திருமணம் தாண்டிய உறவு“ இஸ்லாம் கூறும் தீர்வு

 🟥“திருமணம் தாண்டிய உறவு“🟥

துரோகத்திற்கு இஸ்லாம் கூறும் தீர்வு🔥


“வயதுக்கு வந்த இருவர் விரும்பி உடலுறவு கொண்டால் குற்றமில்லை”

 என்ற நீதிமன்றத் தீர்ப்பு வெளியாகி சமூகத்தில் பரவலான விவாதத்தை ஏற்படுத்தியது. 


 அதன் ஈரம் காய்வதற்குள் சமூக வலைத்தளங்களில் ஒரு செய்தி வேகமாகப் பரவியது.


 ஒருவர் தன் மனைவியை அந்நிய ஆணுடன் பார்த்ததாக கூறி, அதை வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டிருந்தார். 


அந்த வீடியோவைப் பார்த்தவர்கள் ஆத்திரம் கொண்டனர். சிலர் அவரை ஆதரித்தனர். சிலர் கடுமையாக விமர்சித்தனர்.


 இன்று அந்த நிகழ்வு ஒரு “விவாதக் களமாக” மாறிவிட்டது.


ஆனால் அந்த சகோதரனின் மனதில் நடந்தது வேறு. 


அவமானம், சந்தேகம், கோபம் எல்லாம் ஒன்று சேர்ந்து ஒரு பெரும் புயலாக மாறியது. அந்த புயலில் 


அவர் எடுத்த சில முடிவுகள், அவருடைய எதிர்கால வாழ்விற்குச் சிறந்ததாக இல்லை.


அவர் தனது மனைவியை கத்தியால் கீறிக் கிழித்து, தானும், தனது மகனும் சாகப் போவதாக  ஆற்றாமையில் அழுது கண்ணீர் வடித்து அதையும் வீடியோவாக சமூக வலைத்தளங்களில் பதிவிட்டிருந்தார். 


“அப்பா எனக்கு பயமா இருக்கு! அப்பா எனக்கு பயமா இருக்கு?” என அந்தச் சிறுவன் கதறி அழுதது அனைவரின் உள்ளத்திலும் ஓர் அச்சத்தையும் அச்சிறுவனுக்கு ஏதும் நிகழ்ந்தவிடக் கூடாதே என்ற ஏக்கத்தையும் உருவாக்கியது. 


தற்போது மூவருமே நலமாக இருப்பதாக செய்திகள் வருவது ஓர் ஆறுதல்.


அதே நேரத்தில், மற்றொரு கேள்வியும் எழுந்தது: இது போன்ற நிகழ்வுகளில் “உண்மையில் நீதியை எங்கே தேட வேண்டும்?” என்பதுதான் அக்கேள்வி. 


சமூக வலைத்தள ஆதிக்கம் மேலோங்கியிருக்கும் இக்காலகட்டத்தில் எந்த ஒன்றையும் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டால் நீதி கிடைத்து விடும் என்ற மனநிலை எதிர்காலத்தில் அரசமைப்பையே ஆட்டம் காணச் செய்கின்ற ஆபத்தான மனிநிலையாகும். 


சமூக வலைத்தளங்கள் தீர்ப்பளிக்கும் இடமாக மாறிவிட்டால், அது சட்டத்தின் அடிப்படையையே பலவீனப்படுத்தும் ஆபத்து உள்ளது. 


எனவே, எந்த விவகாரமானாலும் நீதியும் தீர்ப்பும் முறையான சட்ட அமைப்பின் வழியே மட்டுமே செல்ல வேண்டும் என்பதே நாகரிக சமூகத்தின் அடிப்படை.


🌻🌻இஸ்லாமியத் தீர்வு...🌻🌻


இஸ்லாம் இத்தகைய குடும்ப மற்றும் சமூக சிக்கல்களுக்கு உணர்ச்சியை அடிப்படையாகக் கொண்ட தீர்வை அல்ல; சட்டம், ஆதாரம் மற்றும் ஒழுக்கம் சார்ந்த தீர்வை வழங்குகிறது.


மதீனாவின் வரலாற்றில் இதற்கு தெளிவான வழிகாட்டுதலாக இரண்டு நிகழ்வுகள் உள்ளன.


