கடன் : #பேண #வேண்டிய #ஒழுக்கங்களும் ##தவிர்க்க #வேண்டிய #தவறுகளும்

 

தொகுப்பு  : s. யாஸிர் ஃபிர்தௌஸி , ஜம்இய்யத்துத் தஃவா, சவூதி அரேபியா

--------------------------------------------------------------------------

" நீதி செலுத்துமாறும், நன்மை செய்யுமாறும் கட்டளையிட்டு, அநீதியையும் வரம்பு மீறுதலையும் தடுத்த அல்லாஹ்வுக்கே அனைத்துப் புகழும் உரியது. வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை; அவன் தனித்தவன்; அவனுக்கு இணையாருமில்லை; அவன் தீர்ப்பு வழங்கும் அரசன் என்று நான் சாட்சி கூறுகிறேன். மேலும், இறைத்தூதர் முஹம்மது (ﷺ) அவர்கள் அல்லாஹ்வின் அடியாரும் அவனது தூதருமாவார்கள்; அவர்கள்தான் அமானிதத்தை (பொறுப்பை) நிறைவேற்றியவர்களிலும், சமுதாயத்திற்கு நற்போதனை செய்தவர்களிலும் சிறந்தவராவார்கள் என்றும் நான் சாட்சி கூறுகிறேன். அல்லாஹ் அவர் மீதும், அவரது குடும்பத்தினர், தோழர்கள் மற்றும் தீர்ப்பு நாள் வரை அவரது வழியைப் பின்பற்றி நடந்தவர்கள் அனைவர் மீதும் அருளும், சாந்தியும், அபிவிருத்தியும் பொழிவானாக."    

        

அல்லாஹ்வின் அடியார்களே!

"கடன் அனுமதிக்கப்பட்ட ஒன்றாக இருந்தாலும் ஆபத்தானது. தனி மனிதர்கள் முதல் வல்லரசு நாடுகள் வரை அனைவரும் கடன் கொடுக்கல் வாங்கல் என்ற இச்செயலில் ஈடுபட்டுள்ளனர். கடன் அதன் சட்டங்கள்,  பேணவேண்டிய ஒழுக்கங்கள் , தவிர்க்க வேண்டிய தவறுகள் அதன் ஆபத்து குறித்து அறிந்து கொள்வதே இக்கட்டுரையின் நோக்கம். 


"மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காகவும், சண்டை சச்சரவுகள் மற்றும் எதிர்ப்புகளைத் தடுப்பதற்காகவும், இஸ்லாம் கடனுடைய விவகாரத்தில் மிக முக்கியக் கவனம் செலுத்தியுள்ளது. எந்தளவுக்கு என்றால், குர்ஆனின் மிக நீண்ட வசனமே இந்த கடனைப் பற்றித்தான் அருளப்பட்டுள்ளது."


2:282 ஈமான் கொண்டோரே! ஒரு குறித்த தவணையின் மீது உங்களுக்குள் கடன் கொடுக்கல் வாங்கல் செய்து கொண்டால், அதை எழுதி வைத்துக் கொள்ளுங்கள்; …

"எனவே, உரிமைகளைப் பாதுகாப்பதற்காகவும், சண்டை சச்சரவுகளுக்கான காரணங்களை வேரறுப்பதற்காகவும், கடனை எழுதுமாறும், அதற்கு சாட்சிகளை ஏற்படுத்துமாறும், அதனை ஆவணப்படுத்துமாறும் அல்லாஹ் கட்டளையிட்டுள்ளான்."


அடிப்படையில், தேவை ஏற்படும் போது கடன் வாங்குவது அனுமதிக்கப்பட்ட (முபாஹ்) ஒன்றாகும். நபி ﷺ அவர்களும் கூட தங்களது சில சூழ்நிலைகளில் கடன் வாங்கியுள்ளார்கள். ஆனால், சில மனிதர்கள் கற்பனை செய்வது போல இது ஒரு சாதாரண விஷயம் அல்ல; மாறாக, இது ஒருவரது பொறுப்பில் நிலைத்திருக்கும் கடமையாகும் (உரிமையாகும்). மறுமையில் அல்லாஹ்விற்கு முன்னால் இதைப் பற்றி அடியான் விசாரிக்கப்படுவான்."


