிடப் பெரிய விஷயமாகும். நீங்கள் செய்கின்ற அனைத்தையும் அல்லாஹ் அறிகின்றான்.' (29:45)

'திண்ணமாக இறைநம்பிக்கையாளர்கள் வெற்றி பெற்றுவிட்டனர். அவர்கள் எத்தகையவர்கள் எனில், தங்களுடைய தொழுகையில் பயபக்தியை மேற்கொள்கின்றார்கள்.' (23 :01-02)

நமது தொழுகை நமது வாழ்க்கையிலிருந்து மானக்கேடான, தீயசெயல்களை நீக்கியதா? நாம் உள்ளச்சத்துடன் தொழுகின்றோமா? இல்லை, நமது தொழுகையைச் சடங்காக, மாற்றமில்லாமல் நிறைவேற்றுகின்றோமா? அப்படியென்றால் இத்தகைய தொழுகை நயவஞ்சகர்களின் தொழுகையாகும்.

'மேலும் கேடுதான், தம் தொழுகையில் அலட்சியமாய் இருக்கிறார்களே, அப்படிப்பட்ட தொழுகையாளிகளுக்கு!.' (107:04-05)

இவ்வாறே நோன்பின் நோக்கம் இறையச்சம் அதிகரிக்க.

'இறைநம்பிக்கையாளர்களே! உங்களுக்கு முன் இருந்த (நபிமார்களைப் பின்பற்றிய)வர்கள் மீது கடமையாக்கப்பட்டது போல், உங்கள் மீதும் நோன்பு கடமையாக்கப்பட்டிருக்கிறது. (அதன் மூலம்) நீங்கள் இறையச்சமுள்ளவர்களாய்த் திகழக்கூடும்.' (02:183)

அறிவிப்பாளர் : அபூஹுரைரா(ரலி)
நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் நவின்றார்கள்: 'எவர் (நோன்பு நோற்றிருந்தும்) பொய் சொல்வதையும், பொய்யான முறையில் செயல்படுவதையும் விட்டுவிடவில்லையோ அவர் பசித்திருப்பதையும் தாகித்திருப்பதையும் பற்றி அல்லாஹ்வுக்கு எவ்வித அக்கறையுமில்லை.' (புகாரி)

நமது நோன்பு இறையச்சத்தையும் ஒழுக்க மேன்மையையும் ஏற்படுத்தியிருக்கிறதா என்பதைச் சுயமதிப்பீடு செய்ய நாம் கடமைப்பட்டிருக்கிறோம்.

02.ஹூகூகுல் இபாத் - பிற மனிதர்களுக்கு ஆற்ற வேண்டிய கடமைகளில் சுயமதிப்பீடு:

வாழ்க்கையின் அதிகமான பகுதியை நாம் மனிதர்களுடன்தான் கழிக்கின்றோம். வீடு, சமூகம், தொழில், வியாபாரம் போன்ற எல்லா இடங்களிலும் மனித தொடர்புகள்தாம். உறவினர்கள், அண்டை வீட்டார், நண்பர்கள் என்று தொடர்ந்து சக பயணிகள் வரை இந்தப் பட்டியல் நீளுகின்றது.

இஸ்லாம் இந்த அனைத்து உறவுகளையும் சரிவரப் பேணுவதற்கான வழிகாட்டல்களை வழங்கியுள்ளது. நபி(ஸல்) அவர்கள் அழகிய முன்மாதிரியாய் வாழ்ந்து காட்டினார்கள். அனைத்து உறவுகளிலும் பேணப்பட வேண்டிய கடமைகளும் உண்டு, பெறப்பட வேண்டிய உரிமைகளும் உண்டு. இவையனைத்து உறவுகளைப் பற்றியும் மறுமையில் விசாரணை உண்டு. சற்று இந்த நபிமொழியை ஆழமாகச் சிந்தியுங்கள்:

