எதுஇஸ்லாமியஆட்சி? சவூதியா-தாலீபானா?

  

 

اَ لَّذِيْنَ اِنْ مَّكَّنّٰهُمْ فِى الْاَرْضِ اَقَامُوا الصَّلٰوةَ وَاٰتَوُا الزَّكٰوةَ وَاَمَرُوْا بِالْمَعْرُوْفِ وَنَهَوْا عَنِ الْمُنْكَرِ‌ ؕ وَلِلّٰهِ عَاقِبَةُ الْاُمُوْرِ

இவர்கள் (எத்தகையோரென்றால்) இவர்களுக்கு நாம் பூமியில் இடம்பாடாக்கிக் கொடுத்தால், இவர்கள் தொழுகையை முறையாகக் கடைப்பிடிப்பார்கள்; ஜகாத்தும் கொடுப்பார்கள்; நன்மையான காரியங்களைச் செய்யவும் ஏவுவார்கள்; தீமையை விட்டும் விலக்குவார்கள் - மேலும், சகல காரியங்களின் முடிவும் அல்லாஹ்விடமே இருக்கிறது22:41

இஸ்லாமிய ஆட்சி! என்றால் என்ன?

********************************************************************

இன்று முஸ்லிம்களுக்குள் உள்ள மிகப்பெரிய தவறுதலான புரிதலில் இஸ்லாமிய ஆட்சியை பற்றிய புரிதலும் ஒன்றென்றால் அது மிகையாகாது! ஏன் இஸ்லாமிய ஆட்சியை முஸ்லிம்களுக்குள் சிலரே இன்று வேண்டாம் என்று சொல்லும் நிலையும் வந்து விட்டதை பார்க்க முடிகிறது. இதற்கு காரணம், நம் மக்களிடையே இஸ்லாமிய ஆட்சியை பற்றிய சரியான புரிதல் இல்லை என்பதே! ஆனால் முஸ்லிமாக வாழக்கூடிய எல்லோரும் குரானை கொண்டு ஆட்சி செய்வதையும் அதன் கீழ் வாழ்ந்திடுவதையும் விரும்புகிறார்கள்.

இருந்தும், இன்று மக்களுக்குள் இஸ்லாமிய ஆட்சி எப்படி அமையும் என்பது பற்றி சில கருத்துகள் உள்ளதைப் பார்க்கிறோம். பெரும்பாலும் மூன்று கருத்துகள் சமுதாயத்தில் எடுத்து வைக்கப்படுகின்றது! இவற்றில் எது சரி என்பதை இஸ்லாமிய வரலாற்று கண்ணோட்டத்துடன் அணுகினால் நம்மால் எளிதில் விளங்கி கொள்ள முடியும்.

1) சில முஸ்லிம் அமைப்புகள் இஸ்லாமிய ஆட்சி என்பது நாம் அரசியல் மூலமாக ஆட்சியை பிடித்து பின்பு அதன் மூலம் தான் நடைமுறைப்படுத்த முடியும் .

2) சில முஸ்லிம் அமைப்புகள் முஸ்லிம்கள் எப்போது பெரும்பான்மையாக இந்நாட்டில் வாழ்வார்களோ அப்போதே சாத்தியம் என்கின்றனர்.

3) இஸ்லாமிய ஆட்சி நடைமுறைப்படுத்துவது என்பது பிரச்சாரத்தின் வாயிலாகவும் எதிரிகளிடம் சண்டையிட்டு வீழ்த்துவதாலுமே நடைமுறைப்படுத்த முடியும் என்கின்றனர் மேலும் சிலர்.

இந்த மூன்று கருத்துகளில் எது சரியென்று நபிவழிப்படி ஆராய்ந்தால் எதன் மூலம் இஸ்லாமிய ஆட்சியை கொண்டு வருவது சாத்தியமா இல்லையா என்பது தெளிவாகி விடும்.

