கணவன் மனைவியின் கடமைகளும் பொறுப்புகளும்.
بسم الله الرحمن الرّحيم
~
«خَيْرُكُمْ خَيْرُكُمْ لِأَهْلِهِ، وَأَنَا خَيْرُكُمْ لِأَهْلِي»
உங்களிடையே சிறந்தவர் யார் என்றால் தன் மனைவியிடத்தில் சிறந்தவர் ஆவார். நான் என் மனைவியிடத்தில் சிறந்தவராக இருக்கிறேன் என்று நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்.
அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் ரழியல்லாஹுஅன்ஹு, நூல் :இப்னு மாஜா, எண்: 1977, தரம் : ஸஹீஹ் (அல்பானி)
இஸ்லாமிய பார்வையில் கணவன் மனைவிக்கு செய்ய வேண்டிய கடமைகள் என்ன? மனைவி கணவனுக்கு செய்ய வேண்டிய கடமைகள் என்ன?
கணவன் மனைவியை எப்படி பேண வேண்டும்?மனைவி கணவனை எப்படி பேண வேண்டும்?என்பதைப் பற்றிதான் இன்று நாம் பார்க்கப் போகிறோம்.
அல்லாஹ்வின் அடியார்களே! பொதுவாக இரண்டு முரண்பாடுகளை நாம் பார்க்கிறோம். ஒன்று ஆண்களிடம் இருக்கும் முரண்பாடு. சில ஆண்கள், பெண்களை வாயில்லாத ஜீவன்களாக பார்க்கிறார்கள். தாங்கள் என்ன தவறுகள் செய்தாலும் அதைத் தட்டிக் கேட்கக் கூடாது என்று எண்ணுகிறார்கள். பெண்கள் தங்களுடைய விருப்பத்தை வெளியில் சொல்ல முடியாமல் இருக்கிறார்கள். அவர்களுக்கு பேச்சுரிமை கிடையாது.
பெண்களை அடிமைப்படுத்தும் கலாச்சாரம் நம்மில் சிலரிடம் என்று சொல்லமுடியாது பலரிடம் இருக்கின்றது.
இன்னொரு முரண்பாடான விஷயம் என்னவென்றால் பெண்கள் தரப்பில், அவள் தன் மனைவி ஆயிற்றே! அவருக்கு விட்டுக் கொடுப்போம் என்றும், பெண்கள் பலவீனமானவர்கள் ஆயிற்றே! அவர்களுக்கு விட்டுக் கொடுப்போம் என்றும், ஆண்கள் அவர்கள் மீது கருணை காட்டி விட்டுக் கொடுத்ததின் விளைவு என்னவென்றால் அவர்களுடைய குடும்பத்தில் ஒவ்வொரு முடிவையும் பெண்கள் எடுக்க வேண்டிய சூழ்நிலை வருகிறது. இறுதியில் ஆண் ஒரு அடிமையைப் போன்று பெண்ணுக்கு பணிவிடை செய்து கொண்டு இருப்பான். இது மாதிரியான மோசமான கலாச்சாரங்கள் நம் குடும்பங்களில் காணப்படுகிறது.
அல்லாஹ்வின் அடியார்களே! இந்த இரண்டு முறையும் இஸ்லாமிய முறை அல்ல. இந்த இரண்டு முறையுமே வரம்பு மீறுதல் ஆகும். இந்த இரண்டு சூழ்நிலைகளும் நம் சமுதாயத்தில் மாற வேண்டும்.