அறிவிப்பாளர்: அபூஹுரைரா(ரலி)
அண்ணல் நபி(ஸல்) அவர்கள்,Muflis 'வறியவன் (திவாலானவர்
) என்பவன் யார்?' என்று வினவினார்கள். மக்கள்,''எவரிடம் திர்ஹாமோ (வெள்ளி நாணயமோ) வேறெந்தப் பொருளுமோ இல்லையோ, அவரே எங்களில் வறியவர் ஆவார்' என்று கூறினர். அண்ணலார் பதிலளித்தார்கள்: 'ஒருவன் மறுமைநாளில் தன் தொழுகையுடனும், நோன்புடனும் அல்லாஹ்விடம் வருவான். அவற்றுடன் அவன் உலகில் எவரையேனும் திட்டியிருப்பான், எவர் மீதாவது இட்டுக்கட்டி அவதூறு கூறியிருப்பான், எவரேனும் ஒருவரின் செல்வத்தைப் பறித்துத் தின்றிருப்பான், எவரையேனும் கொன்றுவிட்டிருப்பான், எவரையேனும் நியாயமின்றி அடித்திருப்பான். எனவே, அந்த அநீதிக்குள்ளானவர்கள் அனைவரிடையேயும் அவனது நன்மைகள் பங்கிடப்பட்டுவிடும். பிறகு அவனது நன்மைகள் தீர்ந்துபோய், அநீதிக்குள்ளானவர்களின் உரிமைகள் இன்னும் எஞ்சியிருந்தால் அவர்களின் பாவங்கள் அவனது கணக்கில் எழுதப்பட்டுவிடும். பிறகு, அவன் நரகத்தில் வீசி எறியப்படுவான். அத்தகையோரே உண்மையில் திவாலானவர்
ஆவர்.' (முஸ்லிம்)

இந்த நபிமொழியின் வாயிலாக மக்களின் உரிமைகளுக்கான முக்கியத்துவத்தை அண்ணலார் தெளிவுபடுத்துகின்றார்கள். எனவே, இறைவனின் உரிமைகளை நிறைவேற்றுபவர்கள், மக்களின் உரிமைகளைப் பறிக்காமலிருப்பது அவசியமாகும். இல்லையெனில் இந்தத் தொழுகை, நோன்பு, இதர நற்செயல்கள் ஆகிய அனைத்தும் ஆபத்திற்குள்ளாகிவிடும்.

இப்படிப்பட்ட மிக முக்கியமான வாழ்வியல் துறையில் நமது சிந்தனை, செயல்பாடுகள் எவ்வாறு உள்ளன. நாம் சுயமதிப்பீடு செய்யக் கடமைப்பட்டிருக்கிறோம்.

03. எண்ணத் தூய்மை:

அனைத்துச் செயல்களுக்கும் அடிப்படையே எண்ணம்தான். 'இன்னமல் அஃமாலு பின் நிய்யாஹ்என்று அண்ணலார்(ஸல்) அவர்கள் நவின்றார்கள்.

அறிவிப்பாளர்: உமர் பின் கத்தாப்(ரலி)
அண்ணல் நபி(ஸல்) அவர்கள் நவின்றார்கள்: செயல்கள் அனைத்தின் விளைவுகளும் எண்ணங்களைப் பொறுத்தே அமைகின்றன. மனிதன் எதை எண்ணுகின்றானோ, அதற்குரிய பலன்தான் அவனுக்குக் கிட்டும்.

(உதாரணமாக) ஒருவரின் ஹிஜ்ரத் அல்லாஹ்வுக்காகவும், அல்லாஹ்வின் தூதருக்காகவும் அமையுமாயின் அந்த ஹிஜ்ரத் அல்லாஹ்வுக்காகவும், தூதருக்காகவும் செய்யப்பட்டதாகும். ஒருவரின் ஹிஜ்ரத் ஏதாவது உலகாயத நன்மையைப் பெறுவதற்காகவோ, ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்வதற்காகவோ அமையுமாயின் இவற்றில் எதற்காக வேண்டி அவன் ஹிஜ்ரத் செய்தானோ, அதற்கானதாகவே அவனது ஹிஜ்ரத் கணிக்கப்படும். (புகாரி, முஸ்லிம்)

