மேற்கத்திய கலாச்சாரத்தில் நம் சமூகம்
لَقَدْ كَانَ لَكُمْ فِي رَسُولِ اللَّهِ أُسْوَةٌ حَسَنَةٌ لِّمَن كَانَ يَرْجُو اللَّهَ وَالْيَوْمَ الْآخِرَ وَذَكَرَ اللَّهَ كَثِيرًا
“அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பி, அல்லாஹ்வை அதிகமாக நினைவுகூருகிறவர்களுக்கு அல்லாஹ்வின் தூதரிடம் அழகிய முன்மாதிரி இருக்கிறது.”33:21
وَلَن تَرْضَىٰ عَنكَ الْيَهُودُ وَلَا النَّصَارَىٰ حَتَّىٰ تَتَّبِعَ مِلَّتَهُمْ ۗ قُلْ إِنَّ هُدَى اللَّهِ هُوَ الْهُدَىٰ
“யூதர்களும் கிறிஸ்தவர்களும் அவர்களுடைய மார்க்கத்தை நீ பின்பற்றும் வரை உன்னைப் பற்றி திருப்தியடைய மாட்டார்கள். ‘நிச்சயமாக அல்லாஹ்வின் வழிகாட்டுதலே உண்மையான வழிகாட்டுதல்’ என்று கூறுவீராக.” 2:120
ثُمَّ جَعَلْنَاكَ عَلَىٰ شَرِيعَةٍ مِّنَ الْأَمْرِ فَاتَّبِعْهَا وَلَا تَتَّبِعْ أَهْوَاءَ الَّذِينَ لَا يَعْلَمُونَ
“பின்னர் உம்மை மார்க்கத்தின் ஒரு தெளிவான பாதையில் அமைத்தோம். எனவே அதைப் பின்பற்றுவீராக; அறிவில்லாதவர்களின் மனோ இச்சைகளைப் பின்பற்றாதீர்.”45:18
ஹதீஸ்கள்
4. நபி ﷺ கூறினார்கள்:
مَنْ تَشَبَّهَ بِقَوْمٍ فَهُوَ مِنْهُمْ
“யார் ஒரு கூட்டத்தினரைப் போன்று நடக்கிறாரோ, அவர் அவர்களில் ஒருவராவார்.”
— ஸுனன் அபூ தாவூத், 4031
5. நபி ﷺ கூறினார்கள்:
إِنَّ الْإِسْلَامَ بَدَأَ غَرِيبًا وَسَيَعُودُ غَرِيبًا كَمَا بَدَأَ، فَطُوبَى لِلْغُرَبَاءِ
“இஸ்லாம் அந்நியமாகத் தொடங்கியது; அது தொடங்கியதைப் போன்றே மீண்டும் அந்நியமாகிவிடும். எனவே அந்நியர்களுக்கு நற்செய்தி.”
— ஸஹீஹ் முஸ்லிம், 145
6. நபி ﷺ கூறினார்கள்:
كُلُّ أُمَّتِي يَدْخُلُونَ الْجَنَّةَ إِلَّا مَنْ أَبَى... مَنْ أَطَاعَنِي دَخَلَ الْجَنَّةَ، وَمَنْ عَصَانِي فَقَدْ أَبَى
“என் சமுதாயத்தினர் அனைவரும் சொர்க்கத்தில் நுழைவார்கள்; மறுப்பவரைத் தவிர... என்னைப் பின்பற்றுபவர் சொர்க்கத்தில் நுழைவார்; எனக்கு மாறு செய்பவர் மறுத்தவராவார்.”
— ஸஹீஹுல் புகாரி, 7280
என் நெஞ்சுக்கு நெருக்கமான சகோதரர்களே, நாளைய சமுதாயத்தை வழிநடத்தக் காத்திருக்கும் பாசமிகு இளம்
தோழர்களே!
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு.
முன்னுரை & தற்கால
சூழல்:
இன்று காலையில் நாம் கண் விழித்த வினாடியிலிருந்து
இரவு படுக்கைக்குச் செல்லும் வரை நமது உலகம் எங்கே சுழல்கிறது? நமது விரல் நுனியில் உள்ள ஸ்மார்ட்போனில்! இன்ஸ்டாகிராம்,
நெட்ஃபிளிக்ஸ், யூடியூப் ரீல்ஸ்கள் என 24
மணி நேரமும் நம் சிந்தனையை யாரோ ஒருவர் தீர்மானிக்கிறார். நாம்
இருப்பது தமிழகத்தின் ஏதோ ஒரு மூலையாக இருக்கலாம்; ஆனால் நம்
உள்ளத்திலும் மூளையிலும் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸிலும் ஐரோப்பியத்
தெருக்களிலும் உற்பத்தி செய்யப்படும் சிந்தனைகளும் கலாச்சாரங்களுமே ஆட்சி
செய்கின்றன.
