குர்பானி (உழ்ஹிய்யா) ஏன் ?எப்படி?

 துல் ஹஜ் மாதம் பிறை 10 அன்று பெருநாள் தொழுது முடிந்ததில் இருந்து, அய்யாமுத் தஷ்ரீக் பிறை 11, 12, 13 அன்று இறுதி நேரம் வரை உள்ள கால கட்டங்களில் ஒட்டகம், ஆடு, மாடு ஆகிய பிராணிகளை அல்லாஹ்வுக்காக அறுப்பதையே உழ்ஹிய்யா என்று கூறப்படும். பொதுவாக இதற்குச் குர்பான் என்றும் கூறப்படும். குர்பானுக்கும் உழ்ஹிய்யாவுக்குமிடையில் வித்தியாசங்கள் உள்ளன. குர்பானை யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் செய்யலாம். எதை வேண்டுமானாலும் குர்பான் கொடுக்கலாம். ஆனால், உழ்ஹிய்யாவுக்கு காலம், நேரம், கொடுக்கப்படும் பிராணி அனைத்துமே வரையறை செய்யப்பட்டதாகும்.


அரபி மொழியில் உழ்ஹிய்யாவின் பொருள் முற்பகலில் பலிப் பிராணியை அறுப்பது என்பதாகும்! அல்லாஹ்விற்காக ஆடு, மாடு, ஒட்டகம் இவற்றை ஒரு குறிப்பிட்ட நாளில் அறுப்பதையே குர்பானி என்கிறோம். இது வசதி வாய்ப்பு உள்ள ஒவ்வொரு முஸ்லீம் மீதும் குர்பானி கொடுப்பது கடமையாகும்!

وَلِكُلِّ اُمَّةٍ جَعَلْنَا مَنْسَكًا لِّیَذْكُرُوا اسْمَ اللّٰهِ عَلٰی مَا رَزَقَهُمْ مِّنْ بَهِیْمَةِ الْاَنْعَامِ ؕ فَاِلٰهُكُمْ اِلٰهٌ وَّاحِدٌ فَلَهٗۤ اَسْلِمُوْا ؕ وَبَشِّرِ الْمُخْبِتِیْنَ ۟ۙ

 

கால்நடை பிராணிகளிலிருந்து அல்லாஹ் அவர்களுக்கு உணவாக்கியுள்ள ஆடு, மாடு, ஒட்டகம் போன்றவற்றின் மீது அவர்கள் அல்லாஹ்வின் பெயரைக் கூறும் படிச் செய்வதற்காவே குர்பானி கொடுப்பதை ஒவ்வொரு வகுப்பாருக்கும் கடமையாக ஆக்கியிருக்கிறோம்!    (குர்ஆன் : 22 : 34)

நபி இப்ராஹிம் (அலை) அவர்களின் வழிமுறைகளில் ஒன்று தான் குர்பானி கொடுப்பது ஆகும்!(நூல் : இப்னு மாஜா : 3127)

குர்பானி கொடுப்பது ஒரு வணக்க வழிபாடு ஆகும் இதை நாம் அல்லாஹ்விற்கு தவிர்த்து வேறு யாருக்கும் செய்ய கூடாது அவ்வாறு செய்தால் அது ஷிர்க்கில் சேர்ந்து விடும்!    (நூல் : ஸஹீஹ் முஸ்லீம் : 4001)

قُلْ اِنَّ صَلَاتِیْ وَنُسُكِیْ وَمَحْیَایَ وَمَمَاتِیْ لِلّٰهِ رَبِّ الْعٰلَمِیْنَ ۟ۙ

மெய்யாக என்னுடைய தொழுகையும், என்னுடைய குர்பானியும், என்னுடைய வாழ்வும், என்னுடைய மரணமும் எல்லாமே அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே சொந்தமாகும்!(அல் குர்ஆன் : 6 : 162)


மாதம் 12 ஆகும் இதில் சிறப்பு மிக்க மாதம் 4 ஆகும்

1- துல்கதா, 2-துல்ஹஜ், 3- முஹர்ரம், 4- ரஜப் என்கிற இந்த நான்கு மாதங்கள்தான் புனிதமான மாதங்கள். 

இதில் ஒன்று தான் புனிதமிகு துல் ஹஜ் மாதம் ஆகும்! இந்த மாதத்தில் செய்ய வேண்டிய முக்கியமான கடமைகளில் ஒன்று குர்பானி கொடுப்பது ஆகும்!
(
நூல் : ஸஹீஹ் புகாரி : 4662)

குர்பானி ஏன் நமக்கு கடமையானது :
 
குர்பானி நமது மீது கடமையானதன் நோக்கம் நபி இப்ராஹீம் (அலை) அவர்களும் அவர்களின் குடும்பம் அல்லாஹ்விற்காக செய்த தியாகத்தின் காரணமாக தான் அல்லாஹ் நமது மீது குர்பானி கொடுப்பதை கடமையாக்கி உள்ளான்!

நபி இப்ராஹீம் (அலை) அவர்கள் நீண்ட காலம் பின்பு பிறந்த தமது மகனை பலியிடுவதாகக் கனவு கண்டார்! அல்லாஹ்விற்காக அதை நிறை வேற்ற முயலும் போது, அல்லாஹ் அதைத் தடுத்து நிறுத்தி ஓர் ஆட்டைப் பலியிடச் செய்தான் இதனால் தான் குர்பானி என்பது நமக்கு அல்லாஹ் கடமை ஆக்கினான்!

 


فَلَمَّا بَلَغَ مَعَهُ السَّعْیَ قَالَ یٰبُنَیَّ اِنِّیْۤ اَرٰی فِی الْمَنَامِ اَنِّیْۤ اَذْبَحُكَ فَانْظُرْ مَا
ذَا تَرٰی ؕ قَالَ یٰۤاَبَتِ افْعَلْ مَا تُؤْمَرُ ؗ سَتَجِدُنِیْۤ اِنْ شَآءَ اللّٰهُ مِنَ الصّٰبِرِیْنَ ۟

பின் (அம்மகன்) அவருடன் நடமாடக்கூடிய (வயதை அடைந்த) போது அவர் கூறினார்: “என்னருமை மகனே! நான் உன்னை அறுத்து பலியிடுவதாக நிச்சயமாகக் கனவு கண்டேன். இதைப்பற்றி உம் கருத்து என்ன என்பதைச் சிந்திப்பீராக!” (மகன்) கூறினான்; “என்னருமைத் தந்தையே! நீங்கள் ஏவப்பட்டபடியே செய்யுங்கள். அல்லாஹ் நாடினால் - என்னை நீங்கள் பொறுமையாளர்களில் நின்றுமுள்ளவனாகவே காண்பீர்கள்.”

