வயநாடு தரும் பாடம்

 


 

وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِنَ الْأَمْوَالِ وَالْأَنْفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ (155) الَّذِينَ إِذَا أَصَابَتْهُمْ مُصِيبَةٌ قَالُوا إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ (156) أُولَئِكَ عَلَيْهِمْ صَلَوَاتٌ مِنْ رَبِّهِمْ وَرَحْمَةٌ وَأُولَئِكَ هُمُ الْمُهْتَدُونَ

 

عَنْ سَالِمٍ عَنْ أَبِيهِ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ

....مَنْ كَانَ فِي حَاجَةِ أَخِيهِ كَانَ اللَّهُ فِي حَاجَتِه (مسلم

எவர் தன் உடன் பிறவா சகோதரரின் தேவையை நிறைவேற்றுவதில் ஈடுபட்டிருப்பாரோ அவருடைய தேவையை நிறைவேற்றுவதில் அல்லாஹ் ஈடு பட்டிருப்பான்

 

 

அல்லாஹ்வின் அடியார்களே! அல்லாஹ் ரப்புல் ஆலமீனை பயந்து கொள்ளுமாறு, அல்லாஹ்வின் பயத்தை எனக்கும்உங்களுக்கும் நினைவூட்டியவனாக, அல்லாஹ்வுடைய சொர்க்கத்தை அடைவதற்குஅல்லாஹ்வின் பயத்தைத் தவிர,நல்ல அமல்களை தவிர வேறு வழியில்லை;

 

அல்லாஹ்வை பயந்து கொண்டவர்களை அல்லாஹ் கைவிடமாட்டான்; அவர்களை அல்லாஹ் இம்மையிலும், மறுமையிலும்மேன்மக்களோடு சேர்ப்பான் என்ற செய்தியை எனக்கும் உங்களுக்கும் நினைவூட்டியவனாக ஆரம்பம் செய்கிறேன்.

 

உலக சோதனையில் இருந்து யாருமே தப்பமுடியாது. இந்த சோதனையிலிருந்து ஒருவர் தப்பிக்க முடியும் என்றால், இறைத்தூதர்கள் தப்பித்து இருப்பார்கள்.

 

சோதனை என்பது அல்லாஹ் சுபஹானஹு வதஆலா யாரை வெறுக்கிறானோ அவர்களுக்குத்தான் என்று இருக்குமேயானால், உலகத்தில் எல்லா காஃபிர்களும் சோதனைகளுக்கு ஆளாகி இருப்பார்கள். எல்லா பாவிகளும் உடனுக்குடனே சோதனைக்கு ஆளாகி இருப்பார்கள்.

 

உண்மையில் அப்படி அல்ல. நாம் குர்ஆன் விளக்கங்களை ஹதீஸ் உடைய விளக்கங்களை பார்ப்போமேயானால், அல்குர்ஆன் இந்த சோதனையை குறித்து நமக்கு மிகத் தெளிவாக வழிகாட்டுகிறது.

 

அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இந்த சோதனையை குறித்து நமக்கு அழகிய அறிவுரைகள், உபதேசங்களை வழங்கி இருக்கிறார்கள்.

 

அல்லாஹ் சுப்ஹானஹு வதஆலா சோதனையைப் பற்றி சொல்கிறான்:

 

وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِنَ الْأَمْوَالِ وَالْأَنْفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ (155) الَّذِينَ إِذَا أَصَابَتْهُمْ مُصِيبَةٌ قَالُوا إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ (156) أُولَئِكَ عَلَيْهِمْ صَلَوَاتٌ مِنْ رَبِّهِمْ وَرَحْمَةٌ وَأُولَئِكَ هُمُ الْمُهْتَدُونَ

 

(நம்பிக்கையாளர்களே!) பயம், பசி மேலும், பொருள்கள், உயிர்கள், கனிவர்க்கங்கள் ஆகியவற்றில் நஷ்டத்தைக் கொண்டு நிச்சயமாக நாம் உங்களைச் சோதிப்போம். (நபியே! இச்சோதனைகளால் ஏற்படும் கஷ்டங்களைச்) சகித்துக் கொண்டிருப்பவர்களுக்கு நற்செய்தி கூறுவீராக. (சோதனைக்குள்ளாகும்) அவர்கள் தங்களுக்கு எத்தகைய துன்பம் ஏற்பட்ட போதிலும் ‘‘நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்காகவே இருக்கிறோம். நிச்சயமாக நாம் அவனிடமே மீளுவோம்'' எனக் கூறுவார்கள். அவர்கள் மீதுதான் அவர்களுடைய இறைவனிடமிருந்து (மன்னிப்பும்) புகழுரைகளும் கருணையும் ஏற்படுகின்றன. மேலும், அவர்கள்தான் நேரான வழியையும் அடைந்தவர்கள்.(அல்குர்ஆன் 2 : 155-157)

 

வசனத்தின் விளக்கம் : அல்லாஹ் சுப்ஹானஹு வதஆலா நம்மை சோதிக்கின்ற அதே நேரத்தில், அந்த சோதனையில் நீங்கள் பொறுமையாக இருந்தால்உங்களுக்கு நற்செய்தி உண்டு என்று கூறுகிறான்.

 

கேரள மாநிலத்தில் கடந்த 2024மே மாத இறுதியில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது. அப்போதிருந்தே அங்கு கனமழை கொட்டி வருகிறது. குறிப்பாக வயநாடு உள்ளிட்ட சில மாவட்டங்களில் கனமழை கொட்டியது.

தென்மேற்கு பருவமழை தொடங்கி 2 மாதத்திற்கு மேல் ஆன நிலையிலும் கேரள மாநிலத்தில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது.

