தூய்மையான பாவமன்னிப்பு (தவ்பா நஸூஹா)( ஓர் ஆழமான பார்வை)
தூய்மையான பாவமன்னிப்பு (தவ்பா நஸூஹா)
( ஓர் ஆழமான பார்வை)
இஸ்லாமிய
மார்க்கத்தில் 'தவ்பா'( இஸ்திஃபார் : இஸ்திஃபார் என்ற அரபி சொல்லுக்கும் இறைவனிடம் பாவமன்னிப்பு கேட்பது என்பது பொருள் ஆகும்! )
என்பது வெறும் வார்த்தை அல்ல; அது ஒரு மனிதன் தன் படைப்பாளனிடம் மீண்டும் திரும்பும் உன்னதமான பயணம். "தவ்பா நஸூஹா" என்பது கறைபடியாத, உண்மையான மற்றும் தூய்மையான பாவமன்னிப்பைக் குறிக்கிறது.
குர்ஆனின்
பார்வையில் தூய்மையான பாவமன்னிப்பு
அல்லாஹ்
திருக்குர்ஆனில் நம்பிக்கையாளர்களுக்கு மிகத்தெளிவான அழைப்பை விடுக்கின்றான்:
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْا تُوْبُوْۤا اِلَی
اللّٰهِ تَوْبَةً نَّصُوْحًا ؕ
"ஈமான் கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வின் பக்கம் தூய்மையான முறையில் தவ்பா செய்து (பாவமன்னிப்பு கோரி) மீளுங்கள்." (66: 08)
இங்கு 'நஸூஹா' என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு 'பழுதுபார்த்தல்' அல்லது 'தூய்மைப்படுத்துதல்' என்று பொருள். ஒரு கிழிந்த ஆடையை தைத்துச் சீராக்குவது போல, பாவங்களால் கிழிந்து போன ஒருவனின் ஆன்மீக வாழ்வை இந்தத் தவ்பா சீரமைக்கிறது.
அல்லாஹ்வின்
கருணை அளப்பரியது என்பதற்கு இந்த வசனம் சான்று:
اِنَّ اللّٰهَ یُحِبُّ التَّوَّابِیْنَ وَیُحِبُّ
الْمُتَطَهِّرِیْنَ
"நிச்சயமாக அல்லாஹ் தன்னிடம் தவ்பா செய்பவர்களை நேசிக்கிறான்; இன்னும் தூய்மையாக இருப்பவர்களையும் நேசிக்கிறான்." (சூரா அல்-பகரா: 222)
தவ்பா செய்வதின் சிறப்பு :
நாம் அல்லாஹ்விற்கு மாறு செய்து அவன் தடுத்த ஒன்றை செய்தாலும் நாம் அதை தவறு என்று உணர்த்து அதில் மீண்டு அல்லாஹ்விடம் தவ்பா செய்யும் பொழுது அல்லாஹ் நம்மை மன்னிப்பது மட்டும் அல்லாமல் நமக்கு நன்மைகளும் வழங்குகிறான்!
1) நாம் செய்த பாவங்களுக்கு தவ்பா செய்து தொடர்ந்து நல்ல அமல்கள் செய்து வருவதால் அல்லாஹ் நம்முடைய பாவங்களை எல்லாம் நன்மையாக மாற்றி விடுகிறான்!
اِلَّا مَنْ تَابَ وَاٰمَنَ وَعَمِلَ عَمَلًا صَالِحًا
فَاُولٰٓىِٕكَ یُبَدِّلُ اللّٰهُ سَیِّاٰتِهِمْ حَسَنٰتٍ ؕ وَكَانَ اللّٰهُ غَفُوْرًا
رَّحِیْمًا ۟
எவர் தவ்பா செய்து ஈமானுங் கொண்டு, ஸாலிஹான நற்செயல்கள் செய்கிறார்களோ - அவர்களுடைய பாவங்களை அல்லாஹ் நன்மையாக மாற்றிவிடுவான்! (அல் குர்ஆன் : 25 : 70)
2) நாம் அல்லாஹ்விடம் நம்முடைய பாவங்களுக்கு தொடர்ந்து மன்னிப்பு கேட்பதால் நாம் பாவம் செய்யாதவர்களை போன்று ஆகி விடுவோம்!
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
التَّائِبُ
مِنَ الذَّنْبِ كَمَنْ لَا ذَنْبَ لَهُ
யார் தாம் செய்த பாவத்திற்காக பாவமன்னிப்பு கோருகிறாரோ அவர் பாவமே செய்யாதவரைப் போலாவார்!