37:103

فَلَمَّاۤ اَسْلَمَا وَتَلَّهٗ لِلْجَبِیْنِ ۟ۚ

ஆகவே, அவ்விருவரும் (இறைவன் கட்டளைக்கு) முற்றிலும் வழிப்பட்டு, (இப்ராஹீம்) மகனைப் பலியிட முகம் குப்புறக்கிடத்திய போது;

37:104

وَنَادَیْنٰهُ اَنْ یّٰۤاِبْرٰهِیْمُ ۟ۙ

நாம் அவரை “யா இப்ராஹீம்!” என்றழைத்தோம்.

37:105

قَدْ صَدَّقْتَ الرُّءْیَا ۚ اِنَّا كَذٰلِكَ نَجْزِی الْمُحْسِنِیْنَ ۟

“திடமாக நீர் (கண்ட) கனவை மெய்ப்படுத்தினீர். நிச்சயமாக நன்மை செய்வோருக்கு நாம் இவ்வாறே கூலி கொடுத்திருக்கிறோம்.

37:106

اِنَّ هٰذَا لَهُوَ الْبَلٰٓؤُا الْمُبِیْنُ ۟

“நிச்சயமாக இது தெளிவான ஒரு பெருஞ் சோதனையாகும்.”

37:107

وَفَدَیْنٰهُ بِذِبْحٍ عَظِیْمٍ ۟

ஆயினும், நாம் ஒரு மகத்தான பலியைக் கொண்டு அவருக்குப் பகரமாக்கினோம்.

37:108

وَتَرَكْنَا عَلَیْهِ فِی الْاٰخِرِیْنَ ۟ۖ

இன்னும் அவருக்காகப் பிற்காலத்தவருக்கு (ஒரு ஞாபகார்த்தத்தை) விட்டு வைத்தோம்:

 

 குர்ஆன் : 37 : 102 & 108)



 குர்பானி கொடுப்பதின் நோக்கம்:


நாம் ஒட்டகம் மாடு ஆடு குர்பானி கொடுப்பதால் அல்லாஹ்விற்கு எந்த வித பயனும் கிடையாது! நாம் இதை தக்வா உடன் செய்ய வேண்டும் இதில் ஒரு போதும் பெருமை - முகஸ்துதி ஏற்பட்டு விட கூடாது!



لَنْ یَّنَالَ اللّٰهَ لُحُوْمُهَا وَلَا دِمَآؤُهَا وَلٰكِنْ یَّنَالُهُ التَّقْوٰی مِنْكُمْ ؕ كَذٰلِكَ سَخَّرَهَا لَكُمْ لِتُكَبِّرُوا اللّٰهَ عَلٰی مَا هَدٰىكُمْ ؕ وَبَشِّرِ الْمُحْسِنِیْنَ ۟



குர்பானியின் மாமிசங்களோ, அவற்றின் உதிரங்களோ அல்லாஹ்வை ஒரு போதும் அடைவதில்லை! ஆனால் உங்களுடைய தக்வா (பயபக்தி) தான் அவனை அடையும்! (அல் குர்ஆன் : 22 : 37)
நபி இப்ராஹிம் (அலை) அவர்கள் தனது பெற்ற மகனையே அல்லாஹ்விற்கு குர்பானி கொடுக்க முன் வந்தார்கள் அல்லாஹ்வின் பொறுத்தம் பெற மட்டும்! இதுதான் குர்பானி கொடுப்பதன் உண்மையான நோக்கம் உள்ளம் அளவில் தியாகம் செய்வது ஆகும்!

 
நிய்யத் எவ்வாறு வைப்பது :
நாம் குர்பானி கொடுக்கும் பொழுது உள்ளத்தில் இது எனக்கும், என்னுடைய வீட்டில் உள்ள எல்லோருக்கும் சேர்த்தே குர்பானி கொடுக்கிறேன் என்ற எண்ணம் இருந்தால் போதும்.

நபி (ஸல்) அவர்கள் குர்பானி பிராணியை அறுக்கும் முன் இவ்வாறு கூறுவார்கள் :

அல்லாஹ்வின் பெயரால்! இறைவா! முஹம்மதிடமிருந்தும் முஹம்மதின் குடும்பத்தாரிடமிருந்தும் முஹம்மதின் சமுதாயத்தாரிடமிருந்தும் இதை ஏற்றுக் கொள்வாயாக!(நூல் : ஸஹீஹ் முஸ்லிம் : 3977)
(Fatwa : ஷேக் முஹம்மது இப்னு உஸைமின் (ரஹ்))
 குர்பானி கொடுப்பது கடமையா?
குர்பானி கொடுப்பது சுன்னா முஅக்கதா (மிகவும் வலியுறுத்தப்பட்ட சுன்னாஹ்) ஆகும்!

உமது இறைவனுக்காக தொழுவீராக! அறுத்து பலியிடுவீராக! அல்குர்ஆன் 108 : 2)

(
நபி (ஸல்) அவர்கள் மதீனாவில் 10 ஆண்டுகள் வாழ்ந்தார்கள்! மதினாவில் இருந்த ஒவ்வொரு ஆண்டும் குர்பானி கொடுத்து வந்துள்ளார்கள்!
(
நூல் : சுனன் திர்மிதி : 1589)

 எந்த பிராணிகளை குர்பானி கொடுக்க வேண்டும் :

1) ஒட்டகம் 2) மாடு3) ஆடு (அல் குர்ஆன் : 22 : 34)

ஆகிய பிராணிகளை மட்டும் தான் நாம் குர்பானி கொடுக்க வேண்டும்! இதை தவிர்த்து மற்ற பிராணிகளை நாம் குர்பானி கொடுக்க கூடாது! ஏன் என்றால் :

 

وَلِكُلِّ اُمَّةٍ جَعَلْنَا مَنْسَكًا لِّیَذْكُرُوا اسْمَ اللّٰهِ عَلٰی مَا رَزَقَهُمْ مِّنْ بَهِیْمَةِ الْاَنْعَامِ ؕ فَاِلٰهُكُمْ اِلٰهٌ وَّاحِدٌ فَلَهٗۤ اَسْلِمُوْا ؕ وَبَشِّرِ الْمُخْبِتِیْنَ ۟ۙ

இன்னும் கால்நடை(ப்பிராணி)களிலிருந்து அல்லாஹ் அவர்களுக்கு உணவாக்கியுள்ள (ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற)வற்றின் மீது அவர்கள் அல்லாஹ்வின் பெயரைக் கூறும் படிச் செய்வதற்காவே குர்பானி கொடுப்பதை ஒவ்வொரு வகுப்பாருக்கும் (கடமையாக) ஆக்கியிருக்கிறோம்; ஆகவே உங்கள் நாயன் ஒரே நாயன்தான்; எனவே அவ(ன் ஒருவ)னுக்கே நீங்கள் முற்றிலும் வழிப்படுங்கள்; (நபியே!) உள்ளச்சம் உடையவர்களுக்கு நீர் நன்மாராயங் கூறுவீராக!