எண்ணத் தூய்மையில்லையேல் ஹிஜ்ரத் போன்ற பெரும் பெரும் வழிபாடுகளும் பயன்தருவதில்லை. அவ்வாறே எண்ணத் தூய்மையில்லாமல் வாழ்ந்த ஆலிம்கள், கொடையாளிகள், ஏன் ஷஹீத் ஆகியோருக்கும் மறுமையில் நரகம்தான். எப்படிப்பட்ட முக்கியமான விஷயம் இது. நாம் தொழுகின்றோம், நற்காரியங்கள் செய்கின்றோம். இதில் நமது எண்ணம் அல்லாஹ்வின் திருப்பொருத்தம்தான் என்று தெளிவான, இக்லாஸான, தூய்மையான எண்ணம் இருக்கிறதா? இல்லையேல், வெள்ளம் அனைத்தையும் அடித்துக் கொண்டு செல்வதுபோல் நமது 'செயல்கள்' சென்றுவிடும்அல்லாஹ் காப்பாற்றுவானாக.

4.பொருளாதாரம் கட்டுவதில் சுய மதிப்பீடு 
அண்ணல் நபி(ஸல்) அவர்கள் நவின்றார்கள். '(மறுமை நாளில்) மனிதனிடம் ஐந்து விஷயங்கள் குறித்து விசாரணை நடத்தப்படாத வரை அவன் அந்த இடத்தை விட்டுக் கொஞ்சமும் நகர முடியாது.

1.     தனது வயதை எந்தச் செயல்களில் அவன் கழித்தான்?

2.     தனது இளமை ஆற்றல்களை எதில் பயன்படுத்தினான்?

3.     செல்வத்தை எவ்வாறு சம்பாதித்தான்?

4.     அதனை எவ்வாறு செலவழித்தான்?

5.     இந்தக் கல்வியின்படி எவ்வளவு தூரம் செயல்புரிந்தான்'.

அறிவிப்பாளர்: இப்னு மஸ்ஊத்(ரலி), நூல்: திர்மிதி

எனவே பொருள் ஈட்டும் முறை இஸ்லாத்தின் வரம்புகளுக்குள் இருக்க வேண்டும். அவ்வாறே செலவும் இறை வரம்புகளுக்குள் இருக்க வேண்டும். மேலும், நமது செல்வத்தில் வட்டி, இலஞ்சம், பதுக்கல், பொய், மோசடி கலந்திருக்கிறதா என்பதையும் சுயமதிப்பீடு செய்வோம்.

05. வாழ்க்கையின் நோக்கம் பற்றிய மதிப்பீடு:

'நான் ஜின்களையும், மனிதர்களையும் எனக்கு அடிபணிய வேண்டும் என்பதற்காகவேயன்றி வேறு எதற்காகவும் படைக்கவில்லை'. (51:56)

வாழ்க்கையின் நோக்கம் இறைவழிகாட்டல்படி வாழ்ந்து அவனுடைய திருப்தியைப் பெறுவதுதான். இந்த நோக்கம் நிறைவேற்றப்படுகிறதா?

வாழ்க்கையின் நோக்கத்தை மறந்தவர்கள் மாலுமி இல்லாத கப்பலில் பயணிப்பவர்கள். இவர்கள் பெரும் நஷ்டவாளிகள்.

இவர்களைப்பற்றி அல்லாஹ் இவ்வாறு கூறுகிறான்: '(நபியே,) இவர்களிடம் நீர் கூறும், தம்முடைய செயல்களில் பெரும் நஷ்டத்திற்கு ஆளானவர்கள் யார் என்பதை நாம் உங்களுக்கு அறிவிக்கட்டுமா? அவர்கள் யாரென்றால், உலக வாழ்க்கையில் அவர்களுடைய முயற்சிகள் அனைத்தும் நேர்வழியிலிருந்து பிறழ்ந்தே இருந்தன. ஆனால், அவர்களோ நாம் அனைத்தையும் சரியாகச் செய்திருக்கின்றோம் என்ற கருத்தில் மூழ்கிக் கிடந்தார்கள்'. (18:103-104)

இறைதிருப்தியை நாடி இறைவழிகாட்டலையும், நபிவழியையும் முழுமையாகவும், கூறு போடாமலும், மிகைப்படுத்தாமலும் நாம் பின்பற்றவேண்டும்.

இறுதியாக:

இறைவனின் கருணையால் அழைப்புப் பணியில் ஈடுபட்டிருக்கின்ற சகோதர, சகோதரிகள் சுயமதிப்பீட்டின் பக்கம் அதிகம் கவனம் செலுத்தவேண்டும்.