வயநாட்டில் கடந்த 28 மற்றும் 29 ம் தேதி ஆகிய இரண்டு நாட்களாக (48 மணி நேரத்தில்) 57 செமீ மழை பெய்துள்ளது. இந்நிலையில் 30/07/24 அன்று அதிகாலை பயங்கர நிலச்சரிவு எற்பட்டது.

வயநாடு நிலச்சரிவில் இதுவரை 316 பேர் உயிரிழந்துள்ள நிலையில், பள்ளி மாணவர்கள் 29 பேர் உட்பட 240 பேரை காணவில்லை என கேரள அரசு அறிவித்துள்ளது.

கேரள மாநிலம் வயநாட்டில் முதன் முதலாக முண்டக்கை பகுதியில் தான் நிலச்சரிவு ஏற்பட்டது. குறிப்பாக, முண்டக்கைக்கு உட்பட்ட பூஞ்சரிமட்டம் என்ற கிராமத்தில் தான் மலைகளில் இருந்து பாறைகள், மண் துகள்கள் முதலில் சரிந்து விழுந்தன. தற்போது அந்த கிராமமே, மண்ணிற்குள் புதைந்து வீடுகள் இருந்ததற்கான சுவடே தெரியவில்லை. இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.                                                                  அந்த வகையில் இக்கிராமத்தில் இருந்து மட்டும் 120க்கும் மேற்பட்ட உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. பாலங்கள் உடைந்ததால் வாகனங்கள் செல்ல முடியாத நிலையில், ஆற்று வழியாக ஜேசிபி இயந்திரம் மட்டும் கொண்டு செல்லப்பட்டது. யாரேனும் ஒருவரையாவது உயிரோடு காப்பாற்றி விட முடியாதா என்ற ஆதங்கத்தோடு ராணுவ வீரர்கள் தீவிர மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.                                               வயநாட்டின் முண்டக்கை, சூரல்மலை ஆகிய பகுதிகளில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 316 ஆக உயர்ந்துள்ளது. மேலும் பள்ளி மாணவர்கள் 29 பேர் உட்பட 240 பேரை காணவில்லை என்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அதிகாரிகள் அச்சம் தெரிவித்துள்ளனர். சேறும், சகதியுமான இடங்களில் இயந்திரங்கள் உதவியுடன் தேடுதல் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.                                                 முதல் நிலச்சரிவு 30/07/24 செவ்வாய்க்கிழமை அதிகாலை 2 மணிக்கு நிகழ்ந்தது. இதன்பின் 4.30-க்கு இரண்டாவது முறையாக நிலச்சரிவு நிகழ்ந்தது. சூரல்மலா பகுதியில் உள்ள ஒரு பள்ளி முழுவதும் மண்ணின் அடியில் புதைந்துவிட்டது. இதே நிலைதான் குடியிருப்புகளுக்கும் நிலவியது.இரவு தூங்கச் சென்றவர்கள் நிலச்சரிவில் அடித்துச் செல்லப்பட்டனர்.                 இவர்களுடன் தன்னார்வலர்களும் முஸ்லிம்சமூகத்தின்தேசிய அரசியல் கட்சிகளான இந்திய யூனியன் முஸ்லிம் கட்சி, எஸ்டிபிஐ கட்சியினரும் இணைந்து செயல்பட்டு வருவதை சமூக ஊடகங்கள் வாயிலாக நாம் பார்த்து வருகின்றோம். வயநாட்டில் 45 முகாம்கள் உள்பட கேரள மாநிலம் முழுவதும் 118 முகாம்களில் 5,531 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ü நிலச்சரிவு என்றால் என்ன? -

நிலச்சரிவு என்பது பாறைகள், மண் பொருள்கள், குப்பைகள் போன்றவை திடீரென நகர்ந்து ஏற்படுகின்ற ஒரு புவியியல் நிழ்வாகும்.

 

இயற்கை மற்றும் மனிதனால் உருவாக்கப்பட்ட பல்வேறு காரணிகளால் நிலச்சரிவுகள் ஏற்படுகின்றன. தொடர்ந்து மழை பெய்வது, கடுமையான நிலநடுக்கம், எரிமலை வெடிப்பு போன்ற இயற்கை காரணங்கள் அல்லது அதிக கட்டுமானம், காடுகள் அழிப்பு மற்றும் பயிர் முறைகளில் ஏற்படும் மாற்றங்கள் போன்ற மனிதனால் உருவாக்கப்பட்ட காரணிகளால் நிலச்சரிவுகள் ஏற்படுகின்றன.

ஒரு நிலச்சரிவினைத் தூண்டும் காரணிகள் திடீரென ஏற்படுக்கின்றன அல்லது காலப்போக்கில் உருவாகின்றன.

ü இந்தியாவும் நிலச்சரிவு சாத்தியங்களும்....

தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் கூற்றுப்படி, இந்தியாவின் டெக்டானிக் (பூமியில் அமைந்துள்ள பகுதி) நிலை காரணமாக நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளது. இந்தியாவின் நிலப்பரப்பு ஆண்டு 5 செ.மீ., தூரம் வடக்கு நோக்கி நகர்வதால் நிலநடுக்கம் போன்ற இயற்கை பேரழிவு ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.

இந்தியாவின் விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) வெளியிட்டுள்ள நிலச்சரிவு வரைபடத்தில், நாட்டில் பாதிப்புக்குள்ளாகக் கூடிய சில பகுதிகளைப் பட்டியலிட்டுள்ளது. பனிமூடிய பகுதிகளைத் தவிர இந்தியாவின் 12.6 சதவீத பகுதிகள் பாதிப்புக்குள்ளாகும் சாத்தியம் கொண்டவை. இவற்றில் 66.5 சதவீதம் வடமேற்கு இமையமலையிலும், 18.8 சதவீதம் வடகிழக்கு இமையமலையிலும், 14.7 சதவீதம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளிலும் உள்ளன.