இப்னு மாஜா (ஹதீஸ் எண்: 4250) மற்றும் பைஹகீ மற்றும்
ஸஹீஹ் ஜாமிஃஅ : 3386)
3) நாம் அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு கேட்டு அவன் பக்கம் திரும்புவதால் அல்லாஹ் அதிகம் மகிழ்ச்சி அடைகிறான் :
அல்லாஹ்வின்
தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
காணாமல்
போன ஒட்டகத்தைக் கண்டு பிடிக்கும் போது, உங்களில் ஒருவருக்கு ஏற்படும் மகிழ்ச்சியைவிட, உங்களில் ஒருவர் பாவமன்னிப்புக் கோரி மீட்சி பெறுவதால் அல்லாஹ் அதிகமாக மகிழ்ச்சி அடைகிறான்!(நூல் : முஸ்லிம் : 5295)
* தொடர்ச்சியான தேடல்:
நபிகளார் (ஸல்) அவர்கள் பாவமற்றவர்களாக இருந்தும், ஒரு நாளில் 70 முதல் 100 முறை வரை பாவமன்னிப்புத் தேடினார்கள்.
அபூ ஹுரைரா (ரலி) அறிவித்தார்கள் :அல்லாஹ்வின் மீதாணையாக! நான் ஒரு நாளில் 70 முறைக்கு மேல் :
‘ அஸ்தஃக் ஃபிருல்லாஹ வ அதூபு இலைஹி ’
பொருள்: நான் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரி அவன் பக்கமே திரும்புகிறேன்!என்று கூறுகிறேன் என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறக் கேட்டுள்ளேன்! (நூல் : புகாரி : 6307)
தவ்பா
என்றால் இறைவன் பக்கம் மீள்வது என்பது பொருள் ஆகும்! மனிதன் பலகீனமானவனாக படைக்கப்பட்டு உள்ளான் அதனால் சில நேரங்களில் அவன் தெரிந்து அல்லது தெரியாமல் பாவம் செய்து விடுவான்!
அதனால் தான் அல்லாஹ் தன் அடியார்களின் பாவங்களை எப்பொழுதும், எச்சந்தர்ப்பத்திலும் மன்னிப்பதற்காக எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றான்!
நபி
(ஸல்) அவர்கள் கூறினார்கள் :
அல்லாஹ்,
பகலில் பாவம் புரிந்தவர்கள் பாவமன்னிப்புக் கோருவதற்காக இரவில் தனது கையை நீட்டுகிறான்! இரவில் பாவம் புரிந்தவர்கள் பாவமன்னிப்புக் கோருவதற்காக பகலில் கையை நீட்டுகிறான்! சூரியன் மேற்கிலிருந்து உதிக்கும் (கியாமத் நாள்) வரை ஒவ்வொரு நாளும் இவ்வாறு செய்து கொண்டிருக்கிறான்!(நூல் : முஸ்லிம் : 5324)
கியாமத்
நாள் வரை அல்லாஹ் நம்முடைய சிறிய பெரிய பாவங்களை மன்னிக்க தயராக உள்ளான் நம்மில் எத்தனை பேர் தவ்பா செய்ய தயாராக உள்ளோம்?
ஏதேனும் ஒரு பாவம் செய்து விட்டால் உள்ளத்தில் அல்லாஹ்வை பற்றி பயம் ஏற்படுவது பாவம் செய்து விட்டோம் அதற்கு தவ்பா செய்யவேண்டும் என்ற எண்ணம் உள்ளத்தில் ஏற்படுவது அல்லாஹ் நம்மை மன்னிக்க தயாராக உள்ளான் அல்லது நமது மீது அல்லாஹ் இரக்கம் காட்டி உள்ளான் என்பதற்கு மிக பெரிய அடையாளம் ஆகும்!
இன்று பலர் சிறிய பெரிய அனைத்து பாவங்களையும் செய்து கொண்டு மகிழ்ச்சியாக உள்ளார்கள் இவர்களுக்கு உள்ளத்தில் பாவம் செய்கிறோம் என்ற எண்ணம் ஏற்படாது மாறாக அதில் மகிழ்ச்சி மட்டுமே இருக்கும்!
இப்படி நபர்களை எல்லாம் அல்லாஹ் கடுமையாக பிடிக்கவே பாவத்திலேயே விட்டு விடுகிறான் நஊதுபில்லாஹ் அல்லாஹ் நம்மை இந்த நிலைமையில் வைக்க வில்லை!
ஒவ்வொரு
மனிதனுக்கும் அவனுடைய உயிர் தொண்டை குழியை அடையும் வரை அதவாது சகராத் நேரம் வரை பாவமன்னிப்பு செய்ய அல்லாஹ் அவகாசம் அளித்து உள்ளான்!