·        மற்றவர்களின் சீர்திருத்தத்திற்கு எந்தளவு கவலைப்படுகின்றோமோ அதைவிட அதிகமாக சுயசீர்திருத்தத்திற்காகக் கவலைப்படவேண்டும்.

·        எந்த நல்லொழுக்கங்களின் நல்லறங்களின் பக்கமும் நாம் அழைக்கின்றோமோ அவை நம் வாழ்க்கையில் மலர அக்கறை காட்டவேண்டும்.

·        அவ்வாறே எந்தத் தீமைகளை விட்டும் நமது சமுதாயம் தூய்மை அடைய நாம் பாடுபடுகின்றோமோ அந்தத் தீமைகளிலிருந்தும், பலவீனங்களிலிருந்தும் நாம் முற்றிலும் விலகி இருக்கவேண்டும்.

சுய மதிப்பீட்டில் அக்கறை காட்டாத அழைப்பாளனைப் பார்த்து அல்லாஹ் கேட்கிறான்:

'இறைநம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் செய்யாதவற்றை ஏன் சொல்கின்றீர்கள்? நீங்கள் செய்யாதவற்றைச் சொல்வது அல்லாஹ்விடம் மிகவும் வெறுப்புக்குரிய செயலாகும்' (61:02-03)

எனவே நமது வாழ்க்கையில் நற்செயல்களை அதிகரிக்கவும், தீமைகளைக் களையவும் தொடர் முயற்சியும், சுயமதிப்பீடும் செய்துகொண்டே இருக்கவேண்டும்.

 குர்ஆனில் **சுய பரிசோதனை** அல்லது **சுய ஆய்வு (Self-reflection/Self-accounting)** என்பது மிக முக்கியமான ஒரு பண்பாகக் கருதப்படுகிறது. இதை அரபு மொழியில் **'முஹாஸபா' (Muhasabah)** என்று அழைப்பார்கள்.

இறைவன் வழங்கிய நேரத்தையும், வாழ்வையும் நாம் எவ்வாறு கழிக்கிறோம் என்பதை நாமே சிந்தித்துப் பார்ப்பது பற்றி குர்ஆன் மற்றும் இஸ்லாமிய போதனைகள் கூறும் சில முக்கிய குறிப்புகள் இதோ:

### 1. நாளைய தினத்திற்காக எதைத் தயார் செய்துள்ளோம்?

குர்ஆனில் உள்ள இந்த வசனம் சுய பரிசோதனைக்கு ஒரு மிகச்சிறந்த உதாரணமாகத் திகழ்கிறது:

> "நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள். மேலும், **ஒவ்வோர் ஆத்மாவும் (மறுமை என்னும்) நாளைக்காக தான் எதை முன்கூட்டியே அனுப்பி வைத்திருக்கிறது என்பதை கவனித்துக் கொள்ளட்டும்.**" (குர்ஆன் 59:18)

இந்த வசனம், ஒரு மனிதன் தான் செய்த நன்மைகள் மற்றும் தீமைகளை அவ்வப்போது கணக்குப் பார்த்து, மறுமை வாழ்விற்காக எதைத் தயார் செய்திருக்கிறோம் என்பதைச் சிந்திக்குமாறு வலியுறுத்துகிறது.

### 2. மனிதன் தன் நிலையை நன்கு அறிந்தவன்

மற்றவர்கள் நம்மைப் பற்றி என்ன நினைத்தாலும், நம்முடைய பலம் மற்றும் பலவீனம் என்ன என்பது நமக்கே நன்றாகத் தெரியும். இதை குர்ஆன் இவ்வாறு கூறுகிறது:

> "அன்றி, மனிதன் தன் நிலைமையைத் தானே நன்கு கவனித்தறிந்தவனாக இருக்கின்றான். அவன் (தன் குற்றங்களுக்குப்) புகழ்களைக் கூறி மறைக்க முயன்ற போதிலும் சரியே!" (குர்ஆன் 75:14-15)

### 3. தவறு செய்பவர்களும் தங்களைச் சீர்செய்தல்

மனிதர்கள் தவறு செய்வது இயல்பு. ஆனால், அந்தத் தவறை உணர்ந்து திருந்துவதுதான் சிறப்பு.