 (அல் குர்ஆன் : 22 : 34)

1)   அல்லாஹ் குர்பானி பற்றி கூறும் பொழுது ஒட்டகம் - மாடு - ஆடு இந்த பிராணிகளை மட்டும் குறிப்பிட்டு கூறி உள்ளான்!

2)
நபி (ஸல்) அவர்கள் வாழ்ந்த காலத்திலோ அல்லது ஸஹாபாக்கள் அல்லது தாபியீன்கள் அல்லது தபா தாபியீன்கள் வாழ்ந்த காலத்திலோ மேலே உள்ள மூன்று பிராணிகளை தவிர்த்து மற்ற பிராணிகளை குர்பானி கொடுத்ததாக ஆதாரப்பூர்வமான எந்த செய்தியும் கிடையாது!

 
பெண்பிராணிகளைகுர்பானிகொடுக்கலமா?

 

ثَمٰنِیَةَ اَزْوَاجٍ ۚ مِنَ الضَّاْنِ اثْنَیْنِ وَمِنَ الْمَعْزِ اثْنَیْنِ ؕ قُلْ ءٰٓالذَّكَرَیْنِ حَرَّمَ اَمِ الْاُنْثَیَیْنِ اَمَّا اشْتَمَلَتْ عَلَیْهِ اَرْحَامُ الْاُنْثَیَیْنِ ؕ نَبِّـُٔوْنِیْ بِعِلْمٍ اِنْ كُنْتُمْ صٰدِقِیْنَ ۟ۙ

(நபியே! அம்மக்களிடம்) “கால்நடைகளில் எட்டு வகைகள் உள்ளன - செம்மறி ஆட்டில் (ஆண், பெண்) இரு வகை வெள்ளாட்டில் (ஆண், பெண்) இரு வகை அவன் (அல்லாஹ்) ஆண் இரண்டையும் ஹராமாக்கி விட்டானா? அல்லது பெட்டை இரண்டையும் ஹராமாக்கி விட்டானா? அல்லது அவ்விரு வகைகளிலுமுள்ள பெண்களின் கர்ப்பங்களில் உள்ளவற்றையா (அவன் தடுத்திருக்கிறான்?) நீங்கள் உண்மை கூறுபவர்களாக இருந்தால், (இதனை) ஆதாரத்துடன் எனக்கு அறிவியுங்கள்என்று கேட்பீராக. (அல்குர்ஆன் : 6 : 143)

நம்மில் பலர் பெண் பிராணிகளை குர்பானி கொடுக்க கூடாது என்று நினைக்கிறார்கள் ஆனால் அல்லாஹ் குர்பானி பிராணிகளை பற்றி கூறும் பொழுது பெண் பிராணிகளையும் சேர்த்தே கூறுகிறான்! |

 

என்னிடம் ஒரு வயதுடைய பால்குடி மறவாத பெட்டை வெள்ளாட்டுக் குட்டி உள்ளதுஎன அபூபுர்தா (ரலி) கூறினார். புகாரி : 5556

மிக முக்கியம் குட்டி ஈன்று பால் கொடுக்கும் பெண் பிராணியை அறுக்க கூடாது! (நூல் : ஸஹீஹ் முஸ்லீம் : 4143)

 குர்பானி கொடுக்க கூடியவர்கள் பே வேண்டியவை :

நாம் குர்பானி கொடுக்க போகிறோம் என்றால் துல்ஹஜ் உடைய பிறையை கண்ட நாள் முதல் குர்பானி கொடுக்கும் நாள் வரை நம்முடைய நகம் முடியை வெட்ட கூடாது!
(
நூல் : ஸஹீஹ் முஸ்லிம் : 3655)
இந்த பேணுதல் குர்பானி கொடுக்க கூடிய நபர் மட்டுமே பின் பற்ற வேண்டும்! குடும்பத்தினர் அனைவரும் பேண வேண்டியது கிடையாது!

 
குர்பானி பிராணிகளின் வயது :
குர்பானி கொடுப்பதற்கு ஒட்டகம் - மாடு அல்லது ஆடு வாங்குவதற்கு முன் அதனது வயதை குர்பானி கொடுக்க கூடிய அளவிற்கு பூர்த்தி ஆகி விட்டதா! என்று பார்த்து வாங்க வேண்டும்!
1)
ஆடு - ஓரு வயது பூர்த்தி ஆகி இருக்க வேண்டும்!
2)
மாடு - இரண்டு வருடம் பூர்த்தி ஆகி இருக்க வேண்டும்!
3)
ஒட்டகம் 5 வயது பூர்த்தி ஆகி இருக்க வேண்டும்!
(
நூல் : ஸஹீஹ் புகாரி : 5560)
இவ்வாறு வயது பூர்த்தி ஆகிய பிராணிகளை மட்டும் தான் நாம் குர்பானி கொடுக்க வேண்டும்!

 குர்பானி பிராணியை வளர்க்க வேண்டும் :

நம்மில் பலர் குர்பானி பிராணியை கடைசி நேரத்தில் தான் வாங்கி குர்பானி கொடுக்கின்றோம் இதனால் பலர் குர்பானி கொடுக்கும் போன்று எந்த வித உணர்வும் உள்ளத்தில் ஏற்படுவது கிடையாது!
 

மதீனாவில் குர்பானி பிராணிகளை நாங்கள் கொழுக்க வைப்போம். (ஏனைய) முஸ்லிம்களும் கொழுக்கவைப்பார்கள்! (நூல் : பத்ஹுல் பாரி)
 
குர்பானி கொடுக்க தகுதி இல்லாத பிராணிகள் :
குர்பானி பிராணி வாங்க கூடியவர்கள் குறை இல்லாமல் நல்ல நிலையில் உள்ள பிராணியை வாங்க வேண்டும்!

கீழே குறிப்பிட்டு உள்ள குறை உள்ள பிராணிகளை நாம் தவிர்த்து விட்டு குறை இல்லாத பிராணிகளை நாம் குர்பானி கொடுக்க வேண்டும்!