இன்று நாம் பேச வந்திருப்பது "மேற்கத்திய கலாச்சாரம்" பற்றி.
நாம் ஒரு தெளிவான அடிப்படையோடு ஆரம்பிக்க வேண்டும்:
அறிவியல் முன்னேற்றம், தொழில்நுட்பம், மருத்துவ ஆய்வுகள், பொது இடங்களில் நேரம் தவறாமை (Punctuality)
போன்ற நல்ல ஒழுக்கங்களுக்கு இஸ்லாம் எதிரானதல்ல. "ஞானம் என்பது
இறைநம்பிக்கையாளனின் காணாமல் போன சொத்து; அது எங்கு
கிடைத்தாலும் அதை எடுத்துக்கொள்ள அவனுக்கே உரிமை உண்டு" என்பது நபிமொழி.
ஆனால், நாம்
விழிப்போடு எச்சரிக்கையாக இருக்க வேண்டியது—நவீன நாகரிகம் என்ற போர்வையில் நம்
வீடுகளுக்குள் திணிக்கப்படும் தார்மீகச் சீரழிவு, குடும்ப
அமைப்பை உடைக்கும் தத்துவங்கள், வெட்கமின்மை மற்றும் ஆன்மிக
வறட்சியைத்தான்.
நபிகள் நாயகம் (ஸல்) 1400 ஆண்டுகளுக்கு முன்பே எச்சரித்த வார்த்தைகள் இன்று நம்
கண்முன்னே அச்சுப்பிசகாமல் பலித்துக்கொண்டிருக்கின்றன:
"உங்களுக்கு முன்னிருந்தவர்களின்
வழிமுறைகளை நீங்கள் ஜானுக்கு ஜான், முழத்திற்கு முழம்
பின்பற்றுவீர்கள். எந்தளவுக்கு என்றால், அவர்கள் ஓர்
உடும்புப் பொந்துக்குள் நுழைந்தால்கூட நீங்களும் அவர்களைப் பின்பற்றி
நுழைவீர்கள்."
தோழர்கள் கேட்டார்கள்: "அல்லாஹ்வின் தூதரே! யூதர்களையும் கிறிஸ்தவர்களையுமா
குறிப்பிடுகிறீர்கள்?"
நபியவர்கள் கூறினார்கள்: "அவர்களைத் தவிர வேறு யாரை?"
(ஆதாரம்: ஸஹீஹ் புகாரி: 7320, ஸஹீஹ் முஸ்லிம்: 2669).
உடும்புப் பொந்து என்பது வளைந்து, நெளிந்து, இருண்டு, ஆபத்துகள் நிறைந்த ஒரு குறுகிய பொந்து. மேற்கத்திய உலகம் ஆன்மிக
ரீதியாகவும் குடும்ப அமைப்பிலும் சிக்கித் தவிக்கும் அதே இருண்ட படுகுழியை நோக்கி,
நம் இளைஞர்களும் கண்மூடித்தனமாக ஓடிக்கொண்டிருக்கிறார்கள்.
பகுதி 2: அரசியல் வீழ்ச்சியின் வரலாறு – ஸ்பெயினும் கலாச்சாரப் போரும்
அன்புச் சகோதரர்களே! முஸ்லிம்களுக்கென்று இருந்த
உலகளாவிய தலைமை (கிலாஃபத்) வீழ்ந்ததற்கே அடிப்படைக் காரணம் ஆயுதப் போர்கள் அல்ல; இந்த கலாச்சார ஊடுருவல்தான் என்பதை நாம் உணர வேண்டும்.
உமர் (ரலி) அவர்களின் காலத்தில் உலகின் பெரும்
பகுதிகள் இஸ்லாமிய ஆளுமையின் கீழ் வந்தன. சுமார் ஆயிரம் ஆண்டுகள் அந்தப் பேரரசு
உலகில் நீடித்தது. இஸ்லாமியப் படைகளை வாளாலும் பீரங்கியாலும் வீழ்த்த முடியாது
என்பதை உணர்ந்த ஆங்கிலேயர்களும் மேற்கத்தியர்களும் ஒரு நயவஞ்சகத் திட்டத்தைத்
தீட்டினார்கள். முஸ்லிம் நாடுகளின் இளம் தலைமுறையினரின் உள்ளத்தில் மேற்கத்திய
கலாச்சாரத்தை நஞ்சாகப் புகுத்தி, அவர்களை
குர்ஆனை விட்டும் மார்க்கப் பண்புகளை விட்டும் தூரமாக்கினார்கள்.