(நூல் : திர்மிதி : 3537)
நமக்கு மௌத் வரை தவ்பா செய்வதை தாமதம் செய்யவும் கூடாது பின்பு பாவத்தை விட்டு விலகி கொள்ளலாம் என்று விட்டு விடவும் கூடாது! மௌத் யாருக்கு எப்போது வரும் நாம் அறியமாட்டோம்!
அல்லாஹ்வின் அருளில் ஒரு போதும் நாம் நம்பிக்கை இழக்க கூடாது ஷைத்தான் பாவம் செய்யும் பொழுதும் சரி அதற்கு பின்பு தவ்பா செய்யும் பொழுதும் சரி அதிகம் உள்ளத்தில் உபதேசம் செய்வான்! பல முறை நீ தவ்பா செய்து விட்டாய் மீண்டும் மீண்டும் அல்லாஹ்விடம் தவ்பா செய்தால் அல்லாஹ் உன்னை மன்னிப்பான என்று அந்த நேரத்திலும் வழிகேடுப்பான்!
நாம் இது போன்ற உபதேசங்களை நம்பி தவ்பா செய்யாமல் விட்டு விட கூடாது! அல்லாஹ் மன்னிக்க கூடியவன் அவன் அருளில் ஒரு போதும் நம்பிக்கை இழக்க கூடாது!
قُلْ یٰعِبَادِیَ الَّذِیْنَ اَسْرَفُوْا عَلٰۤی اَنْفُسِهِمْ
لَا تَقْنَطُوْا مِنْ رَّحْمَةِ اللّٰهِ ؕ اِنَّ اللّٰهَ یَغْفِرُ الذُّنُوْبَ جَمِیْعًا
ؕ اِنَّهٗ هُوَ الْغَفُوْرُ الرَّحِیْمُ ۟
என் அடியார்களே! (உங்களில்) எவரும் வரம்பு மீறி தமக்குத்தாமே தீங்கிழைத்துக் கொண்ட போதிலும், அல்லாஹ்வுடைய ரஹ்மத்தில் அவர் நம்பிக்கையிழக்க வேண்டாம் - நிச்சயமாக அல்லாஹ் பாவங்கள் யாவையும் மன்னிப்பான் - நிச்சயமாக அவன் மிக்க மன்னிப்பவன்! மிக்கக் கருணையுடையவன் (என்று நான் கூறியதை நபியே!) நீர் கூறுவீராக!(அல்குர்ஆன் : 39 : 53)
இன்றே பாவத்தில் இருந்து விலகி தவ்பா செய்ய வேண்டும்! தவ்பா என்றால் அதை எப்படி செய்யவேண்டும் என்பதை பற்றி விரிவாக பார்ப்போம்.. இன்ஷாஅல்லாஹ்!
வரலாற்றுச் சான்று:
மாஇஸ்
இப்னு மாலிக் (ரலி) அவர்களின் வரலாறு
தூய்மையான
பாவமன்னிப்பிற்கு மிகச்சிறந்த வரலாற்று உதாரணம் மாஇஸ் இப்னு மாலிக் (ரலி) அவர்களின் நிகழ்வு.
அவர் ஒருமுறை மிகப்பெரிய பாவத்தைச் செய்துவிட்டு, நபிகளார் (ஸல்) அவர்களிடம் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! என்னைத் தூய்மைப்படுத்துங்கள்" என்றார். நபிகளார் அவரைப் புறக்கணித்து, "திரும்பிச் சென்று அல்லாஹ்விடம் மன்னிப்புக் கேள்" என்றார்கள். ஆனால், அவர் நான்கு முறை நேரில் வந்து தன் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.அவருக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்ட பிறகு,
நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:"அவர் (மாஇஸ்) அத்தகையதொரு 'தவ்பா' செய்திருக்கிறார், அந்தப் பாவமன்னிப்பை ஒரு முழுச் சமுதாயத்திற்கும் பிரித்துக் கொடுத்தாலும் அது அவர்களுக்குப் போதுமானதாக இருக்கும்."
இந்த வரலாறு நமக்கு உணர்த்துவது என்னவென்றால், செய்த தவறை மறைப்பதை விட, அதன் விளைவுகளுக்கு அஞ்சி இறைவனிடம் சரணடைவதே உண்மையான வீரம் என்பதாகும்.
உண்மையான தவ்பாவிற்கான நிபந்தனைகள்
ஒரு பாவமன்னிப்பு 'தூய்மையானது' என்று அங்கீகரிக்கப்பட அறிஞர்கள் 8 முக்கிய நிபந்தனைகளை முன்வைக்கின்றனர்:
1)
செய்த பாவத்தை நினைத்து முதலில் வருந்த வேண்டும் & மனம் வருந்தி அல்லாஹ்விடம் தவ்பா செய்யவேண்டும்!