அல்லாஹுத்தஆலா ஆணுக்கு என்று சில வரையறைகளை கொடுத்திருக்கிறான்.அவர்தான் அதில் முடிவெடுக்க வேண்டும். அவர் அதில் நிர்வாகியாக இருக்க வேண்டும். .அல்லாஹ் சொல்கிறான்;
الرِّجَالُ قَوَّامُونَ عَلَى النِّسَاءِ بِمَا فَضَّلَ اللَّهُ بَعْضَهُمْ عَلَى بَعْضٍ وَبِمَا أَنْفَقُوا مِنْ أَمْوَالِهِمْ فَالصَّالِحَاتُ قَانِتَاتٌ حَافِظَاتٌ لِلْغَيْبِ بِمَا حَفِظَ اللَّهُ وَاللَّاتِي تَخَافُونَ نُشُوزَهُنَّ فَعِظُوهُنَّ وَاهْجُرُوهُنَّ فِي الْمَضَاجِعِ وَاضْرِبُوهُنَّ فَإِنْ أَطَعْنَكُمْ فَلَا تَبْغُوا عَلَيْهِنَّ سَبِيلًا إِنَّ اللَّهَ كَانَ عَلِيًّا كَبِيرًا
ஆண்கள் பெண்களை நிர்வகிப்போர் ஆவர். இதற்குக் காரணம் அல்லாஹ் அவர்களில் சிலருக்குச் சிலரைவிட உயர்வை அளித்திருக்கின்றான் என்பதும், ஆண்கள் தங்களுடைய செல்வத்திலிருந்து செலவு செய்கிறார்கள் என்பதுமாகும். எனவே ஒழுக்கமான பெண்கள் கீழ்ப்படிந்தே நடப்பார்கள். மேலும், ஆண்கள் இல்லாதபோது (அப்பெண்கள்) அல்லாஹ்வின் பாதுகாப்பிலும், கண்காணிப்பிலும் இருக்கின்ற காரணத்தால் அவர்களின் உரிமைகளைப் பேணுவார்கள். மேலும், எந்தப் பெண்கள் குறித்து அவர்கள் (தம் கணவருக்கு)மாறு செய்வார்கள் என்று நீங்கள் அஞ்சுகின்றீர்களோ அந்தப் பெண்களுக்கு நல்லறிவு புகட்டுங்கள்; படுக்கைகளிலிருந்தும் அவர்களை ஒதுக்கி வையுங்கள்! மேலும் அவர்களை அடியுங்கள்! ஆனால் அவர்கள் உங்களுக்குக் கீழ்ப்படிந்துவிட்டால், பிறகு அவர்களுக்கு எதிராகக் கை நீட்ட எந்த சாக்குபோக்குகளையும் தேடாதீர்கள்! திண்ணமாக நம்புங்கள்: அல்லாஹ் மேலே இருக்கின்றான்; அவன் உயர்வானவனும் பெரியோனுமாய் இருக்கின்றான்.(அல்குர்ஆன் 4 : 34)
அல்லாஹ் போற்றக்கூடிய பெண் யார் என்றால்? அவள் தன் ரப்புக்கும் தன் கணவனுக்கும் பணிந்தவளாக இருப்பார். கட்டளையை மீறாமல்;எதிர்த்துப் பேசாமல், பெருமை அடிக்காமல்; கர்வம் கொள்ளாமல்; உன்னை விட நான் சிறந்தவள் என்று அகம்பாவம் இல்லாமல்,ஒரு மனரீதியாக உன்னோடு நான் வாழ்கிறேன்; நீ எனக்கு மஹர் கொடுத்து திருமணம் முடித்து இருக்கிறாய், என்னுடைய பிள்ளைகளுக்கு நீ பொறுப்பேற்று இருக்கிறாய்;நீ எனக்கு வாழ்க்கை தந்திருக்கிறாய் என்ற அடிப்படையில் கணவனுக்கு ஒரு மனத்தூய்மையோடு பணியக்கூடிய வாழ்க்கை தான் قنوت- குனூத் என்பதாகும்.
அல்லாஹ் போற்றக்கூடிய சாலிஹான பெண் என்பதற்கு விளக்கம் கொடுக்க வேண்டுமானால் நீண்ட பக்கங்களை தான் எழுதவேண்டும். சாலிஹான பெண் என்றால் குர்ஆன் சொல்லும்படி சுன்னாவில் சொல்லும்படி நடக்கக்கூடிய பெண்ணிற்கு பெயர்தான் சாலிஹான பெண் என்பது.
ஒரு பக்கம் உயர்ந்து ஒரு பக்கம் சாய்ந்து இருப்பவள் அல்ல. உதாரணமாக சில பெண்களை நாம் பார்த்தோமென்றால் தொழுகையில் அதிக கவனம் செலுத்துவாள். ஒரு இடத்திலேயே அமர்ந்து தொழுது கொண்டே இருப்பார்கள். கணவன் வீட்டிற்குள் சலாம் சொல்லி நுழையும் பொழுது தன் மனைவியானவள் வெறுப்பை காட்டுவது போல பதிலளிப்பார். பிறகு உணவுகேட்கும் தன் கணவனுக்கு பணிவிடை செய்ய மறுப்பாள். நான் தொழுது கொண்டிருக்கிறேன்; உங்களுக்கு தெரியவில்லையா?என்று கேட்பார். இப்படிப்பட்ட அந்தத் தொழுகையால் என்ன பிரயோஜனம்?!