கடனினால் மறுமையில் ஏற்படும் ஆபத்துகள் 

____________________________________________________________

"மேலும், கடனின் ஆபத்துகளில் (தீவிரத்தன்மைகளில்) ஒன்று என்னவென்றால்: ஒரு அடியான் மரணித்த பிறகும் கூட, அவனுடைய கடன் அவனது பொறுப்போடே பிணைக்கப்பட்டிருக்கும் (தொங்கிக் கொண்டிருக்கும்) என்பதை நபி ﷺ அவர்கள் தெளிவுபடுத்தியுள்ளார்கள்." 

"மூஃமினுடைய  ஆன்மா அவனது கடனோடு பிணைக்கப்பட்டுள்ளது (தொங்கிக் கொண்டிருக்கிறது); அவனுக்காக அது நிறைவேற்றப்படும் (செலுத்தப்படும்) வரை." 

(ஆதாரம்: திர்மிதி1079, இப்னு மாஜா2413,அஹ்மத் 10156)


அபூகத்தாதா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ﷺ) அவர்கள் ஒருமுறை எங்களிடையே நின்று, "அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரிவதும் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்வதும் நற்செயல்களிலேயே மிகவும் சிறந்ததாகும்" என்று கூறினார்கள். அப்போது ஒரு மனிதர் எழுந்து, "அல்லாஹ்வின் தூதரே! நான் அல்லாஹ்வின் பாதையில் (அறப்போரில்) கொல்லப்பட்டால், என் பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்படுமா, கூறுங்கள்?" என்று கேட்டார்.

அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ﷺ) அவர்கள், "ஆம், நீங்கள் அல்லாஹ்வின் பாதையில் பொறுமையுடனும் (இறைவனுக்காக எனும்) தூய எண்ணத்துடனும் புறமுதுகிட்டு ஓடாமல் முன்னோக்கிச் சென்று கொல்லப்பட்டால், (உங்கள் அனைத்துப் பாவங்களும் மன்னிக்கப்படும்)" என்று பதிலளித்தார்கள்.

பிறகு (சிறிது நேரம் கழித்து) அல்லாஹ்வின் தூதர் (ﷺ) அவர்கள், "எப்படிக் கேட்டீர்கள் (மீண்டும் சொல்லுங்கள்)?" என்று கேட்டார்கள். அந்த மனிதர், "நான் அல்லாஹ்வின் பாதையில் (அறப்போரில்) கொல்லப்பட்டால், என் பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்படுமா, கூறுங்கள்?" என்று கேட்டார்.

மீண்டும் அல்லாஹ்வின் தூதர் (ﷺ) அவர்கள், "ஆம், நீங்கள் பொறுமையுடனும் (இறைவனுக்காக எனும்) தூய எண்ணத்துடனும் புறமுதுகிட்டு ஓடாமல் முன்னோக்கிச் செல்லும்போது (கொல்லப்பட்டுவிட்டால் உங்கள் பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்பட்டு விடுகின்றன.) ஆனால், கடனைத் தவிர! ஏனெனில், (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் என்னிடம் (இப்போதுதான்) இவ்வாறு கூறினார்" என்றார்கள். (ஆதாரம்: முஸ்லிம் 3830)


அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

கடன்பட்ட நிலையில் இறந்த ஒருவர் அல்லாஹ்வின் தூதர் (ﷺ) அவர்களிடம் (இறுதித் தொழுகைக்காகக்) கொண்டுவரப் படுவார்; அப்போது ‘‘இவர் தம்மீதுள்ள கடனை அடைக்க ஏதேனும் விட்டுச் சென்றிருக்கிறாரா?” என்று கேட்பார்கள். ‘‘கடனை அடைப்பதற்குப் போதுமானதை விட்டுச்சென்றிருக்கிறார்” என்று கூறப் பட்டால் (அவருக்காகத்) தொழுகை நடத்து வார்கள்.

