ஃபஸப்ருன் ஜமீல்) அழகிய பொறுமை
بسم الله الرحمن الرحيم
சூரா யூசுஃபில் நாம் கவனிக்க வேண்டிய ஒரு கணம் உண்டு. அது யூசுஃப் (அலை) அவர்களைப் பற்றியது அல்ல, மாறாக அவர்களுக்குப் பின்னால் உறுதியாக நிற்கும் மற்றொரு நபரைப் பற்றியது; அவர் வேறு யாருமில்லை, நபி யூசுஃப் அவர்களின் தந்தை யாக்கூப் (அலை) அவர்கள்.
யூசுஃப் (அலை) அவர்கள் மட்டும் சோதிக்கப்படவில்லை. அவர்களின் சகோதரர்களும் சோதிக்கப்பட்டார்கள் — பொறாமையின் காரணமாக. யாக்கூப் (அலை) அவர்களும் சோதிக்கப்பட்டார்கள் — துக்கத்தின் காரணமாக. இவை இரண்டு முற்றிலும் மாறுபட்ட சோதனைகள்; இரண்டுமே அவர்கள் இருவருக்கும் மிக நெருக்கமானவர்கள் வழியாகவே ஏற்பட்டன.
யூசுஃப் நபியின் சகோதரர்களின் பொறாமை ஒரே இரவில் தோன்றவில்லை; அது நீண்ட காலமாக அவர்களின் உள்ளங்களில் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து கொண்டிருந்தது. தந்தையின் அன்பும் நெருக்கமும் யூசுஃப் நபிக்குக் கிடைக்க, தங்களுக்குக் கிடைக்காமல் போனது அந்தப் பொறாமைக்கு எரிபொருளாயின. இதனை அல்லாஹ் ﷻ யூசுஃப் நபிக்குக் கனவின் மூலம் சுட்டிக்காட்டினான். இறுதியில் அந்த கோபம் ஒரு கதையானது; அந்தக் கதை (அவர்களுக்குத் தமது தந்தையிடம்) நியாயப்படுத்த உதவியது. பின்னர் அந்த நியாயமே (யூசுஃப் நபி தூக்கிவீசப்பட்ட) கிணறாக மாறியது.
பின்னர் அவர்கள், தமது கையில் சட்டையுடன், சொல்வதற்காக ஒரு கதையைத் தயார் செய்து, கண்ணீர் வரவழைத்துக்கொண்ட நிலையில், தங்களுடைய தந்தையிடம் திரும்பினர். அதற்கு அவர் அளித்த பதில்:
بَلْ سَوَّلَتْ لَكُمْ أَنفُسُكُمْ أَمْرًا ۖ فَصَبْرٌ جَمِيلٌ ۖ وَاللَّهُ الْمُسْتَعَانُ عَلَىٰ مَا تَصِفُونَ
“இல்லை, உங்கள் மனம் ஒரு (தீய) காரியத்தை உங்களுக்கு அழகாகக் காண்பித்துவிட்டது; எனவே (எனக்கு இந்நிலையில் அழகிய) பொறுமையை மேற்கொள்வதே நலமாக இருக்கும்; மேலும், நீங்கள் கூறும் விஷயத்தில் அல்லாஹ்வே உதவி தேடப்படுபவன்” என்று கூறினார்.
(அல்- குர்ஆன் 12: 18)
இந்த பதிலை நாம் சற்று நின்று யோசிக்க வேண்டும்.
இது, நிதானிக்க நேரம் இருந்தது என்பதற்காகக் கொடுக்கப்பட்ட பதில் அல்ல. சட்டை இன்னும் அவருக்கு முன்னால் காட்டப்பட்டுக் கொண்டிருக்கும்போதே, அதற்கான (பொய்க்) கதையை அவர்கள் கூறிக்கொண்டிருந்த அந்தக் கணத்தில் அவர் உதிர்த்த முதல் வார்த்தைகள் இவை. யோசிக்கவோ, மீளவோ, அல்லது தன்னை அமைதிபடுத்திக் கொள்ளவோ அவருக்கு நேரமே இல்லை.
இருந்தாலும் அவர் கூறிய பதிலைச் சற்று கேளுங்கள்.
அவர் உதிர்த்த முதல் வார்த்தை بَلْ (பல்) — “இல்லை” என்பதுதான். கூக்குரல் இல்லை; குற்றச்சாட்டும் இல்லை. அமைதியான முறையில் அவர்கள் கூறியதைத் திருத்துவதைப் போல — “நீங்கள் சொல்வதில் உண்மையில்லை, அப்படித்தானே?” என்று கேட்பது போல. தனது மகன்கள் கூறிய பொய்யை அவர் நேரடியாகப் பார்க்கிறார்; இருந்தாலும், அதைக் கண்டுபிடித்த பிறகும் தன் பொறுமையை இழந்துவிடவில்லை.