இன்னும் சில பெண்களை பார்த்தோமென்றால் ஹிஜாப் அணிந்திருப்பாள்; ஹிஜாபில் மிக கவனம் செலுத்துவாள். சஹாபா காலத்தில் இருந்த பெண்மணிகளை போல் இருப்பார்.ஆனால் அவர்களுடைய நற்குணத்தை பார்த்தோமென்றால் தன் கணவரின் தாயைப் பற்றி குறை சொல்பவராக இருப்பார். அவனிடம் வாய் திறந்து பேசினால் குறை சொல்வதும் புறம்பேசுதல் ஆக இருக்கும்.இதனால் என்ன பிரயோஜனம்?ஹிஜாப் அணிந்து என்ன பிரயோஜனம்?
குணங்களில் தாழ்ந்தவர்களாக இருந்து இபாதத்துகளில் தலை சிறந்தவர்களாக இருப்பார்கள்.சில பெண்கள் இபாதத்தில் குறைந்தவர்களாக குணத்தில் அழகானவர்களாக நற்குணம் பொருந்தியவர்களாக இருப்பார்கள்.
தராசுத் தட்டு சரிசமமாக இருக்காது.அல்லாஹ்விற்கு செய்யக்கூடிய கடமைகளை செய்து நற்குணத்துடன் இருக்க வேண்டும். நம்முடைய முஸ்லிம் சகோதரிகளிடத்தில் இபாதத் இருந்தால் அஹ்லாக் இல்லை.அஹ்லாக் இருந்தால் இபாதத் இல்லை.இப்படியான முரண்பாடான நிலைகள். சிலரிடம் மார்க்கப்பற்று என்பது வெறும் ஹிஜாபை பேணுதல், மற்றும் இஸ்லாமிய வகுப்புகளில் கலந்து கொள்வதோடு இருக்கிறது.
பெண் எப்படி இருக்கவேண்டும்?ஹிஜாபை பேணுதலோடு, அவளுக்கு அனுமதி வழங்கப்பட்டால் வேலைக்கு செல்ல வெளிஇடங்களில் எப்படி நடந்து கொள்ள வேண்டும்?வேலை பார்க்கும் இடத்தில் தன்னை எப்படி பேணிக்கொள்ள வேண்டும்?அந்நிய ஆண்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்?அவளுடைய பயணம் எப்படி இருக்க வேண்டும்?இவற்றைப் பற்றியெல்லாம் எந்த விதமான அறிவும் அந்த பெண்ணுக்கு இருக்காது.
ஆனால் இபாதத் இருக்கும்.சில நல்ல பண்புகளும் இருக்கும். இவள் அல்ல சாலிஹான பெண். அல்லாஹ் சொன்ன சாலிஹான பெண் என்பவள் யார் என்றால்? அவளுடைய வாழ்க்கையில் அல்லாஹ்வுடைய கட்டளைகளையும் நபி ஸல்லல்லாஹு அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய சுன்னாவையும் மார்க்க ஒழுக்கங்களும் மார்க்க வழிகாட்டுதலும் சரிசமமாக பேணப்பட வேண்டும்.
கணவனுக்கு நல்லவளாக இருப்பாள்.கணவனின் தாய் தந்தையருக்கு நல்லவளாக இருப்பாள்.தன்னுடைய தாய் தந்தை தந்தையருக்கும் நல்லவளாக இருப்பாள்.பிள்ளைகளை அழகிய முறையில் பேணக்கூடியவளாக இருப்பாள். வீட்டில் பொறுப்புகளையும் கடமைகளையும் அழகிய முறையில் செய்யக்கூடியவளாக இருப்பாள். அண்டை வீட்டாருக்கு நன்மை செய்யக்கூடியவர்களாகவும் இருப்பார். அல்லாஹ்வுடைய ஹக்குகளையும் வணக்க வழிபாடுகளையும் அவள் அலட்சியம் இல்லாமல் கண்ணும் கருத்துமாக பேணக்கூடியவளாக இருப்பாள். சாலிஹான பெண் தன் ரப்புக்கும் தன் கணவனுக்கும் பணிந்தவளாக இருப்பாள்.
