மனித இயல்புகளும், இறை வழிக்காட்டுதலும்

 மனித இயல்புகளும், இறை வழிக்காட்டுதலும்


இன்றைய நவீன கால கட்டத்தில் மனிதவளம் என்பது மிகவும் முக்கியத்துவம் பெறுகின்றது. முன்பு மக்கள்தொகை வளர்ச்சி என்பது ஒரு சுமையாக கருதப்பட்டது. ஆனால், இப்போது மனிதவளம் ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு உதவும் ஆக்கசக்தி என்பது பரவலாக உணரப்பட்டுள்ளது.


பன்னாட்டு நிறுவனங்களில் எல்லாம் மனிதவளத்துறை(Human Resources Department) என்று தனியாக செயல்பட்டு வருகின்றது. இதன் மூலம் மனிதனின் பலம் என்ன? பலவீனம் என்ன? என்று ஆய்வு செய்யப்பட்டு, தனிமனித ஆளுமையை மேம்படுத்துவதற்கு வேண்டிய ஆலோசனைகள், ஆய்வுகள் நடத்தப்படுகின்றன. இதற்காக பெரும்தொகையும் நிறுவனங்களால் செலவு செய்யப்படுவதையும் காண்கின்றோம்.


இன்றைய காலக்கட்டத்தில் மனிதர்கள் கவனிக்க தவறும் முக்கிய விஷயம் ஒன்றையும் நாம் கவனிக்க வேண்டும். அதாவது மனிதனின் பலத்தையும், பலவீனத்தையும் அறிந்தவன், நிச்சயமாக, அவனை படைத்த இறைவனே! படைத்தவன் மட்டுமே தன் படைப்புகளைப் பற்றி தெளிவாக அறிய முடியும். சரியான வழிகாட்டுதலையும் வழங்கமுடியும். அப்படிப்பட்ட வழிக்காட்டல்தான் துல்லியமானதாக, சரியானதாக, பக்கசார்பு அற்றதாக, பக்கவிளைவுகள் இல்லாததாக அமையமுடியும்.


உதாரணமாக, ஓர் மின்னனு சாதனம் அல்லது இயந்திரம் ஒன்றை எடுத்துக்கொள்வோம். அதனை கண்டுபிடித்தவரே சரியான முறையில் அதன் தன்மைகளை விளங்கமுடியும். பிரச்சனைகளின் போது மற்றவர்கள் அதனை சரி செய்ய முயற்சித்தால் மீண்டும், மீண்டும் கோளாறு ஏற்பட்டு கொண்டே இருக்கும். அதைப் போலவே, படைத்தவனின் வழிக்காட்டுதலை புறக்கணித்துவிட்டு எந்த ஆராய்ச்சிகளை செய்தாலும் சரி! பல்வேறு பயிற்சி பட்டறைகளை நடத்தினாலும் சரி! முழுப்பலனும் கிடைத்துவிடாது என்பதே உண்மை.


மனிதன் என்பவன் செடி, கொடிகளை போன்றவனல்ல. நாம் நினைத்த வடிவத்தில் கத்தரித்து, ஒழுங்கு செய்திட. மனிதர்கள் தனக்கே உரித்தான மாறுப்பட்ட திறமைகள், இயல்புகள், குணங்கள் மற்றும் செயல்திறன் வாய்க்கப் பெற்றவர்கள். மனிதனை ரிமோட் மூலம் இயங்க செய்யவைக்க அவன் ஓர் இயந்திர மனிதனல்ல. உங்களின் Programme அவனிடத்தில் அப்படியே வேலை செய்ய முடியாது.


மனிதனைப் பற்றி திருமறை:


01.சிறந்த படைப்பு: மனிதனை சிறந்த படைப்பாக அல்லாஹ் படைத்து இருக்கிறான். பகுத்தறிவு திறத்துடனும், சுயமே செயல்படும் தன்மையுடனும் அல்லாஹ் படைத்து இருக்கிறான். மனிதன் அறிவியல் துறையில் அனுதினமும் முன்னேறிக் கொண்டே செல்கின்றான். அவனது இன்றைய பொழுது நேற்றைப் போலில்லை. நாளைய பொழுதும் மாறுபட்டதே. கடந்த நூற்றாண்டுகளில் கற்பனைகளிலும், கதைகளிலும் வந்தவை எல்லாம் இந்த நூற்றாண்டில் நிஜமாக்கி வைக்கும் அளவுக்கு அற்புத அறிவாற்றலை மனிதனுக்கு வல்ல இறைவன் வழங்கி இருக்கிறான்.


மனிதனை அல்லாஹ் படைக்க நாடியபோது வானவர்கள் சொன்னது என்ன? இறைவா! நாங்கள்தாம் உன்னை புகழ்ந்து போற்றுகிறோமே! அவ்வாறிருக்க பூமியில் இரத்தம் சிந்தக்கூடிய மனிதர்களையா படைக்கப்போகிறாய்?. இறைவன் கூறினான், 'நீங்கள் அறியாதவற்றை நான் அறிவேன்".

وَاِذْ قَالَ رَبُّكَ لِلْمَلٰٓٮِٕكَةِ اِنِّىْ جَاعِلٌ فِى الْاَرْضِ خَلِيْفَةً  قَالُوْٓا اَتَجْعَلُ فِيْهَا مَنْ يُّفْسِدُ فِيْهَا وَيَسْفِكُ الدِّمَآءَ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَـكَ‌ قَالَ اِنِّىْٓ اَعْلَمُ مَا لَا تَعْلَمُوْنَ‏


"அந்த நேரத்தை நினைவு கூறும். உம் இறைவன், மலக்கு(வானவர்)களை நோக்கி, 'நான் ஒரு பிரதிநிதியை(கலீஃபாவை) பூமியில் ஏற்படுத்தப்போகிறேன்' என்று கூறினான். (அப்போது) அவர்கள், 'பூமியில், அதன் ஒழுங்கமைப்பைச் சீர்குலைத்து, மேலும் இரத்தஞ் சிந்தக் கூடியவரையா! அதில் (பிரதிநிதியாக) நீ ஏற்படுத்தப் போகின்றாய்? நாங்கள்தாம் உன்னை துதிபாடி, உன் தூய்மையைப் போற்றிக் கொண்டு இருக்கின்றோமே!" என வினவினார்கள். அதற்கு இறைவன் கூறினான்: 'நீங்கள் அறியாதைவற்றையெல்லாம் நிச்சயமாக நான் அறிவேன்." (02:30)


அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா(ரலி)

அண்ணல் நபி(ஸல்) கூறினார்கள், 'ஒவ்வொரு குழந்தையும் சத்தியத்தின் தூய்மையில்தான் பிறக்கின்றது. ஆனால் அதன் பெற்றோர்கள்தான் அதனை யூதனாகவோ, கிறிஸ்தவனாகவோ ஆக்குகிறார்கள். விலங்குகள் ஈனும் குட்டிகள்கூட காதுகள், மூக்குகள் அறுபடாத நிலையிலேயே பிறக்கின்றது."