 * **நிதானம்:** "நிச்சயமாக எவர்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுகிறார்களோ, அவர்களுக்குள் ஷைத்தானிடமிருந்து ஏதேனும் ஒரு தவறான எண்ணம் ஏற்பட்டால், உடனே அவர்கள் (இறைவனை) நினைக்கிறார்கள்; அப்போது அவர்கள் (உண்மையை) உணர்ந்தவர்களாகி விடுகிறார்கள்." (குர்ஆன் 7:201)

### 4. சுய பரிசோதனை செய்வதன் நன்மைகள்

சுய பரிசோதனை செய்வதன் மூலம் ஒரு மனிதன் அடையக்கூடிய மாற்றங்கள்:

 * **அகங்காரம் (Head weight) குறையும்:** நம்மிடம் உள்ள குறைகளை நாம் உணரும்போது, மற்றவர்களை விட நாம் உயர்ந்தவர்கள் என்ற எண்ணம் மறையும்.

 * **தவ்பா (மன்னிப்பு):** செய்த தவறுகளை எண்ணி வருந்தி இறைவனிடம் மன்னிப்பு கேட்க வழிவகுக்கும்.

 * **நேர மேலாண்மை:** வீணான காரியங்களில் ஈடுபடுவதைத் தவிர்த்து, பயனுள்ள செயல்களில் ஈடுபடத் தூண்டும்.

### முக்கிய அறிவுரை (ஹதீஸ்):

இரண்டாம் கலீபா உமர் (ரலி) அவர்கள் அடிக்கடி இவ்வாறு கூறுவார்கள்:

> **"உங்களிடம் (மறுமையில்) கணக்குக் கேட்கப்படுவதற்கு முன்னதாகவே, உங்களை நீங்களே கணக்குப் பார்த்துக் கொள்ளுங்கள்."**

**சுருக்கமாக:**

தினமும் உறங்கச் செல்வதற்கு முன், "இன்று நான் யாருடைய மனதாவது புண்படுத்தினேனா?", "இறைவனுக்குச் செய்ய வேண்டிய கடமைகளைச் சரியாகச் செய்தேனா?" என்று 5 நிமிடம் சிந்திப்பதே ஒரு சி

றந்த சுய பரிசோதனை ஆகும்.

சம்பவங்கள்:

 1. உமர் இப்னுல் கத்தாப் (ரலி) அவர்களின் கண்டிப்பான சுய பரிசோதனை

இரண்டாம் கலீபா உமர் (ரலி) அவர்கள் சுய பரிசோதனைக்கு மிகப்பெரிய உதாரணமாகத் திகழ்ந்தவர். அவர் ஒருமுறை ஒரு தோட்டத்திற்குச் சென்றார். அங்கு யாரும் இல்லாதபோது, அவர் தனக்குத் தானே இவ்வாறு பேசிக்கொண்டதை ஒருவர் செவிமடுத்தார்:

>"கத்தாபின் மகனே! நீஅமீருல் முஃமினீனாக (தலைவராக) ஆகிவிட்டாய். அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நீ அல்லாஹ்வுக்கு அஞ்சி நடக்க வேண்டும், இல்லையெனில் அவன் உன்னைத் தண்டிப்பான்."

>

அவர் இரவு நேரங்களில் தனது கால்களைச் சாட்டையினால் மென்மையாகத் தட்டி, **"இன்று நீ என்ன செய்தாய்?"** என்று தனக்குத் தானே கணக்குக் கேட்பார். "உங்களிடம் கணக்குக் கேட்கப்படுவதற்கு முன்பே, உங்களை நீங்களே கணக்குப் பார்த்துக் கொள்ளுங்கள்" என்பது அவரது பிரபலமான பொன்மொழியாகும்.

2. அபூபக்கர் ஸித்தீக் (ரலி) அவர்களின் எச்சரிக்கை

முதலாம் கலீபா அபூபக்கர் (ரலி) அவர்கள் சில நேரங்களில் தனது நாவைப் பிடித்து இழுத்து, **"இதுதான் என்னை இக்கட்டான இடங்களுக்குக் கொண்டு செல்கிறது"** என்று கூறுவார்கள். அதாவது, தாம் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் இறைவனிடம் கணக்குக் காட்ட வேண்டியது என்பதில் அவர்கள் அவ்வளவு கவனமாக இருந்தார்கள்.