பணிவு வந்துவிட்டால் எல்லா நல்ல குணங்களும் வந்துவிடும். பணிவு என்பது உண்மையான அன்பிற்கு பிறகும் உண்மையான கடமை உணர்வை உன்ர்ந்ததற்குப் பிறகும் வருவதுதான் பணிவு.
எனவே தான் இந்த இடத்தில் அல்லாஹுத்தஆலா பணிவை பற்றி இந்த வசனத்தில் (4:34) குறிப்பிடுகிறான்;
ஒரு பெண்ணிடத்தில் பணிவு இருந்தால் எப்படி வேண்டுமானாலும் நாம் அவளை அழகிய முறையில் திருத்தி விடலாம். அந்தப் பணிவு இல்லை என்றால் எதை சொன்னாலும் விளங்கிக் கொள்ள மாட்டாள். ஏட்டிக்கு போட்டியாக பேசுவார்.
பெரும்பாலும் நாம் பார்ப்பது என்னவென்றால் கணவன் தன் பொருளாதாரத்தில் மனைவியை விட கீழ் இருந்தால், மனைவி தன் கணவனை விட படிப்பறிவில் மேலோங்கி இருந்தால் விளைவு என்பது மோசமாக இருக்கும்.
ஒரு பெண் தன் நெற்றியை சுஜூதில் வைத்து தொழுதாலும், அதிகமாக ஓதினாலும் சரி, தன் கணவனை மதிக்காமலும் தன் கணவனுக்கு பணிவிடை செய்யாமல் இருப்பாரானால் அல்லாஹ்விடத்தில் அவளுக்கு நற்பெண்மணி என்று வழங்கப்படாது. இன்னும் சொல்லப் போனால் அவள் சொர்க்கத்து பெண்ணாக கூட ஆக மாட்டார்.
ஒரு பெண் தன்னுடைய தொழுகையைக் கொண்டு மட்டும் சொர்க்கத்தை வாங்க முடியாது. தான் நோன்பு வைப்பதினால் மட்டும் சொர்க்கம் வாங்க முடியாது. தன்னுடைய ஸக்காத்தை நிறைவேற்றினால் சொர்க்கத்தை வாங்க முடியாது. எதுவரை என்றால் தன் கணவனுக்கு கீழ்ப்படிந்து நடக்காதவரை.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொன்னார்கள் ;
إِذَا صَلَّتِ الْمَرْأَةُ خَمْسَهَا، وَصَامَتْ شَهْرَهَا، وَحَفِظَتْ فَرْجَهَا، وَأَطَاعَتْ زَوْجَهَا قِيلَ لَهَا: ادْخُلِي الْجَنَّةَ مِنْ أَيِّ أَبْوَابِ الْجَنَّةِ شِئْتِ
எந்தப் பெண் ஐந்து நேரத் தொழுகையை தொழுது, ரமலான் மாதத்தில் நோன்பு வைத்து, தன்னுடைய செல்வத்திற்கு ஸகாத் கொடுத்து, அல்லாஹ்வுடைய வீட்டை ஹஜ் செய்து, தன்னுடைய கணவனுக்கு கீழ்படிந்து நடந்தால் சொர்க்கத்தில் உடைய எட்டு வாசல்களில் இருந்தும் அவள் பெயர் அழைக்கப்படும். எந்த வாசலின் வழியாகவும் அவள் நுழையலாம்.
அறிவிப்பாளர் : அப்துல் ரஹ்மான் இப்னு அவ்ஃப் ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : முஸ்னது அஹ்மது, எண் : 1661, தரம் : ஹசன் (அல்பானி, சுயூதி)
சாதாரண விஷயம் அல்ல. இங்கு தான் நம்மை கலைப்பதற்காக ஷைத்தான் வருகிறான். கணவனுக்கு மாறு செய்ய தூண்டுவான். பெண்களை கெடுக்கக்கூடிய மிகப்பெரிய வழிகளில் ஒன்று கணவனுக்கு கீழ்ப்படிதலிருந்தும் தன்னுடைய கற்பை பாதுகாப்பதில் இருந்தும் வழிகெடுப்பான். இந்த இரண்டு விஷயங்களில் இருந்தும் ஒரு பெண் தன்னை பேணிக் கொண்டால் அவள் கண்டிப்பாக ஒரு சஹாபியப் பெண்.