2)
மீண்டும் அந்த பாவத்தின் பக்கம் செல்ல கூடாது என்று உறுதியாக உள்ளத்தில் எண்ணம் வைக்க வேண்டும்!
3)
உள்ளத்தில் இக்லாஸ் (மன தூய்மை) உடன் தவ்பா செய்யவேண்டும்!
*
தவ்பா செய்யும் பொழுதே மீண்டும் அந்த பாவத்தின் பக்கம் செல்லவேண்டும் என்ற எண்ணத்தில் தவ்பா செய்ய கூடாது!
நம்பிக்கையாளர்களே! நீங்கள் கலப்பற்ற மனதுடன் (பாவத்திலிருந்து விலகி) அல்லாஹ்வின் பக்கம் திரும்புங்கள்! உங்கள் இறைவனோ உங்கள் பாவங்களுக்குப் பரிகாரமாக்கி, (மன்னித்து) சுவனபதியிலும் உங்களைப் புகுத்திவிடுவான்!
(அல்குர்ஆன் : 66 : 8)
4)
அல்லாஹ்விற்காக பாவத்தை விட வேண்டும் என்ற எண்ணத்துடன் தவ்பா செய்யவேண்டும்!
*
மக்கள் நம்மை பற்றி என்ன கூறுவார்கள் அல்லது பிள்ளை கூறி விட்டான் வீட்டார் கூறி விட்டார்கள் அதற்கு தான் பாவத்தை விட்டு விட்டேன் என்ற நோக்கத்தில் தவ்பா செய்ய செய்யக்கூடாது!
5)
தவ்பா தனிமையில் செய்யவேண்டும்!
*
மக்கள் பார்க்கும் விதமாக அழுவது தவ்பா செய்வதை தவிர்த்து கொள்ள வேண்டும் இது போன்ற சூழ்நிலை எளிதாக உள்ளத்தில் முகஸ்துதி ஏற்படுத்தி விடும்!
6)
அல்லாஹ்விடம் மட்டுமே தவ்பா செய்யவேண்டும்!
وَالَّذِیْنَ اِذَا فَعَلُوْا فَاحِشَةً اَوْ
ظَلَمُوْۤا اَنْفُسَهُمْ ذَكَرُوا اللّٰهَ فَاسْتَغْفَرُوْا لِذُنُوْبِهِمْ ۪
وَمَنْ یَّغْفِرُ الذُّنُوْبَ اِلَّا اللّٰهُ ۪۫ وَلَمْ یُصِرُّوْا عَلٰی مَا
فَعَلُوْا وَهُمْ یَعْلَمُوْنَ ۟
தவிர, மானக் கேடான ஏதேனும் ஒரு செயலை அவர்கள் செய்துவிட்டாலும், அல்லது (ஏதேனும் பாவத்தினால்) தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்டாலும் உடனே அவர்கள் (மனப்பூர்வமாக) அல்லாஹ்வை நினைத்து தங்கள் பாவங்களுக்காக மன்னிப்புத் தேடுவார்கள்; அல்லாஹ்வைத் தவிர வேறு யார் பாவங்களை மன்னிக்க முடியும்? மேலும், அவர்கள் அறிந்து கொண்டே தங்கள் (பாவ) காரியங்களில் தரிபட்டிருந்து விடமாட்டார்கள்(அல் குர்ஆன் : 3 : 135)
தர்ஹாவிற்கு சென்று பாவமன்னிப்பு தேடுவது பெரியார் பொருட்டால் பாவமன்னிப்பு கேட்பது நபி (ஸல்) அவர்கள் பொருட்டால் தவ்பா செய்வது ஒரு போதும் கூடாது!
7)
பாவத்தில் இருந்து விலகி தவ்பா செய்து விட்டால் இதன் பின்பு அந்த பாவத்தை பற்றி யாரிடமும் ஒரு போதும் கூற கூடாது!
நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:"
செய்த பாவத்தை பற்றி பிறரிடம் கூறுவது அந்த பாவத்தை மீண்டும் செய்தது போன்று ஆகும் அல்லது அல்லாஹ் மறைந்த ஒன்றை நாமாக வெளிப்படுத்துவது போன்று ஆகும்! (நூல் : புகாரி : 6069)
8.மக்களின் உரிமைகளை நிறைவேற்றுதல்: செய்த பாவம் மற்ற மனிதர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியாக இருந்தால் (உதாரணமாக: திருட்டு, புறம் பேசுதல்), அவர்களிடம் மன்னிப்புப் பெறுவது அல்லது அவர்களின் உரிமையை ஒப்படைப்பது அவசியம்.