இல்லையென்றால், ‘‘உங்கள் தோழருக்கு நீங்களே தொழுதுகொள்ளுங்கள்” என்று முஸ்லிம்களிடம் கூறிவிடுவார்கள். அவர்களுக்கு அல்லாஹ் பல வெற்றிகளை அளித்தபோது (அதன் மூலம் அரசு நிதி குவிந்ததால்), ‘‘இறைநம்பிக்கையாளர்களுக்கு, அவர்களைவிட நானே நெருக்கமான (உரிமை உடைய)வன் ஆவேன். எனவே, இறைநம்பிக்கையாளர்களில் யார் கடனை (அடைக்காமல்) விட்டுச்செல்கிறாரோ அதை அடைப்பது என் பொறுப்பாகும்; யார் செல்வத்தை விட்டுச்செல்கிறாரோ அது அவர்களின் வாரிசுகளுக்கு உரியதாகும்!” என்று கூறினார்கள். (ஆதாரம்: முஸ்லிம் 2298)


கடனில் அலட்சியம் வேண்டாம்

________________________________________ 

"நிச்சயமாக மனிதர்களில் சிலர், எந்தவொரு அவசியமான தேவையும் இன்றியே கடன் வாங்குவதில் அலட்சியமாக இருக்கிறார்கள். ஆடம்பரத்திற்காகவும், பகட்டிற்காகவும், பெருமைக்காகவும் கடன்களையும் பொறுப்புகளையும் குவித்து வைக்கிறார்கள். பின்னர், கவலைகளாலும் துக்கங்களாலும் பாரமாக்கப்பட்டு, கடன்களுக்கு அடிமையாக மாறிவிடுகிறார்கள்."

நபி (ﷺ) அவர்கள் கூறினார்கள்:


யார் மக்களின் பணத்தை (அல்லது பொருட்களைத்) திருப்பிச் செலுத்தும் எண்ணத்துடன் கடன் வாங்குகிறாரோ அவர் சார்பாக அல்லாஹ்வே அதனைத் திருப்பிச் செலுத்துவான். எவன் திருப்பிச் செலுத்தும் எண்ணமின்றி அதை (ஏமாற்றி) அழித்துவிடும் எண்ணத்துடன் கடன் வாங்குகிறானோ அல்லாஹ்வும் அவனை அழித்துவிடுவான். (ஆதாரம்: புகாரி: 2387)


 உன்னத எண்ணம்: கடனை வாங்கும்போதே அதைத் திருப்பிச் செலுத்திவிட வேண்டும் என்ற நல்லெண்ணம் இருக்க வேண்டும்.


இறை உதவி: உண்மையான எண்ணத்தோடு கடனை அடைக்க முயல்பவருக்கு அல்லாஹ்வின் உதவி நிச்சயம் கிடைக்கும்.

  எச்சரிக்கை: பிறர் பணத்தை ஏமாற்ற நினைப்பதும், வேண்டுமென்றே இழுத்தடிப்பதும் கடுமையான பாவமும் ஆபத்துமாகும்.


இஸ்லாமிய வழிகாட்டலின்படி, ஒருவரிடம் பண வசதி இருந்தும் அவர் வாங்கிய கடனை உரிய நேரத்தில் திருப்பிக் கொடுக்காமல் தட்டிக்கழிப்பது அல்லது காலம் தாழ்த்துவது அநீதியாகக் கருதப்படுகிறது. மேலும் ஏழைகளின் கடனை அடைப்பதற்கு செல்வந்தர்கள் முன்வர வேண்டும். 