அதன்பின் திருமறையின் கீழ்கண்ட வசனத்தை ஓதினார்கள்.

فَاَقِمْ وَجْهَكَ لِلدِّيْنِ حَنِيْفًا ‌ فِطْرَتَ اللّٰهِ الَّتِىْ فَطَرَ النَّاسَ عَلَيْهَا ‌ لَا تَبْدِيْلَ لِخَـلْقِ اللّٰهِ‌  ذٰ لِكَ الدِّيْنُ الْقَيِّمُ ۙ  وَلٰـكِنَّ اَكْثَرَ النَّاسِ لَا يَعْلَمُوْنَ ۙ ‏


"எனவே (நபியே இன்னும் நபியைப் பின்பற்றுபவர்களே) ஒருமனப்பட்ட நிலையில் உங்களுடைய முகத்தை இந்த தீனின் பக்கம் நிலைப்படுத்துங்கள். அல்லாஹ் மனிதர்களை எந்த இயற்கை அமைப்பில் படைத்திருக்கின்றானோ அந்த இயற்கை அமைப்பில் நிலைத்திருங்கள். அல்லாஹ்வினால் படைக்கப்பட்ட அமைப்பில் மாறுதல் செய்யமுடியாது. இதுதான் முற்றிலும் நேரான செம்மையான மார்க்கமாகும். ஆயினும் பெரும்பாலான மக்கள் அறிவதில்லை."(30:30)


ஆண், பெண் இருவருக்கும் தனித்தனியாக இயற்கை அமைப்புகள் உள்ளன. அதை நீங்கள் மாற்றிவிட முயாலாதீர்கள். இறைவழிகாட்டில் நிலைத்திருங்கள். எனெனில் மனித இயல்புகளுக்கும் இறைவழிகாட்டலுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. எனவே இஸ்லாமிய கருத்தோட்டத்தின்படி மனிதன் பிறப்பால் தூய்மையானவன். ஏனைய மதங்களில் கூறப்படுவதுபோல அவன் பாவி அல்ல. பிறக்கும்போதே பாவச்சுமையடன் பிறப்பதில்லை.

மனிதன் தூய்மையானவன் மட்டுமல்ல, கண்ணியமானவன். ஏனெனில் முதல் மனிதன் ஆதம்(அலை) அவர்களை இறைவன் படைத்து தனது ஆவியை அவருள் ஊதினான்.

فَاِذَا سَوَّيْتُهٗ وَنَفَخْتُ فِيْهِ مِنْ رُّوْحِىْ فَقَعُوْا لَهٗ سٰجِدِيْنَ‏

"…நான் அவரை முழுமையாக்கி, அவருக்குள் என்னுடைய உயிரிலிருந்து ஊதியதும் நீங்கள் அனைவரும் அவருக்குச் சிரம் பணிந்திட வேண்டும்…"(15:29)

அது மட்டுமல்ல. இறைவன் தனது திருக்கரத்தால் நமது தந்தை ஆதம்(அலை) அவர்களைப் படைத்ததாக தனது திருமறையில் சொல்லி காட்டுகின்றான்.

قَالَ يٰۤـاِبْلِيْسُ مَا مَنَعَكَ اَنْ تَسْجُدَ لِمَا خَلَقْتُ بِيَدَىَّ‌ اَسْتَكْبَرْتَ اَمْ كُنْتَ مِنَ الْعَالِيْنَ‏

இறைவன் கூறினான்: “இப்லீஸே! நான் என்னுடைய இரு கைகளால் படைத்திருக்கும் இவருக்கு சிரம் பணிவதை விட்டு உன்னைத் தடுத்தது எது? நீ கர்வம் கொண்டு விட்டாயா? அல்லது நீ உயர் அந்தஸ்து உடையவர்களுள் ஒருவனாகி விட்டாயா?”

(அல்குர்ஆன் : 38:75)

இவ்விரு திருவசனங்களும் மனிதனின் கண்ணியத்தையும், மேன்மையும் எடுத்துரைக்கின்றன.

02.மனிதன் - இறைவனின் பிரதிநிதி

மனிதன் இறைக்கட்டளையை பெற்று அதன்படி வாழ்ந்து தீனை நிலை நாட்டவேண்டும். அந்த ரீதியிலேயே அவன் அல்லாஹ்வுடைய "கலீஃபா(பிரதிநிதி)". ஒருவருக்கு சொந்தமான உடைமைகளில், அவரால் வழங்கப்பட்ட அதிகாரங்களை - அவருடைய என்ற அந்தஸ்த்தில் பயன்படுத்துபவருக்கு "கலீஃபா" என்பர். இந்த பூமியில் இறைக்கட்டளைகளை செயல்படுத்தும் பிரதிநிதி என்ற அந்தஸ்தில் இறைவன் படைத்துள்ளான். அவனது தனிப்பட்ட மற்றும் சமூக வாழ்வினை இறைக்கட்டளைப்படியே அவன் அமைத்துக் கொண்டு வாழவேண்டும்.

03.மிகச்சிறந்த அமைப்பு

"திண்ணமாக மனிதனை நாம் மிகச் சிறந்த அமைப்பில் படைத்தோம்"(95:04) என்று அல்லாஹ் கூறுகின்றான்.

வெறெந்த உயிரினத்திற்கும் அளிக்கப்படாத சிந்திக்கும் ஆற்றல், புரிந்துக் கொள்ளும் திறன், புத்திக் கூர்மை ஆகிய உயர்தகுதிகளை மனிதனுக்கு வழங்கப்பட்டுள்ளன. அல்லாஹ் நமக்கு அளித்த இந்த உடலும், உடலின் ஒவ்வொரு பாகமும் எவ்வளவு முக்கியமானது என்பதை, அதனை இழந்த ஒருவனைக் கண்டால், கேட்டால் நாம் புரிந்து கொள்ளலாம். அழகான வடிவத்துடனும், சீரமைப்புடனும் மனிதன் படைக்கப் பட்டிருக்கிறான். உடல், பகுத்தறிவு, ஆன்மீகம் அனைத்திலும் மனிதன் தனிச்சிறப்புடன் திகழ்வதைக் காணலாம்.

இன்றைய நவீன விஞ்ஞான யுகத்தில் மாற்று உறுப்பு அறுவை சிகிச்சை செய்த பின்னரும்கூட தனது சொந்த உறுப்பை போல மாற்று உறுப்பை நமது உடல் எளிதில் ஏற்றுக்கொள்வதில்லை. நிலைமை இப்படி இருக்க, செயற்கை உறுப்புக்களின் நிலையை பற்றி கூறவேண்டியதே இல்லை.