1)
காது வெட்டப்பட்ட ஆடு (சிறிய அளவோ அல்லது பெரிய அளவோ)

2)
காதில் துளையிடப்பட்ட பிராணி

3)
தெளிவாக தெரியும் நொண்டி பிராணி

4)
தெளிவாக தெரியும் பார்வை குறை உள்ள பிராணி

5)
நோய் உள்ள பிராணி

6)
பால் கொடுக்கும் பிராணி

7)
சதையில்லாத மெலிந்த பிராணி

8)
கொம்பு உடைந்த பிராணி (சிறியதோ பெரியதோ)

(
நூல் : திர்மிதீ : 1532 & 1417 | நஸயீ : 4293)

 
எத்தனை பிராணிகளை குர்பானி கொடுக்க வேண்டும் :

ஒரு குடும்பத்திற்கு ஓரு ஆடு போதுமானது ஆகும் ! வீட்டில் ஒவ்வொரு நபருக்கும் குர்பானி கொடுக்க வேண்டிய அவசியம் கிடையாது!

ஏனெனில் நபி (ஸல்) அவர்களுடைய காலத்தில் ஸஹாபாக்கள் தங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும் சேர்த்து ஒரு ஆட்டை மட்டும் குர்பானியாக கொடுத்துள்ளார்கள்!

அதா இப்னு யஸார் (ரழி) அவர்கள் கூறுகிறார்கள் :

நபி (ஸல்) அவர்கள் காலத்தில் குர்பானி கொடுப்பது எவ்வாறு அமைந்திருந்தது என்று அபூ அய்யூப் (ரலி) அவர்களிடம் நான் கேட்டேன் அதற்கவர்கள், ஒருவர் தமக்காகவும், தம் குடும்பத்தினருக்காகவும் ஒரு ஆட்டையே குர்பானி கொடுப்பார்! அவர்களும் உண்பார்கள் பிறருக்கும் உண்ணக் கொடுப்பார்கள்!

(நூல் : திர்மிதீ : 1587 | இப்னு மாஜா : 3147)

பெருமை நோக்கம் இல்லாமல் பிறருக்கு கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் வசதி வாய்ப்பு உள்ளவர்கள் விருப்பம் பட்டால் அதிகமான பிராணிகளை குர்பானி கொடுக்கலாம்! (நூல் : புகாரி : 5565)

 
குர்பானி எப்போது கொடுக்க வேண்டும் :

பெருநாள் தொழுகை முடிந்த பிறகு தான் நாம் குர்பானி கொடுக்க வேண்டும்! அதற்கு முன்பு குர்பானி பிராணியை அறுத்து விட்டால் அது குர்பானியில் சேராது!

பெருநாள் தொழுகைக்கு முன்பு குர்பானி கொடுத்து விட்டால் அவர் மீண்டும் தொழுகைக்கு பிறகு குர்பானி கொடுக்க வேண்டும்!

(
நூல் : புகாரி : 5560)

  
குர்பானி பிராணியை அறுப்பதின் ஒழுக்கங்கள் :

 எந்த இடத்தில் பிராணியை அறுக்க வேண்டும் :

நபி (ஸல்) அவர்கள் குர்பானி பிராணியை திடலிலும் அறுத்து உள்ளார்கள்! வீட்டிலும் அறுத்து உள்ளார்கள் ! நாம் திடல் அல்லது வீட்டில் ஏதேனும் ஒரு இடத்தில் குர்பானி பிராணியை அறுத்து கொள்ளலாம்!

(
நூல் : புகாரி : 5552 & 5545)



 
கத்தியை கூர்மையாக்கி கொள்ள வேண்டும் :
பிராணியை அறுப்பதற்கு முன்பு கத்தியை நன்றாக கூர்மைபடுத்தி கொள்ள வேண்டும்! பிராணியை படுக்க வைத்துக் கொண்டு அதன் கண்ணெதிரே கத்தியைத் தீட்டு கூடாது இதனால் பிராணி பயந்து மிரள ஆரம்பிக்கும்!
மேலும் இவ்வாறு நாம் பிராணி முன்பு கத்தியை கூர்மை படுத்துவது பிராணியைத் துன்புறுத்துவது போன்று ஆகும் இதனால் தான் நபி (ஸல்) அவர்கள் இதை தடை செய்து உள்ளார்கள்!

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிகிறார்கள் :
ஒருவர் ஆட்டை அறுப்பதற்காக அதைப் படுக்க வைத்துக் கொண்டு கத்தியைத் தீட்டிக் கொண்டிருந்தார்! நபி (ஸல்) அவர்கள் (அவரிடம்) இப்பிராணியைப் பலமுறை கொல்வதை நீ நாடுகிறாயா? இதை நீ படுக்கவைப்பதற்கு முன்பாகவே உன் கத்தியை நீ கூர்மைப்படுத்தி இருக்கக் கூடாதா? என்று கூறினார்கள்!
(
நூல் : ஹாகிம் : 4 / 257)

பிராணியை படுக்க வைக்க வேண்டும் :
  நாம் ஆடு அல்லது மாடு குர்பானி கொடுக்கும் பொழுது அந்த பிராணியை முறையாக ஒரு பக்கமாகப் படுக்க வைக்க வேண்டும்! எந்த திசையின் பக்கம் வேண்டும் என்றாலும் படுக்க வைக்கலாம் கிப்லா திசை பக்கம் தான் இருக்க வேண்டும் என்று நிபந்தனை கிடையாது!

 

 

 

அனஸ்(ரலி) கூறினார்:

நபி(ஸல்) அவர்கள் இரண்டு கறுப்பு வெள்ளை செம்மறியாட்டுக் கடாக்களைக் குர்பானி கொடுத்தார்கள். அவர்கள் தங்களின் பாதத்தை அவற்றின் பக்கவாட்டின் மீது வைத்துக்கொண்டு அல்லாஹ்வின்பெயர் கூறி, தக்பீர் (அல்லாஹு அக்பர் அல்லாஹ் மிகப் பெரியவன் என்று) சொல்லி அவற்றைத் தம் கையால் அறுத்ததை பார்த்தேன்

நூல் : புகாரி : 5558)
பிராணியை படுக்க வைத்த பின்பு எழாமல் இருப்பதற்காக அவற்றின் கழுத்தில் காலை வைத்து அழுத்திக் கொள்ள வேண்டும்! ஏனென்றால் பிராணியை அறுக்கும் போது அது துள்ளி அறுப்பதைத் தடுத்து விடும்! (
ஒட்டகம் அறுப்பதாக இருந்தால் ஆடு அல்லது மாடு போன்று இல்லாமல் ஒட்டகத்தை நிற்க வைத்து அதன் கால்களை கட்டி விட்டு பின்பு அறுக்க வேண்டும்! (நூல் : புகாரி : 1712 & 1713)