செல்வந்தர் (தாம் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்தாமல் தவணை கேட்டு) இழுத்தடிப்பது அநியாயமாகும். உங்களில் ஒருவரது கடன் ஒரு செல்வந்தர்மீது மாற்றிவிடப்பட்டால் அவர் ஒப்புக் கொள்ளட்டும்!   (ஆதாரம்: புகாரி: 2288, முஸ்லிம் 1564)

"எனவே, ஒரு முஸ்லிம் தன்மீதுள்ள (கடன் போன்ற) கடமைகளை விரைந்து நிறைவேற்றுவதும், மக்களின் பணத்தை தவறான வழியில் உண்ணாமல் (ஏமாற்றாமல்) இருப்பதும், தனது நற்பெயரையும் மார்க்கத்தையும் பாதுகாத்துக் கொள்வதும் கடமையாகும்.


"அல்லாஹ்விடம் நெருக்கத்தைப் பெற்றுத் தரும் மிக அழகிய செயல்களில் ஒன்று: கடன் சுமையால் தவிப்பவருக்கு (அதைத் திருப்பிச் செலுத்த) கால அவகாசம் வழங்குவதும், அவருக்கு எளிமைப்படுத்துவதும் ஆகும்."

அன்றியும், கடன்பட்டவர் (அதனைத் தீர்க்க இயலாது) கஷ்டத்தில் இருப்பின் (அவருக்கு) வசதியான நிலை வரும்வரைக் காத்திருங்கள்; இன்னும், (கடனைத் தீர்க்க இயலாதவருக்கு அதை) தர்மமாக விட்டுவிடுவீர்களானால் -(அதன் நன்மைகள் பற்றி) நீங்கள் அறிவீர்களானால் - (அதுவே) உங்களுக்குப் பெரும் நன்மையாகும்.2:280


கடன்களின் முக்கியத்துவம்: கடன் என்பது வெறும் பணம் சார்ந்த விஷயம் மட்டுமல்ல, அது மறுமையில் கேள்விக்குள்ளாக்கப்படும் பிறரின் உரிமை எனவே அதில் மிகுந்த கவனம் தேவை.


பொருளாதாரத் திட்டமிடல்: வரவுக்குள் செலவு செய்வதே புத்திசாலித்தனம். வருமானத்தை தாண்டாத நடுத்தரமான வாழ்க்கையே நிம்மதியைத் தரும்.

ஆடம்பரத்தைத் தவிர்த்தல்: தேவையற்ற ஆடம்பரமும் வீண்விரயமும்  ஒருவரைத் தேடிச் சென்று கடன் வலையில் வீழ்த்திவிடும். அதை ஆரம்பத்திலேயே தவிர்ப்பது அவசியமாகும்.


"கடன் விவகாரங்களில் கவனிக்க வேண்டிய முக்கியமான அறிவுரைகளில் சில:"

____________________________________________________________


1.அவசியத்திற்கு மட்டுமே கடன் வாங்குதல்:முதல் விதி.

ஒரு முஸ்லிம் மிகக் கடுமையான தேவை அல்லது அத்தியாவசிய சூழல் ஏற்பட்டால் ஒழிய கடன் வாங்கக் கூடாது.


2.எழுதிப் பதிவு செய்தல்:இரண்டாம் விதி.

எல்லாம் வல்ல அல்லாஹ்வின் கட்டளைக்கு இணங்க, தான் வாங்கும் அல்லது கொடுக்கும் கடனை முறையாக எழுதி, ஆவணப்படுத்தி (சாட்சிகளுடன்) வைத்துக் கொள்ள வேண்டும்.


3.திருப்பிக் கொடுக்கும் நல்லெண்ணம்:மூன்றாம் விதி.

கடனை வாங்கும் போதே, அதை எப்படியாவது நேர்மையான முறையில் திருப்பிச் செலுத்திவிட வேண்டும் என்ற தூய்மையான எண்ணமும் சங்கல்பமும் இருக்க வேண்டும்.


4.வசதி வந்ததும் விரைந்து செலுத்துதல்:நான்காம் விதி.

கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கான வசதியும் பொருளாதாரமும் கிடைத்த உடனே, தாமதிக்காமல் அதை உடனடியாகக் கொடுத்து முடிக்க முற்பட வேண்டும்.


5.சிரமப்படுபவருக்கு சலுகை வழங்குதல்:ஐந்தாம் விதி.