04.உள்ளுணர்வு

மனிதனுடைய உள்ளுணர்வில் நன்மை, தீமையை பிரித்தெரியும், அறிவை அல்லாஹ் வைத்திருக்கின்றான். மனித ஆன்மாவை செம்மைப்படுத்திய பின் அதனுடைய நன்மையையும், தீமையையும் உணர்த்தினான்.

"மேலும், மனித ஆன்மாவின் மீதும் அதனைச் செம்மைப்படுத்தி பின்னர், அதன் தீமையையும் தூய்மையையும் அதனுடைய உள்ளுணர்வில் வைத்தவன் மீதும் சத்தியமாக!" (91:7,8)

மனிதனுள், அவனைப் படைத்த இறைவன் நன்மை, தீமை இரண்டிற்கும் உரிய வேட்கைகளை வைத்துவிட்டான். இதனை ஒவ்வொரு மனிதனும் தன்னுள் உணர்கின்றான். நடைமுறையில் மனிதர்கள் தங்களுக்குள்ளாகவே ஒருவர் மற்றவரை நோக்கி 'உனக்கு மனச்சாட்சி இல்லையா?" என்றும், 'மனச்சாட்சியில்லாமல் பேசுகிறாய்" என்றும் கூறுவதும் அதன் அடிப்படையில்தான்.

தவறுகளை மனிதன் செய்யும் போது மனச்சாட்சி இடித்துரைக்கிறது. அதனையே படைத்தவன்;, "இடித்துரைக்கும் ஆன்மாவின் மீது சத்தியமாக!" என்று கூறுகின்றான். இலஞ்சம் வாங்கும்போது, திருடும்போது, பொய் கூறும்போது அவனது மனச்சாட்சி இடித்துரைக்கிறது. அதனை மீறியே அவன் தவறுகளை செய்கின்றான். அதன்மூலம் இம்மை, மறுமையில் தன்டனைக்கு ஆளாகின்றான். இடித்துரைக்கும் ஆன்மாவின் பேச்சை கேட்டு நடந்தவன், தவறுகளை விட்டு விலகி நன்மையின்பால் செல்கின்றான். ஆனால் உள்ளுணர்வை புறக்கணித்தவன் பாவச்சூழலில் சிக்குகின்றான்.

ஓவ்வொரு மனிதனுக்குள்ளும் இருக்கும் அந்த உள்ளுணர்வை நாம் தட்டி எழுப்ப வேண்டும். அப்படியான தட்டி எழுப்பும்; பணிதான் அழைப்புப் பணி.

வரலாற்றில் காணப்படும், உதாரணங்கள் நமக்கு அந்த செய்தியைத்தான் சொல்கின்றன. நபித்தோழர்கள் வாழ்வு இஸ்லாத்திற்கு முன்பு அஞ்ஞானக் கொள்கைகளாகவே இருந்தது. சிலை வணக்கம், பெண் குழந்தைகள் கொல்லப்படுதல், குலப்பெருமை, அறியாமைக் கால மூடப் பழக்கவழக்கங்கள் எனப் பல்கி பெருகியிருந்தது. இவ்வாறான செயல்கள் செய்த அம்மக்களின் வாழ்க்கையில் இஸ்லாம் அறிமுகப்படுத்தப்பட்ட பின் தலைகீழ் மாற்றம் ஏற்ப்பட்டது. எவ்வாறெனில் பொறுமை, தியாகம், சகிப்புதன்மை, மன்னிக்கும் மனப்பான்மை போன்ற நற்குணங்களைக் கொண்டவர்களாக நபித்தோழர்கள் மாறிவிட்டார்கள். அல்லாஹ் அவர்களைப் பொருந்தி கொண்டான். அவர்களும் அல்லாஹ்வைக் பொருந்திக் கொண்டார்கள். நாம் அவர்களை 'ரலியல்லாஹு அன்ஹு" என்று குறிப்பிட்டு சொல்கின்றோம். எனவே மனிதர்களுக்குள் இறைவன் அமைத்துள்ள அந்த உள்ளுணர்வை நாம் புரிந்து அதனை தட்டி எழுப்பும் பணியை நமக்குள்ளாகவும், சமூகத்திலும் செய்யவேண்டும்.

பல்வேறு பலம் மிக்க இயல்புகளுடன் படைக்கப்பட்ட மனிதனிடம் மற்றும் பல பலவீனமிக்க இயல்புகளுடன் மனிதனை இறைவன் படைத்துள்ளான். இவையும் அவனை சோதிக்கவே. உதாரணமாக "மனிதன் பலவீனனாக படைக்கப்பட்டுள்ளான்" (04:28) என்று அல்லாஹ் தன் திருமறையில் கூறுகின்றான்.

எனவே மனிதன் பலவீனங்களுக்கு உட்பட்ட படைப்பே. விலங்குகள் ஈனும் குட்டிகள், பிறந்த உடனேயே நடக்க அவற்றால் முடியும். ஆனால் மனிதக் குழந்தை நடப்பதற்கு சில மாதங்கள் தேவைப்படுகிறது. சில வருடங்களுக்கு தாய், தந்தையின் அரவணைப்பும், பராமரிப்பும் அவனுக்கு கண்டிப்பாக தேவைப்படுகிறது.

ஆசைகள் அதிகம் உள்ள படைப்பு

மனிதன் எந்தெந்த பொருட்களின் மீது அளவிலா ஆசை கொண்டுள்ளான் என்பதை அல்லாஹ் தன் திருமறையில் கூறியுள்ளான்;.

"பெண்கள், பிள்ளைகள், தங்கம் மற்றும் வெள்ளியிலான பெருங் குவியல்கள், உயர்ரகக் குதிரைகள், கால்நடைகள் மற்றும் வேளாண்மை நிலங்கள் ஆகியவற்றின் மீது மோகம் கொள்வது மனிதர்களுக்கு அழகாக்கப்பட்டுள்ளது." (03:14)

அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ்(ரலி)

'ஆதமுடைய மகனுக்கு ஓர் ஓடை நிறைய பொன் இருந்தாலும், இரண்டு ஓடைகள் நிறைய பொன் வேண்டும் என விரும்புவான். அவனது வாயை மண்ணைத் தவிர வேறெதுவும் நிரப்பப் போவதில்லை'.(புகாரி)

மனிதனுக்கு ஆசையுள்ள மனதினைக் கொடுத்து அவனை நரகில் தள்ள வேண்டும் என்பது இறைவனின் நாட்டமல்ல. மாறாக, சுய சிந்தனையின் அடிப்படையில் மனஇச்சைகளை விட்டு விலகி, அல்லாஹ் அனுமதித்த வரம்புகளுக்குட்பட்டு மனிதன் செயல்படுகின்றானா? அல்லது வரம்பு மீறுகின்றானா? என்று இறைவன் சோதிக்கின்றான். நரகம் மன இச்சைகளால் சூழப்பட்டுள்ளது. சுவனம் துன்ப, துயரங்களால் சூழப்பட்டுள்ளது என்ற நபிமொழியும் நமக்கு அதைத்தான் உணர்த்துகின்றது.

