இரத்த உறவுகளைப் பேணுவதற்கான 13 வழிகள்
"தகவல் தொடர்புகள் பெருகிவிட்டன, ஆனால் உறவுகளின் பிணைப்பு குறைந்துவிட்டது" – இது மதீனாவைச் சேர்ந்த முதியவரான டாக்ஸி டிரைவர் "ஸஅத்" கூறிய வார்த்தை.
ஒரு நண்பகல் வேளையில் நான் அவருடன் பயணித்தபோது, ஏசியை (AC) போடுமாறு கேட்டேன். அவர் புன்னகைத்துவிட்டு, "நீங்கள் ஏசி தலைமுறை" என்றார். நான் அவரிடம், "ஆனால் வெயில் அதிகமாக இருக்கிறதே" என்றேன்.
அவர் தனது சிறுவயது நினைவுகளைப் பேசத் தொடங்கினார்: "நாங்கள் கடும் வெயிலுக்குப் பழகிப்போயிருந்தோம்; மரநிழலில் தங்குவோம்; வெயிலின் உக்கிரம் தாங்காமல் உடலை நீரால் நனைத்துக் கொள்வோம். இவ்வளவு சிரமங்களுக்கு மத்தியிலும், நாங்கள் உறவினர்களைச் சந்திக்க கால்நடையாகவோ அல்லது ஒட்டகங்களிலோ நீண்ட தூரம் பயணிப்போம்."
சிறிது மௌனத்திற்குப் பிறகு அவர் தொடர்ந்தார்: "ஆனால் இன்று மக்கள் மொபைல் போன்களில் மூழ்கிக் கிடக்கிறார்கள்; போனிலேயே நலம் விசாரிக்கிறார்கள். ஆனால் நேரில் சென்று உறவைப் பேணுவது அற்றுப்போய்விட்டது." பிறகு சிரித்துக்கொண்டே, "எனது ஆரோக்கியமும், வாழ்வாதாரமும் (ரிஸ்க்) அல்லாஹ்வின் அருளால் நான் உறவுகளைப் பேணுவதால் கிடைத்தது என்பது உங்களுக்குத் தெரியுமா?
நமது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'யார் தனது வாழ்வாதாரத்தில் விசாலத்தையும், தனது ஆயுளில் நீடிப்பையும் விரும்புகிறாரோ, அவர் தனது இரத்த உறவுகளைப் பேணி நடக்கட்டும்.'
இன்று நம் பிள்ளைகள் போன்களில் மூழ்கிப்போனதால் இந்த அர்த்தங்கள் மறைந்துவிட்டன. போன் வழி தொடர்பு அதிகம், ஆனால் உடல் ரீதியான பிணைப்பு மிகக் குறைவு."
நாங்கள் விமான நிலையம் சென்றடையும் வரை 'சிலதுர் ரஹிம்' (உறவுகளைப் பேணுதல்) குறித்தும் அதன் பரக்கத் குறித்தும் பேசிக்கொண்டே சென்றோம்.
கடந்த கால மற்றும் நிகழ்கால விழுமியங்களை ஒப்பிட்டு அவர் சொன்னது பற்றி நான் சிந்திக்கத் தொடங்கினேன். அவர் முன்வைத்த விஷயம் மிக முக்கியமானது. உறவுகளைப் பேண ஒரு மனிதன் கடைபிடிக்க வேண்டிய 13 வழிகளை நான் தொகுத்தேன்:
1- அவர்களை நேரில் சென்று சந்திப்பது.
2- அவர்களின் நலம் விசாரிப்பது.
3- தொலைபேசி மூலம் அழைப்பது.
4- அவர்களின் பொருளாதார நிலை பலவீனமாக இருந்தால் உதவுவது.
5- பெரியவர்களை கண்ணியப்படுத்துவது.
6- சிறியவர்களிடம் அன்பு காட்டுவது.
7- அவர்களின் சமூக அந்தஸ்தை மதிப்பது.
8- அவர்களின் மகிழ்ச்சி மற்றும் துக்கங்களில் பங்கெடுப்பது.