அல்லாஹுத்தஆலா மர்யம் (அலை) அவர்களைப் புகழும் போது,
وَمَرْيَمَ ابْنَتَ عِمْرَانَ الَّتِي أَحْصَنَتْ فَرْجَهَا فَنَفَخْنَا فِيهِ مِنْ رُوحِنَا وَصَدَّقَتْ بِكَلِمَاتِ رَبِّهَا وَكُتُبِهِ وَكَانَتْ مِنَ الْقَانِتِينَ
மேலும், இம்ரானின் மகள் மர்யத்தை (மற்றொரு) உதாரணமாக எடுத்துக்காட்டுகின்றான்: அவர் தம்முடைய வெட்கத்தலத்தைப் பாதுகாத்தார். பிறகு, நாம் நம்மிடமிருந்து ரூஹை அவருள் ஊதினோம். மேலும் அவர் தம்முடைய அதிபதியின் அறிவுரைகளையும் அவனுடைய வேதங்களையும் மெய்ப்படுத்தினார். மேலும், அவர் கீழ்ப்படிந்து வாழ்வோரில் ஒருவராயும் இருந்தார்.(அல்குர்ஆன் 66 : 12)
அல்லாஹுத்தஆலா மர்யம் (அலை) அவர்களுடைய கற்பு ஒழுக்கத்தை சிறப்பித்து சொல்லிக்காட்டுகிறான்.
அல்லாஹ்வின் அடியார்களே! இன்று மேற்கத்திய கலாச்சாரங்களின்படி ஒரு பெண் ஆண்களிடத்தில் எப்படி வேண்டுமானாலும் பேசலாம். எப்படி வேண்டுமானாலும் பழகலாம் என்ற சீரழிவு சமுதாயத்தில் சகஜமாக்கப்பட்டு அதனால் நாம் பார்க்கக்கூடிய கேவலம் என்னவென்றால், ஒரு பெண் தன் கணவனை நேசிப்பதை விட அன்னிய ஆண்களை நேசிக்கிறார்கள். (அல்லாஹ் பாதுகாக்க வேண்டும்)
கணவன் என்பவன் அந்தப் பெண்ணிற்கு மஹர் கொடுத்து திருமணம் செய்தவன்; ஹலால் ஆக்கியவன்; தனக்கு வாழ்வாதாரம் கொடுத்தவன்; தனக்கு உரிமை உள்ளவன்; அவனுக்கு அவளுடைய உள்ளத்தை கொடுப்பதில்லை. மாறாக தன்னுடன் வேலை பார்க்கும் ஆணுக்கு அவளுடைய உள்ளத்தை கொடுக்கிறாள். கணவனிடத்தில் அன்போடு பாசத்தோடு பரிவோடு பேசுவதில்லை. ஆனால் அவளுடைய வகுப்பில் படித்தவனுடன் கொஞ்சி குலாவி கொண்டிருக்கிறாள்.
உன்னுடைய சிரிப்பு கணவனுக்கு இல்லை என்றால் உன்னுடைய அன்பு கணவனுக்கு இல்லை என்றால் உன்னுடைய அக்கறை கணவனுக்கு இல்லை என்றால் என்ன பிரயோஜனம்?
சரி ஹராமான நட்பை விட்டுவிடலாம். ஹலாலான நட்பான உன் தோழி இடத்தில் காட்டும் பரிவை கூட உன் கணவனிடம் காட்டுவதில்லை. பெண்களே! நீங்கள் அக்கறைப்படுவதற்கு தகுதியானவர் யார்? உங்களுடைய கணவன்மார்தான். அடுத்து உங்களுடைய தந்தை. அடுத்து உங்களுடைய பிள்ளைகள். அடுத்து உங்களுடைய சகோதரர்கள் -இரத்த பந்த சகோதரர்கள்.
இதல்லாமல் சிறிய தந்தை பெரிய தந்தையின் பிள்ளைகள் அதுபோன்று சின்னம்மா பெரியம்மாவின் பிள்ளைகளிடம் கூட பேசக்கூடாது. அவர்களிடமும் ஹிஜாபைப் பேண வேண்டும். ஆனால் இன்று நிலைமை மிக மோசமாகிவிட்டது.
