ஆண் பெண் உரையாடல் , கலப்பு என்றால் என்ன
ஆண் பெண் உரையாடல் , கலப்பு என்றால் என்ன ?.....!
அந்நிய ஆணும் அந்நிய பெண்ணும் தனிமையில் இருப்பதற்கு தான் இஸ்லாத்தில் தடை .மாறாக ஆண்களும் பெண்களும் உள்ள சபையில் அருகருகில் நிற்பதற்கு எந்த தடையும் இல்லை.
நபி (ஸல்) அவர்கள் காலத்தில் ஆண்கள் இருக்கும் சபையில் ஒரு பெண் வந்து நபியிடம் 'என்னை திருமணம் முடிக்கின்றீர்களா?' என்று கேட்கும் அளவு ஆண்களும் பெண்களும் ஒன்றாக நின்றுள்ளனர்.நபியவர்கள் அந்த பெண்ணை மேலும் கீழுமாக பார்த்தார்கள். நபிகளார் அந்தப் பெண்ணிற்கு மறுமொழி கூறவில்லை. பின்பு ஸஹாபி ஒருவர் அந்த பெண்ணை தான் முடிக்க கேட்டார்.
பெண்கள் பள்ளிவாசலில் நபி ஸல் அவர்களிடம் நேரடியாக சென்று மார்க்கக் கேள்விகள் கேட்டனர்.
சில சமயங்களில் ஆண் ஸஹாபாக்களும் அங்கே இருந்தனர்.
Jamila bint Thabit ( சில அறிவிப்புகளில் வேறு பெயரும் வருகிறது ) நபி ஸல் முன் வந்து கணவரிடமிருந்து பிரிவை விரும்புவதாகக் கூறினார்.
நபி ஸல் விசாரித்து குலாவை ஏற்பாடு செய்தார்கள்.
(ஸஹீஹ் புகாரி)
அஸ்மா பிந்த் யஸீத் (ரலி) பெண்களின் சார்பில் பேசியது
Asma bint Yazid பெண்களின் பிரதிநிதியாக நபி ஸல் முன் வந்து பல கேள்விகளைக் கேட்டார்.
ஆண் ஸஹாபாக்களும் அங்கே இருந்தனர்.
உமர் (ரலி) அவர்கள்
Al-Shifa bint Abdullah அவர்களை மதீனா சந்தையின் தலைமைத்துவ கண்காணிப்பு பொறுப்பில் நியமித்ததாக வரலாற்று நூல்கள் குறிப்பிடுகின்றன.
ஒருமுறை உமர் (ரலி) அவர்கள் பெண்களின் மஹ்ருக்கு (திருமணக் கொடை) உச்சவரம்பு நிர்ணயிக்க நினைத்தபோது, ஒரு பெண் பொதுமக்கள் முன்னிலையில் குர்ஆன் (4:20) வசனத்தை மேற்கோள் காட்டி எதிர்வாதம் செய்தார்.
அப்போது உமர் (ரலி)
"அந்தப் பெண் சரியாகச் சொன்னார்; உமர் தவறிவிட்டார்."
என்று தமது கருத்தைத் திரும்பப் பெற்றதாக வரலாற்று ஆதாரங்களில் வருகிறது...!
இப்படி நபியின் காலத்திலேயே ஆணும் பெண்ணும் கலந்து சபைகளில் கலந்து இருந்திருக்கின்றனர்.
நாம் மறுக்கும் ஆண், பெண் கலப்பு எது எனில் இஸ்லாமிய வரையறைக்கு மாற்றமாக உடை உடுத்தி, ஆணும் பெண்ணும் உரசிக் கொள்ளும் அளவுக்,கு தவறான ஈர்ப்பு ஏற்படும் சூழலில் , நடந்து கொள்வது தான் தடுக்கப்பட்ட கலப்பு.
இது அறியாமல் ஆணும் பெண்ணும் இஸ்லாமிய நெறியுடன் ஒரு சபையில் அமர்ந்தால் பேசுவதால் ஆண் பெண் கலப்பு என்று சில கடும்போக்கு ஷலஃப் அறிவிலிகள் மார்க்கத்தை பிழையாக விளங்கி அதாவது ஒரு ஹதீஸ் என்ன இடம் பொருள் சூழலில் வரலாற்று நிகழ்வுடன் கூறப்பட்டது என அணுகாமல் வெறும் மேலோட்ட நுனிப்புல் வாசிப்புகள் மூலம் இஸ்லாத்தை போதிக்கும் மத பூசாரி போதகர்களாக ஆகிவிட்டனர்.
ஒரு பெண் பாராளுமன்றம் கூட போகலாம், அந்த சபையில் அமரலாம், உரிமைகளை கேட்கலாம் அதில் எந்த தடையும் இல்லை.
இஸ்லாம் ஆணுக்கும் பெண்ணுக்கும் சமூக இயங்கியலில் சம உரிமை கொடுத்துள்ளது.சில நெறிமுறை மற்றும் விதிவிலக்குகளை தவிர.
ஆனால்,ஆண்களை கண்டால் விரண்டு ஓடுங்கள் என்று எந்த ஒரு இடத்திலும் இஸ்லாம் கூறியதே கிடையாது. பெண்களை கண்டால் அந்த இடத்தில் ஆண்களே நிற்காதீர்கள் என்று எங்கும் இஸ்லாம் சொன்னது கிடையாது.
சில மௌலவி புரோகிதர்கள் இந்த சமுதாயத்தை வழிநடாத்தும் காலமெல்லாம் இந்த சமுதாயம் இஸ்லாத்தை சரியாக புரிந்துகொள்ள கஷ்டப்படத்தான் போகிறது.
இஸ்லாத்தை சரியாக சுயமாக வாசிக்கும் நிலைக்கு குர்ஆன் தஃப்ஸீர் ஹதீஸ் அதன் வரலாறுகள் தமிழில் வந்துள்ள நிலையில் சில சாதாரண அடிப்படை நடைமுறை சட்டங்களையாவது பொதுமக்கள் வாசித்து விளங்க முயற்சிக்க வேண்டும்.
இஸ்லாத்தை கற்க கசடற அறிந்த தெளிவான மார்க்க அறிஞர்கள் குறைந்து, வழிபாடு சடங்குகள் மட்டும்தான் இஸ்லாம் என்ற குறுகிய கண்ணோட்ட மார்க்க அறிஞர்கள் பெரும்பான்மை ஆகிவிட்டன
அது ஒருபுறமிருந்தால் ,
நமது சமுதாய மக்களிடம் இஸ்லாம் பற்றிய வாசிப்பு ,தேடல், ஆய்வு, ஒப்பிடு , தெளிவான மார்க்க அறிஞர்களின் தற்காலத்தை அணுகி வாழ்தல் சார்ந்த உரையாடல் குறைந்துவிட்டது.
வாசிப்பில்லாத சமுதாயம் எங்கே யோசிக்க போகிறது? கண்ணில் பட்டால்தானே அதை பற்றி யோசிக்க முடியும்.சில கடும்போக்கு புரோகிதர்கள் நுனிப்புல் மேய்ந்து சொல்வதையே நம்பிக்கொண்டு இருந்தால் எங்கே யோசனையும் மார்க்க தெளிவும் வரப்போகிறது.?
கருத்துகள்
கருத்துரையிடுக