ü கேரளாவை அதிகம் குறிவைக்கும் இயற்கைப் பேரிடர்கள்;

கடவுளின் தேசம் என எல்லோராலும் கொண்டாடப்படும் கேரளா, கொட்டித் தீர்க்கும் கன மழை, பாய்ந்தோடும் பெரு வெள்ளம், நடுங்க வைக்கும் நிலச்சரிவு என இயற்கைப் பேரிடர்களாலும் கொரோனா வைரஸ், நிஃபா வைரஸ், பறவைக் காய்ச்சல் என பயமுறுத்தும் வைரஸ் தொற்றுகளாலும் படகு விபத்துகளாலும் பேரழிவைச் சந்தித்துக்கொண்டே இருக்கிறது.

ü சமவெளியில் வெள்ளமும் மலைப் பகுதியில் நிலச்சரிவும்..

ü மழைக்கும் சூழலுக்கும் பிரதானமாக இருக்கும் மேற்குத் தொடர்ச்சி மலையை படிப்படியாக அழித்து வருகிறோம். மலைப் பகுதிகளிலேயே சுற்றுலா விடுதிகள், பவர் ஹவுஸ், அணைகள், சுரங்கங்கள் ஆகியவற்றைக் கட்டிவிட்டோம். குவாரிகளை உடைத்துக் கொண்டிருக்கிறோம்.

இதனால் மேற்குத்தொடர்ச்சி மலையின் கற்களும் மண்ணும் இளகிக் கொண்டே இருக்கின்றன. காலநிலை மாற்றத்தால் சமவெளியில் வெள்ளமும் மலைப் பகுதியில் நிலச்சரிவும் ஏற்படுகின்றன.

போதாதற்குப் புதைபடிமங்களை எரித்து சூழலை மாசுபடுத்திக் கொண்டிருக்கிறோம். நிலச்சரிவுக்கு திடீர் பெரு மழை காரணம்தான். ஆனால் அந்தப் பெரு மழைக்கு மக்களின் செயல்பாடுகளும் அரசுகளின் ஒழுங்கற்ற போக்குமே காரணம். எந்த இடத்தில் கட்டிடங்கள் கட்டலாம், கட்டக் கூடாது என்று அரசு கண்டிப்பாக முடிவெடுக்கத் தவறிவிட்டது’’ என்று தெரிவித்தார்.

பொதுவாக இதுபோன்ற அகால மரணச் செய்திகளை ஒரு இறைநம்பிக்கையாளர் பார்க்கும் போதும் கேட்கும் போதும் என்னவாறான சிந்தனையில் இருக்க வேண்டும்? எப்படி நடந்து கொள்ள வேண்டும்? எந்த மாதிரியான பாடங்களையும், படிப்பினைகளையும் எடுத்துக் கொள்ள வேண்டும் என ஒரு நீண்ட பட்டியலுடன் கூடிய வழிகாட்டுதலை இஸ்லாம் நமக்கு காட்டியுள்ளது.

 

 

1.நூஹ் நபி (கன மழை- பூமியின் நீருற்று)

 

فَفَتَحْنَاۤ اَبْوَابَ السَّمَآءِ بِمَآءٍ مُّنْهَمِرٍ ‏ۖ

 ஆகவே, நாம் கொட்டும் மழையைக் கொண்டு வானங்களின் வாயில்களைத் திறந்து விட்டோம். 54:12

وَّفَجَّرْنَا الْاَرْضَ عُيُوْنًا فَالْتَقَى الْمَآءُ عَلٰٓى اَمْرٍ قَدْ قُدِر‌ۚ

மேலும், பூமியின் ஊற்றுகளை பொங்க வைத்தோம்; இவ்வாறாக, குறிப்பிட்ட ஓர் அளவின் படி (இரு வகை) நீரும் கலந்(து பெருக் கெடுத்)தது54:12. 

2. ஹூது நபி (பேரிறைச்சலைக் கொண்ட வேகமான காற்றை)

كَذَّبَتْ عَادٌ فَكَيْفَ كَانَ عَذَابِىْ وَنُذُرِ‏

. “ஆது (கூட்டத்தாரும் தங்கள் நபியை) பொய்ப்படுத்தினர்; அதனால், என் (கட்டளையினால் ஏற்பட்ட) வேதனையும். எச்சரிக்கையும் எப்படி இருந்தன (என்பதை கவனிக்க வேண்டாமா?) 54:18

اِنَّاۤ اَرْسَلْنَا عَلَيْهِمْ رِيْحًا صَرْصَرًا فِىْ يَوْمِ نَحْسٍ مُّسْتَمِرّ

. நிச்சயமாக நாம் அவர்கள் மீது, நிலையான துர்பாக்கியமுடைய ஒரு நாளில், பேரிறைச்சலைக் கொண்ட வேகமான காற்றை அனுப்பினோம். 54:19

وَاَمَّا عَادٌ فَاُهْلِكُوْا بِرِيْحٍ صَرْصَرٍ عَاتِيَةٍۙ‏

. இன்னும், ஆது கூட்டத்தாரோ பேரொலியோடு வேகமாகச் சுழன்று அடித்த கொடுங்காற்றினால் அழிக்கப்பட்டனர். 69:6

سَخَّرَهَا عَلَيْهِمْ سَبْعَ لَيَالٍ وَّثَمٰنِيَةَ اَيَّامٍۙ حُسُوْمًا ۙ فَتَرَى الْقَوْمَ فِيْهَا صَرْعٰىۙ كَاَنَّهُمْ اَعْجَازُ نَخْلٍ خَاوِيَةٍ‌  ۚ  فَهَلْ تَرٰى لَهُمْ مِّنْۢ بَاقِيَةٍ ‏