(" யாரெல்லாம் அல்லாஹ்வின் சட்டத்திற்கு எதிரிகளோ அவர்களெல்லாம் எனக்கும் எதிரிகள். அல்லாஹ்வின் சட்டத்தை ஏற்றுக்கொள்வதில் எனக்கிடையே எந்த சமரசமும் இல்லை" -மௌலானா மௌதூதி)

நபி(ஸல்) அவர்கள் அமைத்த இஸ்லாமிய ஆட்சி

எல்லாவற்றிலும் முஸ்லிம்களுக்கு முன்மாதிரியாக உள்ள நபியவர்கள் எப்படி இஸ்லாமிய ஆட்சியை நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும் என்றும் தனது வாழ்க்கையின் மூலம் கற்றுக் கொடுத்துள்ளார்கள். ஒரு இஸ்லாமிய ஆட்சியை நடைமுறைப்படுத்திட எளிதான முறையை கையாண்டார்கள்! முதலில் ஒரு சிறு கூட்டத்தை பயிற்றுவித்து அவர்களை நன்றாக பண்படுத்தினார்கள். அடுத்ததாக அந்த பண்படுத்தப்பட்ட எழுச்சி கூட்டத்தின் மூலம் ஒவ்வொருவருக்கும் இஸ்லாத்தை பிரச்சாரம் செய்தார்கள் அதன் பின் ஒரு இஸ்லாமிய அரசை அமைத்தார்கள்.

ஒரு இஸ்லாமிய ஆட்சி அமைப்பது எவ்வளவு எளிதாக உள்ளது! அந்த ஆட்சிக்கு பின்னால் அந்த கூட்டத்தின் முழு முயற்சிகளும் அவர்களது கஷ்டங்களும் இருந்தது. நபி(ஸல்) இஸ்லாமிய அரசு அமைத்த மதினாவிலும் யூதர்கள் இருந்தார்கள் இறைமறுப்பாளர்கள் இருந்தார்கள் அவர்களில் பெரும்பாலானோர் இஸ்லாமிய ஆட்சிக்கு எதிராக ஒரு குரல் கூட எழுப்பவில்லை. காரணம், அவர்கள் இந்த ஆட்சியில் மட்டுமே தங்ககளுக்கு நீதி கிடைக்கும் என்பதை அறிந்திருந்தார்கள்.

அரசியலின் மூலம் இஸ்லாமிய ஆட்சி சாத்தியமா?

அரசியலின் மூலம் இஸ்லாமிய ஆட்சி கொண்டு வர முடியுமா என்பதை ஆராய்வதற்கு முன்னால் இந்நாள் வரை இந்த அரசியலினால் முஸ்லிம் மக்களுக்கு என்ன பலன் கிடைத்தது என்று சிந்திப்பது அவசியம். இன்று நம்முடைய முஸ்லிம் அமைப்புகளினால் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியவில்லை ஆனால் சுதந்திரத்திற்கு முன் முஸ்லிம்கள் தான் இந்த நாட்டின் எதிர்கட்சிகள்! அப்போதும் கூட முஸ்லிம்களுக்கு எவ்வித நன்மையும் இவர்களால் நடந்தேறவில்லை.

அரசியல் மூலமாக முஸ்லிம் மக்களுக்கு ஒரு சலுகை கிடைத்தது என்றால் அவர்களிடமிருந்த பல சலுகைகள் கைப்பற்றப்பட்டு பின்பே அந்த சலுகை நிறைவேற்றப்படுகின்றன இது தான் அரசியல்வாதிகளினால் போடப்படும் முஸ்லிம்களுக்கெதிரான சூழ்ச்சி! இப்படி நாம் இந்த நாட்டில் எதிர்க்கட்சியாக இருந்த போதும் கூட அரசியலினால் எதுவும் சாதித்திட இயலவில்லை.

2013 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் முசாஃபர்நகரில் கலவரம் நடந்தது. கலவரத்தில் நடந்த வன்முறைகளில் சிக்கி 60 பேர் உயிரிழந்தனர் மற்றும் 40,000-க்கும் மேற்பட்ட மக்கள் நகரை விட்டு வெளியேறினர்.

முசாஃபர் நகர் கலவரம் நடந்த மாநிலமான உத்திர பிரதேசத்தில் 64 எம்.எல்.ஏ க்கள் முஸ்லிம்கள்! ஆனாலும் ஒரு உயிரை காப்பாற்ற முடியவில்லை, அப்பாவியை பல இஸ்லாமியர்கள் கைது செய்யப்பட்டார்கள் அவர்களில் ஒருவரையும் விடுவித்திட முடியவில்லை, வீடு இழந்து அகதியாய் இருக்கும் பல லட்ச முஸ்லிம் மக்களுக்கு இதுவரை அகதி முகாமில் கூட அடிப்படை வசதி செய்து தர முடியவில்லை! பின்பு எப்படி நம்மால் ஒரு ஆட்சியை கொண்டு வந்திட முடியும்?

