பிரார்த்தனை (துஆ) மட்டுமே தீர்வல்ல!
நான் அவனிடம் சொன்னேன்: "பிரார்த்தனை மட்டுமே தீர்வல்ல!"
அப்போது ஒரு இளைஞன் என்னை நிறுத்தி இப்படிக் கேட்டான்: "முஸ்லிம்கள் இவ்வளவு அதிகமாகப் பிரார்த்தனை செய்தும், அநியாயக்காரர்களிடமிருந்தும், யூதர்களிடமிருந்தும், அவர்களுக்குத் துணை நின்றவர்களிடமிருந்தும் நம்மை விடுவிக்குமாறு இறைவனிடம் வேண்டியும், ஏன் இன்னும் அல்லாஹ் அதற்குப் பதிலளிக்கவில்லை?"
இப்படித்தான் அவன் என்னிடம் விவாதத்தைத் தொடங்கினான். நான் சொன்னேன்: "வெற்றிக்கும் அதிகாரத்திற்கும் என்று சில காரணங்கள் (வழிமுறைகள்) உள்ளன. இதில் பிரார்த்தனை என்பது முதலிடத்தில் வருவதில்லை, அது இரண்டாம் இடத்திலேயே வருகிறது."
அவன் கேட்டான்: "அப்படியானால் முதலிடத்தில் வருவது எது?"
நான் சொன்னேன்: "செயல் (உழைப்பு)!"
அவன் சொன்னான்: "ஆனால் பிரார்த்தனைதானே அடிப்படை? அதுதானே நம்மை எல்லாத் துயரங்களிலிருந்தும் விடுவிக்கும்? 'என்னிடம் பிரார்த்தனை செய்யுங்கள், நான் உங்களுக்குப் பதிலளிக்கிறேன்' என்று அல்லாஹ் குர்ஆனில் கூறியிருக்கிறானே?"
நான் சொன்னேன்: "ஆம், நீ சொன்ன வசனம் உண்மைதான். ஆனால் அதன் பொருள் நீ கருதுவதிலிருந்து மாறுபட்டது. சோம்பேறியாக இருப்பவனுக்கோ, தூங்கிக் கொண்டிருப்பவனுக்கோ அல்லது உழைப்பு மற்றும் இலக்கை அடையத் தேவையான முயற்சிகளை எடுக்காதவனுக்கோ அல்லாஹ் பதிலளிப்பதில்லை.
இமாம் ஹசன் அல்-பஸரி (ரஹ்) அவர்கள், ஒரு மனிதன் கையில் கற்களை வைத்து விளையாடிக்கொண்டே 'இறைவா, எனக்கு சொர்க்கத்து ஹூருல் ஈன்களை (பேரழகிகளை) வழங்கு' என்று பிரார்த்தனை செய்வதைக் கண்டார்கள். அவனிடம், 'மனிதா! நீயோ பைத்தியக்காரர்களைப் போல விளையாடிக்கொண்டிருக்கிறாய், ஆனால் இறைவனிடம் ஹூருல் ஈன்களைக் கேட்கிறாயா?' என்று கேட்டார்கள்."
அவன் சொன்னான்: "இந்தக் கருத்து எனக்குப் புதியது. பிரார்த்தனைதான் எல்லாமே என்று நான் நம்பிக்கொண்டிருந்தேன்."
நான் சொன்னேன்: "உன்னிடம் ஒரு கேள்வி கேட்கிறேன். கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக நாம் பாலஸ்தீனத்தை விடுவிக்கவோ, பொருளாதார நெருக்கடியிலிருந்து மீளவோ, எதிரிகளின் ஆதிக்கத்திலிருந்து தப்பவோ பிரார்த்தனை செய்து வருகிறோம். ஆனால் அதற்குப் பதிலாக நாம் செய்த செயல் அல்லது சாதனை என்ன? அல்லாஹ் குர்ஆனில் 'நீங்கள் அல்லாஹ்வுக்கு (அவனது மார்க்கத்திற்கு) உதவி செய்தால், அவன் உங்களுக்கு உதவி செய்வான்' என்றுதான் கூறுகிறான். 'நீங்கள் பிரார்த்தனை செய்தால் மட்டும் அவன் உங்களுக்கு உதவி செய்வான்' என்று கூறவில்லை."
அவன் கேட்டான்: "அப்படியானால் காரண காரியங்களிலிருந்து பிரார்த்தனையை நீக்கிவிட வேண்டுமா?"
நான் சொன்னேன்: "இல்லை, ஒருபோதும் இல்லை! ஆனால் பிரார்த்தனை என்பது இரண்டாம் இடத்தில்தான் வருகிறது. அடிப்படை என்பது திட்டமிடல், உழைப்பு மற்றும் இயக்கம். அதன் பிறகே பிரார்த்தனை. இதையே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் அனைத்துச் செயல்களிலும் நாம் காண்கிறோம்."