. அவர்கள் மீது, அதை ஏழு இரவுகளும், எட்டுப் பகல்களும் தொடர்ந்து வீசச் செய்தான்; எனவே அந்த சமூகத்தினரை, அடியுடன் சாய்ந்துவிட்ட ஈச்சமரங்களைப் போல் (பூமியில்) விழுந்து கிடப்பதை (அக்காலை நீர் இருந்திருந்தால்) பார்ப்பீர். 69:7

ஆகவே, அவர்களில் எஞ்சிய எவரையும் நீர் காண்கிறீரா? 69:8 

3 ஸாலிஹ்: நபி (பெரும் சப்தம்)

 اِنَّاۤ اَرْسَلْنَا عَلَيْهِمْ صَيْحَةً وَّاحِدَةً فَكَانُوْا كَهَشِيْمِ الْمُحْتَظِر ِ‏

54:31. நிச்சயமாக நாம் அவர்கள் மீது ஒரு பெரும் சப்தத்தை அனுப்பினோம் - அதனால் அவர்கள் காய்ந்து மிதிபட்ட வேலி(யின் கூளம்) போல் ஆகிவிட்டனர்.

 

4. லூத் நபி (பேரிடி, சுடப்பட்ட களிமண்ணாலான கற்கல் )

 فَاَخَذَتْهُمُ الصَّيْحَةُ مُشْرِقِيْنَۙ‏

. ஆகவே, பொழுது உதிக்கும் வேளையில், அவர்களை பேரிடி முழக்கம் பிடித்துக் கொண்டது. 15:73

فَجَعَلْنَا عَالِيـَهَا سَافِلَهَا وَ اَمْطَرْنَا عَلَيْهِمْ حِجَارَةً مِّنْ سِجِّيْلٍؕ‏

பின்பு அவர்களுடைய ஊரை மேல் கீழாகப் புரட்டி விட்டோம்; இன்னும், அவர்கள் மேல் சுடப்பட்ட களிமண்ணாலான கற்களைப் பொழியச் செய்தோம். 15:74 

5. ஷுஐப் நபி (  பேரிடி   )

 وَلَمَّا جَآءَ اَمْرُنَا نَجَّيْنَا شُعَيْبًا وَّالَّذِيْنَ اٰمَنُوْا مَعَهٗ بِرَحْمَةٍ مِّنَّا ۚ وَاَخَذَتِ الَّذِيْنَ ظَلَمُوا الصَّيْحَةُ فَاَصْبَحُوْا فِىْ دِيَارِهِمْ جٰثِمِيْنَۙ‏

11:94. (தண்டனைக்குரிய) நம் கட்டளை வந்த போது, ஷுஐபையும் அவருடன் ஈமான் கொண்டவர்களையும் நமது ரஹ்மத்தை கொண்டு நாம் காப்பாற்றினோம்; அநியாயம் செய்தவர்களை (பேரிடியின்) முழக்கம் பிடித்துக் கொண்டது; அவர்கள் தம் வீடுகளில் இருந்தவாறே காலையில் (இறந்து) கிடந்தனர்.

 كَاَنْ لَّمْ يَغْنَوْا فِيْهَا‌ ؕ اَلَا بُعْدًا لِّمَدْيَنَ كَمَا بَعِدَتْ ثَمُوْدُ

11:95. அவ்வீடுகளில் அவர்கள் (ஒரு காலத்திலும்) வாழ்ந்திராதவர்கள் போல் ஆகிவிட்டனர். தெரிந்து கொள்ளுங்கள்: ஸமூது (கூட்டத்தார் சாபக்கேட்டினால்) நாசமானது போன்று, மத்யனுக்கும் நாசம்தான்!

 

6.முஸாநபி (கடலில் மூழ்கி அழிக்கப்பட்டது)

ثُمَّ اَغْرَقْنَا الْاٰخَرِيْنَ‌ؕ‏

பிறகு, மற்றவர்களை (ஃபிர்அவ்னின் கூட்டத்தாரை) நாம் மூழ்கடித்து விட்டோம். 26:66. 

فَاَخَذْنٰهُ وَجُنُوْدَهٗ فَنَبَذْنٰهُمْ فِى الْيَمِّ‌ۚ فَانْظُرْ كَيْفَ كَانَ عَاقِبَةُ الظّٰلِمِيْنَ‏

. ஆகையால், நாம் அவனையும் அவன் படைகளையும் பிடித்தோம்; பிறகு அவர்களைக் கடலில் (மூழ்கி விடுமாறு) எறிந்து விட்டோம்; ஆகவே, அக்கிரமக்காரர்களின் முடிவு என்ன ஆயிற்றென்று (நபியே!) நீர் கவனித்துக் கொள்ளும்28:40

 

ஒவ்வொரு நபியின் எதிர்ப்பாளர்கள் அழிவுக்கு பின்னர் 

‏ اِنَّ فِىْ ذٰ لِكَ لَاَيَةً وَمَا كَانَ اَكْثَرُهُمْ مُّؤْمِنِيْنَ

நிச்சயமாக இதிலே ஓர் அத்தாட்சி இருக்கிறது; எனினும் அவர்களில் பெரும்பாலோர் நம்பிக்கை கொள்வதில்லை26:190. . என கூறுகின்றான்

எது எப்படி இருந்தாலும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நாம் முடிந்தவரை மனிதாபமான அடிப்படையில் உதவி செய்யக் கடமைப் பட்டுள்ளோம்.