யாக்கூப் (அலை) குற்றச்சாட்டை எதன்மீது சுமத்துகிறார் என்பதைக் கவனியுங்கள். ‘நீங்கள் பயங்கரமான ஒன்றைச் செய்துவிட்டீர்கள்’ என்று அவர் சொல்லவில்லை; மாறாக, سَوَّلَتْ لَكُمْ أَنفُسُكُمْ (ஸவ்வலத் லகும் அன்ஃபுஸுகும்) — “உங்கள் மனம் ஒரு (தீய) காரியத்தை உங்களுக்கு அழகாகக் காண்பித்துவிட்டது” என்கிறார். அதாவது, செயலை அல்ல, அதற்கு முன்னால் உள்ளத்தின் நிலையைத்தான் அவர் குறிப்பிடுகிறார்.
இதைத்தான் குர்ஆன் மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறது. மற்றவர்களுக்கு வெளிப்படையாகத் தெரிவதற்கு முன்பே, உண்மையான நிகழ்வு ஒரு மனிதனின் உள்ளத்தில் எங்கோ நிகழ்ந்துவிடுகிறது என்பதை அது நமக்குச் சுட்டிக்காட்டுகிறது.
பின்னர் أَمْرًا (அம்ரன்) – “ஒரு (தீய) காரியம்”என்கிறார். ‘நீங்கள் அவனைக் கொன்றுவிட்டீர்கள்’ என்றோ, ‘நீங்கள் என்னிடம் பொய் சொன்னீர்கள்’ என்றோ அவர் கூறவில்லை; வெறுமனே ‘ஒரு (தீய) காரியம்’என்று கூறுகிறார். அவர்களைச் சந்தேகிப்பதற்கான அனைத்துக் காரணங்களும் அவரிடம் இருந்தபோதிலும், தனக்கு இல்லாத அறிவைத் தனக்கு உள்ளதாகக் கூற அவர் மறுக்கிறார். இப்போதும் கூட, உண்மையில் தனக்குத் தெரிந்ததைத் தவிர வேறு எதையும் அவர் கூறவில்லை.
பின்னர், இந்த வசனத்தில் இடம்பெற்றுள்ள மிக முக்கியமான சொற்றொடரை அவர் கூறுகிறார்: فَصَبْرٌ جَمِيلٌ (ஃபஸப்ருன் ஜமீல்) — அதாவது, “இந்நிலையில் அழகிய பொறுமையே (எனக்குத் தக்கது)” என்கிறார்.
மிகச் சுருக்கமான பதிலாக, “நான் பொறுமையாக இருப்பேன்” என்ற உணர்வுப்பூர்வமான வாக்கியத்தை அவர் கூறியிருப்பார் என்று நீங்கள் எதிர்பார்த்திருக்கலாம். அதற்குப் பதிலாக, அவர் ஒரு விளக்கத்தைத் தராமல், நேரடியாக ஒரு முடிவைக் கூறியிருப்பதை நாம் பார்க்கலாம். தனக்கு எந்த அளவுக்குப் பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளது என்பதை அவர் முழுமையாக உணரத் தொடங்குவதற்கு முன்பே, இந்த விஷயத்தில் தான் யாராக இருக்கப் போகிறேன் என்பதை அவர் முடிவு செய்துவிட்டார்.
பின்னர், அதே மூச்சில்: وَاللَّهُ الْمُسْتَعَانُ (வல்லாஹு அல்-முஸ்தஈன்) — “மேலும், நீங்கள் கூறும் இந்த விஷயத்தில் அல்லாஹ்வே (எனக்கு) உதவி தேடப்படுபவன்” என்று கூறினார்.
அதிர்ச்சியான செய்தியைச் செவிமடுத்ததற்குப் பிறகு; அவர்கள் பொய் சொல்கிறார்கள் என்பதைக் கண்டுபிடித்த பிறகு; நடந்த எல்லாவற்றிற்கும் பிறகும் — அவர் முதலில் செல்லும் இடம் அதுதான். உள்நோக்கி அல்ல, தன்னை நோக்கி அல்ல; மாறாக, வெளிநோக்கி, அல்லாஹ்வை நோக்கி.