ஸ்பெயினின் வீழ்ச்சி நமக்குச் சொல்லும் வரலாற்றுப்
பாடம்:
ஸ்பெயினில் (அந்தலூசியாவில்) 800 ஆண்டுகள் நீடித்த இஸ்லாமிய ஆட்சியை எதிரிகள் வீழ்த்த
நினைத்தபோது, அங்குள்ள முஸ்லிம்களின் ஈமானிய வலிமையை அறிய
இரண்டு வெவ்வேறு காலகட்டங்களில் ஒற்றர்களை அனுப்பினார்கள்:
1.
முதல் முறை வந்த ஒற்றன் கண்ட
காட்சி:
சுமார் 15 வயதுள்ள ஓர் இளம் சிறுவன் அழுதுகொண்டிருந்தான். ஒற்றன்
அவனிடம் சென்று, "ஏன் அழுகிறாய் தம்பி?" என்று கேட்டான். அதற்கு அந்தச் சிறுவன், "நான்
குர்ஆனில் 25 ஜுஸ்வுகள்தான் மனனம் செய்துள்ளேன்; முழு குர்ஆனையும் மனனம் செய்து முடிக்காமல் என்னை எதிரிகளுடன் போர் புரிய
என் தாய் அனுமதிக்க மாட்டேன் என்கிறார். அதனால் அழுகிறேன்" என்றான். ஒற்றன்
நடுநடுங்கிப் போய் தலைமையிடம் ஓடினான்: "முஸ்லிம்கள்
தங்கள் வேதத்தோடு இரும்பு போல் உறுதியாகப் பிணைக்கப்பட்டுள்ளார்கள். இவர்களை இந்த
ஜென்மத்தில் வீழ்த்த முடியாது."
2.
சில ஆண்டுகளுக்குப் பின் அதே
பகுதிக்கு வந்த ஒற்றன் கண்ட காட்சி:
அதே ஊரில் மற்றொரு வாலிபன்
அழுதுகொண்டிருந்தான். காரணம் கேட்டபோது, "நான் ஒரு
பெண்ணைக் காதலித்தேன், என் ஆசை நிறைவேறவில்லை; அவள் என்னை விட்டுப் பிரிந்துவிட்டாள். அதனால் அழுகிறேன்" என்றான்.
ஒற்றன் தலைமையிடம் தகவல் அனுப்பினான்: "இப்போது
படையெடுங்கள்! முஸ்லிம்கள் குர்ஆனை விட்டுவிட்டு, மோகத்திலும்
பெண்களின் பின்னும் அலையத் தொடங்கிவிட்டார்கள்!" போரிட்டார்கள்; 800 ஆண்டுகள் கோலோச்சிய அந்தலூசியாவில் ஒரு முஸ்லிம் கூட இல்லாத அளவுக்குத்
துடைத்தெறிந்தார்கள்.
இன்று நம்மை நாம் சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும்:
நமது இளைஞர்கள் இன்று எதற்காக அழுகிறார்கள்? குர்ஆனுக்காகவா?
தொழுகை தவறிவிட்டதே என்பதற்காகவா? அல்லது
திரைப்பட நடிகைகளுக்காகவும், காதல் தோல்விகளுக்காகவும்,
ரீல்ஸ்களில் லைக்ஸ் வரவில்லையே என்பதற்காகவுமா?
பகுதி 3: மேற்கத்திய கலாச்சாரத்தின் மூன்று விஷ வேர்கள்
மேற்கத்திய சிந்தனையை வழிநடத்தும் மூன்று முக்கிய
தத்துவங்கள் இஸ்லாமிய அகீதாவுடன் (ஈமானுடன்) எங்கு மோதுகின்றன என்பதைப் பாருங்கள்:
1. "My Life, My Rules"
(சுயநலம் & வரம்பற்ற சுதந்திரம்):
மேற்குலகம் இளைஞர்களுக்குப் போதிக்கும் முதல் பாடம்: "உனக்கு எது பிடித்திருக்கிறதோ அதைச் செய். உன் உடம்பு,
உன் வாழ்க்கை; இதில் கேள்வி கேட்க யாருக்கும்
உரிமை இல்லை."
இதன் விளைவு என்ன? பெற்றோரை
முதியோர் இல்லங்களில் தள்ளுவது; 18 வயது முடிந்ததும் குடும்ப
பந்தங்களை அறுத்துவிட்டுத் தனியாகச் செல்வது.