நபி(ஸல்) அவர்கள் நினைத்திருந்தால் குறைசிகளிடம் இருந்து எளிதாக மிகப்பெரிய பதவியை பெற்றிருக்கலாம். அதன் மூலம் எளிதாக ஆட்சியாளர்களை அமைத்து ஒரு இஸ்லாமிய ஆட்சியை பிற்காலத்தில் உருவாக்கி இருக்கலாம். ஆனால் நபி(ஸல்) அவர்கள் இந்த வழியை முஸ்லிம்களுக்கு காட்டித் தரவில்லை! வரலாற்றிலும் நாம் இந்த அரசியலால் எதையும் சாதித்ததில்லை! எனவே அரசியலில் புகுந்து நமக்கான ஆட்சியை அமைப்பதென்பது காணல் நீரை கையில் பிடிப்பது போலத்தான்.

பெரும்பான்மை பலத்தால் தான் இஸ்லாமிய ஆட்சி அமையுமா!

பெரும்பான்மை பலத்தை கொண்டு தான் இஸ்லாமிய ஆட்சியை அமைத்திட முடியும் என்றால் இஸ்லாம் மதீனாவை தவிர வேறு எந்த நாடுகளையும் ஆட்சி செய்திருக்காது. பெரும்பான்மை பலம் கொண்டு எதையும் சாதித்து விட முடியாது என்பதற்கு இன்றைய முஸ்லிம் நாடுகளே என்றும் சாட்சியாக அமையும்!

கிட்டத்தட்ட 55 முஸ்லிம் நாடுகளை நாம் கொண்டுள்ளோம் ஆனால் இன்று ஒரு நாட்டிலாவது இஸ்லாமிய ஆட்சி அமலில் உள்ளதா? இல்லை, ஏன் அந்த நாட்டில் வாழும் மக்களெல்லாம் முஸ்லிம்கள் தானே! இருந்தும் ஒரு இஸ்லாமிய ஆட்சியை நடைமுறைபடுத்திட முடியவில்லை! பெரும்பான்மை பலத்தை மட்டும் கொண்டு நம்மால் எதுவும் அடைந்திட முடியாது என்பதற்கு இதுவே மிகப்பெரிய சாட்சி இல்லையா!

மதினாவிலிருந்து ஒரு படை மக்காவை நோக்கி வந்தது எளிதான வெற்றியினை அல்லாஹ்வின் உதவியுடன் அவர்கள் பெற்றார்கள் ஆட்சியை நிலைநிறுத்தினார்கள்! ஆனால் வந்த படையோ சிறுபான்மை தான் ஆனால் ஆட்சியை ஏற்றுக் கொண்டவர்கள் பெரும்பான்மை மக்கள்.

வரலாறு வாயிலாகவும் நாம் பெரும்பான்மை பலத்தை கொண்டு இஸ்லாமிய ஆட்சியை நடைமுறைப்படுத்திடவில்லை. நபி(ஸல்) அவர்களின் வழிமுறை சிறுபான்மையோ பெரும்பான்மையோ இஸ்லாமிய ஆட்சியை நடைமுறைப்படுத்திட இரண்டும் தடையில்லை என்பதை தெளிவாக உணர்த்துகிறது.

தாவாவும் ஜிஹாதும் கொண்டு உருவாகும் இஸ்லாமிய ஆட்சி

ஃ நபி(ஸல்) அவர்களும் சஹாபாக்களும் மேற்கொண்ட தாவா என்பது வெறும் கலிமாவை மட்டும் மக்களுக்கு சொல்லி அழைப்பதாக இருக்கவில்லை. இஸ்லாமிய சட்டங்களின் முறையையும் சேர்த்து அன்றைய மக்களுக்கு தாவா செய்தார்கள். அதனால் தான் எந்த ஒரு நாட்டையும் இஸ்லாம் கைப்பற்றிடும் போது அந்நாட்டு மன்னர்களினால் எதிர்க்கப்படுவதாகவும் அந்நாட்டின் மக்களால் விருமபக்கூடியதாகவும் இருந்தது.