மேற்கூறியவாறு செய்வதுதான் உண்மையான தவ்பாவாகும். இந்நிபந்தனைகளுக்கு உட்பட்டு யார் தவ்பாச் செய்கின்றார்களோ நிச்சயமாக அவர்களின் தவ்பாக்களை அல்லாஹ் ஏற்றுக் கொள்வான். உண்மை தவ்பா என்பது நாவிலிருந்து மாத்திரம் வெளியாகக் கூடிய ஒன்றல்ல, உள்ளத்திலிருந்து வெளியாக வேண்டும். அதாவது, தான் செய்த பாவத்தை உணர்ந்து, ”இப்படிப்பட்ட பாவத்தை நான் செய்திருக்கக் கூடாதே” என்று மனம் கலங்கி, கவலைப்பட்டு விலகி விடுவதே உண்மை தவ்பாவாகும். அப்படி இல்லாமல், மொழிபுரியாமல், தான் சொல்வது தனக்கே புரியாமல் கேட்கப்படும் தவ்பா உண்மையான தவ்பா அல்ல என்பதை நன்றாகத் தெரிந்து கொள்ளுங்கள்.
தவ்பா செய்து விட்டால் :
பாவங்களை
விட்டு விலகி தவ்பா செய்து விட்டால் நாம் மீண்டும் அந்த பாவத்தின் பக்கம் செல்லாமல் இருக்க நம்மையும் நம்மை பாவம் செய்ய தூண்டும் சூழ்நிலைகளையும் மாற்றி கொள்ள வேண்டும்!
1) தொழுகை பேணுதல் :நாம் ஒவ்வொரு நாளும் கடமையான தொழுகைகளை முறையாக நேரம் உடன் தொழ வேண்டும் இதன் பின்பு உபரியான தஹஜ்ஜத் தொழுகை லுஹா தொழுகைகள் பர்ளு தொழுகைகளுடன் சேர்ந்த சுன்னத் தொழுகைகள் தொழ வேண்டும்!
اِنَّ الصَّلٰوةَ تَنْهٰی عَنِ الْفَحْشَآءِ وَالْمُنْكَرِ
ؕ
நிச்சயமாகத்
தொழுகை மானக்கேடான காரியங்களிலிருந்தும்! பாவங்களிலிருந்தும் மனிதனை விலக்கிவிடும்!(அல்குர்ஆன் : 29 : 45)
2) நல்ல அமல்கள் செய்வது :நாம் பாவத்தின் பக்கம் செல்லமல் இருக்க இயன்ற அளவுக்கு நல்ல அமல்கள் செய்யவேண்டும் ஸதகா செய்வது பிறருக்கு உதவி செய்வது பிறரை மன்னிப்பது குடும்ப உறவுகள் உடன் நல்ல முறையில் நடந்து கொள்ளுவது! போன்ற நற்செயல்களில் அதிகம் ஈடுப்பட வேண்டும்!
3) சூழ்நிலையை மாற்றி கொள்ளுவது :ஒரு மனிதன் பாவம் செய்ய மிக முக்கிய காரணங்களில் ஒன்று அவனுடைய சூழ்நிலை ஆகும்! சிலருக்கு தனிமையில் இருந்தால் பாவம் செய்ய எண்ணம் ஏற்படும் இன்னும் சிலருக்கு நண்பர்கள் உடன் சேர்ந்தால் பாவம் செய்ய எண்ணம் ஏற்படும்!
முதலில்
நாம் பாவம் செய்ய என்ன சூழ்நிலை காரணமாக உள்ளது என்பதை அறிந்து கொள்ளுங்கள் அதை எவ்வாறு தவிர்த்து இருக்கலாம் என்று சிந்தித்து அதை செயல் படுத்துங்கள்!
4) உள்ளதை தூய்மை படுத்துவது :
ஒரு மனிதன் நல்லவனாக இருக்கவும் அல்லது பாவம் செய்ய கூடியவனாக இருக்கவும் மிக முக்கியம் காரணம் அவன் உள்ளம் தான்! அல்குர்ஆனிலும் சரி ஸஹீஹான ஹதீஸ்களிலும் சரி உள்ளதை பற்றி இடங்களில் முக்கியத்துவம் படுத்தி வந்து உள்ளது!
ஆனால் இன்று நம்மில் பலர் அதை ஒரு பொருட்டாக கருதாமல் விட்டு விடுவதால் உள்ளம் பாழடைந்து போகிறது இதனால் எளிதாக உள்ளத்தில் வீணான எண்ணங்கள் குழப்பம் வெறுப்பு பாவம் செய்யும் எண்ணம் என அனைத்தும் தோன்றும்!