ஆனால் இஸ்லாம் கூறுகிறது: மனிதன் என்பவன் அடிமை; அவன் அல்லாஹ்வின் கட்டளைக்குக் கட்டுப்பட்டவன்.
"நிச்சயமாக என் தொழுகை, என் தியாகம், என் வாழ்வு, என்
மரணம் யாவும் அகிலங்களின் இரட்சகனாகிய அல்லாஹ்வுக்கே உரியன" (அல்குர்ஆன் 6:162).
2. நுகர்வுக்
கலாச்சாரம் (Materialism & Consumerism):
பணம், பிராண்டட்
உடைகள், ஆடம்பரக் கார்கள், விலையுயர்ந்த
ஸ்மார்ட்போன்கள்—இவைதான் ஒரு மனிதனின் மதிப்பீடு என்று நம்பவைக்கும் மாயை. ஒரு
புதிய போன் சந்தைக்கு வந்தால், பழையது நன்றாக இயங்கினாலும்
கடன் வாங்கியாவது அதை வாங்குவது.
உமர் (ரலி) அவர்களின் ஆட்சியில், ஒரு மனிதர் இறைச்சியைத் தூக்கிக்கொண்டு சென்றபோது, "இது என்ன?" என்று கேட்டார்கள். "எனக்கு ஆசையாக இருந்தது, வாங்கினேன்" என்றார்
அவர். அதற்கு உமர் (ரலி) கோபத்துடன் கேட்டார்கள்: "உனக்கு
ஆசை வரும்போதெல்லாம் நீ வாங்கிக்கொண்டே இருப்பாயா? பேராசையால்
அழிந்துபோன சமூகங்களைப் பற்றி அல்குர்ஆன் சொல்வதை மறந்துவிட்டாயா?"
"பேராசையும் பெருமையும் உங்களைப்
பராமுகத்தில் ஆக்கிவிட்டது; நீங்கள் மண்ணறைகளைச் சந்திக்கும்
வரை" (அல்குர்ஆன் 102:1-2).
3. ஹெடனிசம் (Hedonism)
– "You Only Live Once" (YOLO):
"வாழ்க்கை ஒரு முறைதான், அனுபவித்துவிடு; போதையோ, கள்ள
உறவோ எதுவானாலும் பரவாயில்லை" என்ற மனநிலை. உலகிலேயே அதிக தற்கொலைகளும்,
விவாகரத்துகளும், கடுமையான மன அழுத்தங்களும்
மேற்கத்திய நாடுகளில்தான் அதிகம் உள்ளன. இன்பத்தைத் துரத்தி ஓடி, இறுதியில் மனிதன் நிம்மதியை இழந்து நிற்கிறான்.
பகுதி 4: அன்றாட வாழ்வில் மேற்கத்திய கலாச்சாரம் – ஆடை, அழகு & உடற்கோலம்
நம்முடைய வீடுகளிலும் சமூகத்திலும் இளைஞர்களிடம்
ஊடுருவியுள்ள அன்றாடச் சீரழிவுகளை இப்போது பார்ப்போம்:
1. ஆடை
கலாச்சாரம் & அவ்ரத் அலட்சியம்:
- முழங்காலுக்கு மேல் இருக்கும் அரைக்கால் சட்டைகளுடன் (Shorts) வீதிகளில் வலம் வருவது
சாதாரணமாகிவிட்டது.
- பள்ளிவாசலுக்குத் தொழுகைக்கு வரும் இளைஞர்கள் சிலர்
மிகக் குட்டையான டி-ஷர்ட் அணிந்து வருகிறார்கள். அவர்கள் ருகூவு, ஸஜ்தா செய்யும்போது முதுகின் கீழ்ப்பகுதியும்,
அவ்ரத்தும் அப்பட்டமாக வெளியே தெரிகிறது. இதனால் அவர்களின் தொழுகையே
கூடாது (பாழாகிவிடும்) என்பதைக்கூட அவர்கள் அறிவதில்லை.
- கிழிந்த பேண்ட் (Ripped Jeans) போடுவதை நாகரிகம் என நினைக்கிறார்கள். ஏழைகள் கிழிந்த ஆடை அணிந்தால்
வறுமை; மேலைநாட்டான் கிழித்து விற்றால் அது ஃபேஷனா?
அல்லாஹ் கூறுகிறான்:
يَا بَنِي آدَمَ خُذُوا زِينَتَكُمْ عِنْدَ كُلِّ مَسْجِدٍ
"ஆதமுடைய மக்களே! ஒவ்வொரு
தொழுகையின் போதும் உங்களுடைய ஆடைகளை (அழகை) அணிந்து கொள்ளுங்கள்" (அல்குர்ஆன் 7:31).