 
குர்பானி பிராணிகளை யார் அறுக்க வேண்டும் :

குர்பானி பிராணியை வீட்டில் உள்ள யார் வேண்டன்றாலும் அறுக்கலாம்! நபி (ஸல்) அவர்கள் தங்களின் கைகளால் குர்பானி பிராணியை அறுத்து உள்ளார்கள்! அறுக்க முடியாதவர்கள் பலகீனமானவர்கள்! பிறரை வைத்து அறுத்து கொள்ளலாம்! (நூல் : புகாரி : 5554 | அஹ்மத் : 22086)

வீட்டில் உள்ள பெண்கள் விருப்பப்பட்டால் குர்பானி பிராணியை அருக்கலாம் இதற்கு மார்க்க ரீதியாக எந்த தடையும் கிடையாது! (நூல் : புகாரி : 5504)
விரைவாக அறுக்க வேண்டும் :
பிராணியை அறுக்கும் முன் கத்தியை நன்கு தீட்டி கொண்டு விரைவாக அறுக்க வேண்டும்!

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
நீங்கள் பிராணிகளை அறுத்தால் அழகிய முறையில் அறுங்கள். உங்கள் கத்தியை நீங்கள் கூர்மையாக்கிக் கொள்ளுங்கள்! விரைவாக அறுப்பதன் மூலம் அதற்கு நிம்மதியைக் கொடுங்கள்! (நூல் : அஹ்மது : 16490)

குர்பானி பிராணியை அறுக்கும் போது ஓதும் துஆ :
பிஸ்மில்லாஹி வல்லாஹு அக்பர்
பொருள் : அல்லாஹ்வின் பெயரால் அறுக்கிறேன்! அல்லாஹ் மிகப்பெரியவன்! (நூல் : முஸ்லிம் : 3976)

 
இரத்தம் முழுமையாக வெளியியேறும் வரை காத்து இருக்க வேண்டும் :

நாம் குர்பானி பிராணிகளை அறுக்கும் போது நரம்புகள் நன்கு துண்டிக்கப்பட்டு அவற்றின் இரத்தம் முழுமையாக வெளியேறும் வரை காத்து இருக்க வேண்டும்! அதே போன்று முழுமையாக இறந்த பின்பு தான் அதை உரிக்க வேண்டும்!

இஸ்லாத்தில் இரத்தம் உண்பது ஹராம் ஆகும் பொதுவாக எந்த பிராணியின் இரத்தத்தையும் நாம் உண்ண கூடாது! நம்மில் பலர் இந்த சட்டம் அறியாமல் இரத்ததை பிடித்து வைத்து அதை சமைத்து உண்ணுகிறார்கள்! ஆனால் இதை நேரடியாகவே தடை செய்து உள்ளான்!

اِنَّمَا حَرَّمَ عَلَیْكُمُ الْمَیْتَةَ وَالدَّمَ وَلَحْمَ الْخِنْزِیْرِ وَمَاۤ اُهِلَّ بِهٖ لِغَیْرِ اللّٰهِ ۚ فَمَنِ اضْطُرَّ غَیْرَ بَاغٍ وَّلَا عَادٍ فَلَاۤ اِثْمَ عَلَیْهِ ؕ اِنَّ اللّٰهَ غَفُوْرٌ رَّحِیْمٌ ۟

தானாகவே செத்ததும், இரத்தமும், பன்றியின் மாமிசமும், அல்லாஹ் அல்லாத பெயர் சொல்லப்பட்டதும் ஆகியவைகளைத்தான் உங்கள் மீது ஹராமாக ஆக்கியிருக்கிறான்; ஆனால் எவரேனும் பாவம் செய்யாத நிலையில் - வரம்பு மீறாமல் (இவற்றை உண்ண) நிர்ப்பந்திக்கப்பட்டால் அவர் மீது குற்றமில்லை; நிச்சயமாக அல்லாஹ் கருணைமிக்கோனும், மன்னிப்பவனுமாக இருக்கின்றான்(அல்குர்ஆன் : 2 : 173)


 
குடும்பத்தினர் வர வேண்டுமா?
குர்பானி கொடுக்கும் பொழுது வீட்டார் அனைவரும் வந்து நிற்க வேண்டும் என்று எந்த நிபந்தனையும் கிடையாது!

வீட்டார் பார்க்க விருப்பம் பட்டால் நிற்கலாம்!

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தன் மகள் பாத்திமா (ரலி) அவர்களிடம் கூறினார்கள்:

"பாத்திமாவே! எழுந்து உன்னுடைய குர்பானி பிராணி இருக்கும் இடத்திற்குச் சென்று அதை (அறுக்கப்படுவதை) நேரில் பார். ஏனெனில், அதன் இரத்தத்தின் முதல் துளி நிலத்தில் விழுவதற்குள் உன்னுடைய முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன."

அப்போது பாத்திமா (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதரே! இது எங்கள் அஹ்லுல்பைத் (நபியவர்களின் குடும்பத்தினர்) ஆகிய எங்களுக்கு மட்டும் உரிய சிறப்பா? அல்லது ஒட்டுமொத்த முஸ்லிம்களுக்கும் பொதுவானதா?" என்று கேட்டார்கள். அதற்கு நபியவர்கள், "இல்லை, இது நமக்கும் மற்றும் அனைத்து முஸ்லிம்களுக்கும் பொதுவானதே" என்று பதிலளித்தார்கள். (ஆதாரம்: ஹாகிம், தப்ரானி)

இந்த ஹதீஸின் மூலமே, குர்பானி கொடுப்பவர் நேரில் நின்று அதை கவனிப்பது மிகவும் விருப்பத்தக்க (முஸ்தஹப்) ஒரு செயலாக அறிஞர்களால் கருதப்படுகிறது.

வீட்டார் வந்து நிற்க வேண்டும் என்று பைஹகீ நூலில் ஒரு ஹதீஸ் உண்டு ஆனால் இது பலகீனமான ஹதீஸ் ஆகும் இந்த ஹதீஸ் பதிவு செய்த இமாம் பைஹகீ (ரஹ்) அவர்களே ஹதீஸ் கீழே இது பலகீனமான ஹதீஸ் என்று கூறி உள்ளார்கள்!