கடன் கொடுத்தவர், வாங்கியவர் கடுமையான சூழ்நிலையில் (வறுமையில்) இருக்கும் போது அவரிடம் கனிவாக நடந்து கொள்ள வேண்டும்; அவர் மீது இரக்கம் காட்டி, அவருக்கு அவகாசம் அளித்தோ அல்லது தள்ளுபடி செய்தோ எளிமைப்படுத்த வேண்டும்.

இந்த ஐந்து விதிகளும் ஒரு சமூகத்தில் பொருளாதார ரீதியான நிம்மதியையும், மனிதர்களுக்கு இடையிலான பரஸ்பர நம்பிக்கையையும் பேணக்கூடிய உன்னதமான இஸ்லாமிய நெறிமுறைகளாகும்.


நிச்சயமாக குடும்பப் பூசல்கள், நிதித் தகராறுகள் மற்றும் நீதிமன்றங்களில் உள்ள வழக்குகள் பலவற்றிற்கு முக்கியக் காரணம்: கடன்கள் மற்றும் பிறருடைய உரிமைகள் விஷயத்தில் அலட்சியமாக இருப்பதும், அவற்றை முறையாக ஆவணப்படுத்தாமல் எழுதி வைக்காமல் விடுவதுமே ஆகும். எனவே, நமது பொருளாதார விஷயங்களிலும், நமது சகோதரர்களின் உரிமைகளிலும் அல்லாஹ்வுக்குப் பயந்து (பேணுதலாக) நடந்து கொள்வோமாக!"


இன்றைய காலகட்டத்தில் பல குடும்பங்கள் பிரிவதற்கும், நெருங்கிய நண்பர்கள் எதிரிகளாவதற்கும் இந்த ஒரு அலட்சியமே அடித்தளமாக அமைகிறது. இதில் கவனிக்க வேண்டிய இரு முக்கிய அம்சங்கள்


அலட்சியத்தின் விளைவு: "நமக்குள்ளே என்ன பயம்?", "அவன் என் தம்பி போன்றவன்" என்ற அதீத நம்பிக்கையில் பணப் பரிமாற்றங்களை ஆவணப்படுத்தாமல் விடுவது, பிற்காலத்தில் மறதி அல்லது மரணம் காரணமாகப் பெரிய பிளவுகளை உருவாக்குகிறது.

இறையச்சம்: பிறர் பணத்தைச் சரியாகக் கையாள்வதும், கொடுத்த கடனைத் திருப்பிக் கேட்பதிலோ அல்லது வாங்கியதைத் தருவதிலோ நேர்மையைக் கடைப்பிடிப்பதும் மார்க்கக் கடமையாகும்.

முறையான ஆவணப்படுத்துதல்: என்பது நம்பிக்கையின்மை அல்ல; மாறாக அது உறவுகளையும், உரிமைகளையும் நீண்ட காலத்திற்குப் பாதுகாக்கும் ஒரு பாதுகாப்பு அரணாகும்.

நம்பி உங்களிடம் ஒப்படைக்கப்பட்ட அமானிதங்களை அவற்றின் சொந்தக்காரர்களிடம் நீங்கள் ஒப்புவித்து விடவேண்டுமென்று …. உங்களுக்கு அல்லாஹ் கட்டளையிடுகிறான் 4:58 

முஃமின்களே! (நீங்கள் செய்து கொண்ட) உடன்படிக்கைகளை (முழுமையாக) நிறைவேற்றுங்கள் 5:1

கடனிலிருந்து பாதுகாவல் தேட ஓத வேண்டிய துஆக்கள்

_______________________________________________________________________ 


"மேலும், நபி ﷺ அவர்கள் கடன்படுவதிலிருந்து (அல்லாஹ்விடம்) பாதுகாவல் தேடக்கூடியவர்களாக இருந்தார்கள்."


 துஆ - 1 (தொழுகையின் அத்தஹிய்யாத்தில் ஓத வேண்டியது)

... اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْمَأْثَمِ وَالْمَغْرَمِ 

"... இறைவா! நான் பாவத்திலிருந்தும், கடனிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்." 