பெண்களிடத்தில் கூறப்பட்ட குறைகளை போலவே நம்முடைய சகோதரர்கள் மத்தியிலும் இருக்கின்றது. (அல்லாஹ் பாதுகாக்க வேண்டும்) அல்லாஹ்வின் அடியார்களே! அல்லாஹ் சொல்லிக் காட்டுகிறான்;
சாலிஹான பெண்கள் யார்? தன்னுடைய கற்பொழுக்கத்தை பாதுகாப்பவர். வெறும் அவளுடைய மர்மஸ்தானத்தை மட்டுமல்ல. கணவனுக்கு சொந்தமான ஒவ்வொன்றையும் கணவனுக்காக பரிசுத்தமாக பாதுகாப்பவள். திருக்குர்ஆன் (4:34)
அல்லாஹ்வின் தூதர் ஸல் அவர்கள் சொன்னார்கள் ;
«مَنْ يَضْمَنْ لِي مَا بَيْنَ لَحْيَيْهِ وَمَا بَيْنَ رِجْلَيْهِ أَضْمَنْ لَهُ الجَنَّةَ»
எவர் தன்னுடைய இரண்டு உதடுகளுக்கு இடையில் இருக்கும் நாவை பேணிக் கொள்கிறார்களோ இன்னும் எவர் தன்னுடைய இரு தொடைகளுக்கு நடுவில் இடையில் இருக்கும் மர்மஸ்தானத்தை பேணிக் கொள்கிறார்களோ அவர்களுக்கு நான் சொர்க்கத்திற்கு பொறுப்பேற்றுக் கொள்கிறேன் என்று நபி (ஸல்) கூறுகிறார்கள்.
அறிவிப்பாளர் : சஹ்ல் இப்னு சஃது ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : புகாரி,எண் 6474.
நம்முடைய மார்க்கம் என்பது ஒழுக்கமான மார்க்கமாகும். இன்று உள்ள சமுதாயம் இந்த இரண்டு விஷயங்களையும் அலட்சியம் செய்து கொண்டு இருக்கிறது. சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
கணவன் இல்லாத நேரத்தில் தன்னையும் கணவனுடைய சொத்தையும் அவள் பேணிக் கொள்வாள். இப்படிப்பட்ட பெண்களைத்தான் அல்குர்ஆன் சாலிஹான பெண் என்று கூறுகிறது.
....................................................................
அல்லாஹ்வுடைய அடியார்களே! அல்லாஹுத்தஆலா திருமண வாழ்க்கையைப் பற்றி சொல்லும்போது குர்ஆனில் நமக்கு நினைவூட்டுகிறான்;
وَمِنْ آيَاتِهِ أَنْ خَلَقَ لَكُمْ مِنْ أَنْفُسِكُمْ أَزْوَاجًا لِتَسْكُنُوا إِلَيْهَا وَجَعَلَ بَيْنَكُمْ مَوَدَّةً وَرَحْمَةً إِنَّ فِي ذَلِكَ لَآيَاتٍ لِقَوْمٍ يَتَفَكَّرُونَ
மேலும், அவனுடைய சான்றுகளில் இதுவும் ஒன்றாகும். அவன் உங்களுக்காக உங்கள் இனத்திலிருந்தே மனைவியரைப் படைத்தான்; நீங்கள் அவர்களிடம் அமைதி பெறவேண்டும் என்பதற்காக! மேலும், உங்களிடையே அன்பையும், கருணையையும் தோற்றுவித்தான். திண்ணமாக, சிந்திக்கும் மக்களுக்கு இதில் நிறையச் சான்றுகள் உள்ளன. (அல்குர்ஆன் 30 : 21)
ஒவ்வொருவரும் தன் மீது அல்லாஹ்வுடைய மார்க்கம் என்ன கடமைகளை நமக்கு கொடுத்திருக்கிறது என்று நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
அல்லாஹுத்தஆலா எப்படி சொல்கிறான் என்றால்,
وَلَهُنَّ مِثْلُ الَّذِي عَلَيْهِنَّ بِالْمَعْرُوفِ
பொதுவான நியதிப்படி ஆண்கள் மீது பெண்களுக்குச் சில உரிமைகள் உள்ளன; பெண்கள் மீது ஆண்களுக்கு உள்ள சில உரிமைகளைப் போல! (அல்குர்ஆன் 2 : 228)
பெண்களுக்கு என்ன உரிமை இருக்கின்றதோ அதுபோல கடமையும் அவர்களுக்கு இருக்கிறது. அல்லாஹுத்தஆலா ஆண்களுக்கு கட்டளையிடும் பொழுது,
وَعَاشِرُوهُنَّ بِالْمَعْرُوفِ
நீங்கள் பெண்களிடத்தில் அழகிய முறையில் நடந்து கொள்ளுங்கள். (அல்குர்ஆன்4 : 19)
அழகிய முறை என்றால் நபி (ஸல்) அவர்களைப் பற்றி ஆயிஷா ரலியல்லாஹு அவர்கள் சொல்கிறார்கள்;
நபி (ஸல்) அவர்கள் ஒரு நாள் கூட தன் மனைவிமார்களை அடித்தது இல்லை. (1)
நூல் : முஸ்லிம், எண் : 2328.