சிரமத்தில் இருப்பவருக்கு உதவுவது நல்ல குணமாகும்

عَنْ سَالِمٍ عَنْ أَبِيهِ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ....مَنْ كَانَ فِي حَاجَةِ أَخِيهِ كَانَ اللَّهُ فِي حَاجَتِه (مسلم

எவர் தன் உடன் பிறவா சகோதரரின் தேவையை நிறைவேற்றுவதில் ஈடுபட்டிருப்பாரோ அவருடைய தேவையை நிறைவேற்றுவதில் அல்லாஹ் ஈடு பட்டிருப்பான்

 

عَنْ النُّعْمَانِ بْنِ بَشِيرٍ رضي الله عنه قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَثَلُ الْمُؤْمِنِينَ فِي تَوَادِّهِمْ وَتَرَاحُمِهِمْ وَتَعَاطُفِهِمْ مَثَلُ الْجَسَدِ إِذَا اشْتَكَى مِنْهُ عُضْوٌ تَدَاعَى لَهُ سَائِرُ الْجَسَدِ بِالسَّهَرِ وَالْحُمَّى (مسلم

ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்வதில் உண்மை முஃமின்களுக்கு உதாரணம் ஒரே உடலைப் போன்றாகும். உடலின் ஒருபகுதிக்கு ஏதேனும் ஆபத்து ஏற்பட்டால் மற்ற பகுதிகளும் அதில் ஒத்துழைக்கின்றன. விழித்திருப்பது, காய்ச்சல் போன்றவைகள் மூலம் மற்ற உறுப்புக்கள் சிரமத்தில் பங்கெடுத்துக் கொள்கின்றன.

இந்த பூமியில் எந்த ஒரு அசம்பாவிதம் நடந்தாலும் அதிகமாக முஸ்லிம்கள் பாதிக்கப்படுவதற்கு என்ன காரணம்

عَنْ أَبِي مُوسَى قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أُمَّتِي هَذِهِ أُمَّةٌ مَرْحُومَةٌ لَيْسَ عَلَيْهَا عَذَابٌ فِي الْآخِرَةِ عَذَابُهَا فِي الدُّنْيَا الْفِتَنُ وَالزَّلَازِلُ وَالْقَتْلُ (ابوداود

  நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள்: என்னுடைய இந்த சமுதாயம் கிருபை செய்யப்பட்ட சமுதாயமாகும்.இந்த உம்மத்தைச் சார்ந்த முஸ்லிம்களுக்கு மறுமையில் கடின வேதனை கிடையாது. ஏனெனில் மறுமையில் கடின வேதனையைக் குறைப்பதற்காக இம்மையில் அல்லாஹ் இவர்களுக்குதரும்சோதனைகளாகிறதுகுழப்பங்களும்  சிலநடுக்கங்களும்      கொலைச் சம்பவங்களும் ஆகும்.

(நூல் அபூதாவூத்)

ü 1.சேவையும் இறைவழிபாடுதான்

அல்குர்ஆன் இறைவனுக்கு வழிபடுவதை மனித வாழ்க்கையின் லட்சியம் எனக் குறிப்பிடுகிறது.

 

وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنْسَ إِلَّا لِيَعْبُدُونِ ()

 

“நான் ஜின்களையும், மனிதர்களையும் எனக்கு வழிபட வேண்டும் என்பதற்காகவேயன்றி வேறு எதற்காகவும் படைக்கவில்லை”.  ( அல்குர்ஆன்: 51: 56 )

 

அல்குர்ஆன் அல்லாஹ்வின் படைப்பினங்களுக்கு, சக மனிதர்களுக்கு சேவை செய்வதை வாழ்க்கையின் குறிக்கோள் என வலியுறுத்துகிறது.

 

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا ارْكَعُوا وَاسْجُدُوا وَاعْبُدُوا رَبَّكُمْ وَافْعَلُوا الْخَيْرَ لَعَلَّكُمْ تُفْلِحُونَ ()

 

“இறை நம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் ருகூவும், ஸுஜூதும் செய்யுங்கள். மேலும், உங்கள் இறைவனுக்கு வழிபடுங்கள். மேலும், சேவையாற்றுங்கள். நீங்கள் வெற்றியடையக் கூடும்!”.                                    ( அல்குர்ஆன்: 22: 77 )

 

ஒரு மனிதன் வழிபாடுகளின் மூலம் இறை உவப்பையும், இறை நெருக்கத்தையும் பெற்றுக் கொள்ள வேண்டும் என இஸ்லாம் தூண்டும் அதே வேளையில் அந்த வழிபாட்டை இரு கூறுகளாக பிரித்திருக்கின்றது.

 

ஒன்று உடல் ரீதியிலானது. இன்னொன்று உடமை மற்றும் பொருள் ரீதியிலானது.

 

இறைவனின் நெருக்கத்தை, பொருத்தத்தைப் பெறுவதற்காக எவ்வாறு உடல் ரீதியான வழிபாடு முக்கியம் என்று குர்ஆன் வலியுறுத்துகிறதோ அதே போன்று உடமை மற்றும் பொருள் ரீதியான வழிபாடும் முக்கியம் என வலியுறுத்துகிறது.

 

ஆகவே தான் குர்ஆனில் அல்லாஹ் தொழுகையையும் ஜகாத்தையும் பல இடங்களில் ஒன்றிணைத்தே வலியுறுத்திக் கூறுகின்றான்.

 

இறைவனின் முன் பக்திப் பரவசத்துடன் தலை தாழ்த்துவது மட்டுமல்ல வழிபாடு என்பது.

 

மாறாக, தான் சம்பாதித்து சேர்த்து வைத்திருக்கிற செல்வத்தில் சக மனிதர்களுக்கும் உரிமை உள்ளது என்ற உணர்வுடன் சேவையாற்றுவதும், உதவிக்கரம் நீட்டுவதும் வழிபாடு தான் என்பதை உணர்த்துவதற்காகத் தான் உடல் ரீதியான தொழுகையையும், பொருள் ரீதியான ஜகாத்தையும் இணைத்தே அல்லாஹ் கூறியிருக்கின்றான்.