நாம் முதலில் உள்ளதை தூய்மை படுத்தவேண்டும்! அதற்கு முதலில் பாவத்தில் இருந்து முழுமையாக விலக வேண்டும் பின்பு இயன்ற அளவுக்கு நல்ல அமல்களை செய்யவேண்டும்!
உள்ளத்திற்கு
அதிகம் துஆ செய்வது அல்குர்ஆன் பொருள் உணர்ந்து ஓதுவது அதை கேட்பது திக்ர்கள் செய்வது காலை மாலை துஆக்கள் வழமையாக ஓதுவது!
இது போன்ற அமல்களை நாம் தினமும் செய்து வந்தாலே உள்ளம் இன்ஷாஅல்லாஹ் தூய்மை ஆகி விடும்! உள்ளம் தூய்மை ஆகி விட்டால் உங்களுக்கு பாவம் செய்ய சூழ்நிலை அமைந்தாலும் நமது அதன் பக்கம் செல்ல எண்ணம் ஏற்படாது மாறாக பாவத்தின் மீது வெறுப்பு தான் ஏற்படும்!
பாவமன்னிப்பு துஆக்கள் :
vநபி யூனுஸ் (அலை) அவர்கள் கேட்ட பாவமன்னிப்பு துஆ :
لَّاۤ اِلٰهَ اِلَّاۤ اَنْتَ سُبْحٰنَكَ اِنِّىْ كُنْتُ مِنَ الظّٰلِمِيْنَ
(பொருள் : உன்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. நீ தூயவன். நான் அநீதி இழைத்தோரில் ஆகி விட்டேன்) (அல்குர்ஆன் : 21:87)
v நபி ஆதம் (அலை) அவர்கள் கேட்ட பாவமன்னிப்பு துஆ :
رَبَّنَا ظَلَمْنَا أَنفُسَنَا وَإِن لَّمْ
تَغْفِرْ لَنَا وَتَرْحَمْنَا لَنَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ
(பொருள் : எங்கள் இறைவனே! எங்களுக்கு நாங்களே தீங்கிழைத்துக் கொண்டோம் - நீ எங்களை மன்னித்துக் கிருபை செய்யாவிட்டால், நிச்சயமாக நாங்கள் நஷ்டமடைந்தவர்களாகி விடுவோம்)
(அல்குர்ஆன் 7: 23)
v நபி (ஸல்) அவர்கள் கூறிய அழகிய துஆ :
– اللَّهُمَّ إِنِّي ظَلَمْتُ نَفْسِي ظُلْمًا كَثِيرًا، وَلاَ يَغْفِرُ
الذُّنُوبَ إِلَّا أَنْتَ، فَاغْفِرْ لِي مَغْفِرَةً مِنْ عِنْدِكَ، وَارْحَمْنِي إِنَّكَ
أَنْتَ الغَفُورُ الرَّحِيمُ “
பொருள் : இறைவா! எனக்கே நான் அதிகம் அநீதி இழைத்துக் கொண்டேன். உன்னைத் தவிர வேறு எவரும் பாவங்களை மன்னிக்க முடியாது. எனவே, என்னை மன்னிப்பாயாக! மேலும், எனக்கு அருள் புரிவாயாக! நிச்சயமாக நீ பாவங்களை மன்னிப்பவனும் நிகரில்லா அன்புடையோனுமாய் இருக்கிறாய்!(நூல் : புகாரி : 834)
தலை சிறந்த பாவமன்னிப்பு துஆ :
اللَّهُمَّ أَنْتَ رَبِّي، لاَ إِلَهَ إِلاَّ أَنْتَ،
خَلَقْتَنِي وَأَنَا عَبْدُكَ، وَأَنَا عَلَى عَهْدِكَ وَوَعْدِكَ مَا اسْتَطَعْتُ،
أَعُوذُ بِكَ مِنْ شَرِّ مَا صَنَعْتُ، أَبُوءُ لَكَ بِنِعْمَتِكَ عَلَىَّ وَأَبُوءُ
لَكَ بِذَنْبِي، فَاغْفِرْ لِي، فَإِنَّهُ لاَ يَغْفِرُ الذُّنُوبَ إِلاَّ أَنْتَ
(பொருள்: அல்லாஹ்! நீயே என் அதிபதி. உன்னைத் தவிர வேறு இறைவன் இல்லை. நீயே என்னைப் படைத்தாய். நான் உன் அடிமை நான் உனக்குச் செய்து கொடுத்த உறுதி மொழியையும் வாக்குறுதியையும் என்னால் இயன்ற வரை நிறைவேற்றியுள்ளேன். நான் செய்தவற்றின் தீமைகளிலிருந்து உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன். நீ எனக்கு அருட் கொடைகளை வழங்கியுள்ளாய் என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். மேலும், நான் பாவங்கள் புரிந்துள்ளதையும் உன்னிடம் (மறைக்காமல்) ஒப்புக்கொள்கிறேன். எனவே, என்னை மன்னிப்பாயாக! ஏனெனில், பாவத்தை மன்னிப்பவன் உன்னைத் தவிர வேறெவரும் இல்லை.)