அறிவிப்பாளர்: அபூஹுரைரா(ரலி)

பெருமானர்(ஸல்) அவர்கள் கூறினார்கள், 'இன்பங்கள், ஆசாபாசங்கள் ஆகியவற்றால் நரகம் சூழுப்பட்டிருக்கிறது. கஷ்டங்கள், துன்ப, துயரங்களால் சுவனம் சூழுப்பட்டு இருக்கிறது' (புகாரி, முஸ்லிம்)

எனவே, சோதனையில் வெற்றி பெறக் கூடிய மனிதனுக்கு சுவனம் என்ற நற்பேறு பற்றிய சுபச்செய்தியும், சோதனையில் தோற்றுவிட்ட மனிதனுக்கு நரகம் என்ற எச்சரிக்கையும் தரப்பட்டுள்ளது. அதனை பற்றி அச்சமூட்டி எச்சரிப்பதற்காக இறைத்தூதர்களும் மனித சமூகங்களுக்கு அவ்வப்போது அனுப்பட்டதன் நோக்கமும் அதுதான். நாளை இறைவனின் நீதிமன்றத்தில் இறைவனிடம் மனிதன் முறையிட்டுக் குறைகூறிட, வாதம் செய்திட எந்த வாய்ப்பும் கிடையாது.

"(நபியே!) நீர் கூறும்: இவற்றை (அளவுக்கதிகம் உலக இன்பங்களில் மோகம் கொள்வதை) விடச் சிறந்தது எது என்று உங்களுக்கு நான் அறிவிக்கிட்டுமா? யார் இறையச்சத்துடன் வாழ்கின்றார்களோ அவர்களுக்கு அவர்களின் இறைவனிடத்தில் சுவனங்கள் உண்டு: அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும். அவர்கள் அங்கேயே நிலையாகத் தங்கி வாழ்வார்கள். தூய்மையான மனைவியரும் உடனிருப்பர். அல்லாஹ்வின் உவப்பையும் பெறுவார்கள்: அல்லாஹ் தன்னுடைய அடிமைகளின் நடத்தையை ஆழ்ந்து கவனிப்பவனாக இருக்கின்றான்." (03:15)

மனிதன் அவசரக்காரன்:

"நன்மையை எவ்வாறு கோர வேண்டுமோ அவ்வாறு தீமையை மனிதன் கோருகின்றான். மனிதன் பெரிதும் அவசரக்காரனாக இருக்கின்றான்" (17:11)

"நிச்சயமாக மனிதன் அவசரக்காரனாகவே படைக்கப்பட்டிருக்கின்றான்" (70:19)

 رَبَّنَآ اٰتِنَا فِى الدُّنْيَا وَمَا لَهٗ فِى الْاٰخِرَةِ مِنْ خَلَاقٍ‏


"மக்களில் சிலர் 'எங்கள் இறைவனே! இவ்வுலகிலேயே எல்லாவற்றையும் எங்களுக்கு தந்து விடு!" என்று பிரார்த்திகின்றனர்;. அத்தகையோருக்கு மறுமையில் யாதொரு நற்பேறும்; இல்லை." (02:200)

மனிதன் நிதானமாக இம்மை, மறுமை இரண்டுக்கும் என நற்பேற்றினை இறைவனிடம் கேட்க வேண்டும். திருமறையில் அல்லாஹ் நமக்கு கற்றுத் தருகிறான்.

وَمِنْهُمْ مَّنْ يَّقُوْلُ رَبَّنَآ اٰتِنَا فِى الدُّنْيَا حَسَنَةً وَّفِى الْاٰخِرَةِ حَسَنَةً وَّ قِنَا عَذَابَ النَّارِ‏

"இன்னும் சிலர் 'எங்கள் இறைவனே! எங்களுக்கு இந்த உலகிலும் நன்மையை அருள்வாயாக, மறுவுலகிலும் நன்மையை அருள்வாயாக! மேலும் நரக வேதனையிலிருந்து எங்களை காப்பாற்றுவாயாக! என பிரார்த்திகின்றனர். இத்தகையோருக்கு அவர்கள் எதனைச் சம்பாதித்தார்களோ அதற்கேற்ப (ஈருலகிலும்) நற்பேறு உண்டு." (2:201,202)

*மனிதன் பதற்றக்காரன், நன்றி மறந்தவன்*

ஒர் விசயத்தில் நிதானமாக ஓர் முடிவுக்கு வருவதற்கு பதிலாக உடனடியாகவும், பதற்றத்துடனும் முடிவுகளை மேற்கொள்கின்றான். காரணம். மனிதன் பதற்றக்காரனாகவே படைக்கப் பட்டுள்ளான்.

فَاَمَّا الْاِنْسَانُ اِذَا مَا ابْتَلٰٮهُ رَبُّهٗ فَاَكْرَمَهٗ وَنَعَّمَهٗ  ۙ فَيَقُوْلُ رَبِّىْۤ اَكْرَمَنِ‏

وَاَمَّاۤ اِذَا مَا ابْتَلٰٮهُ فَقَدَرَ عَلَيْهِ رِزْقَهٗ ۙ فَيَقُوْلُ رَبِّىْۤ اَهَانَنِ‌‏

"ஆனால், மனிதனின் நிலை எப்படி இருக்கின்றதெனில், அவனுடைய இறைவன் அவனைச் சோதிக்க நாடினால் - மேலும், அவனை கண்ணியப்படுத்தி, அருட்கொடைகளையும் வழங்கினால், 'என்னுடைய இறைவன் என்னைக் கண்ணியப்படுத்தினான்' என்று கூறுகின்றான். மேலும், அவனைச் சோதிக்க நாடினால் - மேலும், அவனுடைய வாழ்க்கை வசதிகளை குறைத்து விட்டால் 'என் இறைவன் என்னை இழிவுபடுத்திவிட்டான்' என்று கூறுகின்றான்." (89:15,16)

இவ்வசனத்தின் விளக்கத்தில் சையது குதுப்(ரஹ்) இவ்வாறு விளக்குகிறார்:

மொத்தத்தில் மனிதன் இருநிலைகளிலுமே சிந்தனையிலும் மதிப்பீட்டிலும் தவறு செய்து விடுகின்றான். வாழ்க்கைப் பேறுகளின் வளமும் அதன் கட்டுப்பாடும் இறைவன் தனது அடியார்களுக்கு வைக்கும் சோதனையாகும். அந்தச் சோதனையின் மூலம் அவர்களிடமிருந்து அருட்பேறுகளுக்கான நன்றியும், துன்ப துயரங்களின் போது பொறுமையும் காணப்படுகின்றாதா என்று பரிசோதிக்கவே விரும்புகின்றான். பிறகு மறுமையில் அந்தப் பரிசோதனைகளின் அடிப்படையில் கூலிகள் வழங்கவும் போகின்றான். *இந்த உலகின் அற்பச் செல்வங்கள் அபரிதமாக வழங்கப்படுவதோ அல்லது அவற்றைக் கட்டுப்படுத்தப்படுவதோ முடிவான பலனும் கூலியும் அல்ல!. இறைவன் தனது அடியார்களைப் பற்றி வைத்திருக்கும் மதிப்பீடுகளுக்கும் அவர்களுக்கு வழங்கப்படும் உலகச் செல்வங்களுக்கும் அறவே எந்த விதச் சம்பந்தமுமில்லை!. இறைவனின் திருப்தியும் அவனது அதிருப்தியும் உண்மையில் அவன் வழங்குவதையோ அல்லது மறுப்பதையோ பொறுத்ததில்லை! உலகச் செல்வங்களை அவன் நல்லறச் செல்வர்களுக்கும் வழங்குகின்றான், தீயவர்களுக்கும் வழங்குகின்றான். அதே போன்றுதான் இரு சாராருக்குமே வழங்காமல் இருக்கின்றான். எனவே இந்த இரண்டுக்கும் பின்னால் மறுமையில் என்ன நடக்கப் போகின்றதோ அதுதான் உண்மைநிலை! அதுதான் இவர்களைப் பற்றிய இறைவனின் உண்மையான மதிப்பீடு*! (திருக்குர்ஆனின் நிழலில்)

அல்லாஹ்வின் அருட்கொடைகளை அனுபவிக்கும் போது மகிழ்ச்சி அடையும் மனிதன் அதில் குறைவு ஏற்படும்போது இறைவனையே நிந்திக்கின்றான். பொருள், உயிர், விவசாயம், வேளாண்மை இவற்றில் இழப்புக்கள் ஏற்படும் போது இறை நிராகரிப்பின் வார்த்தைகளை பேசவும் அவன் தயங்குவதில்லை. இது எப்பேற்பட்ட துர்க்குணம்! எப்பேற்பட்ட நன்றி கெட்டதனம்!.

ஏழ்மையும், செல்வச் செழிப்பும் நமக்கு சோதனைகள்தான். எனவே அந்தந்த நிலைமையில் நாம் இறைவனால் சோதிக்கப்படுகிறோம் என்பதை உணர்ந்து இறை வழிகாட்டலின்படியே நாம் இருக்கவேண்டும். இறையச்சமும், பொறுமையும், பிரார்த்தனையுமே நமக்கு சோதனையின் போது தேவையான விசயங்கள் என்பதை மனதில் கொள்ள வேண்டும். இறை உதவியில் ஆதரவு வைத்தவர்களாக அவன் பக்கமே எந்நிலையிலும் முகம் திருப்ப வேண்டும்.

மனிதன் மறதியாளன்

وَلَـقَدْ عَهِدْنَاۤ اِلٰٓى اٰدَمَ مِنْ قَبْلُ فَنَسِىَ وَلَمْ نَجِدْ لَهٗ عَزْمًا

"நாம் முன்னர் ஆதத்துக்கு ஒரு கட்டளை பிறப்பித்திருந்தோம். ஆயினும் அவர் அதனை மறந்து விட்டார். மேலும் நாம் அவரிடத்தில் மன உறுதியைக் காணவில்லை." (20:115)

அல்லாஹ்வின் கட்டளைகளை, அவனது தூதரின் வழிக்காட்டுதலை கேட்கும் அதனை மறந்து விடுகின்ற மனிதன் நாளை மறுமையில் நஷ்டவாளியாகவே இருப்பான். பிறருக்கு உபதேசிக்கும் ஒருவன் தன்னைப் பற்றிய சுயசீர்திருத்தத்தை மறந்து விட்டாலும் அதுவும் பெரும் வழிகேடே! இதுபோன்ற நிலமையில் இருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்பு கோருவோமாக!. அதேவேளையில், மறதியை அல்லாஹ் மனிதனுக்கு நல்லதாகவும் ஆக்கி வைத்துள்ளான். எவ்வாறு? மரணம் மூலம் அவன் நேசித்த அவனது இரத்த பந்த உறவுகளை பிரிய நேரும்போது அவனது நெஞ்சில் இருந்த துக்கம் மாறாமல் அனுதினமும் இருந்தால் நிலைமை எவ்வாறிருக்கும்?. தொழிலில், விவசாயத்தில் பெரும் நஷ்டம், மனவேதனை, போன்ற துயரங்கள் அவனிடத்திலே தொடர்ந்து தங்கியிருந்தால் அவனது நிலைமை என்ன?

கால ஓட்டத்தில் அவனது மனவேதனையின் அளவு குறைந்து, அதனை மறந்து விடுகின்றான். அவன் கொஞ்சம், கொஞ்சமாக அதிலிருந்து மீண்டு வருகின்றான். தான் நேசித்த அந்த மனிதர்களை அவனது நினைவில் இருந்து மறக்க செய்யவில்லை என்பதையும், மாறாக அன்றைக்கு இருந்த துக்கத்தின் தாக்கம் அவனுள் எப்போதும் தங்கி இருப்பது கிடையாது என்பதையும் நாம் விளங்கி கொள்ளலாம். இது இறைவனின் மாபெரும் அருட்கொடையே அன்றி வேறென்ன?.

அதே வேளையில் இறைக் கட்டளைகளை மனிதன் மறந்துவிடும் நிலையில் இருந்து நாம் மிக்க எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும். காரணம், அது நம்மை ஈருலக வாழ்விலும் தோல்வியின் பக்கமும், நஷ்டத்தின் பக்கமும் கொண்டு போய் விடும். எனவே அல்லாஹ் நம்மை எச்சரிக்கின்றான்.

