குடும்ப விவகாரங்களும், இறையச்சமும்
🌹🌹குடும்ப விவகாரங்களும், இறையச்சமும்🌹🌹
தலாக் தொடர்பான இறைச்சட்டங்களைப் படிக்கும் போது ஒவ்வொரு சட்டத்திற்குப் பிறகும் இறைவன் கூறும் முடிவுகள் அதிகம் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியவையாகும்.
✍️ விவாகரத்துச் செய்யப்பட்ட பெண்ணுக்கு வழங்கப்பட்ட மஹரில் எதையும் திருப்பிக் கேட்கக் கூடாது.
“குலா” வின் போது ஒரு பெண் மஹரை திருப்பிக் கொடுக்க வேண்டும்.
என்ற இரண்டு அடிப்படைகளையும் எடுத்துக் கூறிய பின் அல்லாஹ் கூறுகிறான் :-
✨‘இவை அல்லாஹ்வின் வரம்புகளாகும். இவற்றை நீங்கள் மீறாதீர்கள். அல்லாஹ்வின் வரம்புகளை யார் மீறுகிறார்களோ அவர்களே அநியாயக்காரர்கள்.’✨
(அல்குர்ஆன் 2 : 229)
✍️✍️ ஒருவர் ஒரு பெண்ணை விவாகரத்துச் செய்துவிடுகிறார். பின் அப்பெண் இன்னொருவரை திருமணம் செய்து அவரும் இவளை விவாகரத்துச் செய்து விடுகிறார். இப்போது அவள் முதல் கணவருடன் சேர்ந்து வாழலாம் என்ற சட்டத்தை தெளிவு படுத்திய பின் அல்லாஹ் கூறுகிறான் : -
✨‘இவை அல்லாஹ்வின் வரம்புகளாகும். அறிந்து கொள்ளும் சமுதாயத்திற்கு இவற்றை அவன் தெளிவாக்குகின்றான்.’✨
(அல்குர்ஆன் 2 : 230)
✍️✍️ மனைவியை துன்புறுத்தும் நோக்கத்தில் விவாகரத்துச் செய்யாமல் இழுத்தடிக்கக் கூடாது என்பது தொடர்பான சட்டத்தை எடுத்துரைத்த பின் அதை மீறுவோருக்கு அல்லாஹ் கூறுகிறான் :-
✨“அவ்வாறு செய்பவர் தமக்குத் தாமே அநியாயம் செய்து கொண்டார். அல்லாஹ்வின் வசனங்களைக் கேலியாக எடுத்துக் கொள்ளாதீர்கள். அல்லாஹ் உங்களுக்கு வழங்கிய அருட்கொடையையும் அவன் உங்களுக்கு அருளிய வேதத்தையும், ஞானத்தையும் நினைத்துப் பாருங்கள். இதன் மூலம் அவன் உங்களுக்கு அறிவுரை கூறுகிறான். அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள். ஒவ்வொரு பொருளையும் அல்லாஹ் நன்கறிந்தவன் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.” ✨
(அல்குர்ஆன் 2 : 231)
✍️✍️ மீண்டும் சேர்ந்து கொள்ளத் தக்க விவாகரத்து மூலம் பிரிந்து விட்ட ஆணும், பெண்ணும் மீண்டும் சேர்ந்து வாழவிரும்பினால் அவர்களைத் தடுப்பது கூடாது என்ற சட்டத்தை எடுத்துரைத்த பின் அல்லாஹ் கூறுகிறான் : -
✨‘இதன் மூலம், உங்களில் அல்லாஹ்வின்மீதும், மறுமை நாள்மீதும் நம்பிக்கை கொண்டவர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. இதுவே உங்களுக்கு மிகவும் அப்பழுக்கற்றதும் தூய்மையானதும் ஆகும். அல்லாஹ்வே அறிகிறான். நீங்கள் அறிய மாட்டீர்கள்.’ ✨
(அல்குர்ஆன் 2 : 232)
✍️✍️ விவாகரத்துச் செய்யப்பட்ட பிறகு அப்பெண் முந்தைய கணவனின் குழந்தைக்கு பாலூட்டினால் அவளுக்குரிய உணவுக்கும், ஆடைக்கும் அவனே பொறுப்பு என்பது தொடர்பான சட்டங்களை எடுத்துரைத்த பின் அல்லாஹ் கூறுகிறான் : -
✨‘அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள். அல்லாஹ், நீங்கள் செய்வதைப் பார்ப்பவன் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.’✨
(அல்குர்ஆன் 2 : 233)
📌 ஆக, மொத்தத்தில் இறைச்சட்டங்களின் படி வாழ்வதிலும், இறைவனுக்கு அஞ்சி நடப்பதிலும்தான் சமூகத்திற்கு உண்மையான நிம்மதி உள்ளது. இறைவழிகாட்டுதல்களை மீறி நடைபெறும் ஒவ்வொரு நடவடிக்கையிலும் ஆயிரம் நியாயங்களை சொல்லிக் கொண்டாலும் அதற்கான தீய விளைவுகள் ஏற்பட்டே தீரும். அதை அனுபவித்தே ஆகவேண்டும்.
சட்டங்கள் வெறும் எழுத்துக்களாக இருக்கும் வரை சமூகத்தில் முழுமையான அமைதி ஏற்படாது. ஒவ்வொரு சட்டத்திற்குப் பின்னாலும் "அல்லாஹ் நம்மைக் கண்காணிக்கிறான்; மறுமையில் இதற்குப் பதில் சொல்ல வேண்டும்" என்ற உணர்வு உயிர்ப்புடன் இருக்கும்போது மட்டுமே குடும்பங்களிலும் சமூகத்திலும் உண்மையான நீதியும் நிம்மதியும் நிலைநாட்டப்படும்.
கருத்துகள்
கருத்துரையிடுக