ஆண்களுக்குத் தொப்புள் முதல் முட்டுக்கால் வரை கட்டாயம்
மறைக்கப்பட வேண்டிய பகுதியாகும்.
- மிஸ்வரா (ரலி) சம்பவம்: மிஸ்வரா (ரலி) அவர்கள் ஒரு கனமான கல்லைச் சுமந்து
வந்தார்கள். ஆடை நழுவியது; கல்லை கீழே வைக்க முடியாது என்பதால் ஆடையின்றி நடந்தார்கள்.
நபியவர்கள் கண்டித்து, "முதலில் உமது ஆடையை
எடுத்து உடுத்துவீராக; நிர்வாணமாக நடக்க வேண்டாம்"
என்றார்கள் (முஸ்லிம்).
- ஜுர்ஹுத் (ரலி) சம்பவம்: ஜுர்ஹுத் (ரலி) அவர்களின் தொடை தெரிந்திருந்ததைக்
கண்ட நபியவர்கள், "உமது தொடையை மூடுவீராக!
தொடை என்பது கட்டாயம் மறைக்கப்பட வேண்டிய பகுதி என்பது உமக்குத் தெரியாதா?"
என்றார்கள் (திர்மிதி).
2. தலைமுடி
ஸ்டைலும் நடிகர்களின் வழிகாட்டலும்:
நபிவழியைப் பின்பற்ற வேண்டிய முஸ்லிம் இளைஞர்கள்
சினிமா நடிகர்களையும், மேற்கத்திய கால்பந்து வீரர்களையும்
பின்பற்றி கரடிகளைப் போன்றும் நரிகளைப் போன்றும் தலைமுடிகளை அமைத்துக்
கொள்கிறார்கள் (Fade cut, Mohawk).
- இஸ்லாமிய வழிகாட்டல்: நபி (ஸல்) அவர்கள் தலைமுடியைச் சுத்தமாக, கண்ணியமாகப் பராமரிக்கச் சொன்னார்கள்.
ஒரு மனிதர் தலைமுடியும் தாடியும் கலைந்து வந்தபோது, அவரை
வெளியே அனுப்பி சீர்செய்து வரச் சொன்னார்கள். அவர் சீர்செய்து வந்ததும்,
"உங்களில் ஒருவர் ஷைத்தானைப் போன்று பரட்டைத் தலையுடன்
வருவதை விட இது எவ்வளவு சிறப்பானது!" என்றார்கள் (மாலிக்).
- அபூ கதாதா (ரலி) அவர்களுக்குத் தோள் வரை முடி
(வஃப்ரா/ஜிம்மா) இருந்தது. அதை அழகுபடுத்தி வாரிக்கொள்ள நபியவர்கள்
அனுமதித்தார்கள்.
- ஆனால் எச்சரிக்கை: ஆண்களுக்குப் பெண்கள் போல கிளிப் மாட்டுவதோ, ஜடை போடுவதோ கூடாது. தலைமுடியை சில
இடங்களில் மழித்து சில இடங்களில் மட்டும் நீளமாக வைக்கும் 'கஸஃ' (Qaza) முறையை நபி (ஸல்) தடை செய்தார்கள்.
பெண்கள் தலைமுடியை வெட்டி ஆண்களைப் போல் 'பாப் கட்டிங்'
(Bob Cut) செய்வதும் மார்க்கத்தில் தடுத்து
நிறுத்தப்பட்டுள்ளது.
3. நகைகளும்,
வெள்ளியாலான செயின்களும்:
இன்றைய இளைஞர்கள் மேற்கத்திய பாப் பாடகர்களைப் போல
கழுத்தில் வெள்ளிச் செயின், கைகளில் வெள்ளிப் பிரேஸ்லெட்
அணிகிறார்கள்.
- தெளிவான சட்டம்: ஆண்களுக்கு வெள்ளியால் மோதிரம் அணிய மட்டுமே
சுன்னத்தாக அனுமதி உண்டு. பெண்களுக்குரிய மாலை, செயின், கொலுசு
போன்றவற்றை ஆண்கள் அணிவது பெண்களைப் போல ஒப்பனை செய்வதாகும்; அது முற்றிலும் ஹராம்.
4. உடற்கோலங்களை
மாற்றுதல் (பிளாஸ்டிக் சர்ஜரி & புருவம் திருத்துதல்):
அழகுக்காகப் புருவ முடிகளை மழிப்பது, பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் உடல் உறுப்புகளில் சிறியதைப்
பெரிதாக்குவது, ஆணாக இருப்பவர் பெண்ணாக மாறுவது போன்ற
பைத்தியக்காரத்தனங்கள் மேற்கிலிருந்து பரவுகின்றன.