 

وَأَحْسِنْ كَمَا أَحْسَنَ اللَّهُ إِلَيْكَ

 

”அல்லாஹ் உமக்கு உபகாரம் செய்திருப்பதைப் போன்று நீயும் சக மனிதர்களுக்கு உபகாரம் செய்”.                      ( அல்குர்ஆன்: 28: 77 )

 

2. மனித நேயப்பண்பு முஸ்லிம்களிடம் இருக்க வேண்டிய உயர் பண்பாகும்..

 

ஹாத்திம் தாயி என்பவருடைய மகள் ஸஃபானாவும், அவரின் கோத்திரத்தாரும் கைதியாக பிடிக்கப்பட்டு மதீனாவின் மஸ்ஜித்துன் நபவீயின் முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தருணம் அது..

 

நிலைமையை உணர்ந்து கொண்ட ஸஃபானா தழுதழுத்த குரலில் நபி {ஸல்} அவர்களிடம் “அல்லாஹ்வின் தூதரே! என்னுடைய தந்தையோ இறந்து விட்டார். என்னை ஆதரிக்க வேண்டிய என் சகோதரன் அதீயோ என்னை இந்த நிலைமைக்கு ஆளாக்கி விட்டு ஓடிவிட்டார். என் மீது கருணை காட்டுங்கள்! அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவான்!” என்றார்.

 

இந்த அபயக்குரல் மூன்று நாட்களாக மாநபி {ஸல்} அவர்களின் காதுகளில் பள்ளிவாசலைக் கடந்து வீட்டிற்கும், வீட்டைக் கடந்து பள்ளிவாசலுக்கும் செல்கிற போது ஒலித்துக் கொண்டே இருந்தது.

 

மூன்றாம் நாள் ஸஃபானாவின் அருகே சென்ற பெருமானார் {ஸல்} அவர்கள் அன்பு கூர்ந்து நோக்கி ”ஸஃபானாவே! உம்முடைய கோரிக்கை தான் என்ன?” ஆதரவுடன் கேட்டார்கள்.

 

அல்லாஹ்வின் தூதரே! என் தந்தை வறியோருக்கும், எளியோருக்கும், வாழ வழியில்லாதோருக்கும் கலங்கரை விளக்கமாய் இருந்தவர். உயிருடன் வாழும் காலம் வரைக்கும் ஈந்து கொடுப்பதை வழக்கமாய் கொண்டிருந்த மாமனிதர் அவர். ஆனால், நானும், என் சமூகமும் இன்று இப்படி நிராயுதபாணிகளாய் நின்று கொண்டிருக்கின்றோம். எங்கள் மீது கருணை காட்டுங்கள்! உங்களுக்கு அல்லாஹ் அருள் புரிவான்!” என்றார்.

 

 

நீண்ட உரையாடலுக்குப் பின்னர் அண்ணலார் ஸஃபானாவின் தந்தையை வாழ்த்தி விட்டு, விடுதலை அளிப்பதாக கூறிவிட்டு அணிய ஆடையும், உண்ண உணவும், செலவுக்கு பணமும் கொடுத்து விட்டு சுற்றியிருந்த தோழர்களை நோக்கி “கண்ணியமானவர்கள் இழிவடைந்த நிலையில் இருப்பதைக் கண்டாலோ, வசதி படைத்தவர்கள் வறுமையில் மாட்டிக் கொண்டாலோ, அறிவுபடைத்தவர்கள் முட்டாள்களிடத்தில் சிக்கிக் கொண்டாலோ உடனடியாக அவர்களுக்கு உதவுங்கள்” என கூறினார்கள்.

 

பின்னர், தகுந்த பாதுகாப்போடு ஸஃபானாவை அவரின் சொந்த ஊரான ஷாமுக்கு அனுப்பி வைத்தார்கள். ( நூல்: இப்னு ஹிஷாம், அத்தாரிக் லித் தபரீ )                    

 

எனவே, அல்லாஹ்வும், அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களும் வலியுறுத்திய கடமையைத் தான் செய்கின்றோம் என்பதை மனதில் நிறுத்த வேண்டும்.

 

முஸ்லிம் சமூகம் அதிகம் அலட்டிக் கொள்ளாமல் பாதிக்கப்பட்ட மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பும் வரை தொடர்ந்து உதவிக்கரம் நீட்டிக் கொண்டிருக்க வேண்டும்.

 

நம்மை நோக்கி வருகிற பிற சமூக மக்களின் வாழ்த்துக்களை, பாராட்டுக்களை எண்ணி, அகமகிழ்ந்து போகிறோம் எனில் இஸ்லாம் மனித நேயப் பணிகளுக்கு வழங்குகிற அபரிமிதமான நன்மைகளை இழக்கும் அபாயம் நேரிடும்.

 

3. எல்லா காலங்களிலும் மனித நேயம் இடம் பெற்றிருக்க வேண்டும்.

 

لَا يَنْهَاكُمُ اللَّهُ عَنِ الَّذِينَ لَمْ يُقَاتِلُوكُمْ فِي الدِّينِ وَلَمْ يُخْرِجُوكُمْ مِنْ دِيَارِكُمْ أَنْ تَبَرُّوهُمْ وَتُقْسِطُوا إِلَيْهِمْ إِنَّ اللَّهَ يُحِبُّ الْمُقْسِطِينَ (8)

 

“தீன் (இறைமார்க்கம்) தொடர்பான விஷயங்களில் எவர்கள் உங்களுடன் போர் புரியவில்லையோ – உங்களை உங்களுடைய வீடுகளிலிருந்து வெளியேற்ற வில்லையோ அவர்களிடம் நீங்கள் நல்லவிதமாகவும், நீதியுடனும் நடப்பதிலிருந்து அல்லாஹ் உங்களைத் தடுப்பதில்லை. திண்ணமாக அல்லாஹ் நீதி செலுத்துவோரை நேசிக்கின்றான்”.                                               ( அல்குர்ஆன்: 60:8 )

 

4. அனைத்து உயிரினங்களோடும் மனித நேயத்தோடு நடந்து கொள்ள வேண்டும்..