கிப்லாவை
முன்னோக்கித் தான் அறுக்க வேண்டுமா?

  குர்பானி பிராணியை கிப்லாவை முன்னோக்கித் வைத்து தான் அறுக்க வேண்டும் என்று கூறுவதற்கு ஸஹீஹான எந்த ஹதீஸும் கிடையாது! எனவே நாம் எந்த திசையின் பக்கமாக வேண்டும் என்றாலும் வைத்து அறுத்து கொள்ளலாம்!

இன்றும் சில ஊர்களில் காஃபிர்களின் வழிமுறையில் பிராணியை அறுப்பதற்கு முன்பு குளிப்பாட்டுவது, மஞ்சள் பூசுவது, கொம்புகளில் பூச்சுற்றுவது போன்ற செயல்களைச் செய்கின்றனர் ஆனால் இதற்கும் இஸ்லாத்திற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது இது முழுவதும் மாற்று மதத்தினர் வழிமுறை ஆகும்!

 கூட்டு குர்பானி :

ஒட்டகம் - மாடு இவைகளை ஏழு நபர்கள் சேர்ந்து கூட்டு குர்பானி கொடுக்கலாம்!

அதாவது ஏழு குடும்பங்கள் சேர்ந்து ஒரு ஒட்டகம் அல்லது மாடு வாங்கி ஏழு குடும்பங்கள் சார்பாக கூட்டு குர்பானி கொடுக்கலாம்!

(
நூல் : முஸ்லிம் : 2325 | அபூதாவூத் : 2425)

ஒட்டகம் மாடு இவைகளில் மட்டும் தான் கூட்டு குர்பானி கொடுக்க முடியும்! ஆடு கூட்டு குர்பானி கொடுக்க முடியாது!

 குர்பானி தோல் :

குர்பானி பிராணியின் தோலை தர்மம் செய்ய வேண்டும் இது சுன்னாஹ்! அறுக்க கூடிய நபருக்கு கூலியாக தோலையோ அல்லது குர்பானி பிராணியின் மாமிசத்தை கொடுக்க கூடாது!

(
நூல் : ஸஹீஹ் முஸ்லிம் : 2320)

 குர்பானியின்மாமிசத்தைசேமித்து வைக்கலாமா :

 

ஆரம்ப காலத்தில் அதவாது வறுமை நிலவிய போது நபி (ஸல்) அவர்கள் குர்பானி மாமிசத்தை சேர்த்து வைக்க கூடாது என்று தடை விதித்தி இருந்தார்கள் ஆனால் அதற்கு பின்பு இந்த சட்டம்மாற்றப்பட்டது!

நமக்கு தேவையான அளவுக்கு குர்பானி மாமிசத்தை நாம் சேமித்து வைக்கலாம்! எவ்வளவு நாட்கள் வேண்டும் என்றாலும்!
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
குர்பானி இறைச்சியிலிருந்து உண்ணுங்கள், சேமித்துக் கொள்ளுங்கள், தர்மம் செய்யுங்கள்! (நூல் : முஸ்லிம் : 3986)



 
கடன் வாங்கி குர்பானி கொடுக்கலாமா :

கடன் வாங்கி குர்பானி கொடுக்க வேண்டிய அவசியமில்லை. குர்பானி கொடுப்பது வசதி உள்ளவர்கள் மீது மட்டுமே கடமையாகும்.

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
ஒன்றைச் செய்யுமாறு உங்களுக்கு நான் கட்டளையிட்டால் அதை உங்களால் முடிந்த அளவிற்குச் செய்யுங்கள் (நூல் : புகாரி : 7288)

 
குர்பானிமாமிசத்தையார்யார் உண்ணலாம் :
وَالْبُدْنَ جَعَلْنٰهَا لَكُمْ مِّنْ شَعَآىِٕرِ اللّٰهِ لَكُمْ فِیْهَا خَیْرٌ ۖۗ فَاذْكُرُوا اسْمَ اللّٰهِ عَلَیْهَا صَوَآفَّ ۚ فَاِذَا وَجَبَتْ جُنُوْبُهَا فَكُلُوْا مِنْهَا وَاَطْعِمُوا الْقَانِعَ وَالْمُعْتَرَّ ؕ كَذٰلِكَ سَخَّرْنٰهَا لَكُمْ لَعَلَّكُمْ تَشْكُرُوْنَ ۟

இன்னும் (குர்பானிக்கான) ஒட்டகங்கள்; அவற்றை உங்களுக்காக அல்லாஹ்வின் அடையாளங்களிலிருந்தும் நாம் ஆக்கியிருக்கிறோம்; உங்களுக்கு அவற்றில் மிக்க நன்மை உள்ளது; எனவே (அவை உரிய முறையில்) நிற்கும் போது அவற்றின் மீது அல்லாஹ்வின் பெயரைச் சொல்(லி குர்பான் செய்)வீர்களாக; பிறகு, அவை தங்கள் பக்கங்களின் மீது சாய்ந்து கீழே விழுந்(து உயிர் நீத்) பின் அவற்றிலிருந்து நீங்களும் உண்ணுங்கள்; (வறுமையிலும் கையேந்தாமல் இருப்பதைக் கொண்டு) திருப்தியாய் இருப்போருக்கும், இரப்போருக்கும் உண்ணக் கொடுங்கள் - இவ்விதமாகவே, நீங்கள் நன்றி செலுத்தும் பொருட்டு அவற்றை உங்களுக்கு வசப்படுத்திக் கொடுத்திருக்கிறோம்.

(அல் குர்ஆன் : 22 : 36)

குர்பானி மாமிசத்தை நாமும் உண்ணலாம்! ஏழைகள்! உறவினர்களுக்கும் உண்ண கொடுக்கலாம்!

 

குர்பானி இறைச்சியை பங்கு வைத்தல்
குர்பானி இறைச்சியை மூன்றாக பங்கு வைக்க வேண்டும் என்பது நபி வழியல்ல. தனக்கு ஓரளவிற்கு தேவையானதை எடுத்துக் கொண்டு மற்ற இறைச்சியை உறவுகளுக்கும், ஏழைகளுக்கும் பங்கு வைக்க வேண்டும்.


மாற்று மதத்தவர்களுக்கு வழங்கலாமா?:

உழ்ஹிய்யா மாமிசத்தைக் காபிர்களுக்கு வழங்கக் கூடாது என்று எந்தத் தடையும் வராத பட்சத்தில் இதை அலட்டிக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. எனவே, நேரடியான தடைகள் இல்லை என்பதால் மாற்று மத நண்பர்களுக்கு உழ்ஹிய்யா மாமிசத்தை வழங்குவதைத் தவிர்க்க வேண்டிய அவசியம் இல்லை இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் எதிர்க்காத மாற்று மதத்தவர்களுடன் நல்ல முறையில் நடந்து கொள்ளுமாறு குர்ஆன் கட்டளையிடுகின்றது.