✍️✍️ஹிலால் பின் உமய்யா (ரலி) நிகழ்வு✍️✍️


ஒரு நாள் ஹிலால் பின் உமய்யா (ரலி) அவர்கள் மனம் கலங்கிய நிலையில் நபியவர்களிடம் வந்தார்கள்.


 அவர்களின் குரலில் கோபமும் வலியும் கலந்திருந்தது.


அவர் கண்ட காட்சியே நபியவர்களிடம் அவரைக் கொண்டுவந்தது. 


ஆம் அவர் தனக்கே சொந்தமானவள் என நினைத்த அவரது மனைவியை ஷரீக் பின் ஸஹ்மா என்பவருடன் தகாத உறவில் இருப்பதை அவர் காண்கிறார்.


அடக்க முடியாத ஆத்திரத்துடன் தனக்கு இழைக்கப்பட்ட துரோகத்திற்கு நீதியை நாடி அல்லாஹ்வின் தூதருடைய சபைக்கு வருகிறார். 


“அல்லாஹ்வின் தூதரே… என் மனைவியுடன் ஒரு அந்நிய ஆணை நான் கண்டேன்…”


என்கிறார்.


அவர் சொன்னது சாதாரண குற்றச்சாட்டு மட்டுமல்ல. அது ஒரு மனிதனின் உள்ளத்தை உடைக்கும் துரோகத்தின் வலி.


நபி (ஸல்) அவர்கள் அவரை கவனமாகப் பார்த்தார்கள். 


இஸ்லாமிய சட்டத்தில், விபச்சாரக் குற்றச்சாட்டை நிரூபிக்க நான்கு சாட்சிகள் அவசியம். இல்லையெனில் அது அவதூறு ஆகும்;


 அதற்குத் தண்டனை வழங்கப்படும். 


எந்த ஒரு பெண்மீது விபச்சாரக் குற்றச் சாட்டு வைத்தாலும் அதை நேரில் கண்ட நான்கு சாட்சிகள் மூலம் நிரூபிக்க வேண்டும். இல்லையென்றால் குற்றச்சாட்டு வைத்தவருக்கு 80 கசையடிகளை இஸ்லாமிய அரசு நிறைவேற்றும் .


இதுவே இறைவழிகாட்டலாக இருந்தது.


ஹிலால் (ரலி) அவர்களின் வலிநிறைந்த குற்றச் சாட்டைக் கேட்ட இறைத்தூார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள்  ஒரு கணம் கூட உணர்ச்சியின் அடிப்படையில் இதை அணுகவில்லை. 


அவர்கள் சொன்ன பதில் தெளிவானது:


””ஹிலாலே! உமது குற்றச் சாட்டிற்கு ஆதாரம் கொண்டுவா! இல்லையென்றால் அவதூறு கூறியதற்கு தண்டனையாக உன் முதுகில் கசையடி தரப்படும்”

என்றார்கள். 


ஹிலால் (ரலி) அவர்கள் அதிர்ந்தார்கள்.


”அல்லாஹ்வின் தூதரே! எங்களில் ஒருவர் தம் மனைவியுடன் ஓர் அன்னிய ஆடவன் இருப்பதைக் கண்டாலுமா ஆதாரம் தேடிக் கொண்டு செல்லவேண்டும்? “நான் என் கண்களால் பார்த்ததற்கும் ஆதாரம் தேவையா?”

என்றார். 


ஆனால் நபி (ஸல்) அவர்களின் நிலைப்பாடு மாறவில்லை. 


காரணம், தனிப்பட்ட உணர்ச்சி சமூக நீதியாக மாற முடியாது.


 ஹிலால் (ரலி) அவர்களை நோக்கி  


“உன் குற்றச் சாட்டிற்கான  ஆதாரத்தைக் கொண்டு வா! இல்லையென்றால், உன் முதுகில் கசையடி கொடுக்கப்படும்” “


 என்றார்கள். 


அதற்கு ஹிலால் (ரலி) அவர்கள், 


"தங்களைச் சத்தியமார்க்கத்துடன் அனுப்பியவன் மீது ஆணையாக! நான் உண்மையே சொல்கிறேன். எனது முதுகைக் கசையடியிலிருந்து காப்பாற்றும் செய்தியை அல்லாஹ் நிச்சயம் அருள்வான்"


 என்று சொன்னார்கள்


அந்த தருணத்தில் வானத்திலிருந்து ஒரு சட்டம் இறங்கியது.  அதுதான் “லிஆன்” எனும் சாப அழைப்பு பிரமாணப் சட்டம்.