"பத்ருப் போரில் நபியவர்கள் என்ன செய்தார்கள் என்று சிந்தித்துப் பார். இடத்தை நிர்ணயித்து, படைகளை ஒழுங்குபடுத்தி, அவர்களை உற்சாகப்படுத்தி, அனைத்து முயற்சிகளையும் எடுத்த பின்னரே இறைவனிடம் பிரார்த்தனை செய்தார்கள். அதேபோல் அகழ்ப் போரிலும், அகழ் தோண்டி, திட்டமிட்டு, தற்காப்பு நடவடிக்கைகளை எடுத்த பின்னரே அல்லாஹ்விடம் கையேந்தினார்கள். அனைத்து நிகழ்வுகளும் இப்படித்தான் இருந்தன."
பிறகு நான் அவனைப் பார்த்து கேட்டேன்: "நமது பிரச்சினைகளிலிருந்து விடுபட இறைவனிடம் கையேந்துவதற்கு முன்னால் நாம் செய்த 'செயல்' என்ன?"
அவன் சொன்னான்: "நீங்கள் சொல்லும் இந்தக் கருத்து மிகவும் முக்கியமானது."
நான் சொன்னேன்: "ஆம், இது நமது 'விதி' (கத்ர்) பற்றிய புரிதலோடு தொடர்புடையது.
ஷெய்க் கஸ்ஸாலி (ரஹ்) அவர்கள் ஒருமுறை ஒரு இமாமுக்குப் பின்னால் ஜும்ஆ தொழுகை தொழுதார்கள். அந்த இமாம், 'இறைவா! அநியாயக்காரர்களைக் கொண்டே அநியாயக்காரர்களை அழிப்பாயாக, எங்களை அவர்களுக்கு மத்தியிலிருந்து பாதுகாப்பாக வெளியேற்றுவாயாக' என்று துஆ செய்தார்.
தொழுகை முடிந்ததும் ஷேக் அவர்கள் அந்த இமாமிடம் கேட்டார்கள்: 'அல்லாஹ் அநியாயக்காரர்களைக் கொண்டே அநியாயக்காரர்களை அழித்துவிட்டால், பிறகு நமது வேலைதான் என்ன?'"
"மற்றவர்கள் திட்டமிட்டு, பிரபஞ்ச விதிகளையும் வெற்றிக்கான சூத்திரங்களையும் சரியாகக் கையாண்டு முன்னேறும்போது, நாம் அவர்களுக்கு எதிராக 'பிரார்த்தனை மட்டும்' செய்து கொண்டிருந்தால், அந்தப் போராட்டம் சமமானதாக இருக்காது. அதனால்தான் இன்று அவர்கள் நம்மை விட வெற்றி பெற்று நிற்கிறார்கள்."
அந்த இளைஞன் மௌனமாக என்னைப் பார்த்துக்கொண்டிருந்தான்.
நான் கேட்டேன்: "ஏன் அமைதியாகிவிட்டாய்?"
அவன் சொன்னான்: "சிந்திக்கிறேன்..."
நான் சொன்னேன்: "இன்னும் எளிமையாக ஒரு உதாரணம் சொல்கிறேன். யூசுப் (அலை) அவர்களின் வரலாற்றைக் கவனி. மன்னன் ஒரு கனவு கண்டு, எகிப்திற்குப் பஞ்சம் வரப்போகிறது என்பதை யூசுப் (அலை) அவர்களிடம் சொன்னபோது, அவர் அந்தப் பொருளாதாரப் பிரச்சினைக்கு 'துஆ மட்டும் செய்யுங்கள்' என்று ஆலோசனை கூறினாரா? அல்லது அந்த நெருக்கடியைச் சமாளிக்கத் தகுதியான ஒருவரை நியமிக்கச் சொன்னாரா? 'என்னை நாட்டின் கருவூலங்களுக்கு அதிகாரியாக நியமியுங்கள்; நிச்சயமாக நான் அதைப் பாதுகாப்பவனாகவும் அறிந்தவனாகவும் இருக்கிறேன்' என்று கூறி பொறுப்பைத் தானே ஏற்றார்."
அவன் சொன்னான்: "ஆம், அவர் பொறுப்பை ஏற்று உழைக்கவே முன்வந்தார்."
நான் சொன்னேன்: "இதைத்தான் நான் சொல்ல வருகிறேன். திட்டமிடல் மற்றும் உழைப்பிற்குப் பிறகே அவர் இறைவனின் உதவியைத் தேடினார். இஸ்லாமிய எழுச்சிக்கும் முஸ்லிம்களின் வெற்றிக்கும் இன்று நமக்குத் தேவைப்படும் வழிமுறை இதுதான்."
இப்போது அந்த இளைஞன் புன்னகைத்துக்கொண்டே சொன்னான்: "மிக்க நன்றி! இப்போது எனக்குள் உழைப்பதற்கான ஆர்வம் பிறந்துவிட்டது."
நான் சொன்னேன்: "உழைக்கும்போது பிரார்த்தனை செய்யவும் மறந்துவிடாதே. ஏனெனில் பிரார்த்தனையும் ஒரு வகை செயல்தான். இறைவனிடம் மிகவும் கண்ணியமானது பிரார்த்தனைதான் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளார்கள். உழைப்பும் பிரார்த்தனையும் இணைவதுதான் வெற்றிக்கு அடிப்படை."
- கலாநிதி ஜாஸிம் அல் முதவ்வஃ -
கருத்துகள்
கருத்துரையிடுக