இதுகுறித்து அல்குர்ஆனில் ஷைத்தான் சவால் விடுகிறான்:
وَلَآمُرَنَّهُمْ فَلَيُغَيِّرُنَّ خَلْقَ اللَّهِ
"இன்னும் அல்லாஹ்வின்
படைப்புகளுடைய கோலங்களை மாற்றும்படியும் நான் அவர்களுக்கு ஏவுவேன்" (அல்குர்ஆன் 4:119).
அல்லாஹ் படைத்த இயற்கை அமைப்பை அனாவசியமாக மாற்றுவது
அப்பட்டமான ஷைத்தானிய வழிகேடு.
பகுதி 5: முஸ்லிம் உலகமும் இறுதிக்கால எச்சரிக்கைகளும்
நபி (ஸல்) அவர்கள் எச்சரித்த மற்றொரு விஷயம்:
لَيَكُونَنَّ مِنْ أُمَّتِي أَقْوَامٌ يَسْتَحِلُّونَ الْحِرَ وَالْحَرِيرَ وَالْخَمْرَ وَالْمَعَازِفَ
"என் உம்மத்தில் சிலர்
தோன்றுவார்கள்; அவர்கள் விபச்சாரத்தையும், பட்டையும் (ஆண்களுக்கு), மதுவையும், இசைக்கருவிகளையும் ஹலாலாக்கி விடுவார்கள்" (புகாரி:
5590).
நாட்டு நடப்புகள்:
இன்று இந்த ஹதீஸ் முஸ்லிம் நாடுகளிலேயே கண்முன்னே
நிகழ்ந்து கொண்டிருக்கிறது.
- வளைகுடா நாடுகளில் கடற்கரைகளிலும் தனியார்
கிளப்புகளிலும் மேற்கத்திய நீச்சல் ஆடைகளும் பிகினிகளும்
அனுமதிக்கப்படுகின்றன.
- சினிமா தியேட்டர்கள், பிரம்மாண்ட இசைக் கச்சேரிகள் திறக்கப்பட்டு வருகின்றன.
இதனை எதிர்க்கும் உண்மையான உலமாக்கள் சிறையில் அடைக்கப்படுகிறார்கள்.
- இந்திய முஸ்லிம்களிடம் இருக்கும் மார்க்கப் பேணுதலும்
ஒழுக்கமும் கூட, பல முஸ்லிம் நாடுகளில்
உள்ளவர்களிடம் இன்று குறைந்து போயுள்ளது.
சிலை வழிபாட்டின் மீளெழுச்சி:
நபி (ஸல்) கூறினார்கள்:
"எனது சமுதாயத்தில் உள்ள சில
கோத்திரத்தினர் இணைவைப்பவர்களுடன் சேராத வரை – அவர்களின் சிலைகளை வணங்காத வரை
மறுமை நாள் ஏற்படாது." (திர்மிதி: 2219).
"தவ்ஸ் குலப் பெண்களின்
புட்டங்கள் 'துல்கலஸா' எனும் சிலையைச்
சுற்றி அசையாத வரை மறுமை நாள் வராது." (புகாரி: 7116).
அறியாமைக் காலத்தில் தகர்க்கப்பட்ட அதே துல்கலஸா சிலை
வழிபாடு மீண்டும் ஒரு காலத்தில் தலைதூக்கும் என்று நபியவர்கள் முன்னறிவித்தார்கள்.
சிலை வழிபாடுகள் அறவே இல்லாத அரபு மண்ணில் இன்று பல புதிய ஆலயங்களும் வழிபாடுகளும்
திறக்கப்படுவதைச் செய்திகளில் பார்க்கிறோம். நாம் யுகமுடிவு காலத்தின் ஆபத்தான
விளிம்பில் நிற்கிறோம்!
பகுதி 6: இளைஞர்களுக்கான செயல்திட்டம்
"இளைஞர்களே! மேற்குலகம் நம்மை
வெறும் நுகர்வோனாக (Consumers) மாற்றி பணத்தையும்
பண்பாட்டையும் பறிக்கப் பார்க்கிறது. ஆனால் இஸ்லாம் நம்மை உலகிற்கே நேர்வழி
காட்டும் தலைவர்களாக மாற்ற அழைக்கிறது. முடிவெடுங்கள்: நுகர்வோனாக அழியப் போகிறோமா?
அல்லது வழிகாட்டும் நாயகர்களாக வாழப் போகிறோமா?"