இதுபோன்ற வரலாற்று நிகழ்வுகளைப் படித்துவிட்டு, அவற்றில் வரும் மனிதர்கள் நம்மைப் போன்றவர்கள் அல்ல, நம்மைவிட வேறுபட்டவர்கள் என்று கூறிவிடுவது எளிது. அவர்களின் அசாதாரண அமைதியும், வேதனையை எதிர்கொள்ளும்போது காட்டும் அசாதாரண எதிர்ப்பும், நமக்கு ஏற்படும் துக்கம் அவருக்கு ஏற்படவில்லை எனும் எண்ணமும் — இவையெல்லாம், நம்மிடம் இல்லாத ஏதோ ஒன்று யாக்கூப் (அலை) அவர்களிடம் இருந்திருக்க வேண்டும் என்று நம்மை நினைக்க வைக்கின்றன.
ஆனால் குர்ஆன் அவ்வாறு எண்ண வேண்டாம் என நம்மிடம் கூறுகிறது.
அதே சூராவின் பிற்பகுதியில், வருடக்கணக்காக அழுதுகொண்டிருக்கும் ஒரு மனிதரைப் பற்றி அது சுட்டிக்காட்டுகிறது. துக்கத்தால் கண்கள் வெளுத்துப்போன ஒரு மனிதர். ஒருபோதும் நினைவுகூர்வதை நிறுத்தாத, ஒருபோதும் ஏக்கத்தை நிறுத்தாத ஒரு மனிதர்.
எனவே, ஸப்ருன் ஜமீல் (அழகிய பொறுமை) என்பது துக்கப்படாத நிலையைக் குறிப்பதில்லை; அது துக்கத்துடன் சேர்ந்தே இருக்கிறது.
பின்னர் குறிப்பிடத்தக்க ஒன்று நிகழ்கிறது.
பல ஆண்டுகளுக்குப் பிறகு, அவருக்கு மீண்டும் ஒரு நெருக்கடி ஏற்படுகிறது.
சகோதரர்கள் மீண்டும் திரும்புகிறார்கள்; இந்த முறை பின்யாமீனை அழைத்துவராமல். மீண்டும் அவர்கள் ஒரு கதையைப் புனைகிறார்கள். மீண்டும் யாக்கூப் (அலை), தன்னிடமிருந்து மற்றொரு மகன் பறிக்கப்படப் போகிறார் என்ற செய்தியைக் கேள்விபடுகிறார்.
மீண்டும் அவர் அதே வார்த்தைகளுடன் தொடங்குகிறார்: بَلْ سَوَّلَتْ لَكُمْ أَنفُسُكُمْ أَمْرًا (பல் ஸவ்வலத் லகும் அன்ஃபுஸுகும் அம்ரான்) – “இல்லை, உங்கள் மனம் ஒரு (தீய) காரியத்தை உங்களுக்கு அழகாகக் காண்பித்துவிட்டது.”
அந்த இரண்டு கூற்றுகளுக்கும் இடையில், வாழ்நாள் முழுவதும் துக்கத்தில் இருந்த ஒருவரின் கதை அடங்கியுள்ளது – பல வருடங்களாகக் கேள்விகளுக்குப் பதில் கிடைக்காத நாட்கள்; இழப்பில் வாடிய வருடங்கள்; ஏக்கத்தில் வாழ்ந்த வருடங்கள். இருந்தாலும், அடுத்த பெரும் சோதனை வந்தபோது, யாக்கூப் (அலை) துளிகூட மாறாமல் முன்பு இருந்த அதே மனிதராகவே இருந்தார்.
தனக்குத் தெரியாத விஷயத்தைத் தெரிந்திருப்பதாகக் கூற மறுக்கிறார். புலப்படும் செயலுக்குப் பின்னால் உள்ள ஆன்மீக வேர்களை ஆழமாகப் பார்க்கிறார். நிலைமை மோசமாக இருந்தும் பொறுமையுடனேயே பேசுகிறார்.
மீண்டும், அவர் அதைத் தொடர்ந்து கூறுகிறார்: فَصَبْرٌ جَمِيلٌ (ஃபஸப்ருன் ஜமீல்) – “ஆகவே, அழகிய பொறுமையை” என்று.
யாக்கூப் பொறுமையாக இருந்தார் என்று குர்ஆன் மிக எளிமையாகச் சொல்லியிருக்கலாம். அதற்குப் பதிலாக, நம்மை அவரது வார்த்தைகளை மீண்டும் ஒருமுறை கேட்க வைக்கிறது. அந்தக் குரல் எந்த மாற்றமும் இன்றி, முற்றிலும் ஒரே மாதிரியாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
அழகிய பொறுமை என்றால் என்ன என்பதை உண்மையில் விளக்கக்கூடிய ஒரு காட்சி அது.