3. அலி (ரலி) அவர்களின் இரவு நேரச் சிந்தனை

அலி (ரலி) அவர்கள் இரவின் இருளில் தனது தாடியைப் பிடித்துக் கொண்டு, ஒரு நோயாளி துடிப்பது போலத் துடித்து அழுவார்கள். அப்போது அவர்கள் உலகைப் பார்த்து இவ்வாறு கூறுவார்கள்:

> "உலகமே! நீ என்னை ஏமாற்றப் பார்க்கிறாயா? உன்னை நான் மூன்று முறை விவாகரத்து செய்துவிட்டேன் (திரும்பப் பெற முடியாத அளவு). உன் ஆயுள் குறைவானது, உன்னால் வரும் ஆபத்து பெரியது."

தன்னுடைய ஈமான் மற்றும் செயல்பாடுகளில் உலக ஆதாயங்கள் குறுக்கிட்டு விடக்கூடாது என்பதில் அவர்கள் செய்த சுய பரிசோதனை இது.

### 4. இமாம் அஹ்மது இப்னு ஹன்பல் (ரஹ்) அவர்களின் பணிவு

ஒருமுறை ஒருவர் இமாம் அஹ்மது அவர்களிடம் வந்து, "மக்களெல்லாம் உங்களைப் புகழ்கிறார்களே, உங்களுக்கு எப்படித் தோன்றுகிறது?" என்று கேட்டார். அதற்கு இமாம் அவர்கள்:

> "அல்லாஹ் என்னுடைய குறைகளை மறைத்து வைத்திருப்பதால் மக்கள் புகழ்கிறார்கள். என் குறைகள் மட்டும் வெளியே தெரிந்தால், ஒருவன் கூட என் அருகில் அமர மாட்டான்" என்று கூறினார்கள்.

இது ஒரு மனிதன் தன் உள்ளத்தைத் தானே ஆய்வு செய்து, பெருமை வராமல் தடுத்துக் கொள்வதற்குச் சிறந்த சான்றாகும்.

### 5. ஒரு அன்சாரித் தோழரின் சொர்க்கச் செய்தி

ஒருமுறை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அமர்ந்திருந்தபோது, "இப்போது சொர்க்கவாசி ஒருவர் வருவார்" என்று கூறினார்கள். அப்போது ஒரு அன்சாரித் தோழர் வந்தார். இது தொடர்ந்து மூன்று நாட்கள் நடந்தது. அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரலி) என்ற தோழர், அவரிடம் என்ன விசேஷமான அமல் இருக்கிறது என்று அறிய அவர் வீட்டிற்குச் சென்றார்.

அங்கே அவர் பெரிய அளவில் கூடுதல் வணக்கங்கள் ஏதும் செய்வதைக் காணவில்லை. அவரிடமே இதைப் பற்றிக் கேட்டபோது அவர் சொன்னார்:

> "நான் ஒவ்வொரு இரவும் உறங்கச் செல்லும் முன், **யார் மீதும் என் உள்ளத்தில் பொறாமையோ அல்லது வெறுப்போ இல்லாதவாறு என் உள்ளத்தைச் சுத்தம் செய்துவிட்டுத் தான் உறங்குவேன்.**"

தனது உள்ளத்தை அன்றாடம் அவர் சுய பரிசோதனை செய்து தூய்மைப்படுத்தியதேஅவருக்குச் சொர்க்கத்தின் நற்செய்தியைப் பெற்றுத் தந்தது.

 சுய பரிசோதனை என்பது வெறும் தவறு செய்த பிறகு செய்வது மட்டுமல்ல; நமது உள்ளத்தில் பெருமை, பொறாமை, உலக ஆசை போன்ற நோய்கள் குடிபுகாமல் இருக்கச் செய்யப்படும் ஒரு 'ஆன்மீகத் தணிக்கை' (Spiritual Audit) ஆகும்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

1.கணவனைக் கவரும் வழிகள் 40

மண்ணறை வேதனை 001

மக்தப் மதரஸாவின் வளர்ச்சி மார்க்கத்தின் எழுச்சி...!