அன்புத் தோழர்களே! இத்தகைய நச்சு
கலாச்சாரத்திலிருந்து நமது ஈமானை நாம் எப்படிப் பாதுகாக்கப் போகிறோம்?
மேற்கத்திய நச்சு கலாச்சாரத்தின் தாக்கத்திலிருந்து
இன்றைய முஸ்லிம் இளைஞர்களும் இளம் பெண்களும் தங்களைத் தற்காத்துக் கொண்டு, கண்ணியமான முன்மாதிரியாக வாழ்வதற்கு நடைமுறைப்படுத்தக்கூடிய 10
முக்கிய அறிவுரைகள் / செயல் திட்டங்கள்:
1. பார்வையைப்
பேணுதலும் டிஜிட்டல் தூய்மையும் (Digital Detox)
- சோசியல் மீடியா அல்காரிதம்கள் கவர்ச்சியையும்
ஆபாசத்தையுமே அதிகம் முன்னிறுத்துகின்றன. இன்ஸ்டாகிராம் ரீல்ஸ், யூடியூப் ஷார்ட்ஸ் போன்றவற்றில்
தேவையற்ற பக்கங்களை உடனே Unfollow / Block செய்யுங்கள்.
- அல்லாஹ் கூறுகிறான்: "முஃமின்களான ஆண்களுக்கு நீர் கூறுவீராக: அவர்கள்
தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளட்டும்; தங்கள்
வெட்கத்தலங்களைப் பேணிக் காத்துக் கொள்ளட்டும்" (அல்குர்ஆன்
24:30). கைபேசித் திரையிலும் பார்வையைத்
தாழ்த்துவதுதான் ஈமானைப் பாதுகாக்கும் முதல் அரண்.
2. சுன்னத்தான
ஆடைக் கண்ணியத்தைக் கைக்கொள்ளுதல்
- கிழிந்த ஜீன்ஸ் (Ripped Jeans),
அவ்ரத் தெரியக்கூடிய குட்டையான டீ-சர்ட்டுகள், முழங்காலுக்கு மேலே இருக்கும் அரைக்கால் சட்டைகள் போன்றவற்றை
முற்றிலுமாகத் தவிருங்கள்.
- ஆண்களுக்குத் தொப்புள் முதல் முழங்கால் வரை கட்டாயம்
மூடப்பட வேண்டிய பகுதி (அவ்ரத்). தொழுகையிலும் பொது இடங்களிலும் உடலை
மறைக்கும் தளர்வான, கண்ணியமான ஆடைகளை அணிவதை
வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.
3. ஆளுமை
தாழ்வுணர்ச்சியைத் தூக்கி எறிதல் (Embracing Islamic Identity)
- தாடி வைப்பது, தொப்பி அல்லது தலைப்பாகை அணிவது, பெண்கள்
ஹிஜாப்/பர்தா அணிவது போன்றவற்றில் எந்தவிதத் தாழ்வுணர்ச்சியும்
கொள்ளாதீர்கள்.
- நடிகர்கள் அல்லது மேலைநாட்டு விளையாட்டு வீரர்களை ரோல்
மாடலாக ஆக்காமல், நபித்தோழர்களான உமர் (ரலி),
அலி (ரலி), உஸாமா பின் ஸைத் (ரலி) போன்ற
மாவீரர்களின் வரலாறுகளைப் படித்து அவர்களின் கம்பீரத்தை முன்மாதிரியாகக்
கொள்ளுங்கள்.
4. மார்க்க
அறிவைத் தொடர்ந்து வளர்த்துக் கொள்ளுதல் (Ilm)
- கொள்கைக் குழப்பங்கள் (Liberalism, Feminism, Atheism) நிறைந்த காலம் இது. எனவே,
அடிப்படைக் கொள்கையான அகீதா, ஹலால்-ஹராம்
வரம்புகள் மற்றும் குர்ஆனின் தமிழ் விளக்கவுரைகளை வாரம் ஒரு முறையாவது
உலமாக்களிடம் அமர்ந்து கற்றுக் கொள்ளுங்கள்.
- அறிவுதான் ஷைத்தானின் தத்துவார்த்தக்
குழப்பங்களிலிருந்து இளைஞர்களைக் காக்கும் கேடயம்.
5. நேர
மேலாண்மையும் ஆன்லைன் அடிமைத்தனத்திலிருந்து விடுதலையும்
- மணி கணக்கில் வீடியோ கேம்கள் (Gaming) ஆடுவது, வெட்டி
அரட்டைகளில் பொழுதைக் கழிப்பது இளமைப் பருவத்தைக் கரைத்துவிடும்.