நம்மில் பெரும்பாலானோர் இதன் ஏதாவது ஒரு வடிவத்தை அனுபவித்திருப்போம். காயப்பட்ட ஒரு பெற்றோர், நம்மை தேவையில்லாமல் கட்டுப்படுத்துபவராக மாறலாம். ஏமாற்றமடைந்த ஒரு பெற்றோர் எதற்கெடுத்தாலும் குறை சொல்பவராக மாறலாம். அச்சமடைந்த ஒரு பெற்றோர், தங்கள் பிள்ளையைச் சந்திப்பதற்க அஞ்சலாம். பொதுவாக உணர்வுகள் மற்றவர்களிடம் எளிதாகப் பரவும் தன்மையைக் கொண்டது; அவை பரவிக்கொண்டே இருக்கும்.
யாக்கூப் (அலை) அவர்களின் விஷயத்தில் என்னைக் கவர்ந்தது, அவர் மற்ற அனைவரையும் விடக் குறைவாக உணர்ச்சிகளை வெளிப்படுத்தினார் என்பதல்ல; மாறாக, அவர் மிக ஆழமாக உணர்ந்தார் என்பதை குர்ஆன் நமக்குத் தெளிவுபடுத்துகிறது. அவருடைய துக்கம் ஒருபோதும் மற்றவர்களுக்குச் சுமையாக மாறவில்லை என்பதே குறிப்பிடத்தக்கது.
தனது மகன்கள் பயங்கரமான ஒரு காரியத்தைச் செய்திருக்கலாம் என்று சந்தேகித்தபோதும், அவர் அவர்களுடன் பேசுவதைத் தொடரவே செய்தார். அவர்களுக்கு அறிவுரைகள் வழங்கினார். அவர்களைக் கவனித்துக்கொண்டார். அவர்களுக்காகப் பிரார்த்தித்தார். அவர்களுடன் இருக்கும் போதெல்லாம், தம் உள்ளத்தில் உள்ள சுமை தம் அடையாளத்தை மாற்றிக்கொள்ள அவர் ஒருபோதும் அனுமதிக்கவில்லை.
இந்தக் கதையில் பெற்றோர்களுக்கு மறைந்திருக்கும் கருணைகளில் ஒன்று இதுவாக இருக்கலாம். ஏனென்றால், நம் பிள்ளைகள், வாழ்க்கைச் சூழல் சுமுகமாக இருக்கும்போது மட்டுமே நம்மிடமிருந்து கற்றுக்கொள்வதில்லை; வாழ்க்கைச் சூழல் கடினமாக இருக்கும்போதும் அவர்கள் நம்மிடமிருந்து கற்றுக்கொள்கிறார்கள்.
நாம் ஏமாற்றமடையும்போதும், கவலைப்படும்போதும், நம்மால் சரிசெய்ய முடியாத ஒன்றைப் பற்றி வருத்தப்படும்போதும் — அத்தகைய நொடிகளில்தான் நம் குழந்தைகள் நமது உண்மையான முகத்தைப் பார்க்கிறார்கள். அந்த நேரங்களில்தான் நாம் யாக்கூப் (அலை) ஆகிறோமா, அல்லது நம் சுமையைச் சுமக்க முடியாமல் தவிக்கிறோமா என்பது தீர்மானமாகிறது.
யூசுஃப் (அலை) அவர்களை இழப்பதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே அவர்களுடைய சகோதரர்கள் தங்களை இழந்துவிட்டனர்.
யாக்கூப் (அலை) யூசுஃப் (அலை) அவர்களை இழந்தார்கள். ஆனால் தம்மை ஒருபோதும் அவர்கள் இழக்கவில்லை.
அந்தப் பண்பு தான் மிகவும் குறிப்பிடத்தக்கது.
பல ஆண்டுகளுக்குப் பிறகு, அல்லாஹ்வின் திட்டம் யாரும் கற்பனை செய்ய முடியாத வகைகளில் வெளிப்பட்டபோது, அப்போதும் அதை ஏற்றுக்கொள்ள யாக்கூப் (அலை) அவர்களால் முடிந்தது. அவருடைய துக்கம், அவரைத் தமது பிள்ளைகளுக்கு எதிராகத் திருப்பவில்லை; அது சமரசம் செய்ய முடியாத அளவுக்கு அவர்களைக் கடினப்படுத்தவில்லை. அந்தப் பாலம் இன்னும் வலுவாகவே நின்று கொண்டிருந்தது.