எவர்கள் மார்க்க(விடய)த்தில் உங்க ளுடன் போரிடவில்லையோ அவர்களுக்கும், மேலும், உங்களை உங்களது இல்லங்களை விட்டும் வெளியேற்றவில்லையோ அவர் களுக்கும் நீங்கள் நன்மை செய்வதையும் அவர்களுடன் நீங்கள் நீதியாக நடப்பதையும் அல்லாஹ் உங்களுக்குத் தடுக்கவில்லை. நிச்சயமாக அல்லாஹ் நீதியாக நடப்பவர்களை நேசிக்கின்றான். (60:08)

அவர்களுடன் நல்ல முறையில் நடத்தல் என்பதில் அறுத்த மாமிசத்தை அவர்கள் விரும்பும் பட்சத்தில் எதிர்பார்க்கும் நிலையில் அவர்களுக்கு வழங்குவதும் அடங்கக் கூடியதே!

குறிப்பாக அந்நியர்கள் அண்டை வீட்டாராக இருந்தால் இது இன்னும் முக்கியத்துவம் பெறுகின்றது. அண்டை வீட்டாரைக் கண்ணிப்படுத்துமாறு இஸ்லாம் கூறுகின்றது. அயலில் இருக்கும் மாற்று மதத்தவர்களது வீட்டைத் தாண்டிச் சென்று முஸ்லிம்களுக்கு மாமிசம் வழங்குவது அயலவரை அவமதிப்பதாக அமைந்து விடும்.

இந்த வகையில் முஸ்லிம்களையும் இஸ்லாத்தையும் எதிர்க்காத மாற்று மதத்தவர்களுக்கு உழ்ஹிய்யா மாமிசத்தை வழங்குவதில் எந்தக் குற்றமும் இல்லை.

 

 


 
எவ்வளவு நாட்கள் குர்பானி கொடுக்கலாம் :

பெருநாள் உடைய தொழுகை முடிந்ததில் இருந்து அன்றைய தினம் முழுமையாக அதற்குப்பிறகு அய்யாமுல் தஷ்ரீக் என்று சொல்லப்படக்கூடிய பிறை 11, 12, 13 அன்று சூரியன் மறையும் வரை உள்ள நேரங்களில் அந்த குர்பானி பிராணியை அறுப்பதற்கு அனுமதி இருக்கிறது.

 

அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள். 

 

وَكُلُّ أَيَّامِ التَّشْرِيقِ ذَبْحٌ

 

அய்யாமுல் தஷ்ரீக் உடைய எல்லா நாட்களும் குர்பானி அறுப்பதற்குரிய நாட்கள் என்று. 

 

அறிவிப்பாளர்: ஜுபைர் இப்னு முத்இம் ரழியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்னத் அஹ்மத், எண்: 16751

 

ஆகவே பிறை பத்தில் அறுக்கலாம். முடியவில்லை என்றால் பிறை 11 ல் அறுக்கலாம். முடியவில்லை என்றால் பிறை 12.  முடியவில்லை என்றால் பிறை 13 ல் அறுக்கலாம் 

 

ஆனால் ஒன்றை கவனிக்கவேண்டும். அலட்சியத்தின் காரணமாக தள்ளிப் போடக் கூடாது. அமல்கள் விஷயத்தில் அமல்களை எவ்வளவு சீக்கிரம் விரைந்து செய்வாரோ அவ்வளவு சிறந்தது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

 

துல் ஹஜ் உடைய நாள் 10 - 11 - 12 - 13 ஆகிய நாட்கள் அதாவது தஷ்ரிகுடைய நாட்கள் வரை நாம் குர்பானி கொடுக்கலாம்!

பிறருக்காக குர்பான்?
ஆயிஷா(ரலி) கூறினார்: (நபி(ஸல்) அவர்களுடன் ஹஜ்ஜுக்குச் சென்றிருந்தபோது) நான் மக்காவினுள் நுழையும் முன் சரிஃப் எனுமிடத்தில் எனக்கு மாதவிடாய் ஏற்பட்டிருந்த நிலையில் நபி(ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள். அப்போது நான் அழுது கொண்டிருந்தேன். நபி(ஸல்) அவர்கள் உனக்கென்ன ஆயிற்று? உனக்கு மாதவிடாய் ஏற்பட்டுவிட்டதா? என்று கேட்டார்கள். நான், ஆம் என்று சொன்னேன். நபி(ஸல்) அவர்கள் (ந்த மாதவிடாயான)து, பெண்களுக்கு அல்லாஹ் எழுதிவிட்ட விதியாகும். எனவே, ஹஜ் செய்பவர் நிறை வேற்றும் வழிபாடுகள் அனைத்தையும் நீயும் நிறைவேற்று. இறை இல்லத்தை (புனித கஅபாவை)ச் சுற்றி வருவதைத் தவிர என்று கூறினார்கள்.

நாங்கள் மினாவில் இருந்தபோது மாட்டிறைச்சி என்னிடம் கொண்டு வரப்பட்டது. நான், இது என்ன? என்று கேட்டேன். மக்கள், இறைத் தூதர் (ஸல்) அவர்கள், தம் துணைவியருக்காக மாடுகளை அறுத்துக் குர்பானி கொடுத்தார்கள் என்று பதிலளித்தார்கள். (முஸ்லிம் 5548)

மேலும் ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் கள் (தமது ஹஜ்ஜின்போது) தம் துணைவியர் சார்பாக அறுத்துப் பலியிட்டார்கள். (முஸ்லிம்-2544)

தனது குடும்பத்திலுள்ளவர்களுக்காவோ, அல்லது பிறருக்காகவோ, தாராளமாக கொடுக்கலாம். ஒருவர் வெளி நாட்டிலுள்ளார் என்றால் அவருக்காகவும் தாராளமாக குர்பான் கொடுக்கலாம்.

போனவருடம் குர்பானி கொடுத்தவர் வசதி இல்லாவிட்டாலும் நடப்பு வருடத்திலும் கண்டிப்பாகக் குர்பானி கொடுக்க வேண்டுமா?