- நபி (ஸல்) எச்சரித்தார்கள்: "மனிதர்களில் பெரும்பாலானோர் இரு
அருட்கொடைகளின் விஷயத்தில் ஏமாந்து விடுகிறார்கள்; ஒன்று
ஆரோக்கியம், மற்றொன்று ஓய்வு நேரம்" (புகாரி). உங்கள் தினசரி ஸ்கிரீன் டைமை (Screen Time) குறைத்து, அதை உடற்பயிற்சி அல்லது புதிய
திறன்களை (Skills) வளர்ப்பதில் செலவிடுங்கள்.
6. நட்பைத்
தேர்ந்தெடுப்பதில் கண்டிப்பு (Right Companionship)
- மேற்கத்திய கலாச்சாரத்திற்கு அடிமையான, மார்க்க உணர்வில்லாத நண்பர்களுடன்
அதிகம் பழகுவது மெல்ல மெல்ல அவர்களின் பழக்கங்களை உங்களிடமும் கொண்டுவந்து
சேர்க்கும்.
- தொழுகையை நினைவூட்டும், நற்குணங்களை வளர்க்கும் நல்ல நண்பர்களின் வட்டத்தை
உருவாக்கிக் கொள்ளுங்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறிய அத்தர்
வியாபாரியின் உவமையை எப்போதும் மனதில் வையுங்கள்.
7. திருமணத்தை
எளிதாக்கி விரைவுபடுத்துதல்
- விபச்சாரமும் கள்ளக்காதலும் எளிதாக்கப்பட்டுவிட்ட
இந்நாட்களில், கற்பைப் பாதுகாக்கும் ஒரே
கேடயம் திருமணம்தான்.
- ஆடம்பர வரதட்சணை, பிரம்மாண்ட மண்டபம், போட்டோஷூட் போன்ற
மேற்கத்திய ஆடம்பரங்களைத் தவிர்த்து, எளிய முறையில்
சுன்னத்தான திருமணங்களை உரிய வயதில் செய்து கொள்ள இளைஞர்களும்
குடும்பத்தாரும் துணிய வேண்டும்.
8. உடலையும்
உள்ளத்தையும் வலிமையாக்குதல் (Fitness & Martial Arts)
- பலவீனமான இளைஞர்களைத்தான் நச்சுப் பழக்கங்கள் எளிதில்
ஈர்க்கும். ஜிம், நீச்சல், தற்காப்புக்
கலைகள், ஓட்டப்பயிற்சி போன்ற உடற்பயிற்சிகளில்
ஈடுபடுங்கள்.
- நபி (ஸல்) கூறினார்கள்: "பலவீனமான இறைநம்பிக்கையாளரை விட,
பலமுள்ள இறைநம்பிக்கையாளரே அல்லாஹ்வுக்கு மிகவும்
விருப்பமானவர்" (முஸ்லிம்). உடல் உழைப்பு வீணான
பாலியல் சிந்தனைகளையும் சோம்பேறித்தனத்தையும் விரட்டும்.
9. பொருளாதார
தன்னிறைவும் ஹலாலான வருமானமும்
- மேற்கத்திய மோகத்தால் வரும் ஈ.எம்.ஐ (EMI), கிரெடிட் கார்டு கடன்கள் மற்றும்
வட்டி சார்ந்த ஆடம்பர நுகர்வைத் தவிருங்கள்.
- ஆடம்பரப் பொருட்களுக்காகக் கடன் வாங்காமல், எளிமையான வாழ்க்கையை அமைத்துக் கொண்டு
சுயதொழில், நவீன கணினித் துறைகள் போன்றவற்றில்
நேர்மையான வழியில் முன்னேறத் திட்டமிடுங்கள்.
10. ஜமாஅத்
தொழுகையும் தினசரி குர்ஆன் தொடர்பும்
- ஐவேளைத் தொழுகையை, குறிப்பாக ஃபஜ்ர் மற்றும் இஷா தொழுகைகளைப் பள்ளிவாசலில் ஜமாஅத்தோடு
நிறைவேற்றுவதை ஒருபோதும் கைவிடாதீர்கள்.
- தினமும் குறைந்தது 10 நிமிடங்களாவது அல்குர்ஆனைப் பொருளுணர்ந்து ஓதுங்கள்.
ஸ்பெயின் வீழ்ச்சி நமக்குக் கற்பித்த பாடம்: குர்ஆனோடு பிணைப்பு இருக்கும்
வரைதான் முஸ்லிம் இளைஞனுக்கு பாதுகாப்பு!
கருத்துகள்
கருத்துரையிடுக