 கணவன்–மனைவி இருவரும் சத்தியம் செய்து, உண்மையை அல்லாஹ்விடம் ஒப்படைக்கும் ஒரு கடினமான வழிமுறை.


அங்கே

 📌 வன்முறைக்கு இடமில்லை.


📌அங்கே  பழிவாங்கலுக்கு இடமில்லை.


📌அங்கே ஆதாரமே வழிகாட்டி.


அல்லாஹ் அருளிய வசனங்கள் இவைதான் 


🌹🌹 தம் மனைவியர்மீது விபச்சாரக் குற்றம் சுமத்தி, அவர்களுக்குத் தங்களைத் தவிர வேறு சாட்சிகள் இல்லாதபோது, ‘தான் உண்மையாளர்களில் உள்ளவன்’ என்று அல்லாஹ்வின்மீது நான்கு முறை சத்தியம் செய்வதே அவர்களில் ஒருவருடைய சாட்சியமாகும்.


ஐந்தாவது (சத்தியமானது), ‘தான் பொய்யர்களில் ஒருவனாக இருந்தால் தன்மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும்’ என்பதாகும்.

‘அவன் பொய்யர்களில் உள்ளவன்’ என்று அவள் நான்கு முறை அல்லாஹ்வின்மீது சத்தியம் செய்து சாட்சியமளிப்பது அவளை விட்டும் தண்டனையைத் தடுத்து விடும்.

ஐந்தாவதாக, ‘அவன் உண்மையாளர்களில் ஒருவனாக இருந்தால் தன்மீது அல்லாஹ்வின் கோபம் உண்டாகட்டும்’ என்(று அவள் சாட்சியளிப்)பதாகும்.

உங்கள்மீது அல்லாஹ்வின் அருளும், அவனது கருணையும் இல்லாதிருந்து, மேலும் அல்லாஹ் மிக்க மன்னிப்பவனாகவும், நுண்ணறிவாளனாகவும் இல்லாதிருந்தால் (நீங்கள் அழிந்திருப்பீர்கள்.)


(அல்குர்ஆன் 24 :  6 – 10)


இறைவசனங்கள் அருளப்பட்டதும் நபி (ஸல்) அவர்கள் திரும்பி வந்து ஹிலால் (ரலி) அவர்களுடைய மனைவிக்கு ஆளனுப்பினார்கள்.  


அவர் இறைத்தூதரின் விசாரணை அவைக்கு அழைத்து வரப்பட்டார்.


இருவரும் வந்தடைந்ததும் இறைத்தூதர் இருவரையும் நோக்கி


"உங்கள் இருவரில் ஒருவர் பொய்யர் என்பதை அல்லாஹ் அறிவான். ஆகவே, உங்கள் இருவரில் பாவ மன்னிப்புக்கோரி தவறு தன்னுடயது தான்  என்று ஒப்புக் கொண்டு, இறைவன் பக்கம் திரும்புகின்றவர் யார்?”


என்று கேட்டுக் கொண்டே இருந்தார்கள்.


இறைத்தூதர் எவ்வளவு கோரியும் இருவரும் தமது நிலைப்பாட்டில் உறுதியாய் இருந்தார்கள். 


“ தாம் சொன்னது உண்மையே“ என நான்கு முறை சத்தியம் செய்து ஹிலால்  சாட்சியமளித்தார். 


"தான் பொய்யர்களில் ஒருவனாக இருந்தால் தன்மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும்"


என் ஐந்தாவதாகக் கோரினார்.


பிறகு, ஹிலால் (ரலி) அவர்களின் மனைவி எழுந்து நின்று 


நான்கு முறை சத்தியம் செய்து சாட்சியம் அளித்தார்.


 ஐந்தாம் முறையாக சாப அழைப்புப் பிரமாணம் செய்யச் சென்றபோது மக்கள் அவரை நிறுத்தி


“ இது பொய்யான சத்திய மாயிருந்தால் இறை தண்டனையை உறுதிப் படுத்திவிடும். எனவே, நன்கு யோசித்துச் செய்!“


 என்று கூறினார்கள். 


ஹிலால் அவர்களின் மனைவி சற்றே தாமதித்து, பிரமாணம் செய்யத் தயங்கினார்.


 நாங்கள் அவர் தம் பிரமாணத்திலிருந்து பின்வாங்கி விடுவார் என்றே எண்ணினோம். 