9- நோயாளிகளை நலம் விசாரிப்பது.
10- மரணச் சடங்குகளில் (ஜனாஸா) கலந்துகொள்வது.
11- அவர்களின் அழைப்பை ஏற்று விருந்துகளுக்குச் செல்வது.
12- பிணக்குகள் உள்ள உறவினர்களுக்கு இடையே சமாதானம் செய்வது.
13- அவர்களுக்காகப் பிரார்த்தனை (துஆ) செய்வது.
மக்கள் தர்மம் செய்வது, இரவுத் தொழுகை, திக்ருகள் போன்றவற்றில் போட்டி போடுகிறார்கள். ஆனால் உறவுகளைப் பேணுவதில் போட்டி போடுவதுதான் முதன்மையானது. ஏனெனில் அது ஒரு கடமை (ஃபர்ழ்). அதை முறிப்பவருக்கு தண்டனை அதிகம்; அவர் சொர்க்கம் நுழைய மாட்டார்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "உறவை முறிப்பவன் சொர்க்கம் நுழைய மாட்டான்." மேலும், "அநியாயம் செய்வதும், உறவை முறிப்பதும் தவிர வேறெந்தப் பாவத்திற்கும் அல்லாஹ் இம்மையிலேயே தண்டனையைத் துரிதப்படுத்துவதில்லை" என்றும் கூறினார்கள்.
உறவுகளைப் பேணுவதில் மனிதர்களின் 5 நிலைகள்:
1- உயர்ந்த நிலை: தமக்குத் தீமை செய்பவருடனும் உறவைப் பேணுபவர்.
2- சிறந்த நிலை: உறவைத் துண்டித்தவருடன் தானாக முன்வந்து இணைபவர்.
3- சமநிலை (முக்காஃபி): உறவு வைப்பவருடன் வைத்து, துண்டிப்பவருடன் துண்டிப்பவர் (பதிலுக்குப் பதில்).
4- முறிப்பவர் (முகாத்திஃ): தன்னைத் தேடி வருபவர்களையும் துண்டிப்பவர்.
5- மோசமானவர்: தமக்கு நன்மை செய்பவர்களுக்கும் தீங்கு செய்து, உறவை முறிப்பவர்.
நபி (ஸல்) அவர்கள் தனது உறவினர்களுக்காகப் பிரார்த்திப்பார்கள், அவர்களைப் புகழ்வார்கள். தனது பெரிய தந்தை அப்பாஸ் (ரலி) அவர்களை யாராவது துன்புறுத்தினால், அது என்னைத் துன்புறுத்துவதற்குச் சமம் என்பார்கள். அன்னை கதீஜா (ரலி) அவர்கள் நபியவர்களுக்கு இறக்கப்பட்ட முதல் வஹியின் போது, "கவலைப்படாதீர்கள், நீங்கள் உறவுகளைப் பேணுகிறீர்கள் (அதனால் அல்லாஹ் உங்களைக் கைவிடமாட்டான்)" என்று கூறி ஆறுதல் படுத்தினார்கள்.
டிரைவர் ஸஅத் சொன்னது உண்மைதான். பண்டிகைகளையும் விசேஷங்களையும் குடும்பத் தொடர்புகளுக்காகப் பயன்படுத்துவது சமூக ஒற்றுமையை வளர்க்கும்; இளைய தலைமுறைக்குக் குடும்ப மரத்தைத் தெரியப்படுத்தும்.
உறவுகளைப் பேணும் இந்த உயரிய பண்பைப் பார்த்து வியந்து இஸ்லாத்தைத் தழுவிய பலரை எனக்குத் தெரியும். மேற்கத்திய நாடுகளில் வயதான பிறகு குடும்பத் தொடர்புகள் அறுந்துவிடுகின்றன, ஆனால் இஸ்லாம் இதை ஒரு புனிதமான கடமையாக்கியுள்ளது.
- கலாநிதி ஜாஸிம் அல் முதவ்வஃ -
கருத்துகள்
கருத்துரையிடுக