ஒரு சமூகம் பண்படுத்தப்பட்டு மக்களிடையான பிரச்சாரமும் பெரும்பாலும் நிறைவடைந்த பின்னரும் எப்படியும் இஸ்லாமிய ஆட்சியை எதிர்ப்பதற்கு ஒரு அபூஜஹலும் அவனது மக்களும் கண்டிப்பாக இருப்பார்கள். அவர்களுக்கு எதிராக போரை தொடுத்திடுவதை தவிர வேறு வழியில்லை. அப்படி செய்வதின் மூலம் தான் அந்நாட்டு மக்களை அநீதியான ஆட்சியிலிருந்து காப்பாற்ற முடியும் ஒரு நீதியான ஆட்சியை நடைமுறைப்படுத்திட முடியும்

நபி(ஸல்) அவர்கள் மதீனாவை வெற்றி கொண்ட போது எல்லா மக்கள் மீதும் போரை அறிவித்திடவில்லை! ஒரு சில மோசமான ஆட்சியாளர்களையும் இந்த ஆட்சியை ஏற்றுக் கொள்ளாதவர்களையுமே எதிர்த்தார்கள். பெரும்பான்மையான மக்கள் இந்த ஆட்சியை முன்வந்து ஏற்றார்கள். காரணம், இந்த ஆட்சியின் மூலம் மட்டுமே நாம் நிம்மதியான வாழ்க்கையை வாழ்ந்திட முடியும் என அவர்கள் நம்பிக்கை கொண்டிருந்தார்கள் அதன் படி வாழவும் செய்தார்கள்.

இன்றைய தீர்வும் இதுவே, நமது சமூகம் தாவாக்களை முடுக்கி விடுவதில்லை! தாவா என்ற பெயரில் இஸ்லாமிய சட்டங்களை நாம் எப்போதும் அதிகம் முன்வைத்ததே கிடையாது. ஒருவருக்கு இஸ்லாத்தை பற்றி தாவா செய்யும் போது அவர் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளக் கூடியவரா இல்லையா என அல்லாஹ் முடிவு செய்கிறான் ஆனால் இஸ்லாமிய ஆட்சியை அவரது மனம் அங்கீகரித்து விடுகிறது! இன்றைய ஒட்டுமொத்த முஸ்லிம் இயக்கங்களும் முஸ்லிம் மக்களும் இப்பணியை மேற்கொண்டால் அடுத்த 20 வருடங்களில் இந்தியாவை இஸ்லாம் ஆட்சி செய்யும் இன்ஷா அல்லாஹ்.                                   எது இஸ்லாமிய ஆட்சி?தாலிபான்களின் ஆட்சியா?

சவுதி ஆட்சியா ?ஈரானியஆட்சியா ?

 

இஸ்லாமிய ஆட்சியின் (கிலாபத்) கூறுகளை அறிந்து கொண்டால் எது உண்மையான இஸ்லாமிய ஆட்சி என்பது நமக்கு புரிந்துவிடும்.

1.     மக்களின் சம்மதம் பெற்றே ஆட்சியாளர்கள் பதவிக்கு வரவேண்டும் .இதற்கு (பைஅத்) உறுதிப்பிரமாணம் என்று பெயர் .நான்கு கலீபாக்களும் இவ்வாறே தேர்ந்தெடுக்கப்பட்டனர். எனவே மன்னராட்சி, குடும்ப ஆட்சி ,சர்வாதிகார ஆட்சி, ராணுவ ஆட்சி ,மதகுருமார்கள் ஆட்சி ஆகியவற்றிற்கு இஸ்லாத்தில் இட இல்லை.

 

وَالَّذِيْنَ اسْتَجَابُوا لِرَبِّهِمْ وَاَقَامُوْا الصَّلٰوةَ وَاَمْرُهُمْ شُوْرٰى بَيْنَهُمْ وَمِمَّا رَزَقْنٰهُمْ يُنْفِقُوْنَ‌ۚ‏

42:38. இன்னும் தங்கள் இறைவன் கட்டளைகளை ஏற்று தொழுகையை (ஒழுங்குப்படி) நிலைநிறுத்துவார்கள் - அன்றியும் தம் காரியங்களைத் தம்மிடையே கலந்தாலோசித்துக் கொள்வர்; மேலும், நாம் அவர்களுக்கு அளித்தவற்றிலிருந்து (தானமாகச்) செலவு செய்வார்கள்.

2. ஆலோசனை( ஷூரா)செய்தே முடிவுகள் எடுக்கப்பட வேண்டும். தேர்ந்தெடுக்கப்பட்ட குழு இப்பணியை செய்ய வேண்டும் .அன்று மசூதிகளில் இத்தகைய ஆலோசனைகள், விவாதங்கள் நடைபெற்றன.

3 தட்டிக்கேட்கும் உரிமை.

'கொடுமைக்கார ஆட்சியாளருக்கு முன் உண்மையை உரைப்பதே சிறந்த அறப்போர்" என்று நபிகள் நாயகம் கூறினார்கள். எனவே ஆட்சியாளர்களை தட்டிக்கேட்கும் உரிமை மக்களுக்கு உண்டு. ஆனால் சவுதி உட்பட பெரும்பாலான முஸ்லீம் நாடுகளில் மக்களுக்கு இந்த உரிமை மறுக்கப்பட்டுள்ளது. தட்டிக்கேட்டால் தலையைத் தட்டி சிறையில் உட்கார வைப்பார்கள்.