ஆனால் அவள்


“காலமெல்லாம் என் சமுதாயத் தாரை நான் இழிவுக்குள்ளாக்கப் போவதில்லை”


 என்று கூறி சாப அழைப்புப் பிரமாணத்தைச் செய்துமுடித்தார். 


(இந்த நிகழ்வு தொடர்பான விவரங்கள் புகாரி 2671, 4747 போன்ற எண்களில் இடம் பெற்றுள்ளது)


கணவன் தனது மனைவியை குற்றம் சாட்டுகிறான்; ஆனால் சாட்சி இல்லை என்றால், இஸ்லாம் இருவருக்கும் ஒரு சிறப்பு நடைமுறையை வழங்குகிறது.


•📌📌 இருவரும் அல்லாஹ்வின் மீது நான்கு முறை சத்தியம் செய்கிறார்கள் 


• 📌📌ஐந்தாவது முறையில் உண்மையோ பொய்யோ என்பதற்கான கடுமையான சாபத்தை ஏற்றுக்கொள்கிறார்கள் 


• 📌📌அதன் பிறகு இருவரும் சட்டப்படி பிரிக்கப்படுகிறார்கள் 


இங்கே முக்கியமானது:


• பழிவாங்கல் இல்லை 

• வன்முறை இல்லை 

• தனிநபர் தீர்ப்பு இல்லை 

• ஆதாரம் மற்றும் சட்ட நடைமுறை மட்டுமே 


🟥மற்றொரு நிகழ்வு… அதே நகரம், அதே நியதி🟥


உவைமிர் என்ற மற்றொரு நபித்தோழர் இது போன்ற குற்றச்சாட்டுடன்  நபியவர்களிடம் வந்தார்.


“அல்லாஹ்வின் தூதரே! ஒரு மனிதன் தன் மனைவியுடன் அன்னிய ஆடவன் இருக்கக் கண்டால் அவன் அம்மனிதனைக் கொல்லலாமா? அப்படிக் கொன்றுவிட்டால், பழிக்குப்பழியாக நீங்கள் அம்மனிதனைக் கொன்றுவிடுவீர்களா? அல்லது அவன் வேறு என்ன செய்ய வேண்டும்? ”


என்று கேட்டார்.


அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் 


“அல்லாஹ் உமது விஷயத்திலும் உம்முடைய மனைவி விஷயத்திலும் குர்ஆன் வசனத்தை அருளியுள்ளான் என்று கூறி, அவ்விருவருக்கும் அல்லாஹ் தன் வேதத்தில் குறிப்பிட்டுள்ள லிஆன்' எனும் சாப அழைப்புப் பிரமாணம் செய்யும்படி கட்டளையிட்டார்கள்.


 அவ்வாறே, தம் மனைவி•மீது (குற்றம்சாட்டி) உவைமிர் (ரலி) அவர்கள் லிஆன்' செய்தார்கள். 


பிறகு அல்லாஹ்வின் தூதரே! நான் இவளை விவாகரத்துச் செய்யாமல் என் மனைவியாகவே வைத்திருந்தால், இவளுக்கு அநீதி இழைத்தவனாகிவிடுவேன் எனறு கூறிவிட்டு, அவளை விவாகரத்துச் செய்துவிட்டார். 


இந்த வழிமுறையே அவர்களுக்குப் பின் லிஆன்' செய்யும் கணவன் மனைவியருக்கு முன் மாதிரியாகிவிட்டது.


நூல் : புகாரி 4745


ஒரு மனிதனின் கோபம், சமூகத்தின் சட்டமாக மாற முடியாது என்பதைத்தான் இந்த நிகழ்வுகள் எடுத்துரைக்கிறது.


ஹிலால் (ரலி) மற்றும் உவைமிர் (ரலி) நிகழ்வுகள் ஒன்றை தெளிவாக சொல்கின்றன:


ஒருவர் தனது வாழ்க்கைத் துணை தனக்குத் துரோகம் செய்துவிட்டதாகக் கருதினால் தகுந்த சாட்களின் துணையுடன் அவர் இஸ்லாமிய அரசில் முறையிட்டே தனக்குரிய நீதியைக் கோர வேண்டும். அவரே சுயமுடிவு எடுத்து வாழ்க்கைத் துணையைத் தண்டிக்கும் அதிகாரம் அவருக்குக் கிடையாது. 