என்றும் கோபப்பட்டது கூட கிடையாது.
நபி அவர்கள் வீட்டிற்கு வருவார்கள். சாப்பிட ஏதேனும் இருக்கிறதா என்று கேட்பார்கள். இல்லை என்றால் நான் நோன்பு நோற்று விட்டேன் என்று கூறுவார்கள்.(2)
நூல் : முஸ்லிம், எண் : 1154.
நபி அவர்கள் தான் நோன்பு வைத்துக்கொண்டு தன் மனைவிமார்களுக்கு உணவளிப்பார்கள்.
ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்களிடம் கேட்கப்படுகிறது; ரசூல் (ஸல்) அவர்கள் வீட்டில் எப்படி இருப்பார்கள் என்று ?
அவர்கள் வீட்டை பெருக்குவார்கள்; கிழிந்த ஆடைகளைத் தைத்துக் கொள்வார்கள்; பாலை ஆட்டிலிருந்து அவர்களே கறப்பார்கள்; பாங்கு சொல்லப்பட்டு விட்டால் உடனே மஸ்ஜிதுக்கு செல்வார்கள். அல்லாஹ்வை மறக்காத ஒரு குடும்ப வாழ்க்கை வாழ்ந்தார்கள்.
அறிவிப்பாளர் : ஆயிஷா ரழியல்லாஹுஅன்ஹா, நூல் :முஸ்னது அஹ்மது,எண் : 24903, தரம் : ஸஹீஹ் (அல்பானி)
சகோதரர்களே! பெண்ணை மதித்து அவளுடைய மனதை காயப்படுத்தாமல், அவளுடைய குறைகளை குத்திக் காட்டி பேசாமல், நல்ல வார்த்தைகளைக் கொண்டு அவளுடைய உள்ளம் மகிழ்ச்சியடைய செய்து, குணத்தையும் மகிழ்ச்சியாக்க கூடிய அந்த பண்புதான் ரசூல் (ஸல்) வாழ்ந்தார்கள்.
இப்பொழுது உள்ள சமூகத்தில் ஆண்கள் தங்கள் மனைவியை எப்படி வேண்டுமானாலும் பேசலாம். கேலி செய்யலாம். குத்திக்காட்டி பேசலாம் என்று எண்ணுகிறார்கள். மீறி அவள் கேட்டால் நான் இயல்பாக தானே சொன்னேன் என்று கூறுகிறார்கள்.
சில ஆண்கள் தன் மனைவியரின் வீட்டில் உள்ளவர்களை குறை கூறிக் கொண்டு இருப்பார்கள். அதிலும் சில ஆண்கள் தன் மாமியார் வீட்டிற்கு செல்லும் பொழுது அதிகமாக அக்கறை கொண்டு அவர்களை கவனிக்க வேண்டுமென்று நிணைக்கிறார்கள். வீணான மதிப்பு தேடுதல்; தற்பெருமை இவைகளை கொண்டு நம்முடைய கலாச்சாரம் அழிந்துவிட்டது பகட்டுக்காக பேசுதல் இருக்க கூடாது.
அல்லாஹ்வின் அடியார்களே! நமக்கு புரிதல் இருக்கவேண்டும். மனைவிக்கு என்று ஒரு உரிமை இருக்கிறது. அல்லாஹ் நமக்கு அவளை கட்டுப்பட்டு நடக்க சொல்லி இருக்கிறான். அவ்வளவுதான். அவளுக்கு உள்ள உணர்வுகளை மதித்து பேணக்கூடியவர்தான் சிறந்த கணவராக இருக்க முடியும்.