யூசுஃப் (அலை) அவர்களின் சகோதரர்கள் இறுதியில் மன்னிப்புக் கேட்டு வந்தபோது, அவர்கள் இன்னும் ஒரு தந்தையைக் கண்டார்கள்.
قَالُواْ يَآأَبَانَا ٱسۡتَغۡفِرۡ لَنَا ذُنُوبَنَآ إِنَّا كُنَّا خَٰطِئِينَ قَالَ سَوۡفَ أَسۡتَغۡفِرُ لَكُمۡ رَبِّيٓۖ إِنَّهُۥ هُوَ ٱلۡغَفُورُ ٱلرَّحِيمُ
(அதற்கு அவர்கள்) “எங்களுடைய தந்தையே! எங்களுடைய பாவங்களை மன்னிக்குமாறு எங்களுக்காக (இறைவனிடம்) பிரார்த்தனை செய்யுங்கள், நிச்சயமாக நாங்கள் தவறு செய்தவர்களாக இருக்கின்றோம்” என்று கூறியபோது. நான் உங்களுக்காக என் இறைவனிடம் பாவமன்னிப்புத் தேடுவேன். நிச்சயமாக அவன் மன்னிப்பவனாகவும் கிருபையுடையவனாகவும் இருக்கின்றான் என்று கூறினார்.
(அல்- குர்ஆன் 12: 97-98)
அதில் ஆழமாக அழகான ஒரு விஷயம் அடங்கியிருக்கிறது.
அழகிய பொறுமை யாக்கூப் (அலை) அவர்களை, அவர் துக்கத்தில் இருந்த காலம் வரை சுமந்து செல்லவில்லை; அது அவரை அந்தத் துக்கத்தின் மூலமாகப் பாதுகாத்தது. தவ்பா (மன்னிப்பு) கேட்கப்படும்போது அதை அடையாளம் காணக்கூடிய ஒரு மனிதராகப் பாதுகாத்தது. மன்னிக்கக்கூடிய ஒரு மனிதராகப் பாதுகாத்தது. இறுதியாக, அல்லாஹ்வின் கருணை வரும்போது, அதைத் திறந்த இதயத்துடன் பெற்றுக்கொள்ளக்கூடிய ஒரு மனிதராகப் பாதுகாத்தது.
அல்லாஹ் ﷻ, அவரை فَصَبْرٌ جَمِيلٌ (ஃபஸப்ருன் ஜமீல்) என்று இருமுறை சொல்ல வைத்ததற்கான ஒரு காரணம் இதுவாக இருக்கலாம்.
ஏனென்றால், அழகிய பொறுமை என்பது கஷ்டத்திலிருந்து தப்பித்துப் பிழைப்பது மட்டுமல்ல; அது, அதற்குப் பிறகு வருவதை அல்லாஹ்விடம் ஒப்படைக்கத் தகுந்த ஒரு நபராக இருப்பதைப் பற்றியது.
நம் பிள்ளைகள், நம் மனநிலை எப்போதும் நன்றாக இருக்கும்படி செய்ய மாட்டார்கள். சில சமயங்களில் அவர்கள் நம்மைக் கவலைப்பட வைப்பார்கள்; சில சமயங்களில் ஏமாற்றமடைய வைப்பார்கள்; சில சமயங்களில் நமக்கு வலிகளையும் தருவார்கள்.
ஆனால், நாம் அவர்களுக்கு அளிக்கக்கூடிய மிகப் பெரிய பரிசுகளில் இதுவும் ஒன்றாக இருக்கலாம்: அவர்கள் தங்கள் தவறுகளை உணர்ந்ததற்குப் பிறகும், தோல்விகளுக்குப் பிறகும், மனம் வருந்தி நம்மிடம் திரும்பி வரும்போது, அவர்கள் தங்களுடைய பெற்றோர் இன்னும் அதே மனநிலையில் இருப்பதைக் காண்கிறார்கள் என்பதுதான்.
அவர்கள் இன்னும் நம்மை மென்மையாக இருப்பவர்களாகக் காண்கிறார்கள். நல்லதையடைவதற்காக இன்னும் பாடுபட்டுக் கொண்டிருப்பதைக் காண்கிறார்கள். நாம் எப்போதும் போலவே, அல்லாஹ்வையே நோக்கித் திரும்பிக்கொண்டிருப்பதை இன்னும் காண்கிறார்கள் என்பதுதான்.
இதுவரை ஒரு பெற்றோராக, நாம் வெளிபடுத்திய சிறந்த பண்புகளில் இது ஒன்றாக இருக்கும்
கருத்துகள்
கருத்துரையிடுக