வாழ்க்கைத் துணைவர் துரோகம் செய்துவிட்டார் என்பதை அறிகிறார். ஆனால் அதை நிரூபிப்பதற்கான ஆதாரங்கள், சாட்சிகள் இல்லையென்றால் அவர் லிஆன் என சாப அழைப்புப் பிரமாணம் செய்ய வேண்டும். அதன் பிறகு இருவரும் நிரந்தரமாகப் பிரிந்துவிட வேண்டும். 


இதுவே இஸ்லாம் வழங்கும் தீர்வு. 


வாழ்க்கை ஒரு நொடிக் கோபத்தில் சிதறக்கூடாது.


ஒரு நிமிட பொறுமையில் அது காக்கப்பட வேண்டும்.


துரோகத்திற்கு பழிதீர்க்கிறேன் என்ற பெயரில் உணர்ச்சி மயத்தில் முடிவுகளை எடுத்தால் ஒட்டுமொத்த எதிர்காலமும் கேள்விக்குறியாகிவிடும். சந்ததிகளின் எதிர்காலமும் பாதிக்கப்படும். 


எனவேதான் இஸ்லாம் மனிதர்களின் மனநிலை அறிந்து அவர்களுக்குரிய நீதிக்காக சரியான வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது. 


நல்லொழுக்கமுள்ள மனிதர்களின் நியாயமான மனித உணர்வுகளை, ஒழுக்க நெறிகளை காயப்படுத்தாத சட்டங்களையே அரசு வகுக்க  வேண்டும். அதையே நீதிமன்ஙற்கள் தீர்ப்பாக வழங்க வேண்டும். 


ஒரு பெண்ணின் வாழ்க்கைக்கும், அவள் மூலம் பெற்றெடுக்கும் சந்ததிகளுக்கும் பொறுப்பேற்று வரையறைகளுக்குட்பட்டு செய்யப்படும் பலதார மணங்களை கேவலமாகக் காட்டி


“நோகாமல் நொங்கு திங்கலாம்” என்பது போல் “பருவ வயதை அடைந்தோர் திருமண உறவின்றி விரும்பி பாலியல் உறவு கொண்டால் குற்றமில்லை” என்ற தீயவர்களின் மனநிலையை ஆதரித்து அரசு சட்டம் வகுத்தால், நீதிமன்றம் தீர்ப்பு வழங்கினால் சமூகத்தில் தவறான புரிதல்கள் உருவாகும் அபாயம் உள்ளது.


சமநிலையற்ற புரிதல்கள் சமூக குழப்பத்தை ஏற்படுத்தலாம். 


இங்கே நல்லொழுக்க நெறிகளுக்கே அதிகாரவர்க்கம் முக்கியத்துவம் தரவேண்டும்.


திருமணத்தை தாண்டிய உறவுகளை தடுப்பதற்காக இஸ்லாம் முன்னெச்சரிக்கை தடுப்பு வழிமுறைகளையும் எடுத்துரைக்கிறது.


•  பார்வையை கட்டுப்படுத்துதல் 

•  தனிமைச் சந்திப்புகளை தவிர்த்தல் 

•  ஒழுக்க நெறி பாதுகாப்பு 

•  ஆபாசம் மற்றும் தவறான சூழல்களை விலக்குதல்

ஆகிய அடிப்படைகளை இஸ்லாம் வலியுறுத்துகிறது. 


✍️✍️விபச்சாரத்தின் பக்கம் நெருங்காதீர்கள்! அது மானக்கேடானதாகவும், கெட்ட வழியாகவும் இருக்கிறது.


(அல்குர்ஆன் 17 : 32)


✍️✍️ மானக்கேடானவற்றில் வெளிப்படையானதையும், மறைமுகமானதையும் நெருங்காதீர்கள்!


(அல்குர்ஆன் 6 : 151)


ஆகிய இறைவசனங்கள் மேற்குறிப்பிடப்பட்ட அடிப்படைகளையே வலியுறுத்துகிறது. 


இஸ்லாம் குற்றத்தை மட்டும் அல்ல, குற்றத்திற்கு இழுத்துச் செல்லும் வழிகளையும் தடுக்கிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

1.கணவனைக் கவரும் வழிகள் 40

மண்ணறை வேதனை 001

மக்தப் மதரஸாவின் வளர்ச்சி மார்க்கத்தின் எழுச்சி...!