சிலர் இவ்வாறு நடந்து கொள்கிறார்கள். போன வருடம் குர்பானி கொடுத்துவிட்டு இந்த வருடம் குர்பானி கொடுக்காமல் இருந்தால் மற்றவர்கள் நம்மை மட்டமாக நினைப்பார்கள் என்று எண்ணி கடன்பட்டு குர்பானி கொடுக்கிறார்கள். இவ்வாறு இஸ்லாம் நமக்குக் கட்டளையிடவில்லை. குர்பானியின் நோக்கமே இறையச்சம்தான். எனவே நடப்பு வருடத்தில் குர்பானி கொடுக்க வசதியிருந்தால் மட்டுமே அவர் மீது கடமையாகும்.

 

ஒரு குடும்பத்திற்கு ஒரு ஆடுதான் கொடுக்க வேண்டுமா?

பெருமையை நாடாமல் ஏழைகளின் தேவையைக் கருதி எத்தனை பிராணி வேண்டுமானாலும் கொடுக்கலாம். ஆனால் மாமிசத்தை வீண்விரையம் செய்யக்கூடாது.

நபி(ஸல்) அவர்கள் கருப்பும், வெள்ளையும் கலந்த கொம்புள்ள இரண்டு ஆடுகளை குர்பானி கொடுத்தார்கள்.

அறிவிப்பவர்: அனஸ்(ரலி) நூற்கள்: புகாரி 5565, முஸ்லிம் (3975)

நபி (ஸல்) அவர்கள் ஹஜ்ஜில் அவர்களுடைய 100 ஒட்டகத்தில் 63 ஒட்டகைகளை தம் கரத்தால் குர்பானி கொடுத்துள்ளார்கள். மீதத்தை அலீ (ரலி) அவர்களிடம் கொடுத்து அறுக்கும் படி கூறினார்கள்.

நன்மையைக் கருதி அதிகமாகக் குர்பானி கொடுப்பது சிறந்தது என்றும் தனக்கு முடியாத பட்சத்தில் மற்றவரிடம் கொடுத்து குர்பானி பிராணியை அறுக்கச் சொல்லலாம் என்றும் இந்த ஹதீஸிலிருந்து விளங்கிக்கொள்ள முடியும்.

மிக நீண்ட இந்த ஹதீஸில் நபி (ஸல்) அவர்கள் அறுக்கப்பட்ட பிராணியின் மாமிசத் துண்டுகளைச் சமைத்துச் சாப்பிட்டதாக உள்ளது.

அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி) நூல் : முஸ்லிம் (2334)

குர்பானி கொடுப்பவர் தன்னுடைய குர்பானியின் மாமிசத்தை உண்பது நபிவழி என்பதற்கு இது சிறந்த சான்றாக உள்ளது.

மேற்கண்ட ஹதீஸ்கள் பெருமையை நாடாமல், ஏழைகளின் தேவைகளைக் கருதி எத்தனை பிராணிகளை வேண்டுமானாலும் குர்பானி கொடுக்கலாம் என்று கூறுகிறது. சிலர் ஒவ்வொருவருக்கும் ஒரு ஆடு கொடுக்க வேண்டும் என்றும் சிலர் மூன்று நபருக்கு ஒரு ஆடு கொடுக்க வேண்டும் எனவும் மற்றும் பலர் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு ஆடு கொடுத்தால் போதும் என்றும் கூறுகின்றனர்.

இவற்றில் ஒரு ஆடு ஒரு குடும்பத்திற்குப் போதுமானது என்று கூறுவோரின் கருத்தே சரியான கருத்து. ஏனெனில் நபி (ஸல்) அவர்களுடைய காலத்தில் சஹாபாக்கள் தங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும் சேர்த்து ஒரு ஆட்டை மட்டும் குர்பானியாகக் கொடுத்துள்ளார்கள் என பின்வரும் செய்தி கூறுகிறது.

 

 

 

 

இறந்தவர் சார்பாக குர்பானி கொடுக்கலாமா?

இறந்தவர்கள் சார்பாக குர்பானி கொடுப்பதற்கு சரியான ஹதீஸ் ஆதாரம் இல்லை. இதற்கு ஆதாரமாக எடுத்துக் காட்டப்படும் ஹதீஸ் பலவீனமானதாக இருப்பதுடன் ஆதாரப்பூர்மான ஹதீசுடன் மோதுகிறது.

ஆதமின் மகன் இறந்த உடன் மூன்று காரியங்களைத் தவிர மற்ற எல்லாத் தொடர்புகளும் துண்டிக்கப்பட்டு விடுகின்றன. அவை 1. நிரந்தர தர்மம். 2 .பயன்தரும் கல்வி 3. தன் தந்தைக்காக துஆச் செய்யும் நல்ல குழந்தை என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) நூல் : முஸ்லிம் 3358

 


ஹஜ் செய்பவர் உள்ளூரில் குர்பானி கொடுக்க வேண்டுமா?

குர்பானி என்ற கடமை ஹஜ் கடமை மூலமாகவே உள்ளூரிலுள்ளவர்களுக்கு கடமையாகியுள்ளது. ஒருவர் ஹஜ் செய்து அங்கு குர்பானி கொடுத்துவிட்டால் அவர் குடும்பம் சார்பாக உள்ளூரில் குர்பானி கொடுக்கத் தேவையில்லை. நபிகளார் ஹஜ் செய்தபோது உள்ளூரில் குர்பானி கொடுக்கக் கட்டளையிடவில்லை.

 

இறைச்சியை வாகனத்திலோ, கையிலோ எடுத்து செல்லும் போது பாதை வழியாக இரத்தம் வடிய, வடிய எடுத்துச் செல்லாதீர்கள். அந்நியர்கள் கோபம் அடையக் கூடிய அளவிற்கு தவறான முறையில் நடந்து கொள்ளாதீர்கள்.

 

ஆகவே இதுபோன்ற குர்பானி உடைய சட்டங்களை தெரிந்து நமது வாழ்க்கையில் கடைபிடிக்க வேண்டும். தெரியாத மக்களுக்கும் இதை குறித்து நாம் சொல்ல வேண்டும். எந்த ஒரு இபாதத்தாக இருந்தாலும் அல்லாஹ் அதை நமக்கு எப்படி கடமையாக்கி இருக்கிறான்ன்? அல்லாஹ்வுடைய தூதர் எப்படி வழிகாட்டினார்கள்? என்ற இல்மை கற்று செயல்பட வேண்டும். அல்லாஹ் அதற்க்கு வாய்ப்பளிப்பானாக

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

1.கணவனைக் கவரும் வழிகள் 40

மண்ணறை வேதனை 001

மக்தப் மதரஸாவின் வளர்ச்சி மார்க்கத்தின் எழுச்சி...!