 

அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “ஒரு மனிதன் காட்டில் நடந்து சென்று கொண்டிருந்தான். அவனுக்குக் கடுமையாக தாகம் ஏற்பட்டது. அருகில் இருந்த கிணற்றுக்குள் இறங்கி நீர் அருந்தினான். தாகம் தீர நீர் அருந்திய பின்னர் மேலே வந்தான். அங்கே நாயொன்று தாகத்தின் கொடுமையால் தரையை நக்கிக் கொண்டிருந்தது.

 

அப்போது அந்த மனிதன் ”நாம் எவ்வாறு தாகத்தால் துடித்துக் கொண்டிருந்தோமோ அவ்வாறு தானே இந்த நாயும் தாகத்தால் துடித்துக் கொண்டிருக்கின்றது” என்று தன் மனதினுள் எண்ணினான்.

 

உடனே, கிணற்றுக்குள் இறங்கி தனது காலுறைக்குள் தண்ணீர் நிரப்பிக் கொண்டு வெளியே வந்து அந்த நாய்க்குத் தண்ணீர் புகட்டினான். அல்லாஹ் அவனது இந்தச் செயலை மிகவும் மதித்தான். அதன் விளைவாக அவனது பாவங்களை மன்னித்தான்” என நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.

 

அப்போது, நபித்தோழர்கள் “அல்லாஹ்வின் தூதரே! பிராணிகளுக்குச் சேவை செய்தாலும் நன்மை கிடைக்குமா?” என்று கேட்டார்கள்.

 

அதற்கு, நபி {ஸல்} அவர்கள் “ஈரமான ஈரலுடைய எந்த ஒன்றுக்கும் அதாவது எந்த ஓர் உயிர் பிராணிக்கும் சேவை செய்தாலும் நன்மை கிடைக்கும்” என்று பதில் கூறினார்கள்.                                        ( நூல்: புகாரி )

 

5. மனிதனுக்கு செய்யும் சேவை இறைவனுக்கு செய்யும் சேவையே!..

 

அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் எங்களை நோக்கி “மறுமை நாளில் அல்லாஹ் மனிதனிடம் “மனிதனே! நான் நோய்வாய்ப்பட்டிருந்தேன். நீயோ என்னை நலம் விசாரிக்க வரவில்லையே!” என்று கேட்பான்.

 

மனிதன் பதைபதைப்போடு “என் இறைவனே! நீ தானே அனைத்துலகையும் படைத்து பரிபாலித்துக் கொண்டிருக்கின்றாய்! உன்னை எப்படி நான் வந்து நலம் விசாரிப்பது” என்று கேட்பான்.

 

அப்போது, அல்லாஹ் “இன்ன மனிதன் நோயுற்றிருந்ததை நீ அறிந்திருந்தாய் தானே! ஆனால், அவனது உடல் நலம் பற்றி நீ விசாரிக்கச் செல்லவில்லையே! நீ அவனை நலம் விசாரிக்கச் சென்றிருந்தால் அங்கே என்னைப் பார்த்திருப்பாய்!” என்று கூறுவான்.

 

மீண்டும், அல்லாஹ் “மனிதா! உன்னிடம் நான் உணவு கேட்டேனே? நீ ஏன் எனக்கு உணவு அளிக்கவில்லை?” என்று கேட்பான்.

 

அதற்கு, மனிதன் “அகில உலகங்களின் இரட்சகன் நீ! எப்போது நீ பசியோடு இருந்தாய்? நான் உனக்கு எப்படி உணவளிப்பது?” என்று கேட்பான்.

 

அப்போது, அல்லாஹ் ““இன்ன மனிதன் பசியோடு இருந்ததை நீ அறிந்திருந்தாய் தானே! ஆனால், அவனது பசியை போக்கிட உணவு கொடுக்க வில்லையே! நீ அவனுக்கு உணவு கொடுத்திருந்தால் அங்கே என்னைப் பார்த்திருப்பாய்!” நீ அவனது தேவையை நிறைவேற்றி இருந்தால் அதற்கான நற்கூலியை இப்போது இங்கு பெற்றிருப்பாய்!” என்று கூறுவான்.

 

மீண்டும், அல்லாஹ் “மனிதா! நான் தாகித்த நிலையில் உன்னிடம் வந்து தண்ணீர் கேட்டேனே? ஏன் எனக்கு நீ குடிக்கத் தண்ணீர் தரவில்லை?” என்று கேட்பான்.

 

அதற்கு, மனிதன் “அகில உலகங்களின் அதிபதி நீ! எப்போது தாகித்திருந்தாய்? உனக்கு எவ்வாறு நான் தண்ணீர் புகட்டுவது?” என்று கேட்பான்.

 

அப்போது, அல்லாஹ் ““இன்ன மனிதன் தாகத்தோடு இருந்ததை நீ அறிந்திருந்தாய் தானே! ஆனால், அவனது தாகத்தைப் போக்கிட நீ தண்ணீர் கொடுக்க வில்லையே! நீ அவனுக்கு தண்ணீர் கொடுத்து தாகத்தை தீர்த்திருந்தால் அங்கே என்னைப் பார்த்திருப்பாய்!” நீ அவனது தேவையை நிறைவேற்றி இருந்தால் அதற்கான நற்கூலியை இப்போது இங்கு பெற்றிருப்பாய்!” என்று கூறுவான்.