சிறப்பு :
* இந்த துஆவை நம்பிக்கையோடும் தூய்மையான எண்ணத்தோடும் இரவில் கூறிவிட்டுக் காலை நேரத்திற்கு முன்பே இறந்து விடுகிறவரும் சொர்க்கவாசிகளில் ஒருவராக இருப்பார்!
(நூல் : புகாரி : 6306)
மனிதன் பலவீனமானவன், தவறு செய்வது இயல்பு. ஆனால் அந்தத் தவறிலேயே மூழ்கிவிடாமல், இறைவனின் கருணையை நம்பித் திரும்புவதே வெற்றியின் ரகசியம்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுகையை முடித்துத் திரும்பும் போது மூன்று தடவை (அஸ்தஃக்ஃபிருல்லாஹ் என்று) பாவமன்னிப்பு தேடுவார்கள். அறி : ஸவ்பான் (ரலி), நூல் : முஸ்லிம் 931
மரண நேரத்தில் செய்யப்படும் தவ்பா ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது:
யார் இப்போதனைகளுக்குச் செவிமடுக்காமல், இவ்வுலக வாழ்க்கையை மாத்திரம் இலட்சியமாகக் கருதி, மறுமைக்காக எவ்வித அமல்களும் செய்யாமலும் தான் செய்த பாவங்களுக்காக தவ்பாச் செய்யாமலும் வாழ்ந்து மரணிக்கின்றாரோ அவருக்கு அவர் சென்றடையப் போகும் நரகத்தைக் காட்டப்படும்.
அப்போது அவர் நல்அமல்கள் செய்வதற்காக இன்னும் கொஞ்ச காலம் இவ்வுலகில் வாழ அல்லாஹ்விடத்தில் அனுமதி வேண்டுவார், அதே போல் அவருடைய பாவங்களுக்காக மன்னிப்பும் கேட்பார்; ஆனால், அவருக்கு கொடுக்கப்பட்ட நேரத்தை விட ஒரு வினாடி கூட கூட்டப்படவோ குறைக்கப்படவோ மாட்டாது என்றும் அவருடைய தவ்பா ஏற்றுக் கொள்ளப்படாது என்றும் அல்லாஹ் எச்சரிக்கை செய்கின்றான்.
அல்லாஹ் தன் திருமறையில் இவ்வாறு கூறுகின்றான்.
ஆகவே (மனிதர்களே!) உங்களுக்கு வேதனை வரும் முன்னரே நீங்கள், உங்கள் இறைவன் பால் திரும்பி, அவனுக்கே முற்றிலும் வழிப்படுங்கள்; (வேதனை வந்துவிட்டால்) பின்பு நீங்கள் உதவி செய்யப்பட மாட்டீர்கள். நீங்கள் அறியாத விதத்தில், திடீரென உங்களிடம் வேதனை வரும்முன்னரே, உங்கள் இறைவனால் உங்களுக்கருளப்பட்ட அழகானவற்றைப் பின்பற்றுங்கள். “அல்லாஹ்வுக்கு நான் செய்ய வேண்டிய கடமைகளில் குறை செய்து விட்டதின் கைசேதமே! பரிகாசம் செய்பவர்களில் நிச்சயமாக நானும் இருந்தேனே!” என்று (ஒவ்வொருவரும்) கூறாமல் இருப்பதற்காகவும்; அல்லது ”அல்லாஹ் எனக்கு நேர்வழியை அறிவித்திருந்தால், நானும் முத்தகீன்(பயபக்தியுடையவர்)களில் ஒருவனாகி இருப்பேனே!” என்று கூறாமல் இருப்பதற்காகவும்; அல்லது வேதனையைக் கண்ட சமயத்தில், ”(உலகத்திற்கு) நான் மீண்டு செல்ல வழி உண்டாகுமாயின், (அழகிய) நன்மை செய்வோரில் ஒருவனாக நானும் ஆகிவிடுவேனே!” என்று கூறாமல் இருப்பதற்காகவும்; (பதில் கூறப்படும்) ”மெய்யாகவே என்னுடைய வசனங்கள் உன்னிடம் வந்தன ஆனால் அவற்றை நீ பொய்ப்பிக்க முற்பட்டுப் பெருமையடித்தாய்; காஃபிர்களில் ஒருவனாகி இருந்தாய்.” (அல்குர்ஆன் 39:54-59)