فَلَمَّا نَسُوْا مَا ذُكِّرُوْا بِهٖ فَتَحْنَا عَلَيْهِمْ اَبْوَابَ كُلِّ شَىْءٍ حَتّٰٓى اِذَا فَرِحُوْا بِمَاۤ اُوْتُوْۤا اَخَذْنٰهُمْ بَغْتَةً فَاِذَا هُمْ مُّبْلِسُوْنَ‏

"பின்னர், அவர்களுக்கு போதிக்கப்பட்ட நல்லுரைகளை அவர்கள் மறந்துவிட்டபோது, அருள்வளங்களின் அனைத்து வாயில்களையும் அவர்களுக்காக நாம் திறந்து விட்டோம். எதுவரையெனில், தங்களுக்கு வழங்கப்பட்டிருந்த இன்ப நலன்களில் அவர்கள் திளைத்திருந்த போது திடீரென அவர்களை நாம் பிடித்தோம். அப்போது அவர்கள் முற்றிலும் நிராசை கொண்டோராய் ஆகிவிட்டனர்." (6:44)

الَّذِيْنَ اتَّخَذُوْا دِيْنَهُمْ لَهْوًا وَّلَعِبًا وَّغَرَّتْهُمُ الْحَيٰوةُ الدُّنْيَا‌‌ فَالْيَوْمَ نَنْسٰٮهُمْ كَمَا نَسُوْا لِقَآءَ يَوْمِهِمْ هٰذَا ۙ وَمَا كَانُوْا بِاٰيٰتِنَا يَجْحَدُوْنَ‏

"அவர்கள் எத்தகையோர் என்றால் தமது தீனை(வாழ்க்கை நெறியை) வேடிக்கையாகவும், விளையாட்டாகவும் ஆக்கிக் கொண்டார்கள். மேலும் உலக வாழ்க்கை அவர்களை ஏமாற்றத்திற்கு உள்ளாக்கியிருந்தது! (அல்லாஹ் கூறுவான்:) 'எனவே, அவர்கள் இந்நாளைச் சந்திப்பது குறித்து எவ்வாறு மறந்திருந்தார்களோ, மேலும் நம் வசனங்களை எவ்வாறு மறுத்துக் கொண்டும் இருந்தார்களோ அவ்வாறே நாமும் இன்று அவர்களை மறந்து விடுவோம்!" (07:51)

எனவே அல்லாஹ்வை, அவனது கட்டளையை, அல்லாஹ்வின் தூதரின் வழிகாட்டுதல்களை நினைவூட்டும் நன்மக்களுடன் இணைந்து இருப்போம். அப்படியான ஓர் கூட்டமைப்பில், இயக்கத்தில் நம்மை இணைத்துக் கொள்வோம்.

மனிதனுக்கு அல்லாஹ் வழங்கிய சில இயல்புகளையும், சிறப்புகளையும் மனிதனின் பலவீனமான சில இயல்புகளையும் பற்றி இதுவரை அறிந்து கொண்டோம். இதன் மூலம் நாம் நமது சிறப்பு இயல்புகளை மெருகேற்றி கொள்ள வேண்டும். அதே போல பலவீனமான அம்சங்களில் இருந்து படிப்பினைப் பெற்று, அதிலிருந்து விலகி நமது இம்மை வாழ்வை, மறுமை வாழ்வுக்கான களமாக பயன்படுத்தி நற்காரியங்களில் முந்திச் செல்ல வேண்டும்.

இனி, பலத்தை அதிகரிக்கவும், பலவீனங்களை குறைக்கவும் என்ன வழி? ஒரே ஒரு வழிதான். அதுதான் இறைவழிகாட்டலை பின்பற்றுதலாகும்.

            ‌@இறைவழிகாட்டல்@

நம்முடைய சிறப்பு இயல்புகள் மற்றும் பலவீனங்களை இனம் கண்டு நல்ல இயல்புகளை மேலும் மெருகூட்டிக் கொள்ளவும். பலவீனங்களை களையவும் இறைவனின் வழிகாட்டுதல் இன்றியமையாதது. அத்தகைய வழிகாட்டல்கள் பின்வருமாறு:

01.கல்வி

"ஓதுவீராக! (நபியே!) படைத்த உம் இறைவனின் திருப்பெயர்கொண்டு!" (96:01)

"அளவிலாக் கருணையுள்ள (இறை)வன் இந்தக் குர்ஆனைக் கற்றுத்தந்தான். அவனே மனிதனைப் படைத்தான், அவனுக்குப் பேசக் கற்றுக் கொடுத்தான்"(55:1-4)

எழுத்தறிவித்தவன் இறைவனே! ஒன்றும் அறியாத மனிதனுக்கு கற்றுக் கொடுத்தவன் இறைவனே. படைப்பது மட்டுமின்றி பாதுகாப்பது, வழிகாட்டுவதும் இறைவனின் பண்பாகும். அவன் அர்ரஹ்மான். இறைவனின் பண்புகளிலேயே உயர்ந்த பண்பு அவன் கருணையாளன் என்பதே!

"பின்னர் அல்லாஹ் எல்லாப் பொருட்களின் பெயர்களையும் ஆதத்துக்கு கற்றுக் கொடுத்தான்." (02:31)

மலக்குமார்களிடம் அல்லாஹ் எனக்கு இந்த பொருட்களின் பெயர்களை அறிவியுங்கள் என்று வினவியபோது இறைவா நீ எங்களுக்கு கற்று தந்ததை தவிர எங்களுக்கு எதுவும் தெரியாது என்று பதில் கூறினார்கள். மலக்குமார்களின் முன்னிலையில் ஆதம்(அலை) அவர்களுக்கு கல்வியை வழங்கி அதன் மூலம் கண்ணியப்படுத்தினான்.

"அறிந்தோரும் அறியாதவர்களும் சமம் ஆவார்களா?"(39:09) என்று அல்லாஹ் வினா எழுப்புவதன் மூலம் கல்வியின் சிறப்பு உணர்த்தப்படுகிறது.

உலகக் கல்வி மட்டும் அன்றி மார்க்க கல்வியும் நாம் அறிந்து வைத்துக்கொள்ள வேண்டும். குர்ஆன் மற்றும் ஹதீஸ் ஒளியில் நமது அறிவை நாம் மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.

கல்வியில் உறுதிப்பாடு உடையவர்கள் இவையனைத்தும் எங்கள் இறைவனிடம் இருந்து வந்தவை தான். நாங்கள் அதை நம்பிக்கை கொள்கிறோம் என்று கூறுவார்கள்.

"அறிவுடையோரைத் தவிர மற்றவர்கள் இதைக் கொண்டு நல்லுபதேசம் பெற மாட்டார்கள்." (03:07)

மேலும் அல்லாஹ் நம்மை கல்வி ஞானத்தை அதிகப்படுத்திக் கொள்ள இறைஞ்சுமாறு சொல்லித் தருகின்றான்.

"என் இறைவனே எனக்கு அதிகமான ஞானத்தை வழங்குவாயாக! என்றும் இறைஞ்சுவீராக!"(20:114)

"உண்மையில் இது ஞானம் வழங்கப்பட்டோரின் உள்ளங்களில் தெளிவான சான்றுகளாய்த் திகழ்கின்றது."(29:49)

"உங்களில் எவர்கள் இறைநம்பிக்கை கொண்டிருக்கின்றீர்களே, மேலும், எவர்களுக்கு ஞானம் வழங்கப் பட்டிருக்கின்றதோ அவர்களுக்கு அல்லாஹ் உயர்ந்த பதவிகளை வழங்குவான்." (58:11)

எப்பேர்பட்ட வாக்குறுதி கல்வியறிவு பெற்ற மனிதர்களுக்கு அல்லாஹ் தருகின்றான் என்பதை மேற்காணும் வசனம் தெளிவாக உணர்த்துகின்றது.