                                                        ( நூல்: முஸ்லிம் )

 

மனித குலத்திற்கு செய்யும் சேவையை இறைவன் தனக்கு செய்யும் சேவைக்கு ஒப்பாக்கி கூறுவதில் இருந்து மனிதகுல சேவையின் முக்கியத்துவத்தை உணர முடிகின்றது.

 

6. ஓர் உயிரை வாழ வைப்பதென்பது…

 

وَمَنْ أَحْيَاهَا فَكَأَنَّمَا أَحْيَا النَّاسَ جَمِيعًا

 

“எவர் ஓர் உயிரை வாழ வைக்கின்றாரோ அவர் ஒட்டு மொத்த மனித சமூகத்தையும் வாழ வைத்தவரைப் போன்றவராவார்”.          ( அல்குர்ஆன்: 5: 32 )

மனித நேய மாண்பாளர்களுக்கும், மனித குலத்திற்கு சேவை செய்வோருக்கும் இஸ்லாம் கூறும் சோபனங்கள்…

 

பசித்தவருக்கு உணவளிப்பது, தாகிப்பவருக்கு தண்ணீர் அளிப்பது, ஆடையில்லாதோருக்கு ஆடை கொடுப்பது, உணவு சமைப்பதற்கு உபகரணங்கள் வழங்குவது, இதர இன்றியமையாதத் தேவைகளை நிறைவேற்றிக் கொடுப்பது மிகச் சிறந்த செயல் எனக் கூறிடும் இஸ்லாம் அதற்காக அபரிமிதமான நன்மைகளை வாரி வழங்குகின்றது.

 

 

பர்ரா இப்னு ஆஸிப் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “ஒரு கிராமவாசி அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களிடம் வந்து “அல்லாஹ்வின் தூதரே! சுவனத்தில் நுழையச் செய்திடும் ஓர் அமலை எனக்கு அறிவித்துத் தாருங்கள்!” என்றார்.

 

அப்போது, நபி {ஸல்} அவர்கள் ”அடிமையை விடுவிப்பீராக! ஆபத்தில் மாட்டிக் கொண்டிருப்போரை காப்பாற்றுவாயாக! அல்லது அகதிகளை ஆதரிப்பீராக! இவற்றைச் செய்திட உம்மால் இயலவில்லை எனில் பசித்தவருக்கு உணவளிப்பீராக! அல்லது தாகித்தவருக்கு தண்ணீர் வழங்குவீராக!” என்று கூறினார்கள். (நூல்:இப்னு ஹிப்பான்)

 

 

அபூ ஸயீதுல் குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “எந்த ஒரு இறை நம்பிக்கையாளர் பசித்திருக்கும் ஓர் இறை நம்பிக்கையாளருக்கு உணவளிக்கின்றாரோ, அல்லாஹ் அவருக்கு சுவனத்து கனிகளை மறுமையில் வழங்குவான்.

 

“எந்த ஒரு இறை நம்பிக்கையாளர் தாகித்திருக்கும் ஓர் இறை நம்பிக்கையாளருக்கு தண்ணீர் கொடுக்கின்றாரோ, அல்லாஹ் அவருக்கு ரஹீக்கில் மஃதூமின் நீரை  மறுமையில் புகட்டுவான்.

 

 

“எந்த ஒரு இறை நம்பிக்கையாளர் ஆடையில்லாதிருந்த ஓர் இறை நம்பிக்கையாளருக்கு அணிய ஆடை கொடுக்கின்றாரோ, அல்லாஹ் அவருக்கு சுவனத்து பட்டாடையை மறுமையில் அணிவிப்பான்” என நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.                                                  ( நூல்: திர்மிதீ )

،

 

அப்துல்லாஹ் இப்னு உபைத் இப்னு அம்ர் (ரலி) அறிவிக்கிற இன்னொரு அறிவிப்பில்… இறை நம்பிக்கையாளர் – என்ற வார்த்தை இடம் பெறாமல் பொதுவாக அல்லாஹ்விற்காக யார் மேற்கூரிய நற்பணிகளை செய்கின்றார்களோ, அவர்களுக்கு அல்லாஹ் மேற்கூரிய சோபனங்களை வழங்குவதாக முஸ்னத் அஹ்மதில் பதிவு செய்யப்பட்டிருக்கின்றது.

 

ஆகவே, உலக மாந்தருக்கு சேவை செய்தல், மனித நேயத்தோடும், மனிதாபிமானத்தோடும் நடத்தல் என்கிற மகத்தான பணியை இஸ்லாம் வழிபாடாகவே கருதுகின்றது.

 

அதற்கென எல்லையில்லா பல நன்மைகளை வாரி வழங்குவதை மேற்கூரிய நபிமொழிகள், மற்றும் வரலாறுகள், திருமறை வசனங்கள் உணர்த்துவதை நம்மால் உணர முடிகின்றது.

 

எனவே, எல்லா காலத்திலும், எல்லா மனிதர்களிடத்திலும் மனித நேயத்தோடு நடந்து மானுடம் தழைக்க உதவியாளர்களாய் இருப்போம்!

 

வல்ல ரஹ்மான் நம் அனைவருக்கும் பூமியில் உள்ள எல்லா உயிரினங்களோடும் இரக்கத்தோடும், சேவை உணர்வோடும் நடந்து கொள்ளும் அழகிய பண்பைத் தந்தருள் புரிவானாக!

 

எல்லாம் வல்ல அல்லாஹ் ரப்புல் ஆலமீன் கேரள மக்களை மழை, வெள்ளத்திலிருந்தும், நிலச்சரிவு மற்றும் இதர ஆபத்துகளில் இருந்தும் முழுமையாக பாதுகாப்பானாக!

 

 

 

 

 

 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

1.கணவனைக் கவரும் வழிகள் 40

பத்ருப் போர் உணர்த்தும் பாடமும் படிப்பினைகளும்!

மண்ணறை வேதனை 001