ஒரு அழகான அறிவுரையை நமக்கு ரசூல் (ஸல்)அவர்கள் அறிவிக்கிறார்கள்;(அல்லாஹு தஆலா உங்களையும் என்னையும் அதை பின்பற்ற நாட வேண்டும்).
«خَيْرُكُمْ خَيْرُكُمْ لِأَهْلِهِ، وَأَنَا خَيْرُكُمْ لِأَهْلِي»
உங்களிடையே சிறந்தவர் யார் என்றால் தன் மனைவியிடத்தில் சிறந்தவர் ஆவார். நான் என் மனைவியிடத்தில் சிறந்தவராக இருக்கிறேன் என்று நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்.
அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் ரழியல்லாஹுஅன்ஹு, நூல் :இப்னு மாஜா, எண்: 1977, தரம் : ஸஹீஹ் (அல்பானி)
இப்படிப்பட்ட வாழ்க்கைதான் இஸ்லாம் உடைய வாழ்க்கை. பெண்களுக்கு உண்டான கடமை, உரிமை ஆண்களுக்கு உண்டான கடமை உரிமை சரிசமமாக பேணவேண்டும்.
இன்னுமொரு விஷயம் என்னவென்றால் தன் மனைவி இடத்திலோ அல்லது கணவன் இடத்திலோ குறைகள் இருந்தால் அதை மறைக்க வேண்டும்; பேசி தீர்க்க வேண்டும்.
ஷைத்தான் கடல் நடுவில் பெரிய கட்டில் ஒன்றை அமர்த்தி அதில் அமர்ந்து கொண்டு எல்லாவிதமான சாத்தான்களை அழைக்கிறான்; அழைத்து ஷைத்தான் இடம் கேட்கிறான்; நீவீர் செஞ்சது என்ன?அதில் ஒரு ஷைத்தான்,நான் கணவன் மனைவிக்கு இடையில் சண்டை மூட்டி விட்டேன் என்று கூறுகிறது. அந்த சண்டையின் காரணமாக இருவரும் பிரிந்து விட்டனர் என்று கூறுவான். கட்டிலில் அமர்ந்திருந்த இப்லீஸானவன் அந்த ஷைத்தானை இறுக அணைத்துக் கொண்டு நீ செய்தது மிகப் பெரிய செயல் ஆகும் என்று தட்டிக் கொடுத்தான். (4)
அறிவிப்பாளர் : ஜாபிர் ரழியல்லாஹுஅன்ஹு, நூல் :முஸ்லிம்,எண் : 2813.
அல்லாஹுத்தஆலா நம்மைப் பாதுகாக்க வேண்டும்!
ரசூல் (ஸல்) அவர்கள் பெண்களை கண்ணாடி பாட்டில் என்று கூறினார்கள்.
لاَ تَكْسِرِ القَوَارِيرَ
அதனை உடைக்காமல் பாதுகாக்க வேண்டும் என்று.
அறிவிப்பாளர்: அனஸ் இப்னு மாலிக் ரழியல்லாஹுஅன்ஹு, நூல் :புகாரி, எண் : 6211.
கணவனும் மனைவியும் ஒருவருடைய மனதை புண்படுத்தாமல் வாழவேண்டும். இந்த வாழ்வு சொர்க்கம் வரை தொடர வேண்டும் என்ற எண்ணம் இருக்க வேண்டும்.தக்வா ஈமானிய பண்பு இருந்தால் இதன் மூலம் அவர்களுக்கு நற்குணங்கள் பலவற்றை கற்றுக் கொடுக்கும். இந்த முறை இல்லை என்றால் எந்த உபதேசங்களும் பலனளிக்காது.அல்லாஹ் பாதுகாக்க வேண்டும்!திருமண பந்தத்தில் இணையும் சகோதர சகோதரிகள் அல்லாஹ்வுடைய வேதத்தில் இருந்தும் ரசூல் (ஸல் )அவர்களுடைய சுன்னத்தில் இருந்தும் கற்றுக்கொள்ள வேண்டும் .
இன்னும் அதிகமாக நாம் அறிந்து கொள்வதற்கு "முன் மாதிரியான முஸ்லிம்" என்ற புத்தகத்தை வாங்கி படித்து விளங்கிக் கொள்ளலாம்.
அல்லாஹ் நம்முடைய காரியங்களை லேசாக்கித் தருவானாக!
ஆமீன்
أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم
கருத்துகள்
கருத்துரையிடுக