அவர்களில் ஒருவனுக்கு மரணம் வரும்போது, அவன்; ”என் இறைவனே! என்னை (உலகிற்குத்) திருப்பி அனுப்புவாயாக!’ என்று கூறுவான். ”நான் விட்டுவந்ததில் நல்ல காரியங்களைச் செய்வதற்காக” (என்றும் கூறுவான்). அவ்வாறில்லை! அவன் கூறுவது வெறும் வார்த்தையே(யன்றி வேறில்லை); அவர்கள் எழுப்பப்படும் நாள்வரையிலும் அவர்கள் முன்னே ஒரு திரையிருக்கிறது. (அல்குர்ஆன் 23:99,100)
உங்களில் ஒருவருக்கு மரணம் வருமுன்னரே, நாம் உங்களுக்கு அளித்த பொருளிலிருந்து, தான தர்மம் செய்து கொள்ளுங்கள்; (அவ்வாறு செய்யாது மரணிக்கும் சமயம்) ”என் இறைவனே! என் தவணையை எனக்கு சிறிது பிற்படுத்தக் கூடாதா? அப்படியாயின் நானும் தான தர்மம் செய்து ஸாலிஹான (நல்ல)வர்களில் ஒருவனாக ஆகிவிடுவேனே” என்று கூறுவான். (பரிதவிப்பான்) ஆனால், அல்லாஹ், எந்த ஆத்மாவுக்கும் அதன் தவணை வந்துவிட்டால் (அதனைப்) பிற்படுத்தவேமாட்டான். நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் தெரிந்தே இருக்கின்றான். (அல்குர்ஆன் 63:10,11)
இன்னும் எவர்கள் தீவினைகளைத் (தொடர்ந்து) செய்து கொண்டேயிருந்து, முடிவில் அவர்களை மரணம் நெருங்கிய போது, ”நிச்சயமாக இப்பொழுது நான் (பாவங்களுக்காக வருந்தி) மன்னிப்புத் தேடுகிறேன்” என்று கூறுகின்றார்களோ, அவர்களுக்கும், எவர் காஃபிர்களாகவே மரிக்கிறார்களோ அவர்களுக்கும் பாவமன்னிப்பே இல்லை, இத்தகையோருக்கு, துன்பம் கொடுக்கும் வேதனையையே நாம் சித்தப்படுத்தி வைத்துள்ளோம். (அல்குர்ஆன் 4:18)
(மரணத் தருவாயில்) தொண்டைக் குழியை உயிர் வந்து சேராமலிருக்கும் வரை நிச்சயமாக அல்லாஹ் அடியானின் தவ்பாவை ஏற்றுக் கொள்வான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (திர்மிதி)
மரணத்தின் (தொண்டைக் குழி வரை உயிர் வருதல்) நிலைக்கு முன்பாக நாம் செய்யும் ஒவ்வொரு தூய்மையான தவ்பாவும் அங்கீகரிக்கப்பட வாய்ப்புள்ளது.
உங்களின் பாவங்கள் கடல் நுரை அளவு இருந்தாலும், தூய்மையான தவ்பா எனும் அருமருந்து அவற்றை அழித்து உங்களைச் சுவனச் சோலைகளில் பிரவேசிக்கச் செய்வான்;
ஈமான் கொண்டவர்களே! கலப்பற்ற (மனதோடு) அல்லாஹ்விடம் தவ்பா செய்து, பாவமன்னிப்புப் பெறுங்கள்; உங்கள் இறைவன் உங்கள் பாவங்களை உங்களை விட்டுப் போக்கி உங்களைச் சுவனச் சோலைகளில் பிரவேசிக்கச் செய்வான்; அவற்றின் கீழே ஆறுகள் (சதா) ஓடிக் கொண்டே இருக்கும்; (தன்) நபியையும் அவருடன் ஈமான் கொண்டார்களே அவர்களையும் அந்நாளில் அல்லாஹ் இழிவுபடுத்தமாட்டான்; (66;8)
இறைவனிடம் மன்னிப்பு கேட்டு, இறைவனின் மன்னிப்பைப் பெற்று, சுவனத்திற்கு செல்லக்கூடிய நன்மக்களாக, அல்லாஹ் நம் அனைவரையும் ஆக்கி அருள்புரிவானாக!
கருத்துகள்
கருத்துரையிடுக