02. இறையச்சம்

நபி(ஸல்) அவர்கள் இறையச்சம் இங்கு இருக்கிறது என்று கூறியவர்களாக தங்களின் நெஞ்சைத் சுட்டிக் காட்டி மூன்று முறை கூறினார்கள்.

இறையச்சம்(தக்வா) என்பது புறத் தோற்றத்தில் வெளிப்படக்கூடியது அல்ல. உடையோ, தோற்றமோ, பேச்சோ இறையச்சத்தை வெளிப்படுத்திவிடும் அளவுகோல்கள் அல்ல. மாறாக, அது உள்ளம் சார்ந்தது.

அல்லாஹ் கூறுகிறான், "திண்ணமாக வெற்றி பெற்றுவிட்டான், மனதைத் தூய்மைப் படுத்தியவன். மேலும் தோற்று விட்டான் அதனை நசுக்கியவன்." (91:9-10)

நமக்கு இறைவன் தந்த உள்ளுணர்வுகளுக்கு மதிப்பளித்து பாவமான, நன்மை ஏதும் தராத பயனற்ற கல்வி, வேலை, பேச்சு இவற்றிலிருந்து முற்றிலும் விலகி விட வேண்டும். மாறாக, மனஇச்சைக்கு மதிப்பளித்து மனம் போன போக்கில் செயல்பட்டால் அவன் தன்மனதினை நசுக்கிய பாவியாவான். ஷைத்தானின் கூட்டாளியாகவும் மாறிப் போவான்.

03. உளத்தூய்மையும், இறை நினைவும்

இரண்டும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையது. இறைநினைவு கொண்ட உள்ளம் தூய்மை பெறும். தூய்மையான உள்ளம் இறைநினைவில் திளைத்து இருக்கும்.

"நிச்சயமாக வெற்றி அடைந்துவிட்டார், தூய்மையை மேற்கொண்டு மேலும், தன் இறைவனின் பெயரை நினைவுகூர்ந்து தொழுகையை நிறைவேற்றியவர். ஆனால், நீங்கள் இம்மை வாழ்விற்கே முன்னுரிமை அளிக்கின்றீர்கள். உண்மையில், மறுமையே மிகவும் மேலானதாகவும், நிலைத்து நிற்கக்கூடியதாகவும் இருக்கின்றது. நிச்சயமாக இதே விஷயம் முன்னர் அருளப்பட்ட வேதங்களிலும் சொல்ப்பட்டிருந்தது. இப்ராஹீம், மூஸாவுடைய வேதங்களில்!" (87:14-19)

தொன்று தொட்டு வரக்கூடிய வெற்றியின் பாதையை அல்லாஹ் மேற்கண்ட வசனத்தில் கூறுகின்றான். இறைநினைவில் திளைக்கும் உள்ளம் காரணமாக மனிதனின் பலவீனங்கள் குறையும். அவனது நற்குணங்கள் பொலிவு பெறும்.

அண்ணல் நபி(ஸல்) கூறினார்கள்: "இறைவனை நினைவு கூறுபவனின் உள்ளம் உயிருள்ள மனிதனுக்கும், நினைவு கூறாதவனின் உள்ளம் உயிரற்ற பிணத்துக்கும் சமமாகும்." (புகாரி) அறிவிப்பாளர்: அபூமூஸா(ரலி)

நாம் உயிருள்ள மனிதனாக திகழ இறைநினைவுடைய உள்ளத்துடன் வாழ வேண்டும். இறைவனை நினைவு கூர்வதற்கு என தனியாக ஓர் இடம், நேரம் தேவையில்லை. என்றும் இறை தியானம், இறை நினைவில் நாம் ஈடுபட முடியும். திருக்குர்ஆன் - ஓர் திக்ர். ஓர் நினைவூட்டல். அதனை நாம் அனுதினமும் பொருள் புரிந்து ஓதி வர வேண்டும். புரிந்த விசயங்களை வாழ்வில் செயல் படுத்தவும் வேண்டும். காலை எழுந்தது முதல் இரவு தூங்கும் வரையில் அன்றாடம் நாம் ஓதுகின்ற துஆக்களும் திக்ர் தான்.

இரண்டு கலிமாக்கள் இருக்கின்றது. சொல்வதற்கு எளிதானது, அர்ரஹ்மானுக்கு உவப்பானது. மிஸானில் கனமானது. அந்த திக்ர் "சுப்ஹானல்லாஹி வபிஹம்திகி சுப்ஹானல்லாஹில் அளிம்". உணவு உண்ட பின் "அல்ஹம்துலில்லாஹ்" எனது எந்த முயற்சியும் இன்றி இறைவனே எனக்கு அந்த உணவை வழங்கினான் என்று கூறுவது. இதன் மூலம் கடந்த கால பாவங்கள் மன்னிக்கப் படுகின்றன.

அல்லாஹ்வின் கட்டளைகளை வாழ்வில் நடைமுறைப்படுத்துவதுதான் மிக முக்கியமான திக்ர். அல்லாஹ்வை நாம் நினைவு கூறும் போது அல்லாஹ்வும் நம்மை நினைவு கூறுவான் இறைவனின் அருள் கொடைகளுக்கு நாம் நன்றி செலுத்தினால் அல்லாஹ் மகிழ்ச்சி அடைகிறான்.

04. தொழுகை:

அல்லாஹ் எல்லா அமல்களையும் பூமியில் வைத்துக் கடமையாக்கினான். தொழுகையை தவிர. நபி(ஸல்) அவர்களின் விண்ணுலக பயணம்(மிஃராஜ்) மூலமாக அல்லாஹ் கொடுத்த பரிசு தொழுகை. அல்லாஹ்வுடன் அடியான் நேரடியாக பேசுவது தொழுகையில்தான்.

"உங்களில் ஒருவருடைய வீட்டு வாயிலின் அருகில் ஆறு ஒன்று ஓடுகிறது என வைத்துக் கொள்வோம். அதில் அவர் ஒவ்வொரு நாளும் ஐவேளை குளித்து வந்தாரென்றால், அவருடைய உடலில் சிறிதளவாயினும் அழுக்கு எஞ்சியிருக்குமா?" என பெருமானார்(ஸல்) அவர்கள் தம் தோழர்களிடம் வினவினார்கள்.