(இதைச் செவியுற்ற) ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம், “தாங்கள் கடன்படுவதி-ருந்து அதிகமாகப் பாதுகாப்புக் கோர என்ன காரணம்?” என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “மனிதன் கடன்படும்போது பொய் பேசுகிறான்; வாக்குறுதி அளித்துவிட்டு மாறு செய்கிறான்” என்று பதிலளித்தார்கள்.

(ஆதாரம்: புகாரி: 832, முஸ்லிம் 589) 


துஆ - 2 (கவலை மற்றும் கடனிலிருந்து விடுபட ஓதும் துஆ)


நபி ﷺ அவர்கள் அனஸ் (ரலி) அவர்களிடம் அதிகமாக இந்த துஆவை ஓதுவதை நான் கேட்டுள்ளேன் எனப் பதிவாகியுள்ளது:

اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْهَمِّ وَالْحَزَنِ، وَالْعَجْزِ وَالْكَسَلِ، وَالْبُخْلِ وَالْجُبْنِ، وَضَلَعِ الدَّيْنِ وَغَلَبَةِ الرِّجَالِ 

"இறைவா! கவலையிலிருந்தும், துக்கத்திலிருந்தும், பலவீனத்திலிருந்தும், சோம்பேறித்தனத்திலிருந்தும், கஞ்சத்தனத்திலிருந்தும், கோழைத்தனத்திலிருந்தும், கடனின் சுமையிலிருந்தும், மனிதர்களின் அடக்குமுறைக்கும் (மிகைப்பிற்கும்) ஆளாவதிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்." 

(ஆதாரம்: புகாரி: 2893)


துஆ - 3 (மலை அளவு கடன் இருந்தாலும் தீர ஓத வேண்டிய துஆ)


அலி (ரலி) அவர்கள் ஒருவரிடம், "நபி ﷺ அவர்கள் எனக்குக் கற்றுத் தந்த சில வார்த்தைகளை உமக்குக் கற்றுத்தரவா? உம்மீது ஸபீர் மலை அளவு கடன் இருந்தாலும் அதை அல்லாஹ் நிறைவேற்றி வைப்பான்" எனக் கூறி கற்றுக்கொடுத்த துஆ:

اللَّهُمَّ اكْفِنِي بِحَلَالِكَ عَنْ حَرَامِكَ، وَأَغْنِنِي بِفَضْلِكَ عَمَّنْ سِوَاكَ 

"இறைவா! ஹராமானவற்றை விட்டும் (என்னைத் தடுத்து) உன்னுடைய ஹலாலான (அனுமதிக்கப்பட்ட) வாழ்வாதாரத்தைக் கொண்டு எனக்குப் போதுமாக்குவாயாக! உன்னுடைய அருட்கொடையைக் கொண்டு உன்னைத் தவிர மற்றவர்களிடம் தேவைப்படுவதை விட்டும் என்னை தேவையற்றவனாக்குவாயாக!" (ஆதாரம்: திர்மிதி: 3563, ஹாகிம் 1973 ) 


"யா அல்லாஹ்! கடன் பட்டிருப்பவர்களின் கடன்களை நிறைவேற்றி வைப்பாயாக! கவலையில் மூழ்கியிருப்பவர்களின் கவலைகளைப் போக்கியருள்வாயாக! துன்பத்தில் தவிப்பவர்களின் துன்பங்களை நீக்கியருள்வாயாக!"


"யா அல்லாஹ்! (பிறரின்) உரிமைகளையும், அமானிதங்களையும் உரிய முறையில் நிறைவேற்ற எங்களுக்குத் தௌஃபீக் (நற்பேறு) செய்வாயாக! எங்களை உண்மை பேசுபவர்களாகவும், கொடுத்த வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றுபவர்களாகவும் ஆக்கியருள்வாயாக!"

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

1.கணவனைக் கவரும் வழிகள் 40

தொப்பியில் இல்லை இஸ்லாம்!

மண்ணறை வேதனை 001