4. அரசு கருவூலம் மக்களின் சொத்து ஆகும். அரசு கருவூலத்தில் இருந்து செல்வத்தை சொந்த உபயோகத்திற்காக எடுப்பதற்கு ஆட்சியாளர்களுக்கு அனுமதி இல்லை அரபு நாடுகளில் பெட்ரோல் மூலம் வரும் வருமானம் அரச குடும்பத்திற்கு செல்கிறது

 

 

5 சுதந்திரமான நீதித்துறை.

நீதித்துறையில் கலீபாக்கள் தலையிட மாட்டார்கள் .கலீ பாக்களுக்க எதிராக தீர்ப்புகள் வழங்கப்பட்ட வரலாறுகள் உண்டு .

6. அந்தரங்க வாழ்விற்கான உரிமை .

மக்களின் அந்தரங்க வாழ்வில் அரசு தலையிடக் கூடாது. வீடுபுகுந்து துப்பறியும் வேலைகளில் ஈடுபடக்கூடாது.

7 இஸ்லாம் வழங்கும் உரிமைகளை ஆட்சியாளர்கள் மறுக்கக்கூடாது. இஸ்லாம் பெண்களுக்கு வழங்கியுள்ள கல்வி உரிமை, வேலைக்கு செல்லும் உரிமைகளை தாலிபான்கள் முன்னர் மறுத்தனர்.

8 சமயம் ,மொழி ,இன வேறுபாடின்றி அனைத்து குடிமக்களும் சமமாக நடத்தப்பட வேண்டும் .சமய உரிமைகள் ,வழிபாட்டு உரிமைகள் ,வணிக உரிமைகள் ,ஆட்சியில் பங்கேற்கும் உரிமை ஆகிய அனைத்தும் அனைவருக்கும் வழங்கப்படவேண்டும், இன்றுசில முஸ்லீம் நாடுகளில் இந்த உரிமைகள் முஸ்லிமல்லாதவர்களுக்கு மறுக்கப்படுகின்றன.

9. திணிப்பு கூடாது.

இஸ்லாமிய கோட்பாடுகளை பிரச்சாரம் செய்ய மட்டுமே உரிமை உண்டு .எவர்மீதும் திணிக்கக்கூடாது .பொது அமைதிக்கு கேடு விளைவிக்கும் செயல்களை மட்டுமே தடை செய்ய வேண்டும் .பர்தா அணிந்தே ஆக வேண்டும் என்று கட்டாயப்படுத்த முடியாது. ஆபாசமாக அணியக்கூடாது என்று மட்டும் சொல்லலாம்.

10 இஸ்லாம் கூறும் நன்மைகளை செயல்படுத்துவதும், தீமைகளை அகற்றுவதும் இஸ்லாமிய அரசின் நோக்கமாகும்.அந்த வகையில் அது ஒரு மக்களின் நலம் நாடும் அரசு (வெல்பேர் ஸ்டேட்) ஆகும்.

இவையே இஸ்லாமிய அரசின் அடிப்படை கோட்பாடுகள் ஆகும்.

இந்தக் கோட்பாடுகளை பின்பற்றினால் முஸ்லிம் ஆட்சியாளர்களுக்கும் ஆபத்து. அவர்களை இயக்கும் ஏகாதிபத்திய வாதிகளுக்கும் ஆபத்து .எனவே அவர்கள் மன்னராட்சியை, சர்வாதிகார ஆட்சியயேவிரும்புகிறார்கள்.

இஸ்லாமிய ஆட்சி, இஸ்லாமிய ஆட்சி என்று மார்தட்டும் சவூதியரும், தாலிபான்களும் இஸ்லாம் கூறும் முறைப்படி ஆட்சியை அமைத்துக் காட்டட்டும்.

முறையாக தேர்தல் நடத்துங்கள்.. மக்களுக்கு சுதந்திரம் வழங்குங்கள்.நீதியை நிலைநாட்டுங்கள்.முஸ்லிம் உலகம் உங்களிடம் இதையே எதிர்பார்க்கின்றது.

 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

1.கணவனைக் கவரும் வழிகள் 40

பத்ருப் போர் உணர்த்தும் பாடமும் படிப்பினைகளும்!

மண்ணறை வேதனை 001