அதற்குத் தோழர்கள், 'இல்லை! அவருடைய உடலில் சிறிதளவும் அழுக்கு இராது" என்றார்கள். 'இது போன்றுதான் ஐவேளைத் தொழுகையும்! அல்லாஹ் இத்தொழுகைகளின் மூலம் பாவக்கறைகளைப் போக்குகின்றான்" என்று பெருமானார்(ஸல்) அவர்கள் அருளினார்கள். (புகாரி, முஸ்லிம்) அறிவிப்பாளர்: அபூஹுரைரா(ரலி)

பெருமானார்(ஸல்) அவர்கள் இந்த ஹதீஸின் மூலம், தொழுகை மனிதனின் பாவங்கள் மன்னிக்கப்படுவதற்கான சிறந்த சாதனம் எனும் பேருண்மையினைத் தெளிவுபட விளக்கியுள்ளார்கள். இதனை ஓர் எடுத்துக்காட்டின் மூலம் உணர்த்துகிறார்கள்: தொழுவதினால் ஒருவனின் உள்ளத்தில் நன்றியுணர்ச்சி பெருக்கெடுத்து ஓடுகிறது. அதன் பயனாக இறைவனுக்கு அடிபணிந்து வாழ வேண்டிய பாதையில் சிறப்பாக முன்னேறிச் சென்றவண்ணம் இருக்கின்றான். இறைவனுக்கு கீழ்ப்படியாமை, மாறுசெய்தல் ஆகியவற்றிலிருந்து அவன் தூர விலகிக்கொண்டே செல்கிறான்.

உடல் நலம் குறைந்த நிலையிலும் நபி(ஸல்) அவர்கள் தொழுகையை விட்டதில்லை. தண்ணீர் இல்லையானாலும் தயம்மும் செய்தாவது தொழுகையை நிறைவேற்ற மார்க்கம் கட்டளை இடுகின்றது. போர் போன்ற ஆபத்தான சூழலில் கூட தொழுகையினை இறை அடியார்கள் எவ்வாறு நிறைவேற்ற வேண்டும் என்றும் திருக்குர்ஆன் நமக்குச் சொல்லித் தருகின்றது. எனவே இவ்வாறாக வலியுறுத்தப்பட்ட கடமையான தொழுகையை நாம் பொடுபோக்காக நிறைவேற்றாமல், உள்ளச்சத்தோடு நிறைவேற்றுவதன் மூலம் முழுமையான பயன்களை பெற முடியும். ஏனெனில் அவ்வாறான தொழுகைதான் நம்மை மாற்றக் கூடியதாக இருக்கும்.

"மேலும் தொழுகையை நிலைநிறுத்துவீராக திண்ணமாக தொழுகை மானக்கேடான மற்றும் தீய செயல்களை தடுக்கின்றது." (29:45)

என்கின்ற இறை வாக்கினை நாம் நினைவில் கொள்ள வேண்டும். தொழுகை நமது செயல்களில் மாற்றம் ஏற்படுத்தி உள்ளதா? என்பதை நாம் சுய ஆய்வு செய்யவும் வேண்டும்.

05. மறுமைக்கு முன்னுரிமை

"இம்மை வாழ்வுக்கு நீங்கள் முக்கியத்துவம் கொடுக்கின்றீர்கள். ஆனால் மறுமை வாழ்வே மிக மேலானதாகவும், நிலையானதாகவும் இருக்கின்றது."(87:18)

எனவே நாம் மறுமை வாழ்வுக்கு முன்னுரிமை தர வேண்டும். அதுவே நிலையான வாழ்வு. மேலான வாழ்வு. நிலையற்ற, அழிந்து போகிற, சொற்ப கால இம்மை வாழ்வுக்கு முன்னுரிமை தருவது ஓர் இறை விசுவாசியின் பண்பு அல்ல. இம்மை வாழ்வை மறுமை வெற்றிக்கான களமாக நாம் கருதி செயல்பட்டால், ஈருலக நன்மையையும் பெறலாம். இதை உணராவிட்டால் மனிதன் நஷ்டவாளியே.

"காலத்தின் மீது சத்தியமாக! மனிதன் உண்மையில் நஷ்டத்தில் இருக்கின்றான். ஆனால், எவர்கள் இறைநம்பிக்கைக் கொண்டும், நற்செயல்கள் புரிந்து கொண்டும் மேலும், ஒருவருக்கொருவர் சத்தியத்தை எடுத்துரைத்தும் பொறுமையை கடைபிடிக்குமாறு அறிவுரை கூறிக்கொண்டும் இருந்தார்களோ அவர்களைத் தவிர!" (103:1-3)

இந்த வசனத்தில் அல்லாஹ் நஷ்டத்தில் இருக்கும் மனிதனைப் பற்றி கூறுகிறான். என்னென்ன தன்மைகள் அவனிடத்தில் இல்லை என்றால் அவன் நஷ்டவாளி என்று விளக்கம் தருகின்றான்.

தனிப்பட்ட வாழ்வில் நாம் மேற்கொள்ள வேண்டிய இரண்டு பண்புகளை அல்லாஹ் முதலில் கூறுகின்றான். ஈமானுடன் வாழ வேண்டும். மேலும் நல்அமல்கள் செய்யவேண்டும். அடுத்து அழைப்புப் பணியின் சிறப்பை அல்லாஹ் எடுத்துரைக்கின்றான். ஒருவருக்கொருவர் சத்தியத்தை எடுத்துரைப்பது, மற்றும் பொறுமையைக் கடைப்பிடிக்குமாறு அறிவுரைக் கூறுவது ஆகிய இந்த இரண்டு பண்புகளும் கூட்டுவாழ்க்கையின் பாற்பட்டது. கூட்டமைப்பின் மூலம் இந்த இரண்டு பணிகளையும் செவ்வெனே செய்யமுடியும். முஸ்லிம்களாகிய நாம், கூட்டமைப்பு ரீதியில் அழைப்புப் பணி செய்வதையும், அதன் முறைமைகளையும் அறிந்து பணியாற்றிட முடியும். அதன் மூலம் இறை திருப்தி, மறுமை வெற்றி ஆகிய இலக்குகளை அடைய முடியும். அல்லாஹ்வின் வாக்கின்படி நஷ்டத்தில் இல்லாத மனிதனாக மாறவும் முடியும். இறை வழிகாட்டுதலின் படியும், நபி(ஸல்) அவர்களின் வழிமுறைகளின்படியும் வாழக்கூடிய மக்களாகவும், நமது இயல்புகளை உணர்ந்து, பலவீனங்களை களைந்து வாழும் மக்களாகவும் எல்லாம் வல்ல இறைவன் நம் அனைவரையும் ஆக்கி அருள் புரிவானாக! ஆமீன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

1.கணவனைக் கவரும் வழிகள் 40

மண்ணறை வேதனை 001

எட்டு விதமான சொர்க்கங்கள்